உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/ஏன் பாதுகாப்புச் சட்டம்?
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

ஏன் பாதுகாப்புச் சட்டம்? · 23 / 391

ஏன் பாதுகாப்புச் சட்டம்? எழுத்துலகச் சிற்பிகளிலே என் இதயங்கவர்ந்திட்ட மேதைகளில் ரஷ்ய மண்ணில் தோன்றிய லியோ டால்ஸ்டாயும் ஒருவர். அவருக்கு அடுத்தபடியாக என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியே. "எனக்கு மனிதனை விடச் சிறந்த கருத்துக்கள் இல்லை. மனிதன் தான் - மனிதன் மட்டுமே தான் - எல்லாப் பொருள்களுக்கும் எல்லாக் கருத்துக்களுக்கும் படைப்பாளி. அவனே அற்புதங்களைச் செய்வோன்; அவனே இயற்கைச் சக்திகளின் எதிர்காலத் தலைவன்; நான் மனிதனுக்குத் தலைவணங்குகிறேன்.

ஏனெனில் மனித அறிவுக்கும் கற்பனைக்கும் அப்பால் இவ்வுலகில் நான் வேறு எதையும் காணவில்லை"- என்று மனிதகுல மாண்புக்காகவே வாழ்ந்தவர்.- இலக்கியச் செல்வங்களை வடித்துக் கொடுத்தவர் மாக்சிம் கார்க்கி. மார்ச்சுத் திங்கள் 28-ஆம் நாள் தான் அவர் பிறந்த நாள். அவருடைய இலக்கியப் படைப்பாம் 'தாய்' என் சிந்தனைக்கு ஊட்டிய எழுச்சிக்கு எல்லையே இல்லை. நான் பாளைச் சிறையில் இருந்தபோது அந்த நூலை மூன்றாவது முறையாகப் படித்தேன்.

அதில் வரும் வாலிபன் பாவேலுடன் அந்தத் 'தாய்' எந்த அளவுக்குக் பங்கு கொண்டு தன் மகனின் பணி கண்டு பூரிக்கிறாள் என்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன். 'அந்தத் தாய் போலத்தானே என் தாயும் இருந்தார்கள்!' என நினைத்தேன். என் நெஞ்சம் நெகிழ்ந்தது; கண்கள் கசிந்தன. சிறையில் நான் அழுதது அப்போதுதான். கார்க்கியின் அற்புதப் படைப்பான அந்த இலட்சிய வீரன் பாவேல் கொடி ஏந்திக்கொண்டு இராணுவத்தை ஊடுருவி முன்னேறுகிறான், அமைதியாக - அசைவற்ற மனத்தோடு!

அடடா... அந்தக் கட்டம்...! 'பாவேலாக நாம் இருந்திருக்க வேண்டுமே!' என்று எண்ணங்கள் மின்னுகின்றன. என்னைக் காண்பதற்காக 2-3-65 அன்று மாறன் வந்தான் பாளைச் சிறைக்கு. என் தோளிலும் மார்பிலும் தொற்றிக் கொண்டு விளையாடியவன் அல்லவா? அவனைப் பார்த்ததுமே விம்மியது நெஞ்சம்! கண்களோ குளமாயின. பாசத்தால் கட்டுண்டு பேச முடியாமல் திணறினோம் இருவருமே. எங்கள் சொந்தக் குடும்ப நிலை-கழகக் குடும்ப நிலை- ஆகியவை பற்றிச் செய்திகள் பலவற்றைத் தெரிந்து கொண்டேன்.

ஒற்றைப் பறவையாய் நான் ஒடுங்கிக் கிடப்பதெண்ணி வற்றாத அன்பு நெஞ்சங்கள் பல வெளியே வருந்துகின்றன என்பதையும் நான் அறிந்து கொண்டேன். அந்த நாட்களில்- என்னை இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது எந்த வகையிலே நியாயமாகும் என்கிற கேள்வி அடிக்கடி தமிழகச் சட்ட மன்றத்திலே எதிரொலித்திருக்கிறது. என்னைக் குற்றவாளிக் கூண்டிலே ஏற்றுவது ஒன்றுதான் அரசாங்கத்தின் குறி என்றால் அதற்கு சி. ஆர்.

பி சி. 151 பிரிவுப்படியே என்னைச் சிறைப்படுத்தி இருக்கலாம். ஆனால் 'ஹேபியஸ் கார்பஸ்' மனு வந்தால் அதற்குத் தகுந்த முகாந்திரம் சொல்ல வேண்டும் அரசாங்கம். அதிலிருந்து தப்பிக்கவே இந்தியப் பாதுகாப்புச் சட்டம் என் மீது ஏவி விடப்பட்டது. அதன் மூலம் சட்டமன்றத்தில் கலந்து கொள்ளக்கூடிய என்னுடைய அடிப்படை உரிமை பறிக்கப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டும் பொருட்டுச் சட்டமன்றத்திலே உரிமைப் பிரச்சினை எழுப்பியிருக்கிறார் நண்பர் மாதவன்.

ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. அந்தச் சமயம் தருமபுரி இடைத் தேர்தலும் வந்து குறுக்கிட்டது. திருவண்ணாமலையிலே தோல்வியைத் தழுவிச் சோகத்தில் மிதந்திட்ட காங்கிரசார், தருமபுரியிலே எப்படியாவது கழகத்தைத் தோற்கடித்து வஞ்சம் தீர்த்துக் கொள்வது என்று வரிந்து கட்டி நின்றார்கள். அதைப் பற்றிச் சட்ட மன்றத்திலேயே குறிப்பிட்ட அன்பில் தருமலிங்கம். ..."தருமபுரித் தேர்தல் வருகிறது; அவரை (கருணாநிதியை) வெளியே விட்டு வைக்கக்கூடாது என்று உள்ளே போட்டு விட்டார்கள் என்பதாக ஜனங்களே பேசிக் கொள்கிறார்கள்" -என ஆட்சியாளரின் உள் நோக்கத்தையே அம்பலப் படுத்திச் சாடியிருக்கிறார்.

நெஞ்சு வலியால் துடித்திட்ட என்னை நானூறு மைல்களுக்கு அப்பால் லாரியிலேயே கொண்டுபோய்ச் சிறை வைத்திருப்பது பற்றி அரசாங்கம் 'வெள்ளை அறிக்கை'யே தந்திட வேண்டும் என்று வாதித்திட்டிருக்கிறார் நண்பர் ப. உ. சண்முகம். நாவலர், பேராசிரியர், மதி, சி. பி. சிற்றரசு, என். வி. என். முதலான பல கழக முன்னணியினரும் சட்டப் பேரவையிலும் மேலவையிலும் என்னைப் பாளைச் சிறைக்கு அனுப்பியது அறத்தின்பாற்பட்டதல்ல என்று ஆணித்தரமாகப் பேசியிருக்கின்றனர்.

புதுடில்லி நாடாளுமன்றத்திலும் என்னைக் கைது செய்தது தவறு என்று நண்பர் செழியனும் கடுமையாகச் சாடியிருக்கிறார். நீலநாராயணன், டி. கே. கபாலி, மைனர் மோசஸ் முதலான கழகத் தோழர்கள் என் மீதுள்ள பாசப் பெருக்கின் காரணமாக என்னை விடுதலை செய்யுமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் சுவரொட்டிகளை அடித்துச் சென்னை வீதியெங்கும் ஒட்டியிருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மகுடம் புனைந்ததைப்போல அண்ணா அவர்களே நாடாளுமன்ற-ராஜ்ய சபாவில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

"கழகப் பொருளாளரும், சட்ட மன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கருணாநிதி இப்பொழுது இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தியப் பாதுகாப்புச் சட்டம் என்பது நாட்டின் பாதுகாப்புக்காக அல்ல; 'காங்கிரஸ் கட்சியின் பாதுகாப்புக்காகவே பயன்படுத்தப்படுகிறது என்று எனக்கு முன்பு பேசிய பூபேஷ் குப்தா கூறினார்.அந்தக் குற்றச்சாட்டுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?"

-அண்ணாவின் இந்த வினாவுக்கு எந்த நேர்மையான விடையையும் தந்திடவில்லை மத்திய அமைச்சர்கள். காலம் ஓடிக் கொண்டிருந்தது; நான் வாடிக் கொண்டிருந்தேன் இரத்த அழுத்தத்தால். ஆள் அரவமே இல்லாத பாளைச் சிறையில் அணிலாவது துணைக்கு வந்ததே என்று ஆறுதலடைந்திட்ட நான் அது பிரிந்தோடியதும். மீண்டும் தனிமையில் தவித்தேன்; எனினும் கார்க்கி போன்றவர்களின் கருத்து மணிகளை என் நெஞ்சிலே குவித்தேன். 'பாவேலைப் போன்ற இலட்சிய வீரர்களுக்கு எத்தனை 'பாளைகள் தன் கதவுகளைத் திறந்தால் என்ன?

பாம்பாக விழுங்கினால் என்ன?' -என்ற நெஞ்சுரத்தோடு நாட்களைக் கழித்தேன். "சுவர்க்கத்திலே என்னைச் சிறை வைத்தாலும் நான் அதன் பளிங்குச் சுவர்களைத் தாண்டி வெளியேறவே விரும்புவேன். எனக்குச் சுதந்திரமே தேவை" -என்றார் டிரைடன் என்னும் ஓர் அறிஞர். கற்பனைச் சுவர்க்கச் சிறையே ஒருவருக்குக் கசப்பினை அளித்திடும்போது-கற்பனைக்கும் எட்டாத கடுந்துயர்த் தனிமைச் சிறை கண்ணுறக்கத்தையே பறித்திடும் அளவுக்குக் கட்டு விரியன்களே காட்சி கொடுத்திடும் கொடுமைச் சிறை-கரும்புத் தோட்டமாகவா இனித்திடும் எனக்கு?

எனினும் பாளைச் சிறையிலே நான் பெற்ற அனுபவங்கள் பல; கற்ற பாடங்களும் பல. மற்றச் சட்டங்களின்படிக் கைது செய்யப்பட்டு 'ஏ' வகுப்பிலும், 'பி' வகுப்பிலும் வைக்கப்படுபவர்களைவிடப் பாதுகாப்புச் சட்டப்படிக் கைதானவர்களுக்கு அதிகமான சலுகைகள்-மிகுதியான வசதிகள்-தரப்படுவதுதான் சாதாரணமாக வழக்கம். வழக்கத்திற்கு மாறான காரியங்களைச் சந்திப்பதே-மனச்சங்கடங்களைத் தாங்கிக் கொள்வதே-என் வாழ்க்கைப் பயணத்திற்கும் வாடிக்கை ஆகிவிட்டது.

பாளையங்கோட்டையும் அதற்கு விலக்கல்ல. பொதுவாக ஒருவர் 'ஏ' வகுப்பு, அல்லது 'பி'வகுப்புக் கைதியாக இருந்தால் அவரைக் கவனித்திட 'சி' வகுப்புக் கைதிகளில் ஒருவரை 'ஆர்டர்லி'யாகப்- பணியாளாக- அனுப்பி வைப்பார்கள் சிறை அதிகாரிகள். அந்த 'ஆர்டர்லி' க்கு அறையைப் பெருக்குதல், தட்டுகளைக் கழுவுதல் போன்ற சிறு சிறு வேலைகள் தரப்படும். ஆனால் நான் பாளையங்கோட்டைச் சிறையில் இருந்தபோது சாதாரணமான ஒரு பாதுகாப்புக் கைதிக்குக் கிடைத்திருக்கக்கூடிய அந்தப் பணியாள் வசதி கூட எனக்குக் கிட்டவில்லை.

ஏனெனில் நான் இருந்த இடம் 'பார்ஸ்டல் சிறை'-என அழைக்கப்படும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி. அங்கு பெரிய கைதிகள் இல்லை. இளந்தளிர் மாணவர்களே இருந்தனர். எனவே, அவர்களில் யாரையும் பணியாளாக அனுப்ப - முடியவில்லை அதிகாரிகளால். பாளையங்கோட்டை சப்-ஜெயிலிலிருந்துதான் யாரையாவது வரவழைத்திட வேண்டும். அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டும், நான் அந்தச் சிறையை விட்டுச் சென்னைக்கு வரும்வரை அது நிறைவேறிடவே இல்லை.

அன்றைய பக்தவத்சலனார் அரசு, பாதுகாப்புச் சட்டத்தை என் மீது பாயவிடுவதில் எடுத்துக்கொண்ட அவசரத்தை-அக்கறையை-ஒரு பாதுகாப்புக் கைதிக்குத் தந்திட வேண்டிய சாதாரணச் சலுகைகளை வழங்குவதில் கூடச் செலுத்திடவில்லை என்பதைச் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனையும் எடுத்துக் காட்டிட விழைந்தேனேயல்லாமல், வேறல்ல. எனக்குப் பணியாள் வசதி இல்லாததால், எந்தவித மான இழப்பும் இல்லை; இன்னலும் இல்லை; ஏக்கமும் இல்லை; எரிச்சலும் இல்லை.

மாறாகத் தனக்குத்தானே உழைத்துக்கொள்வதில் உள்ள தனி இன்பத்தைத் துய்த்திடச்-சுவைத்திடப்- பாளைச் சிறை ஒரு பக்குவப் பள்ளியாக அமைந்ததாகவே நான் கருதுகிறேன். தனிமைச் சிறையிலே நான் தனித்துக் கிடந்த நிலையிலும், எனக்கு இனிமை வழங்கியவை பெருமை வாய்ந்த எழுத்து வேந்தர்கள் தீட்டிய சில அருமையான நூல்களே. திருநெல்வேலி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் மூலமாகப் பல புத்தகங்களை அப்போது படித்துச் சுவைத்திடும் வாய்ப்புக் கிட்டியது எனக்கு.

என் மனத்தைக் கவர்ந்திட்ட ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி படைத்திட்ட 'தாய்' நூலைப்பற்றி முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன். ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்திய மண்ணில் ஆழமாக-அகலமாக-வேரூன்றச் செய்வதற்காக ஆர்வத்தோடு செயலாற்றிய வாரன் ஹேஸ்டிங்ஸ் பற்றிய புத்தகம் ஒன்றும் எனது படிப்புத் தாகத்துக்கு விருந்து படைத்தது பாளைச் சிறையில். வெள்ளையர் ஆட்சியாம் 'கொள்ளைமாளிகை'க்கு அடித்தளம் அமைத்தவன். ராபர்ட் கிளைவ்தான் என்றாலும், அதன்மீது வலிமை வாய்ந்த சுவர்களை எழுப்பியவன் வாரன் ஹேஸ்டிங்ஸ்.

அதற்காகவே அவன் ஏற்றிப் போற்றப்பட்டான் இங்கிலாந்து மக்களால். எனினும் அவன் இங்கே இழைத்திட்ட குற்றங்கள் ஏராளம்; அவை பற்றிய வழக்கு ஒன்று பிரிட்டானிய பிரபுக்கள் சபையில் நெடுங்காலமாக விவாதிக்கப்பட்டது. 1788-ஆம் ஆண்டு முதல் 1795-ஆம் ஆண்டு வரை- ஏறத்தாழ ஏழாண்டுக் காலம் அந்த வழக்கு நடைபெற்றது. அப்போது ஹேஸ்டிங்ஸ் மீது கேள்விக் கணைகளைச் சரமாரியாகத் தொடுத்துத் தத்தளிக்கச் செய்தவர் எட்மண்ட் பர்க்.

உலகிலேயே தலைசிறந்த பேச்சாளர்கள்- குறிப்பாக, நாடாளுமன்ற விவாத விற்பன்னர்கள்-யார், யார் என்ற பட்டியல் ஒன்று உருவாக்கப் படுமானால் அதன் முதன் வரிசையிலேயே இடம் பெறத்தக்க-நா-நயம் மிக்க 'பேச்சுப் புலி'-எட்மண்ட் பர்க். அவரோடு வாதத்தில் மோதியவர்கள் மூக்குடைபடாமல் தப்பவே முடியாது. அப்படித்தான், ஹேஸ்டிங்ஸ் பற்றி எட்மண்ட் பர்க் அடுக்கடுக்காகக் குற்றங்களைச் சுமத்தியபோது குறுக்கிட்ட ஒருவரும் செம்மையாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார், அடியிற்கண்டவாறு: ".....நீங்கள் ஹேஸ்டிங்ஸ் தவறு செய்தார் என்று திட்டுகிறீர்களே!

ஆனால், இந்தியாவில் ஹேஸ்டிங்சுக்காக வாரணாசி (காசி)யில் கோவில் கட்டிக் கும்பாபிஷேகம் நடத்துகிறார்களே!" -என்று குத்தலாகக் கேட்டாராம் குறுக்கிட்டவர். உடனே எட்மண்ட் பர்க் என்ன பதிலடி கொடுத்தார் தெரியுமா? "அபிஷேகம் நடத்துவதில் ஆச்சரியம் இல்லை; இந்திய மக்களே அப்படித்தான்! நன்மை, செய்யும் கடவுளுக்கு மட்டும் அவர்கள் கோயில்கள் கட்டுவதில்லை; அம்மை, காலரா போன்ற தொத்து நோய்களுக்குரிய தெய்வங்களுக்கும் அவர்கள் கோயில் கட்டுகிறார்கள்!"

பர்க்கின் இந்தச் சொற்கள்-இந்தியாவைப் பற்றிய படப்பிடிப்பு- எனக்குச் சிரிப்பைக் கொடுத்தது, சிந்தனையையும் கிளறிவிட்டது, ஹேஸ்டிங்ஸ் பற்றிய நூலைப் படித்தபோது. 'தொத்து நோய்களையே தெய்வங்களாகத் தொழுதிடும் பகுத்தறிவற்ற பழக்கம் சமூக வாழ்வில் மட்டும்தானா? அரசியல் துறையிலும் அந்த அறியாமைப் போக்கு பற்றிக் கொண்டு படர்ந்திடவில்லையா?'

என்று என்னால் எண்ணாமல் இருந்திட முடியவில்லை அப்போது. பாளைச் சிறையில் என்னோடு பழக வந்தது அணில் என்று முன்பு குறிப்பிட்டேன். அணில் மட்டும் அல்ல. மூட்டைப் பூச்சியும் என்னிடம் மோகங்கொண்டு திளைத்தது; முத்தமிட்டுக் களித்தது-உடம்பெங்கும் துளைத்தது. தேள் ஒன்றும் என்னைச் செல்லமாகக் கொஞ்சிட ஓடிவந்தது! அதுவும் போதாதென்று, புதர்கள் சூழ்ந்த அந்தச் சிறையினுள்ளே பாம்பும் வந்தது என்னைப் பார்ப்பதற்கு!

அந்தக் கட்டுவிரியன் பாம்பைக் கண்டது முதல் என் கண்ணை விட்டு ஓடியே விட்டது உறக்கம்; சின்னச் சின்னக் கண்ணாடித் துண்டங்களையே ஆடையாய் அணிந்தது போன்ற விரியன் பாம்பு, இரவிலே எந்த நேரத்திலே என்னிடம் உறவு கொள்ள வந்திடுமோ என்று உள்ளுற எனக்கு நடுக்கம்! அதைவிட ஒரு கொடுமையான தகவல் கழகக் காளை எம். இராசாங்கத்தைப் பற்றியது. மதுரை மாவட்டத்தில் கூடலூரில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியிலே ஈடுபட்டார் என்பதற்காகக் கைது செய்யப்பட்டார் அந்த மறவர்குல மாணிக்கம்.

ஒரு சட்ட மன்ற உறுப்பினராக இருந்தும்கூடச் சொல்லொணாத கொடுமைகளுக்கெல்லாம் சிறையிலே உள்ளாக்கப்பட்டிருக்கிறார் அவர். ".......இராசாங்கத்தைப் பார்த்தேன்; சதையெல்லாம் பிய்க்கப்பட்டிருந்தது. மூன்று தடவை மயக்கம் போட்டு விழுந்த அவரைத் தண்ணீர் கொடுத்து எழுப்பி அடித்திருக்கிறார்கள். இதுதான் முறையா?"

-என்று திரு மூக்கையா தேவர் அவர்களே 9-3-65-இல் சட்ட மன்றத்தில் சாடிடும் அளவுக்குத் துடிக்கத் துடிக்க அடித்திருக்கிறார்கள். இராசாங்கத்தை. கண்ணைக் கட்டிக் குப்புற வீழ்த்தித் தாக்கியிருக்கிறார்கள்; இடுப்பிலே 'எலெக்ட்ரிக் ஷாக்'கே கொடுத்தார்களாம். தாகந்தாங்காமல் அவர் தண்ணீருக்காகக் கெஞ்சியபோது சிறு நீரையே தந்தார்களாம். இந்தி ஏகாதிபத்தியத்தைத் தடுத்து நிறுத்திட எப்படியெல்லாம் கடுந்துயரின் எல்லைக்கே சென்று உயிர்களையே காணிக்கையாக்க, கொடுத்திருக்கிறார்கள் நம் கழகக் கண்மணிகள்?

'இராசாங்கத்துக்கா இத்தனை சித்திரவதைகள்?' என்று நான் பாளைச் சிறையில் இருந்தவாறே பதறிய வேளையில் என் நெஞ்சையே பாளம் பாளமாக வெடித்திடச் செய்யக்கூடிய இன்னொரு செய்தியும் என்னை எட்டியது. மாயூரம் ஏ.வி.சி. கல்லூரியில் பி.ஏ., வகுப்பில் படித்துக் கொண்டிருந்த சாரங்கபாணி என்னும் மாணவர் தீக்குளித்து மாண்டதே என்னை அவ்வாறு திடுக்கிடச் செய்தது. கீழப்பழுவூர்-சின்னச்சாமி கோடம்பாக்கம்-சிவலிங்கம் விருகம்பாக்கம்-அரங்க நாதன் அய்யன்பாளையம்-வீரப்பன் ரங்கசமுத்திரம்- (சத்தியமங்கலம்) முத்து ஆகியோர் தீக்குளித்தும், கீரனூர்-முத்து விராலிமலை-சண்முகம் கோவை பீளமேடு-தண்டபாணி ஆகியோர் நஞ்சுண்டும், இந்தித் திணிப்பினை எதிர்த்துத் தங்கள் இன்னுயிரை ஈந்தது போதாதா?

மாணவமணி மாயூரம் சாரங்கபாணியும் செந்தழலுக்குத் தன்னுடைய உடலைத் தந்து மறைந்து விட்டாரே என்று நான் அடைந்திட்ட துயருக்கு அளவே இல்லை. தமிழகத்துச் செய்திகள் தாம் இப்படித் தாங்கொணாத வேதனையைத் தந்தன என்றால், டில்லிச் செய்திகளோ அவற்றை விடக் கொடுமையாக வேல் கொண்டு தாக்கின. 1937-இல் மூதறிஞர் ராஜாஜியால் இந்தி திணி

க்கப்பட்டதால் தான் தென்னக மக்களின் எண்ணத்திலே பிரிவினை உணர்ச்சியே முகிழ்த்தது; பின்னர் தீயாக மூண்டெழுந்தது. ஆனால், 1962-இல் செஞ்சீனப் படையெடுப்புக்குப் பின்னர் இந்தியாவுக்கு வெளி நாடுகளால் ஏற்படக் கூடிய விபத்தையும், அதனால் உள்நாட்டில் ஏற்படக்கூடிய விளைவுகளையும், வேறு பல சிக்கல்களையும் சீர்தூக்கிப் பார்த்துத் தன்னுடைய பிரிவினைக் கொள்கையைக் கைவிட முன்வந்தது தி. மு. கழகம். அதற்குப் பிறகு இந்தியா இரண்டுபடுவதை விரும்பவும் இல்லை-வலியுறுத்தவும் இல்லை-கழகம்.

தென்னாட்டில் ஏற்பட்ட இந்த நல்லெண்ணம்தான்-பெருந்தன்மைதான்-இந்தியாவை மேலும் ஒரு பிரிவினைக்கு இலக்காக்காமல் காப்பாற்றியது என்பதனை நடுநிலைமை உள்ள எவருமே ஒப்புக் கொள்வர். இந்தி வெறியர்களோ இந்த உண்மையினை உணர்ந்திருந்தும் இந்தியா எக்கேடு கெட்டால் என்ன- எப்படிச் சிதறுண்டால் என்ன என்கிற போக்கில், தங்களுடைய மொழி ஆதிக்கத்தை நிலை நாட்டுவதிலேயே முனைப்பாக இருந்தனர்- இன்றும் இருக்கின்றனர். இல்லையென்றால்- "மொழிச் சிக்கலைத் தீர்க்க நாட்டை இரண்டு பிரிவுகளாக ஆக்குக!"

-என்று நாடாளுமன்றத்திலேயே இந்திக்காரர்கள் குரல் கொடுப்பார்களா? அவ்வாறு பிரிவினை வாதம் பேசியவர் டாக்டர் ராம்மனோகடு லோகியாதான். இந்தியாவில் சமதர்மப் பூங்காவைச் சமைத்திடும் பொருட்டுத் துடிப்பாகத் தொண்டாற்றியவர் என்கிற அளவில் அவரிடம் எனக்கு நிரம்ப மரியாதை உண்டு. எனினும், நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட அவரே இந்தித் திணிப்பு என்னும் கோடரி கொண்டு இந்தியாவைச் துண்டாடுவதற்கும் தூபம் போடுவார் என்று நான் எதிர்பார்த்திடவே இல்லை.

"மொழிச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காகத் தேவையானால் இரு பிரிவாகவே பிரித்துவிடலாம் இந்த நாட்டை. ஆங்கிலத்திற்குச் சாதகமாக உள்ள மாநிலங்கள் தங்கள் அலுவல்களை ஆங்கிலத்தில் நடத்திக் கொள்ளட்டும். இந்திக்குச் சாதகமான மாநிலங்கள் இந்தியை ஆட்சி மொழி ஆக்கிக்கொள்ளட்டும். அப்படிச் செய்தால் இந்தி பேசும் மண்டலத்தில் உள்ளவர்கள் வெற்றிகரமாக நிருவாகத்தை நடத்திச் செல்வதைக்கண்டு இந்தி பேசாத மண்டலத்தில் உள்ளவர்களும் வெட்கப்பட்டு, இந்தியைப் பிறகு ஏற்றுக் கொள்வார்கள்."

24-2-65-இல் நாடாளுமன்றத்திலே லோகியா எடுத்து வைத்த இந்த வாதத்தைப் படித்தபோது, விளக்கவொண்ணாத வேதனையிலேயே மூழ்கினேன் நான். கனடா நாட்டிலும் இந்தியாவைப் போலவே மொழிச்சிக்கல் உண்டு. அங்கே குவபெக் மாநிலத்தவர் பிரெஞ்சு மொழி பேசுவோர் ஆவர். ஆங்கிலம் பேசுவோரால் தங்கள் உரிமைகள் பாதிக்கப்படுவதை எதிர்த்து அவர்கள் உரக்கக் குரல் எழுப்பி வருகிறார்கள். மொழிச் சிக்கலை ஆராய அமைக்கப்பட்ட 'ராயல் கமிஷன்', ஆங்கிலம் பேசுவோர் நிதானமாக நடக்கத் தவறினால், பிரெஞ்சு மொழியினரைக் கொண்ட குவபெக் மாநிலம் கனடாவிலிருந்து பிரியும் ஆபத்து காத்திருக்கிறது" -என்று அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தது.

அந்த அறிக்கையைக் கண்ணுற்றதும், 'கனடா'வில் உள்ள ஆங்கில வெறியர்களைப் போலத்தானே இந்தி வெறியர்களும் நடந்து கொள்கிறார்கள்! இந்தியாவை இரண்டாக உடைத்தாவது இந்தியைக் கொலுவேற்றிடக் குதிக்கிறார்கள்!" -என்று என்னால் வருந்திடாமல் இருக்க முடியவில்லை.