உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/மாறனும் கைது என அண்ணா கூறினார்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

மாறனும் கைது என அண்ணா கூறினார் · 24 / 391

மாறனும் கைது என அண்ணா கூறினார் தமிழகச் செய்திகள்-டில்லிச் செய்திகள்-உலகச் செய்திகள் ஆகிய எல்லாமே இப்படிச் செந்தேளாக வந்து என்னைக் கொட்டிக் கொண்டிருந்த போது- சென்னையில் 'முரசொலி' யைக் கவனித்துக் கொண்டிருந்த என் மருமகன் மாறன் 25-3-65-இல் இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டான் என்கிற செய்தியும் என்னை வந்து எட்டியது. காலை மலர்ந்தது கூகைகளின் அலறலுக்கிடையே ஒரு குயிலின் மதுரகானம்.

குளவிகளின் ரீங்காரக் கூச்சலையும் மீறி ஒரு கிளியின் மழலை மொழி. -என்று சொல்லிடத் தக்க வகையிலே, செந்தேளாய்க் கொட்டிய செய்திகளுக்கு நடுவே செந்தேனாகவும் எனக்கு இனிப்பினை வழங்கிற்று ஒரு செய்தி. 'பாளைச் சிறைக் கோட்டத்திற்கே வந்து என்னைப் பார்க்கப் போகிறாராம் அண்ணா!'

அதனைக் கேள்வியுற்றதுமே என் உடலிலே ஏற்பட்ட புல்லரிப்பு, என் உள்ளத்திலே பொங்கி வழிந்திட்ட பூரிப்பு அடடா! அதனை எப்படித்தான் நான் எழுத்திலே வடித்திடுவேன். அன்று காலை ஏறத்தாழப் பத்து மணி இருக்கும். நான் அடைபட்டுக் கிடந்திட்ட அறையின் கதவு திறந்து கொண்டது. விடுதலையை முன்னிட்டல்ல; வேறொரு பகுதிக்கு நான் அழைத்துச் செல்லப்படுவதற்காக. அங்கோ- எத்தகைய ஒப்புவமைகளை இணைத்துக் காட்ட முற்படினும் அத்தனைக்கும் பொருத்தமாக மட்டுமல்ல; அவற்றுக்கு அப்பாற்பட்டும் இமயமென நிமிர்ந்து நிற்கும் என் இதயதெய்வமாம் அண்ணா வந்திருந்தார் என்னைக் காண்பதற்காக.

அவரைக் கண்டதுமே கசிந்தன கண்கள்; கனத்தது நெஞ்சம்- பாசத்தால். பலநாள் பிரிவிற்குப் பின்னர் தாய்ப் பசுவைப் பார்த்ததும் தாவிக் குதித்தாடும் இளங்கன்றாக என் இதயம் விம்மிற்று இன்பப் பூரிப்பால். அதேசமயம், இனம் விளங்கிடாத தவிப்புணர்ச்சி ஒன்றும் எங்கள் உதட்டுக் கதவுகளை இறுக்கி மூடி வேடிக்கை பார்த்தது. சில நொடிகளே அந்தச் சஞ்சலம் தழுவிய தவிப்பு. பின்னர் இருவருமே பிரிவாற்றாமையால் பீரிட்டெழும் கலக்கத்திற்கு விடை கொடுத்து விட்டு உரையாட முற்பட்டோம்.

இந்தியப் பாதுகாப்புச் சட்டம் 41 (5) பிரிவின்படி மாறன் கைதானது பற்றியும் 'முரசொலி' மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது பற்றியும் எனக்கு முதல் முதல் தகவல் தெரிவித்தவர் அண்ணா அவர்கள்தாம். அடக்கத்தின் பிறப்பிடமான அவர் வேதனைகளை அடக்கிக் கொண்டுதான் என்னோடு உரையாடினார். அவருடைய கவலை கப்பிய அந்தக் கனிவான முகம் இன்றும் என் முன்னே காட்சியளித்த வண்ணமே இருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தக் குறுகிய காலத்தில் அண்ணா என்னைப்பற்றி, என் உடல் நலம் பற்றி, எனக்கு வழங்கப் படும் வசதிகள் பற்றியே-அக்கறையோடு விசாரித்தார்.

நானோ வெளி நடப்புகளைப் பற்றி-அப்போது நடைபெறவிருந்த தர்மபுரித் தேர்தலைப் பற்றி-அதற்காகக் கழகம் மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் பற்றி ஆர்வத்தோடு வினாக்களை அடுக்கினேன். "தர்மபுரித் தேர்தலில் காங்கிரசார் பணத்தை அள்ளி வீசுவார்களே அண்ணா! அங்கு நாம் வெற்றி பெறவேண்டுமென்றால் வெகுவாகப் பாடுபட வேண்டும்! என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? யார், யார் தருமபுரி சென்று வந்தனர்? நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?"

--இப்படியெல்லாம் நான் விடாமல் கேட்டிடவே, கவலைக் கருமுகில் மூட்டம் போட்டிருந்த அவர்தம் முகத்திலும் புன்னகை மின்னிற்று. "அந்தக் கவலையெல்லாம் உனக்கு எதற்கு? தோழர்கள் திறமையாகச்-சுறுசுறுப்பாக-மெத்த ஆர்வத்துடன்-தேர்தல் காரியங்களைக் கவனித்துக்கொண்டு வருகிறார்கள். நீ உன் உடல் நலத்தைக்கவனித்துக் கொள்; ஏதேனும் உடல் நலக் குறைவு இருப்பதாகத் தோன்றினாலும் உடனே மருத்துவர் தேவை என்பதைத் தெரியப்படுத்து.

அலட்சியமாக இருந்து விடாதே!" -என்றெல்லாம் ஆறுதல் மொழிகளைத் தாய்மை உணர்வோடு தந்திட்டார்! நேரமோ வேகமாகப் பறந்து கொண்டிருந்தது. சிறை அதிகாரிகள் தங்கள் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டனர் அதன் பொருள் விளங்கிற்று எங்கள் இருவருக்குமே. அண்ணா புறப்பட்டார். நானும் அவரிடம் விடை பெற்றேன். அவர் என்னைப் பார்த்தபடியே வெளிப்புற வாயிற்படியை நோக்கி நடந்தார். நான் அவரைப் பார்த்தபடியே என் அறை நோக்கி அடிகளை எடுத்து வைத்தேன்.

அவரை அப்போது சந்தித்ததில்-அவர்தம் அறிவுரைகளை ஆறுதல் மொழிகளைக் கேட்டு மகிழ்ந்ததில்-என் இதயத்திற்குத் தனியானவோர் எழுச்சி-இனிப்பு புத்துணர்ச்சி-புளகாங்கிதம் எல்லாமே ஏற்பட்டன. அன்று மாலையே திருநெல்வேலியில் நிகழ்ந்த மாபெரும் 'பொதுக்கலந்து கொண்ட அண்ணா, " 'என் தம்பி' கருணாநிதி தனிமைச் சிறையில் கிடக்கும் இந்த இடம்தான் இனி எனக்கு யாத்திரை செய்ய வேண்டிய புனித பூமி" என்று உணர்ச்சி பொங்கிடக் குறிப்பிட்டு விட்டு மேலும் பேசும் போது, "என் தம்பி கருணாநிதியைப் பார்த்து விட்டுத் தான் வருகிறேன்.

இங்கே பேசியவர்கள் 'கருணாநிதி தனிமைச் சிறையில் தவிக்கிறார்' என்று சொன்னார்கள். தவறாகச் சொல்லி விட்டார்கள். தம்பி கருணாநிதியைத் தனிமைச் சிறையில் தள்ளுமளவுக்குக் கொடியவரல்ல பக்தவத்சலம். பாம்பும், பூரானும் நெளிகிற பாழ் சிறையில் தான் கருணாநிதியைப் பூட்டி வைத்திருக்கிறார்கள்."

"நெஞ்சத்தில் பூட்டி வைக்க முடியாத நிகழ்ச்சியொன்றை நினைவு படுத்துகிறேன். நான் கருணாநிதியைப் பார்த்த போது, அவர், 'அண்ணா நலமா?' என்ற கேட்பார் என்று கருதினேன். 'அண்ணி சுகமா? பரிமளமும், இளங்கோவனும், கௌதமனும், பாபுவும் சௌக்கியமா?'

என்று கேட்பார்-என்று நினைத்தேன். 'கோபாலபுரம் போனீர்களா?' 'குடும்பத்தைப் பார்த்தீர்களா? இல்லாளும் செல்வங்களும் நலமா?' என்று கேட்பார் என்று எண்ணினேன். ஆனால் கருணாநிதி இதையெல்லாம் கேட்கவில்லை. என் குடும்பத்தைப் பற்றியோ தன் குடும்பத்தைப் பற்றியோ எதுவும் விசாரிக்கவில்லை. கருணா நிதி கேட்ட முதல் கேள்வி: 'என்னண்ணா, தருமபுரி எப்படி இருக்கிறது?'

'கழகம் வெற்றி பெற்று விடுமா? என்பதுதான்' என்றும் கூறினார். அவரை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த 3-4-1965 நாளிட்ட 'காஞ்சி' இதழில் 'தம்பிக்கு மடல்' பகுதியிலும் என்னைப் பற்றி - நான் பாளைச் சிறையிலே அடைக்கப்பட்டிருப்பது பற்றித்-தம்முடைய ஆற்றொணாத் துயரிலே தோய்த்துத் தம் எண்ணங்களைத் தீட்டியிருக்கிறார் அண்ணா. அவற்றில் சில வருமாறு: 'பாதுகாப்புச் சட்டப்படி சிறைப்பிடித்து வைத்திருப்பதால் மிக்கப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் திட்டம் போலும்!

அதனால் தான் பக்கத்திலே உள்ள இளம் குற்றவாளிகளுக்கான சிறைக் கோட்டத்தில் பல நூறு பேர் இருக்க, கருணாநிதிக்காகவே ஒரு பெரிய தனிச் சிறையை ஒதுக்கி அதிலேயும் தனியாக வைத்திருக்கிறார்கள். 'சென்னையிலிருந்து நானூறு கல் தொலைவில் பாளையங் கோட்டையில் தனிமைச் சிறையில் போட்டடைத்துக் கொடுமை செய்வதனைத் தமிழகம் கேட்டுத் தத்தளிக்கிறது; விம்முகின்றனர் தாய்மார்கள்; 'இப்படி ஓர் ஆட்சியா?'

என்று கேட்டுத் துடிக்கின்றனர் முதியோர்கள். நம்மை இத்துணைத் துச்சமாக எண்ணிவிட்டனரே என்றெண்ணி வேதனைப்படுகின்றனர் இளைஞர்கள்; அறம் அறிந்தவர்கள் பதறுகின்றனர்; சட்டம் தெரிந்தவர்கள் இதற்குப் போதுமான நியாயம் இல்லை என்று எடுத்துரைக்கின்றனர். கழகத் தோழர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்; முதலமைச்சர் பக்தவத்சலனார் மட்டும் நிற்கிறார், கற்பாறை போல. 'என்ன குற்றம் செய்தான் அந்தப் பிள்ளை? இவர்களின் (காங்கிரஸ் ஆட்சியாளரின்) குணத்தை அம்பலப்படுத்தி எழுதினான்.

எழுதினால் என்ன? ஆட்சியாளர் குடியா முழுகி விடும்? 'கருணாநிதியின் பேச்சுக்கும், எழுத்துக்கும் ஆட்சியாளர்கள் எத்துணை அஞ்சுகிறார்கள் என்ற நினைப்பு எழுகிறது. ஒரு வெற்றிப் புன்னகை தன்னாலே மலர்கிறது. கழக வளர்ச்சியை அரசினர் கண்டு கலங்கிடும் வண்ணம் பேச்சாலும், எழுத்தாலும் பணியாற்றியதற்காகக் கழகம் என்ன விதத்தில் நன்றியைத் தனது கருணாநிதிக்குத் தெரிவித்துக் கொள்வது? ஒன்று இருக்கிறது; கற்கோட்டையுள் அடைக்கப்பட்டுள்ள கருணாநிதிக்குக் கழகத் தோழர்கள் காட்டக்கூடிய நன்றியறிவிப்பு, தருமபுரித் தேர்தலில் கழகம் வெற்றி பெற வேண்டும்.

அந்தச் செய்தி செந்தேனாகி எத்துணை கொடுமை நிறைந்த தனிமைச் சிறையினையும் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாக ஆக்கிடும். அந்த வெற்றியைப் பெற்றுத் தருவதைவிட அடக்குமுறையால் தாக்கப்பட்டு நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டுத் தனிமைச் சிறையில் பாஞ்சாலங்குறிச்சிச் சீமையில் அடைக்கப்பட்டிருக்கும் கருணாநிதிக்குக் கழகம் தரக்கூடிய மகிழ்ச்சிப் பொருள் வேறெதுவும் இருக்க முடியாது. 'சிறைக் கோட்டம் தள்ளப்படும் இலட்சியவாதிகளோ உறுதி பன்மடங்கு கொண்டவர்களாவது மட்டுமல்ல; தன்னைப் பற்றிய எண்ணம், தனது நலனைப் பற்றிய நினைப்பு, தனது குடும்பம் பற்றிய எண்ணம் - இவைகளைக் கூட மறந்துவிடவும், தான் தனக்காக அல்ல, மற்றவர்களுக்காகவே என்ற நெறியினை உணர்ந்து மகிழ்ந்திடவும், தன்னைப்பற்றிய எண்ணம் எழுப்பிவிடும் ஆசை, அச்சம், கவலை, கலக்கம், பிரிவாற்றாமை போன்ற உணர்ச்சிகளை வென்றிடவும், ஒரு துறவு நிலையைப் பெற்றளிக்கிறது சிறைச்சாலை; இது பற்றியே ஆன்றோர் சிறைச் சாலையை அறச்சாலை என்றனர்.

'பாளையங்கோட்டைச் சிறை வாயிலில் கண்டேன், இந்தப் பேருண்மையை உணர்த்தும் எழுத்தாரத்தை; 'அங்குப் பொறிக்கப்பட்டிருப்பது என்ன? 'தன்னை வெல்வான் தரணியை வெல்வான்!' 'காஞ்சி' இதழில் அண்ணாவின் இந்தக் கருத்து மணிகளை கண்டதும் என் நெஞ்சம் விம்மிற்று. பெருமிதத்தால், பாளைச் சிறை வந்து என்னைப் பார்த்து விட்டுத் திரும்பிய அண்ணாவின் மனக்கேணியில் என் மீதான பரிவுணர்ச்சி எந்த அளவுக்கு ஊற்றெடுத்து வழிந்துள்ளது என்பதனை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

என் விழிகள் குளமாயின. இந்தியப் பாதுகாப்புச் சட்டம் 30(1) பிரிவின்படி என்னைப் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில் அடைத்திட்ட அளவிலேயே காங்கிரஸ் ஆட்சியாளரின் அடக்குமுறைப் பசி அடங்கிடவில்லை. 'முரசொலி'யில் வெளியான சில கட்டுரைகள், படங்கள் ஆகியவற்றைக் காரணம் காட்டி, அதே பாதுகாப்புச் சட்டம் 41 (5)- பிரிவின்படியும் என் மீது வேறொரு வழக்கினையும் தொடுத்தனர். அதன் விசாரணையை முன்னிட்டுப் பாளையங்கோட்டையிலிருந்து கைதியாகவே என்னைச் சென்னைக்குக் கொண்டு சென்றனர்.