உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 53

தொகுதி 53 · கடிதம் 4012

தவறான விமர்சனத்திற்குத் தீவுத் திடல் கூட்டமே பதிலடி!

2016-05-07

உடன்பிறப்பே,

நேற்றையதினம் (5-5-2016) சென்னை மாநகரில், தீவுத் திடலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அம்மையாரும், நானும் 2016 தமிழகச் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலையொட்டி, கலந்து கொண்ட பிரமாண்டமான பிரச்சாரப் பொதுக் கூட்டத்தைப் பார்த்தபோது, நான் கூட்டத்தில் குறிப்பிட்டதைப் போல அது வெற்றி விழாப் பொதுக் கூட்டம் போலவே காட்சி அளித்தது.

சோனியா காந்தி அவர்கள் பேசும்போது, கடந்த ஆண்டு இறுதியில் சென்னை மாநகரில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவைப் பற்றிக் குறிப்பிட்டு, அந்த நேரத்தில் தமிழகத்திலே இருந்த அ.தி.மு.க. அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த உதவியும் செய்ய முன்வராத நிலையைச் சுட்டிக் காட்டி, அ.தி.மு.க. அரசாங்கம் எங்கே போனது? மக்களின் கண்ணீரைத் துடைக்க முன்வந்ததா? என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்றும் விளக்கினார்.

சோனியா காந்தி அம்மையார் பேசிய நேரத்தில், என்னுடைய நினைவுகள் 1980ஆம் ஆண்டு தேர்தலில் அன்னை இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியும், என்னுடைய தலைமையிலே திராவிட முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்து போட்டியிட்டதுதான் நினைவுக்கு வந்தது. அதைத்தான் நான் பேசும்போது, அந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்த இந்திரா காந்தி அம்மையாரைப் பார்த்து, “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக” என்று கூறினேன்.

அதற்குப் பிறகு 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது - தமிழ்நாட்டிற்கு

தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த திருமதி சோனியா காந்தி அவர்களைப் பார்த்து, “இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க” என்று வரவேற்பு கூறி வாழ்த்தினேன்.

தற்போது நடைபெறவுள்ள தமிழகத்தின் பொதுத் தேர்தலில் மற்றக் கட்சிகளுடன் தோழமையும் கூட்டணியும் ஏற்படுவதற்கு முன்பாகவே, திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து அறிவித்தது. அந்த நேரத்தில் தமிழகத்திலே உள்ள சில கட்சிகள் இந்தக் கூட்டணியைப் பற்றிக் கேள்வி எழுப்பின.

இந்திய அரசியல் அமைப்பில் Democratic Socialism அதாவது “ஜனநாயக சோஷலிசம்” என்ற மகத்தான இலட்சியத்தை அறிமுகம் செய்தவர் பண்டித நேரு அவர்கள்.

1976இல் 42வது திருத்தத்தின் மூலமாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், (Preamble) Socialist மற்றும் Secular அதாவது “சமதர்ம” மற்றும் “சமயச் சார்பற்ற” என்ற அரிய கருத்துகளை இணைத்தவர் திருமதி இந்திரா காந்தி அவர்கள்.

அந்தப் பெருந்தலைவர்கள் அறிமுகப்படுத்திய இலட்சியமும், அரிய கருத்துகளும் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சியில் போற்றப்படுகின்றனவா? நடைமுறையில் உள்ளனவா? என்றால் இல்லை.

ஜனநாயகம் என்பது அரசமைப்பின் ஒரு வடிவம். அதில் அரசாங்கத்தை மக்களே உருவாக்கி, அனைத்துச் செயல்பாடுகளிலும் மக்களே பங்கேற்று, தங்களைத் தாங்களே ஆளுவதற்கு எல்லா நிலைகளிலும் உறுதுணையாக இருப்பதே ஜனநாயக அரசு ஆகும். மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களாட்சிதான் ஜனநாயகம்.

சோஷலிசம் அல்லது சமதர்மம் என்பது பொருளாதார இலட்சியம். அதன்படி சமுதாயத்தின் சொத்துகள் அனைத்தும், அந்தச் சமுதாயத்தில் உள்ள மக்கள் அனைவராலும் சொந்தம் கொண்டாடக் கூடியதாக இருக்க வேண்டும்.

அற்புதமான இத்தகைய இலட்சியப் பின்னணியிலேதான், அன்னை இந்திரா காந்தி அம்மையார் முதல் முறையாக நமது அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் திருத்தம் செய்தபோது,

“மதச் சார்பற்ற குடியரசு ” என்றும், “சமதர்மக் குடியரசு'' என்றும் திருத்தி அமைத்தார்.

ஜெயலலிதா ஆட்சியில் ஜனநாயகம் நசுக்கப்பட்டு விட்டது. சட்டமன்ற ஜனநாயகத்திற்கு இங்கே இடம் இல்லை; ஜனநாயக மரபுகளுக்கும் இடம் இல்லை. எதிர்க்கட்சிகள் தம்முடைய கருத்து வேறுபாடுகளையும், அரசு செயல்பாடுகளைப் பற்றிய நியாயமான விமர்சனத்தையும் எடுத்து வைக்கத் தமிழகச் சட்டமன்றத்தில் அனுமதி இல்லை. தமிழகச் சட்டமன்றமே ஜெயலலிதாவின் புகழ்பாடும் தர்பார் மண்டபமாக மாறிவிட்டது. எதிர்க்கட் சிகளுக்கு வாய்ப்பூட்டு; அ.தி.மு.க.வை ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்ய முயற்சி செய்தாலும்கூட கூண்டோடு வெளியேற்றம்.

ஜெயலலிதா ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் பாழாகிவிட்டது. பத்திரிகைச் சுதந்திரத்திற்கு இங்கே பேராபத்து. பத்திரிகைகள் மீது வழக்குகள்; பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல். எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அவதூறு வழக்குகள். ஏன், என் மீது கூட வழக்கு.

ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சியில் சோஷலிசம் எனப்படும் சமதர்மம் மதிக்கப்படுகிறதா என்றால், இல்லை. சோஷலிசம் எனப்படும் அருமையான இலட்சியம் அ.தி.மு.க.வினரால் கேலிப் பொருளாக்கப்பட்டுவிட்டது. அமைச்சர்களும், அ.தி.மு.க.வினரும் கொள்ளை அடிப்பதிலேதான் வல்லமை காட்டியிருக்கிறார்களே தவிர, ஒவ்வொருவரும் மக்கள் வரிப் பணத்தை, மக்கள் நலனுக்குச் சென்று சேர வேண்டிய பொது நிதியை இலஞ்ச ஊழல் மூலம் கோடி கோடியாகக் குவித்துக் கொண்டார்களே தவிர, ஊரை அடித்துச் சேர்த்த ஊழல் பணத்தை - ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் பங்களாக்கள், தோட்டங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றை நிறைய வாங்கிச் சேர்த்துக் கொண்டதுடன் வெளிநாட்டு வங்கிகளில் எதிர்கால அரசியலுக்கான சொந்த சேமிப்பாக வைத்திருக்கிறார்களே தவிர, ஏழை எளிய நடுத்தர மக்களைப் பற்றிக் கவலைப்பட வில்லை; அவர்களுக்குச் சமதர்ம எண்ணம் கிஞ்சிற்றும் இல்லை. ஏன், ஜெயலலிதாவுக்கே சோஷலிசச் சிந்தனை துளியும் இல்லாதபோது, அவருடைய கட்சியினர்க்கு எப்படி இருக்கும்?

ஜெயலலிதா ஆட்சியில் இவ்வாறு ஜனநாயகத்திற்கு சாவு மணி அடித்துவிட்டார்கள்; சோஷலிசத்தை வெகு தொலைவுக்குத் துரத்தி அடித்துவிட்டார்கள். மொத்தத்தில் பண்டித நேரு கண்ட ஜனநாயக சோஷலிசம், இந்திரா காந்தி அம்மையார் உறுதிப்படுத்திய சோஷலிச எண்ணம், ஜெயலலிதா ஆட்சியில் சிறிதும் மதிக்கப்படவில்லை.

காங்கிரசும், தி.மு.க.வும் மதச்சார்பின்மைக் கொள்கையிலே ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவை; ஜனநாயகத்திலும், சோஷலிசத்திலும் உறுதி பூண்டவை. அதனால்தான் கொள்கை - செயல் திட்டங்களின் அடிப்படையில், நீண்ட காலமாக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வருகின்றன. ஜெயலலிதாவைப் போல ஜனநாயகத்திலோ, சோஷலிசத்திலோ, மதச் சார்பின்மையிலோ நம்பிக்கை இல்லாதவர்கள், மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்து சிறுபான்மைச் சமுதாயத்தினரை மறைமுகமாகச் சிறுமைப்படுத்தியவர்கள், கர சேவைக்கு ஆட்களை அனுப்பியவர்கள், காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் நட்பை - உறவைப் போன்றதொரு நேர்த்தியான அரசியல் நிலையைக் கற்பனை செய்தும் பார்த்திட முடியாது.

நான் கோரிக்கை வைத்ததும் வங்கிகளைத் தேசிய மயமாக்கி சோஷலிச நடவடிக்கையை மேற்கொண்டவர் இந்திரா காந்தி அம்மையார். நான் கோரிக்கை வைத்ததும், தமிழ்மொழியை செம்மொழியாகப் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்தவர் சோனியா அம்மையார். நான் கேட்டதும் சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஒப்புதல் தந்தது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.

பழம்பெருமை வாய்ந்த சென்னைத் துறைமுகத்தைக் காப்பாற்றவும் மேம்படுத்தவும் மதுரவாயல் - துறைமுகம், “சூப்பர் எக்ஸ்பிரஸ் ஹைவே” பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது யு.பி.ஏ. ஆட்சியில்! ஆனால் தி.மு.க.வும் காங்கிரசும் இணைந்து செய்த சாதனைகள் என்பதற்காகவே, காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஜெயலலிதா செம்மொழி தமிழ் என்பதை அலட்சியப்படுத்தியிருக்கிறார்; மதுரவாயல் - துறைமுகம் உயர் மட்ட நெடுஞ்சாலைத் திட்டத்தை முடக்கிப் போட்டிருக்கிறார். காங்கிரசும் தி.மு.க.வும் கூட்டணி அமைத்ததால்தானே, சென்வாட்

வரி நீக்கப்பட்டது, கடல்சார் பல்கலைக்கழகம் உருவானது, நோக்கியா நிறுவனம் தொழிற்சாலையைத் தொடங்கியது, குறைந்த வட்டி வீதத்தில் மாணவர்களுக்குக் கல்விக் கடன் கிடைத்தது போன்ற ஏராளமான முற்போக்குத் திட்டங்கள் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கின்றன.

அதுமட்டுமா; திருமதி சோனியாகாந்தி அவர்களும், பிரதமர் மன்மோகன்சிங் அவர்களும் கழக ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு அளித்துள்ள திட்டங்கள் இதுவரை தமிழகம் பெற்றிடாத மகத்தான திட்டங்களாகும்.

அதாவது, 56 ஆயிரத்து 664 கோடி ரூபாய் - தமிழகமெங்கும் சாலைகள், மேம்பாலங்கள், துறைமுகப் பணிகள்; 14 ஆயிரத்து 600 கோடி ரூபாயில் சென்னை மாநகர் மெட்ரோ இரயில் திட்டம்; 2,427 கோடி ரூபாயில் சேது சமுத்திரத் திட்டம்; 1,553 கோடி ரூபாயில் சர்வதேச தரத்தில் சேலம் உருட்டாலை; 1,330 கோடி ரூபாயில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்; 908 கோடி ரூபாயில் சென்னைக்கு கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றுமொரு திட்டம்; 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி; 1,828 கோடி ரூபாயில் 90 இரயில்வே மேம்பாலங்கள்; 470 கோடி ரூபாயில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி வளர்ச்சிக் கட்டமைப்பு மையம்; 120 கோடி ரூபாயில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை “சூப்பர் ஸ்பெஷாலிட்டி” மருத்துவமனையாக மேம்பாடு; மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு; சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்; திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம்; சென்னைக்கருகில் ஆசியாவிலேயே முதலாவதாக உடல் ஊனமுற்றோர்க்கான தேசிய நிறுவனம்; தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்; திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம்; “பொடா” சட்டம் ரத்து; தேசிய ஊரக வேலைவாய்ப்பு; 100 நாள் வேலைத் திட்டம் ஆகிய திட்டங்கள் தமிழகத்திற்குக் கிடைத்தன.

இந்த மகத்தான திட்டங்களால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டு வருகிறது. இவற்றில் ஒருசிலவற்றைத்தான் என்னால் நேற்றைய கூட்டத்தில் எடுத்துக்காட்ட முடிந்தது.

இந்த வரலாற்று நிகழ்வுகளை உணர்ந்து கொள்ளாமல்தான்

திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணியைப் பற்றித்

தமிழகத்தில் உள்ள சில கட்சியினர் விமர்சனம் செய்தார்கள்.

அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையிலேதான்

நேற்றைய தினம் தீவுத் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்

சோனியா காந்தியாரின் வருகையும் பேச்சும் அமைந்தது. தவறான

விமர்சனத்திற்கு நேற்றைய தீவுத் திடல் கூட்டமே தக்க பதிலடி!

அன்புள்ள,

மு.க.

07-05-2016

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 53 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 53 PDF ↗