உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/துக்க நாள்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

துக்க நாள் · 17 / 391

துக்க நாள் -ஆம் ஆண்டின் இறுதி நாட்கள் தனுஷ்கோடிப் பகுதி மக்களுக்கு வாழ்வின் இறுதியையே கொண்டு வந்து சேர்த்திடும் நாட்களாகிவிட்டன. 24-12-64-இல் திடீரென்று கோரப் புயல் வீசியது; கொந்தளித்தது வங்கக் கடல். அந்தப் புயலும் பொங்குமாங்கடலும் வீடு வாசல்களை மட்டுமல்ல; மனிதர்களையும் விழுங்கின நூற்றுக்கணக்கில், ஏறத்தாழ ஐந்நூறு பேராவது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அப்போது மதிப்பிடப்பட்டது.

தமிழகத்தோடு இணைந்திருந்ததுதான் தனுஷ்கோடி. ஆனால் அதை இணைத்து வைத்திருந்த பாம்பன் பாலத்தை விழுங்கிவிட்டது பயங்கரக் கடல். வெறும் கம்பங்களே காட்சியளித்தன. தனுஷ்கோடியும் துண்டிக்கப்பட்டு இரண்டாயிரம் அடி நீளமும், ஐந்நூறு அடி அகலமும் உள்ள சின்னஞ்சிறு திட்டாகவே அது மாறிவிட்டது. அதிலே உணவு, உடை, உறைவிடம் எல்லாம் பறி கொடுத்து விட்ட நிலையில் திண்டாடித் தத்தளித்தனர் மூவரயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்.

புயல் வீச்சால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி புரிந்திடும் உயர் பணியில் வழக்கம் போலத் தி.மு.கழகமும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டது. "இந்த ஆண்டு தென்னகத்திற்கு ஒரு சோகமயமான -துக்ககரமான- வருந்தத்தக்க ஆண்டாகும்......" -இவ்வாறு 1965-ஆம் ஆண்டினைத் தொலை நோக்கோடு வருணித்தவர், வெடித்திடப் போகும் எரிமலை பற்றி முன்கூட்டியே சூசகமாகச் சொன்னவர் யார் தெரியுமா? கழகத்தைச் சார்ந்திட்ட எவருமே அல்லர்; மூதறிஞர் ராஜாஜி அவர்களே!

9-1-65 தேதியிட்ட 'சுயராஜ்யா' ஏட்டிலேயே மேற்கண்டவாறு தம்முடைய 'ஆரூடத்தை' அறிவித்திருந்தார் அவர். அவருடைய ஊகப்படியேதான் தமிழகத்தை ஆண்டவர்கள் தணல் காடாக ஆக்கினர் நாட்டை. 1965-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இங்கே கோர்ப் புயல் வீசிற்று; குண்டுகள் பாய்ந்தோடின; குமுறும் எரிமலைகள் வெடித்தன; குருதி வெள்ளத்திலே மிதந்தனர் பலர்! இப்படி நாட்டையே துப்பாக்கிகளின் வேட்டைக் காடாக ஆக்கிக் கொந்தளிப்புகள் கொழுந்துவிட்டு எரிந்திட எண்ணெய்யை வார்த்து விட்டது எது?

மத்திய அரசின் இந்தித் திணிப்புத் திட்டமே! 1965 ஜனவரி 26 முதல் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கியே தீருவது என்பதில் அழுத்தமாக இருந்தனர் டில்லியில் உள்ளோர். அவர்களுடைய பிடிவாதப் போக்கினால் விளைந்திடக்கூடிய அநீதியை. அக்கிரமத்தை- மேலே குறிப்பிட்ட அதே ஏட்டில் ஆணித்தரமாகவும் சாடினார் ராஜாஜி. "தென்னக மக்கள் தாமாக விரும்பாதவரை அவர்கள்மீது நாங்கள் ஒரு போதும் இந்தியைத் திணிக்க மாட்டோம்" என்பது நேருவின் சாசனம்!

ஆனால், பிரிட்டானியப் பேரரசன் ஜானின் 'மாக்னோ கார்ட்டா'வுக்கு ஒப்பான அந்த வாக்குறுதிக்கு மாறுபட்ட ஒரு சட்டம் செயலாவதைத்தான் 1965 ஜனவரி 26 காணப் போகிறது. நல்ல நாட்டுப் பற்றுள்ள- நுண்ணறிவுள்ள இந்தியக் குடிமக்கள் மூன்று கோடிப் பேரை கோபம் கொண்ட பிரிவினைகாரர்களாக மாற்றும் சட்டமே இது. "கட்டாயமாக அரசியல் அமைப்புச் சட்டத்தின் பதினேழாம் பிரிவு-ஆட்சி மொழி பற்றிய பிரிவு-அரபுக் கடலிலே தூக்கி எறியப்படவே வேண்டும்!"

-இத்துணை கடுமையாகக் கண்டனக் கணைகளைக்- கருத்தாழம் மிக்க வாதங்களை மூதறிஞர் ராஜாஜி போன்றவர்கள் கொடுத்திட்ட போதிலும், மத்தியிலே கோலோச்சிய கோமான்கள் கேடு பயக்கும் காரியங்களிலேயே ஈடுபட்டனர். தென்னக மக்களின் எதிர்காலத்தையே சுட்டெரித்திடும் வகையிலேயே சுற்றறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தனர்- மாநில அரசுகளுக்கு. மத்திய அரசின் மொழித் திணிப்பால் மனம் கொதிப்புற்ற நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற் குழு 8-1-65-இல் சென்னை 'அறிவக'த்திலே கூடிற்று.

அப்போது ஒரு முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றியது. (அ) 1965 ஜனவரி 26-ஆம் நாளாகிய குடியரசு நாளின் முக்கியத்துவத்தைத் தி.மு. கழகம் உணர்ந்திருந்த போதிலும், தென்னக மக்களின் விருப்பத்தையும் நலத்தையும் சீரழிக்கக் கூடிய விதத்தில் அந்த நாளை இந்தித் திணிப்பு நாளாக இந்தியப் பேரரசினர் மேற்கொண்டிருப்பதாலும், அந்த நாளில் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை வெளிப்படுத்தா விட்டால் தென்னகம் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளது என்று இந்திய அரசினரால் திரித்துக் கூறப்படும் என்பதை உணருவதாலும், அந்த நாளில் தென்னக மக்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியையும், மனக் கொதிப்பையும் காட்டுவதன் அறிகுறியாக அந்த நாளைத் துக்க நாளாகக் கொள்வது என்றும், (ஆ) அன்று எல்லா ஊர்களிலும் கண்டனக் கூட்டங்கள் நடத்துவது என்றும், (இ) துக்க நாளின் அறிகுறியாக அன்று கறுப்புக் கொடிகள் கட்டுவது, கறுப்புச் சின்னம் அணிவது என்றும், -இச்செயற்குழு முடிவு செய்திருக்கிறது.

இந்தத் தீர்மானம் பற்றி அறிந்தவுடனேயே அனலைக் கக்கினர் ஆளும் காங்கிரசார். 'குடியரசு நாளில் துக்கம் கொண்டாடுவதா? அது துரோகச் செயல் அல்லவா?' என்றெல்லாம் அவர்கள் தூற்றினர். சீற்றத்தைக் கொட்டினர். மிகுந்த பொறுப்புணர்வோடு பொருத்தமான சொற்களைக் கொண்டே செயற்குழுவின் தீர்மானம் தீட்டப்பட்டது. குடியரசு நாளின் தனிச் சிறப்பினைக் குறைத்திட வேண்டும் என்பது அதன் குறிக்கோள் அல்ல. மத்திய அரசினர் அந்த ஆண்டுக் குடியரசு நாள் முதல் இந்தியைக் கொலுவேற்றியே தீர்வது என்பதில் குறியாக இருந்திடாமல், வேறொரு நாளைத் தங்களுடைய திணிப்பு முயற்சிக்குத் தேர்ந்தெடுத்திருந்தால், அந்த 'வேறொரு நாளைத்'தான் துக்க நாளாகக் கொண்டாடத் தீர்மானித்திருக்கும் கழகம்.

ஆனால் டில்லியிலே இருந்தவர்கள் அதில் பிடிவாதத்தையே காட்டினர். எனவே, அந்தக் குறிப்பிட்ட குடியரசு நாளையே துக்க நாளாகக் கொண்டாடுவதைத் தன் கடமையாகக் கருதிற்று கழகம். இந்த உண்மை நிலையினை உணர்ந்திட மறுத்து நாங்கள் வேண்டுமென்றே குடியரசு நாளை அவமதிப்பதாகக் குற்றஞ் சாட்டினர் காங்கிரசார். அத்துடன் 'துக்கம் கொண்டாடுபவர்கள் கைது செய்யப் படுவார்களா? அவர்கள்மீது தேசத்துரோக வழக்குப் போடப்படுமா?'

என்றெல்லாம் சட்ட மன்றத்திலும் கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு விடையளிக்க முற்பட்ட அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் அவர்களும், "குடியரசு தினம் புனிதமானது; அன்று துக்க நாளாகக் கொண்டாடுவது தவறு; இது நாட்டுக்குத் துரோக மனப்பான்மையைக் காட்டுவதாகும். இது பற்றிச் சர்க்கார் தக்க நடவடிக்கை எடுக்கும்" என்று உறுதியாக அறிவித்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் திரு பக்தவத்சலனார் எந்தக் கட்சியினைச் சார்ந்தவரோ அதே காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்திட்டவர்கள் மேற்கு வங்க மாநிலத்திலே சில ஆண்டுகளுக்கு முன்னர் இதே குடியரசு நாளைத் துக்க நாளாகக் கொண்டாடினர். அச்சமயம் வங்கத்துக்குச் சொந்தமான 'பெருபாரி' பகுதியை வங்க மக்களைக் கலந்து ஆலோசிக்காமலேயே பாகிஸ்தானுக்குத் தாரை வார்த்துத் தந்திட உடன்பட்டு விட்டது இந்தியப் பேரரசு; அந்த அடாத செயலுக்குக் கண்டனம் தெரிவித்துக் கசப்பினைக் காட்டிடவே குடியரசு நாளில் துக்கத்தைக் கடைப்பிடித்தனர் மேற்கு வங்கக் காங்கிரசார்.

இதில் இன்னும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது என்னவெனில், அந்தத் துக்கக் கொண்டாட்டத்திலே முக்கியப் பங்கெடுத்துக் கொண்டவர்களில் அந்த மாநில முதல்வர் டாக்டர் பி.சி. ராய் அவர்களே முன்னிலையில் நின்றார் என்பதே! அவருக்கு மட்டும் குடியரசு நாளையே துக்க நாளாகக் கொண்டாடும் துணிவு எப்படி வந்தது? அதன் மூலம் மாநில மக்களின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசின் சர்வாதிகாரச் செயல்களைத் தட்டிக் கேட்டிடும் தைரியம் எங்கிருந்து வந்தது?

அதற்குக் காரணம், காங்கிரசின் தூண்களில் ஒருவராகவே திகழ்ந்திட்ட டாக்டர் பி.சி. ராய்க்குத் தன்மான உணர்வு இருந்தது தாயகப் பற்று இருந்தது. அதனால்தான் மற்றவர்களோடு சேர்ந்து தேசியக் கொடியை ஏற்றி வைத்திட வேண்டிய வேளையிலே கறுப்புக் கொடிகளைப் பறக்க விட்டார், வெறுப்பின் அறிகுறியாக! அவருடைய துணிவும், சொந்த மண் உணர்வும், தன்மானமும், தாய்மொழிப் பற்றும் தமிழகக் காங்கிரசாருக்கு இல்லாமற்போனதால்தான் இழிமொழிகளை- எரிச்சல்களைக்-கழகத்தின்மீது வாரிக் கொட்டினர் கடுமையாக.

அந்த நேரத்தில், அவர்கள் எங்கள்மீது சுமத்திய பழியிலே பசை இல்லை என்பதையும், குடியரசு நாளை வேண்டுமென்றே அவமதித்திடும் எண்ணம் எங்களுக்கு அறவே இல்லையென்பதையும் சென்னை, 66-வது வட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்திலே நான் இவ்வாறு விளக்கினேன்: "...ஆங்கிலக் கதையொன்றில் வில்லியம் டெல் என்ற ஒரு வில் வீரனுக்குச் சோதனையொன்று வந்தது. தன்னுடைய குழந்தையின் தலையில் வைக்கப்படும் ஆப்பிள் பழத்தை அவன் அம்பு எய்து பிளக்க வேண்டும் என்பதே அந்தச் சோதனை.

பழத்தின் கீழே இருப்பது குழந்தை என்கிற நினைப்பு வீரனுக்கு வந்திருந்தால் அவனுடைய வில் நடுங்கியிருக்கும்-நாண் நடுங்கியிருக்கும்-அம்பு நடுங்கியிருக்கும்-குழந்தை மாண்டிருக்கும். ஆனால், ஆப்பிள் பழத்தைப் பிளக்க வேண்டும் என்னும் ஒரே நோக்கத்தை மட்டுமே கொண்ட வீரன். அம்பெய்கிறான்-பழம் பிளக்கப்படுகிறது-குழந்தைக்கு ஏதும் சேதம் ஏற்படாமல். "இங்கே குடியரசு நாள் என்பது குழந்தை! அதன் தலையிலுள்ள நச்சுப் பழம் இந்தி; தி.

மு. கழகமோ குறி பார்ப்பதில் கெட்டிக்காரக் கட்சி; குடியரசு நாளுக்கும் அவமதிப்பு வராமல் இந்தி ஏகாதிபத்தியத்தையும் பிளந்திடத் தவறாமல் தி. மு கழகம் அம்பு எய்து வெற்றி பெறும் திறமை பெற்றது. இதைத் தி. மு. கழகம் குடியரசு நாளை அவமதிக்கிறது' என்று கூறித் தூண்டிவிடும்-உசுப்பிவிடும்-உத்தமர்களுக்குக் கூறிக் கொள்ளுகிறேன்."

இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழகத்திலே மட்டுந்தான் இந்தித் திணிப்பினை எதிர்த்துக் குடியரசு நாள் துக்கநாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதா என்றால் அப்படியும் இல்லை. மேற்கு வங்கத்தில் 'வங்கப் புனர் கதன் பரிஷத்' என்னும் தேசிய வாதிகளின் அமைப்பு ஒன்றும் இங்கே கழகம் மேற்கொண்ட தீவிர முடிவினைப்போலவே தானும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிச் செயலாற்றிட முனைந்தது. "....புனிதமான குடியரசு நாளில் பன்னிரண்டு கோடிப் பேர் மட்டுமே பேசும் இந்தியை 32 கோடி மக்கள் மீது திணிக்க அரசாங்கம் முயல்வதால் இந்தி பேசாத மக்கள் அனைவரும் இரண்டாந்தரக் குடிமக்களாக அவமானத்தில் உழல நேரிடும்.

எனவே முறைகெட்ட வகையில் ஆதிக்கப் பீடத்தில் ஏறி இருக்கும் இந்தியை அந்தப் புனிதமான அரியாசனத்திலிருந்து இறக்குவதற்கு இந்தி பேசாத மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து நீடித்த போராட்டம் நடத்த வேண்டியது அவசியமாகும். ஆகவே, இந்தி மட்டும் இந்திய நாட்டின் ஆட்சி மொழியாவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்கம் முழுவதிலும் ஜனவரி 26 முதல் ஒரு வார காலத்திற்கு எதிர்ப்பு வாரம் (Protest week) அனுசரிக்கப்படும்."

கழகம் நிறைவேற்றிய தீர்மானத்திற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்த காங்கிரசார், வங்க மாநிலத்தில் தேசிய வாதிகள் மேற்கொண்ட முடிவைப் பற்றி மட்டும் வாயையே திறக்கவில்லை. எப்படித் திறப்பார்கள்? 'இட்லர் மட்டும் இரண்டாம் உலகப் போரிலே வெற்றியை எட்டிப் பிடித்திருந்தால்...இந்த உலகத்தின் நிலைமை எப்படியெல்லாம் மாறியிருக்கும்? மக்களாட்சி நெறி முறைகள் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப் பட்டிருக்க மாட்டாவா?'

என்றெல்லாம் சிற்சில சமயத்தில் நான் எண்ணிப் பார்ப்பதுண்டு, மனத்திற்குள்ளேயே. அந்த அளவிற்கு ஆங்காரத்துடன் போரினைத் தொடுத்து உலகையே அதிர்ச்சிக்கு ஆட்படுத்திக் கொண்டிருந்தான் இட்லர். 'அவனுடைய நாசிப் படைகள் அதோ ஆலந்தைப் பிடித்து விட்டன-போலந்தை விழுங்கி விட்டன -அதோ பெல்ஜியத்தைக் கைப்பற்றி விட்டன-பிரான்சை நெருங்கி விட்டன' என்று ஒவ்வொரு நாளும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரம் அது.

கடலிலே சின்னஞ்சிறு மீன்களையெல்லாம் தின்று கொழுத்திடும் திமிங்கிலத்தைப் போல, ஐரோப்பாக் கண்டத்தின் சிறிய சிறிய நாடுகளையெல்லாம் தனக்கு இரையாக்கி ஏப்பமிட முற்பட்டு விட்டான் ஜெர்மனியை ஆண்டிட்ட இட்லர். அவனுடைய நாடு பிடிக்கும் நச்சு எண்ணம் இங்கிலாந்து நாட்டுக்கும் நீண்டது; இலண்டனிலே குண்டுமாரி வீசிடவும் தூண்டியது. அதனால் பிரிட்டானிய மக்கள் அடைந்திட்ட பேரதிர்ச்சி-பெரும்பீதி-கொஞ்ச நஞ்சமல்ல.

ஆயினும், மாவீரன் நெப்போலியனையே 'வாட்டர்லூ' வில் 'வீழ்த்துவதற்கு இங்கிலாந்தில் ஒரு நெல்சன் தோன்றியிருந்ததைப் போலவே, இட்லரின் கொட்டத்தை அடக்குவதற்கென்றே சர் வின்ஸ்டன் சர்ச்சில் பிறந்திருந்தார் இங்கிலாந்தில்! அவர் மட்டும் பிரிட்டானியத் தலைமையமைச்சராக அப்போது இல்லாமற்போயிருந்தால், தன்னுடைய பல காலனி நாடுகளுக்கு விடுதலை வழங்கிடும் நாடாக விளங்கியிருக்காது பிரிட்டன்; தானே விடுதலைக்குப் போரிடும் அடிமை நாடாகவே ஆகியிருக்கும் ஜெர்மனியின் இட்லருக்கு.

அது மட்டுமா? பிரான்ஸ் முதலான பெரும்பாலான நாடுகளில் இன்றைய உருவங்களெல்லாம் சிதைக்கப்பட்டிருக்கும் சின்னா பின்னமாக. அத்தகைய இருண்ட நிலைகள் ஏற்பட்டிடா வண்ணம் இரண்டாம் உலகப் போரினை ஒரு முடிவுக்குக் கொணர்ந்து, இட்லர் தானே வெருண்டோடி வீழ்ச்சியினைத் தழுவி மறைந்திடும் வகையில் 'வியூகம்' வகுத்திட்டவர்-யூகத்தோடு செயலாற்றியவர்-வின்ஸ்டன் சர்ச்சிலே! அவர் காட்டிய வெற்றிக்குரிய 'V' குறியைக் கண்டே, தளர்ந்து கிடந்த மக்கள் எல்லாரும் தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நின்றனர்; பொங்கியெழுந்தனர் புலிகளாக; புறமுதுகிட்டு ஓடச் செய்தனர் நாசிப்படைகளை!

இவ்வாறு உலகையே 'இட்லர்' என்னும் எரிதழலிலிருந்து மீட்டவரும் இலக்கியத்துக்காக நோபல் பரிசைப் பெற்றவருமான சர்ச்சில் அவர்கள் தம்முடைய தொண்ணூறாவது வயதில் 21-1-65 இல் சாவின் மடியிலே வீழ்ந்து விட்டார், இந்தத் தரணியையே சோகத் தணலில் தள்ளிவிட்டு! சர்ச்சிலின் உயிர் பிரிந்தாலும்,அவர் பெயர் மறையவே மறையாது; உலக அமைதித் தாயின் மணிக் கழுத்திலே அது வைர மாலையாக வீசிக்கொண்டேதான் இருக்கும். வையகம் உள்ளவரை- வரலாறு உள்ளவரை அவருடைய புகழ் வாடாத மல்லிகை; வற்றாத நறுஞ்சுனை; அணையாத திருவிளக்கு.

குடியரசு நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. அது தமிழர்களின் குடிகெடுக்கும் நாளாக மாறிவிடக் கூடாதே, இந்தித் திணிப்பின் காரணமாக என்கிற கவலையால்தான் அதனைத் துக்க நாளாகக் கொண்டாட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது கழகம். எனினும், இந்த நாளில் வன்முறைச் செயல்கள் தலைநீட்டிடா வண்ணம் அமைதி காட்டிட-அறவழியிலேயே குமுறலைவெளிப்படுத்திடப்-பொதுமக்களுக்கும் கழகத்தவருக்கும்-எடுத்துச் சொல்வதில் அண்ணா- வும் மற்றக் கழக முன்னணியினரும் அக்கறை செலுத்தினோம்; இந்தி எதிர்ப்பு எழுச்சிக்கு ஆதரவைத் திரட்ட ஆங்காங்கே கூட்டங்கள் நடத்திய அதே வேளையில் வன்முறைக்கு வழி வகுத்திடக் கூடாது என்பதையும் நாங்கள் வலியுறுத்தினோம்.

என்றாலும் அன்று நாட்டை ஆண்டவர்கள் எங்கள் நல்லெண்ணத்தைப் புரிந்து கொள்ளத் தவறினர். 'தலைவர்களைச் சிறையிலே தள்ளிவிட்டால் தொண்டர்கள் சரியாகி விடுவார்கள்' என்று தப்புக் கணக்குப் போட்டனர்; தாண்டவமாடிற்று அடக்குமுறை!