நெஞ்சுக்கு நீதி
கலகக்கார நாரதர் புகுந்தார். · 9 / 391
கலகக்கார நாரதர் புகுந்தார். 'சே சே' எவ்வளவு கொடியவனாக நான் இருந்திருக்கிறேன். இல்லா விட்டால் என் துணைவி சாவதற்குள்ளாவது அந்த உண்மையை நான் அவளிடம் சொல்லியிருக்கலாமே! தன் தவற்றினாலேயே அந்த அழகான சந்தனக் கிண்ணம் காணாமற் போய் விட்டதாக அவள் எண்ணியிருந்தாள். என் துணைவி மறைந்த பிறகுதான் சந்தனக் கிண்ணத்தின் நினைவு என்னைத் துளைத்தெடுத்தது. அந்தக் கிண்ணத்தை மீட்டு விடலாமென்று, நினைத்து முயன்றேன்.
கடன் பட்டது பத்து ரூபாய்தான். "நூறு ரூபாய் தருகிறேன். அந்தக் கிண்ணம் திரும்ப வேண்டும்" என்று கேட்டேன். என் அருமை மனைவி பத்மாவின் நினைவாக அந்தச் சந்தனக் கிண்ணம் வீட்டில் ஒளி விடட்டும் என்று ஏங்கினேன். ஈடு வாங்கியவர்கள் அதை. உருக்கி விட்டார்களாம். ஐயோ, அவர்கள் அந்த வெள்ளிக் கிண்ணத்தையா உருக்கினார்கள்? இல்லை, இல்லை; என் உள்ளத்தையல்லவா நெருப்பில் போட்டு உருக்கி விட்டார்கள்! பள்ளி வாழ்க்கையிலே என்னைப் போல ஒரு மாணவன் தீவிர அரசியல்வாதியாகி விட்டால் அவன் தேர்வுகளில் எந்த முடிவை எய்துவான் என்பதை விளக்கவும் வேண்டுமோ!
மூன்று முறை பள்ளி இறுதி வகுப்பில் தோல்வியுற்றேன். அதற்கடுத்த முறை இல்லாத காரணத்தால்; 'அப்பாடா! விட்டது தொல்லை' என்று பெருமூச்சு விட்டுக் கொண்டேன். மூன்றாவது முறை தேர்வில் வெற்றி பெற்று விட்டதாக என் பெற்றோர்களிடம் கூறி ஒன்றிரண்டு வருடங்கள் அவர்களை ஏமாற்றிக் கொண்டிருந்தேன் என்றால் என் திறமையை எண்ணிப் பாருங்களேன். நான் அதைத் திறமையென்றுதான் அப்போது எண்ணியிருந்தேன். வாய் வயிற்றைக் கட்டிச் சேர்த்து வைத்த காசுகளை எவ்வளவு அக்கிரமமாக வீணாக்கியிருக்கிறேன் என்பதைப் பிறகு உணர்ந்து அதற்காக அழாமல் இல்லை நான்; முதல் தடவை தேர்வில் தோல்வி ஏற்பட்டதும், "பரவாயில்லை அடுத்த தடவை வெற்றி பெற்று விடலாம்" என்று வீட்டார் சமாதானம் கூறி மீண்டும் படிக்கச் சொன்னார்கள்.
எப்படியும் தேறி விட வேண்டும் என்பதற்காக அவர்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல; ஒவ்வொரு நாளும் இரவு பன்னிரண்டு மணி வரையில் படிப்பேன். ஆகா, பிள்ளைக்குப் படிப்பில் எவ்வளவு அக்கறை வந்து விட்டது; இந்தத் தடவை கட்டாயம் வெற்றிதான்" என்று வீட்டார் பேசிப் பேசி மகிழ்ந்தார்கள்.
நான் 'குடியரசுப் பதிப்பக' வெளியீடுகளைப் படித்துக் கொண்டிருக் கிறேன் என்ற உண்மை அவர்களுக்கு எப்படித் தெரியும்? "அய்யோ பாவம், இப்படிக் கண்விழித்துப் படித்தால் உடம்பு எதற்கு ஆகும்!" என்று பால்காய்ச்சித் தருவார்கள். நெய்யை உருக்கித் தொண்டையிலே ஊற்றுவார்கள். நானோ என்னையறியாமல் அவர்கள் உள்ளத்தை உருக்கிக் கொண்டிருந்தேன். அரை வருடப் பரீட்சை வந்தது. முதல் நாள் எழுதினேன். மறுநாள் நாகையில் பெரியார் ஈ.வெ.ரா.
அவர்களுக்கு வரவேற்புக் கூட்டம் என்று செய்தி வந்தது. பள்ளிக் கூடம் செல்வதாக வீட்டில் விடை பெற்றுக்கொண்டு நானும் தென்னனும் நாகைக்கு ரயில் ஏறினோம். அரை வருடப் பரீட்சை, நான் வரவில்லை என்று காத்திருக்குமா, என்ன? அது நடந்து முடிந்தது. பிறகு எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்த இரண்டாவது போர்க்களத்திற்குப் புறப்பட்டேன். கட்டாயம் வெற்றி பெற்று விடுவேன் என்று வீட்டில் கூறினேன். நான்கூட ஓரளவு நம்பினேன்.
விடுமுறையைக் கழிக்க எண்ணித் திருக்குவளைக்கு அனைவரும் சென்றோம். நான் என் சொந்த ஊருக்குச் சென்றதும், "இந்த வருடம் பாஸாகி விடுவாயா?" என்ற கேள்வியைக் கேட்காதவர்கள் யாருமே இல்லை. கேட்டவர்களுக்கெல்லாம் நானும் என் வீட்டாரும் வெற்றிச் சேதியே கூறி வந்தோம்! விடுமுறை நாட்களை உற்சாகமாகக் கழித்துக்கொண்டிருந்தபோது திடீரென்று ஒருநாள் எனக்கு ஒரு இந்திராணி கிடைத்தாள். இந்திராணி கிடைத்ததும் நானும் இந்திரனாக மாறாமல் என்ன செய்வது?
கிராமத்தில் நான் படித்த பள்ளிக்கூடத்தில்தான் அந்தப் பாவையுடன் ஒரு நாள் கொஞ்சு மொழி பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது எனக்கு. எதிர்பாராமல் கிடைத்த அந்த வாய்ப்பினை இப்போது எண்ணிப் பார்த்தாலும் நெஞ்சு இனிக்கத்தான் செய்கிறது. "நாமிருவரும் இந்தத் தோட்டத்தில் நாள்தோறும் ஆடிப் பாடி அகமகிழ்ந்திருப்போம். என்ன சொல்கிறீர்கள்!"
என்று அவள் கேட்டாள். "கரும்பு வேண்டாமென்று கூறுவேனா. கண்மணி?" என்று பதில் சொல்லி அவளைத் தழுவிக்கொண்டேன். எங்களின் இன்ப மயமான காதல் கட்டத்தில் ஒரு கலகக்காரர் புகுந்தார். "நிலைமை தெரியாமல் நடந்து கொள்கிறாய்!" என்று என்னை எச்சரித்தார். எனக்கும் அவருக்கும் பேச்சு முற்றி விட்டது. கடைசியில அவரே வெற்றி பெற்றார். நான் இந்திராணியை விட்டு விட்டு ஓடினேன். ஓடிக்கொண்டே இருந்தேன். எங்கே? 'பூலோகத்துக்கு' எதற்காக?
துருவன் தவம் செய்கிறானாம்! அதுபற்றி விவரமறிய! கலகக்கார நாரதன் என்னை அழைத்துக் கொண்டு ஓடினான். பள்ளி மாணவர் சங்க ஆண்டு விழாவில் 'துருவன்' நாடகம். அதில் இந்திரனாக நடிக்க இருந்த பையனுக்கு நாடகத்தன்று திடீரெனக் கடுமையான காய்ச்சல்! வேறு வழியில்லை! பழைய மாணவனாகிய நான் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய நெருக்கடிக்கு ஆளானேன். இந்திரனுக்குரிய வசனங்களை நானே எழுதிக்கொண்டேன். வசனங்கள் எல்லாமே 'குடியரசு' வாடைதான்.
நாரதர் என்னைப் பார்த்து, "ஹே இந்திரா! பூலோகத்தில் ஒரே குழப்பம்! நீ இந்திராணியோடு கொட்டமடிக்கிறாய். இதுதான் உன் ராஜ்ய பரிபாலனத்துக்கு அழகோ!" என்று ஆத்திரத்தோடு கேட்டார். உடனே இந்திரன், "ஆமாம், இதுதான் என் ராஜ்ய பரிபாலனத்தின் அழகு, இலக்கணம், எல்லாமே! நான் இந்திராணியோடு கொட்டமடிக்காமல் வேறு யாரோடு கொட்டம் அடிப்பேன்? அகல்யாவிடம் கொஞ்சியதற்குத்தான் உடம்பெல்லாம் கண்களாகிப் போகுமாறு சாபம் பெற்றுவிட்டேன்.
ஒரு கண் இரண்டு கண் இருக்கும் தேவர்களே காதல் வியாதியால் கஷ்டப்படும்போது ஆயிரங் கண்ணுடைய நான் என்ன செய்வேன்? ஏனய்யா நாரதரே! எனக்குத் தான் ஆயிரம் கண்கள்; காளிதேவியையும் ஆயிரங் கண்ணுடையாள் என்கிறார்களே- அவளுக்கும் என்னைப் போல் ஏதாவது சாபந்தானோ?'
என்று பதில் கூறுவான். இப்படியொரு புதுமையான இந்திர வேஷத்தைப் போட்டுக்கொண்டேன். அந்த நாடகத்தில் துருவனுடைய தம்பியாக நடித்த பால நடிகன் யார் தெரியுமா? என் கண்களின் கருமணியாய் விளங்குகின்ற செல்வ மருமகன், முரசொலி மாறன்தான்! துருவனைப் பார்த்து, 'ஏய் துதுவா, நான் யார் தெரியுமா? எங்கப்பா மதியில் நீ உக்காதக் கூதாது!"
என்று பேசிய மழலை மொழியை நான் இன்னும் மறக்கவில்லை. இப்போதும் சமயத்தில் நான் அதைச் சொல்லி வீட்டில் அவனைக் கேலி செய்யும்போது மணமகளைப் போல் நாணிக் கோணி ஓடிவிடுவான்! துருவன் நாடகம் முடிந்து பதினைந்து நாள் கழித்து என் பள்ளித் தேர்வு முடிவு கிராமத்தை நோக்கி எட்டிப் பார்த்தது. காலையிலே தினசரிப் பத்திரிகையில் செய்தி வரப்போகிறது. முதல் நாள் மாலையிலேயே எனக்குச் செய்தி கிடைத்துவிட்டது. தோல்விதான் என்று!
யாரிடமும் விஷயத்தைக் கூறவில்லை. இரவு சாப்பிட்டுவிட்டுத் தூங்குவதற்குத் திண்ணைக்குப் பாயை எடுத்துக்கொண்டு வந்தேன். "என்றைக்குமில்லாமல் இன்றைக்கென்ன திண்ணையில் படுக்கை?" என அம்மாவும் அப்பாவும் விசாரித்தார்கள். சமாளித்தேன். அப்பாவும் என்னருகே துணைக்குப் படுத்துக்கொண்டார். "அய்யோ, இவ்வளவு அருமையாகப் பாதுகாக்கும் வீட்டாருக்கு எவ்வளவு கொடுமையான சேதி காலையில் காத்திருக்கிறது!"
என்று நினைத்தேன். தலையணை கண்ணீரால் நனைந்து விட்டது. தூக்கம் வரவில்லை தூங்குவது போல் படுத்திருந்தேன். ஒரே இருட்டு. இரவு 2 மணி இருக்கலாம். மெதுவாக எழுந்தேன். தந்தை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். பாயில் சிறிது நேரம் உட்கார்ந்து தந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். 'மினுக் மினுக்' என்று எரிந்துகொண்டிருந்த சிறிய விளக்கை ஊதி அணைத்தேன்.
தோல்விச் சேதியைக் கூறிவிட்டு எப்படி உயிரோடு இருப்பது? ஊரார் முகத்தில் எப்படி விழிப்பது? எனக்காக என் வீட்டார் எடுத்துக்கொண்ட சிரமங்களுக்கு நான் அளிக்கும் பதில் நியாயமானதுதானா? விடிந்ததும் பத்திரிகை வரும். என் தேர்வு எண்ணைத் தேடித் தேடிப் பார்ப்பார்கள். இல்லையென்றதும் தேம்பி அழுது விடுவார்கள். அதைப் பார்த்துக்கொண்டு வெட்கமில்லாமல் நான் நிற்க வேண்டுமா? கேள்விகள் என்னைக் குடைந்தன! மயக்கம் வருவது போல் இருந்தது.
குமுறல்! கொந்தளிப்பு! தலை சுற்ற ஆரம்பித்தது. எதிரேயுள்ள திருக்குளம் தன் மெல்லிய அலைக் கரங்களால் கரையைத் தொட்டுத் தொட்டு மெதுவாக ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தது. ஆனால் என் உள்ளம் எழுப்பிய ஒலியோ கடல் அலையையும் மிஞ்சிய வண்ணம் இருந்தது. படுக்கையை விட்டு எழுந்தேன். நடக்க ஆரம்பித்தேன். எங்கே போவது என்ற தெளிவில்லை. நடந்துகொண்டேயிருக்கிறேன். என்னைச் சித்திரவதை செய்யும் குழப்பம் நான் நடப்பதை மாத்திரம் தடுக்கவில்லை.
என் கண் எதிரே என் வீட்டார் ஒவ்வொருவராக வந்து நின்று, "நீ இந்தக் காரியம் செய்யலாமா?" என்று தழுதழுத்த குரலில் கேட்பது போல் இருக்கிறது. என்னையும் மீறி என் கண்கள் குளமாகின்றன. எதிர்பார்த்த தோல்விதான் எனக்குக் கிடைத்தது, ஆனாலும், ஓர் ஆசை, தப்பித் தவறித் தேறிவிட மாட்டோமா என்று! இப்படி ஆசைப்படுவது சகஜம். தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களுக்கு 'டெபாசிட்' பண்ம் திரும்பி வருவதே கஷ்டமாயிருக்கும்.
ஆனாலும் ஒரு துருப்பிடித்த நம்பிக்கை அவர்களைச் சுற்றிக்கொண்டு இல்லாத கனவுகளையெல்லாம் காணச் செய்யும்! அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை, இடிந்து தரை மட்டமான போது நான் கலங்கிப் போனேன். எதிர்பார்க்கப்பட்ட முடிவுக்கே இதயம் கனத்து விட்டதென்றால், எதிர்பாராத வகையில் ஏற்படும் திடீர் அதிர்ச்சிகளை எப்படித்தான் இளம் மாணவ இதயங்கள் தாங்கிக்கொள்ளுமோ தெரியவில்லை! பரீட்சை முடிவுகளும், அவைகளைத் தொடர்ந்து மாணவர்களின் தற்கொலைச் செய்திகளும் 'வருவதையாரும் கவனிக்காமல் இல்லை.
'பரீட்சை முறையால் பல மாணவர்களின் வாழ்வு பாழாகிறது. ஆகவே அந்த முறையைச் சிறிது சிறிதாக மாற்றியாக வேண்டும், என்ற ஒரு கருத்துப் பொதுவாக நிலவி வருகிறது. "பரீட்சையும் இல்லையென்று ஆகிவிட்டால் மாணவர்களின் கல்வித் தரம் அவர்களின் அலட்சியத்தால் வீணாகி விடக்கூடும்" என்று வாதிடுவோரும் உண்டு.
இரண்டு வாதங்களும்' முடிவடையாதவைதான். இரண்டுக்கும் இடையே பொதுவான ஒரு நிலை. கல்வி-தரம் குலையாத வகையில் உருவாக்கப்பட்டேயாக வேண்டும். கல்வியில் நல்ல பயிற்சி அளிக்க வேண்டும். அந்தப் பயிற்சியினைப் படிப்படியாகப் பெறும் வேலையில் மாணவன் ஈடுபடுகிறான். பயிற்சி முடிந்த பிறகு அவன் தகுதி, திறமைகளுக்கேற்றவாறு அலுவல்களை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் அளிக்கப்படுவதே சாலச் சிறந்த முறையாகும். தகுதி, திறமை, ஆராய்ச்சி, கல்வி பயிலும் காலத்திலேயே ஏற்படுமேயானால் அது அவன் கல்வி வளர்ச்சிக்குப் போடப்படும் தடையேயாகும்.
பரீட்சையில் நன்கு தேறியவர்கள் எல்லாம் அலுவல்களில் தலைசிறந்து விளங்குகிறார்களா? குறைபாடின்றியாவது வேலைகளில் திறமையைக் காட்டுகிறார்களா? ஆகவே பரீட்சையில் தேறியவர்களையெல்லாம் திறமைசாலிகள் என்று கூறிவிட முடியாது. தேறாதவர்கள் திறமையற்றவர்கள் என்றும் கருதி விடக்கூடாது. என்னைப் பொறுத்தவரையில், பள்ளி இறுதி வகுப்பில் பரீட்சை குறுக்கிட்டு முட்டுக்கட்டை போடாமல் இருந்தால் நான் கல்லூரியில் நுழைந்திருக்க முடியும்.
சரியாகவோ தவறாகவோ என்னிடம் ஏதோ ஆற்றல் இருக்கிறது என்கிறார்களே; அந்த ஆற்றல் கல்லூரிப் படிப்பால் இன்னும் மெருகேறியும் இருக்கக்கூடும். நான் கல்லூரிக்கே தகுதியில்லை என்றல்லவா தடை விதிக்கப்பட்டுவிட்டது.
