உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/புனித பூமியாம் பாளையங்கோட்டை
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

புனித பூமியாம் பாளையங்கோட்டை · 22 / 391

புனித பூமியாம் பாளையங்கோட்டை வே ளா வேளைக்கு உணவு அருந்தாமல் கூட என்னால் வெறும் வயிற்றோடு இருந்திட முடியும்; ஆனால் நாளைக் கடத்திடவே முடியாமல் தவியாய்த் தவிப்பேன், நண்பர்கள் முகங்காண முடியாவிட்டால். அதனால் தான் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறை படு மோசமான மனத்துயரத்தையே விருந்தாகப் படைத்தது எனக்கு! என்றாலும் அந்தக் 'கூண்டுக்கிளி' வாழ்க்கையும் பெருமிதத்தையே கொடுத்தது ஒரு விதத்தில். நான் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைக்கு வரலாற்றுப் பெருமை நிரம்ப உண்டு.

இதே பாளையங்கோட்டையில் தான் வெள்ளையருக்கு எதிராக விடுதலை முழக்கம் எழுப்பிய ஊமைத்துரையும் அவரது தோழர்களும் சிறை வைக்கப்பட்டிருந்தனர். தங்கத்தரணி என்று பெயர் பெற்ற வங்காள மண்ணிலே விடுதலை இயக்கம் வேர்விட்டுச் செழித்திடப் பாடுபட்ட தலைவர்களிலே முன்னணி வீரராய்த் திகழ்ந்திட்டவர் 'தேசபந்து' சித்தரஞ்சன தாசர். அந்த மூதறிஞர் ஒரு காலத்தில் முடக்கிப் போடப்பட்டதும் இதே பாளைச் சிறையில் தான். கனல் தெறித்திடச் சுதந்திர உணர்ச்சிகளைக் கம்பீரமாகப் பரப்பி- முதன் முதல் 'கப்பலோட்டிய தமிழன்' என்னும் ஒப்பரிய புகழ் மகுடமும் புனைந்து- செக்கிழுத்த செம்மலாய் ஒளி வீசியவர் வ.உ.

சிதம்பரனார். அவர் ஒரு சமயம் சிறைபட்டுக் கிடந்ததும் இதே பாளையங் கோட்டை மண்ணில்தான். பிற்படுத்தப்பட்டுப் பெரும் பள்ளம்தனில் கிடந்த முக்குலத்தோர். எல்லாரும் முன்னேற்ற நிலையடைய, தம்முடைய தூய்மைமிகு தொண்டால்- சொல்லாற்றலால்- எழுச்சியூட்டிய ஏந்தல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அவர் சிறைபட்டுக் கிடந்ததும் இதே ஊரில் தான். 'இவ்வாறு இமயம் நிகர்த்த பெருமனிதர்கள்- ஏகாதிபத்தியக் காரிருளை விரட்டிய எழு ஞாயிறுகள்- குகைப் புலிகளாக உலவிய கொட்டடிப் பகுதிக்குத் தான் நாமும் கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருக்கிறோம்' என்று எண்ணிய மாத்திரத்தில் என் உள்ளம் பூரித்தது; உடல் புல்லரித்தது.

முன்பொரு சமயம் வெள்ளையர் ஆண்டிட்ட காலத்தில் பெரிய மனிதர்களுக்குரிய மத்தியச் சிறையாக விளங்கிய அந்த பகுதிப் பின்னர் பதினெட்டு வயதுக்குக் குறைந்த இளங்குற்றவாளிகளின் சீர்திருத்தப் பள்ளியாக மாற்றப்பட்டுவிட்டது. சிறுவர்களுக்கான சிறைச்சாலை என்பதால் அங்கே விளையாட்டு அரங்கங்களும் உண்டு; கொட்டடிக் கதவுகளும் திறந்தே இருக்கும். ஆனால், என்னைக் கைதியாக அடைத்துவிட்ட பின்னரோ, அந்தச் சிறுவர் சிறைச்சாலையின் திறந்திருந்த கதவுகளும்கூட மமதையாளர்களின் உதடுகளைப் போல இறுக்கி மூடிக்கொண்டு விட்டன கடுமையான காவலுடன்.

நெல்லை-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் அமைந்திருந்த அந்தச் சிறைச்சாலையிலே தனிமைத் தணலிலே தள்ளப்பட்ட எனக்கு உடல் நலமும் உருக்குலைந்த வண்ணமே இருந்தது. நாள்தோறும் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். உடல் நோயைவிட நமக்குத் தெரிந்த முகங்களையே காண முடியவில்லையே என்கிற உள்ள நோய்தான் தொல்லைப்படுத்தியது மிகுதியாக. ஐந்தாவது நாள் வழக்கறிஞர் திரு நாராயணசாமி முதலியார் (ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி), திரு இரத்தினவேல் பாண்டியன் (இப்போது உயர் நீதிமன்ற நீதிபதி) ஆகியோர் என்னைச் சந்திக்க வந்தனர்.

பாளைச் சிரிப்பு- பார்ப்பதற்கு அழகானது; பளபளப்பாய்-பல அடுக்கு மணிச்சரமாய்-ஒளி வீசுவது! நான் இருந்த- பாளைச் சிறை- தென் பாண்டிப் பாளைச் சிறை- பார்ப்பதற்கு அழகானதல்ல; பார்வைக்கும் வேலை தருவதல்ல- -வார்டர் ஒருவரைத் தவிர வேறு மனித முகங்களையே பல நாட்களுக்குக் காட்டாததால்! பாளையங்கோட்டையில் நான் அடைபட்டுக்கிடந்த சிறைப்பகுதி 'குவாரன்டைன்' - என்று அழைக்கப்படுவதாகும். இளங் குற்றவாளிகள் பள்ளிக்கு வெளியேதான் அது அமைந்துள்ளது.

அங்கே நாற்பது அறைகள் உள்ளன; அவற்றில் ஒன்று மட்டுமே எனக்காக ஒதுக்கப்பட்டது. மற்ற முப்பத்தொன்பதிலும் முழுமையாக நிரம்பி வழிந்தது தனிமை - வெறுமை! மனிதர்கள் அல்லர்! காலையில் விழித்ததும் கண்ணிலே படுவது புளிய மரம்- களை இழந்த இலையுதிர்ந்த புளிய மரம்! உடனே கயத்தாற்றில் கட்டபொம்மன் தொங்கவிடப்பட்ட அந்தப் புளியமரமும் என் கண்ணுக்குப்படும்; புறக்கண்ணுக்கு அல்ல - அகக் கண்ணுக்கு! செங்கதிரோனின் தங்கக் கதிர்கள்-கரங்கள்-தழுவி எடுக்கும் பூமிக்குழந்தையை.

அந்த வெளிச்சத்தின் சாயல் மெல்லப் படர்ந்து வரும், நான் இருக்கும் வெறிச்சோடிய பகுதியிலும். பின்னரே நான் வெளியே வரும் பொருட்டுக் கதவைத் திறந்து விடுவார்கள். சிறைக் கதவை அல்ல-அறைக் கதவை! சின்னஞ்சிறு கூட்டிலிருந்து சற்றுப் பெரிய கூண்டுக்கு வந்துவிட்ட உணர்வே மேலோங்கி நிற்கும். பகலிலோ வேக வைக்கும் வெயில்; வேகமாகப் போக மறுக்கும் பொழுது. அதனால் உடல் புழுங்கும்; உள்ளமும் புழுங்கும். இரவு ஒன்பது மணிக்கு மறுபடியும் அறைக் கதவைப் பூட்டி விடுவார்கள்; என்னை உள்ளே வைத்துத்தான்!

பசுந்தளிர்ப் பருவத்தில் எத்தனையோ வேடிக்கையான விடுகதைகள் போட்டு மகிழ்வது எனக்கு வாடிக்கை. "அந்தரான காட்டில் சொக்கன் பந்தடிக்கிறான்"- என்பதும் அவற்றிலே ஒன்று. ஒரு நாள் அந்தச் 'சொக்கன்' என் பக்கமும் பந்தடிக்க வந்து விட்டான்! ஆம்; அணில் ஒன்று நான் இருந்த சிறைக் கோட்டம் வந்து சேர்ந்தது! மனித முகம் காணாமல் மனந்தவித்துப் புழுங்கிய நான், அணில் முகத்தைக் கண்டதுமே அகங்குளிர்ந்தேன்; முகம் மலர்ந்தேன்; ஆறுதலும் மிக அடைந்தேன்.

அதனைக் கனிவோடு கையில் எடுத்து அறையிலே உள்ள 'கப்-போர்டில்' படுக்க வைத்தேன். ஆனால் பாவம், அதுவும் என்னைப்போல் ஒரு நோயாளி! காக்கையோ, குருவியோ கொத்தியதால் அதன் உடலில் காயம்; என்னைப் போல் உள்ளத்தில் அல்ல! காரணம் அதற்கு அரசியல் தெரியாதே! அதன் வேதனைக்கு மருந்து போட்டேன். தின்னப் பழம் கொடுத்தேன். ஆயினும் 'விடுதலை'யை விட வேறெதுவும் அதற்குப் பிடிக்கவில்லை. அந்த விஷயத்தில் நானும் திரு பக்தவத்சலமாக விரும்பிடவில்லை.

எனக்கு இருதயம் இருந்து தொலைக்கிறதே! அதனால் அந்த அணிலை விடுவித்துத் தோட்டத்துப் பக்கம் அனுப்பிவிட்டேன். அணில் என்னைப் பிரிந்து சென்று விட்டது. நான் அதனைப் பிரிந்து விட்டேன். அதற்கு என்னைப் பற்றி நினைவிருக்காது. அதன் நோய்க்கு அளித்த மருந்தோ வாய்க்கு அளித்த கனிகளோ அதன் ஞாபகத்திற்கு வரப் போவதில்லை. ஆனால், நான் பிரிந்திட்ட அணிலின் முதுகில் உள்ள மூன்று கோடுகள் மட்டும், கடமை- கண்ணியம்- கட்டுப்பாடு- என்னும் மூன்று சொற்களாக என் உள்ளத்தில் முழங்கிக் கொண்டிருக்கும்; நான் எங்கிருந்தாலும் அந்த முழக்கம் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

இந்தியப் பாதுகாப்புச் சட்டம் 30 (1) பிரிவின்படிதான் நான் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டைச் சிறையிலே முடக்கப்பட்டேன். அந்தச் சட்டப்படி-அந்தப் பிரிவின்படி-முதன் முதல் கைது செய்யப்படும் பேறு பெற்றிட்ட கழகத் தொண்டன் நான்தான் என்பது குறிப்பிடத்தக்கது: அதற்கு அடக்கு முறையை அவிழ்த்து விட்ட அரசுத்தரப்பிலே கூறப்பட்ட காரணம், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியிலே மாணவ மணிகளை ஈடுபடுத்துவதில் நான்தான் முன்னணியில்- முனைந்து நின்றேன்; அவர்களைத் தூண்டி விட்டேன் என்பதாகும்.

1965 - ஜனவரி-26 குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாட வேண்டும் என்பதே கழகம் எடுத்திட்ட முடிவாகும்; அதற்குக் கட்டுப்பட்டே நானும் மற்றக் கழக முன்னணியினரும் கண்ணியத்துடன் கடமையாற்றிடப் பொதுமக்களின் ஆதரவைத் திரட்டிட-எழுத்து மூலமும் பேச்சு மூலமும் முற்பட்டோம். மாணவச் செம்மல்களோ, அந்தக் குடியரசு நாளைக்கு ஒரு நாள் முன்னதாகவே இந்தியை எதிர்த்துக் கண்டன ஊர்வலங்களும் கூட்டங்களும் நடத்துவது என்றும், தட்சிண பாரத இந்திப் பிரச்சார நூல்களைச் சென்னைக் கடற்கரையிலே தீயிட்டுக் கொளுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றி விட்டனர்.

அதன்படியே செயலிலும் இறங்கி விட்டனர். மாணவர்களின் அந்த எழுச்சி தானாகப் பீரிட்டடித்த ஊற்றுப் பெருக்கே அல்லாமல், இன்னொருவர் கொண்டு வந்து ஊற்றிய நீர் அல்ல. ஆயினும் அரசுத் தரப்பினரும் ஆளுங்காங்கிரசைச் சார்ந்தவர்களும் மாணவர் போராட்டத்துடன் கழகத்தையும்-குறிப்பாக என்னையும் முடிச்சுப் போட்டுப் பேசுவதிலேயே முழுகவனமும் செலுத்தினர். கிளர்ச்சிக்குரிய நியாய உணர்வினைத் திசைதிருப்பிச் சாதிப்பதையே ஒரு கேளிக்கையாகவும் மேற்கொண்டனர்.

உண்மையென்னவெனில், எந்தக் காரணத்திற்காகக் கழகம் குடியரசு நாளைத் துக்க நாளாக அறிவித்ததோ அதே காரணத்திற்காகவே அறப்போரில் ஈடுபட்டனர் மாணவர்கள். அவர்களில் பலர்-கழகத்தின் கொள்கைகளில் - அண்ணாவின் அறிவொளியில் - ஈடுபாடு மிகுந்தவர்களாகவும் இருந்தார்கள். அந்தத் தொடர்பினையே ஆதாரமாகக் காட்டிக் களங்கம் கற்பித்திட முனைந்தனர் காங்கிரசார். மற்றபடி கிளர்ச்சி புரிந்திடுமாறு மாணவர்களைக் கழகம் தூண்டிவிடவும் இல்லை; அவ்வாறு ஒரு கட்சி வந்து தூண்டிவிடும் அளவுக்கு உணர்ச்சி பட்டுப் போன நிலையில் மாணவர்களும் இல்லை.

அதே சமயம் அரசு அவிழ்த்து விட்ட அடக்கு முறை-துப்பாக்கிச் சூடுகள்-காரணமாக அமைதியாகத் தொடங்கிய மாணவரின் அறப்போர் எரிமலையாக வெடித்திட்டபோது-அதனைப் பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள் வன்முறைகளுக்கும் வழி வகுத்தபோது-போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுரைகள் வழங்கி அறிக்கை வெளியிட்டவர் அண்ணா அவர்களே. தங்களைச் சந்திப்பதற்கு அன்று முதல்வராக இருந்த திரு. பக்தவத்சலனார் மறுத்தாலும், அவரும் அவரைச் சார்ந்தவர்களும் உதிர்த்த கடுமொழிகளாலும் ஆத்திரமடைந்த மாணவர்கள் இந்தித் திணிப்பைக் கைவிடுவது பற்றி எத்தகைய உறுதி மொழியும் அரசுத் தரப்பிலிருத்து வராத நிலையில் எப்படிப் போராட்டத்தை நிறுத்துவது என்று தயங்கினர்.

அந்த வேளையில் கழகக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட மாணவத் தலைவர்கள் சிலர் - எல். கணேசன் போன்றவர்கள் என்னுடன் கலந்துரையாடியதுண்டு. மாணவர்களின் மனக் குமுறலை மக்கள் மன்றம் முழுமையாக உணர்ந்து கொண்டு விட்ட நிலையில், இந்தச் சிக்கலுக்குத் தீர்வுகண்டிடும் பொறுப்பினைப் பெரியவர்களிடம் விட்டு விடவேண்டும் என்பதே அண்ணாவின் விருப்பம் - வேண்டுகோள். என்னை மாணவத் தலைவர்கள் சந்தித்த போது அண்ணாவின் அந்தக் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடப்பதே கழக மாணவரின் தலையாய கடமையாகும் என்பதையே அழுத்தமாக நான் வலியுறுத்தினேன்.

கிளர்ச்சிகள் நீடிக்க நீடிக்க வெடித்திடும் குண்டுகள், குடித்திடும் உயிர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதையும் சுட்டிக் காட்டினேன். அமைதி சோலையாக விளங்கிய தமிழகம் அமளிக் காடாக மாறி விட்டதே-சட்டம், ஒழுங்கு குலைந்து சாக்காடு செல்லும் பிணங்களின் தொகை பெருகி வருகிறதே என்கிற பெருங்கவலையின் உந்தலால்தான் மாணவர்கள் போராட்டத்தைகைவிட வேண்டும் என்று அண்ணா வலியுறுத்தினார்; நானும் எடுத்துரைத்தேன் நல்லெண்ணத்துடன்.

ஆனால் கனிக்குலைக்கும் கனற்பொறிக்கும் வேறுபாடு காணத் தெரியாத காங்கிரஸ் அரசோ மாணவர்களைத் தூண்டி விட்டேன் என்று என் மீதே குற்றத்தைச் சுமத்தியது; பாளையங்கோட்டைக் கொட்டடியிலும் பூட்டிக் களித்தது. நான் அவ்வாறு தனிமைத் தணலிலே தள்ளப்பட்டுக் கிடந்தாலும் 'மாணவர்களின் நிலை என்ன ஆகுமோ? இன்னும் எத்தனை உயிர்கள் இந்தித் திணிப்பிற்கு அணையெழுப்பிட - இந்த மண்ணிலே இரத்தஞ் சிந்திட வேண்டுமோ? எலும்புகளைத் தந்திட வேண்டுமோ?'

என்றெல்லாம் என் நினைவுகள் அலை மோதிய வண்ணமே இருந்தன. ஆனால் நான் பாளைச் சிறைக்குச் சென்ற ஒரு வாரத்திற்கெல்லாம் இனிக்கும் செய்தியொன்று என் செவிக்கு எட்டியது. தமிழக மாணவர்களின் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டக்குழு தனது இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைக் காலவரையின்றி ஒத்தி வைத்து விட்டது என்பதே அந்தச் செய்தி.