உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 52

தொகுதி 52 · கடிதம் 3957

கொள்கை காத்திட குவியட்டும் தேர்தல் நிதி!

2015-03-12

உடன்பிறப்பே,

2016ஆம் ஆண்டு ஏப்ரல், மே திங்களில் தமிழக அரசின் பொதுத் தேர்தல் வரவுள்ளது. ஐந்தாண்டுக் காலம் இந்த நாட்டு மக்கள் பட்ட துன்பங்களுக்கெல்லாம் விடிவு காலம் ஏற்படவிருக்கிறது. மக்கள் படும் வேதனைகளை எண்ணிப் பார்க்கும்போது, ஆளுங்கட்சிக்கு விடை கொடுத்து அனுப்பத் தயாராகி விட்டார்கள் என்ற போதிலும், “அவர்கள் இல்லாவிட்டால் நாம்தானே”, என்ற மதமதப்போடு நாம் இருந்து விடக் கூடாது. எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்ற எண்ணம் ஆளுங்கட்சியினரிடம் அதிகமாகவே உள்ளது. எதிர்க்கட்சிகளிடம் கூட்டணி இல்லை என்ற தைரியம் ஒரு புறம்! அதே நேரத்தில் ஆட்சி புரிந்த ஐந்தாண்டுகளில் எந்தெந்த வகையில் எல்லாம் பணத்தைக் குவிக்க முடியுமோ, அந்த வழிகளில் எல்லாம் ஆயிரக்கணக்கான கோடி நிதியைக் குவித்து வைத்துள்ள ஆளுங்கட்சி, திருவரங்கத்தில் வாக்குக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் வாரி வழங்கி, வெற்றியைச் சுலபமாக ஈட்டியதைப் போல, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியைப் பெற்றதைப் போல. 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவோடு இருக்கிறார்கள்.

சட்டப்பேரவையில் உள்ள பெரும்பான்மை பலம் காரணமாக, எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற பாணியில், யாரையும் மதிக்காமல் அதிலும் எதிர்க் கட்சியினர் எழுந்தாலே உட்கார வைத்து விடுகிறார்கள். மீறி எழுந்தால் அவையிலிருந்தே வெளியேற்றி விடுகிறார்கள். “கொல்லைப்புறமாக குவித்து வைத்துள்ள நிதி, அதிகாரப் பலம், காவல் துறையினரின் துணை, இவைகளே போதும் எங்கள் வெற்றிக்கு” என்ற நினைப்போடு

அ.தி.மு.க. தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. அவர்களை எதிர்த்துப் போட்டியிட - வாக்குகளுக்கு அவர்களைப் போல நிதி கொடுக்க - ஆடம்பரச் செலவுகளைச் செய்திட நம்மிடம் நிதியில்லை என்ற போதிலும், அத்தியாவசியமான, அவசியமான செலவுகளைச் செய்திட ஓரளவு நிதியையாவது நாம் சேர்க்க வேண்டாமா? ஆளுங் கட்சி, பட்டுப் புடவை கட்டிக் கொண்டு, பார், பார் நான் அணிந்திருக்கும் நகைக்கடையை என்று ஒய்யார நடைபோட்டு வரும்போது, எளிய கூறைப் புடவையையாவது கட்டிக் கொண்டு; தங்க வளையல் இல்லாவிட்டாலும், கண்ணாடி வளையல்களையாவது அணிந்து கொண்டு வர வேண்டாமா? அதற்கான வேண்டுகோளை உனக்குத் தெரிவிக்கத்தான் இந்தக் கடிதம்! நான் கேட்டபோதெல்லாம் இல்லை என்று மறுக்காமல் வாரி வழங்கிய உயிரனைய உடன்பிறப்பல்லவா நீ! உன்னிடம் கேட்காமல், நான் வேறு யாரிடம் சென்று கேட்பேன்? அதற்காகவே இந்த நினைவூட்டும் மடல்!

இந்தத் தேர்தலில் - எதிர் முகாமில் மலையென நிதி குவிக்கப்பட்டுள்ளது. நிதியென்று அதற்குப் பெயர் இல்லை. “தலைவிதியே” என்று பயந்துகொண்டு பலர் தந்தது. பலன் பெற்றதற்குப் பதிலாகப் பலர் தந்தது. அந்தப் பணத் தோட்டாக்கள்தான் இந்தத் தேர்தலில் நம்மீது பாயக் காத்துக் கொண்டிருக்கிறது. பாயும் அந்தத் தோட்டாக்கள், பட்டெனத் தெறித்து விழுமளவுக்கு பலம் வாய்ந்த நெஞ்சுரம் கொண்டது நம்முடைய கழகப் பட்டாளம் என்பதிலே சந்தேகமில்லை. அதனால் நமக்கு அச்சமும் இல்லை.

மேலும் தேர்தல் நிதி திரட்டுவதென்பது நம் கட்சிக்குப் புதிதல்ல; 1967ஆம் ஆண்டு தேர்தலுக்காக பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆணையை ஏற்று, எத்தனை எத்தனை சிற்றூர் பேரூர்களில்; கொடியேற்ற வேண்டுமா? கொடுங்கள் 500 ரூபாய்; சிறிய வரவேற்பா? ஆயிரம் ரூபாய்; வீட்டிற்குள் வந்து “டீ, காபி” அருந்த வேண்டுமா? ஐந்தாயிரம் ரூபாய் தேர்தல் நிதி; சிறப்புக் கூட்டமா? ஒரு இலட்ச ரூபாய் தரத் தயாரா? என்று கேட்டுக் கேட்டுப் பெற்று, விருகம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் மாநாட்டில் அண்ணா அவர்களிடம் 11 இலட்ச ரூபாய் நிதியை நான் கொடுத்த போது, அவர் முகத்திலே தான் எவ்வளவு மகிழ்ச்சி?

அந்த மகிழ்ச்சியோடு, வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த போது, சைதாப்பேட்டை தொகுதியில் யார் வேட்பாளர் தெரியுமா? “பதினோறு இலட்சம்” என்று கரவொலிக்கிடையே மகிழ்ச்சியோடு அறிவித்தாரே; மறக்கக்கூடிய செய்தியா அது? அப்போது அந்த 11 இலட்சத்துக்கே அந்த மகிழ்ச்சி - அந்தத் துள்ளல் - இன்ப, துன்பம் இரண்டையும் அளவோடு வெளிப்படுத்தும் இயல்பு கொண்ட அண்ணாவே பரவசத்தின் எல்லைக்குச் சென்றாரே, அப்போது அந்த 11 இலட்சம் பெருந்தொகை. இப்போது ஆளுங் கட்சியாக உள்ள கட்சிக்கு அந்த 11 இலட்சம் என்பது மிகச் சாதாரணம்! ஏனென்றால் அவர்கள் இந்தத் தேர்தலில் செலவழிக்கப் போவதெல்லாம் கோடி கோடியாக! அந்தக் கோடிகளைச் சந்திக்க நீயும், உன் போன்ற உடன்பிறப்புகளும் தரவிருக்கின்ற தேர்தல் நிதி எவ்வளவு?

இன்னும் சரியாக ஓராண்டுதான் - ஆம் பன்னிரண்டே மாதங்கள்! அதற்குள் நாம் ஆற்ற வேண்டிய ஜனநாயகப் பணிகள் ஏராளம் - அதிலே ஒன்றுதான் தேர்தல் நிதி திரட்டும் பணி. இப்பணி மட்டுமல்ல, கழகப் பணி எதுவாயினும் முகம் சுளிக்காமல் விரைவில் அதனை நிறைவேற்ற, கழகக் காளைகள் ஆயிரம் ஆயிரம் பேர் தயாராக இருக்கிறீர்கள் என்பதை நான் நன்கறிவேன். கழகத்தின் சார்பில் 65 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, மாவட்டக் கழகச் செயலாளர்களாக வந்துள்ள அனுபவம் பெற்ற மூத்த தளகர்த்தர்களும் - புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இளங்காளையரும் இந்தத் தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சியைப் போட்டியாகவே ஏற்றுக் கொள்வார்கள் என்பதில் அய்யமில்லை. ஒன்றியச் செயலாளர்களோ ஒருவருக்கொருவர் கடும் போட்டியிட்டுக் கொண்டு, தேர்தல் நிதி வசூலில் எந்த ஒன்றியம் அதிக நிதியைச் சேர்த்துக் கொடுத்தது என்ற அறிவிப்பின் வாசகத்தைக் கேட்கத் தயாராகிட வேண்டும். ஒன்றியச் செயலாளர்களோடு போட்டியிட நகரக் கழகச் செயலாளர்களுக்கும் நல்லதோர் வாய்ப்பு! சிற்றூர் - பேரூர் - நகரம் - மாநகரம் என்று ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல என்பதை நிரூபித்திட நாளை முதலே தயாராக வேண்டும். இந்தத் தேர்தல் நிதிக் குவிப்பில், கழக முன்னோடிகளும், முன்னணியினரும், தலைமைக் கழகச் செயலாளர்களும், அணிச் செயலாளர்களும், தேர்தல் பணிச் செயலாளர்களும், மாவட்டக்

கழகச் செயலாளர்களோடு இணைந்து பெருநிதிச் சேர்க்க அதிக நேரத்தைச் செலவிட வேண்டும்.

தேர்தல் நிதிக்கான நன்கொடைச் சீட்டுகள் தலைமைக் கழகத்தில் முறைப்படி அச்சிடப்பட்டு மாவட்டக் கழகச் செயலாளர்கள் வாயிலாக உங்களுக்கு வழங்கப்படவுள்ளன. கழக அமைப்புகளில் அமர்ந்து விட்டோம், அப்பாடா என்று ஓய்வெடுக்க நினைக்காமல், உனக்கிருக்கும் அளப்பரிய பணிகளிடையே முதல் இடத்தை தேர்தல் நிதி திரட்டுவதற்காக என்று நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். உள்ளூர்களிலே உள்ள கழகத் தோழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிராமந்தோறும், வீடுகள் தோறும் படிப்படியாக ஏறி, மக்களிடையே இந்த ஆட்சியில் அவர்கள் படும் இன்னல்களைக் கூறி, அவற்றைக் களைந்திட உங்களால் முடிந்த நிதியினைத் தாருங்கள் என்று கேட்டுப் பெற வேண்டும்.

“தாய எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடி பாயும்” என்று முப்பெரும் விழா நிகழ்ச்சியில் முதன்மைச் செயலாளர் தம்பி துரைமுருகன், நம்முடைய கழகப் பொருளாளர் பற்றிக் கூறிய போது, “பதினாறு அடி என்ன, நான் முப்பத்திரண்டு அடி கூட பாயத் தயார்” என்று பொருளாளர், தம்பி தளபதி ஸ்டாலின் சொன்னாரே, அதனை நிரூபிக்க நல்ல வாய்ப்பு இது. தேர்தல் நிதி கேட்டு கடிதம் எழுத வேண்டுமென்று என்னிடம் நினைவூட்டியவரே அவர்தான். எனவே இந்த முயற்சியில் அவர் வெற்றி பெறுவார் என்றே நான் நம்புகிறேன். ஏனென்றால் கழகத்தின் தளகர்த்தர்களும், அவரோடு ஒத்த வயதுடைய கழகக் காளையர்களும் கழகப் பணிகளில் அவருக்கு தரும் ஒத்துழைப்பைப் போலவே இந்தத் தேர்தல் நிதி சேர்ப்பதிலும் பெரிதும் உதவியாக இருப்பார்கள் என்பதை நான் நன்கறிவேன்.

உடன்பிறப்பே, நாம் சாதாரணமானவர்கள்தான்; சாமான்யமானவர்கள்தான்! இந்தச் சாதாரணமானவர்கள்தான் எதிர்க்கட்சியாக இருந்தபோது - பலவேறு போராட்டங்களை நடத்திக் கொண்டு - கழகத் தளபதிகள் சிறைச்சாலைக்கும் அடிக்கடி சென்று வந்து - பயங்கரமான பொய் வழக்குகளுக்காக நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளிலே ஏறி இறங்கிக் கொண்டு; வேதனைகளை, சோதனைகளைத் தாங்கிக் கொண்டு கட்சியைக் கட்டிக் காத்து வருகிறோம்.

நானோ, பொதுச் செயலாளரோ, பொருளாளரோ - கலந்து கொள்ளும் கழக நிகழ்ச்சிகள் எதிலும் தேர்தல் நிதியளிப்பு அவசியம் இருந்திட வேண்டும். கழக நிகழ்ச்சிகளிலோ அல்லது நேரிலோ; எங்களைக் காண வருவோர் - வரும்போது மாலை ஒன்று கொண்டு வருவதற்குப் பதிலாக - கைத்தறி ஆடை ஒன்று அணிவிப்பதற்குப் பதிலாக - நூறோ, இருநூறோ என்று தேர்தல் நிதி கொண்டு வரவேண்டும். அதையும் ஒரு கவருக்குள் வைத்து, கவரின் மீது உங்களுடைய முகவரியும், எவ்வளவு ரூபாய் என்பதையும் தெளிவாக எழுதிக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் நீ வழங்கிய தொகை தலைமைக் கழகத்திலே சேர்ந்து விட்டது என்பதை ஏடுகளின் வாயிலாக அறிவிக்க இயலும். நிதிக் கணக்கில் உன் பெயரைப் பார்த்தால் உனக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படும். தமிழ்ச் சமுதாயத்தின் அணையா விளக்காம் கழகத்திற்குத் துணை நிற்கிறோம், வரும் தேர்தலில் ஜனநாயகத்திற்கு விரோதமாக சர்வாதிகாரமாக நடைபெறும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இந்தத் தேர்தல் நிதி பயன்படும் என்ற எண்ணம் உனக்குத் தோன்றிடும். மேடைகளில், மாலையும், துண்டுகளும் அணிவித்து முடிக்கவே அரை மணி நேரமாகிறது. ஏன், இப்போது அன்றாடம் நான் மாலையில் வீட்டிலிருந்து அறிவாலயம் புறப்படுகிறேன் என்றால், வீட்டின் கீழே அரை மணி நேரம் வந்தவர்கள் அனைவரையும் சந்தித்து விட்டு, குழந்தைகளுக்கு பெயர் சூட்டி விட்டு, பிறந்த நாள் வாழ்த்து, மண நாள் வாழ்த்து என்று வருபவர்களையெல்லாம் சந்தித்து விட்டுத்தான் வருகிறேன். அப்படி என்னைச் சந்திக்க வருபவர்கள் இனி தேர்தல் நிதியோடுதான் வர வேண்டும். மாலை அணிவித்தால் மேடையுடன் போய்விடுகிறது; கைத்தறி ஆடை ஒரு சிறிது நேரம்தான் என் கையிலே தரப்படுகிறது; அவற்றுக்குப் பதிலாக தேர்தல் நிதியாகக் கொடுத்தால், தலைமைக் கழகத்திற்கு அந்த நிதி சென்றடைந்து, வருகின்ற தேர்தலைச் சந்திக்க உன்னுடைய பங்கும் உதவியாக அமைந்திடும் என்ற பெரு மகிழ்ச்சி உனக்கு ஏற்படும்.

உடன்பிறப்பே, நான் எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். நீயும் வாரி வாரி வழங்கியிருக்கிறாய்; உண்மைதான்! நான் கேட்டவுடன் ஒன்றும் இல்லை என்று சொல்லாமல், அள்ளிக் கொடுத்த உடன்பிறப்பு அல்லவா நீ; உன்னைத்தான் மீண்டும் கேட்கிறேன்! பணக்காரர்களிடம், பல கோடி வைத்திருப்போரிடம் கேட்டுப் பழக்கப்பட்டவனல்ல நான்; உன்னிடம்தான்

திரும்பத் திரும்பக் கேட்கிறேன், நீயும் கொடுத்துக் கொண்டே

இருக்கிறாய்; இப்போதும் கொடுப்பாய் என்ற நம்பிக்கையோடுதான்

இருக்கிறேன். என்ன; தேர்தல் நிதி கேட்டு நான் இன்னும் விரிவாக

எழுத வேண்டுமென்று கருதுகிறாயா! என் அன்பு உடன்பிறப்புக்கு

நான் ஒரு குறிப்புக் காட்டினால் போதாதா! வெட்டி வா என்றால்

கட்டி வரும் உடன்பிறப்பாயிற்றே நீ! குன்றனைய நம் கொள்கை

காத்திட குவியட்டும் பெரு நிதி; அதுவே நம் தேர்தல் நிதி.

அன்புள்ள,

மு.க.

12-03-2015

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 52 PDF ↗