தொகுதி 52 · கடிதம் 3932
ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்! (6)
2014-10-26
உடன்பிறப்பே,
தமிழகத்தில் நாள்தோறும் சாவு, கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என எத்தனையோ பிரச்சினைகள்! அதிலும் குறிப்பாகக் கடந்த ஒரு வாரமாக கனமழை பொழிந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாகப் பல இலட்சம் ஏக்கர் நிலத்தில் பயிர்கள் மூழ்கிக் கிடக்கின்றன. இந்நாள் முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களே மழை காரணமாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டு, காரிலேயே 30 நிமிடங்கள் இருந்ததாகச் செய்திகள் வந்துள்ளன. வெள்ள நிவாரணப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. சட்டம் ஒழுங்கு பற்றி எழுதவே தேவையில்லை. அமைச்சரின் தம்பி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். ராமனாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ஒருவர், சப் இன்ஸ்பெக்டரால் தாக்கப்பட்டு இறந்துவிட்டார் என்றும், அதை மறைக்க அந்த சப் இன்ஸ்பெக்டரே அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காகச் சுட்டேன் என்று கூறிப் பரபரப்பாக அந்தச் செய்திகள் வெளிவந்துள்ளன. நெய்வேலியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஒன்றரை மாத காலமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு நேற்றிரவுதான் ஏதோ ஊதிய உயர்வு கொடுப்பதாகக் கூறி வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறச் செய்திருக்கிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரம் செய்வது பற்றி எந்த உறுதி மொழியும் கொடுத்ததாகத் தெரியவில்லை. சகாயம் விசாரணைக் கமிஷன் பணியைத் தொடங்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை உத்தரவிட்டும், அ.தி.மு.க. அரசு அந்த நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்கவில்லை. மூன்றாண்டு காலமாக வணிகர் நல வாரியம் முடங்கிக்கிடப்பதாக ஒரு செய்தி. அந்த ஒரு வாரியம் மட்டும்தானா முடங்கிக் கிடக்கின்றது? அமைப்புச்
சாராத் தொழிலாளர் நல வாரியங்கள் அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன. தமிழ்நாடே முடங்கித்தான் கிடக்கின்றது. இந்த நிலையில் இதையெல்லாம் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, கடந்த ஒரு வார காலமாக, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றி எழுதி வருகிறேன் என்றால், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மீதே குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டு, அவருக்குத் தண்டனை அளிக்கப்பட்டு, பதவியும் பறிபோன நிலையில், அதற்கு முழு முதல் காரணம் வேறு அல்ல என்பதையும், வினை விதைத்தவர்களே அவர்கள்தான் என்பதையும், அதே நேரத்தில் தீர்ப்பில் என்னதான் கூறப்பட்டுள்ளது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் புரிந்து தெளிவடைய வேண்டும் என்பதற்காகத்தான்!
நேற்றைய என் கடிதத்தில், “ஒரு பெண்மணிக்குச் சிறைத் தண்டனை என்றதும், தாய்மார்கள் அனுதாபப்படுவது சகஜம்தான்” என்று குறிப்பிட்டிருந்தேன். சட்டம் எல்லோர்க்கும் பொது என்றால்; சட்டம் ஆண், பெண் இருபாலார்க்கும் பொதுவானது என்றுதான் பொருள். ஒரு பெண்மணி, பெண்ணாக நடந்து கொள்ளத் தவறி, பேராசைகளுக்கு ஆட்பட்டு, தனக்குப் பொதுமக்களால் வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்தினால், பெண்ணாயிற்றே என்று சட்டம் வளைந்து கொடுக்க இயலாது. இந்த வழக்கிலும், தீர்ப்பிலும், மேலும் மேலும் எடுத்துக் கூறுவதற்குக் கடல் அளவு உண்மைகள் இருந்தபோதிலும், கடுகு அளவுதான் இந்தத் தொடரிலே இடம் பெற்றுள்ளது.
இன்னும் கூற வேண்டுமேயானால், ஜெயலலிதா மீது தற்போதுதான் முதன் முதலாக இப்படியொரு தீர்ப்பு வந்திருப்பதாகக் கருதக்கூடாது. அவரைப் பற்றி இதற்கு முன்பே வேறு சில வழக்குகளில் நீதிபதிகள் என்ன கருத்து தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறித்து, சுருக்கமாக நினைவுப்படுத்துகிறேன்.
24-11-2003இல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதுதான், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேந்திர பாபு, பி.வி. ரெட்டி ஆகியோர் டான்சி வழக்கில் தீர்ப்பு கூறும்போது, “முதலமைச்சர் ஜெயலலிதா, அவருடைய கையெழுத்தையே, தன் கையெழுத்தே இல்லை என்று கூறும் அளவுக்குச் சென்றுள்ளார்.
ஜெயலலிதா மனச்சாட்சிப்படி நடந்து, இதற்குப் பரிகாரம் தேட முற்பட வேண்டும். முதலமைச்சர் போன்று உயர் பதவியில் இருப்போர், விதிகளை மதித்து நடக்க வேண்டியது அவசியம். சாதாரண அரசு ஊழியர் ஒருவர் எப்படி அரசு சொத்துக்களை வாங்க முடியாதோ, அதே போல முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவரும் அரசு நிறுவனத்தின் சொத்துக்களை வாங்க முயற்சிப்பது தவறு. சட்டம் என்பது சாதாரண அரசு ஊழியருக்கும், உயர் பதவியில் இருப்பவருக்கும் ஒன்றுதான். தவறுக்கு வருந்தி, வாங்கிய நிலத்தை டான்சி நிறுவனத்துக்கே திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் என்பதை மறந்துவிட முடியுமா?
1993-94ஆம் ஆண்டுக்கான; ஜெயலலிதா, சசிகலா வருமானவரிக் கணக்கு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அகர்வால், மாத்தூர் ஆகியோர் 24-2-2006 அன்று வழங்கிய தீர்ப்பில், “நீதி பரிபாலன முறையையே நீங்கள் (ஜெயலலிதா தரப்பினர்) கேலிக் கூத்தாக்கி வருகிறீர்கள். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த நீதிமன்ற நடவடிக்கைகளை இழுத்துச் செல்ல முடியும்? மற்றவர்களுக்கு எல்லாம் முன் மாதிரியாக நீங்கள் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் என்ன பதில் மனுவை உங்களால் தாக்கல் செய்ய முடியும்?” (“You (Jayalalithaa) are making a mockery of the Judicial Process. How long you can drag the Proceedings”) என்று கேட்ட முன் உதாரணமும் உள்ளது.
வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்த காலகட்டமான 1991-1996 ஆம் ஆண்டுக் காலத்தில், கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டலுக்கு விதிமுறையை மீறி அனுமதி கொடுத்தது தொடர்பாக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது வழக்குத் தொடரப்பட்டு, அதற்காக ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. அதை எதிர்த்து அப்போதும் அ.தி.மு.க.வினர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு, தர்மபுரி அருகே கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் சென்ற பேருந்து தீ வைத்துக் கொளுத்தப்பட்டு மூன்று மாணவிகள் எரிந்து சாம்பலானார்கள். அந்த வழக்கில். அரசுத்தரப்பில் காலதாமதம் செய்தபோது உயர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ் அளித்த தீர்ப்பு, அ.தி.மு.க. அரசுக்குக் கொடுத்த பாராட்டிதழா?
இதே சொத்துக் குவிப்பு வழக்கினைக் கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியபோது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என். வரியவா அவர்களும், எச்.கே. சேமா அவர்களும் அளித்த தீர்ப்பின் வார்த்தைகளை இந்தத் தொடரின் தொடக்கத்திலேயே தெரிவித்திருந்தேனே, அவை என்ன சாதாரணமான வார்த்தைகளா?
ஜெயலலிதாவுக்கெதிரான இந்தப் பட்டியலிலே இணைக்கப்படவேண்டிய தீர்ப்பாகத்தான் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பும் அமைந்துள்ளது.
ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக எவ்வளவு நகைகள் தொடக்கத்தில், அதாவது அவர் முதலமைச்சராக ஆவதற்கு முன்பு 1991இல் இருந்தன என்றும், 1996ஆம் ஆண்டில் அவை எந்த அளவுக்குப் பன்மடங்குப் பெருகின என்றும் நேற்றைய கடிதத்தில் எழுதியிருந்தேன் அல்லவா; அதே ஜெயலலிதா 30-7-1990 அன்று “மாலைமலர்” நாளேட்டில் அரை பக்கத்திற்கு ஒரு அறிக்கை விடுத்திருந்தார். அந்த அறிக்கையில், “தேர்தல் முடிந்ததும் தொண்டர்கள் கொடுத்த தொகையைத் திரும்பக் கொடுக்கும் கடமையைச் செய்தேன். கழக உடன்பிறப்புகள் என்னிடம் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றும் பொருட்டு எனது சொந்த நகைகளை விற்று, என் மூதாதையர்கள் விட்டுச் சென்ற புராதன நகைகளையும், வெள்ளிச் சாமான்களையும் விற்று எனது சொத்தினை அடகுவைத்து, சில நண்பர்களிடம் கடனும் பெற்று வைப்புநிதியை முழுவதுமாகத் திரும்பக் கொடுத்தேன்” என்றெல்லாம் தெரிவித்திருந்தார். நகைகளையெல்லாம் விற்று விட்டேன் என்று 1990ஆம் ஆண்டு அவர் தெரிவித்ததையும், 1991ஆம் ஆண்டு அவரிடம் எந்த அளவுக்கு நகைகள் இருந்தன என்று தெரிவித்ததையும், 1996ஆம் ஆண்டு எந்த அளவுக்கு அவரிடம் நகைகளின் எண்ணிக்கை பெருகியது என்பதையும் ஒப்பிட்டுப்பார்த்தாலே, உண்மையைத் தெளிவாக உணர்ந்துகொள்ள முடியும்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், முக்கியமாக நிரூபிக்கப்பட வேண்டிய விஷயங்கள் என்று வரையறுக்கப்பட்டவை என்று பார்த்தால், முதலில் அவர் தனது சட்டப்பூர்வமான வருமானத்தைவிட, 66 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கூடுதல் சொத்துக்களைச் சேர்த்தாரா என்ற குற்றச்சாட்டைப் பொறுத்தவரை, நீதிபதி திரு. குன்ஹா அவர்கள்
தனது தீர்ப்பிலே, ஜெயலலிதா மற்றும் பினாமிகள் பெயரில் உள்ள 55 கோடியே 79 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், சட்டப்பூர்வமான வருமானத்திற்குமேல் சேர்க்கப்பட்டவை என்று சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், இவற்றுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களால் சரியான கணக்குக் காண்பிக்க முடியவில்லை என்றும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சூழ்ச்சிக்காரர்கள் என்றும், சொத்துக் குவிப்பில் ஜெயலலிதாவுக்கு மற்றவர்கள் உதவினர் என்றும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் எழுதியிருக்கிறார்.
குற்றவாளிகள் பங்குதாரர்களாக இருந்த நிறுவனங்களின் கணக்குகளில் சட்டத்துக்குப் புறம்பாகச் சேர்த்த பல இலட்சக்கணக்கான ரூபாய் விளக்கிச் சொல்ல முடியாத வகையில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது; ஏராளமான சொத்துகள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளன. 3000 ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. நிறுவனங்களின் கணக்குகளில் எந்த அளவுக்கு முறைகேடாக வந்த பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு உதாரணம் கூற வேண்டுமேயானால், சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கியின் மேலாளர் அருணாசலம் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில், “ரிவர்வே அக்ரோ ப்ராடக்ஸ்” என்ற குற்றஞ் சாட்டப்பட்டவர்களின் நிறுவனத்தின் பெயரில் உள்ள கணக்கில், 29-11-1994 அன்று 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயும், 30-11- 1994 அன்று 19 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், 3-12-1994 அன்று 22 இலட்சத்து 41 ஆயிரம் ரூபாயும், 7-1-1995 அன்று 15 இலட்சம் ரூபாயும், 10-1-1995 அன்று 25 இலட்சம் ரூபாயும், 12-1-1995 அன்று 25 இலட்சம் ரூபாயும், 25-4-1995 அன்று 19 இலட்சம் ரூபாயும், 27-4-1995 அன்று 20 இலட்சம் ரூபாயும், 28- 4-1995 அன்று 19 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாயும் வரிசையாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு நாளும் அல்லது ஒரு நாள் விட்டு அடுத்த நாளும் வங்கியில் இலட்சக்கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறதென்றால், இந்தத் தொகை எங்கிருந்து கொட்டியது அல்லது எப்படிக் குவிந்தது என்பதை நீதிபதி குன்ஹா அவர்களே எண்ணி வியப்பிலே ஆழ்ந்திருக்கிறார் என்பதை குன்ஹா அவர்களின் தீர்ப்பில் 752வது பக்கத்தில் புரிந்து கொள்ள முடிகிறது.
நிலம் வாங்கிக் குவித்த சம்பவங்களைப் பற்றியும் நீதிபதி அவர்கள், பலரும் அளித்துள்ள சாட்சியங்களின் வாயிலாகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். எந்த அளவுக்கு நிலம் வாங்கப்பட்டுள்ளது என்பதற்கும் ஒரு உதாரணம் கூறுகிறேன். 22-8-1994 அன்று 53 ஏக்கர்; 17-11-1994 அன்று 281 ஏக்கர்; 22-12-1994 அன்று 507 ஏக்கர்; 6-1-1995 அன்று 166 ஏக்கர்; 21-2-1995 அன்று 158 ஏக்கர் என்றும் பட்டியல் நீளுகிறது. 17-11-1994 அன்று மட்டும் 281 ஏக்கர் என்றும், 73.90 ஏக்கர் என்றும், 69.78 ஏக்கர் என்றும், 60.65 ஏக்கர் என்றும், 42.31 ஏக்கர் என்றும், 34.815 ஏக்கர் என்றும் தொடர்ச்சியாக நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. இப்படி ஏராளமான ஏக்கர் நிலங்களைத் தாராளமாக வாங்கிக் குவிக்க எங்கிருந்து பணம் வந்தது? எப்படி வந்தது? என்றெல்லாம் தனி நீதிமன்றம் வியப்போடு கேட்டால், அந்த நீதிமன்றத்தையே குற்றஞ் சாட்டி “போஸ்டர்” ஒட்டுகின்ற குணாளர்கள் (?) சிந்திப்பதற்குப் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டாமா?
ஜெயலலிதா தரப்பினரால் காட்டப்பட்ட செலவுக் கணக்குகள் பற்றியும், குறிப்பாக சுதாகரன் திருமணத்திற்காகச் செய்யப்பட்ட செலவுகள் பற்றியும், அந்தத் தொகை யாரால் செலவழிக்கப்பட்டன என்பது பற்றியும் ஏற்கனவே கூறியிருந்தேன். அதுபோலவே அவர்களால் காட்டப்பட்ட ஒருசில வருமானங்கள் எப்படி வந்தன என்பது பற்றியும் ஒருசில எடுத்துக்காட்டுகளைக் கூற வேண்டும். ஸ்பிக் நிறுவனத்திடமிருந்து, சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் ஒரு கட்டடத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் (ஜெயலலிதா மற்றும் சசிகலா இதற்கு உரிமையாளர்களாக இருந்தனர்) மூன்று ஆண்டுகளுக்கு (1993- 96) குத்தகைக்கு எடுத்து, அதை வேறு ஒரு நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டு 37.67 இலட்சம் ரூபாய் வாடகை வருமானம் கிடைத்துள்ளதாகக் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. அதுபோலவே கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில், இண்டே தோஹா கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தை, ஸ்பிக் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விட்டதன் மூலம் 30.40 இலட்சம் ரூபாய் குத்தகை வருமானம் கிடைத்துள்ளது என்றும் கணக்கிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில்; ஜெயலலிதாவின் வருமானமாகத் தெரிவிக்கப்பட்டதைவிடக் கூடுதலாக 4.29 கோடி ரூபாயை சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதாவது கட்சியினரிடமிருந்து ஜெயலலிதாவின் 44வது பிறந்த நாளை முன்னிட்டுக் கிடைத்த அன்பளிப்புகள் 2 கோடியே 15 இலட்சம் ரூபாயையும், வெளிநாட்டிலிருந்து கிடைத்த அன்பளிப்புகள் 78 இலட்சம் ரூபாயையும் அன்னியில், வட்டி வருமானமாக 78 இலட்சம் ரூபாயையும், திராட்சைத் தோட்ட வருமானமாக 47 இலட்சம் ரூபாயையும், வருமானக் கணக்கில் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஜெயலலிதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதுபோலவே சசிகலா 19.28 கோடி ரூபாயைத் தன்னுடைய வருமானக் கணக்கில் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்றார். அதாவது “நமது எம்.ஜி.ஆர்.” பத்திரிகை மூலம் வருவாய் 14 கோடியே 1 இலட்சம் ரூபாயையும், வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட நிதி 52 இலட்சம் ரூபாயையும் தனது வருமானத்தில் சசிகலா சேர்த்துக்கொள்ள வேண்டு மென்றார்.
விசாரணைக்கு உட்பட்ட காலகட்டத்தில் இவர்களது வருமானம் 9.34 கோடி ரூபாய் என்று ஏற்கனவே அரசுத் தரப்பு கணக்கு கொடுத்திருந்ததை விட 24.9 கோடி ரூபாயையும் சேர்த்து, தங்களது வருமானக் கணக்கு 34.24 கோடி ரூபாய் என்று தெரிவித்தார்கள்.
பிறந்த நாள் அன்பளிப்புகளைப் பொறுத்த வரையில், குறுக்கு விசாரணையின்போது, கட்சி நிர்வாகிகளாக ஆஜார்படுத்தப்பட்டவர்களிடம், தாங்கள் குறிப்பிட்ட பதவியை வகித்து வந்ததற்கான சான்று எதுவும் இல்லை; இப்படி நிதி திரட்ட கட்சியில் எந்தவிதமான தீர்மானமும் போடப்பட வில்லை; தொண்டர்களின் பங்களிப்பிற்காக அவர்களுக்கு ரசீது கொடுக்கப்படவில்லை; கட்சியின் தலைமை அலுவலகத்தில் டி.டி.க்கள் பெறப்பட்டதாக எந்த ஒப்புதல் சான்றும் அளிக்கப்படவில்லை. ஜெயலலிதா தரப்பில் சண்முகசுந்தரம் என்ற ஆடிட்டர் சாட்சி அளிக்கையில் பிறந்த நாள் பரிசாகப் பெறப்பட்ட டி.டி.க்கள் அனைத்தும் ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டன என்றும், அதற்கான வருமானவரி விவரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். ஆனால்
குறுக்கு விசாரணையின்போது, இது நடந்த கால கட்டத்தில் இவர் ஜெயலலிதாவின் ஆடிட்டரே அல்ல என்று தெரிந்தது. மேலும் வருமான வரி கமிஷனர் “அன்பளிப்புகள் பற்றிய விவரங்கள் உரிய ஆண்டுகளில் தெரிவிக்கப்படவில்லை; பல ஆண்டுகளுக்குப் பின்தான் தெரிவித்துள்ளார். அதிலும் 1991 வரை வெறும் நகைகள் மட்டும்தான் அன்பளிப்பாகப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுவதைத் தவிர அன்பளிப்பாகப் பணம் பெற்றதற்கான வேறு எந்த ஆதாரமும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார். இந்த அன்பளிப்புகள் பற்றி நீதிபதி குன்ஹா அவர்கள் விளக்கமாகத் தீர்ப்பில் குறிப்பிட்டதோடு இறுதியாக என்ன தெரிவித்திருக்கிறார் என்றால்,
“பிறந்த நாள் அன்பளிப்புகள் சட்ட விரோதமானவையல்ல; ஆனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முதல்வராகப் பதவியேற்றபின் இவ்வளவு பெரிய தொகை அன்பளிப்பாக வந்திருப்பது, அந்த நிதியின் ஆதாரத்தைப் பற்றிச் சந்தேகத்தை எழுப்புகிறது. மேலும், எதிர் தரப்பு கேள்வி எழுப்புவதைப் போல, இப்படி அன்பளிப்புகள் வருவது வழக்கமென்றால், 1992க்கு பின் ஏன் வரவில்லை? கிடைத்த பணம் அன்பளிப்புதான் என்ற வாதத்தை நாம் ஏற்றுக்கொண்டாலும், அதை முதல்வராக இருந்த ஜெயலலிதா பெற்றுக்கொண்டது சட்ட விரோதமானதுதான். இத்தகைய அன்பளிப்புகள் பற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கையில், “அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அன்பளிப்புகள் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டால் லஞ்சத்தை அன்பளிப்பாக வாங்கிக் கொள்வார்கள். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 165வது பிரிவின்படி, குறிப்பிட்ட காரணத்திற்காகத் (வேலை நடப்பதற்காக) தான் அன்பளிப்பு (லஞ்சம்) பெறப்பட வேண்டும் என்பது அல்ல. குறிப்பிட்ட காரணம் இல்லாமல் பெறப்படும் அன்பளிப்புகளும் தடை செய்யப்பட்டவை. ஏனெனில், அவை, அன்பளிப்பு கொடுத்தவருக்குச் சாதகமாக, அரசு ஊழியரைச் செயல்பட வைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது. அதனால், அன்பளிப்பு மூலம் பெறப்பட்ட பணத்தைச் சட்டப்பூர்வமான வருமானமாகக் கருத முடியாது” என்று நீதிபதி குன்ஹா அவர்கள் இந்தத் தீர்ப்பிலே குறிப்பிட்டுள்ளார்.
இதுபோலவே “நமது எம்.ஜி.ஆர்.” பத்திரிகையின் மூலம் 14 கோடியே 1 இலட்சம் ரூபாய் வருமானம் உட்பட 19 கோடியே 28 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாயைத் தன்னுடைய கூடுதல் வருமானமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று சசிகலா வைத்த கோரிக்கை பற்றி, நீதிபதி குன்ஹா அவர்கள் கூறும்போது, “வருமான வரித்துறை விசாரணையின்போதே ஜெயலலிதா மற்றும் சசிகலா “நமது எம்.ஜி. ஆர்.” பத்திரிகையின் வைப்புநிதித் திட்டம் குறித்து ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லை. வருமான வரித் துறை “நமது எம்.ஜி.ஆர்.” கணக்குப் புத்தகங்களைப் பறிமுதல் செய்தபோது, அதிலும் இந்தத் திட்டத்திற்கான வரவுகள் குறித்து, குறிப்புகள் எதுவும் இல்லை. ஜெயலலிதா மற்றும் சசிகலா இந்தத் திட்டம் குறித்து ஒரு கதையை, 1998இல் தங்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆன பிறகு, வருமான வரி தாக்கல் செய்யும்போது உருவாக்கி இருக்கின்றனர். 2001 வரையில் கூட வருமான வரித் துறையிடம், இந்தத் திட்டத்திற்காகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள், ரசீது நகல்கள் தொலைந்து விட்டன என்றும், அது குறித்துப் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துவந்தனர். ஆனால் ஆச்சரியப்படுத்தும் விதமாக 2012இல், அவர்களே வருமான வரித் துறையில் இருந்து பெறப்பட்டதாக “தொலைந்த” ஆவணங்களின் அசல்களைச் சமர்ப்பித்துள்ளனர். சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆவணங்களைப் பார்க்கையிலேயே, அவை சமீபத்தில் உருவாக்கப்பட்டவை என்று தெரிந்துவிடுகிறது. பழைய ஆவணங்களைப் போல, அவை தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, அந்தத் தாள்களுக்குப் புகை போடப்பட்டுள்ளது அல்லது வெயிலில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் புதியதாக “பளிச்செனத்” தோற்றமளிக்கின்றன. மேலும் அவற்றில் ரசீது எண்கள் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்கள் இல்லை. இத்தகைய விஷயங்களும் இந்த ஆவணங்கள் போலியானவை என்று நிரூபிக்கின்றன” என்று பட்டவர்த்தனமாக நீதிபதி குன்ஹா வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு கம்பெனியின் பெயரில் சொத்து வாங்குவதென்றால், அதற்கான விற்பனை பத்திரத்தில் அந்த நிறுவனத்தின் பொது முத்திரை (Common Seal) பதிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய கம்பெனிகள் வாங்கிய சொத்துக்களின் எந்த விற்பனைப் பத்திரத்திலும்,
அந்தக் கம்பெனிக்கான பொது “முத்திரை” (Common Seal) வைக்கப்படவே இல்லை என்பதையும் நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பில் எடுத்துக்காட்டியதோடு, அந்தக் கம்பெனிகளின் சரியான முகவரியையும் அந்த விற்பனைப் பத்திரங்களிலே எடுத்துக் காட்டவில்லை என்பதையும் குறிப்பிட்டு, இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பான முறையில் இந்தக் கம்பெனிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன, சொத்துகள் வாங்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நீதிபதி விளக்கியிருக்கிறார்.
ஜெ. தரப்பினர் மீது தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கிற்கு உள்ள அடிப்படையைப் பற்றிச் சட்டம் அறிந்த யாரும் கேள்வி எழுப்ப முடியாது. தொடக்க நிலையிலேயே ஜெயலலிதா உயர் நீதிமன்றத்திலே முன் ஜாமீன் கோரியபோது, அதனை நிராகரித்து, ஜெயலலிதா மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் வழக்கிற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது என்றும், அரசியல் பகை காரணமாக இந்த வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவது சரியல்ல என்றும், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறந்துவிட முடியாது.
பெங்களூர் தனி நீதிமன்றத் தீர்ப்பின் தொடர்ச்சியாக ஜெயலலிதா தரப்பினர் சிறைக்கனுப்பப்பட்டதும் - நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்க வேண்டுமானால் நீதிமன்றங்களின் வாயிலாகவே சட்ட ரீதியாகப் போராடிப் பரிகாரம் காண வேண்டுமே தவிர, நடுத்தெருவுக்கு வந்து நாகரிகம் மறந்து நடுங்கா நாக்குடன் நாலாந்தர மொழியில் வசை பொழியக் கூடாது என்பது தெரிந்திருந்தும் - திட்டமிட்டு, தீர்ப்பையும், நீதிமன்றத்தையும், நீதிபதியையும் எண்ணக் கூசும் அளவுக்கு இழிவுபடுத்தி, சொல்லக் கூடாத வார்த்தைகளால் அ.தி.மு.க.வினர் அர்ச்சித்ததை நாடு அதிர்ச்சியோடு கண்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள், அதிகார ஆணவச் சேட்டைகள், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தும் பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியும் ஆளுங்கட்சியினர் சட்டம் ஒழுங்கைச் சல்லிக்காசுக்குக் கூட மதிக்காமல் அரங்கேற்றிய கோரக் காட்சிகள், பாதுகாப்புப் பணியைக் கடமை உணர்வோடு ஆற்றிட வேண்டிய காவல் துறையினர் செயலிழந்து வேடிக்கை பார்த்த விபரீதங்கள் அனைத்தையும் சந்தித்துத் தீர வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழக மக்கள் ஆளாயினர்.
நீதிமன்றத் தீர்ப்பை அலட்சியப்படுத்தி, அவமதித்து தெருப் போராட்டங்களின் மூலம் தீர்வு காணலாம் என்று முயற்சிப்பது, ஒரு சிலரைத் திருப்திப்படுத்திட வேண்டுமானால் பயன்படுமே தவிர, உருப்படியான விளைவேதும் ஒருக்காலும் ஏற்படாது. பொய் வழக்கு, சூழ்ச்சி, வஞ்சகம் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி சாலை ஓரத்திலே நின்று சப்தம் போடுவதால் நீதிமன்றத்தின் தீர்ப்பு மாறிவிடாது. இந்திய உச்ச நீதிமன்றம், “நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்த போதிலும் உங்களைவிடச் சட்டம் பெரியது” என்று அறிவுறுத்தியதை அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். சட்டத்தின் ஆட்சி (ரூல் ஆப் லா) என்பதே நீதிமன்றத்தையும் உள்ளடக்கியதுதான். எனவே நீதிமன்றத் தீர்ப்பை நிந்திப்பது நாம் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் அமர்ந்திருக்கும் ஜனநாயகமெனும் நாற்காலியின் ஒரு காலை உடைப்பதற்குச் சமம் ஆகும்.
பெங்களூர் தனி நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி நான் தற்போது விவரித்திருப்பதைத் தவிர ஏடுகள் சில என்ன கருத்து தெரிவித்தன என்று பார்த்தால், “ஆனந்த விகடன்” - “தீர்ப்பு தரும் பாடம்” என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில் “இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு! நீதி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது; நீதிமன்றங்கள் மீதான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திய அரசியல் வரலாற்றில் மிக மிக முக்கியமானது” என்று தெரிவித்திருந்தது.
“டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு 2-10-2014 அன்று எழுதிய தலையங்கத்தில், “தண்டனை நியாயமற்றது என்று கருதினால், இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்களின்படி மேல்முறையீடு செய்துகொள்வதற்கான வழிமுறைகள் நிரம்ப இருக்கின்றன. சட்டத்தின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்று கட்சியின் தொண்டர்களுக்கு, தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வின் தலைமை முறையாக
அறிவுறுத்த வேண்டும்” என்றும் விளக்கமாக கூறியிருந்தது.
“ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கைக் கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியதுகூட, 2003ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் பாரபட்சமற்ற நியாயமான தீர்ப்பு கிடைக்காது என்ற நிலையில் உச்ச நீதிமன்றமே நியாயமான தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வழக்கினைக் கர்நாடக மாநிலத்திற்கு
மாற்றியது.” இந்த விவரங்களையெல்லாம் “இந்து” நாளேடே வெளியிட்டுள்ளது.
அதே “இந்து” ஆங்கில நாளிதழில் “சஞ்சய் ஹெக்டே” என்ற உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் “பிரதமர் முதல் சாதாரண போலீஸ்காரர் வரை - செருப்புதைக்கும் தொழிலாளி முதல் சக்கரவர்த்தி வரை சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்தாலும், சட்டம் என்பது எப்போதும் உங்களைவிட உயர்ந்தது என்பதை உணர வேண்டும்” என்று எழுதியிருந்தார்.
“பிரண்ட் லைன்” இதழில், டி.எஸ். சுப்பிரமணியன் எழுதிய ஒரு கட்டுரையிலேயே இதுபற்றிக் கூறும்போது, “தீய நோக்கம் என்று யாரும் குறைசொல்லாமல் இருந்திடும் வகையில் புலனாய்வு செய்யும் அதிகாரிகள் ஜெயலலிதா மற்றும் குற்றம் சாட்டப்பட்டோரின் சொத்துக்களை மதிப்பிடும்போது, மிகையாக மதிப்பிட்டுவிடக் கூடாது என்று தி.மு. கழக அரசு தெளிவாக அறிவுறுத்தியிருந்தது. இதுதான் வழக்கை வலிமையாக்கியிருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
உடன்பிறப்பே, இந்த நீண்ட தொடர் கடிதத்தைக் கனத்த இதயத்தோடு நான் முடிப்பதற்கு முன்பு, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அவர்கள் “வாய்மையே வெல்லும்” என்ற நோக்கில் நீதிக்குக் கட்டுப்பட்டு, யாருக்கும் அஞ்சாமல் வழங்கிய தீர்ப்புக்குத் தலைவணக்கம் செய்து, இந்தத் தீர்ப்பினை வெளிக் கொணரப் பாடுபட்ட கழக வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், குமரேசன், சரவணன், தாமரைச் செல்வன், பாலாஜி, நடேசன் ஆகியோருக்கும், கடமை உணர்வோடு செயல்பட்ட விசாரணை அதிகாரிகள் நல்லம்ம நாயுடு, துக்கையாண்டி, அரசு வழக்கறிஞராகத் திறம்பட பணியாற்றிய ஆச்சார்யா, முருகேஷ் மராடி போன்றவர்களுக்கெல்லாம் என் நன்றிகளையும் பாராட்டுகளையும் குவித்து இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.
அன்புள்ள, மு.க. 26-10-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 52 PDF ↗