நெஞ்சுக்கு நீதி
"நீங்களா 'மாணவ நேசன்' நடத்துகிறீர்கள்?" · 7 / 391
"நீங்களா 'மாணவ நேசன்' நடத்துகிறீர்கள்?" ஜி ன்னாவிற்கும் ஜவாஹர்லால் நேருவிற்கும் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து நடைபெற்றது. அவைகள் முழுவதும் முஸ்லீம் சமுதாயத்தைப் பற்றியே அமைந்ததாக இருந்தது. அதன் தொடர்பாக முஸ்லீம்களின் கோரிக்கை பற்றி 1938 அக்டோபர் 9-ம் தேதி ஜின்னா எழுதிய முடங்கலில் இருந்த நிபந்தனைகளைக் காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. ஜின்னாவிற்கும் காங்கிரசுக்குமிடையே எதிர்ப்பு ஆணிவேர் விட்டது.
தமிழ்நாட்டு முஸ்லீம்கள் நீதிக்கட்சித் தலைவர்களுடன் நட்புறவு கொண்டு வாழ்ந்தனர். தமிழகத்தில் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாக்களில் பெரியார், அண்ணா, அழகிரி சிற்றரசு போன்றவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த உறவுதான் எதிர்காலத்திலும் திராவிட இயக்கத்திற்கும் முஸ்லீம் லீகிற்கும் இடையே அழுத்தமான பிணைப்பை ஏற்படுத்த உதவியது என்று சொன்னால் அது மிகையாகாது. காந்தியடிகளும் ஜனாப் ஜின்னாவும் சந்தித்துப் பேசியபோது காந்தியடிகள் ஜின்னாவை வியப்புடன் பார்த்து, "1915-ல் இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் பிரதிநிதியாக விளங்கிய ஜின்னாவா நீங்கள்?"
என்று கேட்டார். அதற்கு ஜனாப் ஜின்னா, "தேசியம் ஒருவருடைய தனிச் சொத்து அல்ல." என்று பதிலளித்தார். காந்தியடிகளும் சுபாஷ் போஸும், ஜின்னாவும் சேர்ந்து 1938 ஜூன் பதினெட்டில் பேச்சு வார்த்தைகள் நடத்தினர். 14 நிபந்தனைகள் அடங்கிய ஒரு திட்டத்தை ஜின்னா அளித்தார். அது ஒப்புக்கொள்ளப்படவில்லை. அந்த ஆண்டு காங்கிரசுக்கும் முஸ்லீம் வீக்கிற்கும் இடைவெளி அதிகமாகி விட்டது. அதற்கு நேர்மாறாகத் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கத்திற்கும், லீக்கிற்கும் நெருக்கம் அதிகமாயிற்று.
வடக்கே இந்து முஸ்லீம் போராட்டமும் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டமும் நடைபெற்ற அந்த ஆண்டில் இந்தியாவின் பக்கத்து நாடான சீனாவில் உள்நாட்டுக் குழப்பமும், வெளிநாட்டுப் படையெடுப்பும் ஒன்றையொன்று மிஞ்சிக் கொண்டிருந்தன. ஐரோப்பாவில் யுத்தக் கருமேகங்கள் குமுறிச் சூழ்ந்தன. போருக்கான சூழ்நிலைகள் உருவாகி விட்டன. அந்த ஆண்டு பர்மாவில் விளைந்த அமளிகளின் மூலம் பல உயிர்கள் பலி கொள்ளப்பட்டன.
பெருத்த அளவில் பொருட்சேதம் ஏற்பட்டது. அந்த ஆண்டு போர்ச் சூழலுக்கு இடையே ஆரம்பமான போதிலும், அடுத்த 1939-ல் ராஜாஜி அமைச்சரவை முடிவுற்றது. இடைக்கால அமைச்சரவை உருவாயிற்று. அந்த அமைச்சரவை கட்டாய இந்திச் சட்டத்தை நீக்கியது. இதனால் 1939-ம் ஆண்டையே மொழிப் போராட்டத்தில் முதல் கட்ட வெற்றி ஆண்டாக நாம் எண்ணிக் கொள்ளலாம். இப்பொழுதுதான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலும் ஒரு பெரும் பிளவு ஏற்படத் தொடங்கியது.
திரிபுராவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் மீண்டும் தலைவராக சுபாஷ்போஸ் போட்டி விட்டார். வெளி நாட்டிலிருந்து திரும்பிய ஜவஹர்லால் நேரு தடுத்தும் சுபாஷ் கேட்கவில்லை. இரண்டாவதுமுறை சுபாஷ் போட்டி விட்டதை காந்தியடிகளும் விரும்பவில்லை. ஜவஹர்லால் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் தலைவராக இருந்ததைப் போலத்தானும் ஏன் இருக்கக் கூடாது என்று சுபாஷ் சந்திர போஸ் வாதிட்டார். இறுதியாக காந்தியடிகள் எதிர்ப்பிற்கிடையே சுபாஷ் சந்திர போஸ் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.
காந்தியடிகளுடைய எண்ணம் ஒரு முஸ்லீமைக் காங்கிரஸ் தலைவராகக் கொண்டு வரவேண்டும் என்பது. அதற்கு அவர் அபுல் கலாம் ஆஸாத்தை எண்ணிக் கொண்டிருந்தார். சுபாஷ் பிடிவாத மாகப் போட்டியிடவே ஆஸாத் விலகிக்கொண்டார். காந்தியார் சுபாஷை எதிர்த்துப் பட்டாபி சீதாராமய்யாவை நிறுத்தினார். பட்டாபியின் தோல்வி தன் தோல்வி என்று மகாத்மாகாந்தி மன முருகிச் சொல்ல வேண்டிய அளவிற்குச் சீதாராமையா தோல்வியுற்றார். அந்தத் தோல்வியைத் தொடர்ந்து காந்தியடிகள், ஆசாத், படேல், ராசேந்திரப்பிரசாத் ஆகியோர் காங்கிரஸ் காரியக் கமிட்டியிலிருந்து விலகி விட்டார்கள்.
சுபாஷ் தலைமையை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். சிக்கல் வளர்ந்து கொண்டே போவதைக் கண்ட சுபாஷ்போஸ் தனது பதவியை ராஜினாமாச் செய்தார். அடுத்து காந்தியடிகளின் அன்பைப் பெற்றார், ராசேந்திர பிரசாத் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கிடையே ஐரோப்பாவில் போரை எதிர்பார்த்து அல்லல்பட்டுக் கொண்டிருந்த ஆங்கிலேய அரசாங்கத்துக்கு எதிராக இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கி விடவேண்டும் என்று சுபாஷ் சந்திரபோஸ் தெரிவித்தார்.
நெருக்கடியில் சிக்கியிருக்கும் இங்கிலாந்தை எதிர்ப்பதற்குச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வது சத்தியாக்கிரக நெறியை மீறிய செயலாகும் என்பது காந்தியாரின் வாதமாகும். தலைமைப் பொறுப்பை உதறி விட்ட சுபாஷ் போஸ் காங்கிரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யவும் கிளம்பினார். பம்பாயில் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய தீர்மானங்களை எதிர்த்து முழங்கினார். நாடெங்கும் அவரது அனுதாபிகள் காங்கிரஸ் தீர்மானத்துக்கு எதிராகப் பேசத் தொடங்கினர்.
உடனடியாக அவர் மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்தது. பெரும் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் மூன்று ஆண்டுகள் வரை காங்கிரஸ் கட்சியின் பதவிக்குப் போட்டியிடக் கூடாது என்று அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது எந்தத் தனி மனிதரையும்விட கட்சி அமைப்பு பெரிது என்று கருதப்பட்ட ஒரு வாய்ப்பு. ஆனாலும் அதில் காந்தியடிகளுக்குள்ள இடம் முக்கியமானது என்பதை உலகிற்கு பறையறைவிக்கும் நிகழ்ச்சியாயிற்று.
காந்தியாரையும் சுபாஷையும் இணைத்து வைக்க நேரு மிகுந்த சிரமம் எடுத்துக் கொண்டார். அதற்காகவே பெருந்தலைவர்கள் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து விலகியபோதும் அவர் விலகாமல் இருந்தார். 'சுபாஷைத் தலைவராக ஏற்றுக் கொள்வது நல்லது' என்று பண்டித நேரு காந்தியடிகளுக்குக் கடிதம் எழுதினார்.
ஆனால் காந்தியடிகள் இதற்கு இறுதி வரை இணங்கவில்லை. திரிபுரா காங்கிரசிற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுபாஷ் போசிற்கு 105 டிகிரி காய்ச்சல். அவரைத் தூக்கிக் கொண்டு வந்து மாநாட்டில் உட்கார வைத்தார்கள். 'அந்தப் பரிதாபகரமான நிலையிலும் இரண்டு குழுவினரும் தங்கள் கொள்கைகளையோ, தங்கள் பிடிவாதத்தையோ விட்டுக் கொடுக்கவில்லை'என்று அப்போது பத்திரிகைகளில் `வந்த செய்திகளைப் படித்தது எனக்கு நன்கு நினைவிருக்கிறது.
நவம்பர் 14ம் நாள் ஜவஹர்லால் நேருவுக்கு ஐம்பதாம் ஆண்டு பிறந்த நாள் வந்தது. 'உன்னுடைய முதல் 30 ஆண்டுகள் இந்தியாவின் சரித்திரத்தில் தலையாய இடம் பெற்று விட்டன' என்று கவிக்குயில் சரோஜினி தேவி நேருவிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.
காந்தி - சுபாஷ் உறவை ஏற்படுத்த முடியாத நேரு விரக்தியுடன் காங்கிரஸ் தூதுவராக சீனாவின் அழைப்பை யேற்று அங்கு சென்றார். சென்றவுடன் உலக யுத்தம் தொடங்கி விடவே, பத்து நாட்களில் இந்தியாவிற்குத் திரும்பினார். இந்த 1939-இல் தான் புரட்சி ஜனநாயகக் கட்சி என்று எம். என். ராய் ஒரு கட்சியைத் துவக்கி வைத்தார். சுபாஷ் போசின் பார்வர்ட் ப்ளாக் கட்சியும் வேறு ஒரு திசையில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நடை போட்டுகொண்டு இருந்தது.
கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் பல பகுதிகளிலும் ஊடுருவுவதற்குப் பலத்த ஆயத்தங்களைச் செய்து கொண்- டிருந்தது. அப்படிப் பட்ட முயற்சிகளில் ஈடுபட்ட ஒருவர் பள்ளிக்கூடத்திலிருத்த என்னைச் சந்திக்க வேண்டுமென்று விரும்பினார். அவர் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார், கருணாநிதி என்றால் கிட்டத்தட்ட அவரைப் போன்ற வயதுடையவன், உருவமுடையவன் என்றெல்லாம்;15 வயது இளைஞனாக மெலிந்த உருவினனாக நான் போய் எதிரே நின்றேன்.
அவர் சந்தேகத்துடன், "நீங்கள்தானா 'மாணவ நேசன்' நடத்துகிற கருணாநிதி" என்று கேட்டார். 'மாணவ நேசன்' என்பது நான் நடத்திய கையெழுத்து ஏடு. இப்போது கூட மாணவர்கள் பல இடங்களில் கையெழுத்து ஏடுகள் நடத்துகிறார்கள். கவிஞர் பாரதிதாசன், ஒருமுறை ஒரு மாணவர் தந்த கையெழுத்து ஏட்டைப் படித்து விட்டு, "கைராட்டையால் நாடு முன்னேறும் என்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ அவ்வளவு பைத்தியக்காரத்தனம் இந்தக் கையெழுத்துப் பத்திரிகையும்" என்று மதிப்புரை எழுதிக் கொடுத்தார்.
மாணவர்கள் நடத்தும் கையெழுத்து ஏட்டால் நாடு ஒரேயடியாக முன்னேறி விடும் என்று யாரும் கூறவில்லை. சிறுதுளி பெருவெள்ளம். பலர் சேர்ந்ததே நாடு. அந்த நாட்டின் எதிர்காலத்திற்குரியவர்கள் மாணவர்கள். அவர்கள் தங்கள் எண்ணங்களைச் செம்மைப் படுத்திக்கொள்ள மெருகேற்றிக்கொள்ளக் கையெழுத்துப் பிரதிகள் நல்ல வாய்ப்பு அளிக்கின்றன என்பதே என் நம்பிக்கை. இளமைப் பருவத்தில் எழுதுகின்றவைகளைப் பெரிய பத்திரிகைகள் எடுத்துக் கொள்வதில்லை.
அந்தப் பத்திரிகைக்கு எழுதுவது போன்ற தகுதியைக் கையெழுத்துப் பிரதியில் ஏற்படும் பயிற்சி தாராளமாகத் தருகிறது என்பேன். ஆனால் ஒன்று, எல்லோரும் கையெழுத்துப் பிரதி என்ற பெயரால் பொங்கல் மலர்போல ஒன்று தயாரித்து விடுகிறார்கள். நான் பள்ளியில் நடத்திய கையெழுத்து ஏடுகளை ஒரு சமயம் ஒருவர்தான் படிக்க முடியும். நான் நடத்திய ஏடு மாதத்திற்கு இரண்டு வெளியீடு. ஒவ்வொரு வெளியீட்டிலும் எட்டு பக்கங்கள். பிரதிகளோ ஐம்பதுக்கும் குறையாது.
ஐம்பது பிரதிகளையும் நானும் சில நண்பர்களும் மட்டுமே உட்கார்ந்து காப்பி எடுப்போம். டெம்மி பேப்பர் செலவை மட்டும் வசூல் செய்து கொள்வோம். உழைப்பும் கட்டுரைகளும் இனாம்! இந்த ரீதியில் 'மாணவ நேசன்' ஏழெட்டு மாதங்கள் நடை பெற்றது. இப்படி ஐம்பது பிரதிகள் கையாலேயே எழுதி வழங்குவது சிரமமாயிருக்கிறதே வேறு என்ன செய்யலாம் என்று சிந்தித்தபோது தான் 'முரசொலி' தோன்றியது. வாரப் பத்திரிகை மாதப் பத்திரிகை என்ற அளவிலே அல்ல.
துண்டு வெளியீடுகளாக! 'முரசொலி' துவங்குவதற்கு முன்னால் நான்கு மாதங்களுக்கு முன்புதான். கதர்ச் சட்டைக் கண்ணாடிக்காரர் என்னைச் சந்தித்ததாகும்! "மாணவர்களையெல்லாம் ஒன்றுபடுத்திச் சுதந்திரம், சமாதானம், சமத்துவம் ஆகியவைகளுக்காக அணி வகுத்துக் குரல் எழுப்ப வேண்டும். அதற்குப் பாசறையாக மாணவர் சம்மேளனம் என ஒன்று தோற்றுவிக்கப்பட்டிருந்தது. அதன் அமைப்பாளராக நீங்கள் இருந்து திருவாரூர்ப் பள்ளியில் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்."
என்று அவர் கேட்டுக் கொண்டார். அணிந்திருந்தது கதர்ச்சட்டையாயினும், நாட்டுத் தலைவர்களைப் பெருமையோடு பேசினாராயினும் அவர் காங்கிரஸ்காரரல்ல என்று தெளிவாகியது. திரை மறைவில் வந்தவர் கம்யூனிஸ்ட் என்பது எனக்கு அப்போது தெரியாது. சுதந்திரம் - சமாதானம் - சமத்துவம் என்ற வார்த்தைகள் ஒரு பதினைந்து வயது இளைஞனின் உள்ளத்தில் எவ்வளவு உணர்ச்சிகளை ஏற்றவல்லவை.! அதனால் மாணவர்கள் சம்மேளனத்தின் அமைப்பாளன் ஆனேன்.
இருநூறு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டார்கள். சம்மேளனம் காங்கிரஸ் சார்புடையது எனக்கருதி, காங்கிரஸ் மாணவர்களும் சேர்ந்தனர். இருநூறு பேரில் நூறு பேர் எக்கட்சியிலும் சேராத பொதுமாணவர்கள். சம்மேளனத்தின் போக்கு நம்மையும் சேர்த்து அடித்துச் செல்லும் போலிருந்தது. ஆழந் தெரியாமல் காலை விட்டு விட்டோம் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன்.
