தொகுதி 53 · கடிதம் 3976
ஏமாற்றுவோரிடமிருந்து தமிழகம் மீள்வதுதான் எப்போது?
2015-08-30
உடன்பிறப்பே,
கடந்த நான்காண்டு காலத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகச் சட்டப்பேரவையில் 110வது விதியின்கீழ்ப் படித்த அறிக்கைகள் பற்றியும், அப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்களின் கதி என்ன என்பது பற்றியும் விரிவாக நான் எடுத்து விளக்கியிருந்தேன். “ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்” என்பதைப் போல, நான் இதுபற்றி விவரமாக எழுதிய அதே நேரத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா 25-8-2015 அன்று அவசர அவசரமாகப் பேரவையிலே நுழைந்து, வேக வேகமாக 110வது விதியின்கீழ் ஓர் அறிக்கையை - அதிலே “அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்” உட்பட 22 அறிவிப்புகளைச் செய்துவிட்டு - அதற்கான “பாராட்டுரைகளைத் தோழமைக் கட்சியினர் ஆற்றிய பிறகு, அவையைவிட்டுச் சென்றுவிட்டார். ஜெயலலிதா, அறிக்கையைப் படிப்பதற்காக வருகிறார்; அவையின் ஏனைய நடவடிக்கைகள் எதிலும் கலந்துகொள்வதில் அவருக்கு அக்கறையில்லை. முதலமைச்சர் 25-8-2015 அன்று அறிவித்த 22 அறிவிப்புகளும் மக்கள் நலவாழ்வுத் துறை சம்பந்தப்பட்டவையாகும். இந்தத் துறை குறித்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்; நடைபெறும் கூட்டத் தொடரில் 23-9-2015 அன்று விவாதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டும் உள்ளது. இந்த நிலையிலே அந்தத்துறை சம்பந்தப்பட்ட 22 அறிவிப்புகளை முதலமைச்சர் 25-8-2015இல் படித்து விட்டார் என்றால், பிறகு எதற்காக அந்த மானியக் கோரிக்கை மீதான விவாதம்? அந்தத் துறையின் அமைச்சர்தான் எதற்காக இருக்கிறார்?
30-4-2013 அன்று முதலமைச்சர் தமிழகச் சட்டப் பேரவையில் 110வது விதியின்கீழ்ப் படித்த அறிக்கையில், “கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டும், இங்கிருந்து செல்லும் பேருந்துகளில்
பாதிக்கு மேல் தென்மாவட்டங்களுக்குச் செல்பவையாக இருப்பதைக் கருத்தில் கொண்டும், தென் மாவட்டங்களிலிருந்து வந்துசெல்லும் பேருந்துகளுக்கென தெற்கத்திய பெருஞ்சாலை மற்றும் வெளிவட்டச் சாலை ஆகியவற்றிற்கு இடையே வண்டலூர் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வண்டலூரில் புதியதாக உருவாக்கப்படும் இந்தப் புறநகர் பேருந்து நிலையத்தில், புறநகர் பேருந்துகளை இயக்குவதற்கான இடம், மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்கான இடம், வாகனங்கள் நிறுத்துவதற்குத் தேவையான இடம், போக்குவரத்துப் பணிமனை வசதிகள், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், பொதுமக்களுக்குத் தேவையான உணவகங்கள், சிறு கடைகள், பொதுக் கழிப்பிட வசதி ஆகிய எல்லா வசதிகளும் ஏற்படுத்தித்தரப்படும்” என்று ஜெயலலிதா அறிவித்து, அந்தச் செய்தி அப்போது ஏடுகளில் எல்லாம் பெரிதாக வந்தன.
தமிழகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின்கீழ் இந்தத் திட்டத்தை அறிவித்து இரண்டு ஆண்டுகளும் நான்கு மாதங்களும் ஓடிவிட்டன! வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் வந்துவிட்டதா ஜெயலலிதா அந்த அறிவிப்பில் செய்த திட்டங்கள் எல்லாம் வந்துவிட்டனவா என்றால்; இல்லை! வேதனைதான் மிச்சம்.
இவ்வாறு வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்ததற்கு, அந்தப் பகுதி விவசாயிகள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர் என்று செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தியில், புதிய பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கூறும்போது “வண்டலூர் வாலாஜாபாத்தை ஒட்டியுள்ள நஞ்சை விவசாய நிலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் பல குடும்பங்கள் விவசாயம் செய்து வருகின்றன. ஏற்கனவே சாலை விரிவாக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா அமைப்பதற்காகப் பல ஏக்கர் நிலங்களை அரசு எடுத்துள்ளது. 1985இல் வண்டலூர் பூங்காவைத் திறந்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். வண்டலூரில் ஏராளமான நிலங்கள் கையகப்படுத்தப் பட்டுவிட்டன. இனி ஒரு நிலம்கூட எடுக்கப்பட மாட்டாது என்றார். ஆனால் இப்போது விவசாய
நிலத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று இன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, புறநகர் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்” என்று கூறியதாக “தினமலர்” நாளேடு அப்போது எழுதியிருந்தது.
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று முதல் அமைச்சர் பேரவையில் 110வது விதியின் கீழ் அறிக்கை படித்தவுடன், ஏற்கனவே வேளச்சேரியிலும், மாதவரத்திலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்போவதாக தீட்டப்பட்ட திட்டங்கள் என்னவாயிற்று என்று அப்போதே நான் கேட்டிருந்தேன். அதற்கு அரசுத் தரப்பிலிருந்து பதில் வராவிட்டாலும், “தினமலர்” நாளேட்டில் 14-5-2013 அன்று வெளிவந்துள்ள செய்தியில், “வேளச்சேரி வெளியூர் பஸ் நிலையம் கைவிடப்படுகிறது - சி.எம்.டி.ஏ. புதிய முடிவு” என்ற தலைப்பில் செய்தி வந்தது.
“முதலமைச்சர் வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று 110வது விதியின்கீழ் அறிக்கை படித்து - அந்த அறிவிப்பை அந்தப் பகுதி விவசாயிகள் எம்.ஜி.ஆரின் வாக்குறுதியை எடுத்துக்காட்டி எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்ற நிலையில் தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? வண்டலூரில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி புறநகர் பேருந்து நிலையம் வரப் போகிறதா? வேளச்சேரி, மாதவரம் புறநகர் பேருந்து நிலையங்களின் கதி என்ன? இதற்கான விளக்கங்களை முதல் அமைச்சர் மற்றொரு 110வது விதியின்கீழ் எப்போது படிப்பார்?” என்று 15-5-2013 அன்று நான் கேள்வி கேட்டிருந்தேன்.
நான் 15-5-2013 அன்று கேட்ட கேள்விக்கு, இரண்டாண்டுகள் கழித்து இப்போது 26-8-2015 அன்று; முதல் அமைச்சர் ஜெயலலிதா அல்ல, அந்தத் துறையின் அமைச்சர் வண்டலூர் பேருந்து நிலைய அறிவிப்பு பற்றி விளக்கம் அளித்திருக்கிறார். அமைச்சரின் அந்த விளக்கம் எந்த நாளேட்டிலும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. “இந்தியன் எக்ஸ்பிரஸ்” - 26-8-2015 தேதிய இதழில் மட்டும்தான் வந்துள்ளது. “தினமலர்” இணைய வெளியீட்டில் மட்டும் ஒரு சிறு பகுதியில் அமைச்சரின் இந்தப் பதிலை வெளியிட்டுவிட்டு, அச்சில்
வெளியாகும் பத்திரிகையில் அந்தப்பதிலை வெளியிடாமலே இருந்து விட்டார்கள். அமைச்சரின் பதில் வருமாறு:-
“The State Government has accorded administrative sanction for Rs. 376 crores to develop a mofussil bus terminus at Vandalur to decongest the CMBT at Koyambedu. Talks will be held with the land owners to acquire land, State Minister for Housing and Urban Development Minister R. Vaithilingam said on Tuesday. Replying to the discussion on demand for grants for the department in the Assembly, the Minister said a bus terminus near Vandalur-Walajabad road near the Vandalur railway station was announced by Chief Minister J. Jayalalithaa. But the process of land acquisition was being delayed as the Centre’s new land acquisition bill was awaiting Parliament approval”.
(கோயம்பேட்டில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வண்டலூர் ரயில் நிலையம் அருகே 376 கோடி ரூபாய் மதிப்பில் புறநகர் பேருந்து நிலையம் ஒன்றினை அமைக்க மாநில அரசு நிர்வாக ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும்; நிலத்தை அரசு வசம் எடுத்துக்கொள்வது சம்பந்தமாக நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் செவ்வாய்க்கிழமை அன்று அமைச்சர் வைத்தியலிங்கம் பேரவையில் தெரிவித்தார். பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்த அமைச்சர், ஏற்கனவே முதலமைச்சர் ஜெயலலிதா வண்டலூர் ரயில் நிலையம் அருகில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்போவதாக அறிவித்தார் என்றும், மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துவதற்கான புதிய மசோதா நாடாளுமன்ற ஒப்புதலுக்காகக் காத்திருப்பதுதான் வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கத் தாமதம் ஆகக் காரணம் என்றும் அமைச்சர் பேரவையிலே தெரிவித்தார்.) மேலும், அந்தப் பகுதியிலே அமைந்துள்ள நிலங்களை ஒருங்கிணைத்து ஒரு விரிவான திட்டம் தீட்டி அதிலே பேருந்து முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரவையிலே அமைச்சர் வைத்தியலிங்கம்
கூறியிருக்கிறார்.
இவ்வாறு அமைச்சர் பேரவையில் பதில் அளித்ததாக “எக்ஸ்பிரஸ்” ஆங்கில இதழில் செய்திவந்துள்ளது. இதன் மூலம் அமைச்சர் வைத்தியலிங்கம், முதலமைச்சர் ஜெயலலிதா நில எடுப்பிலே உள்ள பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் கருத்திலே
கொள்ளாமல் 2013ஆம் ஆண்டு இந்த அறிவிப்பினைச் செய்ததாகத் தற்போது கூறுகிறாரா? ஏனென்றால் அறிவிப்பைத் தான் செய்யவில்லை என்பதைப் போலவும் முதலமைச்சர் ஜெயலலிதா தான் அறிவித்ததாகவும் பேரவையில் பேசியதோடு மத்திய அரசின் புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டம் நிலுவையில் இருப்பதுதான், இந்தப் புறநகர் பேருந்து நிலையம் வர முடியாததற்குக் காரணம் என்றும் கூறுகிறார் என்றால், “ஏதோ காதிலே பூ சுற்றும் வேலை” என்பார்களே, அந்த வேலையிலேதான் அமைச்சர் ஈடுபட்டிருக்கிறாரோ? ஜெயலலிதா அறிவித்தது 2013ஆம் ஆண்டு. நாடாளுமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் சட்டம் தாமதமாவது 2014-2015. இந்தச் சட்டம்தான் பேருந்து நிலையம் அமையத் தாமதம் ஏற்பட்டதற்கான காரணம் என்கிறார் அமைச்சர் என்றால், “பொய் சொன்னாலும், பொருத்தமா சொல்லுங்கடா, போக்கத்த பசங்களா” என்ற உடுமலை நாராயணக் கவிராயரின் வார்த்தைகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன.
நில உரிமையாளர்களிடம் எல்லாம் நேரடியாக இனிமேல்தான் பேசப் போகிறார்களாம்! அமைச்சர் கூறுகிறார்! அப்படியானால் இந்த இரண்டு ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிரு ந்தார்கள்? வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்போவதாக ஜெயலலிதா பேரவையில் 110வது விதியின்கீழ் 2013ஆம் ஆண்டு அறிவித்துவிட்டு, இரண்டாண்டுகளுக்குப் பிறகு தற்போது அந்தத் திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதலே வழங்கியிருக்கிறார்கள் எனறால் எப்படிப்பட்ட பொய்யான அறிவிப்பினைப் பேரவையிலே செய்திருக்கிறார்? இந்தத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதே, அந்தப் பகுதியில் நிலம் இனிமேலும் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று அறிவித்திருக்கிறார் அல்லவா? அந்த நிலையில் எதை அடிப்படையாக வைத்து வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் 376 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்போவதாகப் பேரவையில் அறிவித்தீர்கள்?
இப்படிப் பொய்யான அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால் அமைச்சர் வைத்தியலிங்கம் நேற்று பேரவையில் பேசும்போது, “பொய் சொல்லியே அரசியல் பிழைப்பு நடத்தும் கருணாநிதியை நம்ப மக்கள் தயாராக இல்லை” என்று பேசியிருக்கிறார். பொய் சொல்லியே அரசியல் பிழைப்பு
நடத்துவோர் யார் என்ற உண்மை இப்போது தெளிவாகிறதா அல்லவா? அமைச்சர் பேரவையில் இது மட்டுமா பேசியிருக்கிறார்? மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதில் சொல்ல வந்த அமைச்சர், டாக்டர் ராமதாஸ் பற்றியும், அன்புமணி ராமதாஸ் பற்றியும் எந்த அளவுக்குக் கடுமையாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவுக்கு விமர்சனம் செய்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பற்றியோ கேட்கவே வேண்டாம்! “மது விலக்குப் பிரச்சினையில் விஜயகாந்த் தள்ளாடுகிறார். குடித்தே ஒழிக்கக் கூடியவர் விஜயகாந்த்” என்றெல்லாம் அமைச்சர் தனது பதிலுரையில் பேரவையிலே நாகரிகமின்றித் தெரிவித்திருக்கிறார் என்றால் நடைபெறுவது சட்டமன்றம்தானா என்ற கேள்வி எழுகிறதா அல்லவா?
வண்டலூரைப் போலவேதான், 8-9-2011 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின்கீழ்ப் படித்த அறிக்கையில் 2,160 கோடி ரூபாய் செலவில் திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். அறிவித்து நான்காண்டுகள் முடியப்போகிறதே, எங்கே துணைக்கோள் நகரம் என்று கேட்டிருந்தேன். அதற்கும் அமைச்சர் பேரவையில் பதில் கூறியிருக்கிறார். துணைக்கோள் நகரத்தை எங்கே அமைத்திருக்கிறார் என்று தெரிவித்துப் பதில் கூறியிருக் கிறாரா என்றால் கிடையாது. மாறாக, “Action is being taken to form a new satellite township with 12000 residential flats at an estimated cost of Rs. 2,160 crores over an extent of 311.05 acres at Thirumazhisai” அதாவது, 2,160 கோடி ரூபாய்ச் செலவில் திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம்.
இதுபோலவே மதுரை விமான நிலையத்திற்கு அருகே துணைக்கோள் நகரம் ஒன்று 120 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப் போவதாக ஜெயலலிதா 4-4-2013 அன்று 110வது விதியின்கீழ்ப் பேரவையில் படித்தார். அதுவாவது முடிந்துவிட்டதா என்று கேட்டிருந்தேன். அமைச்சர் வைத்தியலிங்கம் நேற்று பேரவையில் அளித்த பதில், “The preparation of concept and theme based layout for a Satellite township at Thoppur-Uchapatti in Madurai was under way” - அதாவது அந்தத் திட்டம் தொடக்கக் கட்டத்திலே இருக்கிறதாம். 120 கோடி ரூபாயில் எத்தனை கோடி
ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது? அமைச்சர் ஏன் பேரவையிலே அதைத் தெரிவிக்கவில்லை? தெரிவிக்க முடியாது; ஏன் என்றால் செலவழித்தது, வெறும் 7 இலட்சம் ரூபாய்தான்!
உடன்பிறப்பே, நான்காண்டுகளுக்கு முன்பும், மூன்றாண்டுகளுக்கு முன்பும் 110வது விதியின்கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் கதியே இதுவென்றால், தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா அன்றாடம் பேரவைக்கு 110வது விதியின்கீழ் அறிக்கை படிப்பதற்காக மட்டுமே வருகைதந்து, படித்துவிட்டுப் போய் விடுகிறாரே, இந்த அறிவிப்புகளுக்கு ஏதாவது பொருள் இருக்குமென்று கருத முடியுமா? அதிலும் முக்கியமான திட்டம் என்னவென்றால், “அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்” தொடங்கப்படும் என்பதுதான். அதுவும் ஏதாவது புதிய திட்டமா என்றால் கிடையாது. ஏற்கனவே மருத்துவமனைகளில் நடைபெற்று வரும் திட்டம்தான். அதாவது ரத்த பரிசோதனை, ரத்தக் கொழுப்புப் பரிசோதனை, இதயப் பரிசோதனை போன்றவைகளை மருத்துவமனைகளிலே செய்து கொள்ளும் திட்டம். இதைத்தான் ஏதோ புதிய கண்டுபிடிப்பைப் போல அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முழு உடல் பரிசோதனைத் திட்டத்தைத் தொடங்கிட திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேயே 11-6-1999 அன்று ஆணையிடப்பட்டுள்ளது. முதல் அமைச்சருக்குச் சந்தேகம் இருந்தால், தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய அரசாணையை வாங்கிப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
அதிலும் அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் ஆண்களுக்கான திட்டமாம்! “அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம்” என்பது மகளிருக்கான திட்டமாம். இப்படி ஒரு அறிவிப்பு. இதையே கிராமத்தில் செய்துகொண்டால், அதற்கு “அம்மா ஆரோக்கியத் திட்டம்” என்று பெயராம்! இன்னும் சொல்லப்போனால் கிராமப் பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க ஏதுவாக “வருமுன் காப்போம் திட்டம்” என்ற பெயரிலே தி.மு. கழக ஆட்சியிலேயே 1997ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.
பின்னர் வந்த அ.தி.மு.க. ஆட்சியில் கைவிடப்பட்ட இந்தத் திட்டம் 30-12-2006 அன்று மீண்டும் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டு, 28-2-2011 வரை தமிழகம் முழுவதிலும் 19 ஆயிரத்து 272 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1 கோடியே 81 லட்சத்து 66 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். ஆனால் இப்போதுதான் முதல் முறையாக இப்படியொரு திட்டத்தை அறிவிப்பதைப் போலச் செய்கிறார்கள் என்றால், இந்தத் துறையினர் தமிழக மக்கள் ஏதுமறியாத அப்பாவிகள் என நினைத்து ஏமாற்றுகிறார்களா? அல்லது முதலமைச்சர் ஜெயலலிதாவைப் புகழ்வதைப் போலக் காட்டிக்கொள்வதற்காக ஏதாவது புதிய திட்டத்தைத் தயாரித்துக் கொடுக்க வேண்டுமென்ற கட்டாயத்திற்காக இப்படியெல்லாம் பெயர்களைச் சூட்டி வேடிக்கை காட்டுகிறார்களா என்பதை வாக்களித்த மக்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும்.
அதைவிட முதலமைச்சரிடம் எப்படிப்பட்ட தவறான அறிக்கைகளையெல்லாம் எழுதிக் கொடுத்துப் பேரவையிலே அறிவிக்கச் செய்கிறார்கள் என்பதை ஜெயலலிதா புரிந்துகொள்வது நல்லது. இத்தகைய அறிவிப்புகளை அப்படியே வரிக்கு வரி வெளியிடப் பத்திரிகைகளும், வானளாவப் புகழ் சில அரசியல்வாதிகளும் இருக்கின்றவரை, ஏமாறுகிறவர்கள் இருக்கின்றவரை ஏமாற்றுவோர் இருக்கத்தானே செய்வார்கள்! ஏமாறுகிறவர்கள் திருந்துவது எப்போது? ஏமாற்றுவோரின் பிடியிலிருந்து தமிழகம் மீளுவதுதான் எப்போது? அன்புள்ள, மு.க. 30-8-2015
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 53 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 53 PDF ↗