தொகுதி 53 · கடிதம் 3978
முதலீட்டாளர்கள் மாநாடு: தேர்தலை முன்னிட்டு நடத்திய ‘தகிடுதத்தம்’ தானே!
2015-09-11
உடன்பிறப்பே,
“தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது” என்று கிராமங்களில்
ஒரு பழமொழி உண்டு. அதைப் போல நான்காண்டு காலமாக நன்றாகத் தூங்கிவிட்டு, தற்போது திடீரென்று தூக்கம் கலைந்து விழித்தெழுந்து, சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டைக் கூட்டி முதலீடுகளைக் குவிக்கப் போவதாக அறிவித்துக் கொண்டு, ஏதோ ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். அந்த மாநாட்டைப் பற்றி எழுதியுள்ள அனைத்து நாளேடுகளும், அந்த மாநாட்டையொட்டி அ.தி.மு.க.வினர் நடத்திய “குத்தாட்டம்” குறித்தும், நகரம் முழுவதும் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் முணுமுணுப்பு குறித்தும் எழுதத் தவறவில்லை. அ.தி.மு.க. ஆட்சியினர் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இது போல முதலீட்டாளர்களையெல்லாம் அழைத்துப் பல நூறு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு விட்டது, பல நூறு பேருக்கு வேலைவாய்ப்பு என்றெல்லாம் ஒரு பெரிய விளம்பரம் செய்தார்கள். ஆனால் முதலீடும் வரவில்லை; வேலை வாய்ப்பும் ஏற்படவில்லை. அப்போது போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களே உருப்படியாக நிறைவேறவில்லை என்கிறபோது, அ.தி.மு.க. ஆட்சியினர் போகிற போக்கில் போடுகின்ற ஒப்பந்தங்களுக்கு ஏதாவது மதிப்பு இருக்கப் போகிறதா என்ன? அதனால் இப்போது வந்திருக்கும் தொழில் முதலீட்டாளர்கள்கூட மிகுந்த எச்சரிக்கையாகவும் கவனமாகவும்
அடுத்த மூன்றாண்டுகளில் இவ்வளவு கோடி ரூபாய் முதலீடு
செய்யப் போகிறோம், அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் இவ்வளவு
கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டிருக்கிறோம் என்று
தெரிவித்திருக்கிறார்கள். தற்போது நடைபெறும் சர்வதேச
முதலீட்டாளர் மாநாட்டிற்குப் பல்வேறு நாடுகளிலிருந்தும்
முதலீட்டாளர்கள் வந்திருப்பதாக விளம்பரப்படுத்தியும்கூடத்
தொடக்க விழாவின்போது அன்னிய முதலீட்டாளர் எவரும் பேசியதாகத் தெரியவில்லை. தொழில் முதலீடு குறித்து அ.தி.மு.க. ஆட்சியினர் கடந்த நான்கரை ஆண்டுக்காலத்தில் என்ன செய்தார்கள், அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுகிறேன்.
கடந்த ஆண்டு 13-2-2014 அன்று தமிழகச் சட்டப் பேரவையில், அ.தி.மு.க. அரசின் சார்பாக நிதிநிலை அறிக்கையைப் படித்த ஓ. பன்னீர்செல்வம், அந்த அறிக்கையின் பக்கம் 31இல் “நமது மாநிலத்தில் தொழில் வளத்தையும் கட்டமைப்பையும் மேலும் ஊக்குவிக்க இந்த அரசு, வரும் அக்டோபர் மாதத்தில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தும் என்பதை இந்த மாமன்றத்திற்கு மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன். இதற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று படித்தார். இது சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் படித்த அறிவிப்பு! ஆனால் அமைச்சர் பேரவையில் படித்தபடி அக்டோபர் மாதத்தில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றதா என்றால் அதுதான் இல்லவே இல்லை. நிதிநிலை அறிக்கையிலே கூறப்பட்ட அறிவிப்புக்கே இந்தக் கதி!
இது பற்றிக் கேட்டால், 2012ஆம் ஆண்டிலேயே ஒரு முறை ஒரே நாளில் 12 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதாகவும், அதன் மூலம் 36,855 பேருக்கு வேலை கிடைக்குமென்றும், 20 ஆயிரத்து 925 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகள் தொடங்குமென்றும் பூதாகாரமாக அறிவிப்பு செய்தார்களே, மீண்டும் ஒருமுறை 5,081 கோடி ரூபாய்க்கு 16 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது என்று அறிவித்தார்களே; அந்த அறிவிப்புகள் எல்லாம் என்ன ஆயிற்று? காற்றோடு கலந்துவிட்டன. குறிப்பிட்டபடி 12 நிறுவனங்களும் தொழிற்சாலைகளைத் தொடங்கினவா? உறுதியளிக்கப்பட்ட முதலீடு வந்ததா? அதற்குப் பிறகு, ஏற்கனவே செய்த அறிவிப்புகளை யெல்லாம் மறந்து 26,625 கோடி ரூபாய் அளவிற்கு மொத்த முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, அதன் தொடர்ச்சியாக 10,660 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும்,
இதனால் 10,022 பேருக்குக் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் புதிதாகத் தெரிவித்தார்கள்.
அதன் பிறகு, 2015ஆம் ஆண்டு மே மாதத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று பன்னீர்செல்வம் அறிவித்தார். அதுவாவது நடைபெற்றதா என்றால் இல்லை. முதலமைச்சர் ஜெயலலிதா கோவையில் பேசும்போது, அவருடைய மூன்றாண்டு கால ஆட்சியில் 33 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 31,706 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல நிறுவனங்களுடன் போடலாம்; உண்மையில் தொழில்கள் தொடங்கப்பட்டால்தானே மாநிலத்துக்குப் பலன் ஏற்படும்! உண்மை நிலை என்ன? அதுபற்றி நான் அல்ல, பொதுவான வார இதழான “ஆனந்த விகடன்” என்ன எழுதியது தெரியுமா? “தமிழ்நாட்டில் செயல்படும் “ஹுண்டாய்” கார் தொழிற்சாலையின் விரிவாக்கம் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் அமையலாம் என்று கூறப்படுகிறது. “இசுஸு” நிறுவனம் ஆந்திராவுக்குச் சென்று விட்டது. சென்னையில் செயல்படும் “செயின்ட் கோபைன்” கண்ணாடி தயாரிக்கும் நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான விரிவாக்க ஆலை, ராஜஸ்தானுக்குச் சென்று விட்டது. தமிழ்நாட்டின் ராம்கோ சிமெண்ட் நிறுவனமே, ஆண்டுக்கு 2.5 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் தனது தொழிற்சாலையை ஆந்திராவில் அமைக்க அனுமதி பெற்றிருக்கிறது. இவற்றைத் தமிழ்நாட்டில் தக்கவைக்கும் முனைப்புகளில்கூட கவனம் செலுத்தவில்லை தொழில் துறை அமைச்சகம். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக் குறைந்திருக்கின்றன என்கின்றன புள்ளி விவரங்கள்! தொழில் துறையில் பல தங்கு தடைகள் நிலவுவதால், பன்னாட்டு - உள்நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யத் தயங்குகின்றன. அந்த முதலீட்டாளர்களைத் தமிழ்நாடு நோக்கி ஈர்க்க ஒரு மாநாடு நடத்தக்கூடத் திறமை இல்லாமல்,
துவண்டு கிடக்கிறது தொழில்துறை அமைச்சகம். தொழில்துறை அமைச்சரைத் தொழிலதிபர்களால் சந்திக்கக்கூட முடிவதில்லை. மின்வெட்டு, நிர்வாகச் சிக்கல்கள், அதிகரிக்கும் செலவினங்கள் என, தொழில் முதலீட்டுக்குச் சாதகமான சூழல் தமிழ்நாட்டில் இல்லை என்பதால், பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றும் முனைப்பில் இருக்கின்றன” - என்று “ஆனந்த விகடன்” இதழ் ஜெயலலிதா அரசின் தொழில் துறைக்குச் சான்றிதழ் அளித்திருக்கிறது. தமிழகத்தில் நடந்து வந்த “ஃபாக்ஸ்கான்” தொழிற்சாலை, மராட்டிய மாநிலத்திற்குச் செல்ல அங்கே 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டிருக்கின்றது. ஏற்கனவே தமிழகத்தில் நடைபெற்று வந்த தொழில்களாவது தக்கவைக்கப்பட்டனவா? தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தூத்துக்குடி “ஸ்பிக்” நிறுவனமும், “மெட்ராஸ் பெர்டிலைசாஸ்” நிறுவனமும் மூடப்படும் நிலையில் இருக்கின்றன. “தமிழ்நாடு பெட்ரோ-ப்ராடக்ட்ஸ்” நிறுவனம், “திருச்சி டிஸ்டிலரீஸ்” நிறுவனம், “தூத்துக்குடி அல்கலின் கெமிகல்ஸ் நிறுவனம்” ஆகியவை ஏற்கனவே மூடப்பட்டு விட்டன. பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் மூன்றாண்டுகளுக்கு முன்பே பணிகள் தொடங்கப்பட்ட கடலூர், “நாகார்ஜுனா பெட்ரோ கெமிகல்” தொழில் வளாகம் எப்போது உற்பத்தி தொடங்கும் என்றே தெரியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. பஞ்சாலைத் தொழில் பல பிரச்சினைகளினால் நலிந்து வருகிறது. பட்டாசு தயாரிக்கும் தொழில் மறைமுக ஆக்கிரமிப்பினால் நசுங்கிக் கொண்டிருக்கிறது. கைத்தறி - விசைத்தறித் தொழில் சுருங்கிச் சுருண்டு கொண்டிருக்கிறது. பொய் நெல்லைக் குத்திப் பொங்க நினைத்து, கை நெல்லை விட்ட கதைதான், தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது!
மே மாதம் நடக்கவிருந்த இந்த மாநாட்டையொட்டி 13-2-2015 அன்று சென்னையில் நடைபெற்ற முன்னோட்ட மாநாட்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏழு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று மிகப் பெரிய விளம்பரம் செய்தார்களே தவிர அங்கே அந்த நிகழ்ச்சியே அந்த முன்னோட்ட மாநாட்டில் நடைபெறவில்லை என்பது வெட்கக்கேடு அல்லவா?
தமிழக அரசின் தொழில் அமைச்சர் “குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம், வரிச்சலுகையும் தருகிறோம் என்று சொல்லி, ஆந்திர மாநிலத்திற்கு அழைக்கிறார்கள். அது போல ஆந்திர முதல்வர் இந்தவழியாகச் சென்னைக்கு வந்து செல்லும் போதெல்லாம் நம் தொழிலதிபர்களை அழைத்துக் குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம் என்று பேசுவார்” என்று வெளிப்படையாகவே கூறினார். அதிலிருந்தே தமிழகத்தின் நிலைமை என்ன என்று அப்போதே தெரிந்துவிட்டது. இவர்கள் ஆளுகின்ற ஒரு மாநிலத்திற்கு வேறொரு மாநில முதல் அமைச்சர் வந்து கூட்டம் போட்டுத் தொழில் முதலீட்டாளர்களுக்கு நேரடியாகவே அழைப்பு விடுக்கிறார்கள் என்றால், அதற்காக இந்த ஆட்சியினர் வெட்கப்படத்தான் வேண்டும்.
கர்நாடக முதலமைச்சர் கோவையில் கூட்டம் போட்டு, தமிழகத் தொழில் முதலீட்டாளர்களை அழைக்கிறார் என்று நான் கற்பனையாகச் சொல்லிவிடவில்லை. “தினமலர்” நாளேடு தி.மு. கழக இதழ் அல்ல! தி.மு.க.வைக் கடுமையாக விமர்சிக்கின்ற ஏடுதான். அந்த இதழில் ஜனவரி 22ஆம் தேதி ஒரு செய்தி வந்தது. அதன் தலைப்பே, “தள்ளிவிடும் தமிழகம்; கவர்ந்திழுக்கும் கர்நாடகம் - கை நழுவிய 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு”
என்பதாகும்.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிக அளவில் தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து, அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சருடனும், அதைப்போலத் தமிழகத்தில் மேலும் முதலீடு செய்வது குறித்து அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னருடனும் பன்னீர்செல்வம் பேச்சு வார்த்தை நடத்தியதாக ஒரு செய்திவந்தது. அதுவும் என்னவாயிற்று என்று தெரியவில்லை.
சர்வதேச முதலீட்டாளர் மாநாடு மே மாதம் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவித்து, முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக வெளிநாட்டினரைக் கவர்ந்திழுக்கச் செல்வதாக ஒரு பிரச்சாரம் செய்யப்பட்டு, அதற்காக அதிகாரிகள் எல்லாம் வெளிநாடுகளுக்குப் படையெடுத்த செய்தியும் வந்தது. தமிழக அரசின் தொழில் அமைச்சர் சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் வர உள்ளதாகவும், அதன் மூலம்
ஒரு இலட்சம் கோடி ரூபாய் தமிழகத்திலே முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். அவர் அவ்வாறு அறிவித்த ஒரு சில நாட்களிலேயே முதலீட்டாளர்கள் மாநாடு மேலும் தள்ளி வைக்கப்படுவதாக அரசினால் அறிவிக்கப்பட்டது. சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளூர் தொழிலதிபர்களை அழைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்று சேலத்தில் நடைபெற்றதாகவும், அந்தக்கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், தொழில் துறையின் சிறப்புச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டதாகவும், அதிலே அமைச்சர்கள் பேசிய போது மே மாதத்தில் மாநாடு நடைபெறும் என்று பேசினார். ஆனால் அவர்களுக்குத் தெரியாமலேயே, மாநாடு ஒத்தி வைக்கப்பட்டுச் செப்டம்பரிலே நடைபெறும் என்று சென்னையில் அறிவிப்பு வந்தது.
சர்வதேச முதலீட்டாளர்களின் மாநாட்டின் மூலம் அனைவரும் ஆச்சரியப்படும் எண்ணிக்கையில் முதலீட்டாளர்களும் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடும் தமிழகத்திற்கு வரப்போகிறதென்று தொடர்ந்து வரும் செய்தியைக் கண்டு யாரும் மிரட்சி அடைய வேண்டாமென்று தலைப்பிட்டு “கணினி” இதழ் ஒன்று ஏராளமான விவரங்களைத் தெரிவித்திருக்கிறது. ஒரு இலட்சம் கோடி ரூபாய் முதலீட்டிற்கான ஒப்பந்தம் ஏற்படப் போகிறதென்று “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேடு கூறுகிறது. மின்சாரத் துறையில் மட்டும் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமான முதலீட்டுக்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, மொத்த ஒப்பந்தம் இரண்டு இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிடுமென்று “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” நாளிதழ் தெரிவித்திருக்கிறது. பெரிதும் மிகைப்படுத்தப்படும் முதலீடுகளின் மூலம் ஒரு பைசா முதலீடுகூட வராத நிலையில், ஒரு தாளில் ஒப்பந்தம் போடப்படுவதையே மிகைப்படுத்தி செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படப் போகின்றன? எப்போது அவை செயலாக்கத்திற்கு வரும்? அதற்கான காலநிர்ணயம் ஏதும் செய்யப்பட்டிருக்கிறதா? புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தமிழக அரசும், முதலீட்டாளர்களும், அவர்கள் வழங்கிடும் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான அடிப்படை ஆதாரங்களைப் பெற்றுள்ளார்களா? அரசின் தொழிற்கொள்கையும், அரசு அதிகாரிகளும் தொழில் திட்டங்களைச் சிறிதும் தாமதிக்காமல்
செயலாக்கத்திற்கு அனுமதித்து ஒத்துழைப்பார்களா? என்ற கேள்விகள், செய்திகளைப் படிக்கும் அனைவருடைய மனதிலும் எழுவது இயற்கையே! இவற்றில் முக்கியமான கேள்வி, கையெழுத்திடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் எத்தனை ஒப்பந்தங்கள் உண்மையிலேயே செயலாக்கத்திற்கு வரப்போகின்றன என்பதுதான்! இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதற்குமுன் தொழில் முதலீடுகள் சம்பந்தமாகத் தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டாக வேண்டும். 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் 73,298 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகச் செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் அவற்றுள் வெறும் 235 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறது. உண்மையில் வந்து சேர்ந்த முதலீடு 0.3 சதவிகிதம்தான் என்பதை அறிய அனைவரும் வெட்கப்பட வேண்டும்! 2012ஆம் ஆண்டில் 21,253 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஆனால் 524 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே செயலாக்கத்துக்கு வந்திருக்கிறது. செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு 2.4 சதவீதம் மட்டுமே. 2013ஆம் ஆண்டில் 27,380 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 2292 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே வந்திருக்கிறது. செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு 8.3 சதவீதம்தான். 2014ஆம் ஆண்டில் 14,596 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, 2500 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. செயலாக்கத்துக்கு வந்திருக்கும் முதலீடு 17 சதவீதம்தான். 2015ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரை 17,412 கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, வெறும் 41 கோடி ரூபாய் முதலீட்டுக்கான பணிகள் மட்டுமே நிறைவேறியிருக்கின்றன. செயலாக்கத்துக்கு வந்திருக்கும் முதலீடு வெறும் 0.2 சதவீதம் தான் என்பது எவரையும் தலை குனிய வைப்பதாகும்.
ஆக அ.தி.மு.க. ஆட்சியில் 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம்வரை செயலாக்கத்துக்கு வந்துள்ள முதலீடு வெறும் 5.64 சதவீதம்தான். இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படும் முதலீடுகளின் அளவுக்கும், உண்மையிலேயே செயலாக்கத்துக்கு வரும் முதலீடுகளின் அளவுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருப்பதற்கு, மின்சாரம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்பு தேவையான அளவுக்கும் தரத்திற்கும் இல்லாததும், அரசின் தொழில்கொள்கையும் - அதிகார அமைப்பும் தொழில் முதலீட்டாளர்களுக்கு அனுசரணையான அணுகுமுறையினைக் கையாளாததும்தான். கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உகந்த முறையெதையும் பின்பற்றாமல், முதலீடுகளை ஈர்ப்பதில் மிகப் பெரிய தோல்வி ஏற்பட்ட பிறகு, 2016 தேர்தல் விளம்பரத்திற்காகக் கடைசி நேரத்தில் சாதிக்கப் போகிறோம் என்று சவடால் பேசுவது எந்த அளவுக்குச் சாத்தியமாகி நல்ல விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது? அன்புள்ள, மு.க. 11-9-2015
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 53 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 53 PDF ↗