உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அரசியல் மாற்றங்கள்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அரசியல் மாற்றங்கள் · 14 / 391

அரசியல் மாற்றங்கள் -ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில், உலக அரங்கிலே குறிப்பாக சோவியத் ரஷ்யாவில் திடீரென்று நிகழ்ந்தேறிற்று ஓர் அரசியல் மாற்றம். அங்கே தலைமை அமைச்சராகவும், பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் கொலுவேறிக் குவலயத்தின் கவனத்தையே ஈர்த்திட்ட குருஷ்சேவ் யாருமே எதிர்பாராத வகையிலே இறக்கப்பட்டு விட்டார் பதவிகளிலிருந்து. ஏழைத் தொழிலாளியின் மகனாய்ப் பிறந்திட்ட போதிலும் இடையறாத உழைப்பினால் - இடிந்திடாத நெஞ்சினால்-கட்சி வளர்ச்சிக்கென்றே தம்முடைய வாழ்வைக் காணிக்கை ஆக்கிக் கொண்டு ஆற்றல் ஒன்றினாலேயே அவனி மெச்சிட ஏற்றம் பெற்றிட்டவர் குருஷ்சேவ்.

சோவியத் ரஷ்யாவை வல்லரசுக் கோட்டையாக வளர்த்துக் காட்டிய வன்மை வாய்ந்த சிற்பி ஜோசப் ஸ்டாலின்தான் என்றாலும், தமது நாட்டையும் தம்மோடு நட்புறவு கொண்ட மற்ற பொதுவுடமை நாடுகளையும் எவருமே எளிதில் நெருங்கிட முடியாதபடி ஓர் 'இரும்பு திரை'யினை - ஒப்புரவை ஏற்காத ஒதுக்கத்தினைத் - விரித்து வைத்தவரும் அவரே. அவருடைய மறைவுக்குப் பின்னர் அந்த இரும்புத் திரையினைக் கிழித்தெறிந்து, சோவியத் மண்ணில் பிற நாடுகளின் தோழமை சுடரொளி வீசிட வித்திட்டவர் குருஷ்சேவ் அவர்களே!

அவருடைய நகைச்சுவை வெடிகளும், சமாதான சகவாழ்வுக் கொள்கையும் (Peaceful Co-existence) என் நெஞ்சினை நிரம்பக் கவர்ந்திருந்தன. 1956-இல் இந்திய சுற்றுப் பிரயாணத்தை மேற்கொண்டிருந்த காலை ரயில் பெட்டித் தொழிற்சாலையைப் பார்வையிட்ட அவர், "அளவுக்கு அதிகமாக இவ்வளவு இரும்பினை இப்படி வீணடிப்பானேன்?"

-என்று வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சலசலப்பையே உண்டு பண்ணின. இந்த நாட்டுத் தொழில் துறையில் இந்தியாவிடம் அவர் வைத்திருந்த-வளர்த்துக் கொண்டிருந்த - ஆழமான தோழமை உணர்வினால்தான் நெய்வேலி அனல் மின்சாரத் திட்டம், பிலாய் உருக்காலைத் திட்டம், அங்கலேசுவா பெட்ரோல் ஊற்று தோண்டிடும் திட்டம் முதலானவற்றிற்குக் கணிசமாகக் கிடைத்தது ரஷ்ய உதவி. கரடு முரடாய்க் கற்பாறையாய்க் காட்சி அளித்திட்ட பொதுவுடைமைத் தத்துவமும் கசியக் கூடியதே - கனியக் கூடியதே- என்று உலகுக்குக் காட்டியவர் குருஷ்சேவ்.

அதன்மூலம் தம்முடைய ரஷ்ய நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் மன்றத்திலும் அதனுடைய பல்வேறு உறுப்பு நாடுகளிலும் அளப்பரிய செல்வாக்கினைத் தேடி அளித்திட்டவரும் அவரே. அவர் திடீரென்று பதவித் துகில் உரியப்பட்டது பாரெங்கும் திகைப்பினையே கொடுத்தது. அவர் செயல்களில் எனக்குப் பிடிக்காதது, ஸ்டாலின் கல்லறையை அகற்றியதுதான்! சோவியத் நாட்டில் இவ்வாறு அரசியல் மாற்றம் நிகழ்ந்திட்ட அதே சமயத்தில்தான் இன்னொரு வல்லரசான பிரிட்டனிலும் ஓர் அரசு மாற்றம் ஏற்பட்டது.

ஜனநாயக நெறிப்படி அங்கே பதின்மூன்று ஆண்டுகள் கழித்துத் தொழிற் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஹெரால்டு வில்சன் புதிய தலைமை அமைச்சராகப் பொறுப்பினை ஏற்றார். "உணவு கிடைக்காததால் மக்கள் வெள்ளரிக்காயை உண்ணுகிறார்கள்; ஆகவே உணவு அதிகம் வேண்டுமென்று டில்லியை எதிர்த்துப் போரிடப் போகிறேன்"- -என்று பஞ்சப் பரணி பாடி மத்திய அரசின் உணவுக் கொள்கையைச் சாடினார் ஒருவர். அவர் ஆடவரும் அல்லர்; ஒரு பெண்! அவர் எவரும் அறிந்திடாத ஏழையும் அல்லர்; ஒரு மாநிலத்தின் முதலமைச்சர்.

அந்த குரல் எழுந்ததும் குசராத் மாநிலத்தில் அல்ல; உத்தரப் பிரதேசத்தில் ! இப்போது அல்ல; 1964-இல். ஆம்: அன்று அவ்வாறு உணவுப் பஞ்சத்தினைப் படம் பிடித்துக் காட்டி உரிமை முழக்கத்தை முரசொலித்தவர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து, அண்மையில் மறைந்திட்ட திருமதி சுசேதா கிருபளானி அவர்கள்தான். அதே நேரத்தில் இங்கே தமிழகத்தின் நிலைமை என்ன? அப்போது தமிழக அமைச்சர்கள் கூறிய சமாதானங்கள்- சாரமற்ற வாதங்கள்தான்- என்ன?