நெஞ்சுக்கு நீதி
பூம்புகார் படம் · 13 / 391
பூம்புகார் படம் செ ப்டம்பர் பதினேழாம் நாள், சீர்திருத்தச் சிற்பியாம் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் என்பதை அனைவரும் அறிவார்கள். தி. மு. கழகம் பிறந்த நாளும் அந்த நாள்தானே! 1964-ஆம் ஆண்டு மலர்ந்திட்ட அந்த நாளோ, என் சிந்தையிலே செந்தேனை நிரப்பிடும் சிறப்பு நிகழ்ச்சியொன்று நடைபெறும் நாளாகவும் அமைந்துவிட்டது. அன்றுதான் நான் கதை, உரையாடல் தீட்டிய-மேகலா பட நிறுவனத்தாரால் உருவாக்கப் பெற்ற 'பூம்புகார்' திரைப் படம்சென்னை மிட்லண்ட் தியேட்டரில் பத்திரிகையாளருக்கும், புலவர் பெருமக்களுக்கும் கலையுலக நண்பர்களுக்கும் போட்டுக் காட்டப்பட்டதாகும்.
சிலப்பதிகாரக் காப்பியத்தைத்தான் புதுவடிவம் கொடுக்க முயன்றிட்டேன் வெள்ளித் திரைக்கேற்ப. மேலை நாடுகளில் பைபிள் கதைகளை வைத்து எத்தனையோ படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சிசில் பி-டெமிலி ஏராளமான பொருட்செலவில் 'டென் கமாண்ட்மெண்ட்ஸ்' என்னும் படத்தினை ஒரு முறையல்ல, இரு முறை தயாரித்து வெளியிட்டு உலகையே வியப்பில் ஆழ்த்தினார். இராமாயணம், மகாபாரதம் இதிகாசங்களும் ஏராளமான படங்களுக்குத் தாராளமாகக் கதைக் கரு தந்திருக்கின்றன கடனாக.
தமிழ்க் காப்பியங்கள் வேறு எந்த மொழி இலக்கியங்களுக்கும் இளைத்தவையோ சளைத்தவையோ அல்ல. அவை வற்றாத கற்பனைச் சுனைகளாக-வளமான கதைப் புதையல்களாக-வண்ண வண்ண ஓவியங்களாக-வாழ்நெறி காட்டி வந்துள்ளன பன்னெடுங்காலமாகவே. அவற்றிலிருந்து பல அருமையான கருப் பொருள்களைப் பின்னணியாக வைத்து நாமும் ஏன் படம் எடுக்கக் கூடாது என்கிற எண்ணம் நெடுநாட்களாகவே எனக்கு உண்டு. அந்த எண்ணத்தின் விளைவுதான் சிலப்பதிகாரத்தின் புதுப் பிறவியான 'பூம்புகார்.'
முன்பொருமுறை சிலப்பதிகாரத்தை வைத்துக் 'கண்ணகி' படம் வெளியிடப்பட்டது. நடிப்பிலே மட்டுமின்றிப் பாடுவதிலும் தமக்கென்று தனி முத்திரைகள் பதித்துக் கொண்டிருந்த பி. யு. சின்னப்- பாவும், கண்ணாம்பாவும் அதில் அருமையாக நடித்திருந்தனர். இளங்கோவன் அவர்கள் எழில் கொஞ்சும் தமிழில் வசனம் எழுதியிருந்தார். ஆனால் அந்தப் படம் புராணப்படம் போலத்தான் வெளிவந்தது. நான் 'பூம்புகாரை' உருவாக்க முற்பட்டபொழுது, அந்தப் பழைய படத்தைப் பற்றிய எண்ணங்களும் என் மனத்தில் மின்னலிட்டன.
சிறைப் பறவையாக அடைபட்டிருந்த போதுதான், என் சிந்தையில் கருக் கொள்ளத் தொடங்கிற்று 'பூம்புகாருக்' குரிய திரைக் கதை. ஒரு காப்பியத்தைத் தழுவித் திரைப்படம் எடுத்திடும் பொழுது, எத்தனையோ சிக்கல்கள் இடையிலே குறுக்கிடும். அத்தகைய இடையூறுகளை நானும் அப்போது சந்திக்க நேர்ந்தது உண்டு. சிலப்பதிகாரம் எண்ணற்ற வகைகளில் சிறந்திருக்கிறது என்றாலும், இளங்கோவடிகளின் ஓர் அற்புதமான கற்பனைத் திருப்பம் என் கருத்தினை வெகுவாகக் கவர்ந்து விட்டது.
அந்தக் காலத்தில் காவியங்களை- இதிகாசங்களை-இயற்றியவர்கள் பெரும்பாலும் அரச குடும்பங்களை வைத்தே கதைகளைப் பின்னினார்கள். ஆனால் அரச குடும்பத்திலே பிறந்தவராக இருந்திட்ட போதிலும், சுக போகங்களைத் துச்சமென மதித்துத் துறவியாக மாறிவிட்ட இளங்கோவடிகளோ, மற்ற இலக்கியப் படைப்பாளர்களின் வழக்கமான கதைப் போக்கிற்கு முழுக்குப் போட்டு விட்டுச் சாதாரணக் குடிமக்களையே தம்முடைய கதைக்குத் தலைவன்- தலைவியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
ஏழை நடுத்தர மக்களின் வாழ்க்கை முறைகளை, வளையாத கற்பை, வறுமையை, அந்த வறுமையிலும் குன்றாத வைரச் செம்மையை வடித்துக் கொடுத்துள்ளார் வண்ண ஓவியங்களாக. இளங்கோவடிகளின் இந்தப் புதுமைக் கதைப்போக்கே என் இதயத்தைப் பெரிதும் ஈர்த்தது காந்தமாக. இவ்வாறு சாதாரணக் குடிமக்களின் ஆசைகளை - அவலங்களை, உணர்ச்சிகளை, உள்ளப் போராட்டங்களை- ஓவியமாக்கிக் காட்டிடும் ஒரு காவியக் கதையில்- ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் மட்டும் பிறர் எண்ணிடும் அளவுக்கு இழித்துரைக்கப்பட்டிருப்பார்களா என்கிற ஐயப்பாடு என்னுள் எழுந்தது.
அதற்குத் தகுந்த மாதிரி, அப்போது நிதி அமைச்சராயிருந்த மொரார்ஜி தேசாய் தங்கக் கட்டுப்பாடு சட்டம் ஒன்றினைக் கொணர்ந்திருந்தார். அதனால் ஆயிரக்கணக்கான பொற்கொல்லர்கள் வேலை வாய்ப்பினை இழந்து வீதிகளிலே பிச்சையெடுத்திடும் அளவுக்கு விழி நீரை வெள்ளமாக்கிக் கொண்டிருந்த வேளை அது. அந்த வேதனை நெஞ்சங்களிலே வேல் பாய்ச்சிடா வண்ணம், திரைக்கதையின் போக்கில் சிறிய மாற்றம் செய்வதும் என் கடமையெனக் கருதினேன்.
சமூக அமைப்பு என்கிற ஆலமரத்தின் விழுதுகளாக விளங்கிடும் பலவேறு வகுப்புகளில் எந்த ஒரு தனிப்பட்ட வகுப்பாரும் இழிவுக்கோ ஏளனத்திற்கோ இரையாக்கப்படுவது மனிதப் பண்பாட்டிற்கே இழுக்கு என்கிற எண்ணமே என்னைத் திரைக்கதையிலே சில புதுமைகளைப் புகுத்திடத் தூண்டியதாகும். படத்தைப் பார்த்த புலவர் பெருமக்களும் சரி, கலையுலக நண்பர்களும் சரி, என்னுடைய நல்லெண்ணத்தைப் புரிந்து கொண்டவர்களாகவே பாராட்டுக்களையும் பொழிந்தார்கள்.
இலட்சிய நடிகர் என்னருமைச் சகோதரர் எஸ். எஸ். ராஜேந்திரன் தன் திறமையனைத்தையும் அதில் வெளிப்படுத்தியிருந்தார். "...... தமிழர்களின் பெருமையையும், பண்பாட்டையும் எடுத்துக் கூறும் படம்; கடந்த மூன்று மணி நேரத்தில் இப்போதுள்ள சூழ்நிலையையே மறந்து அந்தச் சிலப்பதிக்காரத்திலேயே இருந்தோம்"- என்றார் அப்போதையக் காங்கிரஸ் ஆட்சியின் சட்டப் பேரவைத் தலைவர் திரு. செல்லப்பாண்டியன். "....இந்தப் படத்தில் பொற்கொல்லர் சமூகத்தைப் பழியிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்; இது பாராட்டுக்குரியது; நல்ல தமிழ் பேசும் நல்ல தமிழ்க் காப்பியம்" என்றார் நாடகக் கலைவேந்தர் அவ்வை தி.க.
சண்முகம். ".....கண்ணகி, கோவலன், மாதவி ஆகியோரைப் பற்றி உயர்ந்த எண்ணமும், மதிப்பும், மரியாதையும் ஏற்படும் வகையில் படம் அமைந்திருக்கிறது. படத்தில் செய்துள்ள மாறுதல்கள் பாத்திரங்களின் பண்பைக் குறைக்காமல் பாத்திரங்களின் மதிப்பை உயர்த்தியுள்ளன. சின்னஞ்சிறு மாறுதல் என்னும் அலைகளெல்லாம் கடந்து ஒரு பெரிய இலக்கியக் கடலை இத்திரைப்படத்தில் கண்டோம்" - என்றார் டாக்டர் மு. வரதராசனார். "...கவுந்தியடிகள் வாயிலாகச் சிறந்த தத்துவ வசனங்களைக் கலைஞர் எழுதியுள்ளார்.
'மனச் சாட்சி உறங்கும் போது மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என்ற வசனம் அதற்கு உதாரணம். தொழிலுக்காக எடுக்கப்படும் படங்கள் சில; தொண்டுக்காக எடுக்கப்படும் படங்கள் சில: குற்றமற்ற படமாகத் தமிழ்த் தொண்டுக்காக எடுக்கப்பட்ட படம் இது! என்றார் சிலம்புச் செல்வர் ம.பொ சிவஞானம் அவர்கள். -இவ்வாறு தமிழ் இலக்கியக் கடலிலே மூழ்கி முத்தெடுத்திடும் வித்தகர்களே 'பூம்புகார்' படத்தினைப் போற்றிய பொழுது உள்ளுர எனக்குப் பெருமிதமே உண்டாயிற்று!
இந்த இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்திலே நாடக கலையை வளர்ப்பதற்கென்றே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு அயராது உழைத்திட்ட ஆன்றோர்கள் பலர். அவர்களிலே முதலிடம் பெறத்தக்க முதுபெருங் கலைஞர் சங்கரதாஸ் சுவாமிகள். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழிலும் வித்தகராய் விளங்கிய அவர், வளமான தமிழில் வசனம் வரைந்ததோடு நின்றிடவில்லை. கதாபாத்திரங்கள் கவிதை நடையிலேயே உரையாடிடவும் உணர்ச்சி பொங்கப் பாடிடவும் கூடத் தம்முடைய எழுத்தாற்றலை இயக்கினார் உத்வேகத்தோடு.
சங்கரதாஸ் சுவாமிகளுக்கு அடுத்தபடியாகத் தமிழ் நாட்டில் நாடகக் கலை வரலாற்றில் தமக்கென ஒரு சிறப்பான இடத்தினைத் தேடிக் கொண்டவர் பம்மல் சம்பந்த முதலியார். 'நாடகப் பேராசிரியர்' என்றே நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டார் அவர். மத்திய அரசினால் 'பத்ம பூஷணம்' என்னும் பட்டமும் வழங்கப் பெற்றுப் பாராட்டுப் புனலிலே திளைத்திட்ட அவர் 24-9-64-ஆம் நாள் இயற்கை எய்தி விட்டார், கலையுலகை இருளிலே ஆழ்த்தி விட்டு.
ஆங்கிலக் கல்வியினைப் பழுதறப் பயின்று பி.ஏ. பட்டதாரி ஆகி சட்டக் கல்வியும் கற்றுத் தீர்ப்புக்களை வழங்கிடும் நீதிபதியாகச் சிறந்திட்ட நிலையிலும், நாடகக் கலையின்பால் தமக்குள்ள நாட்டத்தை விட்டிடவில்லை. அவர் 'சுகுண விலாச சபா' - என்னும் நாடகக் குழு ஒன்றினைத் தோற்றுவித்து அதற்கென நாடகங்கள் தீட்டியதுடன் அவற்றிலே அவர் நடித்தும் காட்டினார். புகழையும் நாட்டினார். அரசாங்கப் பணியில் ஈடுபட்டு ஓய்வு பெறுகின்றவர்கள் அத்துடன் தங்கள் வாழ்வே ஓய்ந்து விட்டதாக உள்ளம் உடைந்திடுவர்: உருக்குலைந்து நலிந்திடுவர்.
நீதிபதியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றிட்ட சம்பந்த முதலியாரோ அவர்களுக்கெல்லாம் ஒரு விதிவிலக்காகவே விளங்கினார். விரைந்து செயல்பட்டார். ஏறத்தாழ நூறு நூல்களுக்கு மேல் எழுதியும் குவித்திட்டார் வேகமாக. புராண நாடகங்களையே பார்த்துக் கொண்டிருந்த மக்களிடையே சமூக நாடகங்களைத் தவழ விட்டு வயிறு குலுங்கிடச் சிரிக்க வைத்து ஒரு புதிய பாதையினைப் புகுத்திய பெருமையும் முதன் முதல் அவரையே சார்ந்ததாகும்.
அவருடைய 'மனோகரா' நாடகத்தினைத் திரைக்கேற்ற கதையாக்கி அதற்கு உரையாடல் தீட்டும் பேறு எனக்குக் கிட்டியது. நான் எத்தனையோ திரைப்படங்களுக்கு உரையாடல் தீட்டியிருக்கிறேன்; அவற்றில் சம்பந்த முதலியாரின் 'மனோகரா' நாடகத்தைத திரைக்கேறப மாற்றி அமைத்து நான் வரைந்திட்ட வசனம், என் நெஞ்சில் முழுமையாகப் பதிந்து விட்டது என்றே கூறலாம். எனவே 'நாடகத் தந்தை' பம்மல் சம்பந்த முதலியார் சாக்காட்டின் மடியிலே சரிந்திட்டார் என்கிற செய்தியினை அறிந்ததும் நான் அடைந்திட்ட வேதனைக்கு அளவே இல்லை.
அதனையே இரங்கற் செய்தியாக அப்போது இவ்வாறு நான் விடுத்தேன்; "நமது தாயகத்தின் முதுபெரும் கிழவர் - நாடக இலக்கியத்தின் மேன்மைக்கு அரும்பாடுபட்ட - அண்ணல் - நீண்ட நெடு நாட்கள் தமிழ் தொண்டாற்றிய பெரியார் - நிறை வாழ்வு வாழ்ந்த பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேட்டுத் தமிழ் உலகம் கண்ணீர் வடிக்கிறது. அவரது மனோகரா நாடகத்துக் கதாபாத்திரங்கள் அன்பையும், பாசத்தையும், உணர்ச்சி குமுறல்களையும் வெளிப்படுத்தும் அற்புதப் படைப்புகள்.
அவரைத் தமிழர்கள் மறக்க மாட்டார்கள். அவரது கலைத் தொண்டு தமிழன்னையின் மணி முடியிலே பதிக்கப்பட்ட மாணிக்கமாகும். அவர் புகழ் வாழ்க! அவர் பெயர் நெடிது நிலைத்திடுக!"
