நெஞ்சுக்கு நீதி
நீதிக் கட்சியில் பல மாற்றங்கள் · 5 / 391
நீதிக் கட்சியில் பல மாற்றங்கள் -ல் நீதிக் கட்சித் தலைவர் முனுசாமி நாயுடு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் தொடர்பாகத் தஞ்சையில் கூடிய மாநாட்டில் பொப்பிலி அரசர் கட்சியின் தலைவராகவும் முறைப்படி முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். மூன்று ஆண்டுக் காலமே இந்த மந்திரி சபை நடைபெற வேண்டுமெனினும் சைமன் கமிஷனுடைய அறிக்கை வெளிவரக் காலம் தாழ்ந்ததால் இந்த மந்திரி சபையின் உயிர் ஏழு ஆண்டுகள் நீடித்தது.
அந்தக் காலத்தில்தான் செட்டி நாட்டரசர் முத்தையா செட்டியாரும் தஞ்சைத் தங்கம், தமிழ்ச் சிங்கம். சர் ஏ.டி. பன்னீர் செல்வமும் இடையே அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். 1936-ல் சைமன் கமிஷன் வெளியிட்ட அறிக்கையின்படி ஏற்பட்ட சீர்திருத்தத்தின்படி நடந்த பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி அடியோடு வீழ்ச்சி யடைந்து விட்டது. அந்த ஆண்டில் தான் நான் ஐந்தாம் வகுப்பில் உயர்நிலைப் பள்ளியில் பனகல் அரசருடைய வரலாற்றைத் தலைகீழ்ப் பாடம் செய்து ஆசிரியரின் பாராட்டைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன்.
1937-ல்தான் காங்கிரஸ் மந்திரிசபை முதன் முதலாகச் சென்னை மாநிலத்தில் பதவி ஏற்றுக் கொண்டது. இந்தப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நேரிடையாகப் பங்கு கொண்டதால் சுயராஜ்யக் கட்சி மறைந்து ஒழிந்தது. காங்கிரஸ் அமைச்சரவை ராஜாஜி அவர்களை முதல்வராகக் கொண்டு அமைக்கப்பட்டது. ராஜாஜி தமிழக முதல்வரானதும் இந்தியைப் பள்ளிக்கூடங்களில் கட்டாயப் பாடமாக்கினார். 'இந்திகட்டாயம்' என்று சட்டம் பிறந்தவுடன் அதனை முன்னாலே அறிந்து எதிர்ப்புணர்ச்சியைக் காட்டி வந்த தமிழ்ப் பற்றுடையோரும் புலவர் பெருமக்களும் வீறிட்டெழுந்தனர்.
கிளர்ச்சிகள் நடத்தினர். இந்தி வேண்டாமென்று முடிவுகள் எடுத்து அரசுக்கு அனுப்பினர். செந்தீயென எழும் தங்கள் கண்டனங்களைச் செய்தித் தாள்களின் வாயிலாக வெளியிட்டுக் குவித்தனர். தமிழகத்தின் நகரங்கள், பட்டிதொட்டிகள், சிற்றூர்கள் எங்கணும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி! எதிர்ப்புக் கண்ட ராஜாஜி மேலும் வன்மையாக இந்தியைத் திணிக்கத் தொடங்கினார். காங்கிரசிலே உள்ள தமிழர்கள் கட்டாய இந்தியை உள்ளூர விரும்பவில்லை.
அதற்கு நல்ல எடுத்துக் காட்டாக நாவலர் சோமசுந்தர பாரதியார் காங்கிரசை விட்டு விலகி இந்தி எதிர்ப்புக்குச் சிம்மக் குரல் கொடுக்கத் தொடங்கினார். சட்ட மன்றத்திலே பேசிய ராஜாஜி, "இந்தியை எதிர்ப்பவர்கள் யார்? இரண்டே இரண்டு பேர்தான்! ஒருவர் ராமசாமி நாயக்கர், மற்றொருவர் பசுமலை பாரதியார்" என்றார்.
எதிர் வரிசையில் அமர்ந்திருந்த பன்னீர் செல்வம் உடன் எழுந்து, "எதிர்ப்பவர் இருவர். ஆனால் இந்தியைக் கொண்டு வருபவர் நீங்கள் ஒருவர்தான். ஆகவே, பெரும்பான்மை எதிர்ப்பின் பக்கம்தான்," என்று பதில் கூறினார். அந்தப் பதில் உரை கேட்டுத் தமிழகமே பன்னீர் செல்வத்தைப் பாராட்டி மகிழ்ந்தது. இந்தி எதிர்ப்பில் பல்லாவரத்தார் பழத்தமிழ்ப் பேச்சாளர் பண்பு மிக்க மறைமலையடிகளாரும் குதித்திட்டார். "அந்தோ! வடமொழி வந்து தமிழைப் பெரிதும் வீழச் செய்து விட்டதே!
அதைக் குற்றுயிராக்கி விட்டதே ஆங்கிலம்! இனி இந்தி வந்தால் தமிழ் அழிதல் திண்ணமே. அய்யகோ! என் செய்குவோம்" என்று ஏங்கிய மறைமலையடிகளாருக்கு இந்தி எதிர்ப்பு இயக்கம் பெரும் ஆறுதலை அளித்தது. 1938-ம் ஆண்டு சூன் திங்கள் 3-ம் நாள் சைதாப்பேட்டையில் கூடிய இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு மறைமலையடிகள் தலைமை தாங்கினார். ஆம்! நான் பிறந்த சூன் திங்கள் 3-ம் நாளில் தமிழ் காக்க இந்தி எதிர்ப்பு முதல் போருக்கு மக்களைத் திரட்டி யெழுப்பும் மாநாட்டில் மறைமலையடிகளார் தலைமை தாங்கினார் என்பதை எண்ணி எண்ணி இறும்பூது எய்துகின்றேன்.
1938-ல் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போருக்குப் பெரியார் தலைமை தாங்கினார். அறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், நாவலர் சோமசுந்தர பாரதியார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், மற்றும் புலவர் பெருமக்கள், தமிழ்ச் சான்றோர்கள் இந்தி எதிர்ப்புப் படையில் முன்வரிசையில் அணி வகுத்து நின்றனர். இந்தியைக் கட்டாயமாக வைத்துள்ள பள்ளிகளின் வாயில்களில் மறியல் நடைபெற்று, ஆடவரும் பெண்டிருமாய் ஆயிரம் பேருக்கு மேல் சிறைக் கோட்டம் சென்றனர்.
தாளமுத்து, நடராசன் என்ற இரு தமிழ் வீரர்கள் இந்தியை எதிர்த்துச் சிறை புகுந்து, சிறைக் கோட்டத்தில் பிணமாயினர். தமிழன் மொழிப் போராட்டத்தின் கொடியை அந்த வீரர்களின் குருதியிலே தோய்த்து விண்முட்டப் பறக்கவிட்டான். 1924-க்கும் 1938'க்கும் இடையே 14 ஆண்டுகள். பள்ளியில் நான் இரண்டாம் படிவத்திற்குச் சென்று விட்டேன். இந்த ஆண்டுக் காலத்தில் நாட்டில் எத்தனை யெத்தனை நிகழ்ச்சிகள்! 1938'ல்தான் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் பண்டித நேரு ஓய்விற்காக ஐரோப்பா சென்று விட்டார். அந்த ஆண்டு முழுவதும் நேரு இந்தியாவில் இல்லை! நீதிக் கட்சியின் உதவியோடு சென்னை மாநிலத்தில் முதலமைச்சராக ஆட்சி நடத்திய டாக்டர் சுப்பராயன் 1938-ல் ராஜாஜி மந்திரி சபையில் கல்வி அமைச்சராக இருந்தார். அவரது அறையில்தான் 1938 பெப்ரவரி 25-ம் நாள் தமிழ் நாட்டில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்ற முடிவு எடுக்கப்பட்டது.
அடுத்த இரண்டு நாட்களுக்கெல்லாம் பெப்ரவரி 27-ல் காஞ்சீபுரத்தில் கான்பகதூர் கலிபுல்லா சாகிப் எம்.எல்.ஏ அவர்களால் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பிற்கான கொடி உயர்த்தப்பட்டது. இந்த மாநாட்டில்தான் சோமசுந்தர பாரதியார் இந்தியை எதிர்த்துக் குரல் கொடுத்தார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்தைப் பெரியார் திறந்து வைத்ததும் இந்த மாநாட்டில்தான். 'பொதுமக்கள் பணத்தைக் கொண்ட சர்க்கார் வரவு செலவுத் திட்டத்தில் அவசியமற்ற இந்தி மொழிக்காகப் பணம் செலவழிக்கக் கூடாது' என்று இந்த மாநாட்டில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தை ஆதரித்துத் தமிழவேள் உமாமகேஸ்வரன் பிள்ளையும், சிதம்பரம் என். தண்டபாணியும் முழக்கமிட்டனர். தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் யார் தெரியுமா? அவர்தான் பேரறிஞர் அண்ணா! அன்றைக்கு சி.என். அண்ணாதுரை எம்.ஏ. தமிழகம் மொழிப் போர்க்களமான இந்த ஆண்டில்தான் துருக்கியில் கமால் பாட்சா மறைந்தார்! செக்கோஸ்லோவாக்கியாவை ஹிட்லர் - விழுங்கிய ஆண்டும், இரண்டாம் உலகப் போருக்கு முதலடி வைத்த ஆண்டும் இந்த ஆண்டுதான்.
ரஷியாவில் பெருத்த களையெடுப்பு நடத்தி மனிதர்களை ஆயிரக் கணக்கில் சைபீரியாவுக்கும், மற்ற இடங்களுக்கும் ஸ்டாலின் அனுப்பிக் கொண்டிருந்ததும் இந்த ஆண்டு தான். காந்தி அடிகளின் அகிம்சைக் கொள்கைகள் காங்கிரஸ் தலைவர் சுபாஷ் போசின் கொள்கைகளுடன் கடுமையாகப் போரிட்ட காலமும் இதுதான்! "நீங்கள் சொல்வதை எழுத்துக்கு எழுத்து என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. ஆனால் சொல்வதற்குத் துணிச்சலாக முன்வரும் தங்களின் கருத்துக்கள் எந்த விதத்திலும் தடைப்படக் கூடாது என்பதற்காக என் உயிரையும் கொடுத்துப் போராடுவேன்" என்று வால்டேர் சொன்னது போல், காந்தியடிகள் சொன்னது எதையும் ஒப்புக் கொள்ளாமல், ஆனால் அவருடைய நலம், புகழ், தொண்டு, மரியாதை ஆகியவைகளுக்கு ஊறு தேடுவனவாக எது தெரிந்தாலும் அதனை மிக மூர்க்கமாக, சுபாஷ் சந்திர போஸ் எதிர்த்து வந்த ஆண்டு அது!
அகிம்சை-ஜனநாயகம்-தனிமனித உரிமை-சுயாட்சி-பாதுகாப்பான எல்லைக் கோடுகள்-இனத்தின் பெருமை-தாய்மொழியின் அருமை- நேர்மையான அரசியல் ஆகிய அத்தனையும் கடுமையான அறைகூவலுக்கு, அகில உலகம் முழுவதும் ஆளான ஆண்டு அது! பெரியார் இந்தி எதிர்ப்புப் போருக்குத் தலைமையேற்றது குறித்து எத்தனையோ கருத்துக்கள் வெளியிடப்பட்டன. "அவருக்குத் தமிழ் வளர்ச்சி முன்னேற்றத்திற்காக இந்தியை எதிர்க்க வேண்டுமென்று எண்ணமில்லை.
தமிழர்களைப்பற்றி அவருக்குக் கவலையில்லை. காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்ற தன் ஆர்வம் நிறைந்த குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள இந்தி எதிர்ப்பை ஒரு கருவியாகக் கொண்டுள்ளார்," என்றெல்லாம் எழுதப்பட்டது. பேசப்பட்டது. இந்தி எதிர்ப்புத் தலைவராயிருந்த பெரியார் அந்தக் காலத்தில் தமிழர் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். புலமை வாய்ந்த சாமி சிதம்பரனார் அவர்கள் 'தமிழர் தலைவர்' எனும் பெரும் நூலையே பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறாகத் நீட்டினார்.
இந்தி எதிர்ப்புப் பிரச்சாரத்தில் அண்ணாதுரை என்ற ஒரு புதிய பெயர் தமிழ்நாட்டு மூலைமுடுக்கெல்லாம் எதிரொலிக்கத் தொடங்கியது. "எப்படிப் பேசுகிறார் மனுஷன்!" "சங்கீதம் கேட்பது போல் இருக்கிறதே." "ஆட்ட பாட்டமில்லாமல் அசைவில்லாமல் மெல்லச் சுழன்று மேடையிலே தமிழ்ச் சொற்களை மாதுளை முத்துக்கள் போல் உதிர்க்கிறாரே!"
"என்ன உவமை! என்ன அழகு!" "குள்ளமான உருவம்! கள்ளமில்லாப் பார்வை! மடை திறந்தாற்போல் பேச்சு." "ஆணித்தரமான வாதங்கள். யாரும் மறுக்கவொண்ணாத புள்ளி விவரங்கள். அடடா! பேச்சா அது! குற்றாலத்து அருவி! கொஞ்சு தமிழ்ச் சிந்து!" இப்படியெல்லாம் அவர் பேச்சுக்குப் படித்தவர் மத்தியிலும், பாமரர் மத்தியிலும் பாராட்டுரைகள் குவிந்தன.
