நெஞ்சுக்கு நீதி
எதிர்ப்புக் கனல் · 12 / 391
எதிர்ப்புக் கனல் இந்தி ஆதிக்கத்தினை எதிர்த்து நடைபெற்றிட்ட அறப்போரின் தொடர்ச்சியாகக் கோவையில் மத்தியத் தந்தி அலுவலகத்தின் முன்பு 28-7-1964 அன்று மறியல் போர் நிகழ்ந்தது. அதிலே ஈடுபட்ட நாவலர் அவர்களும், எஸ். ஏ. இராசமாணிக்கம், காலஞ்சென்ற ப. கோபால், பி. எஸ். சானகிராமன் முதலானவர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த மறியலிலே பங்கேற்றிடச் செல்லவிருந்த நாவலர் அவர்களுக்கு வழியனுப்பு விழா ஒன்றும் ஜூலை 26-இல் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது.
அதிலே கலந்து கொண்ட நான் இவ்வாறு குறிப்பிட்டேன். "...இந்தி எதிர்ப்புக் கனலை அணையவிடாமல் காத்திடும் பெரும் பொறுப்பு தி.மு. கழகத்தின் கையிலே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. "கிராமங்களில் தாய்மார்கள் இரவு நேரத்தில் அடுப்பை அணைக்கும் போது அதில் சிறிதளவு கனல் இருக்குமாறு வைத்து விட்டுத்தான் அடுப்பை அணைப்பார்கள். மீண்டும் அடுப்புப் பற்ற வைக்கத்தான் அவ்விதம் அடுப்பில் கனலை விட்டிருப்பார்கள். அந்தக் கனல் பெரிதாகிக் கூரையில் பிடிக்காத வண்ணம் ஜாக்கிரதையாகவும் இருப்பார்கள்.
"கிராமத்துத் தாய்மார்களைப்போல் இந்தி எதிர்ப்புக்கனலை நாம் அணைந்துவிடாமல் காப்பாற்றி வருகிறோம். "நாம் இந்தி எதிர்ப்புக்காக அறுத்துத் தந்த தசை நார்கள் கொஞ்சமல்ல; உடைத்துத் தந்த கபாலங்கள் கொஞ்சமல்ல. தி.மு. கழகத்தின் போராட்டங்கள் அனைத்துமே வீர முத்திரைகள் பொறிக்கப்பட்ட போராட்டங்களாகும். "அயல் மொழி ஒன்றின் ஆதிக்கக் கொடுங்கரம் வரம்பு மீறி நீண்டிடும் பொழுது, ஓர் இனத்தவரின் வாழ்க்கையையே அது பறித்திடும் பொழுது அதனை முறியடித்திட எதிர்ப்புக் கனல் மூண்டெழுவது இயற்கையே.
"அத்தகைய கனல் இங்கு மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது கொழுந்து விட்டுத்தான் எரிந்து வந்திருக்கிறது. "ஆங்கில ஆதிக்கத்தை விரட்டி அடித்து விடுதலை பெற்றிட அயர்லாந்து மக்களைத் திரண்டெழச் செய்ததும் அந்த எதிர்ப்புக் கனல்தான். "பாகிஸ்தானின் ஆதிக்கத்தினின்றும் தங்களை விடுவித்துக் கொண்டிட வங்கதேச மக்களைப் பொங்கியெழத் தூண்டிவிட்டதும் அந்த எதிர்ப்புக் கனல்தான்."
"வளமெல்லாம் மலிந்து முன்பே வலிமை பெற்றுத் திகழ்ந்திட்ட அமெரிக்காவிற்கே அறைகூவல் விடுத்திடும் வண்ணம் சாதாரணத் தொழிலாளர் இயக்கத்தாலேயே உருவெடுத்த சோவியத் ரஷ்யாவை ஒரு வல்லரசுக் கோட்டையாகவே வளர்த்துக் காட்டிய ஸ்டாலினை முதல் முதல் பொது வாழ்க்கையிலே ஈடுபடுத்தியதுதான் எது?தம்முடைய தாய் மொழியாம் ஜார்ஜிய மொழியை இன்னொரு மொழி இரண்டாந்தரம் ஆக்க விடுவதா என்கிற எதிர்ப்புக் கனல்தான். "இன்றைக்கும், ஏன், பல ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே கூட, ஈழத் தமிழர் நெஞ்சங்களிலே கொழுந்து விட்டு எரிவதும் அதே எதிர்ப்புக் கனல்தானே!"
நான் திருவல்லிக்கேணியில் நாவலருக்காக எடுக்கப்பட்ட 'வழியனுப்பு விழா'விலே உரையாற்றிய இரண்டு, மூன்று நாட்களுக்கெல்லாம், வேல்ஸ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட ஒரு வீர இளைஞர் பற்றிய சுவையான செய்தியொன்றினை ஏடுகள் எல்லாம் வெளியிட்டிருந்தன. அவரும் அப்படித்தான் எதிர்ப்புக் கனலை எழுப்பியிருக்கிறார்; ஒரு தி. மு. க. மறவரைப் போலவே தீரமாக நடந்து கொண்டிருந்திருக்கிறார். அவரைப் பற்றி வெளிவந்த செய்தி இதுதான்: இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்தின் ஒரு பகுதி ஆகியவற்றை அங்கங்களாகக் கொண்டதே United Kingdom என அழைக்கப்படுகின்ற பிரிட்டானிய நாடு (Great Britain).
அங்கே வேல்ஸ் பகுதியிலே வாழ்வோருக்குத் தங்கள் தாய்மொழி புறக்கணிக்கப்படுகிறதே என்கிற நெஞ்சப் பொருமல் நெடுங்காலமாகவே உண்டு. அவ்வாறு புழுங்கித் தவித்துக் கொண்டிருந்தவர்களில் வயது இருபத்தொன்றே ஆன ராபர்ட் கிரிபித்ஸ் என்னும் வேல்ஸ் இளைஞரும் ஒருவர். அவர் பி. ஏ. பட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். அந்தப் பட்டத்தினைப் பெறுவதற்காகப் பட்டமளிப்பு விழாவுக்கு மற்ற இளைஞர்களைப் போலவே அவரும் சென்றார். தன்னுடைய பெயர் அழைக்கப்பட்டுத் தான் மேடைக்குச் சென்றவுடன் அவர் விழா மண்டபத்திலே குழுமியிருந்தவர்களையெல்லாம் அதிர்ச்சியிலே வீழ்த்தி விட்டார், "எனக்கு இந்தப் பட்டம் வேண்டாம்!"
என்று அவர் அடுக்கிக் காட்டிய காரணங்கள் எல்லோருடைய சிந்தனையையும் கிளறி விட்டன. விழிகளை அகலமாக்கின. வேல்ஸின் தேசிய மொழியான 'வேல்ஸ்' மொழிக்குக் கொடுக்கப்பட வேண்டிய உரிமைகளை-மதிப்பிற்குரிய இடத்தினைக் கல்லூரி நிருவாகிகள் கொடுக்க மறுத்து விட்டனராம். அவர்களுடைய போக்கினை எதிர்த்துக் கண்டிக்கும் பொருட்டே தனக்குத் தரப்படும் பட்டத்தை உதறித் தள்ளுவதாக உரக்க முழக்கமிட்டார் அந்த வேல்ஸ் இளைஞர். தன்னுடைய கண்டனப் பேச்சையும் தன் தாய் மொழியிலேயே நிகழ்த்தினார்.
அதனை அறியாத மற்றவர்கள் புரிந்து கொள்ளும் பொருட்டுத் தன் கண்டனத்தை ஆங்கிலத்திலும் அவர் கூறினார். -இந்த நிகழ்ச்சியினை இங்கே எதற்காகச் சுட்டிக் காட்டுகிறேன் தெரியுமா? அந்த வேல்ஸ் இளைஞரைப் போல இன்னொரு மொழியின் ஏகாதிபத்தியத்தைச் சுட்டெரிக்க வேண்டிய எதிர்ப்புக்கனலை எந்தக் காலத்திலும் அணைந்துவிடாமல் தமிழினத்தைச் சார்ந்தவர்கள் எழுச்சியோடு விழிப்போடு காத்திட வேண்டும் என்கிற கடமையினை நினைவுபடுத்திடத்தான்!
1964-ஆகஸ்டுத் திங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் சிங்கள அரசோ நான் அங்கே செல்வதற்குத் தடைவிதித்து விட்டது. அதனைக் கண்டித்து இலங்கை நாடாளுமன்றத்தில் திரு. நவரத்தினம் என்னும் தமிழரசுக் கட்சி உறுப்பினர் கேள்விக் கணை தொடுத்திருக்கிறார். அதற்கு இலங்கை நாடாளுமன்ற ஆளுங்கட்சித் தலைவராக அப்போது இருந்த திரு சி.பி. டிசில்வா அளித்திட்ட விடையோ விந்தையானதாகும்: "இந்தியாவில் தி.
மு. கழகம் தடை செய்யப்பட்டு அதன் உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்படவில்லையா? அப்படித்தடை செய்யப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இலங்கை வருவதை அரசாங்கம் விரும்பவில்லை" என்றார் அவர். அந்தத் தவறான தகவலை உடனே மறுத்திடத் தவறவும் இல்லை திரு. நவரத்தினம்: "தி. மு. கழகம் ஒரு போதும் தடை செய்யப்படவில்லை.. இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயகக் கட்சியாகத் தி. மு. கழகம் விளங்கி வருகிறது. அது பாராளுமன்றக் கட்சியாகவும் இயங்கி வருகிறது.
மத்தியப் பாராளுமன்றத்திலும் மாநிலச் சட்ட மன்றத்திலும் அதன் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். "அடுத்த பொதுத்தேர்தலில் தி. மு. கழகம் தமிழக ஆட்சியைக் கைப்பற்றவும் கூடும். தென்னிந்தியாவில் இந்தி வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுவதை எதிர்த்துத் தி. மு. கழகம் போராடி வருகிறது. பிரிவினை, மற்றும், சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் தி. மு. கழகத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை."
-இலங்கைத் தமிழர் திரு. நவரத்தினத்திற்கு 1964-லேயே ஏற்பட்ட அரசியல் தெளிவு கூட, அதற்குப் பிறகு எத்தனையோ ஆண்டுகளாகியும் இங்கேயுள்ள சில ஏடுகளுக்கும் மாற்றுக் கட்சியினருக்கும் ஏற்படவில்லையே என எண்ணும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது. அந்த ஆண்டு ஆகஸ்டு இறுதியில் எனக்குத் திடீரென்று உடல் நலம் குன்றியது. எங்குமே அசைந்திடக் கூடாதென்பது மருத்துவர் கட்டளை; என்றாலும் இந்தி எதிர்ப்பு இயக்கம் உருவெடுத்த காலத்திலேயே அதற்கு உறுதுணையாய் நின்று, சிறை சென்று, பின்னர் பெரிய புரரணம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையெல்லாம் வரைந்து, பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்புவதில் ஆர்வங் காட்டி, அண்ணாவின் 'திராவிடநாடு' இதழிலேயும் பணியாற்றிக் கடந்த 26-1-74 அன்று காஞ்சியில் இயற்கை எய்திய ஈழத்தடிகளுக்கு 3-9-64 அன்றைய தினம் பொன்னாடை போர்த்திப் பணமுடிப்பு வழங்கிடும் விழா ஏற்பாடாகியிருந்தது.
உடல் நலிவால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும் அதிலே கலந்து கொள்ளாமல் என்னால் இருந்திட முடியவில்லை. அதைப் பற்றி அண்ணா அவர்களே குறிப்பிட்டார்கள்: "....அவருக்குப் பொன்னாடை போர்த்துவதற்காகக் கருணாநிதி வந்திருக்கிறார். நேற்று இவரைப் பார்த்த போது-டாக்டர்கள் கூறிய குறிப்பையும் கருணாநிதி இருந்த இருப்பையும் பார்த்துவிட்டு இன்றையக் கூட்டத்தற்கு 'வா' என்று கூட நான் அழைக்கவில்லை.
இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்ட ஈழத்தடிகளைப் பாராட்ட வேண்டும் என்கிற கடமையுணர்ச்சியால் உந்தப்பட்டு வந்திருக்கிறார். அவர் அதிகம் பேசமாட்டார்; பேச அனுமதிக்கப் போவது இல்லை. உடல் நிலையும் பாராது கருணாநிதி வந்திருக்கிறார் என்றால் எதற்கு? இந்தி எதிர்ப்புப் போர் முதன் முதல் நடந்த போது அவர் மாணவராய் இருந்தார். ஈழத்தடிகளுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள அவர் வந்திருப்பது பெருமை தருவதாகும்."
-விழாவில் கழகத்தின் சார்பில் பொருளாளர் என்கிற முறையில் ஈழத்தடிகளுக்குப் பொன்னாடை போர்த்தி, ரூபாய் ஐயாயிரம் கொண்ட பண முடிப்பையும் வழங்குகின்ற பேறு எனக்கே கிட்டியது.
