உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/அன்பகம் - தமிழகம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

அன்பகம் - தமிழகம் · 11 / 391

அன்பகம் - தமிழகம் தி ராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகள் மக்கள் மனத்திலே ஆழமாக வேரூன்றி ஆல்போல் தழைத்திடும் வேளையிலேயே, கட்சிக்குத் தேவையான நிர்வாக அமைப்பு வசதிகள் நிரந்தரமாக அமைந்திடும் வண்ணம் சில காரியங்கள் இன்றியமையாதவை என்றும் எண்ணப்பட்டது. அந்த நோக்கோடுதான் கழகத்தின் தலைமை நிலையம் இயங்குவதற்கென்று வட சென்னை-ராயபுரத்தில் ஒரு கட்டடம் வாங்கப்பட்டு, அதுவே 'அறிவகம்' என்றும் அழைக்கப்பட்டது.

மிகக் குறுகிய காலத்தில் பல ஆயிரம் கிளைகளும் பல லட்சம் உறுப்பினர்களுமாகக் கழகம் வளர்ந்து கொண்டிருந்த வேகத்தில் அந்த 'அறிவகக்' கட்டடம் தலைமை நிலையம் இயங்குவதற்குச் சிறிய ஒன்றாகவே தோன்றியது. எனவே தென் சென்னைப் பகுதியிலும் கழகத்திற்கு என்று ஒரு கட்டடம் வாங்குவது தேவையென்று கருதப்பட்டது. அவ்வாறே தேனாம்பேட்டையில் ஒரு புதிய கட்டடம் வாங்கப்பட்டது. 15-6-64-இல் அதற்குத் திறப்பு விழா சிறப்போடு கொண்டாடப்பட்டது.

கழகத்தின் பொருளாளர் என்கிற முறையில் புதிய கட்டடத்தைத் திறந்து வைக்குமாறு அண்ணா அவர்களையும், விழாவுக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுக்குமாறு நாவலர் அவர்களையும் நான் கேட்டுக் கொண்டேன். கட்டடத்திற்கு 'அன்பகம்' என்று பெயர் சூட்டினார் அண்ணா.

அப்போது அவர் சிந்திய சில சொற்கள் இன்னும் என் சிந்தை அணு ஒவ்வொன்றிலும் குளுமையைப் பாய்ச்சிப் புளகமுறச் செய்கின்றன. "இந்த அழகிய கட்டடம் நமது கழக வளர்ச்சியில் மேலும் ஓர் அத்தியாயம் ஆகும். முதலில் வட சென்னையில் வாங்கிய கட்டடத்துக்கு 'அறிவகம்' என்று பெயர் சூட்டினோம்.

இந்த கட்டடத்திற்கு 'அன்பகம்' என்று பெயர் சூட்டுகிறேன். தம்பி கருணாநிதி அவர்களைப் பொருளாளராகப் பெற்ற அன்றே இதைப் போன்ற பொருட்களை எல்லாம் கழகத்திற்கு அவர் சேர்ப்பார் என்று நம்பினேன்." -இந்தச் சொற்களைக் கேட்டதும் என்னுள் எழுந்திட்ட இன்பப் பூரிப்பினை எழுத்திலே வடித்திட இயலாது. தன்னுடைய தாய் உச்சி மோந்து கொஞ்சிடும் போது ஒரு சேய்க்கு உண்டாகக்கூடிய உவகை உணர்வினை நானும் அன்று அடைந்திட்டேன்.

'சென்னை மாநிலம்' என்ற பெயரைத் 'தமிழ்நாடு' என்று மாற்றம் செய்ய இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்ற தீர்மானம் ஒன்றினைச் சகோதரர் இராம. அரங்கண்ணல் சட்ட மன்றத்திலே கொண்டு வந்தார். ஆளுங் காங்கிரஸ் கட்சியினர் அதனை ஏற்றிடவில்லை; ஏற்காதது மட்டுமல்ல; ஏளனமும் புரிந்தனர். "தமிழ்நாடு' என்று பெயரை மாற்றி விட்டால் சோறு வருமா?

வீடு கிடைக்குமா?" என்றெல்லாம்கூட எகத்தாளமாக கேட்டனர். அந்தச் சொல்லிலே புதைந்து கிடக்கின்ற தன்மான உணர்வினைத் - தாய் மொழிப்பற்றைத் - தாயகப் பாசத்தை - அவர்கள் இழித்தும் பழித்தும் ஏகடியம் பேசினர். கழகத் தீர்மானத்தை எதிர்த்துப் பேசிய அமைச்சர் திரு வெங்கட்டராமன் அவர்களோ, "தமிழ்நாடு என்று சொன்னால் வெளி உலகில் இருப்பவர்களுக்கு எப்படித் தெரியும்? 'மெட்ராஸ்' என்றால்தான் புரியும். அதுமட்டுமல்ல; 'மெட்ராஸ்' என்று சொன்னால்தான் சர்வதேச அரங்கத்தில் கேட்கிற நேரத்தில் பெருமையாக இருக்கிறது.

-என்றெல்லாம் கூசாமல் அடுக்கினார் கூர் ஒடிந்த வாதங்களை. வெளிநாடுகளுக்கு - ஏன் ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கே அப்போது அடிக்கடி சென்றிடக் கூடிய வாய்ப்பினைப் பெற்றிருந்தவர்தான் திரு வெங்கட்டராமன். ஆனால் ஆப்பிரிக்க மேற்குக் கடற்கரை நாடொன்று - 'கோல்ட் கோஸ்ட்' என்று வழங்கப்பட்ட நாடு ஒன்று 'காணா' என்று தன் பெயரினை இன உணர்வோடு மாற்றிக் கொண்ட வரலாற்று உண்மைகளை எல்லாம் மறந்து விட்டவர் போலத்தான் அவர் மறுப்பினைத் தெரிவித்தார், 'தமிழ்நாடு' பெயர் மாற்றத் தீர்மானத்திற்கு.

இந்தியாவிற்குள்ளேயே எத்தனையோ அமைப்புகள்-ஊர்கள்- மாநிலங்கள்-மொழிப் பற்றோடு பெயர் மாற்றம் பெற்றிடவில்லையா? ஏன், இந்தியாவே 'பாரதம்' என்றும்- (India that is Bharath) அழைக்கப்படவில்லையா? எல்லாருக்கும் எளிதில் தெரிந்த 'காசி'யோ 'வாரணாசி'யாக மாறி விடவில்லையா? 'பார்லிமென்ட்' என்பதும் 'லோக் சபா' ஆகிவிடவில்லையா? 'இந்தியாவின் வாசல்' என்பார்கள் பம்பாயை. அந்தப் பம்பாய் மாநிலத்திலிருந்து 'குஜராத்' பிரிந்து போன பின்னர் அதனை 'மராட்டியம்' என்று மாற்றி அழைத்திட வில்லையா?

இந்த உண்மைகளையெல்லாம் வேண்டுமென்றே ஒதுக்கித் தள்ளி விட்டுத்தான் ஆளும் காங்கிரசாரும் அமைச்சர்களும் தமிழ்ப் பற்றில்லாதவர்களாக மட்டுமல்ல, தமிழையே பழிப்பவர்களாகவும் தங்கள் தரத்தினைக் குறைத்துக் கொண்டனர். தமிழுக்காகத் 'தமிழ்நாடு' பெயருக்காகக் குரல் கொடுத்த கழகத்தையும் குறைவாக மதித்தனர்; இளக்காரமாய் ஏசினர். அப்போது சட்டமன்றத்திலே கழகத்தின் சார்பில் பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டு செல்லப்பட்டதற்கு இன்னொரு பின்னணியும் உண்டு.

இந்திய நாடாளுமன்றப் பேரவையில்-ராஜ்ய சபாவில் இத்தகைய 'தமிழ்நாடு' பெயர் மாற்றத் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அப்போது பதிலளித்த உள்துறைத் துணையமைச்சர் திரு. ஹஜர் நாவிஸ், "பெயர் மாற்றத்திற்கு ஆதரவாக மாநில அரசு எப்போதாவது அவர்களுடைய கொள்கையை வலியுறுத்தினால் அதனை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு பரீசீலிக்கும்" - என்று குறிப்பிட்டிருந்தார். 1961-ல் அப்போது சட்ட அமைச்சராக இருந்த திரு. ஏ. கே.

சென் அவர்களும், இதேவிதமான பதிலை-'மாநில அரசிடமிருந்து பெயர் மாற்றங்குறித்துக் கோரிக்கை வருமானால் அந்தக் கோரிக்கையை நாங்கள் கவனிக்கிறோம்'- என்கிற பதிலை அளித்திருந்தார். 1963-லும் அத்தகைய பதிலே மத்திய அமைச்சர்களால் தரப்பட்டது. இவ்வாறு டில்லியில்-மத்திய அரசாங்கத்திலே இருப்பவர்கள், சென்னை மாநிலம் 'தமிழ்நாடாக' மாறுவது பற்றிய கோரிக்கைக்குச் செவி சாய்த்திடச் சித்தமாக இருந்திட்ட போதிலும், இங்கே தமிழகத்தை ஆண்டிட்டவர்களுக்கு அந்தத் தாராளமான மனப்பான்மை- தன்மானந் தழுவிய தாய்மொழிப்பற்று-தினையளவும் இல்லை.

எனவே தான் கழகத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர். 23-7-64-இல் திரு. இராம. அரங்கண்ணல் அவர்களால் கொண்டு செல்லப்பட்ட அந்தத் 'தமிழ்நாடு' பெயர் மாற்றத் தீர்மானத்தைக் காங்கிரஸ் அரசினர் ஏற்றிட மறுத்துவிட்டதால் அவர்களுடைய போக்கிற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில் கழக உறுப்பினர்களாகிய நாங்கள் சட்ட மன்றத்தை விட்டு வெளி நடப்புச் செய்தோம். எங்களோடு அப்போது சுதந்திரக் கட்சியினர் மட்டுமே வெளியேறி வந்தனர்.