நெஞ்சுக்கு நீதி
பிரெஞ்சுக் கதை · 15 / 391
பிரெஞ்சுக் கதை அரிசிப் பஞ்சம் என்பது வேறு எந்தக் காலத்திலும் இப்படி இருந்ததே இல்லை என்று இயம்பிடும் அளவுக்குக் கடுமையாயிருந்த வேளை அது! "சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!-வெறும் சோற்றுக்கு வந்ததிந்தப் பஞ்சம்" -என்னும் கவிதை வரிகளின் காட்சிச் சாலையாகவே அன்று கலங்கிப் புலம்பிற்று தமிழகம். கொட்டும் மழை- கொதிக்கும் வெயில்- என்றெல்லாம் பார்த்திடாமல் ஒட்டிய வயிறு நிறைந்திட ஒரு படி அரிசி கிடைத்திட்டாலே போதும் என்று கடைகளின் முன்னே கடுந்தவம் புரிந்தனர் மக்கள்.
கண்கள் பஞ்சடைய- கவலையால் நெஞ்சொடிய- கால்கள் இற்று விழ- கைக்குழந்தை பிறாண்டி அழ மணிக்கணக்குப் பாராமல் மைல் கணக்கில் கியூவில் நின்றார் மகளிரெல்லாம்! மறு நாள் காலை ஏழு மணிக்குக் கடை திறந்ததும் அரிசி வாங்கிட முடியாதா என்ற ஆசைக் கனவுகளோடு முதல் நாள் இரவு பத்து மணிக்கே கடைகளின் முன்னே படுத்துக்கொண்டு விடுவர் மக்கள். பொழுது விடியும்; கனவுகள் கலையும்; கடைகள் திறக்கும். ஆனால் அரிசி போய்ச் சேராது 'கியூ'வில் நின்றிட்ட அத்தனை பேருக்கும்!
வெற்றுப் பையோடு வீடு திரும்புவர் மக்கள்; பற்றி எரியும் பசி கொண்ட வயிறு; ஆனால் பற்ற வைக்க முடியாமல் பொட்டிழந்த பூவையாய்-விதவைக் கோலம் பூண்டு வெறிச்சோடிக் கிடக்கும்- நெருப்பறியா அடுப்பு! வறுமைக் கொடுஞ்சுவை வாழ்வையே நசுக்கிடப்-பொசுக்கிடப் பொறுமை இழந்திட்ட மக்கள், சில இடங்களில் கடைகளில் புகுந்து கொள்ளையடித்தேனும் அரிசியைக் கொண்டு செல்லவும் துணிந்திட்டனர். அரிசியை ஏற்றிக் கொண்டு லாரிகள் எங்காவது செல்வது தெரிந்தால் அவற்றை வழிமறித்து மடக்கித் தங்கள் வயிற்றுப் பசியினைத் தீர்த்திடவும் அவர்கள் முனைந்தனர்.
அவ்வாறு அரக்கோணத்தில் வழிமறிப்பு நடந்த போது துப்பாக்கிச் சூடே நிகழ்ந்தது. கடைகளைச் சுற்றி அரிசி கேட்டு முற்றுகையிட்ட மக்கள் தடியடிக்கும் ஆளாயினர்; தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். அத்தகைய சூழ்நிலையில் அரிசிக்காகக் 'கியூ'வில் நின்றிருந்த ஒரு தாய் தன் குழந்தையையும் 'காவு' கொடுத்தாள் சாவுக்கு! இப்படிப் பஞ்சக் கொடுமைகளில் மக்கள் பரிதவித்து வாடிடும் போது அன்றையக் காங்கிரஸ் ஆட்சியாளர்களோ கண்ணிருந்தும் பாராமல் காதிருந்தும் கேளாமல்தான் நடந்து கொண்டனர்.
எதிர்க்கட்சியினர் நிலைமைகளை எடுத்துச் சொன்னால் அவர்கள் ஏளனமும் புரிந்தனர்; ஏறுமாறாகவும் பேசினர். "அரிசிப் பஞ்சம் என்பது வீண் புரளி!"-என்று அடித்துப் பேசினார் ஓர் அமைச்சர். "அரிசிப் பஞ்சமே பத்திரிகைக்காரர்கள் ஏற்படுத்தியது!"
என்று துணிந்து சொன்னார் இன்னொரு அமைச்சர். முதல்வராக இருந்த பெரியவர் பக்தவத்சலம் அவர்களோ தமக்கே உரிய சமர்த்தோடு- சாதுரியத்தோடு- "உணவுப் பற்றாக் குறையே இல்லை; உணவுப் பொருள் ஏராளமாக இருக்கிறது. இங்கே பதுக்கலும் இல்லை- பதுக்கல் இல்லாமலும் இல்லை" -என்றெல்லாம் சாதிக்க முற்பட்டார்: தடம் புரண்டும் பேசினார். காங்கிரஸ் அமைச்சர்களின் இந்தக் கூற்றுகளைக் கேட்டிட்ட பொழுது பிரெஞ்சுப் புரட்சியின் போது நடைபெற்ற சில நிகழ்ச்சிகளே என் நினைவில் நிழலாடின.
அங்கே புரட்சிப் பூகம்பம் வெடித்துக் கொண்டிருந்த வேளையில் கோலேந்திய லூயி மன்னனைக் குரங்கினும் கீழாக ஆட்டிப் படைத்திட்ட அரசி மேரி அண்டாய்னெட்டோ ஆணவத்தின் மொத்த வடிவமாகவே மக்களைப் பற்றி அலட்சியமாகப் பேசினாள். ஒரு நாள் அரண்மனைக்கு வெளியே பட்டினியால் வாடிய மக்கள் பட்டாளம் போல் திரண்டு வந்தனர். 'அய்யோ, பசிக்குதே!'
என்று அழுதனர்; அலறினர். அரசியோ "என்ன அங்கே காட்டுக் கூச்சல்?" என்று அதட்டல் போட்டாள் பணியாளனை நோக்கி. "ரொட்டி கிடைக்காமல் திண்டாடும் மக்கள் உங்களிடம் முறையிட வந்திருக்கிறார்கள்" -என்றான் அவன். மேரி அண்டாய்னெட்டோ கேலியாகச் சிரித்திட்டாள். "ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன? 'கேக்' வாங்கித் தின்னச் சொல்லேன்!"
என்று கிண்டலாக மொழிந்திட்டால் அதற்குப் பிறகு வெடித்திட்ட விளைவுகள் அரசியலிலே காலூன்றி நிற்க விரும்பிடும் அத்தனை பேருக்குமே அருமையான பாடங்கள்! ஆனால் அந்தப் பாடங்களையெல்லாம் மறந்து விட்டவர்களாகவே நடந்து கொண்டனர் காங்கிரஸ் அமைச்சர்கள். உணவு நெருக்கடியோ மக்களின் குரல் வளையையே நெரித்திடும் வண்ணம் உச்சக் கட்டத்திற்குப் போய்க்கொண்டே இருந்தது. அந்தக் கொடுமைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போலக் கோவையில் காவல் நிலையத்தின் முன்னால் அரிசி கேட்டுக் குரல் எழுப்பிய ஒரே குற்றத்திற்காகப் பரிசாகப் பாய்ந்து சென்றன துப்பாக்கிக் குண்டுகள்.
பசிக் கொடுமையால் செத்துக் கொண்டிருந்த மக்களுக்காகப் பரிந்து பேசிடப் -பரிகாரம் தேடிடச்- சென்ற முன்னாள் காவல் துறை அதிகாரி திரு. அர்ச்சுனன் பரிதாபமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். 19-10-1964-இல் நான் ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு சென்றேன் சட்ட மன்றத்தில். கோவையில் அரிசிக்காக அவதியுற்றிடும் மக்களுக்காக வாதாடிய முன்னாள் போலீஸ் அதிகாரி அர்ச்சுனன் சுட்டுக் கொல்லப்பட்டதையொட்டி நாட்டிலே ஏற்பட்டுள் பரபரப்பையும் ஐயப்பாட்டையும் பற்றி விவாதம் நடத்திட வேண்டும் என்று அப்போது கேட்டுக் கொண்டேன்.
கோவை நிகழ்ச்சி குறித்து நீதி விசாரணைக்கு ஏற்பாடாக வேண்டும் என்றும் வற்புறுத்தினேன். முதல்வர் பக்தவத்சலம் அவர்களோ கோட்டைக்கு வெளியே நாட்டிலே நிலவிடும் கொந்தளிப்பு பற்றி விவாதித்திட முடியாது என்று மறுத்து விட்டார். நீதி விசாரணைக்கான கோரிக்கையையும் ஏற்க முடியாது என்று அழுத்தமாகக் கூறிவிட்டார். இலங்கை வாழ் தமிழர்களைப் பொறுத்த மட்டில், 1964-ஆம் ஆண்டு அதிலும் குறிப்பாக அக்டோபர் திங்கள்-அவர்களுடைய இதயமே எரிந்து கருகிட, கனலை அள்ளிக் கொட்டிய காலப் பகுதியாகும்.
ஏனெனில் அந்தச் சமயம்தான், அவர்களுடைய வயிற்றெரிச்சலிலே எண்ணெய்யை வார்த்து - வாழ்க்கையிலே மண்ணைப் போட்டு வடிவம் எடுத்திட்டது "சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தம்." நேருவின் காலத்திலே இலங்கைத் தலைமை அமைச்சராக இருந்த சர் ஜான் கொத்தலவாலாவினால் சாதிக்க முடியாத ஒன்றைத் திருமதி சிரிமாவோ பண்டார நாயகா எளிதில் சாதித்துக் கொண்டு விட்டார் திரு. லால்பகதூர் சாஸ்திரியாரிடம். இரு நாட்டுத் தலைமை அமைச்சர்களும் புது டில்லியில் 29-10-64- இல் கையொப்பமிட்ட அந்த ஒப்பந்தம் பத்து வயதுச் சிறுவனின் முதுகிலே பத்து மூட்டை நெல்லை ஏற்றிடுங்கொடுமை போலத் தமிழகத்தின் மீது தாங்கொணாத பளுவைச் சுமத்திடவே வழியை வகுத்திட்டது.
இலங்கையில் பல்லாண்டுக் காலமாகவே குடியுரிமை மறுக்கப்பட்டுத் திரிசங்கு சொர்க்கத்திலே திண்டாட விடப்பட்டிருப்போரின் எண்ணிக்கை ஏறத்தாழப் பத்து லட்சம் ஆகும். ஒப்பந்தப்படி, இவர்களில் ஐந்தே கால் லட்சம் பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விடுவர் பதினைந்து ஆண்டுகளில் - பல தவணைகளில்! மூன்று லட்சம் பேருக்கு மட்டும் இலங்கை அரசு ஏதோ கொஞ்சம் இரக்கத்தைச் சிந்திக் 'குடியுரிமை' வழங்கிடும். எஞ்சிய ஒன்றரை லட்சம் பேர்களின் கதியோ பின்னரே முடிவு செய்யப்படும்; உடன்பாடு காணப்படும்.
வேறு எந்த நாட்டிலாவது இப்படிப் பத்து லட்சம் மக்கள் குடியுரிமை (citizenship) மறுக்கப்பட்டு - நாடற்றவர்கள் ஆக்கப்பட்டு- அவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் வீடு, வாசல்களை இழந்து வெளியேற்றப்பட்டதாக வரலாறு உண்டா? ஆயினும் தமிழராகப் பிறந்திட்ட ஒரே காரணத்தினால் கூடு பிய்த்தெறியப்பட்ட குருவிகளாகத் தத்தளிக்க நேர்ந்தனர் அம்மக்கள். முன்பே பர்மாவிலிருந்து அகதிகளாக வந்த தமிழர்களின் எண்ணிக்கையே பாரமாக அழுத்திக் கொண்டிருப்பது போதாதென்று இலங்கையிலிருந்தும் அதுவும் இத்தனை லட்சம் பேர் வருகிறார்கள் என்றால் எப்படித் தாங்கிட இயலும் தமிழகத்தால்?
இதைப் பற்றி அன்று இந்த மாநிலத்திலே கொலு வீற்றிருந்தவர்களோ, மத்தியில் கோலோச்சியவர்களோ தொலை நோக்கோடு சிந்தித்துப் பார்த்தார்களா? இலங்கைத் தமிழர்களின் தலைவர்களைத்தான் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்கு யோசனை கேட்டார்களா? ஏதும் இல்லை. ஈழ பூமி ஏற்றம் பெற்றிட - எழில் வளங்கொஞ்சிட-தோட்டக் காடுகளிலே துவண்டு நலிந்து அட்டைகள் உறிஞ்சிட, ஆயிரம் ஆயிரம் நோய் வந்து தீண்டிட, தங்கள் உழைப்பினைக் கொட்டினர்.
உதிரத்தைச் சிந்தினர் தமிழர்கள். அவர்கள் துரத்தப்படுகிறார்கள் என்றதும் துடிப்புற்றுப் - பதைப்புற்றுக் - கடுகளவேனும் கருணையைக் காட்டினரா காங்கிரசார்? அந்த அநீதியைத் தடுத்து நிறுத்திடத்தான் கொடுத்தனரா தங்கள் குரலை? தி. மு. கழகம்தான் 'சிரிமாவோ - சாஸ்திரியார்' ஒப்பந்தம் தீங்கானது. இலங்கைத் தமிழர் சிக்கலுக்குச் சரியான தீர்வு ஆகாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது. அன்றைய ஆளுங்காங்கிரஸ் அமைச்சர்களின் போக்கினைப் பற்றிச் செஞ்சியிலே 1-12-64-இல் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நானும் அடியிற்கண்டவாறு குறிப்பிட்டேன்: "......அனாதைகளாக விரட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் பற்றிக் கேட்டால், லால்பகதூர் சொல்கிறார்: 'உங்கள் பக்தவத்சலமும், இராமையாவும் (அப்போதைய அமைச்சர்கள்) சொல்லித்தான் ஒப்பந்தம் செய்தேன்' என்று!
தமிழகத்திலுள்ள எல்லாக் கட்சிகளையும் கலக்காமல் இலங்கைத் தமிழர்களின் தலைவர்களையும் அவமதித்து இந்த ஒப்பந்தம் செய்யச் சொன்னது யார்? புதிதாகக் காங்கிரசுக்குப் போயிருக்கும் நண்பர் (திரு ஈ. வே. கி. சம்பத்) சொல்கிறார் : 'இலங்கையிலிருந்து வருகிற தமிழர்களை வரவேற்க வேண்டாமா' என்று.
'வருகிறோம்' - என்று கூறி அவர்கள் வரவில்லையே! 'அய்யோ, எங்களைத் துரத்துகிறார்களே! இந்த அநீதியைக் கேட்பாரில்லையா?" என்று அலறியபடியல்லவா அவர்கள் இங்கே தள்ளப்படுகிறார்கள்? நான் குறிப்பிட்ட அந்த அநீதி சிறு கதையாக முடிந்திடாமல் தொடர்கதையாகத்தான் நீண்டிடும் போலத் தோன்றுகிறது. நெப்போலியன் ஒரு முறை "ஃபிரான்ஸ் நாட்டின் இளைஞர்கள் நல்ல முறையில் கல்விப் பயிற்சி பெறுவதற்கு என்ன தேவை?"- என்கிற வினாவினை எழுப்பினான்.
அதற்கு "நல்ல தாய்கள்" -என்கிற விடை கிடைத்ததாம். அதனைக் கேட்டு நெஞ்சங் குளிர்ந்திட்ட நெப்போலியன் - "இந்தத் தாய் என்கிற ஒரு வார்த்தையிலேயே ஒரு கல்வித்திட்டமே பொதிந்து கிடக்கிறதே... நம்முடைய ஃபிரான்ஸ் நாடு நல்ல அன்னையரை அடைந்திருந்தால், அது நல்ல பிள்ளைகளையும் பெறும்" என்று வியப்போடும் கூறினானாம்.
ஐரோப்பாக் கண்டத்தையே அதிர்ந்திடச் செய்தவன்-அரிமா நிகர்த்த அஞ்சா நெஞ்சினன் நெப்போலியன் - அன்னையர் குலத்திடம் எத்தகைய மதிப்பினை வைத்திருந்தான் என்பதனை அவனுடைய இந்த வார்த்தைகளிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
