நெஞ்சுக்கு நீதி
இளம் எழுத்தாளர் · 21 / 391
இளம் எழுத்தாளர் பே ரறிஞர் அண்ணா கூறிய அறிவுரை எனக்கு நினைவு வருகிறது. இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த வேண்டுவது பெரும் எழுத்தாளர்களின் கடமையென்று அகிலமெங்கும் வற்புறுத்தப்படுகிறது. இதனை வற்புறுத்துகிறவர்களில் பெரும்பாலும் இளம் எழுத்தாளர்களேதான்! இவன் எங்கே வளர்ந்து விடுவானோ என்று பெரிய எழுத்தாளர்கள் பயந்து புது எழுத்தாளர்களை முளையிலேயே தடுத்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் சில மூலைகளிலிருந்து பலமாக எழுகிறது.
மற்றும் சில பேர் பெற்ற எழுத்தாளர்கள் வளரும் பிறைகளான எழுத்தோவியர்களை இருட்டுக்குள் மூடி வைத்துக் கொண்டு அவர்களின் உழைப்பையும் அறிவையும் தங்கள் பெயர் ஒளிபெற மெருகாக்கிக்கொள்கிறார்கள் என்றும் சில பல திருட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இவைகளில் அறவே உண்மையில்லையென்றும் கூறிவிட முடியாது. ஆனால் அண்ணா அவர்கள், 'எழுதாதே!'
என்று எனக்குக் கட்டளையிட்டது இளம் எழுத்தாளர்களை அரும்பிலேயே கருக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அல்ல. அவர் தாய்மையின் உறைவிடமாயிற்றே! நல்லெண்ணப் பூங்காவன்றோ அவர் உள்ளம்! நான் ஒழுங்காகப் படிக்க வேண்டும் என்பது அவர் ஆசை. மாணவர்கள் அரசியலில் முழு மூச்சுடன் ஈடுபடுவது அவருக்குப் பிடிக்காத ஒன்று. ஆகவேதான் அவர் என்னிடம், "நன்றாகப் படி! படித்து முடித்த பிறகு கட்சியில் தீவிரமாக ஈடுபடலாம்" என்று அறிவுரை கூறிவிட்டுச் சென்றார்.
இளம் எழுத்தாளன்-பெரும் எழுத்தாளர் இருவரிடையே நிகழ்ந்த உரையாடல் அல்ல இது. அண்ணன் தம்பி இருவரிடையே எழுந்த பாச உணர்ச்சியின் எதிரொலி! மறக்க முடியாத பசுமை குலையாத முதல் சந்திப்பு! எப்போது நினைத்துக்கொண்டாலும் இதயத்தில் விவரிக்க முடியாத ஓர் இன்ப ஊற்று! இளம் எழுத்தாளருக்கு ஊக்கம் தரவேண்டியது இன்றியமையாததுதான். அவர்களின் திறமைக்குத் திரையிட்டுவிட்டு அவர்கள் உழைப்பிலே புகழ் பெறுகிறவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்.
ஆனால் யார் இளம் எழுத்தாளர்கள்? என்னைப்போல பள்ளி வாழ்க்கையில் படிப்பைக் கெடுத்துக் கொள்கிற அளவுக்கு அரசியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு அலைந்து திரிபவர்களா? அப்படிப்பட்டவர்களையாவது மன்னித்து விடலாம். இன்னும் ஒரு கூட்டம் இளம் எழுத்தாளர்கள் என்ற பெயரில் உலவிக்கொண்டிருக்கிறதே! அந்தக் கூட்டத்தைத் தழைக்க விடலாமா? ஒரு சில எழுத்தாளர் வாழ்வு வளமாக இருக்கிறது என்பதைக் கண்டு, 'சுலபமாக வளம் பெறும் துறை எழுத்துத் துறைதான்' எனக் கருதி, "கதை வாங்கலியோ கதை!"
எனக் கூவிக்கொண்டு திரிகிற இளம் எழுத்தாளர்களைப் பார்த்தால் எவ்வளவு வேதனையாக இருக்கிறது? முதல் பக்கத்திலேயே தமிழ்த் தாயின் மூக்கைப் பிடித்து அவளை மூச்சுத் திணறச் செய்து, இரண்டாம் பக்கத்தில் அவள் இருதயத்தைப் பிறண்டி, மூன்றாம் பக்கத்திற்குள் அவள் மூச்சை எடுத்துவிடுகிற மொழிக் கொலையை மிகச் சாதாரணமாகச் செய்கிற இளம் எழுத்தாளர்கள் பலரை நாள்தோறும் சந்திக்கிறேன். மொழியின் அரிச்சுவடி தெரியாதவர்கள் எல்லாம் எழுதி வருகிறார்கள் என்றால், எழுத்தை எவ்வளவு இழிவாகக் கருதிவிட்டார்கள்!
திரைப்பட நிலையங்கள், நடிகர்களின் வீடுகள்-எழுத்தாளர் இல்லங்கள்-புத்தகப் பண்ணைகள், இவைகளின் வாயிற் புறங்களில் ஒரு பையிலே ஐந்தாறு கதைகளைப் போட்டுக் கொண்டு, அதை யாராவது வாங்கிக்கொள்வார்கள், ஆயிரம் பதினாயிரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நின்றுகொண்டிருக்கும் எழுத்தாளர்கள்மீது எவ்வாறு இரக்கம் ஏற்படும்? போனால் போகிறதென்று ஒருநாள் கற்றையை வாங்கிப் புரட்டிப் பார்த்தால்-அம்மாவோ! சொல்லுந் தரமன்று அந்தச் சோகக் கதை!
ஒரு கதையின் தலைப்பு, 'ரத்தக் குலம்பு', இன்னொரு கதைக்குப் பெயர் 'மளைரானி', மற்றொன்றின் மகுடம் 'யேழையின் தளி', புரியவில்லையே என்று கேட்டால் ஆசிரியர் விளக்கம் தருகிறார். "ஏழையின் தாலி" என்று எங்கு சென்றாலும் இளந் தமிழ்க் கொலைஞர்களின் படையெடுப்பு!
அவர்களில் சிலரோடு பேசும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அண்ணாவை நான் முதலில் பார்த்த நிகழ்ச்சியையும் அப்போது அவர் எனக்குத் தந்த அறிவுரையையும் எடுத்துக் கூறுவேன். என் எழுத்துக்களுக்கு மதிப்பு ஏற்பட எத்தனை ஆண்டு காலம் பிடித்தது என்பதையும், என் எழுத்துக்கள் பண்படவும், வளம் பெறவும் எவ்வளவு நாட்கள் ஆயின என்பதையும் சான்றுகளோடு குறிப்பிடுவேன். இன்று தென்னகத்துப் பெருமக்களால் ஆர்வமுடன் ஆதரிக்கப்படுகிற 'முரசொலி' ஏடு, முன் திருவாரூரில் துண்டு வெளியீடாக வெளியிடப்பட்டது.
திங்கள்தோறும் ஆயிரக்கணக்கிலே அச்சிடப்பட்டு ஊர்தோறுமுள்ள திராவிட இயக்கக் கிளைகளுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் கிளைக் கழகத்தினர் திரட்டித் தரும் நன்கொடைகளினால் 'முரசொலி' துண்டு அறிக்கை வெளியிட்டுக் கழகம் வளர்ந்தது. அதன் நிரந்தர எழுத்தாளன் நான்தான். கழகச் செயலாளர் தென்னன், பொருளாளர் டி. எஸ். கோபால். 'சேரன்' என்பது என் புனை பெயர். அந்தப் பெயரில் நான் வளர்த்துக்கொண்டேன் எழுத்துக் கலையை-அதற்கென நான் பட்ட சிரமங்களை என்னைச் சந்திக்கும் அவசர எழுத்தாளர்களிடம் நான் சொல்லாமல் இருந்ததில்லை.
