உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 53

தொகுதி 53 · கடிதம் 3977

சூழ்ச்சிக்கு இரையாகாமல் சுயமரியாதைப் பயணம் தொடர்வோம்!

2015-09-05

உடன்பிறப்பே,

23-10-2012 அன்று “முரசொலி”யில் ஓர் உடன்பிறப்பு மடல் தீட்டியிருந்தேன். “நீர் இடித்து நீர் விலகுவதா?” என்ற தலைப்பில் வந்த அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை நானே நேற்று முழுவதும் படித்தேன். ஏனென்றால் அதைப் படிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது.

மதியம் உணவருந்த உட்கார்ந்தேன். கழகத்தின் முதன்மைச் செயலாளர், தம்பி துரைமுருகன் சட்டப் பேரவைப் பணிகளை முடித்து விட்டு என்னைச் சந்திக்க வந்தார். முகம் சரியாக இல்லை. சாப்பிட்டுக் கொண்டே விசாரித்தேன். “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு முதல் பக்கத்தில் டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டி பற்றி செய்தி வெளியிட்டது. அதைப்பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கக் காத்திருக்கிறார்கள். தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையில் உள்ள கழகப் பொருளாளர், தம்பி மு.க. ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் அது பற்றிக் கேட்டதால், அவர் தான் என்னைத் தலைவரிடம் கலந்தாலோசிக்குமாறு அனுப்பி வைத்தார்” என்றார். உடனடியாக நான் கழக அமைப்புச் செயலாளர் தம்பி ஆர்.எஸ். பாரதியை அழைத்து, தலைமைக் கழகத்தின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடச் சொல்லிவிட்டு, படுக்கையில் படுத்தேன். தூக்கம் வரவில்லை. மாலையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காகச் செல்ல உத்தேசித்தபடி அங்கும் செல்லவில்லை. ஏன் மனம் சரியில்லை? அதற்கு என்ன காரணம்? அந்த நிலையில்தான் 2012ஆம் ஆண்டு நான் எழுதிய அந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படிக்க நேரிட்டது. அந்தக் கடிதத்திலே உள்ள சில பகுதிகள் வருமாறு: “நான் அடிக்கடி ஒன்றைச் சொல்லியிருக்கிறேன்; தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்திச் சொல்வார் என்று குறிப்பிட்டே அதைச் சொல்லியிருக்கிறேன். அதுதான்

கழகத்தின் தாரக மந்திரங்களான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றுள் “கட்டுப்பாடு” தான் முக்கியம்! அதைத்தான் விழுப்புரம் முப்பெரும் விழாவில் நமது இனமானப் பேராசிரியர் நினைவூட்டி விரிவாக உரையாற்றினார். திராவிட முன்னேற்றக் கழகம் பல முறை தேர்தலில் தோற்றிருக்கலாம். பல முறை வெற்றி பெற்றிருக்கலாம். வெற்றி, தோல்வி பற்றி நாம் எந்தக் காலத்திலும் முறையே வெறியாட்டம் போட்டதோ, வீழ்ந்து பட்டதாக நினைத்ததோ இல்லை. ஆனால் கட்டுப்பாடு குலைந்தாலோ, சேதாரம் ஏற்பட்டாலோ பிறகு கழகத்தைக் காப்பாற்ற முடியாது! நானும், பேராசிரியரும் இருவருமே மாணவர்களாக இருந்த காலந்தொட்டு, இப்போது வரை ஓய்வின்றி உழைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு கழக அலுவலகத்திற்கு வராமல் இருந்தால் எங்களைக் கேட்பவர்கள் யாரும் இல்லை. இருந்தாலும் கழக அலுவலகத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறோம். கழகம் தற்போது ஆளுங்கட்சி அல்ல. தமிழகத்தில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நாம் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத அளவிற்கு தோல்வியைக் கண்டு விட்டோம். நான் அதற்காக துவண்டு போய் விட்டேன்? கழகப் பணி ஆற்றாமல் இருந்து விட்டேனா? இந்த வயதிலும் எதற்காக அன்றாடம் எழுதுகிறேன்? காலையில் சாப்பிடுகிறேனோ, இல்லையோ, எத்தனை நாளிதழ்களைப் படிக்கின்றேன்? அத்தனை பத்திரிகைகளையும் உன்னால் வாங்கிப் படித்திட இயலாது என்பதால், அந்த இதழ்களையெல்லாம் படித்து விட்டு, அதிலே நீ தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளையெல்லாம் - நீ மக்களுக்கு விளக்கி எடுத்துரைத்திட வேண்டியவற்றை யெல்லாம் தேடிப்பிடித்து, ஆளுகின்ற அரசைப் பற்றி எப்படிப்பட்ட செய்திகள், விமர்சனங்கள் எல்லாம் வருகின்றன, உச்ச நீதிமன்றத்தில், உயர் நீதிமன்றத்தில் இந்த ஆட்சியினரைப் பற்றி எப்படிப்பட்ட கருத்துக்கள், கண்டனங்கள் எல்லாம் வெளிவருகின்றன என்பதை யெல்லாம் தொகுத்து இடுப்பு ஓடிய ஓடிய சலிப்பின்றித் தெரிவிக்கிறேன்.

ஆனால் அந்த என்னுடைய கருத்துக்களை தமிழகத்திலே

உள்ள நாளேடுகள் வேண்டா வெறுப்பாக, ஏதோ நாங்களும் வெளியிட்டோம் என்கிற அளவிற்கு, நடுநிலை நாளேடு என்று காட்டிக் கொள்வதற்காக இரண்டு பத்தி, மூன்று பத்தி என்று வெளியிடுகிறார்கள். முழுமையாக வெளியிட்டு, அந்தக் கருத்துக்கள் பரவினால், கழகத்தின் செல்வாக்கு கூடுதலாகி விடுமோ என்று ஆட்சியாளர்களைவிட, நமது இதழாளர்களுக்கு அக்கறையும், ஆர்வமும் அதிகமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் கழகத்திற்கு எதிர்ப்பான செய்திகள் என்றால் அதற்கு எவ்வளவோ முக்கியத்துவம் கொடுத்து, ஒரு வரி விடாமல் வெளியிட்டு, ஆட்சியாளர்களுக்கு அரவணைப்பு காட்டிட, அரசியல் ரீதியாக உதவிட முன் வருகிறார்கள். என்ன காரணம்? நம்மீது உள்ள வெறுப்பு என்பதை விட; ஆட்சியாளர்களைக் காப்பாற்றிட வேண்டுமென்பதிலே உள்ள முனைப்பு தான் காரணம்”

2012இல் நான் கூறியிருந்த நிலைதான் தற்போதும் நீடிக்கிறது. நமக்கு எதிராக “துரும்பு” போன்ற செய்தி கிடைத்தாலும், அதை “தூண்” போல் பெரிதாக ஆக்கி நாளேடுகளில் செய்தி வெளியிடுகிறார்கள். தலைமைக் கழகத்திலே செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன். “தத்துவ மேதை” என்று எங்களால் பாராட்டப்பட்ட தஞ்சை டி.கே. சீனிவாசன் அவர்களின் அருமைச் செல்வன். நல்ல படிப்பாளி. ஆனால் பத்திரிகைச் செய்தி, பேட்டி என்றால் அவருக்கு ஒரு ஈடுபாடு. அதனாலதான் அவரது விருப்பம் போலவே, கடந்த முறை அமைப்புச் செயலாளராக இருந்தவரை, தலைமைக் கழகச் செய்தித் தொடர்புச் செயலாளர் என்ற பதவியிலே நியமித்தோம். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு உண்டு அல்லவா? அதை மீறக் கூடாது அல்லவா? செய்தியை வெளியிட்ட அந்த “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகைக்கே, அவர் வரம்பு மீறியிருக்கிறார் என்பது தெரிந்ததால்தானே, முதல் பக்கத்திலும், எட்டாவது பக்கத்திலும் அவரது பேட்டியை மிகப் பெரிதாக வெளியிட்டுள்ளது. தலைமைக் கழகத்தினால் செயற்குழுவையோ, பொதுக்குழுவையோ கூட்டி, அதிலே கலந்துரையாடி அதன் பின்னர் வெளியிடப்பட வேண்டிய செய்திகளையெல்லாம், அந்தப் பேட்டியிலே சர்வ சாதாரணமாக டி.கே.எஸ். இளங்கோவன் கூறியோ, கூறாமலோ, அந்த ஆங்கில நாளேடு அதனைப் பெரிதாக வெளியிட்டுள்ளது. அது போதாதா

நம்முடைய ஊடகங்களுக்கு! கழக முன்னணியினரை எல்லாம் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். தொலைக்காட்சியிலே அவரது பேட்டி! “மாலை மலர்” இதழிலே அவருடைய பேட்டி! அந்தப் பேட்டி தவறானது, தலைமைக் கழகத்திற்குச் சம்பந்தம் இல்லாதது என்று நாம் நேற்று மதியமே அறிக்கை விடுத்த பிறகும், இன்று காலையில் வெளிவந்த “தினமலர்” நாளிதழின் முதல் பக்கக் கொட்டை எழுத்து செய்தி என்ன தெரியுமா? “கூட்டணி பேர விவகாரத்தில் தி.மு.க.வில் மோதல் வெடித்தது! ஸ்டாலின் ஆதரவாளர் பேட்டியால் கருணாநிதி கோபம்” என்ற தலைப்பில் இளங்கோவனின் புகைப்படத்தையும் வெளியிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். உண்மையில் சொல்லப்போனால், டி.கே.எஸ். இளங்கோவனின் பேட்டியை என் கவனத்திற்குக் கொண்டு வந்ததே, தம்பி ஸ்டாலின்தான். ஆனால் “தினமலர்”, “ஸ்டாலின் ஆதரவாளர் பேட்டியால் கருணாநிதி கோபம்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடுகிறது என்றால், எந்த அளவுக்கு அவர்களுக்கு நம்மீது காழ்ப்புணர்வு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? அது போலவேதான், “கருத்துக் கணிப்பு” என்ற பெயரிலே யாரோ சிலர் வெளியிடுகிறார்கள். அதனால் எந்தப் பயனும் விளைவதில்லை. அதை நான் நம்புவதுமில்லை. உண்மையில் அவர்களே மோதலை விலை கொடுத்து வாங்குவதைப் போல வெளியிடுகிறார்கள். உதாரணமாக கருத்துக் கணிப்பு எடுத்தவர்கள், முதலமைச்சர் பதவி தி.மு.க. வுக்குக் கிடைக்குமா? அ.தி.மு.க.வுக்குக் கிடைக்குமா? தே.மு.தி.க.வுக்குக் கிடைக்குமா? என்று கணக்கெடுத்து அறிவிப்பதுதான் முறை. யார் முதல்வர் என்று, அ.தி.மு.க.விலே ஜெயலலிதா பெயரை வெளியிட்டு விட்டு, தி.மு.க. என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, கருணாநிதிக்கு எத்தனை பேர் ஆதரவு? ஸ்டாலினுக்கு எத்தனை பேர் ஆதரவு? என்று அவர்களே ஒரே கட்சியிலே இரண்டு பெயரைக் குறிப்பிட்டு, எதற்காக பிரச்சினையை உண்டாக்குகின்ற வகையில் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்? அ.தி.மு.க. விலே ஜெயலலிதாவுக்கு எவ்வளவு பேர் ஆதரவு? ஓ. பன்னீர் செல்வத்திற்கு எத்தனை பேர் ஆதரவு? என்றா கேட்டிருக்கிறார்கள்? தி.மு.கழகத்தில் மட்டும் இரண்டு பேரைக் குறிப்பிட்டு எதற்காகக் கணக்கெடுக்க வேண்டும்? கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதுதான் கருத்துக் கணிப்பு எடுத்து வெளியிட்டவர்களின் நோக்கமா? அதுவும் தேர்தல் நெருங்குவதற்கு முன்பாகவே இப்படிப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்த எதற்காக முனைகிறார்கள்? திராவிட முன்னேற்றக் கழகத்திலே யார் முதலமைச்சர் என்று நாங்களே கவலைப்படாத போது, கருத்துக் கணிப்பு எடுக்கின்றவர்களுக்கு ஏன் அக்கறை? தம்பி ஸ்டாலினே பல முறை, கழகத் தலைவர் கலைஞர் அவர்கள்தான் ஆறாவது முறையும் முதலமைச்சராக வருவார் என்று பல முறை சொன்ன பிறகும் வம்பு வளர்ப்பதில் அவர்களுக்கு என்ன அக்கறை? அதனால் ஸ்டாலினுக்குத்தான் எப்படிப்பட்ட தாமசங்கடம்? அவர் கழகமே என் மூச்சு என்று அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரை ஏன் இப்படியெல்லாம் வேதனைப்படுத்துகிறார்கள்?

அதிலும் சில பத்திரிகையாளர்கள் மேலும் மிகுந்த அக்கறையோடு, கழகத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள, என் மகன் மு.க. அழகிரி சென்னை வருகிற விமானம் எப்போது வருகிறது என்று தெரிந்து கொண்டு, விமான நிலையத்திற்கே சென்று இந்தக் கருத்துக் கணிப்பு பற்றி கேள்வி கேட்கிறார்கள் என்றால், அவர்களுக்கு ஏன் இந்தத் திடீர் அக்கறை? அந்தப் பேட்டிக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து சில ஏடுகள் வெளியிடுகின்றன என்றால், அவர் மீது உள்ள அக்கறை காரணமாகவா? அவரும் தன் தம்பி மீதுள்ள கோபத்தின் காரணமாக, என்னைப் புகழ்ந்து கூற, அதனால் என்ன பயன்? எதிர்ப்பாளர்களுக்கு இடம் கொடுத்து விடுகிறது! இருவருக்கும் இடையே புகுந்து, கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயலுவோருக்கு இடம் கொடுத்ததாக ஆகி விடுகிறது. டி.கே.எஸ். இளங்கோவனின் பேட்டியையும், மு.க. அழகிரியின் பேட்டியையும் “தினமலர்” நாளேடு முதல் பக்கத்தில் கொட்டை எழுத்திலே வெளியிடுகிறது என்றால், எந்த அளவுக்கு அவர்களுக்கு நம்மீது குரோதம் என்பது புரிகிறதா? அல்லவா?

ஒருமுறை திருச்சியிலே நடைபெற்ற பொதுக் கூட்டத்திலே, அறிஞர் அண்ணா அவர்களுடைய மறைவிற்குப் பிறகு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், தந்தை பெரியார் அவர்கள் பேசினார்கள். அப்போது சொன்னார், “அண்ணாத்துரை சொன்னார் என்று கருணாநிதியும், அந்தக் கட்சியிலே உள்ளவர்களும் நாம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இந்த மூன்றையும் காப்பாற்ற வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறார்கள். நான் கருணாநிதிக்கு மாத்திரம் அல்ல, கருணாநிதி தலைமையிலே இருக்கின்ற கட்சித் தொண்டர்களுக்கெல்லாம், கட்சித் தோழர்களுக்கெல்லாம் சொல்வேன். நீங்கள் கடமையை மறந்தாலும் மறந்து விடுங்கள், கண்ணியத்தை நீங்கள் போற்றாமல் விட்டாலும் விட்டு விடுங்கள்.

ஆனால் கட்டுப்பாடு, அதை மாத்திரம் துறந்து விடாதீர்கள் என்று நான் கட்சித் தோழர்களுக்கு - தி.மு.க. நண்பர்களுக்கு சொல்வேன்” என்று பெரியார் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொன்னார்.

ஏனென்றால், கட்டுப்பாடு இருந்தால் எல்லோரும் சேர்ந்து கண்ணியம் தவறிக் கூட நடக்கலாம். இது பெரியாருடைய வியாக்கியானம். கடமை கூட தவறி விடலாம். கட்டுப்பாட்டோடு இருந்தால் எவனும் எதுவும் செய்ய முடியாது. பெரியார் அவ்வளவு நிர்த்தாட்சண்யமாக, மூர்த்தன்யமாக சொன்ன அந்த வார்த்தையை இன்றளவும் கடைப் பிடிக்கின்ற காரணத்தினாலே தான் நம்முடைய கழகத்தை யாரும் அசைக்க முடியவில்லை, ஆட்ட முடியவில்லை, வானுயர ஓங்கியிருக்கின்ற ஆல மரம் போல் திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு இருக்கின்றது.

ஆனால் இதன் வளர்ச்சியைத் தடுக்க - இந்த ஆட்சியாளர்கள் எடுக்கின்ற முயற்சி போதாது என்று, அவர்களுக்கு அனுசரணையாக தமிழகத்தில் நடைபெற்று வரும் ஒருசில நாளேடுகள் எப்படியெப்படியோ முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. “பத்திரிகா தர்மம்” என்பதையே அடியோடு குழி தோண்டிப் புதைத்து விட்டு, இப்படிப்பட்ட சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வரும் அப்படிப்பட்ட ஏடுகளுக்கு நாமே இரையாகி விடலாமா? இப்படியெல்லாம் செய்து கழகச் செயல்வீரர்களின் கவனத்தைத் திருப்ப முயலுகிறார்கள். அத்தகைய முயற்சிகளுக்கு கழகத்தவர்கள் இரையாகக் கூடாது, இரையாக வேண்டாம் என்பதற்காகவே இந்தக் கடிதம்!

“திராவிடம்” என்ற இனப் பெயரைக் காப்பாற்றவும் - “இன உணர்வை”ப் பாதுகாக்கவும் - அதைப் பரப்பிட பாடுபட்டு வருபவர்களுமான நம்மை நாமே வறுத்திக் கொண்டாலும் பரவாயில்லை என்று இந்த ஒப்புயர்வற்ற இயக்கத்தை நடத்தி வருகிறோம். இதை வீழ்த்திட, எதிரிகள் எத்தகைய சூழ்ச்சிகளைக் கையாண்டாலும், அந்தச் சூழ்ச்சிகள் அனைத்தும், “மலையில் மோதி வீழ்கிற சிற்றலைகள்” என்று கருதி நாம் நம்முடைய சுயமரியாதைப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்; மேலும் தொடர்வோம்!

அன்புள்ள, மு.க. 05-09-2015

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 53 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 53 PDF ↗