உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/எனக்கும் விடுதலை!
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

எனக்கும் விடுதலை! · 25 / 391

எனக்கும் விடுதலை! ஒவ்வொரு நாளும் பொதுக் கூட்டங்களிலோ வேறு நிகழ்ச்சிகளிலோ ஆயிரம், இலட்சம் என்று மனித முகங்களையே பார்த்துப் பார்த்துப் பரவசமுற்றிடும் எனக்கு இந்த உலக ஓட்டமே எப்படி இருக்கிறது என்று புரிந்திடாத நிலையில் - விரைந்து பறந்திடும் வண்டி, வாகனாதிகள் கூட எப்படி இயங்குகின்றன என்று அறிந்திட முடியாத நிலையில் இருண்ட நாட்கள் தனிமைச் சிறையில். ஆனால் அத்துடன் என்னுடைய பாளைச்சிறை வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்று என்னால் நம்ப முடியவில்லை.

இன்னொரு வழக்கிலும் என்னைச் சிக்கிடச் செய்து மேலும் மேலும் இரும்புக் கம்பிகளுக்கு அப்பால் விருந்து வைத்திடும் நோக்கோடு தானே என்னை அழைத்துச் சென்றனர் அப்போது! அதனால் தான் நான் பாளையங்கோட்டையிலிருந்து புறப்படும் போது அங்கிருந்தவர்களிடம், "போய் வருகிறேன்; என் அறையைக் காலியாகவே வைத்திருங்கள்" என்று கூறி விட்டு வந்தேன்.

ஆனால் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளோ மீண்டும் என்னைப் பாளைச்சிறைக்குக் கொண்டு போய்ச் சேர்த்திடவில்லை. 4-4-1965 அன்று பாளையங்கோட்டையைப் பிரிந்து, புகை வண்டியில் ஏற்றப்பட்ட நான் 5-4-1965 காலை சென்னை எழும்பூர் நிலையத்தில் இறக்கப்பட்டேன். ஆயுதந் தாங்கிய காவல் துறையினர் இருபுறமும் அணி வகுத்து நின்றிட - ஆர்வந் ததும்பிடும் கழகத் தோழர்கள் சற்றுத் தொலைவில் நின்று கரங்களை அசைத்துத் தங்கள் அன்பு முகத்தைக் காட்டிட - சென்னை மண்ணிலே அடி வைத்திட்ட நான், விடுதலைக் காற்றினை நுகர்ந்திட முடியாமல் மீண்டும் போலீஸ் வேனிலே ஏற்றப்பட்டேன்; அதுவரை குற்றப் பத்திரிக்கை தயாரிக்கப்படாததால் நீதிமன்ற ஆணைப்படி சென்னை மத்தியச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன்.

மூன்று நாட்கள் கழித்து 8-4-65 அன்று, பாதுகாப்புச் சட்டம் 41 (5) பிரிவின் கீழ் 'முரசொலி' மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை முன்னிட்டு எழும்பூர் பிரதம மாகாண மாஜிஸ்டிரேட் நீதி மன்றத்துக்கு என்னைக் கட்டுக்காவலுடனேயே இட்டுச் சென்றார்கள். என்னிடமும் மாறனிடமும் குற்றப் பத்திரிகைகள் தரப்பட்டன. மறுபடியும் வழக்கு ஏப்ரல் 24ஆம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சென்னைச் சிறைச் சாலையிலும் என்னைத் தனிமையில் தான் தவிக்க விட்டனர் ஆட்சியாளர்கள்.

திடீரென்று ஒருநாள் என்னைத் திக்குமுக்காடிடச் செய்தது நெஞ்சு வலி; அடிக்கடி தலைச்சுற்றலும் ஏற்பட்டு என்னை அலைக்கழித்தது. இரத்த அழுத்தமும் குறைந்து காணப்பட்டது. ஒரு நாள் மயக்கமுற்றே விழுந்துவிட்டேன். நெஞ்சு வலியும் நின்றிடாமல் பல நரட்களாக நீடித்துக் கொண்டே இருந்ததால் சென்னை மத்திய மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று டாக்டர் இரத்தினவேலு சுப்ரமணியம் அவர்களிடம் காண்பித்தனர். நான் மருத்துவ மனையில் தங்கிச் சிகிச்சை பெற வேண்டுமென்று அவர் கூறினார்.

அதை ஏற்றுக் கொள்ளாமல் மீண்டும் சிறைச்சாலைக்கே திரும்பினேன். தமிழகத்தை ஆண்டிட்ட திரு பக்தவத்சலனார் அரசுக்கு எப்படித் அந்தத் திடீர் ஞானோதயம் உதயமாயிற்றோ, தெரியவில்லை. பாதுகாப்புச் சட்டத்தில் 30(1)பி. பிரிவினை அது ரத்துச் செய்திட முடிவெடுத்தது. அதனால் அந்தப் பிரிவின் கீழ் பாளைச் சிறையிலே அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்திட்ட நானும் விடுதலைக் காற்றினை நுகர்ந்திடும் வாய்ப்பினைப் பெற்றவன் ஆனேன்.

நான் விடுதலை அடைந்திடப் போகும் செய்தி எப்படித்தான் தான் வெளியே பரவிற்றோ? ஆயிரக்கணக்கான கழகக் கண்மணிகள் - முன்னணித் தலைவர்கள்- வரவேற்புப் பாயிரம் பாடிட வந்திருந்தனர் சிறையின் வாயிலுக்கே. தனிமைச் சிறையிலே நான் அடைந்திட்ட அல்லலெல்லாம் என் நெஞ்சைவிட்டு அகன்றிடும் வண்ணம், கனிவு முகங்காட்டி என் கரம் பற்றி வரவேற்றனர் அருமைத் தோழர்கள். சிறையிலிருந்து விடுதலை பெற்றிட்டபிறகு சிறை பற்றிய என் எண்ணங்களைத் தெரிந்துகொண்டிடச் செய்தியாளர்கள் என்னை மொய்த்தனர்; முற்றுகையிட்டனர்.

இந்தியாவின் எல்லையில் ஒருபுறம் செஞ்சீனமும், மறுபுறம் பாகிஸ்தானும் மிரட்டிக்கொண்டிருந்த இருட்டு வேளை அது. அந்த நேரத்தில் உள்நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வினை உருவாக்கிடும் வகையில் மாறுபட்ட கருத்து மலர்களையும் ஒரே மாலையாகப் பின்னிடும் போக்கில்-தன்னுடைய செயல் திட்டங்களைத் தீட்டி வெளிப்பகையினை வீழ்த்திட முனைவதே எந்தப் பொறுப்புள்ள அரசுக்கும் பொருத்தமான நடவடிக்கையாக இருந்திட முடியும்.

வெளியிலிருந்து ஊடுருவிப் பாய்ந்து வரும் விபத்தினைத் தடுத்திடவும், அந்த விபத்துக்கு வெண்சாமரம் வீசிடும் உள்நாட்டுப் புல்லுருவிகளை ஒழித்திடவும்தான் பாதுகாப்புச் சட்டம் பயன்பட்டிட வேண்டுமேயல்லாது நாட்டுப் பாதுகாப்பிலே நாட்டம் உள்ளோரையும் அந்தச் சட்டத்தால் நசுக்க முற்படுவது எந்த விதத்திலே ஜனநாயக நெறிக்கு ஏற்புடையதாகும்? ஆனால், திரு பக்தவத்சலனார் அரசோ, இந்தச் சாதாரண அரசியல் அறத்தினைக் கூடக் காற்றிலே பறக்க விட்டுவிட்டுத்தான் ஆத்திரத்துடன் காரியமாற்றிற்று; காராக்கிருகத்தில் தள்ளிற்று கழகக் கண் மணிகளை; அதுவும் காரணம் ஏதும் கூறாமலே.

எனவேதான், என்னை வந்து சந்தித்த செய்தியாளர்களிடம் "...இந்த விடுதலையில் உண்மையாகவே எனக்கு மகிழ்ச்சி இல்லை. பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டுள்ள கழகத் தோழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். பத்திரிகைகள்மீது தொடுத்துள்ள வழக்குகளைச் சர்க்கார் திரும்பப், பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுவாக அண்மையில் நடந்த கிளர்ச்சியில் தொடர்பு சிறிதுமற்ற கழகத் தோழர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை யெல்லாம் சர்க்கார் வாபஸ் வாங்க வேண்டும்.

அப்போதுதான் வெளியே இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி இருக்க முடியும்" -என்று குறிப்பிட்டேன். அண்ணா அவர்களும், கழகத் தோழர்களுக்கு ஓர் ஆணை பிறப்பித்தார்கள், அறிக்கை வாயிலாக. "பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்ட கழகத் தோழர்களை விடுதலை செய்க!"

-என்னும் கருத்தமைந்த தந்திகள் இந்தியத் தலைமையமைச்சர் திரு லால்பகதூர் சாஸ்திரிக்கும் தமிழக முதல்வருக்கும் இலட்சக்கணக்கில் அனுப்பப்பட்டன. தனிமைச் சிறையிலிருந்து விடுதலை பெற்றிட்ட எனக்குப் பிணியின் சிறை மீண்டும் என்னைப் பெருத்த வேதனைக்கு உள்ளாக்கிற்று. நெஞ்சு வலி போதாதென்று கண் வலியும் எனக்குக் கடுந்துயரைக் கொடுத்தது. சென்னை மத்தியக் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். பத்து நாட்களாவது நான் அலைச்சல் ஏதுமின்றி பூர்ண் ஓய்வு எடுத்திட வேண்டும் என்று வற்புறுத்திவிட்டனர்.

அந்த வாஞ்சை மிக்க வற்புறுத்தலை என்னால் புறக்கணித்திட முடியவில்லை. அதனால் அப்போது திட்டமிட்டிருந்தபடி, தஞ்சை, திருச்சி, சென்னை, புதுக்கோட்டை, திருக்கடையூர், திருமுல்லைவாயில் ஆகிய இடங்களில் ஏற்பாடாகியிருந்த கழகக் கூட்டங்களில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. கண்ணை வலி வந்து தீண்டியதைப் போலவே காதையும் தீண்டிற்று ஒரு தீச்செய்தி. ஆம்-தீப்பிடித்த செய்தி! சென்னையிலே 21 - ஆவது வட்டத்திலும், 87 - ஆவது வட்டத்திலும் கொடூரமான தீ விபத்துக்கள் ஏற்பட்டுக் குலை நடுங்கச் செய்து விட்டன பல குடும்பங்களை.

ஒரு முதியவர், நான்கு குழந்தைகள் - ஆக ஐந்து உயிர்கள் இரையாகிவிட்டன எரிதழலுக்கு. பல கால்நடைகள் கருகி மடிந்துவிட்டன. 130 குடிசைகள் சாம்பலாகி விட்டன. செய்தியறிந்ததும், சகோதரர் அரங்கண்ணல், அப்போதைய மாநகராட்சி மேயர் சிட்டிபாபு, ஆகியோருடன் விபத்து நடந்த இடங்களுக்கு விரைந்து சென்றேன். கண்ணீரும் கம்பலையுமாகக் கதறித் துடித்திட்ட ஏழை மக்களைக் கண்டதுமே நெஞ்சிலே பற்றியெரிந்தது வேதனை நெருப்பு; பாதிக்கப்பட்ட மக்கள் மாநகராட்சிப் பள்ளிக் கட்டடங்களில் தங்கிடவும், அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கிடவும் உடனடியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கழகத் தோழர்கள் நிவாரண வேலைகளில் முழு மூச்சுடன் ஈடுபட்டுச் செயலாற்றினர். குடிசைகளை நெருப்புக்குப் பலி கொடுத்துவிட்டுத் திண்டாடும் குடும்பங்களின் துயரினைத் துடைத்திடும் நோக்கில் தலைமைக் கழகத்தின் சார்பில் ஆயிரம் ரூபாய் நன்கொடையாகவும், அப்போது அளிக்கப்பட்டது. பொது வசூல் மூலமும் நிறையத் தொகை நிவாரண நிதிக்குத் தரப்பட்டது. பின்னர் குடிசைப் பகுதி மாற்று வாரியம் அமைத்திடும் எண்ணத்திற்கான கரு அப்போதுதான் முகிழ்த்தது எனக்கு.