உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/நண்பன் நடித்த நாடகம்
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

நண்பன் நடித்த நாடகம் · 10 / 391

நண்பன் நடித்த நாடகம் நா னாவது சரியாகப் படிக்கவில்லை. அரசியலில் ஈடுபட்டுப் பரீட்சையில் தோல்வி கண்டேன். ஒரு மார்க் இரண்டு மார்க் குறைவினால் என்போன்ற நிலைக்கு ஆளான மாணவர்கள் எத்தனை பேர்? அவர்களுடைய கதியெல்லாம் என்ன? இந்தக் கேள்விகள் அன்றிரவு மின்னல் கீற்றுப்போல் என் நெஞ்சத்தில் தோன்றித் தோன்றி மறைந்தன. ஏதேதோ நினைத்தவாறு நடந்துகொண்டிருந்த நான் நின்றேன். திரும்பிப் பார்த்தேன். ஏழுமைற் கற்களைத் தாண்டி வந்திருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டேன்.

எதிரே நோக்கினேன். திருநெல்லிக்காவல் புகைவண்டி நிலையம் என் கண்ணில் பட்டது. பொழுதும் அநேகமாக விடிந்துவிட்டது. நடந்த களைப்பு; பசியுடன் சேர்ந்து கண்களைச் சுற்றியது. பாசி பிடித்த குளமொன்று இருந்தது. அதில் இறங்கி அங்குள்ள கருங்கல்லில் ஒரு சிறு செங்கல்லைத் தேய்த்து அந்தத் தூளையெடுத்துப் பல் துலக்கிக்கொண்டேன். அருகில் ஒரு சிற்றுண்டிச்சாலை. அங்கே நுழைந்தேன். அப்போதுதான் என் பையில் எவ்வளவு காசு இருக்கிறது என்று ஞாபகம் வந்தது.

பையைத் தடவிப் பார்த்தேன். அணாக் கணக்கில்தான் இருந்தது. அதனால் கணக்கிட்டுக் கொண்டுதான் சாப்பிட வேண்டும் என எண்ணி இட்லி தோசை விலைகளைக் கேட்டு இரண்டே இரண்டு இட்லி மட்டும் தின்றுவிட்டு காப்பி சாப்பிடும் வழக்கமில்லையெனக் கூறிவிட்டுப் கூறிவிட்டுப் புகைவண்டி நிலையத்தை நோக்கிச் சென்றேன். நான் போவதற்கும் திருத்துறைப் பூண்டி செல்லும் வண்டி வருவதற்கும் சரியாக இருந்தது. தோப்புத்துறைக்கு ஒரு டிக்கெட் எடுத்துக்கொண்டு ஏறி உட்கார்ந்தேன்.

அசன் அப்துல் காதர் என்று ஒரு நண்பர் என்னுடன் நான்காம் படிவத்தில் ஒன்றாகப் படித்தார். அசன் அப்துல் காதர் என்று இப்போது நினைத்தாலும் ஒடிந்து விழுவதுபோன்ற ஒரு மெலிந்த உருவம் தன் பெரிய விழிகளில் குளிர்ச்சியைக்கொட்டிக் கொண்டு சிரித்த முகத்தோடு தாவிப்பாய்ந்து என்னைக் கட்டித் தழுவிக்கொண்டு அன்பைச் சொரிவது போலவே இருக்கும். தோப்புத்துறையில் திடீரென்று அவர் வீட்டு வாயிலில் நான் போய் நின்றதும், சிறு குழந்தைபோல ஆவல் மிகுதியால், "கருணாநிதி!"

என்று கத்திவிட்டார். எடுத்த எடுப்பிலேயே அவரிடம் விஷயம் எதுவும் சொல்லவில்லை. அடுத்த நாள் அவரே புரிந்துகொண்டார். "வேண்டுமென்றே உங்களைப் பழிவாங்கி விட்டார்கள் தோழர்!" என்று அவர் எனக்கு ஆறுதல் கூறினார். தோப்புத்துறையின் எழில்மிக்க இயற்கைக் காட்சிகளும் பல தோழர்களின் வீடுகளில் நடைபெற்ற விருந்துகளும் என் கலக்கத்தைச் சிறிது நீக்கிடத் துணை செய்தன. அங்கிருந்தவாறே தென்னனுக்கு ஒரு கடிதம் எழுதினேன்-"நான் இங்குதான் இருக்கிறேன்.

இதை என் வீட்டாருக்குத் தெரிவித்து அவர்களைக் கவலைப்படாமல் இருக்கச்செய்க" என்று. அதை நான் எழுதாமல் இருந்தால் தினசரிப் பத்திரிகைகளில், "கண்மணி கருணாநிதி! பரீட்சை முடிவைப் பற்றிக் கவலைப்படாதே! அதற்காக நாங்கள் கோபிக்கவில்லை. நீ உடனே எங்கிருந்தாலும் வந்து சேரவும். இப்படிக்கு உன் தாயும் தந்தையும்!"

என்று விளம்பரம் வெளிவந்திருக்கும். என் கடிதத்தை எடுத்துக்கொண்டு தென்னன் திருக்குவளை போயிருக்கிறான். அழுது அழுது வீங்கிக்கிடந்த என் வீட்டாரைப் பார்த்திருக்கிறான். "பிள்ளையைப் போய் உடனே அழைத்து வா!" என்று வழிச் செலவுக்குக் கொடுத்து அவனையும் தோப்புத்துறைக்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். சுற்றிப் பார்க்கப் பணமும் கிடைத்து விட்டது. பொற்றோர் கோபம் குறைந்துவிட்டது என்ற செய்தியும் மனத்துக்கு ஓர் ஆறுதலை அளித்துவிட்டது.

எல்லோருமாகச் சேர்ந்து வேதாரண்யம், கோடிக்கரை முதலிய இடங்களுக்குப் புறப்பட்டோம். கோடிக்கரைக் காட்டில் நுழைந்து, முடிந்த வரையில் அலைந்தோம். அந்தக் காட்டிலேயுள்ள ஒரு மேட்டில் நின்று கொண்டுதான் அந்தக் காலத்தில் ராமர் கடலை நோக்கினார். அப்போது அவர் வைத்த காலடிதான் இந்த இடம் என்று "ராமர் பாதம்". என்று ஒரு மண்டபத்தைக் காட்டினார்கள். கருங் கல்லால் இரண்டு பாதங்கள் செதுக்கப்பட்டிருந்தன. "செந்தாமரைப் பாதங்கள் என்பார்களே ராமருக்கு!

கருங்கல்லாயிருக்கிறதே?" என்று கேட்டேன். அப்படிக் கேட்டது இன்னும் என் நினைவில் இருக்கிறது. பக்கத்தில் சிறிது தூரத்தில் ஒரு சிறிய கோயிலின் கர்ப்பக்கிரகம் இடிந்து கிடந்தது. இது ஏன் இடிந்தது என வினவியபோது, இடி விழுந்துவிட்டது என்று பதில் சொன்னார்கள். "அந்தோ ஆண்டவனே!"

என்று என் ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டேன். எங்கள் சுற்றுப்பயணம் நடக்கும்போதுதான் அப்பகுதியில் இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அதிகாரி முகாம் செய்திருந்தார். அந்த முகாமைக் கண்டதும் எனக்கோர் யோசனை தோன்றியது. தென்னனிடம் அந்த யோசனையை வெளியிட்டேன். அதில் வெற்றியும் பெற்றேன். "கருணாநிதியைத் தேடிக்கொண்டு நான் தோப்புத்துறைக்குப் போனேன். அதற்குள், அவன் அங்கு முகாம் செய்திருந்த ராணுவத்தில் சேரத் தன் பெயரைக் கொடுத்துவிட்டான்.

எவ்வளவோ சொன்னேன் கேட்கவில்லை. 'யுத்த களத்தில் போய்ச் சாகிறேன். திரும்பிவந்து என் தாய் தந்தையாரைப் பார்க்க மாட்டேன்' என உறுதியாகக் கூறி விட்டான். 'உனக்கு இராணுவத்தில் பணி புரிய உடம்பில் தெம்பிருக்கிறதா?' என்று கேட்டேன். 'இதோ பார்! என்னைவிட மோசமானவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் என்று பதினைந்து நோஞ்சான் குமாஸ்தாக்களைக் காட்டினான். திடகாத்திரம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இராணுவத்தில் மற்ற வேலைகளுக்கும் ஆள் எடுக்கிறார்கள் எனக் கேள்விப்பட்டுப் பயந்துபோனேன் பிறகு ஏழெட்டு நண்பர்களை விட்டுக் கருணாநிதி மனத்தை மாற்றச் செய்து திரும்ப அழைத்து வந்திருக்கிறேன்!"

இப்படி ஒரு கற்பனைக் கதையை என் வீட்டாரிடம் தென்னன் சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தினேன். வற்புறுத்துவதென்ன? இதைவிட மேலான பொய்களையெல்லாம் திறமையாகச் சொல்லக் கூடிய ஆற்றல் பெற்ற என் அருமை நண்பன், வீட்டாரிடம் அழகாக நடித்துக் காட்டிவிட்டான். உடனே தாய் தந்தை, அக்காள்கள் எல்லாரும் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள்! "போகாதே! போகாதே என் மகனே! போருக்குப் போகாதே என் மகனே!"

என்று பாடவில்லை; அவ்வளவுதான்!