உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 53

தொகுதி 53 · கடிதம் 4011

தலைவர் கலைஞரின் திருத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணம்!

2016-04-30

உடன்பிறப்பே,

3-5-2016 மாலை மதுரைப் பொதுக்கூட்டம். 5-5-2016 மாலை சென்னைப் பொதுக்கூட்டம். 8-5-2016 மாலை தஞ்சாவை மணிக்கூண்டு பொதுக்கூட்டம். 11-5-2016 திருவாரூர் தொகுதி (வாக்காளர்கள் சந்திப்பு வேன் மூலம்) 14-5-2016 பிற்பகல் 3.00 சென்னை சேப்பாக்கம் பொதுக்கூட்டம்.

*தலைமைக் கழகம் அறிவிப்பு*

உடன்பிறப்பே,

மே 16 அன்று நடைபெறவுள்ள தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக என்னுடைய திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் இன்று தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. முதலில் வெளியிடப்பட்ட சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் விடுபட்டுப்போன மாவட்டங்களின் கழகச் செயலாளர்கள் சிலர், தங்கள் மாவட்டங்களிலும் பிரச்சாரப்பயணம் வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், முதலில் வெளியிடப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே ஒருசில மாவட்டங்கள் தற்போது விடப்பட்டுள்ளன. காரணம் என்னுடைய முதல்கட்ட ஆறு நாள் தொடர்ச்சியான சுற்றுப் பயண நிகழ்வுகளின் அனுபவம்தான். ஆறு நாட்களும், பிரச்சார “வேனில்” தான் வாசம்! ஆனால் அந்த வேன் ஒவ்வொரு ஊரிலும் மனித சமுத்திரத்திற்குள் புகுந்து “குறுகுறு நடந்து சிறு கரம் நீட்டி”த் தத்தித் தவழ்ந்து வரும்

குழந்தையைப் போல வெளிவந்ததை நீ தொலைக்காட்சிகளில் பார்த்துக் களித்துப் பெருமிதம் அடைந்திருப்பாய்! கழகப் பொருளாளர், தம்பி மு.க. ஸ்டாலின் தனது சுற்றுப் பயணத்தை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதாகவும், நான் அதிகம் சிரமப்படக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். ஆர்வமும் அக்கறையும் கொண்ட உடன்பிறப்புகளின் ஆலோசனையின் பேரில், தற்போது எனது சுற்றுப்பயணம் “திருத்தப்பட்டு” இந்த நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. முதலில் வெளிவந்த சில ஊர்களின் பெயர்கள் தற்போது விடுபட்டுப் போயிருக்கலாம். வரவிருக்கின்ற பொதுத் தேர்தலில் கழகக் கூட்டணி வெற்றிபெற்ற பின்னர், தற்போது விடுபட்ட ஊர்களுக்கு உங்களுடைய வெற்றி மகிழ்வில் பங்குகொள்ள நான் நிச்சயமாக நேரில் வருகை தருவேன் என்ற உறுதியினைத் தருகிறேன். உங்களில் நானும், என்னுள் நீங்களும் ஐக்கியமாகி இருக்கிறோம் என்ற உணர்வுடன்; நான் வராததை வந்ததாகவே கருதி, கழகக் கூட்டணி வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியினை ஈட்டிட அனைவரும் உழைத்திட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புள்ள,

மு.க.

30-4-2016

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 53 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 53 PDF ↗