நெஞ்சுக்கு நீதி
தமிழ் மாணவர் மன்றம் · 8 / 391
தமிழ் மாணவர் மன்றம் கதர்ச் சட்டைக்காரர் வந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் நடத்தி, என்னையே மாணவர் கிளையின் செயலாளராகவும் ஆக்கினார். என் நண்பர் எஸ். பி. சிதம்பரம் பொருளாளராகவும் ஆக்கப் பட்டார். நிர்வாகி தேர்தல் நடந்ததிலிருந்து என் மனம் குழப்பமாகவே ஆகிவிட்டது. 'இதுவே நீடித்தால் நாம் எங்கு போய் நிற்போம்? கம்யூனிஸ்ட்டிலா? காங்கிரசிலா?'
என்று என் இளம் மனம் அஞ்சியது. அதற்குள் சம்மேளனத்தில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஆதிக்கம் மேலீடுவதற்கான அறிகுறிகள் தென்படலாயின. அந்த ஆதிக்கமும், என் வாயிலாகவே படையெடுக்கத் துணிந்தது. 'தமிழ் வாழ்க! இந்தி வளர்க' என்பதை நமது சம்மேளனக் கோஷமாக வைத்துக் கொள்ளலாமே!"
என்றார் ஒரு காங்கிரஸ் நிர்வாக உறுப்பினர். கம்யூனிஸ்ட் அனுதாபமுள்ள மாணவர்களும் தலையசைத்தனர். நான் மறுத்து விட்டேன். ஓர் இரவு முழுதும் எனக்குத் தூக்கமேயில்லை. விடிந்தது. நேரே சம்மேளனப் பொருளாளர் நண்பர் சிதம்பரம் வீட்டுக்குப் போனேன். அவரிடம் உறுப்பினர் கட்டணம் என்ற வகையில் நூறு ரூபாய் இருந்தது. அவசரமாகக் கேட்டு வாங்கினேன். "நமது சம்மேளனத்தைக் கலைக்கப் போகிறேன். உறுப்பினர்கள் பணத்தைத் திருப்பித் தரப்போகிறேன்."
என்று கூறி, உறுப்பினர்களிடம் கட்டணப் பணத்தைத் திருப்பித் தந்தேன். அப்படித் தரப்பட்டது இருபத்தைந்து ரூபாய்தான். மிச்சமுள்ள உறுப்பினர்கள், "சம்மேளனத்தைக் கலைத்து விடுவது பற்றிக் கவலையில்லை. கட்டணம் உன்னிடமே இருக்கட்டும்" என்றனர். அன்று மாலையே; 'தமிழ் மாணவர் மன்றம்' என்ற ஓர் அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. என்னிடம் எழுபுத்து ஐந்து ரூபாய் இருந்ததல்லவா? அந்த ரூபாய்க்குரியவர்களையெல்லாம் அந்த மன்றத்தில் உறுப்பினராக்கிக் கொண்டேன்.
அதே சமயத்தில் சேலத்தில் வெங்கட்ராமன் என்பவர் துவங்கிய 'தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்ற'த்தின் தொடர்பும் ஏற்பட்டு, திருவாரூர் மன்றமும் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் எனப் பெயர் பெற்றது. என்னை வலையில் வீழ்த்த எண்ணிய தோழர் பிறகு என் கண்ணில் படவே இல்லை! சம்மேளனத்தை மீண்டும் தோற்றுவிக்க முயன்றும் முடியாமல் திரும்பி விட்டார். 1941-ம் ஆண்டுத் துவக்கத்தில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தின் ஆரம்ப விழா நடைபெற்றது.
தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் பிற மாவட்டங்களிலும் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றங்களை நிறுவப் பணியாற்றினோம் மன்றத்தின் ஆண்டு விழா 1942-ம் ஆண்டு மிகச் சிறப்பாகத் திருவாரூரில் கொண்டாடப்பட்டது. "தண்பொழிலில் குயில் பாடும் திருவாரூரில், தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றங்காண்" எனத் துவங்கி, "கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண் பகைக் கூட்டத்தை!"
என முழக்கமிடும் பாதிதாசனின் பாட்டு அந்த விழாவுக்கென அவரால் வரையப்பட்ட துதான்! திருவாரூரில் ஆண்டு விழா நடைபெறுகிறது. குடந்தையிலே தவமணிராசனும், கருணானந்தமும் நடத்திய திராவிடர் மாணவர் கழக மாநாடு துவங்குகிறது! அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அன்பழகன், மதியழகன் ஆகியோர் திருவாரூர் வந்து எழுச்சியுரை ஆற்றினர். விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. அவர்களை வரவேற்கப் புகை வண்டி நிலையத்திற்குப் போனபோதுதான் அவர்கள் வரவில்லையென்று தெரிந்தது.
விழியிலே நீர் பெருக நின்றேன். நல்ல வேளை, அப்போது தான் அன்பழகன், மதியழகன் இருவரும் வந்து எனக்கு ஆறுதல் அளித்தனர். விழாவுக்கு ஒப்புக் கொண்டு, வராதவர்கள் வழிச் செலவுப் பணத்தையாவது திருப்பி அனுப்பக் கூடாதா? அதுவுமில்லை. வந்தவர்களையும், புதிதாகத் திடீரென்று வருவிக்கப்பட்டவர்களையும் வழியனுப்பக் கையிலே பணமில்லை! நேரமோ ஓடுகிறது. என் கவனமும், விழாவிலே இல்லை! நன்கொடைக்குக் கையெழுத்துப் போட்டவர்களிடம் ஓடினேன்; ஒரு வாரம் பத்து நாள் என்று அவர்கள் தவணை கூறி விட்டார்கள்!
யோசித்தேன்! வழி தெரியவில்லை! சரி, திருடத்தான் வேண்டுமென்றத் தீர்மானத்திற்கு வந்து விட்டேன். என் தாயாருக்கு ஒரே பிடிவாதம்; என் கையிலே ஒரு தங்கச்சங்கிலி போடவேண்டுமென்று! எனக்கோ அதைப் போட்டுக்கொள்ள வெட்கம். ஐந்தாம் வகுப்பு, ஆறம் வகுப்புப் படிக்கும் வரையில் உயர்நிலைப் பள்ளிக்குக்கூடச் சடைப் பின்னிப் போட்டுக் கொண்டு போவதுண்டு. ஆனால், இப்போது சங்கிலியொன்றைக் கையில் மாட்டிக் கொள்ளச் சங்கடமாக இருந்தது.
அம்மா கண் குளிரப் பார்க்க வேண்டுமென்கிறார்களே! அதற்காக அந்தச் சங்கிலியைப் போட்டுக் கொண்டிருந்தேன். அதில் ஒரு வளையம் ஒடிந்து பழுது பார்க்கக் கொடுக்க வேண்டுமென்பதற்காக அம்மாவின் பெட்டியில் வைத்திருந்தார்கள். அந்த நினைவு எனக்கு வந்தது. வீட்டுக்குள் நுழைந்தேன். அம்மா கொல்லைப்புறத்துக் கிணற்றோரத்தில் ஏதோ வேலையாக இருந்தார்கள், தந்தை நன்றாக உறங்கிக்கொண்டிருந்தார். தாழ்வாரத்தில் பூனைபோல் அறைக்குள் நுழைந்தேன்.
பெட்டி எங்கே இருக்கிறது என்று தேடினேன். அய்யோ ; அந்த நேரம் என் இதயம் துடித்த துடிப்பை இப்போதும் நினைத்துப் பார்க்க முடிகிறது. 'திருடுவதா?' கேள்வி எழுந்தது. 'வேறென்ன செய்வது? வந்திருக்கும் சொற்பொழிவாளர்களை எப்படி ஊருக்கு அனுப்புவது?'
பதிலும் பிறந்தது. தங்கச் சங்கிலியைக் காணாமல் அம்மா என்ன பாடுபடுவார்கள்?' "நாமென்ன, போனால் போகிறது; வேறொரு சங்கிலி செய்து கொள்ளலாம் என நினைக்கிற அளவுக்கு வசதி படைத்த குடும்பமா?" இப்படிநெஞ்சிலே வினாக்கள் வேலெனத் தைத்தன. பெட்டியிருக்குமிடத்தை அணுகினேன். என்ன ஆச்சரியம்! எனக்காகவே அந்தப் பெட்டி திறந்திருந்தது! அதுமட்டுமல்ல; அந்தப் பொன் சங்கிலியும் முட்டையிலிருந்து வந்த பாம்புக் குட்டிபோல் வளைந்து கிடந்தது.
கை நடுங்கிற்று. தொண்டை காய்ந்து விட்டது. கண் கலங்கியது. வேறு வழியில்லை. திருடிவிட்டேன். வெகு வேகமாக வீட்டைவிட்டு வெளியேறினேன். தோழன் தென்னனை அழைத்துக் கொண்டு திருவாரூர் செட்டியார் பாங்குக்குப் போனேன். ஐம்பது ரூபாய்க்கு ஈடு வைத்துப் பணம் வாங்கினேன், சொற்பொழிவாளர்களைத் தாராளமாக ஊருக்கு அனுப்பி வைத்தேன். பெருமூச்சு விட்டபடி வீடு திரும்பினேன். வீட்டில் ஒரே ரகளை. அம்மா அங்குமிங்கும் பம்பரம்போல் சுற்றி அலைகிறார்கள்.
"பெட்டியை ஏன் திறந்து போட்டாய்?" என்று தந்தை ஆத்திரத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறார். "எந்தப் படுபாவிகள் எடுத்தார்களோ தெரியவில்லையே!" என்று அம்மா சாபம் கொடுக்கிறார்கள். அவர்கள் கண்களிலிருந்து உதிரும் நீர்த் துளிகளைப் பார்க்கிறேன். எனக்கும் அழுகை வருகிறது. "என் வீட்டில் வந்து திருடினார்களே! அவர்கள் மண்ணாய்ப் போக!"
இப்படி அம்மாவின் நடுங்கும் குரல்கள் உச்சரிக்கின்றன. எனக்கு ஒரு தைரியம். உலகில் பிறந்த எல்லோரும் தான் மண்ணாய்ப் போகப் போகிறோம் என்று! அது மட்டுமல்ல; மண்ணாய்ப் போவதற்கு அம்மா ஒன்றும் காலம் குறிப்பிட்டுச் சாபம் தரவில்லை. அதிலே ஒரு திருப்தி. நானும் அவர்களோடு சேர்ந்து கொண்டு தேட ஆரம்பித்தேன் சங்கிலியை. செட்டியார் பாங்க்கில் போய்த் தேட வேண்டிய பொருளை வீட்டின் மூலை முடுக்குகளில் தேடினால் கிடைத்து விடுமா?
மந்திரம், ஆரூடம் எல்லாம் கேட்டும் பயனில்லை. அந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு நாங்கள் குடி போகிறவரையில் சுமார் இரண்டு மூன்று வருஷங்கள் என் தாயாருக்கு அந்த வீட்டில் சங்கிலி தேடுவதுதான் வேலை. கொல்லைப் பக்கம் போனால் குப்பைமேட்டைக் கிளறிப் பார்ப்பார்கள். தண்ணீர் தேங்கியிருக்கும் குழியில் கிண்டிப் பார்ப்பார்கள். இப்படி ஒரே வேலையாக இருந்தார்கள். ஐம்பது ரூபாய்க்கு ஈடு வைக்கப்பட்ட சங்கிலி வட்டி வளர்ந்து முழுகிப் போகிற நிலையில் அதை விற்றுக் கடனைக் கொடுத்து விட்டு மிச்சப்பட்ட நாலைந்து ரூபாய்க்கு நானும் நண்பர்களும் ஓட்டலில் சாப்பிட்டோம்.
சினிமா பார்த்தோம். சங்கிலியின் கதை அதோடு முடிந்தது. என் கையைத் தொட்டுத் தொட்டுப் பார்த்து, "எங்கய்யாவுக்கு வெறுங்கையா இருக்கே" என்று அம்மா மனம் நொந்து கொள்வார்கள். நீண்ட காலத்திற்குப் பின் நான் உண்மையைச் சொன்னதும் அதைக் கேட்டு மகிச்சியும் அடைந்தார்கள், "குறும்புக்காரப் பிள்ளை" என்று.
அவர்கள் நெஞ்சிலே எழும் பாராட்டு முகத்தின் மூலம் வெளிப்பட்டது. அதையும் உணர்ந்தேன். ஆனால் அப்போது சொல்ல முடியுமா? முடியவில்லை: இப்படித் தாயின் மனம் நோகுமாறு ஒரு முறையும், அடுத்து என் அருமை மனைவியின் மனம் நோகுமாறு ஒரு முறையும் நான் திருடியிருக்கிறேன். மாணவர் மன்றத்தின் சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றுக்குத் தோழர் சனார்த்தனத்தை அழைத்திருந்தேன். வந்து விட்டார். வருவதற்குச் செலவுக்கு அனுப்பி விட்டேன்.
போவதற்கு என்ன செய்வது? கூட்டம் ஏற்பாடு செய்யச் சொன்னவர்கள், கூட்டத்தில் மேடையேறித் தங்கள் தங்கள் பிரதாபங்களைக் காட்டிக் கொண்டவர்கள் எல்லாரும் தங்கள் வீடுகளுக்குப் போய் விட்டார்கள். எப்படியாவது பணம் வசூலித்துத் தோழரை அனுப்பி விடலாமென்று நினைத்து அவரை ஒரு நாள் தங்குமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் தங்கியிருந்தார். மறுநாள் மாலைவரையில் யாரும் சிக்கவில்லை, வீட்டுக்குச் சென்றேன். என் திருமணத்தின் போது என் மனைவிக்குப் பரிசாகத் தரப்பட்ட சந்தனக் கிண்ணம் ஒன்று இருந்தது; அதில் என் துணைவியாரின் மஞ்சள், குங்குமம் எல்லாம் இருக்கும், அந்தக் கிண்ணத்தை எடுத்து ஒளித்தவாறு வெளியேறினேன்.
ஜெயசீலன் என்ற உறவினர் ஒருவர்; அவரிடம் கொடுத்து அந்தக் கிண்ணத்தின் மீது பத்து ரூபாய் கடன் வாங்கி வருமாறு கெஞ்சினேன். அவர் தடுத்தார். நான் விடவில்லை; பிறகு உடன் பட்டார். பணம் வாங்கி வந்தார். பொதுக் கூட்ட விவகாரம் முடிவுற்றது. சந்தனக் கிண்ணத்தைத் தொலைத்து விட்டாள் என்று என் மனைவியை எல்லாரும் குறை கூறினார்கள். திட்டினார்கள். அவளால் பாவம் அழ முடிந்ததே தவிரப் பதில் சொல்ல முடியவில்லை. நானும் உண்மையை வெளியிடவில்லை.
என் மனைவி படும் வேதனையைக் கண்டு மனத்துக்குள் அழுது கொள்வேன்!
