நெஞ்சுக்கு நீதி
"சிவாய நம! ஓம் நமசிவாய" · 3 / 391
"சிவாய நம! ஓம் நமசிவாய" வழக்கமாக வைதிகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய சடங்குகள் அத்தனையும் என் பெற்றோர்கள் ஒன்று விடாமல் எனக்குச் செய்தார்கள். காதணி விழா மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. அதைப் போலவே 'வித்யாரம்பம்' என்ற பெயரில் ஆடம்பரமாகப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டேன். முடி இறக்குதல், பிரார்த்தனை என்ற பேரால் பல கோவில்களுக்கு என் தலை முடி காணிக்கையாக்கப்பட்டது.
முடி முளைக்க வேண்டியதுதான்; உடலே ஒரு கோயிலுக்குப் பிரார்த்தனை. என் தலையை மழித்துச் சந்தனத்தை அப்பிவிடுவார்கள். இப்போதுகூட நினைத்தால் சிரிப்பு வருகிறது. கனியாகுரிச்சி மாரியம்மன் கோயிலுக்கு எனக்கு முடியிறக்குவதாகப் பிரார்த்தனை செய்து கொண்டார்கள். ஆனால் குறிப்பிட்ட நல்ல நாளில் அந்த ஊருக்குப் போவதற்கான வசதிகள் இல்லாமல் போய்விட்டன. அதற்காக என் பெற்றோர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா! கனியாகுரிச்சிக்குப் போகாமல் உள்ளூரிலேயே என் தலையை மொட்டையடித்துத் தலை முடியை ஒரு கலயத்தில் போட்டுப் பத்திரமாகத் தோட்டத்திலே வைத்து அதற்குரிய காணிக்கைப் பொருளை மட்டும் கனியாகுரிச்சி கோயிலுக்கு அனுப்பி விட்டார்களாம்.
யாராவது போனாலோ அல்லது வீட்டில் உள்ளவர்களே போனாலோ-அப்போது கொண்டு போய்க் கலயத்தில் உள்ள என் தலைமுடியைக் காணிக்கை செலுத்திவிடலாம் என்று அப்பாவும் அம்மாவும் கூறிக்கொண்டேயிருந்தனர். மிக விலை உயர்ந்த பொருளைக் காப்பாற்றுவது போலவே கலயத்தைக் கவலையோடு காப்பாற்றி வந்தனர். இரண்டாவது முறையாக எங்கள் வீட்டில் நுழைந்த திருடன், அனைவரும் விழித்துக் கொண்டதால் எதுவும் கிடைக்காமல் அந்தக் கலயத்தை, உண்டியல் கலயம் என்று எண்ணித் தூக்கிக்கொண்டு ஓடி விட்டான்.
அதை அவன் பிரித்துப் பார்த்த பிறகல்லவா தெரிந்திருக்கும் செய்தி! பள்ளிக்கூடம் போவது மட்டுமின்றி, இசைக் கல்விக்கும் என் தந்தை ஏற்பாடு செய்தார். ஆனால் இசைப் பயிற்சியில் எனக்கு நாட்டம் செல்லவில்லை. நாலு பெரிய மனிதர்கள் இருக்குமிடத்தில் சட்டை போட்டுக்கொண்டு போகமுடியாது. மேல் துண்டையும் எடுத்து இடுப்பிலே கட்டிக்கொள்ள வேண்டும். செருப்பு அணிந்து கொள்வதும் தவறு. இப்படியெல்லாம் கடுமையான அடிமைத்தனம்; தெய்வீகத்தின் பெயராலும், சாதி, மத சாத்திர சம்பிரதாயங்களின் பெயராலும் ஒரு சமுதாயத்தைக் கொடுமைக்கு ஆளாக்குவதை என் பிஞ்சு மனம் வன்மையாக எதிர்க்கக் கிளம்பியது.
அதன் காரணமாகவே இசைப் பயிற்சியை வெறுத்தேன். என் எழுச்சிக்குக் காரணமாக என்னைச் சுற்றியிருந்த சமுதாயச் சீர்கேடுகள் அமைந்தன; கல்லிலும் முள்ளிலும் நடந்து பார்த்தால்தானே அதன் சுகத்தை வர்ணிக்கமுடியும்? கனக மணிக் கட்டிலை விட்டு இறங்காதவன், கரடு முரடான பாதைகளைப் பற்றி எங்ஙனம் புரிந்து கொள்ள முடியும்? மேல் சாதி-மேன்மையான கோத்திரம்-மேட்டுக் குடி-அப்படிப்பட்ட இடங்களிலேயிருந்து கிளம்பும் புதுமை எண்ணங்கள் ஆறாத புண்ணுக்குப் புனுகு தடவிக்கொண்டிருக்கும் வேலையைத் தான் பெரும்பாலும் செய்திருக்கின்றன.
பிற்படுத்தப்பட்ட கும்பலிலேயிருந்து கிளம்பும் புரட்சிக் குரல்கள் ஆறாத புண்ணை அறுவை முறையினால் சுகப்படுத்தும் சக்தி பெற்றவை. உதைக்கப்பட்ட பந்து மேலும் வேகமாகக் கிளம்புவதுபோல். ஒடுக்கப்பட்ட இனத்திலேயிருந்து புறப்படுகிறவன் இழிவு துடைக்க. ஆவேசமாகப் புறப்படுகிறான். என் மனப்போக்கை உணர்ந்து கொண்ட தந்தை பள்ளிப் படிப்பில் என்னைத் தீவிரமாக ஈடுபடுத்தினார். தனியாகவும் எனக்கு ஆசிரியர் அமைத்துப் பாடம் போதிக்கப்பட்டது.
அந்த ஆசிரியருக்கு ஊதியமாக, காலை மாலை ஒரு சேர் பசும்பால்-இடையிடையே காய்கறிகள் வழங்கப்பட்டன. அவர் தான் எங்கள் கிராமப் பள்ளிக் கூடத்திற்கும் 'தலைமை ஆசிரியர்'. படிக்கும் போது கிராமத்திலே நடிக்கவும் ஆரம்பித்தேன். பகல் நேர நாடகங்களில்! பள்ளியில் விடுமுறை என்றால் போதும்; எங்கள் மாட்டுத் தொழுவத்தை நாடக மேடையாக்குவேன். பத்து வயதுப் பருவம். அப்போதே மாட்டுத் தொழுவத்திலே நாடகம்! அந்தக் கூத்துகளில் அர்ச்சுனன், கிருஷ்ணன் வேடங்கள் போட்டுக் கொள்வதிலே தணியாத ஆசை!
ஏனென்றால் அவர்களைப் பற்றித்தான் அப்பா அடிக்கடி கதை சொல்லுவார்- அதனால் அந்தப் பாத்திரங்களால் கவரப்பட்ட நான், நீலப் பவுடரை அள்ளி உடம்பிலே பூசிக் கொண்டு நடிப்பேன். எங்கள் நாடகத்தையும் பார்க்க ஊரார் கூடுவார்கள். திருக்குவளைக் கோயிலிலே அடிக்கடி உற்சவம் நடக்கும். அந்தத் திருவிழா முடிந்த மறுநாளே, அதேபோல, மாதிரித் திருவிழா எங்கள் வீட்டுத் தாழ்வாரத்தில் ஆரம்பமாகும். மண்ணால் 'சாமி' செய்வேன்.
ஒரு வெண்கல ரிஷப வாகனப் பொம்மை எங்கள் வீட்டிலே இருந்தது. களிமண் சாமியை அதன் மேல் தூக்கிவைத்து, வாயினால் மேள வாத்யங்கள் முழங்க, சாமி ஊர்வலம் நடத்துவோம். இதனை நான் எழுதும்போது அந்தப் பழைய ரிஷப வாகன வெண்கலப் பொம்மையின் நினைவு எனக்கு வந்துவிட்டது. அதனை எங்கேயாவது தேடிக் கண்டுபிடித்துவிட்டால் அதைப் பார்க்கும்போது எனக்கு எத்தனை பசுமையான நினைவுகள், என் இளமைப் பருவத்தைப் பற்றி நிழலாடும் தெரியுமா?
சிறிது உடைந்து போன அந்தப் பொம்மை அறவே அழிந்து போயிருக்க முடியாது. எத்தனையோ இன்பக் கதைகளைச் சொல்லும் அந்தப் பொம்மையைக் கண்டு பிடித்து என் மேசையின் முன் வைத்துப் பார்த்தால் அந்த இன்பத்திற்கு அளவே இருக்காது. பல ஆண்டுகளுக்குப் பிறகு என் பிறந்த ஊர் செல்லக் கூடிய வாய்ப்புக் கிட்டியது. போகும் வழியெல்லாம் தோழர்களுடன் என் பழைய நாள் நினைவுகளைச் சொல்லிச் சொல்லி எனக்குள் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டேன்.
இளமை நினைவுகளிலேதான் எவ்வளவு உற்சாகம்! முகம் வற்றித் தோல் சுருங்கி, எழில் குறைந்து காணப்படும் முதியவளிடம் முதுமை நிறைந்த அவள் கணவன் அன்பு காட்டும்போது பருவக் காலத்திலே அவள் பெற்றிருந்த முழு நிலா முகத்தையும் மாம்பழக் கதுப்புப் போன்ற கன்னத்தையும், மின்னிடும் மேனியையும் மனக் கண்ணால் நினைத்துக் கொள்வதால் தானே அந்த அன்பிலே பூரணத்துவம் பொலிகிறது. எண்ணச் சுழல்களிலே நினைவுச் சருகுகள் மேலும் கீழும் வந்து வந்து தலைநீட்டும்போது மனிதனுக்கு ஏற்படும் தனி உற்சாகத்தையும் அந்த உற்சாகத்தினிடையே மறைந்து கிடக்கும் உணர்ச்சி மயமான இன்பங்கலந்த சோகத்தையும் அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.
அந்த உணர்வை வெளிப்படுத்துவதுங்கூட எந்தக் கலைவல்லாராலும் ஆகாத ஒன்றுதான். அத்தகைய உணர்விலே மதிமயங்கித் திருக்குவளை செல்லும் வழியிலே போய்க் கொண்டிருக்கிறேன். தோழர்களுடன் காரில்! "இதோ இந்த ஊர் தான் கச்சணம்! திருவாரூரில் படிக்கும் போது இந்த ஊரில்தான் பஸ்ஸில் இறங்குவேன்! இங்கிருந்து நாலைந்து மைல் நடந்து கிராமத்துக்குச் செல்வேன் தினந்தோறுமல்ல! விடுமுறை நாட்களில்! கச்சணத்துக் காப்பி ஓட்டலில் ஓரணாவுக்கோ, இரண்டணாவுக்கோ காராபூந்தி வாங்கித் தின்று கொண்டே போனால் தனியே வழி நடந்து செல்லும் சிரமம் தெரியாது.
"சில சமயம் இரவு நேரங்களில் தனியே நடந்து செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும். நெஞ்சிலே திக்திக்கென்று பயம் பீரிட்டுக் கிளம்பும். வழிநடைக்கு என் தகப்பனாரும், அவரது நண்பரான சரவண சாமியார் என்ற பெரியவரும் எனக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுத்தார்கள். 'சிவாய நம! ஓம் நம சிவாய!"
இதை முணு முணுத்துக் கொண்டே நடப்பேன். பேய் பிசாசுகள் அருகே வராதாம். அந்த மந்திரத்தைக் கேட்டால்! என் இளம் உள்ளத்திலே அந்த நம்பிக்கை வேரூன்றி இருந்தது! இப்போதுதான் அந்த வேரே கெல்லி எறியப்பட்டுவிட்டதே! "இதோ இதுதான் காருகுடி! இங்கிருந்து ஒரு மைல் தொலைவு தான் எங்களூர்! எங்கள் வீட்டுக்குத் தயிர் வாங்க இந்த ஊருக்குத்தான் வரவேண்டும். கையிலே ஒரு ஈயச் செம்புடன் நானும் இரண்டொரு தோழர்களும் சேர்ந்து காலையிலேயே ஏழு மணிக்கு இந்த ஊருக்கு வருவோம்.
ஒன்பது, பத்து மணிக்குத் தயிரோடு வீடுவந்து சேருவோம். இடையில் தாகம் ஏற்பட்டால் தயிரைச் சிறிது குடித்துக் கொள்வோம். குறைவை நிவர்த்தி செய்து கொள்ளத்தான் கிராமங்களில் குளங்கள் ஏராளமாக உண்டே! "இதோ மரங்களடர்ந்த இடம். ஒரு காலத்தில் இந்த இடத்தைக் கண்டு எப்படிப் பயப்படுவோம் தெரியுமா? 'பட்டாணி' என்ற துஷ்ட தேவதையின் கோயில் அதற்குள்ளே இருக்கிறது. அந்தத் தேவதை இரவு நேரத்தில். தன் படைகளோடு தீவட்டி ஊர்வலமாக வயல்வெளிகளில் போகுமாம்.
அந்தக் காட்சியை நேரில் பார்த்ததாகவே பலர் கூறுவார்கள், அவர்கள் பார்த்த தீவட்டி வெளிச்சங்கள் என்னவோ உண்மைதான். ஆனால் வயல் வெடிப்புகளில் தோன்றும் ஒருவிதமான கந்தக வாயுவிலிருந்து கிளம்பும் தீச்சுடர்களின் வரிசைதான் அந்தப் பட்டாணி தேவதையின் தீவட்டி ஊர்வலம் என்பதை அவர்கள் அப்போது எப்படி அறிவார்கள்? இப்போதுகூட இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளப் பலர் தயாராயில்லையே! நாள் கூட அப்போதெல்லாம் நம்பித்தான் நடுங்கிக் கொண்டிருந்தேன்.
'நமசிவாய' மந்திர உதவியோடுதான் இந்தப் பகுதிகளைக் கடந்து செல்வேன். அப்படிப் போகும்போது ஒரு கோட்டான் கத்தினாலும் போதும், நிச்சயம் நெஞ்சு வெடித்துத்தான் விடும்! "பய முதிர்ச்சியால் நெஞ்சு வெடித்து ரத்தம் கக்கிச் செத்தவர்களையெல்லாம் பேயடித்துச் செத்தவர்கள் என்று தானே பக்தர்கள் வர்ணிக்கிறார்கள். "அதோ, பாழடைந்து, நிறமிழந்து, பெரிய உருவமொன்று மூளியாக உட்கார்ந்திருக்கிறதே, அதுதான் முனீஸ்வரன்; ஊருக்கு ஏதாவது கேடு வந்தால்-அம்மை-காலரா பரவினால் அந்த முனீஸ்வரன், வீரப்ப வேளார் என்பவர் மீது ஆவேசமாக ஆடி ஆடி ஊருக்கு ஆறுதல் சொல்லும்.
இப்போது அந்த வேளாரும் இல்லை! ஊருக்கு நோய் நொடி வந்து கொண்டுதானிருக்கின்றன-ஆனால் முனீஸ்வரன் அபயம் தருவதற்கு வருவதே இல்லை. அவர் பாடே கஷ்டமாயிருக்கும் போது, அவர் மற்றவர்க்குத் துணை புரிய வருவதெப்படி? "இதோ இருக்கிறதே எங்கள் தெருக்கோடியில்! இதுதான் அங்காளம்மை கோயில்! கோழிக்கறி சாப்பிட வேண்டுமென்று என் அப்பாவுக்குப் பிரியம் ஏற்பட்டு விட்டால் உடனே அங்காளம்மன் கோயில் பூஜைக்கு ஏற்பாடாகிவிடும்!
"என் தலை அடிக்கடி மொட்டையடிக்கப்பட்ட கோயில்களில் இது தலை சிறந்த" கோயிலாகும். எங்கள் குடும்பத்துக் குறைகளை யெல்லாம் இங்கேதான் வந்து அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்போம். ஊராருக்குக்கூடக் குறை சொல்லுவதற்கு இது ஒரு நல்ல இடம். பல பக்தர்கள் தங்களுக்குப் பிடிக்காத குடும்பங்கள் அழிய வேணடுமென்ற 'நல்ல' எண்ணத்தோடு இந்தக் கோயில் வாசலில் வந்து மண்ணை வாரி இறைப்பார்கள்! அப்படி இறைக்கப்படும் மண் அவர்கள் கண்ணிலே கூடக் காற்றிலே பறந்து விழுவதுண்டு!
"இந்தக் கோயிலை அடுத்து, இதோ தரைமட்டமாக இடிந்து கிடக்கிறதே! இதுதான் என்னை ஆளாக்கிவிட்ட அறிவுக் கோயில்! நான் படித்த பள்ளிக்கூடம். ஆகா! அதைப் பார்க்கும் போது என்னென்ன வகையான உணர்ச்சிகள் வெள்ளம்போல் கரை புரள்கின்றன? கைவிரல் தேயத் தேய 'அரிநமோத்து சிந்தம்' என்ற எழுத்துக்களை மணலில் எழுதி எழுதிக் கல்வி பயின்ற இடமல்லவா இது! எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்குமோ என்ற ஏக்கமோ வாட்டமோ இல்லாமல் நிகழ்கால விளையாட்டுக்களில் கவலையற்று ஈடுபட்டிருந்த பச்சிளம் பருவம்.
அந்தப் பருவம் மனிதனால் மற்றொரு முறை சந்திக்கக் கூடிய பருவமா? "மலைபோல் குவிந்து கிடக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் குழம்பித் திரும்பிய பக்கமெல்லாம் காத்திருக்கும் வேலைகளை முடிக்கும் வகையறியாது புலம்பித் தவித்துக்கொண்டு கிடக்கும் சங்கடம் சந்தோஷமான இளம் பிராயத்தின் பக்கம் அடியெடுத்து வைத்ததே கிடையாதே! சிரிப்பு முழக்கி வாழ்ந்த சிட்டுக் குருவிகளாம் எங்களை வாழ்க்கையில் வானில் பறக்கும் வலிவுடையோராய் ஆக்கிய பெருமைக்கு உரியதல்லவா இந்தப் பள்ளிக்கூடம்!
"பள்ளிக்கடுத்து இதோ வரிசையாகத் தெரிவதெல்லாம் என் உறவினர் வீடுகள்! அடடா! என் மனக்கண் முன் எத்தனை கடந்த காலச் சரித்திரங்கள்! "இந்தத் தெருக்களிலே எத்தனை பெரியவர்கள்-எத்தனை இசை மேதைகள்-எத்தனை அன்புள்ளம் கொண்டவர்கள் நடமாடியிருக்கிறார்கள்! அவர்கள் எல்லாம் இப்போது எங்கே? புயலில் அடியோடு விழுந்த ஆலமரம் போல எத்தனை குடும்பங்கள் போய்விட்டன! "அந்தக் குளத்தங்கரை ஓரமாகத்தானே கைகளை முறுக்கிக் கொண்டே வைத்தியலிங்க மாமா நிற்பார்.
ஆகாயத்தை நோக்கியபடி! ஏதாவது நல்ல சகுனம் கொடுக்கக் கருடன் பறக்கிறதா என்பதுதானே அவரது ஆவல்! அவர் பறந்து போய்விட்டாரே இப்போது! புல்தரையைச் சுத்தப்படுத்திக் கொண்டு பரபரப்போடு மண்வெட்டியும் கையுமாக இந்த இடத்திலேதானே வைத்தித் தாத்தா உழைத்துக் கொண்டிருப்பார்! அதோ அந்தக் குளக்கரை மரத்தடியில்தானே என்னைப் பெற்ற என் அன்புத்தந்தை, தூண்டில் உதவியால் மீன் வேட்டையாடிக் கொண்டிருப்பார்!'
"குள்ள உருவமும், குறுகுறுப்பான நடையுங்கொண்ட மெய்க்காவல் குப்புசாமித் தாத்தாவின் மடியிலே தொங்குகிற சாவிக் கொத்து மாத்திரம் காணாமற் போய்விட்டால் பெரிய கோயில் சாமிகள் எல்லாம் பட்டினிதான்! அவரிடம்தான் கோயில் திறவுகோல்கள் எல்லாம்! "பூனை போலக் கூனிக் குறுகிச் சாகும் வரையில் திருக்குவளையில் இரண்டு ஒளவையார்களாக விளங்கியவர்கள் தில்லையம்மா -வைரியாத்தா! "அவர்களெல்லாம் இப்போது இல்லை. தென்றல் சுகத்திலே சீட்டாடிப் பொழுதுபோக்கும் அக்கிரகாரத்துத் திண்ணைகள் அதோ...
அக்கரையிலே ஒரு வீட்டில் தபால் ஆபீசு... தபால் வந்தவுடன் போஸ்ட் மாஸ்டர் அய்யர் குளத்தின் அக்கரையில் இருந்தபடியே இக்கரையில் உள்ள வீடுகளுக்கு உரத்த குரலில், 'தபால் வந்திருக்கு நோக்கு! பிள்ளையாண்டானை அனுப்பு! அனுப்பறேன்' என்று அழைப்பு விடுத்து நாங்கள் ஓடிப்போய் வாங்கிவரும் காட்சி, இன்னும் என் நெஞ்சத் திரையைவிட்டு அகலவில்லை!
"அதோ நான் தவழ்ந்து விளையாடிய வீடு...அது எத்தனை இன்பக் கதைகளையும் துன்பக் கதைகளையும் எனக்குச் சொல்கிறது! அந்த இல்லத்தைத் தொடர்ந்தாற்போல் சற்று நேரம் பார்க்க முடியவில்லையே! ஏன்? அம்மவோ-எவ்வளவு பேர் முப்பது வருடங்களுக்குள் மறைந்தொழிந்து விட்டார்கள்! ஆஸ்பத்திரியே - அசைந்து வருவது போல் - மருத்துவ நிலையத்தையே மடியில் கட்டிக்கொண்டு திருவாரூர்த் தேர் மாதிரி வருவாரே, காருகுடி வைத்தியர்! அவரெங்கே இப்போது?
"நோஞ்சான் போல் இருந்தாலும் நெஞ்சிலே நீங்காத உறுதியும் எங்கள் பால் அன்பும் கொண்டு அல்லலுற்ற போதெல்லாம் எங்கள் குடும்பத்திற்கு ஆறுதல் அளித்த ரத்தினப் படையாச்சியைக் காண முடியவில்லை இப்போது!" கிராமத்தில் நுழைந்த உடன் உற்றாரும், நண்பர்களும் என்னைச் சூழ்ந்துகொண்டு அன்பால் திணறடித்தனர். "நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்: இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்" என்று கூறி உறவைப் புதுப்பித்துக் கொண்டு என்னை உச்சிமோந்து உபசரித்தார்கள்.
அப்போதெல்லாம் நான் என் தாய் தந்தையரை எண்ணிக் கொண்டு கண் கலங்கி நின்றேன். சொந்த ஊரார் என்னை அணைத்து மகிழ்ந்து வாழ்த்தி அனுப்பியதை அம்மாவும் சகோதரிகளும் கேட்டு எப்படிப் பூரித்துப் போனார்கள் தெரியுமா? முத்துமாரி பொழிந்து, "முத்துவேல் மைந்தனே நீ வாழ்க!"
என ஆசீர்
வதித்த தாய்மார்களையும் பெரியவர்களையும் தவழ்ந்துவிளையாடிய ஊரையும் விட்டுவிட்டுத்தான் எனது பனிரெண்டாவது வயதில் திருவாரூருக்குப் படிப்பதற்காகப் புறப்பட்டேன். இரண்டாம் படிவத்தில்-திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் சேருவதற்காக அழைத்துச் செல்லப்பட்டேன். ஆனால் என்னை ஐந்தாம் வகுப்பில்கூடச் சேர்க்க இயலாது என்று உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் கூறிவிட்டார்!
