நெஞ்சுக்கு நீதி
பிறந்தவூரில் சிறந்த தொண்டு · 16 / 391
பிறந்தவூரில் சிறந்த தொண்டு தமிழகத்திலும் இரண்டு அருமையான வைர வரிகள் உலா வருவதை யாவரும் அறிவர். "தாயிற் சிறந்ததோர் கோயிலுமில்லை; தந்தைசொல் மிக்கதோர் மந்திரம் இல்லை" -என்பதையே குறிப்பிடுகிறேன். என்னைப் பொறுத்த வரையில் எனை ஈன்ற அஞ்சுகத் தாய்தான் எனக்கு இணையில்லாப் பெருங்கோயில்! என் தந்தை முத்துவேலரின் கவிதை நடைக் கனிவுமொழியே எனக்கு முத்தான மந்திரச் சொல்! இவர்கள் இருவரின் பெயர்களும் நின்று நிலைத்திடுமாறு ஏதாவது ஓர் அறப் பணியினை ஆற்றிட வேண்டும் - நினைவுச்சின்னம் எழுப்பிட வேண்டும் - அதுவும் நான் பிறந்த மண்ணிலேயே அதனைத் தோற்றுவித்திட வேண்டும் என்கிற பேரவா நெடுநாட்களாகவே என் நெஞ்சில் அலை மோதியதுண்டு.
என்னுடைய பிறந்த ஊரான திருக்குவளை பற்றித் தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன். "நினைக்கிறேன் இனிக்கிறது; நெஞ்சமெல்லாம் மணக்கிறது!" - என்று பாலில் கரைந்திடும் சீனி போல இனிமையான நினைவுகளில் என்னுள் நானே மூழ்கிடும் வண்ணம் கழனி வளங்கொஞ்சும் தஞ்சாவூர்க் கதம்ப மாலையில் தானும் ஒரு சிறிய மல்லிகை மலராய் எழில் சிரிக்கத் திகழ்வதே திருக்குவளைச் சிற்றூர். அங்கேதான் என் அன்னை - தந்தையர் பெயர்களில், என் தமக்கை மகன் முரசொலி - மாறனின் துணையோடு ஒரு மருத்துவமனை அமைப்பது என்று முடிவு செய்தேன்.
'முத்துவேல் - அஞ்சுகம் தாய் - சேய் நல விடுதி' - என்னும் பெயரில் எழுந்த அதற்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள்தாம் அடிக்கல் நாட்டினார்கள். கட்டடம் முடிவுற்ற நிலையில் 12-11-1964-இல் திறப்பு விழாவை நடத்தினோம் சிறப்பாக. நாவலர் விழாவுக்குத் தலைமை ஏற்றிட, அன்றையத் தமிழக முதல்வர் திரு பக்தவத்சலம் அவர்களே அந்தத் தாய்-சேய் நல விடுதியைத் திறந்து வைத்தார். ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் அரசியல் அரங்கிலே எத்தனையோ கருத்து மோதல்கள், காரசாரமான வாதங்கள் வெடித்திட்ட போதிலும், சாதாரண ஏழை, எளியவர்க்கு நன்மை பயத்திடும் பொதுப்பணி-அறப்பணி-என்று வந்திடும் பொழுது, வேற்றுமை உணர்வுகளுக்கெல்லாம் விடை கொடுத்துவிட்டுக் காரியமாற்றிடலாம் என்பதனைக் காட்டுவதாகவே விளங்கிற்று விழா.
அந்தத் தாய்-சேய் நல விடுதியைத் தொடர்ந்து, உயர் நிலைப் பள்ளி-நான் பிறந்த வீட்டில் ஓவியக் கூடம் போன்ற இன்னும் பல தேவைகளும் சீரிய அமைப்புகளும் நிறைவேற்றப் பட்டுள்ளன திருக்குவளையில், எந்த ஓர் அரசியல் கட்சிக்கும், அதன் நடைமுறைச் செலவுகளுக்கென்று பணம் தேவைப்படத்தான் செய்கிறது! அதுவும் காங்கிரசைப் போல் பணக்காரர்களின் பாடிவீடு ஆகிவிட்ட ஒரு பெரிய கட்சியைப் பதவியை விட்டு இறக்கும் பொருட்டு ஏறத்தாழ எல்லாத் தொகுதிகளிலுமே- எல்லாத் தேர்தல்களிலுமே- போட்டியிடத் துணிந்துவிட்ட ஓர் எதிர்க்கட்சிக்கு ஏற்படக் கூடிய பிரச்சாரச் செலவுகளைப் பற்றிச் சொல்லவே தேவை இல்லை.
எனவே, கழகத்தின் ஆணி வேரான தலைமைக் கழகம் வலுவோடு அமைந்திட நிதிப் பற்றாக்குறை இல்லாத நிலைமையினைத் தோற்றுவித்தல் இன்றியமையாதது என்பதனைப் பொருளாளர் என்கிற முறையில் நான் எண்ணினேன். அந்தச் சமயம் கழகத்தின் நிதி நிலையிலும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. அவ்வப்போது நடைபெற்றிட்ட இடைத்தேர்தல்கள், மாநகராட்சித் தேர்தல்கள் ஆகியவற்றின் பிரச்சாரச் செலவுகள், இந்தி எதிர்ப்புப் போராட்டச் செலவுகள், சில வழக்குகளுக்கான செலவுகள், இடையில் புதிய கட்டடம்(அன்பகம்) வாங்கிய செலவு-ஆக எல்லாம் கூடிக் கழகப் பொருளாதாரத்தில் முடக்கத்தை உண்டாக்கியிருந்தது.
'நம் நாடு' நாளிதழ் வேறு மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வரை இழப்புக்கு உள்ளாகிக் கொண்டிருந்தது. இந்த நிலைமைகளையெல்லாம் சுட்டிக் காட்டி, அறிக்கையொன்றினை உருவாக்கிப் பொதுக் குழுவின் பார்வைக்கு வைத்தேன். அதனை நன்றாக ஆராய்ந்த பின்னர், 'நம் நாடு' வளர்ச்சிக்கென ஒரு நிதியும் தலைமைக் கழகத்திற்கென ஒரு நிதியும் திரட்டித்தான் ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தது கழகம். அதன்படியே நிதி திரட்டிடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.
சென்னை மாநகரம் முதல் தமிழகத்தின் மூலை முடுக்கிலுள்ள சாதாரணச் சிற்றூர்கள் வரை ஆங்காங்கே கழக முன்னணியினரும் தொண்டர்களும் உண்டியல்கள் குலுக்கிப் பொது மக்களிடம் நன்கொடைகள் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவ்வாறு உண்டியல் ஏந்திடும் நாளாக 1964-டிசம்பர் ஏழாம் நாளைத் தேர்ந்தெடுத்து, அறிக்கை வெளியிட்டார் அண்ணா. மற்றவர்களைப் போலவே நானும் அந்த நிதி திரட்டும் பணியிலே ஈடுபட்டேன். நண்பர்கள் புடைசூழ 7-12-64 அன்று காலை ஒன்பது மணி அளவில் சென்னையில் அன்பகத்திலிருந்து புறப்பட்டோம், உண்டியல் ஏந்தி, தேனாம்பேட்டை கடை வீதி, பாண்டி பசார் ஆகிய பகுதிகளில் 11-30 மணி வரை நிதி திரட்டினோம்...
பின்னர் மீண்டும் நான்கு மணி அளவில் அதே பணியினைத் தொடர்ந்திட்டோம். வழியெங்கும் பொதுமக்கள் வெள்ளமெனத் திரண்டு நின்று உண்டியலை நிரப்பினர்; 'எங்கள் விழிநீரைத் துடைத்திடக்கூடிய ஒரே துணை தி.மு கழகமே!' என்கிற தங்கள் நம்பிக்கையையும் தாங்கள் அளித்திட்ட காசுகளின் மூலம் அவர்கள் வெளிப்படுத்தினர். அறிஞர் அண்ணா அவர்கள் நிதி கேட்டு அறிக்கை விடுத்த நாளுக்கும் தோழர்கள் உண்டியல் ஏந்திய நாளுக்குமிடையில் மிகக் குறுகிய காலமே இருந்துங்கூட, கழகத்தின் தேவைகளைக் கழகத்தினர் நற்பணிகளை -மக்கள் நினைவில் கொள்ளத் தவறுவதில்லை என்று சொல்லும் அளவுக்கு நிதி திரண்டிருந்தது.
ஒரே நாளில் அதுவும் உண்டியல் மூலம்-ஒரு காசு இரண்டு காசாக ஏறத்தாழ எண்பதாயிரம் ரூபாய் வரை குவிந்தது, மற்ற மாற்றுக் கட்சிகள் அத்தனைக்குமே வியப்பினை அளிப்பதாகவே அமைந்தது. நடனக் கலை நம் தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாகவே உள்ளத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க விட்டிடும் மிக உயர்ந்த கலையாகவே வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரத்திலேயே நடனக் கலையின் பல்வேறு கூறுகள் ஆழ்ந்த நுணுக்கத்துடன் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
நடனக் கலையின் பேரரசியாகவே மாதவி மங்கை நல்லாள் ஒப்பரியப் புகழின் உச்சியினை எட்டினாள்; அதனை அந்தச் செந்தமிழ்க் காப்பியம் செப்பிச் சிறப்பதையும் யாவரும் அறிந்திடுவர். இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ்-ஆகிய முத்தமிழும் ஒளிமுத்தாய்த் திகழ்வதே நடனக்கலை. ஆனால் அந்த நடனக் கலையோ பண்டையத் தமிழின் மரபுகளை- பழக்க வழக்கங்களை-வரலாற்றுப் பெருமைகளைப் படம் பிடித்துக் காட்டிடும் நிலைமையினின்றும் தடம் மாறி, இடைக்காலத்தில் வந்து இடம் பிடித்துக் கொண்ட புராண இதிகாசக் காட்சிகளை மட்டுமே சித்திரிப்பது என்ற நிலைக்கு இன்று திசைமாறி வந்துவிட்டதைக் காண்கிறோம்.
இப்படிப் பழைமைக் கதைகளையே ஆடிக் காட்டுவதோடு நில்லாமல் இக்காலச் சமுதாயச் சீர்கேடுகளைத் - தலைவர்களின் அரும்பணிகளை - அவர்களுடைய தியாகங்களைப் புதுமை நோக்கோடு கலையிலே புகுத்தினால் என்ன என்கிற எண்ணமும் எனக்கு உண்டு. இதனையே திருமதி சத்யவாணிமுத்து அம்மையாரின் மகள் மரகதமணியின் நடன அரங்கேற்றத்திற்கு 12-12-64-இல் தலைமை தாங்கியபொழுது அடியிற்கண்டவாறு குறிப்பிட்டேன்: "குழந்தைகளுக்கு நடனம் கற்பிக்கிற பொழுது புராணங்களிலிருந்து அவிநயத்திற்காகப் பாடல்களைப் பயன்படுத்துகிறார்கள்.
உதாரணமாகக் கண்ணன், சிவன்பற்றிய பாடல்களைப் பயன்படுத்துகிறார்கள். ஏன் 'பாவ' உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கத்தக்க - அவிநயத்திற்- கேற்ற- சொற்கள் அவற்றில் அமைந்திருக்கின்றன என்ற காரணத்தால்தான் கண்ணன் குழல் வாசிப்பதுபோலவும், சிவன் கோபாவேசம் கொண்டு கண்கள் நெருப்பாக மாறுவதுபோலவும் 'பா' வத்தால் காட்ட முடிகிறது. "பா" வ உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் பாடல்கள் பழங்காலப் புராணங்களிலே - இதிகாசங்களிலே - மட்டுந்தானா இருக்கின்றன?
இல்லை. தேடித் தேடிப்பார்த்தால் துருவித்துருவிப் பார்த்தால்- இன்றைய தினம்கூடச் சமுதாய அமைப்புகளைச் சித்தரித்துக் காட்டும் எத்தனையோ பாடல்கள் இருப்பதையும் காணலாம். அப்படிப்பட்ட நல்ல பாடல்களைத் தேர்ந்தெடுத்து நடன ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும். "பழமையான பாடல்களே வேண்டும் என்று நான் மறுப்பதாகக் கிஞ்சிற்றும் கருத வேண்டாம். அவைகளும் இருக்கட்டும்; அத்துடன் புதுமையும் தொடரட்டும். "சமுதாயத்தைச் - சரித்திரத்தைச் சித்தரிக்கும் நிகழ்ச்சிகளில் 'பா' வ உணர்ச்சி வருமா என்று கேட்கக்கூடும்.
உத்தமர் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியை நல்ல 'பாவ'த்தோடு நடித்துக் காட்டிட முடியாதா? பேத்திகளின் தோள்களிலே அவர் கைகள் இரண்டையும் போட்டுக்கொண்டு செல்வதை 'பாவ' உணர்ச்சியோடு காட்ட முடியாதா? முடியும். அப்போது துப்பாக்கி ஏந்திக்கொண்டு ஒருவன் ஆக்ரோஷமாக வருவதை, குண்டு பாய்ந்து காந்தியார் விழுவதை, உயிரிழப்பதை, எல்லாவற்றையுமே காட்ட முடியும். அந்தக் காட்சியில் ஆக்ரோஷம். அமைதி, துடிதுடிப்பு, சோகம் - அத்தனை உணர்ச்சிகளையும் ஒருசேர வெளிபடுத்த முடியும்.
"முதுகொடிய மூட்டை சுமக்கும் தொழிலாளி படும் தொல்லையை- முதலாளி அவனைச் சவுக்கால் அடிக்கும் கொடுமையை- நடனக்காட்சிகளிலே கொண்டு வர முடியாதா? "இப்படிப்பட்ட அன்றாட நிகழ்ச்சிகளை 'பாவ' உணர்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்திக் காட்டி, கலையின் மூலம் நல்ல கருத்துகளை நாட்டுக்குப் பயன் தரத்தக்க வகையில் அமைக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன். பழமையும் இருக்கட்டும். புதுமையும் சேரட்டும்!"
