உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 52

தொகுதி 52 · கடிதம் 3959

ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டு!

2015-03-18

உடன்பிறப்பே,

கடந்த 2013ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த நிலம் கையகப் படுத்துதல் சட்டத்தில் பா.ஜ.க. அரசு, விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், பன்னாட்டுத் தொழிலதிபர்களுக்கு உதவிடும் நோக்கத்தோடும் சில திருத்தங்களைப் புகுத்தி, அவசரச் சட்டம் ஒன்றை 29-12- 2014 அன்று பிரகடனப்படுத்தி, 10-3-2015 அன்று மக்களவையில் தங்களுக்குள்ள பலத்தைக் கொண்டு நிறைவேற்றியிருக்கின்றது.

மத்திய அரசு பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பையும் மீறி நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தங்களை மக்களவையில் நிறைவேற்றிவிட்டு, மாநிலங்களவையிலும் நிறைவேற்றிட முயற்சிப்பதைக் கண்டித்தும்; அரசு அதிகாரி ஒருவரின் தற்கொலைக்குக் காரணமான அமைச்சர் மீது குற்ற நடவடிக்கைகள் எடுத்து, அவரை உடனடியாகக் கைது செய்வதோடு, வழக்கினை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைத்திட வேண்டுமென்பதை வலியுறுத்தியும்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் 20-3-2015 அன்று வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணியளவில், மக்களின் கவனத்தை ஈர்த்திடும் வகையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுமென்றும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட வேண்டுமென்றும் ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்னைச் சந்தித்து, தேர்தல் நிதி வழங்க வந்த பல்வேறு மாவட்டக் கழகங்களின் செயலாளர்களும், 20ஆம் தேதிய ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதைப் பற்றி என்னிடம் நேரில் விளக்கி வருகிறார்கள்.

உடன்பிறப்பே, மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் பற்றிச் சமூக ஆர்வலர் மேதாபட்கர் அவர்கள் பேட்டி ஒன்றில் தெளிவாகவே தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு விவசாய நாடு. இந்திய மக்களில் 60 சதவிகிதம்

பேர் விவசாயத்தையே தங்களின் வாழ்வாதார மையமாகக் கொண்டுள்ளார்கள். இந்த நிலையில், வேறுபாடுகளை ஆராயாமல் விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதால், விவசாய நிலங்களின் பரப்பளவு குறைந்து உணவு உற்பத்தி மேலும் மோசமாகும். உணவுக்காக இந்தியா மற்ற நாடுகளை எதிர்பார்த்துக் கையேந்திட வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும்.

எந்தவொரு நாட்டிலும், அங்கே தனியார் தேவைக்காக, வலுக் கட்டாயமாக அரசாங்கம் நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுப்பதில்லை. மக்களுடைய சம்மதத்தின்பேரில் கையகப்படுத்தும்போது கூட, நிலத்தின் சொந்தக்காரர்களுக்கான இழப்பீடு, வேலை வாய்ப்பு, மறு வாழ்வு போன்றவற்றை முறையாகச் செய்து கொடுத்துவிட்டுத்தான் செயலிலே இறங்குகிறார்கள். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், பல நாடுகளில் இவ்வாறு நிலங்களைக் கையகப்படுத்தும்போது, வேலை இல்லாதவர்களுக்கு அரசே மாதச் சம்பளமும் கொடுக்கிறது. பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள இந்தச் சட்டத்தினால் நிலத்தை இழக்கும் விவசாயிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்.

விவசாயிகளையும், பொதுமக்களையும் பெரிதும் பாதிக்கும் பா.ஜ.க. அரசின் இந்த முடிவினை எதிர்த்துப் பெரும்பாலான அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும் போராடுகின்றன. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2013ஆம் ஆண்டு; மத்தியில் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தபோது, நிலத்தை விற்றவருக்கான மறுவாழ்வு, மீள் குடியமர்வு, அந்த நிலத்தை நம்பிப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான இழப்பீடு என்று சில ஆக்கபூர்வமான நிலைப்பாடுகள் இருந்தன. மேலும் அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பலதரப்பட்ட மக்கள் என்று அனைத்துத் தரப்பினரிடமும் கருத்துக் கேட்டறிந்து, ஒருமித்த கருத்து அடிப்படையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போதுள்ள சட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்தும்போது, நகரப் பகுதியாக இருந்தால் 10 சதவிகிதம் பேரின் ஒப்புதலும், கிராமப் பகுதியாக இருந்தால் 20 சதவிகித மக்களின் ஒப்புதலும் பெறப்பட வேண்டும் என்பது நிபந்தனை. மேலும் அப்படிக் கையகப்படுத்தும்

நிலங்களை, தனியாருக்குக் கொடுப்பதாக இருந்தால், நிச்சயமாக மக்களின் ஒப்புதல் பெற்றுச் செய்ய வேண்டும் என்ற விதிமுறையும் இருந்தது.

ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திருத்த மசோதாவில், கடந்த கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் இருந்த சில முக்கியமான பிரிவுகளை நீக்கியதோடு, சமூகப் பாதிப்பு ஆய்வு, விசாரணை (Social Impact Assessment, Investigation), நிலம் கையகப்படுத்தும்போது அங்கு வரும் திட்டங்களால் ஏற்படவிருக்கும் ஆபத்துகள், மக்களின் கருத்துகள் போன்றவற்றைக் கேட்டறிந்து ஆய்வறிக்கை தாக்கல் செய்தல்; உணவுப் பாதுகாப்பிற்கான சிறப்பு ஏற்பாடு, நில உரிமையாளர்களிடம் இருந்து ஒப்புதல் பெறுதல் போன்ற பிரிவுகளிலிருந்து மத்திய பா.ஜ.க. அரசு, யாருடைய கருத்தையும் கேட்காமல் விலக்கு அளித்துள்ளது. இவ்வாறு விலக்கு அளித்திருப்பதன் மூலம், யாருடைய ஒப்புதலையும், சம்மதத்தையும் பெறாமலேயே, எவ்வளவு நிலங்களை வேண்டுமென்றாலும் கையகப்படுத்த முடியும். இது ஏகாதிபத்திய நடவடிக்கையாகவே கருதப்பட நேரிடும்.

ஐந்தாண்டு காலத்திற்குள், நிலம் என்ன தேவைக்காகக் கையகப்படுத்தப்பட்டதோ, அந்தத் தேவைக்கு அந்த நிலம் பயன்படுத்தப்படவில்லை என்றால், அந்த நிலம் யாரிடமிருந்து கையகப்படுத்தப்பட்டதோ, அவர்களிடமே திரும்பவும் கொடுத்துவிட வேண்டுமென்ற நிபந்தனை 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் இருந்தது. ஆனால் தற்போது, எத்தனை ஆண்டுகளானாலும் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்வரை, உரிமையாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது என்று மத்திய பா.ஜ.க. அரசு திருத்தம் செய்துள்ளது. இதனால் கையகப்படுத்தப்படும் நிலம் எந்த நோக்கத்திற்காகக் கையகப்படுத்தப்படுகிறதோ அந்த நோக்கமே நிறைவேறாமல் போவதற்கும், நிலத்தை வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உருவாகிவிடும் என்பதை மறந்து விடக்கூடாது.

யாருடைய எதிர்ப்பையும் பொருள்படுத்தாமல், தற்போது இந்தச் சட்டத்திலே மீண்டும் சில திருத்தங்களோடு பா.ஜ.க. அரசு, அ.தி.மு.க.வின் துணையோடு நிறைவேற்றுவதின் மூலம்

பெரும் பயன்பெறப் போகிறவர்கள், இந்திய நாட்டிலே உள்ள ஏழை விவசாயிகளா என்றால் நிச்சயமாக இல்லை; இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள் தான்!

2013ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் கிராம சபையின் ஒப்புதல் பெற வேண்டும் என்று ஓர் அம்சம் இருந்தது. ஜனநாயக முறையையே அலட்சியப்படுத்திடும் வகையில், தற்போது அந்தப் பிரிவே நீக்கப்பட்டு விட்டது.

பா.ஜ.க. அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து, ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரே, பீகார் முதல் அமைச்சர் நிதீஷ் குமார் அவர்களே உண்ணா விரதப் போராட்டம் நடத்தியிருக்கிறார். அங்கே அவர் பேசும்போது, “நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினாலும், பீகார் மாநிலத்தில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம்” என்று கூறியிருக்கிறார். முன்னாள் முதலமைச்சரும், மத்திய அமைச்சராக இருந்தவருமான லாலு பிரசாத் யாதவ் அவர்கள் இந்தச் சட்டத் திருத்தங்களை எதிர்த்துப் பேரணி ஒன்றினை நடத்தவிருக்கிறார். சமூக ஆர்வலர் அன்னாஹசாரே அவர்கள் ஏற்கனவே அவர் தொடங்கியிருக்கும் போராட்டத்தின் தொடர்ச்சியாக 1000 கிலோ மீட்டர் போராட்டப் பயணம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார். தி.மு.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் டெல்லியில் இந்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்திலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்குப் பேரணியாகச் சென்று ஒருமித்த எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். பா.ஜ.க.வைப் பொறுத்தவரையில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்தக் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலேயே “Land acquisition is a contentious issue due to the opacity of the land acquisition process. BJP will adopt a “National Land Use Policy’, which will look at the scientific acquisition of non-cultivable land, and its development; protect the interest of farmers and keep in mind the food production goals and economic goals of the country. It’s implementation would be

monitored by the National Land Use Authority, which will work with the State Land Use Authorities to regulate and facilitate land management. The power and functions of the National Land Use Authority would be similar to those of other regulatory bodies” (ஒளிவுமறைவான முறையில் நில எடுப்பு செய்வது விவாதத்திற்குரிய பிரச்சினையாகி இருக்கிறது. பா.ஜ.க. தேசிய அளவில், நில எடுப்புக் கொள்கை ஒன்றை வகுத்துப் பின்பற்றும். அது வேளாண்மைக்குப் பயன்படாத நிலத்தை அறிவியல் முறையை அனுசரித்துக் கையகப்படுத்துதல், அதை வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்துதல், விவசாயிகளின் நலன், உணவுப் பொருள் உற்பத்தி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான இலக்குகள் ஆகிய அம்சங்களைக் கருத்தில்கொண்டதாக இருக்கும். தேசிய நில எடுப்புக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதை, தேசிய நிலப் பயன்பாட்டு ஆணையம், தீவிரமாகக் கண்காணிக்கும். அந்தத் தேசிய ஆணையம், மாநிலங்களின் நிலப் பயன்பாட்டு ஆணையங்களுடன் இணைந்து, கையகப்படுத்தப்படும் நிலப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தும். தேசிய நிலப் பயன்பாட்டு ஆணையத்தின் அதிகாரங்களும் செயல்பாடுகளும், ஏனைய ஒழுங்குபடுத்தும் அமைப்புகளுக்கு ஒத்தவையாக இருக்கும்) என்று அறிவித்ததற்கு மாறாகவும், முற்றிலும் எதிராகவுமே, பா.ஜ.க.வுக்குச் சொல் வேறு, செயல் வேறு என்பதை நிரூபிக்கும் வகையில், இப்போது நாடாளுமன்றத்தில் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து அ.தி.மு.க.வின் சந்தர்ப்பவாத ஆதரவோடு நிறைவேற்றியுள்ளதைக் கண்டிக்கும் வகையில்தான் 20ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசுதான் இவ்வாறான மக்கள் விரோத - விவசாயிகள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்றால் நம்முடைய தமிழக அரசைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். இவர்கள் அனைத்திற்கும் “மேல்” இடம் அல்லவா? அதனால் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளும் மத்திய அரசைவிட மேலாகவே இருந்து வருகின்றன.

தமிழகத்தில் வேளாண் துறைக்குப் பொறுப்பேற்றிருந்த அமைச்சர் ஒருவர் கொடுத்த நெருக்கடியின் காரணமாகத் தமிழக வேளாண்மைப் பொறியியல் துறையின் மூத்தப் பொறியாளர்

முத்துக் குமாரசாமி மன உளைச்சலினால் தற்கொலை செய்து கொண்டு, அவருடைய குடும்பத்தையே நட்டாற்றில் விட்டுவிட்டு மறைந்திருக்கிறார். இந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்து, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. அரசுக்கு எதிராகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியவுடன் அவசர அவசரமாக அந்த அமைச்சரை, கட்சிப் பொறுப்பிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் விலக்கியிருக்கிறார்கள். முதலில் அந்த முன்னாள் அமைச்சரைக் கைதுசெய்து விசாரிப்பதற்குப் பதிலாக, அவருடைய உதவியாளர்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். முன்னாள் அமைச்சரைக் காப்பாற்றுவதற்கான திரை மறைவுக் காரியம் தீவிரமாக நடைபெறுகிறதோ என்ற அய்யப்பாடுதான் பரவலாக ஏற்பட்டிருக்கிறது.

இந்த ஆட்சியில் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் ஆகியோரின் நெருக்கடி காரணமாக அலுவலர்கள் தற்கொலை செய்துகொண்டு மாண்டது என்பது இதுதான் முதல் சம்பவம் அல்ல. ஈரோட்டில் வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றிய பழனிசாமி என்ற அதிகாரி: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் தாசில்தாராகப் பணியாற்றிய தியாகராஜன்; நெல்லை மாநகராட்சியில் பணியாற்றிய பொறியாளர் ராஜேந்திரன்;

13 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்கள் “டிஸ்மிஸ்” செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்ட காரணத்தால் விரக்தியாலும், வேதனையாலும் பதினைந்து மக்கள் நலப் பணியாளர்கள் தற்கொலை செய்துகொண்டு மாண்டிருக்கிறார்கள்.

பார்வையற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 200 பேருக்கு உடனடியாக ஆசிரியர் பணியிடங்கள் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 9 நாட்களாக சென்னையில் பல இடங்களில் சாலை மறியல், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காவேரியில் அணை கட்டுவதற்காக கர்நாடக மாநில அரசு நிதிநிலை அறிக்கையில் நிதியினை ஒதுக்கியுள்ளது. அந்த மாநில அரசின் முதலமைச்சர் இந்தப் பிரச்சினைக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கருத்துகளைக் கேட்கிறார். அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு, டெல்லி சென்று

பிரதமரையும், துறையின் அமைச்சரையும் சந்திக்கிறார். ஆனால் அ.தி.மு.க. அரசோ மத்திய அரசுக்குக் கடிதம் எழுதிவிட்டாலே தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறது.

மத்திய பா.ஜ.க. அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை மறந்து, விவசாயிகளின் முதுகெலும்பை முறிப்பதைப் போன்றதொரு கறுப்பு மசோதாவைச் சட்டமாக்கிட முனைந்திருக்கிறது. தங்களின் சுயநலப் பாதுகாப்புக்காக, விவசாயிகளின் நலனைப் பலியிட்டு, மத்திய அரசின் முயற்சிக்கு வலியச் சென்று துணை செய்யும் காரியத்தில் அ.தி.மு.க. இறங்கியிருக்கிறது.

தமிழகத்தில், காணுமிடமெல்லாம் லஞ்சம் - ஊழல் - சட்டம் - ஒழுங்கு சரிவு - நிர்வாகச் சீர்கேடு, செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல், செய்யக் கூடாதவற்றையே செய்வதால் அனைத்து முனைகளிலும் மக்களின் அதிருப்தி - அவலம் - ஆத்திரம், படையெடுத்து வரும் பல்லாயிரம் பிரச்சினைகள், எதையும் தீர்த்திட இயலாத - செயலற்ற அரசு, கடன்கள் நாளும் வளர்ந்து அரசே திவாலாகும் நிலை எனக் கவலையும் கண்ணீரும்தான் நாட்டில் பெருகி வருகிறதே தவிர, துளியேனும் ஒளியில்லை.

மத்திய - மாநில அரசுகளின் இத்தகைய தவறான பாதையை

நம் மக்களுக்குக் காட்டி உணர்த்திட வேண்டிய கடமை வீட்டுக்கு

விளக்காகவும், நாட்டுக்குத் தொண்டனாகவும் இருக்கும் திராவிட

முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அதனால்தான் பெருந்திரள்

கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மறுநாள், 20ஆம் தேதியன்று

மாநிலமெங்கும் நடைபெறுகிறது. “இப்படை தோற்கின், எப்படை

வெல்லும்” என்றார் பேரறிஞர் அண்ணா. திராவிடக் கழகத்தின்

படை திரளட்டும்! மத்திய - மாநில அரசுகளுக்குக் கண்டனக் குரல் எல்லாத் திசைகளிலும் எதிரொலிக்கட்டும்!

அன்புள்ள,

மு.க.

18-3-2015

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 52 PDF ↗