உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 52

தொகுதி 52 · கடிதம் 3958

நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும்!

2015-03-13

உடன்பிறப்பே,

ஜெயலலிதாவின் 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு விசாரணை, 5-1-2015 அன்று தொடங்கி, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மின்னல் வேகத்தில் வழக்கறிஞர்களின் வாதங்கள் முற்றுப்பெற்று நேற்றையதினம் நீதிபதி அவர்கள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இந்த நேரத்தில், இதுவரை விசாரணை நடைபெற்ற 38 நாட்களில், நீதிபதி குமாரசாமி அவர்கள் அவ்வப்போது குறுக்கிட்டுத் தெரிவித்த கருத்துகளை, தீர்ப்புக்கு முன்பு அனைவர்க்கும் நினைவூட்டவே இந்தக் கடிதம்!

16-2-2015 அன்று ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பி. குமார் “இது அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டுள்ள பொய் வழக்கு” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சி.ஆர். குமாரசாமி அவர்கள், “இது பொய் வழக்கு, பொய் வழக்கு என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்கிறீர்கள். ஆனால், குற்றவாளிகள் மீது கூறியுள்ள புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் முழுமையாகக் காட்டாமல், வாய் வழியாகப் பொய் வழக்கு என்று சொன்னால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அரசுத் தரப்பில் 259 சாட்சிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். புகார் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் 2 ஆயிரத்து 341 ஆவணங்கள் தாக்கல் செய்து உறுதிப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகள் தரப்பில் 99 சாட்சிகளும் 385 ஆவணங்கள் மட்டுமே தாக்கல் செய்துள்ளீர்கள். அதிலும் அரசுத் தரப்புக் குற்றத்தை முறியடிப்பதற்கான ஆதாரங்கள் சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை” என்றார் நீதிபதி குமாரசாமி அவர்கள்.

ஜெ. வழக்கறிஞர் குமார், ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது, ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கினார் என்று கூறியபோது, நீதிபதி குமாரசாமி அவர்கள், “முதல்வர் பதவியில் இருப்பவர் ரூ. 1 சம்பளம் வாங்கினாலும், பொது ஊழியராகத்தான் கருதப்படுவார். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் எனும்போது, ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு 66 கோடி ரூபாய் வருமானம் உள்ளதை லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இல்லை என்பதற்கு உங்கள் தரப்பில் எந்த ஆதாரமும் கொடுக்கவில்லையே” என்று நீதிபதி சொல்லியிருக்கிறார்.

சுதாகரன் திருமணச் செலவு பற்றிய விவாதம் நடைபெற்ற போது, குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி அவர்கள், “இத்தனை கோடி ரூபாய் செலவு செய்து இவ்வளவு பிரமாண்டமாகத் திருமணம் செய்ய சுதாகரன் என்ன அ.தி.மு.க. தொண்டரா? அல்லது ஜெயலலிதாவின் மகனா? இதுவரை 28 நாட்கள் வாதம் செய்துள்ளீர்கள். தனி நீதிமன்ற நீதிபதி தவறாகத் தீர்ப்பு வழங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள். அவர் வழங்கியுள்ள தீர்ப்பில் என்ன குறை என்பதை 20 நாளில் உங்களால் உறுதி செய்ய முடியவில்லை. இப்படி இருந்தால் நான் மட்டும் என்ன செய்ய முடியும்? தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நானும் உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலைதான் தற்போது நிலவுகிறது. ரூபாய் 66 கோடி வருமானத்திற்குச் சொத்துள்ளது என்பதை இல்லை என்று மறுக்கும் வகையில் ஆதாரமில்லையே? ஒன்று, வாதத்திற்குத் தேவையான ஆதாரம் கொடுங்கள். இல்லையெனில் நானே ஒரு ஆடிட்டரை நியமனம் செய்துகொண்டு கணக்குகளைச் சரிபார்க்கிறேன். அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதமும் அவசியமில்லை நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்பு வழங்கி விடுகிறேன். இது தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று நீதிபதி குமாரசாமி கூறியிருக்கிறார்.

சுதாகரன், இளவரசி சார்பாக முன்னாள் நீதியரசர், சுதந்திரம் வாதத்தைத் தொடங்கும்போது, நீதிபதி குமாரசாமி:- இந்த வழக்கில் முக்கியமானது 120 பி - கூட்டுச்சதி, 109 குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல். ஜெயலலிதா அரசு பதவியில் இருந்தபோது சம்பாதித்த பணத்தை வைத்து, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருடன்

கூட்டுச்சதி செய்து சொத்துகள் வாங்கியதாகவும், ஜெயலலிதா குற்றங்கள் செய்ய சசிகலா, சுதாகரன், இளவரசி உடந்தையாக இருந்ததாகவும், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை பதிவு செய்திருக்கிறது. இதைப்பற்றிச் சரியாக யாரும் வாதிட வில்லை. நீங்கள் 120பி, 109 பற்றி வாதிடுங்கள். சுதந்திரம்:- ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) இ-யில் 120 பி, 109 வராது. ஏ.1 ஜெயலலிதா கூட்டுச்சதியில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் தமிழக ஊழல் தடுப்பு போலீசாரால் நிரூபிக்கப்படவில்லை. நீதிபதி:- ஜெயலலிதாவை ஏன் காப்பாற்ற நினைக்கிறீர்கள்? உங்கள் தரப்பு குற்றச்சாட்டுகளுக்காக மட்டும் வாதிடுங்கள். ஏ.1 (ஜெயலலிதா) வுக்காக வாதிட்டவரும், ஏ.2 (சசிகலா) வுக்காக வாதிட்டவரும் சாட்சியங்களின் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி வாதிடவில்லை. நீங்களாவது குற்றப் பின்னணி கொண்டவர்கள் கூட்டுச்சதி, குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது இல்லை என சாட்சிகளின் ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி வாதிட வேண்டும். வழக்கறிஞர் மணிசங்கர் சசிகலாவின் வழக்கறிஞர்):- ஜெயலலிதா குற்றம் செய்ய உடந்தையாக சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் இருந்தனர் என எந்த ஓர் அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி:- கூட்டுச்சதியில் ஈடுபடாதவர்களை எப்படித் தனி நீதிமன்றம் தண்டித்து இருக்கும்? தமிழக ஊழல் தடுப்புப் போலீசார் ஆதாரங்கள் இல்லாமல் வழக்கைப் பதிவு செய்யத்தான் முடியுமா? இல்லை, இந்த வழக்கை 18 ஆண்டுகள் நடத்தி இருக்கத்தான் முடியுமா? இல்லை, இதையெல்லாம் ஆராயாமல் தனி நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருக்கத்தான் முடியுமா? தேவை இல்லாததைப் பேசி நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குவதைவிட, தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தவறுகள் இருந்தால் அவற்றை உங்கள் தரப்பு ஆதாரங்களோடு நிரூபியுங்கள். இதுவரை 65க்கும் மேற்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளை மேற்கோள்காட்டித் தேவையில்லாமல் வாதிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதுவரை 20 சதவிகிதம் கூட ஆதாரங்களோடு வாதிடவில்லை. சுதந்திரம்:- பவானி சிங் எங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளைக் கூறி வாதிடட்டும், அதற்குப் பதில் சொல்கிறோம்.

நீதிபதி:- இதுபோன்ற கிரிமினல் வழக்குகளை எதன் அடிப்படையில் வாதிட வேண்டும் என்பது தெரியுமா? ஜெயலலிதாவைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மனுதாரரைப் பற்றிக் கவலைப்படுங்கள். அவர்களுடைய குற்றச்சாட்டுகளைப் பற்றி வாதிடுங்கள். வாதத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு அமையும்.

வழக்கறிஞர் குமார்:- ஜெயலலிதா செலவுப்பட்டியலில் இருந்து சுதாகரன் திருமணச் செலவு 6.45 கோடி ரூபாயை நீக்க வேண்டும்.

நீதிபதி:- உங்கள் தரப்பு வாதங்களை இப்படி வாய்மொழியாகவே பேசி வருகிறீர்கள். கட்டட மராமத்துப் பணிக்காக நீங்கள் செய்த செலவுக்கான ஆதாரங்கள் என்ன? அதற்கான சாட்சியங்கள் என்ன என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை உங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த சாட்சியங்களோடும் ஆதாரங்களோடும் 82 - 92 சதவிகிதம் நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் இதுவரை சாட்சிய ஆதாரங்களை காட்டவும் இல்லை. 30 - 35 சதவிகிதம் வரைதான் வாதிட்டிருக்கிறீர்கள்.

குமார்:- 35 மார்க் எடுத்தாலே பாஸ்தான்.

நீதிபதி:- பள்ளிக்கூடத்தில் 35 மார்க் எடுத்தால் பாஸாக இருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தில் எதிர்தரப்பை விட அதிக மார்க் வாங்கினால்தான் பாஸ் பண்ண முடியும். அப்படிப் பார்த்தால் உங்களைவிட அவர்கள் 65 மார்க் அதிகமாக வாங்கியிருக்கிறார்கள். அதனால் அவர்கள்தான் பாஸ். 18-2-2015 அன்று விசாரணை:-

சுதாகரன், இளவரசி ஆகியோரின் வழக்கறிஞர் சுதந்திரம், வழக்கு காலத்தில் அவர்களுக்கு இருந்த சொத்து தொடர்பான விவரப் பட்டியலை நீதிபதியிடம் அளித்து அது பற்றி விரிவான விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டுமென்றார். அதற்கு நீதிபதி குமாரசாமி அவர்கள், “கடந்த 18 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்த போது சொல்லாமல், இப்போது விரிவாகச் சொல்கிறோம் என்பது என்ன நியாயம்? கொடுத்த பட்டியலிலே என்ன இருக்கிறது” என்று கேட்டார். அதற்கு சுதந்திரம், சுதாகரனுக்கு

2 கோடியே 12 இலட்சத்து 47 ஆயிரத்து 978 ரூபாய் வருமானம் இருந்தது. அதில் 1 கோடியே 10 லட்சத்து 4 ஆயிரத்து 961 ரூபாய்க்கு அசையா சொத்து வாங்கினார். இந்தக் கணக்கை வக்கீல் சுதந்திரம் சரியாகச் சொல்லாமல் தடுமாறியபோது, நீதிபதியே தனது கையில் வைத்திருந்த கால்குலேட்டரைப் பயன்படுத்திச் சரியான கணக்கைத் தெரிவித்தார்.

“நீங்கள் இங்கே கூறிய கணக்கு பட்டியலை வருமான வரித் துறையில் காட்டிச் சான்றிதழ் பெற்றீர்களா” என்று நீதிபதி கேட்டதற்கு சுதந்திரம் “இல்லை” என்றார். அதற்கு நீதிபதி, “வருமானவரித் துறையில் தாக்கல் செய்யாத பட்டியலை இங்கே சொல்வது ஏன்? வழக்கு காலத்தில் இவ்வளவு சொத்து எப்படி வந்தது” என்று கேட்டார். அதற்கு சுதந்திரம், சுதாகரன் பல நிறுவனங்களில் இயக்குனராக இருந்தார், அதன் மூலம் பல வழிகளில் நடந்த வர்த்தகத்தில் வருமானம் கிடைத்தது என்று கூறியதோடு, தமிழகச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மாநிலம் முழுவதும் நடத்திய கண்காட்சிக்குத் தேவையான வாகனம், புரஜெக்டர்கள் உட்பட பல பொருள்கள் சப்ளை செய்யும் பொறுப்பு சூப்பர் டூப்பர் டி.வி. நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. பொருட்கள் சப்ளை செய்ததற்காக 42 லட்சம் ரூபாய் கட்டணம் வழங்க பில் கொடுத்தோம், சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 39.50 லட்சம் வங்கி வரைவோலை மூலம் வழங்கியுள்ளனர். அதை வருமானமாக எடுத்துக் கொள்ளாமல், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஊழல் மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை கூறியுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி அவர்கள், “அம்மா முதல்வராக இருக்கும்போது, மகனுக்குச் சொந்தமான கம்பெனிக்கு அரசுப் பணியைக் குத்தகை கொடுப்பது சட்டப்படி நியாயமா? இது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? என்று நீதிபதி கேள்வி எழுப்ப வக்கீல் சுதந்திரத்தால் பதில் கூற முடியவில்லை. அப்போது நீதிபதி, “நான் கடந்த 28 நாட்களாகத் தனி நீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டு வாதம் செய்யுங்கள் என்று வலியுறுத்தி வருகிறேன். ஆனால் நீங்கள் நான் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. பழைய சம்பவங்களை அசைபோட வேண்டாமென்று கூறியும், அதையே செய்கிறீர்கள். எப்படியோ நீங்கள் படிப்பதைப் படியுங்கள். இறுதியில் நானே

உண்மையை ஆராய்ந்து அதற்கேற்றபடி எனது தீர்ப்பை வழங்குகிறேன்” என்றார்.

வழக்கறிஞர் சுதந்திரம் 19 ஆம் தேதியன்று விசாரணையின் போது, “பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சுதாகரன், இளவரசியிடம் அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலம் குறித்து கேள்வி எழுப்பவில்லை. அவ்வாறு கேட்கப்படாத குற்றச்சாட்டை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பளிக்கக் கூடாது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “அரசு தரப்பு சாட்சியங்களின் அடிப்படையில் இளவரசியிடம் சுமார் 650 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதில் 95 சதவீதத்துக்கும் அதிகமான கேள்விகளுக்கு “ஆம், இல்லை” என்று மட்டுமே பதில் அளித்துள்ளார். உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், இளவரசி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தைப் படியுங்கள்” என்றார்.

மேலும் நீதிபதி, “குற்றவாளிகள் தரப்பில் வாய்மொழியாக முன் வைக்கும் வாதங்களை வைத்துத் தீர்ப்பு வழங்க முடியாது. ஆதாரங்கள், ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்க முடியும். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது வருமானத்தைப் பயன்படுத்தி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவித்தார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. அதனை எப்படி ஆதாரத்துடன் பொய் என்று நிரூபிக்கப் போகிறீர்கள்? சுதாகரனும், இளவரசியும் சட்ட விரோதமாக சொத்து குவிக்கவில்லை என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம், ஆவணங்கள் இருக்கின்றன? அந்தக் குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும் ஆவணத்தையும் நீங்கள் இதுவரை தாக்கல் செய்யவில்லை” என்று நீதிபதி குமாரசாமி தெரிவித்தார்.

20ஆம் தேதியன்று விசாரணையின் போது நீதிபதி குமாரசாமி, வழக்கறிஞர் சுதந்திரத்தைப் பார்த்து, “உங்கள் தரப்பு வாதத்தை முடித்துவிட்டீர்களா?” என்ற போது “ஆம்” என்றார். அதைத் தொடர்ந்து நீதிபதி, “கடந்த 31 நாட்களாக விசாரணை நடந்தது. டி.வி.ஏ.சி. பொய் வழக்கு போட்டுள்ளதாகக் கூறினீர்கள். ஆனால் அதற்கான ஆதாரம் கொடுங்கள் என்று நான் கேட்டதைக் கொடுக்காமலே. வாதத்தை நிறைவு செய்துள்ளீர்கள்” என்றார்.

கம்பெனிகள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், “எங்கள் நிறுவனங்களைக் குற்றவாளிகளுக்குச் சொந்தமானது என்று தனி நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்திச் சேர்த்துள்ளது. அது தவறு. வழக்கிலிருந்து கம்பெனிகளை நீக்க வேண்டும்” என்றார்.

அப்போது நீதிபதி குமாரசாமி அவர்கள், “சொத்துக் குவிப்பு வழக்கில் கம்பெனிகளைச் சேர்த்தபோது ஏன் எதிர்த்து மனு தாக்கல் செய்யவில்லை? அப்போது அமைதியாக இருந்துவிட்டு 18 ஆண்டுகளுக்குப் பின் இப்போது கேட்பதின் நோக்கம் என்ன?” என்று அந்த வழக்கறிஞரிடம் கேட்டபோது, வழக்கறிஞர் அமைதியாக இருந்திருக்கிறார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி, ஜெ. தரப்பு வழக்கறிஞர்களிடம் “நீங்கள் உரிய ஆவணங்களைக் காட்டாமல் வாயாலேயே சொல்லிக் கொண்டிருந்தீங்கன்னா, குன்ஹா கொடுத்த தீர்ப்பைத்தான் நானும் கொடுக்கவேண்டி வரும்” என்று நீதிமன்றத்திலேயே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், ஜெயலலிதாவுக்குக் கிடைத்த பரிசுப் பொருள்கள் அனைத்தும் அவரது வருமானத்திற்கு உட்பட்டது. அது தொடர்பாக வருமான வரித்துறையிலும் கணக்குக் காட்டியுள்ளோம். அதை தனி நீதிமன்றம் ஏற்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி அவர்கள், “வருமானவரித் துறை அதிகாரிகளின் நோக்கம் தனி மனிதர் யார் வந்து தனக்கு இவ்வளவு சொத்து உள்ளது என்று குறிப்பிட்டால் அதையேற்று அதற்கான வரி எவ்வளவு என்று முடிவு செய்து வசூல் செய்வது மட்டும்தான். ஆனால் ஊழல் தடுப்புச் சட்டத்தில் தனி மனிதர் சொத்து சேர்த்தால், எந்தச் சொத்து, எப்படி சேர்க்கப்பட்டது என்று கேள்வி கேட்கும் அதிகாரம் உள்ளது. நீங்கள் அடிக்கடி வருமான வரித் துறை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புகளை மேற்கோள் காட்டுவது ஏன்? 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளது தொடர்பாக விசாரணை நடத்தி வழங்கியுள்ள தீர்ப்பில் என்ன அநியாயம் நடந்துள்ளது என்பதை மட்டும் மையமாகவைத்து வாதம் செய்யுங்கள். தேவையில்லாமல் நீதிமன்ற நேரத்தை வீணாக்காதீர்கள் என்றார் நீதிபதி.

29-1-2015 அன்று விசாரணையின் போது, நீதிபதி (சசிகலாவின் வழக்கறிஞரைப் பார்த்து) வழக்கில் ஆஜராகி

வாதம் செய்வதற்குமுன் வாதத்திற்குத் தேவையான முழுத் தகவல்களையும் தயார் செய்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. வேண்டுமானால் அரசுத் தரப்பு சாட்சியான கனரா வங்கி அதிகாரி அருணாச்சலம் உட்பட அரசு சாட்சிகள் கொடுத்துள்ள வாக்குமூலத்தைப் படியுங்கள். அப்போதுதான் நீங்கள் சொல்வது தவறான தகவல் என்பது புரியும்.

வழக்கறிஞர்:- வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த புகாரில், ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது.

நீதிபதி:- இப்படி பொத்தாம் பொதுவாகத் தொடர்பு கிடையாது என்று சொல்ல வேண்டாம். இவ்வழக்கு 18 ஆண்டுகளாக நடந்துள்ளது. ஜெயாபப்ளிகேஷன்ஸ், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களில் இருவரும் பங்குதாரராக உள்ளனர். இதைக் குற்றவாளிகள் தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது.

வழக்கறிஞர்:- இவ்வழக்கு அரசியல் ரீதியாகப் பழி வாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டுள்ளது.

நீதிபதி:- சொத்துக் குவிப்பு வழக்கை முழுமையாக விசாரணை நடத்திய தனி நீதிமன்ற நீதிபதி குற்றவாளிகள் தவறு செய்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் தனது தீர்ப்பில் 150 முடிச்சுகள் போட்டுள்ளார். மேல்முறையீட்டு மனு விசாரணையில் அந்த முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து உரிய ஆதாரங்களுடன் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இதுவரை இந்த முடிச்சுகளை அவிழ்க்கும் முயற்சியை நீங்கள் யாரும் மேற்கொள்ளவில்லை. அதற்கான ஆதாரங்களையும் காட்டவில்லை.

பசந்த் (சசிகலா வழக்கறிஞர்):- மீடியாக்கள் எழுதும் தகவல்களை வைத்துத் தீர்ப்பு சொல்லக்கூடாது. இந்த வழக்கில் கீழ் நீதிமன்றம் ஆதாரங்கள் இல்லாமல் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

நீதிபதி:- சிறப்பு நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கின் 65 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களைப் படித்து, 252 சாட்சிகளிடம் விசாரித்து, உங்கள் தரப்பு, அரசுத் தரப்பு, வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்டு, முழுவதுமாக அலசி ஆராய்ந்துதான் 1,000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு

எழுதியிருக்க முடியும். ஆதாரங்கள் இல்லாமல் எப்படிக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கியிருக்க முடியும்?

இந்த வழக்கில் இன்றுவரை 28 நாட்களாக வாதிட்டு வருகிறீர்கள். கீழமை நீதிமன்ற நீதிபதி தவறாகத் தீர்ப்பு வழங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறீர்கள். ஆனால் அவர் வழங்கியுள்ள தீர்ப்பில் உங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தவறு என்று இந்த 28 நாட்களில் உங்களால் ஆதாரத்தோடு உறுதிப்படுத்த முடியவில்லை. இப்படி இருந்தால் நான் மட்டும் என்ன செய்ய முடியும்? கீழமை நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பையே நானும் உறுதிசெய்ய வேண்டிய சூழ்நிலையாகத்தான் இருக்கிறது. ஜெயலலிதா ரூ.66 கோடிக்குச் சொத்துகள் சேர்க்கவில்லை என்று சொல்வதற்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லையே? இப்படியே வாய்மொழியாகப் பேசி நீதிமன்ற நேரத்தை வீணாக்காமல் வாதத்துக்குத் தேவையான ஆதாரங்களைக் கொடுங்கள். இல்லை என்றால் நானே ஆடிட்டரை நியமனம் செய்து கணக்குகளைச் சரிபார்க்கிறேன். இதில் அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதமும் அவசியமில்லை. நானே ஆடிட்டிங் செய்து தீர்ப்பு வழங்கி விடுவேன். இது தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை.

சிறப்பு நீதிமன்ற நீதிபதி உங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்கிறீர்கள். ஆனால் கட்டிட கட்டுமானச் செலவுகளில் 13 கோடியில் 20 சதவிகிதத்தைக் குறைத்துத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றெல்லாம் நீதிபதி குமாரசாமி கூறியிருக்கிறார்.

சுதந்திரம் (சுதாகரனின் வழக்கறிஞர்):- சுதாகரனின் மொத்த சொத்து மதிப்பு 2,12,47,978.

நீதிபதி:- ஓகே வருமான வரித்துறையின் ஆவணத்தைக் கொடுங்கள். நீங்கள் கூறுவது, வருமான வரித்துறை கணக்கீட்டுக்கு ஒத்துப்போகிறதா?

சுதந்திரம்:- இல்லை.

நீதிபதி:- பிறகு ஏன் இந்தக் கணக்குகளை எல்லாம் என்னிடம் சொல்கிறீர்கள்? சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த

கணக்குகளைத்தான் இங்கேயும் தாக்கல் செய்ய வேண்டும். இந்தக் கணக்குகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

உடன்பிறப்பே, குற்றவாளிகள் மீது கூறப்பட்டுள்ள புகார் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரத்தையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் காட்டப்படவில்லை என்பதால் இதைப் பொய் வழக்கு என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்; ஒரு ரூபாய் மாத ஊதியமாகப் பெற்றதாகச் சொல்லிக்கொள்ளும் ஜெயலலிதாவுக்கு 66 கோடி ரூபாய் சொத்து உள்ளது என்பதை லஞ்ச ஒழிப்புக் கண்காணிப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது என்றும்; தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே உறுதிசெய்ய வேண்டிய சூழ்நிலைதான் நிலவுகிறது என்றும்; 65க்கும் மேற்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளைத் தேவையில்லாமல் சுட்டிக்காட்டியும் கூட, 20 சதவிகித அளவுக்குக் கூட எதிர்த்தரப்பில் ஆதாரங்களோடு வாதாடவில்லை என்றும்; இறுதியில் உண்மைகளை ஆராய்ந்து அதற்கேற்றபடி தீர்ப்பு வழங்குவேன் என்றும்; குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கும் எந்த ஆவணத்தையும், ஆதாரத்தையும் எதிர்த் தரப்பினர் தாக்கல் செய்யவில்லை என்றும்; டி.வி.ஏ.சி., பொய் வழக்கு போட்டுள்ளதாகச் சொல்வதற்குத் தேவையான ஆதாரத்தைக் கேட்டும் கொடுக்காமலேயே எதிர்த்தரப்பினர் வாதத்தை நிறைவு செய்துள்ளார்கள் என்றும்; அரசுத் தரப்பில் 259 சாட்சிகளின் வாக்குமூலமும், புகார்கள் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் 2,341 ஆவணங்கள் தாக்கல் செய்து உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும்; நீதிபதி குன்ஹா அவர்கள் கொடுத்த தீர்ப்பையே தானும் கொடுக்க வேண்டி வரும் என்றும்; கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி அவர்கள் அடுக்கடுக்காக எடுத்துச்சொன்ன காரணங்களையும் கருத்துக்களையும்தான் இங்கே தொகுத்து வழங்கியிருக்கிறேன். தீர்ப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது. பொறுத்திருப்போம்; நீதி என்றும் வெல்லும்; நிச்சயமாக வெல்லும்! எந்தக் குறுக்கு வழிகளாலும் அதைத் தடுக்க முடியாது! அன்புள்ள,

மு.க.

13-3-2015

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 52 PDF ↗