நெஞ்சுக்கு நீதி
தமிழ் காக்கும் போர் முனை · 6 / 391
தமிழ் காக்கும் போர் முனை அஞ்சா நெஞ்சன் என்று தமிழர்களால் அழைக்கப்பட்ட பட்டுக்கோட்டை அழகிரிசாமி திருச்சியிலிருந்து தமிழர் படையொன்றை அணிவகுத்து சென்னை நோக்கிப் பயணம் நடத்தினார். அந்த அணிவகுப்பில் மூவலூர் மூதாட்டி ராமாமிர்தம் அம்மையார், மணவை திருமலைசாமி ஆகியோர் முக்கியமானவர்கள். அழகிரிசாமி, சுயமரியாதை இயக்கத்துச் சூறாவளிப் பேச்சாளர். தனக்கென எதுவும் விரும்பாமல், நாளெல்லாம் நாட்டுத் தொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.
பெரியார் பேச்சில் காணப்பட்ட அழுத்தம் திருத்தமான வாதமும்-அழகிரி பேச்சில் காணப்பட்ட வீரங்கொப்பளிக்கும் வரிகளும்- அண்ணா பேச்சின் அழகு தமிழும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. அழகிரிக்குக் கோடையிடி அழகிரி என்ற பெயரே உண்டு. வாட்ட சாட்டமான உருவம். வணங்காமுடி மன்னன் போன்ற நடை. எளிய வாழ்க்கை. அவர் தலைமையில் தமிழர் படை வருகிறது சென்னை நோக்கி என்பது அப்போது மிகப் புரட்சிகரமான செய்தி! மூவலூர் அம்மையார் சமுதாயப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல் வடிவில் பல நற்றொண்டுகளை ஆற்றியவர்.
விதவைத் திருமணங்கள் பலவற்றை நடத்தி வைத்துச் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களை நிறைவேற்றியவர். அந்த அம்மையார் தமிழர் படைக்கான உணவு முதலியவைகளை வழி நெடுகத் தயாரிக்கும் பணியினை ஏற்றுக் கொண்டார். நறுக்குத் தறித்தாற்போல் அரசியல் கருத்துக்களை எழுதும், 'நகரதூதன்,' என்ற வார ஏட்டுக்கு ஆசிரியர் மணவை திருமலைசாமி என்பார். 'பேனா நர்த்தனம்' என்ற தலைப்பில் அவர் எழுதும்போது உண்மையிலேயே அவரது பேனா நடனமே புரியும்!
அவரும் தமிழர் படைக்கு ஒரு தளபதியாகத் திகழ்ந்தார். திருச்சியிலிருந்து இருநூறு கல் தொலைவு நடந்தே சென்னைக்கு வரும் தமிழர் படைக்கு வழியெங்குமுள்ள இந்தி எதிர்ப்பாளர் வரவேற்புக்கள் நடத்தினர். இந்தியை ஆதரித்த காங்கிரஸ் நண்பர்கள் தமிழர் படைக்குப் பல தொல்லைகளைக் கொடுத்தனர். தடி கொண்டு தாக்கினர். கல் கொண்டு வீசினர். எதற்கும் கலங்காது தமிழர் படை ஊருக்கு ஊர் அதிகமாகப் பெருகிச் சென்னை நோக்கி வீர நடை போட்டது.
ஒரு கிராமத்துச் சாலையில் காங்கிரசார் செருப்புக்களைத் தோரணங்களாகக் கட்டி, தமிழர் படைக்கு வரவேற்புத் தருவதாக அவமானப்படுத்த முயன்றனர். அந்தத் தோரணங்களை அவிழ்த்து எறிய அந்த ஊரிலே உள்ள தமிழ் உணர்ச்சி பெற்றவர்கள் முனைந்தபோது அவர்களை அழகிரிசாமி, தடுத்து அந்தத் தோரணத்திற்கு முன் நின்று கொண்டு பேசத் தொடங்கினார். மக்கள் ஆயிரக் கணக்கில் கூடினர். அழகிரிசாமி நிறுத்தவில்லை. பேசிக்கொண்டேயிருந்தார்.
புலி உறுமியது! சிம்மம் கர்ச்சித்தது! கோடை இடி குமுறியது! அழகிரியின் பேச்சு இரண்டு மணி நேரத்தையும் கடந்தது. "தமிழுக்கும் தமிழனுக்கும் வர இருக்கும் களங்கத்தைத் துடைக்கப் போகிறோம். எங்களுக்குத் தமிழர்களே, நீங்கள் தரும் வரவேற்பு இதுதான். ஆகாயத்தில் தொங்கவிட்ட செருப்புக்களைத் தரையில் பரப்பியிருந்தாலாவது ஆளுக்கு ஒரு ஜோடி மாட்டிக் கொண்டு நடப்போமே," என்று அவர் முழங்கினார்.
மக்கள் வெள்ளம் ஆர்ப்பரித்தது. அந்தத் தோரணத்தை வெட்டியெறியக் கிளம்பியது. அழகிரி அவர்களைத் தடுத்து, "கட்டியவர்களே அவிழ்க்கட்டும்!" என்று கூறினார். அழகிரி பேச்சை நிறுத்தாதற்கு முன்பே, அந்தக் காங்கிரசார் ஓடி வந்து அழகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர்கள் கட்டிய தோரணத்தை அவர்களே அவிழ்த்து எறிந்தனர். அது மட்டுமல்ல; தமிழர் படைக்குத் தேநீர் விருந்தொன்று நடத்தி, அதன் பின்னர் வழியனுப்பி வைத்தனர்.
தமிழர் படை இருநூறு மைல் நீளத்திற்கு உள்ள சின்னஞ்சிறு கிராமங்களில் எல்லாம் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை விதைத்து வந்தது. மாணவர்களை எவ்வாறு இந்தி எதிர்ப்பு ஈர்த்தது என்பதற்கு நானே ஒரு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தேன். பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் பலரை இணைத்துச் சங்கங்கள் அமைப்பதில் எனக்குத் தனி ஆர்வம் உண்டு, சிறுவர் சீர்திருத்தச் சங்கம், இளைஞர் சங்கம் இப்படிப் பலப்பல! வாரந்தோறும் கூட்டங்கள், சிறப்புத் தலைப்புக்களில் சொற் பொழிவுகள்!
1938-ல் நாள்தோறும் மாலை நேரத்தில் மாணவர்கள் பலரை அணி வகுத்துத் திருவாரூர் வீதிகளில் ஊர்வலம் வருவேன். கையில் தமிழ்க் கொடி! ராஜாஜி கட்டாய இந்தி என்னும் கட்டாரியால் தமிழ்த் தாயைக் குத்த முற்படுவதுபோன்ற படம் அமைந்த ஒரு வண்டி! என் தலைமையில் அந்த ஊர்வலம்! நான் எழுதிய ஒரு பாடல்; மாணவர்கள் அனைவரும் சேர்ந்து ஒலிப்பர். "வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்! வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டி திருப்பிடுவோம்" இதுவே பாட்டின் பல்லவி.
அப்போது இந்தியை எதிர்த்து ஜெகதீசன் என்பவர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். அறுபது எழுபது நாட்களைக் கடந்து உண்ணாவிரதம் நீண்டது. அவரைப் பார்க்கப் பெரியார் சென்றார். பெரியாரின் பச்சைக்கல் மோதிரத்திடம் தனக்குள்ள இச்சையை உண்ணாவிரதி தெரிவித்தாராம். அன்றைக்கே பெரியார் உண்ணாவிரதம் போன்றவைகளில் தனக்கு நம்பிக்கையில்லை யென்று ஒரு கூட்டத்தில் அறிவித்துவிட்டார். மாணவ ஊர்வலத்தில் தினந்தோறும் என் கையில் இருந்த அந்த உண்ணாவிரதியின் படத்தை உடைத்து நொறுக்கி விட்டோம்.
அதற்கு முன்பே அவர் உண்ணாவிரதத்தையும் நிறுத்தி விட்டார். ஒருநாள், எங்கள் ஊர்வலத்தை எனது வகுப்பு இந்தி ஆசிரியர் பார்த்து விட்டார். என் கையிலிருந்த இந்தி எதிர்ப்பு முழககங்கள் அடங்கிய துண்டு அறிக்கையை அவரிடம் கொடுத்தேன். அதை அவர் வாங்கிக் கொண்டு பேசாமல் போய் விட்டார். மறுநாள் வகுப்பில் அதற்குப் பதில் காத்திருந்தது. இந்தி ஆசிரியரிடத்தில் துண்டு அறிக்கையைக் கொடுக்கும் போதும் அவர் எதிரே தமிழ்க் கொடியேந்தி, "இந்தி வீழ்க!
தமிழ் வாழ்க!" என முழங்கிய போதும் எனக்கு எந்தவிதமான அச்சமும் தோன்றவில்லை. என் ரத்த ஓட்டத்திலும் மூச்சிலும், "தமிழ் தமிழ்" என்றே உணர்வு பொங்கிக் கொண்டிருந்தது. அந்த உணர்வை வெறி என்றும் சிலர் கூறக் கூடும், பற்று வைப்பதற்குப் பெயர் வெறி என்றால் அந்தப் பொருள் சரியானதுதான்! எதனையும் மீறி நிற்பது தாய் மொழிப் பற்று என்பதற்கு மிகச்சிறந்த சான்று வேண்டுமானால், காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னை பெத்துநாயக்கன்பேட்டையில் உழைத்துக் கொண்டிருந்த திரு என்.
வி. நடராசன் அவர்கள், இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழ் காக்கும் இயக்கத்தில் ஈடுபட்டார் என்பதேயாகும். தன்மான இயக்கக் கருத்துக்களில் எதிர்ப்பு அணியில் இருந்த மறைமலை அடிகளார் போன்ற பெரும் தமிழ் அறிஞர்கள் எல்லாம் தன்மான இயக்கத் தலைவர் பெரியார் அவர்களுடன் இணைந்து இந்தியை எதிர்த்தது தமிழ்ப் பற்று மிகுதியால் அன்றோ? துடிக்கும் இதயத் துடிப்பெல்லாம் தமிழ்ப் பண் ஒலிக்கும் வயதும், ஆர்வமும் படைத்த நான், இந்தி எதிர்ப்புத் துண்டு அறிக்கையை இந்தி ஆசிரியர் கையிலே கொடுத்ததும் ஒரு புரட்சிகரமான செயல் என்றுதான் கருதினேன்.
வகுப்பறையில் உள்ள கரும் பலகையில் இந்திச் சொற்கள் சிலவற்றை அவர் எழுதினார். அவைகளை உச்சரிக்குமாறு எனக்கு ஆணையிட்டார். நான் எழுந்து நின்றேன். "ம்! படி பார்க்கலாம்?" என்றார். எனக்குப் புரிந்தால்தானே படிக்க முடியும்? அதனால் பேசாமல் நின்றேன், அருகே வந்தார். வகுப்பறை எதையோ ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஆசிரியர் என் காதைத் திருகினார். "படிக்க முடியுமா? முடியாதா?"
என்று உறுமினார். "புரியவில்லை" என்றேன். கன்னத்தில் ஓங்கி அறைந்தார். வகுப்பறை சுழல்வது போன்ற உணர்ச்சியில் தலை சுற்றியது எனக்கு. சமாளித்துக் கொண்டு பலகையில் உட்கார்ந்து விட்டேன். ஆசிரியர் ஏன் அடித்தார் என்பது எனக்குப் புரிந்து விட்டது. "முதல் நாள் ஊர்வலத்தின்போது நான் செய்ததும் சரி தான்! இப்போது அவர் செய்ததும் சரிதான்."
இவ்வாறு என் நெஞ்சு எனக்கு நீதி வழங்கியது. ஆசிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்தார்கள். மாணவர்களைத் திரட்டி இந்தி ஆசிரியர்க்கு எதிராக வேலை நிறுத்தம் போன்ற கிளர்ச்சிகளைச் செய்வேன் என்று! என் மூளை அப்படி வேலை செய்யவில்லை. இந்தி ஆசிரியர் அவராகவே இரண்டு மூன்று நாள் உயர்நிலைப் பள்ளிக்கு வராமல் இருந்து விட்டார். திருவாரூர் உயர்நிலைப்பள்ளி வாயிற்புறத்திலும் தமிழ் இயக்கத்தார் நாள்தோறும் மறியல் அறப்போர் நடத்தினார்கள்.
நான் இந்தி வகுப்புக்களுக்குப் போவதை நிறுத்திக் கொண்டேன். இந்தி ஆசிரியர் என்னை அடித்து முப்பத்து ஆறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. அதே இந்தி ஆசிரியர் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னை மயிலையில் நடந்த ஓமியோபதி மாநாட்டுக்கு என்னை அழைத்துச் செல்ல வெளியே காத்துக் கொண்டிருந்தார். இப்போது அவர் இந்தி ஆசிரியர் அல்ல! தமிழ் நாட்டில் பல ஓமியோபதி மருத்துவர்களைத் தயாரித்துள்ள பெரிய நிறுவனத்தின் தலைமையாளர்.
முப்பத்து ஆறு ஆண்டுகட்கு முன் தமிழகத்தில் மூண்டெழுந்த மொழிப் போராட்டத்தில் முளைத்தெழுந்தவன் நான் என்பதை எண்ணிடும்போது என்னையறியாமல் ஒரு பீடு நடையும் பெருமித நோக்கும் எங்கிருந்தோ வந்து சேர்கிறது! அந்தத் தமிழ் காக்கும் போர் முனையின் தலைப்பிலேதான் தாளமுத்து, நடராசன் என்ற இரு தமிழ்க் காளையர் சிறைச் சாலையில் பிணமாயினர். "இன உணர்ச்சி ஊற்றெடுக்க, நமது தியாகம் தெரிய, உண்மை வெளிப்பட, உழைப்பு பலன் அளிக்க, கட்டாய இந்தி நல் வாய்ப்பாக அமைந்தது.
எத்தனை தாய்மார்கள் தமிழுக்காகச் சிறை புகத் தயார் என்பதை நமது போராட்டம் எடுத்துக் காட்டிவிட்டது. தாளமுத்து நடராசன் போல் தமது உயிரையும் தரும் மணிகளின் ஒளி தெரிய அது உதவிற்று" என்று அண்ணா அவர்கள் கட்டாய இந்தி பற்றிக் கருத்தறிவித்தார்கள்.
தமிழகத்தில் மொழிப் போர் நடந்து கொண்டிருந்த போது, வடபுலத்தில் இந்து முஸ்லீம் கலவரங்கள் பரவிடத் தொடங்கின. கிழக்கு வங்கத்தில் சுற்றுப் பயணம் செய்த சுபாஷ் சந்திரபோஸ் முஸ்லீம் மக்களின் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியவரானார். முகம்மதலி ஜின்னா, முஸ்லீம் லீக் சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு அறைகூவல் விடுத்தார். அதனை, 'யுத்தப் பிரகடனம்' என்று காந்தியார் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் அநீதியையும் அவர்கள் படும் இன்னல்களையும் முஸ்லீம் லீக் சுட்டிக் காட்டியது. தமிழ் நாட்டுப் பள்ளிகளில் கட்டாய இந்தி வைக்கப்பட்டு இருப்பதை அகில இந்திய முஸ்லீம் லீக் கண்டித்துக் குரல் எழுப்பியது. அதன் தொடர்பாக இந்தி எதிர்ப்பாளர்கள் வரிசையில் தமிழ் நாட்டில் உள்ள முஸ்லீம் லீக் தலைவர்களும் நடை போட்டார்கள். தமிழ்க் கொடியும். பச்சைப் பிறைக் கொடியும் சேர்ந்து பறந்திட இந்தி எதிர்ப்பு மாநாடுகள் நடைபெற்றன.
