நெஞ்சுக்கு நீதி
மறக்க முடியுமா? · 20 / 391
மறக்க முடியுமா? என் வாழ்க்கைப் பாதையில் மறக்க ஒண்ணாத திருப்பு முனைகளிலே ஒன்றுதான் 1965 பிப்ரவரி பதினாறு. மறுநாள் காலையிலே மலர்ந்திட வேண்டிய நாளேட்டுக்குரிய என் சம்பந்தப்பட்ட வேலைகளை விரைந்து முடித்துவிட்டு, 'முரசொலி' அலுவலகத்திலிருந்து நான் வெளியே வந்தபொழுது- நள்ளிரவை நோக்கி நகர்ந்த வண்ணம் இருந்தது சென்னை மாநகர் 'விடிந்தால் என்னென்ன இடிச் செய்திகள் இதயத்தைப் பிளந்திடுமோ? எங்கெங்கே துப்பாக்கிச் சூடுகள் நடந்திடுமோ?
எத்தனை மங்கல மங்கையர் குங்குமம் இழப்பரோ? எத்தனை காளையர் காராக்கிரகம் ஏகுவரோ?' - என்றெல்லாம் எண்ணங்கள் சுழன்றிடக் கோபாலபுரத்திலுள்ள என் இல்லம் நோக்கிச் சென்றேன் உள்ளம் கனத்திட. அங்கே...! எனக்கே காத்திருந்தது அரசாங்க அழைப்பு! வேறு சில காவல்துறை அதிகாரிகளுடன் தம்முடைய கடமையினை ஆற்றிட வந்திருந்தார் சென்னை நகர உதவிப் போலீஸ் கமிஷ்னர்: என்னிடம் சில கேள்விக் கணைகளையும் அவர் தொடுத்தார். மறுநாள் காலை 'முரசொலி'யில் வெளிவருவதற்கென்று 'ஒரு கண்ணில் சுண்ணாம்பு' என்னும் தலையங்கத்தையும், 'நீட்டோலை' என்னும் அரசியல் மடல் ஒன்றையும் நான் தீட்டியிருந்தேன்.
அவற்றின் 'புரூப்'களைத் தந்திட வேண்டுமென்று அவர் வற்புறுத்தினார். எழுத்து வடிவில் கேட்டாலன்றி அவற்றை அளித்திட இயலாது என்று நான் மறுத்துவிட்டேன். உடனே தம்மோடு வரவேண்டும் என்றார். "பெட்டி, படுக்கைகளுடனேயே நான் புறப்படலாமா?" -என்று வினவினேன் சிரித்துக்கொண்டே. அவரும் அதற்குச் சரி என்று தலையசைத்தார் முறுவலுடன். பின்னர் வீட்டினுள் சென்று பெட்டி, படுக்கைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். "போகலாமா?"
என்றேன், காவல் துறை அதிகாரிகளை நோக்கி. "போகலாம்"- என்றனர். அழுகை வெள்ளத்துக்கு அணை போட்டு நின்றிருந்த குடும்பத்தாரிடம் விடை பெற்றுக்கொண்டு போலீஸ் வண்டியிலே ஏறிக்கொண்டேன். எழும்பூரில் உள்ள காவல் துறைக் கமிஷனர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டேன். அப்பொழுது இரவு மணி பன்னிரண்டு. அங்கும் அந்த உயர் அதிகாரி - 'முரசொலி' ஏட்டிலே நான் தீட்டிய தலையங்கங்கள் பற்றியும், வெளியிட்ட செய்திகள், கட்டுரைகள் பற்றியும் விடாமல் வினா அம்புகளைத் தொடுத்தார்.
இரவு மணி 1-30 வரை விசாரணை நீடித்தது. பிறகே உறங்குவதற்கு இடம் கொடுத்தனர். 16-2-65 அன்று இரவே, நான் கைது செய்யப்பட்டு விட்ட தகவலை அப்போது காஞ்சியிலிருந்த அண்ணா அவர்களுக்குத் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டது. மூன்று மணி நேரங்கூடச் சரியாகத் தூங்கிடவில்லை. மீண்டும் எழுப்பிப் போலீஸ் லாரியிலே என்னை ஏற்றினர். அப்போது விடியற்காலை 4-30 மணிகூட ஆகியிராது. என்னைச் சுமந்துகொண்ட வாகனம் சென்னையைப் பின்னுக்கு தள்ளிவிட்டு எங்கோ பறந்தது வேகமாக.
பனி கொட்டியது. குளிர் நடுங்க வைத்தது. தெற்குத் திக்கினை நோக்கியே லாரி ஓடிக்கொண்டிருந்தது. எந்தச் சிறையிலே தள்ளப் போகிறார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. தெரிவிக்கவும் இல்லை காவல் துறையினர். 17-2-65 காலை 8-30 மணி அளவில் திண்டிவனம் தென்பட்டது. உளுந்தூர்ப்பேட்டையும் தாண்டியாயிற்று. 'ஒரு வேளை திருச்சி சிறைக்குத்தான் கொண்டு செல்வார்களோ?'
பழைய நினைவுகள் - நிகழ்ச்சிகள் படமாய் விரிந்தன மனத்திரையில், இதற்கு முன்னர் பெரும்பாலும் நெடுநாட்கள் சிறைப்பறவையாய் நான் அடைபட்டுக் கிடந்ததும் திருச்சியிலே தான். மும்முனைப் போராட்டம் - கல்லக்குடி- தண்டவாளத்திலே தலை- அதற்காக ஆறு மாதச் சிறை- -இப்படிப் பொங்கிப் புரண்டன நெஞ்சின் அலைகள். ஏன், இருபது நாட்களுக்கு முன்னர், குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாடக் கழகம் எடுத்திட்ட முடிவினையொட்டிக் கைதான போது கூடத் திருச்சிக்குத் தான் கொண்டு வந்து சப்-ஜெயிலிலே என்னைத் தள்ளினார்கள்.
'இப்போதும் அப்படித்தான் இருக்கலாமோ?' - என்றுதான் எண்ணிடத் தோன்றியது எனக்கு. ஆனால் நான் நினைத்தவாறு திருச்சி சிறை எனக்குக் கிட்டவில்லை இந்த முறை. நடுப்பகல் 12 மணி அளவில் திருச்சியில் நுழைந்திட்ட போலீஸ் லாரி நேரே ஆயுதப்படைப் போலீஸ் முகாமிற்குச் சென்றது. அங்கே எனக்கு மதிய உணவு வழங்கினார்கள். பின்னர் தொடங்கிற்றுப் பயணம். நேரம் செல்லச் செல்ல எனக்கு நெஞ்சிலே வலி கண்டு தாங்கொணாத அளவுக்கு அதிகரித்துக் கொண்டே போயிற்று.
அதற்கு லாரிப் பயணமும் ஒரு காரணம்; முந்திய இரவில் உறக்கமும் சரியானபடி இல்லையல்லவா? ஒருவர் நீண்ட நெடுந் தொலைவு பேருந்துப் பயணம் புரிந்தாலே உடல் அலுக்கை வாட்டி வதைத்திடும். குலுங்கக் குலுங்க உடம்பைத் தூக்கிப் போடும் லாரிப் பயணம் என்றாலே கேட்க வேண்டுமா அவதிக்கு? எனக்கு நெஞ்சு வலி கண்டதற்குக் கிஞ்சிற்றும் இரக்கமற்ற முறையிலே குதித்துக் குதித்து ஓடிக் கொண்டிருந்த லாரியையே நான் குறை கூறிட வேண்டும்.
இதைப்பற்றி நண்பர் ப.உ. சண்முகம் பின்னர் சட்ட மன்றத்திலே இப்படிக் கேள்வி எழுப்பியிருக்கிறார். "...இங்கே (சென்னையில்) கைது செய்யப்பட்ட கலைஞர் கருணாநிதி நெஞ்சு வலியுடன் போலீஸ் லாரியில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். நான் கேட்கிறேன்: அவரை அழைத்து செல்லப் போலீஸ் லாரி தான் உங்களுக்குக் கிடைத்ததா? அவர் தி மு. கழகத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக நான் கேட்கவில்லை; எங்கள் கட்சியிலே அவர் ஒரு முக்கியமான தலைவர் என்பதற்காகக் கூடக் கேட்கவில்லை; சட்ட மன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற முறைக்காவது, அவரை ஒரு காரிலே அழைத்துச் செல்லக் கூடாதா?
அப்படியென்ன இந்த சர்க்காருக்கு வசதி வாய்ப்பு அற்றா போய் விட்டது? இதயமற்றவர்களே, இந்த நிலைமை ஏன்? நானூறு மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு சிறைச்சாலைக்கு நெஞ்சு வலியோடு போலீஸ் லாரியிலே அழைத்துச் செல்வது எந்த வகையிலே நியாயம்" என்னைப் பொறுத்தவரை சிறைக்குள்ளே தங்குகின்ற வரையிலாவது இத்துணைக் கொடுமையான வலி ஏற்படாத வகையிலே கொண்டு போகக் கூடாதா என்று தான் நான் எண்ணினேன். எம்பி எம்பிக் குதிக்காதபடி லாரியை மெதுவாகவேனும் ஓட்டியிருக்கலாம்.
மற்றபடி, துன்பத்தைக் கூட்டிச் சுமக்கத் துணிந்திட்ட ஒரு தொண்டனுக்குத் தான் ஏறிச் சென்றிடும் வாகனம் காராய் இருந்தால் என்ன? லாரியாய் இருந்தால் என்ன? கட்டை வண்டியாய் இருந்தால் என்ன? 'ஜட்கா' வண்டியாய் இருந்தால் என்ன? எல்லாம் ஒன்று தான். வாகனம் எதுவாக அமைந்த போதிலும், அவனுடைய பாதை மாறிடப் போவதில்லை; பயணமும் நின்றிடப் போவதில்லை? என்னை ஏற்றிச் சென்றிட்ட லாரி மதுரையை அடைந்த பொழுது மாலை 4-30 மணி இருக்கலாம்.
ஆயுதப் படைப் போலீஸ் முகாமுக்கே என்னை முதலில் கொண்டு சென்றார்கள். நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்களுக்கு மத்தியிலே நான் காவலில் வைக்கப்பட்டேன். நெஞ்சுவலியோ நிமிடத்திற்கு நிமிடம் என்னை துடியாய்த் துடிக்கச் செய்தது. எனவே, எனக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு அரசாங்க மருத்துவமனையிலிருந்து டாக்டர் ஒருவர் வரவழைக்கப்பட்டார். அவரோ என் நிலைமையைப் பார்த்து விட்டு மேற்கொண்டு என்னைப் பயணத்தில் ஈடுபடுத்துவது என் உடல் நலனுக்கு உகந்தது அல்லவென்று உறுதியாகக் கூறி விட்டார்.
அவருடைய அறிவுரையைப் புறக்கணிக்க முடியாத நிலையில் என்னை மதுரை மத்தியச் சிறைச்சாலைக்கு இட்டுச் சென்றனர். இரவிலோ மேலும் கடுமையாயிற்று வலி; மார்பை இறுக்கிப் பற்றிக் கொண்டு நான் தவித்த தவிப்பு-துடித்த துடிப்பு- கொஞ்சம் நஞ்சமல்ல. வேதனையின் விளிம்பிற்கே நான் விரைந்த வண்ணம் இருந்தேன். மறுபடியும் அரசாங்க மருத்துவ மனையிலிருந்து இரண்டு டாக்டர்கள் அழைத்து வரப்பட்டார்கள். எனக்குச் சிகிச்சை அளித்திட உறக்கம் வருவதற்கென்றே ஊசியும் போடப்பட்டது.
நான் இப்படி நெஞ்சு வலியோடு போராடுவதை நேரிலே கண்டும் கூட என்னை மதுரைச் சிறையிலேயே வைத்திட மனம் வரவில்லை காவல் துறையினருக்கு. 18-2-65 விடியற்காலை மறுபடியும் என்னை லாரியிலே ஏற்றினர். மதுரையை விட்ட பிறகும் தென் திசையை நோக்கியே தீராத பயணம். ஆனால் இப்போது புதிய தகுதிகள் சில என் பயணத்திற்குப் பொலிவேற்றின. என்னுடைய லாரிக்கு முன்னே ரிசர்வ் போலீஸ் லாரியும் பின்னே ஒரு ரிசர்வ் போலீஸ் லாரியும் அணிவகுத்து வந்தன.
அண்ணாவின் மூன்று தாரக மந்திரங்களில் ஒன்றான கட்டுப்பாட்டினைக் கண்ணே போல் கருதக் கூடியவன் - அதனைக் கடுகளவு கூட மீறத்துணிவில்லாதவன்- என்கிற உண்மை காவல் துறையினருக்குப் புரிந்திட வில்லையோ என்னவோ? எனக்குரிய கட்டுக் காவலை மிகுதிப்படுத்தியிருந்தனர் தங்களுடைய கடமை உணர்வின் காரணமாக. வழியிலே கயத்தாறு; கட்டபொம்மனின் காலடிச் சுவடு பதிந்திட்ட வீரஞ்செறிந்த மண். நெல்லை நகரின் எல்லையை அடைந்திட்ட பொழுது இன்னொரு ஏற்பாடும் என்னை வியப்புக் கடலிலே வீழ்த்தியது அங்கிருந்து நகர் நெடுகிலும் பாளையங்கோட்டைச் சிறை வரையிலும் இருப்புத் தொப்பி அணிந்த போலீசார் இருமருங்கிலும் சுவர் எழுப்பியது போல் வரிசையாக நின்றனர்.
'ஓர் எதிர்க்கட்சித் தொண்டனுக்குக் கூட இவ்வளவு கோலாகல வரவேற்பா? அரசாங்க அணி வகுப்பு மரியாதையா?' என்று உள்ளுற எண்ணிச் சிரித்துக் கொண்டேன் நான்.
