உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
நெஞ்சுக்கு நீதி/என்னுடைய அரசியல் அரிச்சுவடி
தன்வரலாறு (நெஞ்சுக்கு நீதி)

நெஞ்சுக்கு நீதி

என்னுடைய அரசியல் அரிச்சுவடி · 4 / 391

என்னுடைய அரசியல் அரிச்சுவடி -ம் ஆண்டு, திருவாரூர் உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் கர்ஸ்தூரி ஐயங்கார். அவர் தனது அறையில் உட்கார்ந்து வேலைகளைச் கவனித்துக் கொண்டிருக்கிறார். பன்னிரண்டு வயதுள்ள ஒரு பையன் திடீரென்று அவரது அறையினுள்ளே ஓடுகிறான். வாயிலில் 'பங்கா' இழுத்துக் கொண்டிருந்த 'பியூன்' தடுத்தும் கேட்கவில்லை. தலைமை ஆசிரியர் அந்த இளைஞனைக் கண்டு திகைக்கிறார். "யார்? யாரப்பா? என்ன வேணும் நோக்கு?"

என்று கேட்டபடி எழுகிறார். "சார். என்னை எப்படியாவது இந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்" என்கிறான் பையன். "எந்த வகுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும்? எதில் சேருவதானாலும் பரீட்சை எழுதியாக வேண்டும்." "பரீட்சை எல்லாம் எழுதிவிட்டேன் சார். முதலில் இரண்டாம் படிவப் பரீட்சை எழுதினேன். பிறகு முதல் படிவப் பரீட்சை எழுதினேன். இப்போது ஐந்தாம் வகுப்பில்கூட எனக்கு இடமில்லை என்கிறார்கள்."

"ஏன் இப்படி மேலேயிருந்து கீழே எழுதிக் கொண்டு வந்தாய்?" "என் கிராமத்து ஆசிரியர் என்னை இரண்டாம் படிவத்தில் சேர்ப்பதாக உறுதியளித்து அழைத்து வந்தார். அதை நம்பி என் தந்தையும் வந்தார். ஆனால் கிராம ஆசிரியர் அளித்த பயிற்சி அப்படி!"

"அதற்கு நான் என்ன செய்வது தம்பி?" உயர் நிலைப்பள்ளியில் சேராமல் ஊருக்குத் திரும்பினால், எல்லாரும் கேலி செய்வார்கள். எப்படியாவது ஐந்தாம் வகுப்பில் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்." "இடமில்லை என்று சொன்ன பிறகு எப்படியப்பா முடியும்? முடியாதப்பா முடியாது!"

"முடியாதா? இதோ உங்கள் கண் முன்னாலேயே எதிரே உள்ள தெப்பக்குளத்தில் விழுந்து சாகப்போகிறேன்!" இதைச் சொல்லியபடி பையன் கண்கலங்க நின்றான். தலைமையாசிரியருக்கு ஒன்றும் புரியவில்லை. அவருடைய நினைவில் எதிரேயுள்ள கமலாலயம் என்ற புகழ்பெற்ற தெப்பக்குளம் சுழன்றது. கோயில் ஐந்து வேலி குளம் ஐந்து வேலி என்று பாராட்டப்பெறும் திருக்குளம் அது. அதன் பாசி பிடித்த படிக்கட்டுகளில் வழுக்கி விழுத்து எத்தனையோ பேர் முழுகிப் போயிருக்கிறார்கள்.

வேண்டுமென்றே பலர் அந்தக் குளத்தில் விழுந்து தங்கள் உயிரைப் போக்கிக் கொண்டுமிருக்கிறார்கள். அப்படிப்பட்ட குளத்தைப் பற்றிப் பையன் சொன்னதும் தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்துதான் போனார். சிறிது யோசித்தார். பிறகு பையனைத் தட்டிக் கொடுத்தார். ஐந்தாம் வகுப்பில் அவனுக்கு இடம் கிடைத்து விட்டது. 'வெற்றி' என்றபடி வெளியே ஓடி வந்தான்.

ஆசையோடு நின்று கொண்டிருந்த அவனது அருமைத் தந்தையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கூத்தாடினான். ஐந்தாம் வகுப்பில் முதன்மையான மார்க்குகள் பெற்று அந்த ஆண்டு. அந்தப் பையன் வெற்றி பெற்றான். அந்தப் பையன் யார் என்று புரிந்து கொண்டிருப்பீர்கள். நானே தான்! என்னுடைய உயர்நிலைப்பள்ளி வாழ்க்கையின் ஒரு தொடக்கச் சம்பவம்தான் அது. ஐந்தாம் வகுப்பில் 'பனகல் அரசர்' என்ற தலைப்புள்ள புத்தகம் துணைப்பாடக் கட்டுரையாக எங்களுக்கு வைக்கப்பட்டிருந்தது.

ஏறத்தாழ ஐம்பது பக்கங்கள் இருக்கும். வகுப்பிலே நான் ஒருவன்தான் அந்தச் சிறு நூல் முழுவதையும் அப்படியே மனப்பாடம் செய்து சொல்வேன். அந்தப் 'பனகல் அரசர்' என்ற புத்தகம் தான் எனக்கு அரசியல் அரிச்சுவடியாகக் கூட அமைந்தது. திராவிடப் பெருங்குடி மக்களுக்குத் தலைமை கொண்டு அவர்களது தளையகற்றப் பெரும் பணியாற்றி அரசியல், சமுதாயப் பொருளாதாரத் துறைகளில் அவர்களுக்கு இடமளிக்க சர். பி. தியாகராயர், டாக்டர் டி.எம்.

நாயர், பனகல் அரசர், டாக்டர் நடேச முதலியார் ஆகியோர் ஒன்று கூடி 1916-ம் ஆண்டு நவம்பர் திங்கள் சென்னையில் 'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்' எனும் பெயரால் ஓர் அரசியல் கட்சியைத் தோற்றுவித்தனர். அந்தக் சுட்சியின் கொள்கைகளை வெளியிடவும், பரப்பவும், டாக்டர் நாயரை ஆசிரியராகக் கொண்டு "ஜஸ்டிஸ்" என்ற பெயருடன் ஓர் ஆங்கில நாளிதழும், பக்தவச்சலம் பிள்ளை என்பவரை ஆசிரியராகக் கொண்டு "திராவிடன்" என்னும் தமிழ் நாளிதழும், ஏ.

சி. பார்த்தசாரதி நாயுடுவை ஆசிரியராகக் கொண்டு "ஆந்திரப் பிரகாசினி" எனும் தெலுங்கு இதழும் தொடங்கப் பெற்றன. மெல்ல மெல்ல ஆங்கிலப் பத்திரிகையின் பெயரிலேயே கட்சியின் பெயரும் 'ஜஸ்டிஸ்' கட்சி என்று அழைக்கப்படும் நிலை பெற்று விட்டது. இந்திய வைஸ்ராய் செம்ஸ்ஃபோர்டு பிரபுவும், இந்தியா மந்திரி மாண்டேகு பிரபுவும், 1917-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 31-ம் நாள் சென்னை வந்தபோது ஜஸ்டிஸ் கட்சியின் தலைவர்கள் திராவிடர்களின் நிலையை விளக்கி ஓர் அறிக்கையை முன் வைத்தனர்.

அப்போது நடந்த "ஹோம்ரூல்" இயக்கத்தின் திட்டங்களைவிட ஜஸ்டிஸ் கட்சியினர் விடுத்த அறிக்கையே திராவிட சமுதாயத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்தியது. பின்னடைந்த, தாழ்த்தப்பட்ட சமுதாயங்களின் அவல நிலையை அந்த அறிக்கைதான் விளக்கியது. இந்த அறிக்கைக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட மக்கள் ஜஸ்டிஸ் கட்சி என்ற நீதிக் கட்சியில் இணைந்து செயல் புரிந்தனர். என். சிவராஜ், எம். சி. ராஜா, இரட்டைமலை சீனிவாசன், போன்ற பெருந்தலைவர்கள் எல்லாம் நீதிக் கட்சியின் மூலமாக நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் ஒளியேற்றிட முன்வந்தனர்.

1919-ம் ஆண்டு சூலைத் திங்கள் 17-ம் நாள் டாக்டர் நாயர் லண்டன் மாநகரத்தில் மறைவு எய்தினார். இந்த இழப்பால் நீதிக்கட்சி பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது. 1920 நவம்பர் 2-ம் நாள் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தலை நடத்தும்படி மாண்டேகு-செம்ஸ் ஃபோர்டு சீர்திருத்தம் கூறியது. அந்தத் தேர்தலில் கலந்து கொள்வது என்று நீதிக்கட்சி முடிவு செய்தது. அன்னிபெசண்ட் அம்மையார் நடத்திய 'ஹோம்ரூல்' இயக்கம் நீதிக் கட்சியுடன் எதிர்த்துப் போட்டியிட்டது.

காந்தியடிகள் காங்கிரஸைத் தேர்தலில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை. அப்போதைய சென்னை மாநிலத் தேர்தலில் நீதிக் கட்சி மிகப் பெரும்பான்மையான இடங்களைப் பெற்றது. கட்சித் தலைவரான தியாகராயரை அழைத்து மந்திரி சபை அமைக்குமாறு மாநில கவர்னர் வெலிங்டன் பிரபு கேட்டுக் கொண்டார். தியாகராயர் தனக்கு அமைச்சர் பதவி வேண்டாமெனக் கூறிவிட்டு ஏ. சுப்பராயலு ரெட்டியாரை முதல் மந்திரியாகவும், பனகல் அரசரை இரண்டாவது மந்திரியாகவும், சர்.

கே. வி. ரெட்டியாரை மூன்றாவது மந்திரியாகவும் நியமித்தார். சர். பி. ராசகோபாலச்சாரியார் சட்டசயைத் தலைவராக கவர்னரால் நியமிக்கப்பட்டார். இதுதான் சென்னையில் முதன் முதல் தோன்றிய தமிழர்களின் மந்திரி சபை, இந்த மாநில சுய ஆட்சிச் சட்ட மன்றம் 1921-ம் ஆண்டு சனவரித் திங்கள் 12-ம் நாள் துவக்கி வைக்கப்பட்டது. அந்த ஆண்டே முதல் மந்திரி சுப்பராயலு இயற்கை எய்தி விட்டதால் பனகல் அரசர் முதன் மந்திரியாகவும், சர்.

கே. வி. ரெட்டி, சர்.ஏ.பி. பாத்ரோ ஆகியோர் துணை மந்திரிகளாகவும் பதவியேற்றனர். பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் திராவிடர்களுக்காக உருவாக்கப்பட்ட சாதனைகளைச் சொல்வதுதான் எனக்கு ஐந்தாம் வகுப்பில் வைக்கப்பட்ட 'பனகல் அரசர்' என்ற சிறு நூலாகும். நீதிக்கட்சி சென்னை மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த போது சென்னையில் நடைபெற்ற மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஆறு தொழிலாளர் உயிரிழந்தனர். தொழிற்சங்கத் தலைவர்களான திரு.வி.க., பி.

பி. வாடியா, சக்கரைச் செட்டியார், நடேச நாயக்கர். இ.எல். அய்யர் ஆகிய ஐவரையும் நாடு கடத்தும்படி கவர்னர் லார்டு வெலிங்டன் ஓர் அவசர ஆணை பிறப்பித்தார். இது கண்ட நீதிக் கட்சித் தலைவர் சர். பி. தியாகராயர் கொதித்தெழுந்தார். தொழிற் சங்கத் தலைவர்களை நாடு கடத்தும் உத்தரவை கவர்னர் திரும்பப் பெற வேண்டும் என்றும் இல்லையேல் நீதிக் கட்சி மந்திரி சபை பதவி விலகும் என்றும் முடிவெடுத்து, இதனை கவர்னருக்கு அறிவித்ததோடு, மந்திரிகளின் பதவி விலகல் கடிதத்தையும் கவர்னர் கையிலே கொடுத்தார்.

நீதிக் கட்சியின் போராட்டத்தையும் நாட்டில் தோன்றிய கொந்தளிப்பையும் கண்டு லார்டு வெலிங்டன் தொழிற்சங்கத் தலைவர்களை நாடு கடத்தும் ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற்றார். 1923-ம் ஆண்டு நவம்பரில் இரண்டாவது பொதுத் தேர்தல் வந்தது. இதிலும் நீதிக் கட்சியே வெற்றி பெற்றது. பனகல் அரசரை முதல்வராகக் கொண்டும், சிவஞானம் பிள்ளை, ஏ.பி. பாத்ரோ ஆகிய இருவரையும் துணை அமைச்சர்களாகக் கொண்டும் அமைச்சரவை உருவாக்கப்பட்டது.

பேராசிரியர் எம்.ரத்தினசாமி சட்டசபைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். மூன்றாவது பொதுத் தேர்தலுக்கு முன்பே 1925-ம் ஆண்டு, சூன் திங்கள் 29-ம் நாள் திராவிடர்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த தியாகராயர் இயற்கையின் மடியில் நீங்காத் துயில் கொண்டார். அதன் பின்னர் பனகல் அரசர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். 1926-ம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் பொதுத் தேர்தலில் எஸ். சீனிவாச ஐயங்கார் தலைமையில் சுயாட்சிக் கட்சி என்னும் பெயரில் காங்கிரஸ் கட்சி நீதிக் கட்சியை எதிர்த்தது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வென்றது. ஆனால் மந்திரி சபை அமைக்க அது முன் வரவில்லை. பெரும்பான்மையற்ற நிலையில் பிறர் உதவியுடன் மந்திரி சபை அமைக்க பனகல் அரசரும் மறுத்து விட்டார். எனவே டாக்டர் சுப்பராயனுடைய மந்திரி சபை அமைந்தது. மாநிலங்களுக்கு முழு சுயாட்சி தரப்பட வேண்டும் என்று ஆங்கிலேய அரசாங்கத்தை வற்புறுத்தும் தீர்மானம் ஒன்றைப் பனகல் அரசர் தலைமையில் நீதிக் கட்சி நிறைவேற்றியது. ஆனால் கட்சிக்கும் நாட்டிற்கும் பேரிழப்பாக 1928-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் நாள் பனகல் அரசர் உயிர் துறந்தார்.

இவரது பிரிவால் நாடு கண்ணீர் வடித்தது. நாயரும், தியாகராயரும், பனகல் அரசரும் வரிசையாக மறைந்து விட்டதால் நீதிக்கட்சி கலகலத்து நின்றது. பனகல் அரசருடைய காலத்தில்தான் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் காங்கிரசை வளர்க்கும் பெரும் தூணாய் இருந்த தந்தை பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்கள் 1926-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். 'குடியரசு' என்னும் வார ஏட்டின் மூலம் பகுத்தறிவுச் சுடர் விடும் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் வெளி வந்தன.

ப. ஜீவானந்தம், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, சௌந்திரபாண்டியன், குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார், சிங்காரவேலர், கைவல்யசாமி, எஸ். ராமநாதன். போன்ற பலர் பெரியாருக்குத் துணையாக நின்று சுயமரியாதைக் கருத்துக்களைச் சூறாவளி வேகத்தில் தமிழகத்தில் பரப்பி வந்தனர். 1930-ம் ஆண்டில் சென்னையில் 'சுயமரியாதை இளைஞர் கழகம்' ஒன்று தொடங்கப் பெற்றது. அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்த அண்ணா அவர்கள் இந்த இளைஞர் மன்றத்தில் வாரந்தோறும் சொற்போர் பட்டியலில் இடம் பெற்றுக் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினார்.

1930-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நீதிக்கட்சி மீண்டும் வெற்றி பெற்று, திவான் பகதூர் முனுசாமி நாயுடு தலைமையில் பி.டி. இராசன், குமாரசாமி ரெட்டியார் இருவரையும் துணை மந்திரிகளாகக் கொண்ட அமைச்சரவை அமைக்கப் பெற்றது இந்தச் சமயத்தில்தான் பெரியார் அவர்கள் தமிழர்களின் அரசியல் முன்னேற்றம் கருதி ஒரு திட்டத்தைத் தயாரித்து அதை நீதிக் கட்சி ஒப்புக் கொள்ள வேண்டுமென்று நிபந்தனை விதித்தார். அதனை அந்தக் கட்சியும் ஒப்புக் கொண்டதால் பெரியார் நீதிகட்சியுடன் இணைந்து பணிபுரியத் தலைப்பட்டார்.