உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/காராக்கிரகம் விழுங்கிற்று எங்களை
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

காராக்கிரகம் விழுங்கிற்று எங்களை · 18 / 391

காராக்கிரகம் விழுங்கிற்று எங்களை பே ரறிஞர் அண்ணா, 25-1-65 நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். குளித்தலையில் கூட்டத்தை முடித்துக் கொண்டு கோவை நோக்கிக் கண்டனக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் பயணம் செய்துக் கொண்டிருந்த என்னை இரவு ஒரு மணி அளவில் பசுபதிபாளையத்தில் வழியிலே வந்து வளைத்துக் கொண்டனர் காவல் துறையினர். மற்றகழக முன்னணியினருக்கும் பரிசாகக் காத்திருந்தது சிறைவாசம். தங்கத் தமிழகம் கொந்தளிக்கும் கடலாகவே மாறிக் கொண்டிருந்தது.

மாணவ மணிகள் இன்றைய இளஞ்செடிகள்; நாளையப் பழ மரங்கள். இந்தி ஏகாதிபத்தியமோ அந்தச் செடிகள் பல தீய்ந்திடவும்-மாய்ந்திடவும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கிற்று கொடூரமாக! உடல் வளத்திற்கு ஊட்டச் சத்து போல-மனவளத்திற்குக் குணலத்திற்கு-உரமாய் அமைந்ததே கல்வி. அந்தக் கல்வித் தேனைப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய மலர்களிலிருந்து திரட்டிச் சேமித்துக் கொள்வதே உயிர் மூச்சாய் ஒரே குறிக்கோளாய்-அமைந்திட வேண்டும் மாணவ மணிகளுக்கு.

எனினும், அந்தக் கல்வியிலேயே கலப்படம் நிகழ்ந்திடும் பொழுது -நஞ்சே கலக்கப்படும் பொழுது - தாய்மொழிக்குரிய தனி இடமே தகர்க்கப்படும்பொழுது-மாணவர்களால் எப்படி இருந்திட முடியும் மவுனமாக? தனிப்பட்ட சச்சரவுகளுக்காகவும், தங்களுக்குள்ளேயே வெடித்திடும் கோப தாபங்களுக்காகவும், தேவையற்ற முறையில் கிளர்ச்சிகளிலே ஈடுபட்டு மாணவர்கள் படிப்பைக் கெடுத்துக் கொள்கிறார்கள் என்றால், அது தவறானதுதான்- தவிர்க்கப்படவும் வேண்டியதுதான்.

ஆனால் ஒரு நாட்டின் விடுதலை, மொழியுரிமை, இனநலன் முதலான பொது இலட்சியங்களை ஊனப்படுத்திட-அவற்றின் உருவையே சிதைத்திட-சில தீய சக்திகள் முற்படும் பொழுது, பொது நல நோக்கோடு அவற்றை எதிர்த்துப் பொருதிட மாணவ மணிகள் கொதித்து எழுவது இயற்கைதானே! இந்தித் திணிப்பினால் தங்கள் எதிர்காலமே இருண்டிடப் போகிறதே என்கிற அச்சத்திற்கு - அதிர்ச்சிக்கு ஆளான மாணவச் செம்மல்களும், அவ்வாறே அப்போது ஏகாதிபத்திய வெறியர்களின் தீதான மொழித் திட்டங்களையெல்லாம் "தூள், தூள் ஆக்குவோம்!"

என்று தோள் தட்டிக் கிளம்பினர் வீராவேசத்தோடு! 1965 ஜனவரி 25-இல் தமிழகம் எங்கணும் உள்ள மாணவர் இந்தித் திணிப்பிற்கு எதிர்ப்பினைத் தெரிவித்து ஆங்காங்கே மாபெரும் கண்டன ஊர்வலங்களை நடத்தினர். சென்னையில் எல்லாக் கல்லூரிகளையும் சேர்ந்த மாணவர் அணி அணியாக நேப்பியர் பூங்காத் திடலில் வந்து கூடினர். ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அவர்கள் அனைவரும் பின்னர் ஒரே பெரும் படையாக-ஒரே ஊர்வலமாகத் தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை நோக்கிச் சென்றனர்.

இந்தி ஏகாதிபத்தியத்தினைத் தடுத்திட வேண்டிக்கொள்ளும் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினைக் கொடுத்திட முயன்றனர் அமைச்சர்களிடம். பின்னர், அன்று மாலை 5-30 மணியளவில் சென்னை மெரீனா கடற் கரையில் மாணவர்கள் கூட்டம் நடைபெற்றது. அங்கே வெள்ளமெனத் திரண்டிருந்த இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் சில இந்தி மொழிப் புத்தகங்களுக்கு எரியூட்டப்பட்டது எதிர்ப்பின் அறிகுறியாக. அரசுக் கட்டிலில் அமர்ந்திருப்போரின் கவனத்தைக் கவர்ந்திட ஊர்வலங்கள் செல்வதும், கூட்டங்கள் நடத்துவதும் மக்களாட்சி நெறியிலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே.

சட்டம்-ஒழுங்கு குலைந்திடா வகையில் அமைதியாகவே அவை நடைபெறும் வரையில், அவற்றைத் தடுத்திட முனைவது ஜனநாயக உணர்வாகாது; சர்வாதிகார வெறியே ஆகும். அத்தகைய வெறியாட்டங்களுக்கே தங்களை உரிமையுள்ளவர்களாக ஆக்கிக்கொண்டு மாணவர்தம் எழுச்சியினை இழித்துப் பேசியதோடு நின்றிடாமல் அழித்தொழிக்கவும் வன்முறையில் இறங்கிவிட்டனர் அன்றையக் காங்கிரசார். மதுரையில், வடக்கு மாடவீதி வழியாக மாணவர்கள் ஊர்வலம் சென்றபோது, அர்பன் ஜில்லா காங்கிரஸ் குழு அலுவலகத்தின் முன்னால் காங்கிரஸ்காரர்கள் அரிவாள், ஈட்டி முதலான ஆயுதங்களு- டன் பாய்ந்து வந்து மாணவர்களைத் தாக்கினர்.

ஒரு கல்லூரி மாணவர் படுகாயம் அடைந்து உயிர் ஊசலாடும் நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இந்த மதுரைச் சம்பவம் உடனே மாநிலமெங்கும் பரவிற்று காட்டுத் தீயாக. அமைதியாக அறப் போரிலே ஈடுபட்ட மாணவர்களின் நெஞ்சிலே ஆத்திரக் கனலையே அது மூட்டிவிட்டது. அன்று (25-1-65) இரவுதான் அண்ணாவும், நாவலரும், நானும் மற்றக் கழக முன்னணியினரும் ஆங்காங்கே இரவோடு இரவாகத் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டோம்.

குடியரசு நாள்- குமுறிடும் இதயங்களை- வெளிப்படுத்தும் அவலக் காட்சிகளுடனேயே விடிந்தது. தமிழகத்தில் மட்டுமின்றிக் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், வங்காளம் முதலான மற்ற மாநிலப் பகுதிகளிலும் அந்நாள் துக்க நாளாகவே கொண்டாடப் பெற்றது. அன்று கழகக் கண்மணிகள் கறுப்புச் சின்னங்கள் அணிந்து தத்தம் இல்லங்களிலே கறுப்புக்கொடி ஏற்றித் தங்கள் வேதனையினை வெளிப்படுத்தினர். அமைதிக்கும் பங்கம் விளைவித்திடும் முறையில்-பொது மக்களுக்குக் குந்தகம் உண்டாக்கிடும் போக்கில்-எத்தகைய வன்முறையிலும் இறங்கிடவில்லை அவர்கள்.

என்றாலும்- பொது இடங்களுக்குப் போகாமல் அவரவர்களுக்குச் சொந்தமான இடங்களில் மட்டுமே நின்று கழகத்தவர் துக்கங்கொண்டாடிய போதிலும், கறுப்புச் சின்னங்களும், கறுப்புக் கொடிகளும் காங்கிரசாரின் கண்களை உறுத்தின போலும்! எனவே, வேண்டுமென்றே-வீண் வம்பு இழுப்பதற்கு என்றே அவர்கள் ஏவி விட்டனர், 'குண்டர் படை' ஒன்றை! காவல் துறையினரால் கட்டவிழ்த்து விடப்பட்டது அடக்கு முறையும்! இதனால், தெருவிலேயே நடமாட முடியாதபடி கறுப்புச் சின்னம் அணிந்த கழகத் தோழர்கள் துரத்தித் துரத்திப் பிடிக்கப்பட்டனர்.

சோதனைகளுக்கும் சுடு மொழிகளுக்கும் ஆளாயினர். பொதுமக்களும் இந்தக் கெடுபிடிகளிலிருந்து தப்ப முடியவில்லை. சென்னை, இராயபுரத்திலே உள்ள கழகத்தின் தலைமை நிலையமான 'அறிவக'த்தின் மாடிமீது ஏற்றப்பட்டிருந்த கறுப்புக் கொடியை அறுத்தெறிந்தார்கள் காங்கிரசார். வாயிலில் கட்டப்பட்டிருந்த தட்டிகளும் சுவரொட்டிகளும் பிய்த்தெறியப்பட்டன; தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. 'முரசொலி' அலுவலகத்தின் முன்பும் குண்டர்கள் வந்து கூச்சல் போட்டவாறே கற்களை வீசினர்.

கலகம் விளைவித்தனர். அங்கே ஏற்றப்பட்டிருந்த கறுப்புக் கொடியும் இறக்கப்பட்டது. உள்ளே பணி புரிந்துகொண்டிருந்த துணையாசிரியர்கள் சிலர் தடியடிக்கு ஆளாகிக் கைதும் செய்யப்பட்டனர். அதேபோல், நுங்கம்பாக்கம், அவென்யூ சாலையில் உள்ள அண்ணா அவர்களின் இல்லத்தின் முன்பும், தேனாம்பேட்டையில் இலட்சிய நடிகர் எஸ். எஸ். இராசேந்திரன் இல்லத்தின் முன்பும், கோபாலபுரத்திலுள்ள என்னுடைய வீட்டின் முன்பும் கறுப்புக் கொடிகளை இறக்கிக் கலவரங்களை உருவாக்கிட முயன்றனர் சிலர்.

இவ்வாறு கழகத்தவர் பலர் தாக்குண்ட போதும், அவர்களுடைய இல்லங்களின் முன்னால் கலவரங்கள் மூண்டபோதும் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்புத் தந்திடவில்லை காவல் துறையினர்; மாறாக வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். ஒருசில அதிகாரிகளோ தாங்களே சென்று கறுப்புக்கொடிகளை இறக்கியிருக்கிறார்கள். பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்? 'ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே' என்கிற பாட்டுக்கேற்ப, அன்றையக் காங்கிரஸ் ஆட்சியின் ஆணைப்படிதானே அவர்கள் செயலாற்றிட வேண்டும்?