நெஞ்சுக்கு நீதி
நெஞ்சைப் பிளந்திடும் நிகழ்ச்சிகள் · 19 / 391
நெஞ்சைப் பிளந்திடும் நிகழ்ச்சிகள் து க்க நாள் கொண்டாடிய காரணத்திற்காகச் சொல்லொணாத் தொல்லைகளுக்குக் கழகத்தினர் உள்ளாக்கப்பட்ட அதே வேளையில்- நெஞ்சையே பிளந்திடக் கூடிய சம்பவங்கள் சிலவும் நிகழ்ந்து விட்டன அந்தக் குடியரசு நாளில். 'இந்தி ஏகாதிபத்தியக் கொடுமையால் மற்ற மொழிக்காரர்கள் எல்லாரும் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்படப் போகிறோமே- குறிப்பாகத் தமிழினத்தவரின் கலை, இலக்கியம், கலாச்சாரம் அத்தனையும் அழிவைச் சந்திக்க நேரிடுமே - இந்தியால் தென்னாட்டவரின் எதிர்காலமே இருளடையப்போகிறதே என்கிற உண்மையினை எடுத்துச் சொன்னாலும், மத்திய அரசிலே உள்ளவர்கள்தான் ஆணவத்தோடு ஏற்க மறுக்கிறார்கள் என்றால், இங்கே மாநிலத்திலே உள்ள காங்கிரஸ் ஆட்சியாளர்களும் டில்லிக்கே தாளம் போடுகிறார்களே- நேருவின் வாக்குறுதி காற்றிலே பறக்க விடப்படுவதற்கும் கவலைப்படாமல் இருக்கிறார்களே!'
-என்றெல்லாம் நெஞ்சம் வெந்திட்ட 'சிங்கத் தமிழன்' சின்னச்சாமி திருச்சியிலே நெருப்பிலே வெந்திட்ட துயர நிகழ்ச்சி பற்றி முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். அந்தத் தியாகச் செம்மலின் அடிச்சுவட்டிலேயே தே. மு. சிவலிங்கம் என்னும் கழகத் தோழர், சென்னை - கோடம்பாக்கம் - அண்ணாநகர் அருகில் 26-1-65 காலை 3-30 மணிக்குத் தம் உடல் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு செந்தணலிலே வெந்து மடிந்தார். அதே முறையில் 27-1-65 விடிவதற்கு முன்னர் பின்னிரவு இரண்டு மணியளவில் அரங்கநாதன் என்னும்- கழகத் தோழர் சென்னையை அடுத்த விருகம்பாக்கத்திலே தீக்குளித்து மாண்டார்.
திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியிலுள்ள கீரனூரைச் சேர்ந்த முத்து என்னும் இளைஞரோ மேலே குறிப்பிடப்பட்ட தோழர்களைப் போலத் தீக்குளிக்காவிட்டாலும் வேறு வகையில் தம் உயிரைத் தியாகம் செய்து விட்டார் இந்தித் திணிப்பை எதிர்த்து. இந்த மூன்று தோழர்களின் தியாகத்தையும் குறிப்பிட்டுத் தென்னாட்டவரின் இந்தி எதிர்ப்பு வாதத்தில் பொருள் உள்ளது என்பதை விளக்கி உலகப் புகழ்பெற்ற அமெரிக்க 'டைம்' (Time) ஏடு கட்டுரை ஒன்றையே அப்போது வெளியிட்டது.
அதில் காணப்படும் சில வரிகள் வருமாறு: "...தென்னிந்தியாவில் உள்ள திருச்சி அருகே இருபது வயதுள்ள உணவு விடுதி ஊழியரான கீரனூர் முத்து என்பவர் மூட்டைப்பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டுவிட்டார். இப்பகுதியில் நடந்த மூன்றாவது தற்கொலையாகும் இது. "இதற்கு முன் இரண்டு இளைஞர்கள் இவரைப் போலவே தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டனர். வியட்நாமியர் முறையில் இவர்கள் தங்கள் உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டனர்.
இவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மூவரும் இந்தித் திணிப்பை எதிர்த்தவர்கள். "காங்கிரஸ் ஆளும் கட்சி, இந்தியாவின் 15-ஆவது குடியரசு நாளன்று இந்தியை ஆட்சி மொழியாக்கிக் கொண்டாட்டம் நடத்தியது. புதிய சட்டத்தின்படி இனி ஆட்சி நடவடிக்கைகள் இந்தியில் நடத்தப்பட வேண்டும். ஆனால் தென்னிந்தியாவில் 11 கோடி மக்களுக்கு மேல் 4 திராவிட மொழிகளைப் பேசுகின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய இந்த நான்கு மொழிகளையும் பேசும் மக்கள் இந்த (இந்தித்திணிப்பு)ச் சட்டத்தை வெறுத்து எதிர்க்கின்றனர்.
"இந்தியை எதிர்க்கும் தென்னாட்டவர்களின் வாதத்தில் பொருள் உள்ளது. கல்வியறிவுள்ள இந்தியர்களின் உண்மையான ஒரே பொது மொழி ஆங்கிலம்தான். தென்னாட்டினருக்கு இந்தி வரி வடிவம் மாபெரும் இடையூறு ஆகும். இந்தி (தேவ நாகரி லிபி) எழுத்துக்கள் தொடர்ச்சியான வளைவுகளும், கோடுகளும் மேலே எழுந்து விரியும் உயிர்க் குறியீடுகளும் நிறைந்து மேற்கோட்டுடன் எழுதப்படுகின்றன. தமிழ் எழுத்துக்களோ எழில் நுட்பம் மிக்க சுருள்களும் வளைவுகளும் பொருந்தியவை.
-இவ்வாறு தமிழின் தனிச்சிறப்புக்கள் பற்றியும். அமெரிக்க 'டைம்' ஏட்டினர் போன்ற வெளிநாட்டினரே தாங்களும் விளங்கிக் கொண்டு மற்றவர்களுக்கும் விளக்கங்களை அடுக்கினாலும்-இங்கே கொலுவேறியிருந்த காங்கிரசின் கோமான்களோ இந்தி ஏகாதிபத்தியத்துக்கு வெண்சாமரம் வீசுவதையே தங்களுக்குத் தலையாய பெருமை என்று கருதினர். மத்திய அரசிடம் நல்ல பெயர் வாங்கிவிட்டால் போதும் என்கிற நைப்பாசையுடன் துப்பாக்கிச் சூடுகள் நடத்திடவும் துணிந்து விட்டனர் மாணவச் செல்வங்கள் மீது!
அந்த அறப் போரின்போது குண்டு மழை பொழிந்து குருதி வெள்ளத்தைப் பெருக்கி உயிர்களைக் குடிக்கின்ற கொடுமை தொடங்கியது முதன் முதல் அண்ணாமலை நகரில்தான்! இந்தித் திணிப்பினை எதிர்த்திடவும், மதுரையிலே மாணவர் ஒருவர் வெட்டப்பட்ட வன்முறைச் செயலைக் கண்டித்திடவும், ஊர்வலம் ஒன்றை நடத்தினர். சிதம்பரம்-அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள். 27-1-65 அன்று காலை ஏறத்தாழ 9-30 மணியளவில் அவர்கள் ஊர்வலமாகக் கிளம்பிச் சிதம்பரத்தில் நான்கு பெருந் தெருக்களையும் வலம் வந்திட முற்பட்டனர்.
ஆனால், புகைவண்டி நிலையத்தருகில் நெருங்கிடும்பொழுதே தடுத்து நிறுத்தப்பட்டனர். தடை இருப்பதாகக் கூறப்பட்டது. "அப்படித் தடை விதிக்கப்பட்டிருந்தால் அதனை மீறி ஊர்வலம் நடத்துவதையே தமிழ் காக்கும் இலட்சியம் பூண்ட எங்களுடைய தன்மானக் கடமையாகக் கருதுகிறோம்; வேண்டுமானால் நீங்கள் கைது செய்து கொள்ளுங்கள்'-என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள் மாணவத் தளபதிகள். அவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன; தடியடிகள் நடத்தப்பட்டன; மாணவர்கள் தாறுமாறாகத் தடுக்கி விழும் வகையில் ஓட ஓட விரட்டப்பட்டனர்.
திடீரென்று துப்பாக்கிக் குண்டுகள் வெடித்தன. சிவகங்கையைச் சேர்ந்தவரும், பி.எஸ்சி., வகுப்பில் பயின்று வந்தவருமான இராசேந்திரன் என்னும் மாணவர் குண்டுகள் பாய்ந்து அந்த இடத்திலேயே மாண்டார். 1965-அறப்போரில் துப்பாக்கிச் சூடுகள் எத்தனையோ இன்னுயிர்களைச் சுவை பார்த்தன; ஆயினும் தாய்மொழியின் தன்மானத்தைக் காத்திட தன் ஆருயிரையே முதல் காணிக்கையாக-முதல் களபலியாகத்-தந்து மறைந்திட்ட தியாகச்சுடர், இராசேந்திரனே!
சிதம்பரம் அண்ணாமலை நகரில் நடந்த அந்தத் துப்பாக்கிச்சூட்டில் இளங்கோவன் என்னும் மாணவரும் குண்டுகள் பாய்ந்து சிகிச்சைக்காகக் கடலூருக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், போகும் வழியிலேயே அவரும் மடிந்துவிட்டார். தமிழ்ப் புலவர் வகுப்பில் பயின்றுகொண்டிருந்த நெடுமாறன் என்னும் மாணவர், தமது வலது தோளில் குண்டு பாய்ந்த நிலையில் குருதி வெள்ளம் சொட்டச் சொட்டச் சிதம்பரம் மருத்துவ மனையிலே சேர்க்கப்பட்டார்.
மதுரை நிகழ்ச்சியால் மனம் கொதிப்புற்ற தமிழக மாணவர் நெஞ்சிலே அண்ணாமலைநகர் துப்பாக்கிச் சூடு மேலும் ஆத்திரக்கனலையே தூண்டிவிட்டது; துடித்தெழச் செய்தது! "குண்டு பாய்ந்து எலும்பொடிந்து குருதியெல்லாம் போயினும்- மண்டை இரண்டாய் உடைந்து சிதறி மண்ணின் மீது சாயினும். பண்டை எங்கள் தமிழைக் காக்கும் படையை விட்டே ஓடவோ?"
-என்று மாணவச் சிங்கங்கள் பரணி பாடினர்; புறநானூறு படைத்தனர். அண்ணாமலை நகரிலே அருமை மாணவர் இராசேந்திரனின் உடல் மண்ணிலே சாய்ந்திட்ட பிறகும்-இளங்கோவனின் உயிர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகிய பின்னரும்- தடியடி தர்பார் தடைப்படவில்லை; அடக்குமுறைக் கொடுந்தீ அடங்கிடவில்லை; துப்பாக்கிகள் வெடிப்பதும் ஓய்ந்திடவில்லை. இந்திப் பேயின் இரத்தப் பசி எள்ளளவும் தணிந்திடவே இல்லை. அது மேலும்மேலும் இரை தேடியே அலைந்தது, இரக்கமே இல்லாமல்.
இதற்கிடையில் குடியரசு நாளுக்கு முந்தின நாள் இரவு கைது செய்யப்பட்ட அண்ணா அவர்களும் கழக முன்னணியினர் சிலரும் யாரும் எதிர்பாராத வகையில் 1965 பிப்ரவரி முதல் தேதி விடிவதற்கு முன்னர் இரண்டு மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர். திருச்சி துணைச் சிறையிலே அடைக்கப்பட்டிருந்த நானும் மற்ற நண்பர்களும் பிப்ரவரி 2-ம் நாள் மாலை ஆறு மணி அளவில் விடுதலை செய்யப்பட்டோம். ஆனால், டாக்டர் சி. இலக்குவனார் அவர்கள் 1-2-61-இல் மதுரையிலே கைது செய்யப்பட்டார்.
இந்தியை எதிர்த்துப் போராடுமாறு மாணவர்களைத் தூண்டி விட்டார் என்று குற்றஞ் சுமத்தப்பட்டுக் கூண்டுக்கிளி ஆக்கப்பட்டார் அவர். தமிழ் மீது தணியாக் காதல் கொண்ட பேராசிரியர் இலக்குவனாருக்குத் தன்மான இயக்கக் கொள்கைகளிடமும் அடிநாள் தொட்டுத் தனியானதோர் ஈடுபாடு உண்டு. அகில உலகமும் அறிந்திடும் வண்ணம் தொல்காப்பியத்தை ஆங்கிலத்திலே யாத்தளித்த பெருமை அவரைச் சார்ந்திடுவதாகும். 'குறள் நெறி' ஏட்டின் வாயிலாக அவர் எழுப்பிய குரல் தமிழுக்கு அரண் செய்வதாகவே அமைந்திருந்தது.
இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கு மிகக் கோலாகலமாகச் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்திலே நடைபெற்ற சமயம்; பிழையானதொரு கருத்தினைப் பெற்றிடும் வகையில், பிராமி எழுத்துக்களிலிருந்து தான் தமிழ் எழுத்துக்கள் தோன்றின என்றும், தமிழுக்கு என்று தனிச் சிறப்பான எழுத்துக்கள் கிடையாது என்றும் தம்முடைய கல்வெட்டு ஆராய்ச்சியின் மூலம் நிறுவிட முயன்றார் ஒருவர். அந்த வேளையில் அவர் ஒன்றரை மணிக்கு மேல் ஆற்றிய ஆராய்ச்சியின் சொற்பொழிவை ஒன்றரை நிமிடத்திலேயே தம்முடைய வாதத்தினால் பொடிப் பொடியாக்கித் தமிழின் தன்மானத்தைக் காத்துப் பிறமொழி அறிஞர்களின் கை தட்டலைப், பாராட்டுதலைப் பெற்றிட்ட ஒரே தமிழ்ப் பேராசிரியர் இலக்குவனாரே!
என்பால் உள்ளார்ந்த அன்பு கொண்ட அவர் சிறைப்பட்டார் என்கிற செய்தி அறிந்ததும் நான் மிகவும் வருந்தினேன். அவர் கைது செய்யப்பட்ட கொடுமையும் மாணவர் உலகின் மனக் கொதிப்பை அதிகமாக ஆக்கியது. தமிழகத்திலே சுழன்றடிக்கத் தொடங்கிய இந்தி எதிர்ப்புச் சூறாவளி இந்தி பேசாத பிற மாநிலங்களிலும் வெகு வேகமாகத் தாவலாயிற்று-தழுவலாயிற்று. கருநாடக (மைசூர்) மாநில மாணவர்கள் படிப்பு நிறுத்தம் செய்து ஆங்காங்கே ஊர்வலங்கள் நடத்தினர்: உண்ணா நோன்பும் மேற்கொண்டனர் சட்ட மன்றத்தின் முன்பு; அன்றைய மைசூர் முதல்வர் திரு.
நிஜலிங்கப்பாவிடம் மனு ஒன்றையும் அளித்தனர், இந்தித் திணிப்பைக் கண்டித்து. ஆந்திராவில் ஐதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி, மதனப்பள்ளி, சித்தூர், அனந்தப்பூர் முதலான பல இடங்களிலும் மாணவர்கள் படிப்பு நிறுத்தத்தில் ஈடுபட்டுத் தடியடிகள், கண்ணீர்ப் புகை முதலான அடக்குமுறைத் தாண்டவங்களுக்கெல்லாம் ஆளாயினர். நெல்லூரில் துப்பாக்கிச் சூடே நடைபெற்று இருவர் மாண்டிட, அறுவர் இரத்த வெள்ளத்திலே மிதந்தனர்.
மேற்கு வங்க மாநிலத்திலோ ஒரு வார காலத்திற்கு இந்திப் படக்காட்சிகளே ரத்துச் செய்யப்பட்டன. கல்கத்தாவில் சட்ட மன்றத்தின் முன்பும் ஆளுநர் மாளிகை முன்பும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் ஜாதவ்பூர் நகரிலிருந்து பத்து மைல் தொலைவும் ஊர்வலமாகவே வந்து அந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றனர். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் தந்தை பெரியாரும். தி. மு. கழகமும் செய்ததைப் போல; வங்காளப் பகுதியிலும் இரயில் நிலையப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்கள் எல்லாம் அழிக்கப்பட்டன, புரட்சியாளர்களால்.
அசாம் மாநிலத்தில் அகர்தலா போன்ற இடங்களில் தமிழக மாணவர்களுக்கு ஆதரவு அளித்திடும் வகையில் பொது வேலை நிறுத்தம் மட்டுமல்ல, கடையடைப்புகளும் நடைபெற்றன. கேரள மாணவர்களும், ஊர்வலம், உண்ணாநோன்பு- போன்ற நடவடிக்கைகளிலே ஈடுபட்டனர். அங்கே எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் ஒரு குழுவாக இணைந்து அஞ்சல் நிலையங்களின் முன்பு மறியல் செய்தனர். நாடெங்கணும் இவ்வாறு மாணவ மறவர்கள் போர்க்கோலம் பூண்டிட்ட அதே வேளையில் இந்தியாவின் மூத்த தலைவர்கள் பலரும், ஏன் மத்திய அமைச்சர்கள் சிலரும்கூட இந்தித் திணிப்பினைக் கண்டித்துத் தங்கள் எதிர்ப்புக் குரலை எழுப்பிடவும் தவறவில்லை.
முன்னாள் மத்தியக் கல்வி அமைச்சர் எம். சி. சாக்ளா, முன்னாள் மத்திய உருக்கு அமைச்சர் சஞ்சீவ ரெட்டியார், தமிழகத்தின் ஆளுநராக இருந்த ஸ்ரீபிரகாசா, பேராசிரியர் என்.ஜி. ரங்கா, சாகித்திய அகடமியின் தலைவர் சுனித் குமார் சாட்டர்ஜி, சர் சி. பி. இராமசாமி அய்யர், சர் பி. டி. ராசன், முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் -முதலான பல அறிஞர்கள் இந்திக் கொள்கையைப் பற்றி மத்திய அரசை எச்சரித்தனர். ஆட்சி மொழி பற்றிய விதியினை அரசியல் அமைப்புச் சட்டத்திலே திருத்தாவிட்டால், நேருவின் உறுதிமொழிக்கும் சட்ட வடிவம் தரப்படாவிட்டால், இந்தியா பல துண்டுகளாகச் சிதறுண்டு விடும் என்று இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களும் கண்டனக் கணைகள் தொடுத்தன.
இவ்வாறு எச்சரிக்கைகள்-எதிர்ப்பு முழக்கங்கள்-படிப்பு நிறுத்தங்கள்-உண்ணா நோன்புகள்-என்று இந்தியாவே பதற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட போதிலும், பதறிடவில்லை மத்திய அரசு; மக்களின் உயிர்களைப் பதம் பார்க்கவும் பறித்திடவும் தவறிவிடவில்லை, அப்போது தாண்டவமாடிய அடக்குமுறை. 1965 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தழிழகத்திலே துப்பாக்கிக் குண்டுகளின் வெடிச் சத்தங்களே விண்ணைப் பிளந்தன; எதிரொலித்தன. 'ஒரே நாளில் ஒன்பது இடங்களில் துப்பாக்கிச் சூடு!- பதினைந்து இடங்களில் துப்பாக்கிச் சூடு!'
என்றெல்லாம் செய்திகள் வரும் அளவுக்குக் குருவிகளைப் போலச் சுட்டுத் தள்ளப்பட்டனர் பொது மக்கள். இதனால் 'பொள்ளாச்சியில் பத்துப் பேர் சாவு! குமாரபாளையத்திலே பதினைந்து பேர் சாவு!'- என்றெல்லாம் மாண்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போயிற்று. இப்படிச் சுட்டுப் பொசுக்குவதிலேயே அன்றையத் தமிழக அரசு தன்னுடைய மட்டில்லா மதிப்பை உயர்த்திக் கொண்டிடும் வேளையிலே தமிழ்நாட்டைச் சார்ந்த மத்திய அமைச்சர்களான திரு சுப்பிரமணியமும், திரு அளகேசனும் தங்கள் பதவிகளைத் துறப்பதாகக் கடிதங்கள் தந்து அரசியல் வட்டாரங்களில் பாபரப்பை ஏற்படுத்தினர்.
மாணவர்களோ குமுறிப் புழுங்கிடும் நிலையினைக் கடந்து வெடித்திடும் எரிமலையாகவே வீறு நடை போட்டனர்! வீர மரணத்திற்குத் தங்களுடைய உயிர்களை விலை கொடுக்கவும் அவர்கள் தயாராகி விட்டனர். மாயவரம் மாணவன் சாரங்கபாணி தன் உடலுக்குத் தீ வைத்துக் கொண்டு, ஏ. வி. சி. கல்லூரிக்கு எதிரிலேயே கருகிச் செத்தான். இத்துடன் தீக்குளித்தவர்கள் எண்ணிக்கை மட்டும் ஆறு பேர். இந்தியை எதிர்த்து நஞ்சருந்தி மாண்டவர்கள் மூன்று பேர்.
ரயில்கள் நிறுத்தப்பட்டன; பேருந்துகள் கொளுத்தப்பட்டன; தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன; தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. அந்த உணர்ச்சித் தீக்கொழுந்திலே உயிர்களைப் பறிகொடுக்க நேர்ந்த அதிகாரிகள் சிலரும் உண்டு. அதே சமயம் இந்தியாவில் தமிழ் இனமே வீழ்ச்சிப் பாதாளத்தில் வீழ்ந்து விடப் போகிறதே -என்று ஆத்திரங்கொண்ட போலீஸ்காரர் ஒருவர், மதுராந்தகம் சப் ஜெயிலைத் தாம் காவல் காத்திடும் கடமையினைக் கூட மொழிப்பற்றால் ஒரு கணம் மறந்து விட்டு- அருகில் இருந்த அஞ்சலகப் பெயர்ப் பலகையில் காணப்பட்ட இந்தி எழுத்துக்களைச் சுட்ட மறக்கவொண்ணா நிகழ்ச்சியும் உண்டு.
அப்போது தமிழகம் கட்டுப்படுத்தவே முடியாத அமளிக்காடாகவே பற்றி எரிந்தது. சவக் கிடங்க
ாகவே மாறிக் கொண்டிருந்தது! அத்தகைய மோசமான நிலைமைகளுக்கு என்ன காரணம்? யார் பொறுப்பு? இந்தி ஏகாதிபத்திய வெறியர்களின் பிடிவாதப் போக்கே அதற்குக் காரணம் என்றாலும் முதல்வராக இருந்த பெரியவர் பக்தவத்சலனாருக்கும், மற்றும் காங்கிரஸ்காரர்கள் சிந்திய சில சொற்களுக்கும் அன்றையச் சுடுகாட்டு நிலைமைகளுக்கும்- பூகம்ப வெடிகளுக்கும்- பொறுப்பு உண்டு. "மாணவர்களை நான் சந்திக்க மாட்டேன் அவர்களை எதற்காக நான் பார்ப்பது?"
"மாணவர்கள் கல்லூரிக்கு வராவிட்டால் போகட்டும்; எனக்கு ஐந்து கோடி ரூபாய் மிச்சம்." "தி.மு.கழகத்தில் உள்ளவர்கள் கோழைகள்." "தீக்குளிக்கிறவர்கள் வறுமையால் செத்திருக்கலாம்; அல்லது யாராவது கொலை செய்து நரபலி கொடுத்திருக்கலாம்." என்றெல்லாம் எடுத்தெறிந்து பேசினார் திரு. பக்தவத்சலனார். "கறுப்புக் கொடி காட்டினால் கையை வெட்டுவோம்; காலை முறிப்போம்!"
"கறுப்புடை அணியும் பெண்களை நிர்வாணமாக்கித் துரத்துவோம்." "அண்ணாதுரையின் தலையை வெட்டிக் காமராசர் காலடியில் வைப்போம்." -என்றெல்லாம் அறைகூவல் விடுத்தனர்- அடாத செயல்களில் இறங்கினர்- ஆளுங்காங்கிரசார். இப்போது புரிகிறதல்லவா, நீரோடையாய்க் குளிர்ந்து கிடந்த தமிழகம் நெருப்புக் காடாய்க் கொழுந்து விட்டது ஏன் என்று? இந்தி வெறியர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாக மத்திய அரசு இயங்கிடலாமா? மற்ற மொழியினரின் உரிமைகளைப் பறித்திடும் வகையில் இந்தியை மட்டுமே ஆட்சி மொழியாகத் திணித்திடலாமா?
-எரிகிற எதிர்ப்பினை -எரிச்சலை -இந்தி பேசாதோர் எல்லாருமே வெளிப்படுத்திட விழைந்தனர் என்றாலும் அந்த எதிர்ப்பு, மொழிப் புரட்சியாக மூண்டு எழுந்தது தமிழகத்தில்தான்; அதற்குத் தங்கள் உயிர்களையே விலையாகப் பலி கொடுத்தவர்களும் தமிழ் இனத்தவர்கள்தான். இந்தியத் துணைக் கண்டத்தின் ஒரு கோடியிலேயே அந்தப் புரட்சி வெடித்தது- புதிய வரலாற்றைப் படைத்தது- என்ற போதிலும் குவலயத்தின் கவனத்தையே ஈர்த்திடும் வகையிலேயே அது எழுச்சி மிக்கதாய் நடைபெற்றது.
அதைப் பற்றி அமெரிக்காவிலிருந்து வெளி வரும் 'நியூயார்க் டைம்ஸ்' ஏடே தலையங்கம் தீட்டிற்று. அதனுடைய எல்லாக் கருத்துக்களையுமே நம்மால் ஏற்றுக் கொள்ள இயலாதெனினும் அடியிற்காணும் சில வரிகள் குறிப்பிடத்தக்கனவே ஆகும். "இந்தியா மிகப் பெரிய பிரச்சினைகளைச் சுமந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும் இந்தியாவில் இன்று மிகவும் எழுச்சி மிக்கதும், உணர்ச்சி ஊட்டக் கூடியதுமான பிரச்சினை என்னவெனில் இந்தி ஆட்சி மொழி ஆக்கப்பட்டிருப்பதை எதிர்த்துச் சென்னை மாநிலத்தில் நடைபெறும் உக்கிரமான எதிர்ப்பே ஆகும்.
திராவிட முன்னேற்றக் கழம் இந்தப் பிரச்சினையை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறது. பிரிட்டிஷார் தங்கள் வலையை வீசி ஒரு நாடாக ஆண்டு, பொது மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்தாத காலம் வரை இந்தியா ஒரு நாடாக இருந்ததே இல்லை. எந்த நாட்டிலும் மொழி மிகப் பெரிய உணர்ச்சி பூர்வமான பிரச்சினை ஆகக் கூடிய சக்தி பெற்றது. ஸ்பெயின் ஓர் உதாரணம் ஆகும். தீக்குளித்து மாண்ட மதராசிகள் வியட்நாமிய முறையைப் பின்பற்றி இருந்தாலும் அவர்கள் புராதன இந்திய சம்பிரதாயத்தையே கடைப்பிடித்துள்ளனர்.
'எதிரிக்கு உன்னால் தரப்படும் மிக மோசமான தண்டனை என்னவென்றால், உன்னையே வருத்திக் கொள்வது, அல்லது உன்னையே கொன்று கொள்வது' என்பதே அந்தச் சம்பிரதாயம்-" 'நியூயார்க் டைம்ஸ்' இவ்வாறு தீட்டியதைப் போலவே அமெரிக்காவிலிருந்து வரும் 'டைம்' ஏடு தமிழக மொழிப் புரட்சி பற்றிய கட்டுரை வெளியிட்டதை முன்னரே குறிப்பிட்டுள்ளேன். ஐக்கிய நாடுகள் மன்றத்திலும் கூட இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய பேச்சு அடிபட்டது.
சென்னைக் கல்லூரிகளின் மாணவர்கள் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியினை வெளிக்காட்டிடும் வகையில் 8-2-65 அன்று ஒரு நாள் அடையாள உண்ணா நோன்பு மேற்கொண்டனர். வகுப்புகளுக்குச் சென்றிடாமல் அவர்கள் புரிந்த அந்த அறப்போரில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கு கொண்டனர். 12-2-65-இல் தமிழ்நாடு எங்கணும் பொதுவேலை நிறுத்தம் நடைபெற்றது. அன்று சென்னை உட்படப் பல நகரங்கள் பாலைவனங்களாகவே வெறிச்சோடிக் கிடந்தன. பெட்டிக் கடை முதல் பெரிய நிறுவனம் வரை எதுவுமே திறக்கப்படவில்லை.
திரைப்பட நிலையங்கள், உணவு விடுதிகள் எல்லாமே மூடிக் கிடந்தன. பேருந்துகள், கார்கள், லாரிகள் எவையுமே ஓடிடவில்லை. மக்களின் வழக்கமான வாழ்க்கை இயக்கமே செயலற்றுத் தேக்கமடைந்து முடங்கிப் போயிற்று. இந்திக்கு எதிரான புரட்சி இயக்கம் பொது மக்களிடையே இத்தகைய செல்வாக்கினைப் பெற்று வெற்றிக் கனியினைக் கொய்திடுவதைக் காணக் காணக் காங்கிரஸ் ஆட்சியாளரோ வெறுப்பின் உச்சிக்கே சென்றனர். விவேகத்தை இழந்தனர்; வீசினர் அடக்குமுறை எரியீட்டிகளை; அவர்கள் அவ்வாறு பொறுமை இழந்ததன் விளைவாகத்தான் நாடெங்கிலும் ஒப்பரிய உயிர்கள் பலவற்றைக் குடித்திட்ட துப்பாக்கிச் சூடுகள்-சுடுகாட்டுக் கொடுமைகள்!
படுகாயமுற்றோர் - பரிதாபமாக உயிரிழந்தோர் பட்டியல் நாளுக்கு நாள் நீளமாகிக்கொண்டே செல்வதைக் கண்ட அண்ணா அவர்களின் நெஞ்சமோ பதறிற்று. தூய உள்ளத்துடனும் தொண்டாற்றும் பண்புடனும் ஒரு கடும் போராட்டத்துக்குத் தம்மைக் காணிக்கை ஆக்கிக் கொண்டு விட்ட மாணவர்களைப் பாராட்டிய அவர், "போர் முனையில் தொடர்ந்து பீரங்கிக் குண்டுகளைப் பொழிந்து கொண்டிருப்பது மட்டுமே சிறந்த போர் முறை ஆகாது; அவ்வப்போது அமைப்புகளைத் திருத்திக் கொள்வதும், பிடித்த இடங்களைப் பயன்படுத்திக் கொள்வதுமே நல்ல போர் முனையின் சிறப்புகளாகும்" -என்று எடுத்துக் காட்டிக் கிளர்ச்சிகளையும் நேரடி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஆளவந்தார்களின் அலட்சியப் போக்கால் - ஆணவப் பேச்சால் ஆங்காரம் அடைந்திட்ட மாணவ மணிகளும் கிளர்ச்சிகளின் விளைவுகள் பற்றித் தீவிரமாகச் சிந்தித்தனர்; போராட்டத்தையும் ஒத்தி வைத்திட இசைந்தனர். 'அப்பாடா! புயல் ஓய்ந்தது.' என்று என்னைப் போன்றவர்கள் நெடுமூச்செறிந்தோம், நிம்மதி வந்திடப் போவதாக நினைத்து. ஆனால் அடுத்த ஒரு வாரத்திற்குள்ளோ? இரவோடு இரவாக என்னை நோக்கிப் பாய்ந்தது இந்தியப் பாதுகாப்புச் சட்டம்; பருந்தாகத் தூக்கிச் சென்றது பாளையங்கோட்டைக்கு.
