உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 52

தொகுதி 52 · கடிதம் 3933

பதவி நிலைத்திடவாவது; பதறி எழுவர்!

2014-10-27

உடன்பிறப்பே,

வட கிழக்குப் பருவம் தொடங்கியுள்ளதை அடுத்து, தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாகப் பெய்துவரும் பெரு மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, அடித்தட்டு மக்களுடைய வாழ்வாதாரம் சிதறுண்டு, பிழைப்பதற்கான வழிகளனைத்தும் அடைக்கப்பட்டு, என்ன செய்வதென்றே தெரியாமல் தேம்பிக் கிடக்கிறார்கள். சென்னையில் இடைவிடாமல் தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழையினால் தாழ்வான குடியிருப்புகள், குடிசைப் பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பெருமழை காரணமாக டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதிலுமுள்ள பல லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரிலே மூழ்கி அழுகிக் கொண்டிருக்கின்றன. முதல் அமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ, அதிகாரிகளோ ஓரிருவரைத் தவிர வெள்ளப் பகுதிகளைப் பார்வையிடவில்லை. நிவாரணப் பணிகளிலும் அக்கறை காட்டவில்லை. அனைவரும் “நேர்த்திக்கடன்” செலுத்துவதிலேதான் நேரத்தைக் கழிக்கிறார்கள்.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கன மழை காரணமாக 6 இலட்சம் ஏக்கரில், சம்பா, தாளடிப்பருவ நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்த மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடி செய்திருந்தார்கள். இயந்திர நடவு செய்யப்பட்டு 20 நாட்களே ஆன நிலையில், தொடர் மழையினால் 6 இலட்சம் ஏக்கர் பயிர் முழுமையாகத் தண்ணீரில் மூழ்கியுள்ளது. கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டதால், வெள்ள நீர் வெளியேறி பசுபதி பாளையம் தரைப் பாலம் மூழ்கி, அந்த வழியாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டதாகத் தகவல் வந்துள்ளது. திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம், திருத்துறைப் பூண்டி பகுதி உட்பட மாவட்டம் முழுவதும் 2 லட்சம்

ஏக்கர் பயிர்களைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதுபற்றி திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், “பாசனப் பகுதிகளில் பெரும்பாலான வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தற்போதைய நிலைக்குப் பொதுப்பணித் துறை முழு பொறுப்பேற்க வேண்டும். பல முறை தேவையான இடங்களை விவசாயிகள் சுட்டிக்காட்டித் தூர்வாரவும், பராமரிக்கவும் கேட்டுக்கொண்டும் செய்யவில்லை” என்று வேதனையைத் தெரிவித்திருக்கிறார். காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச்செயலாளர் கீவளூர் தனபால் அவர்களும் “நாகை மாவட்டம் முழுவதும் தற்போது 60 சதவிகித பயிர்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மறு முதலீடு செய்வதற்கு நிதி ஆதாரத்தை ஒதுக்கித்தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார். நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய பகுதிகளில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பத்துக் கிராமங்களைச் சேர்ந்த ஐந்தாயிரம் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. அது போலவே தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியில் உள்ள ஆறாயிரம் மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்து வாடிக்கொண்டிருக்கிறார்கள். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பெருமழை காரணமாகப் பல ஆயிரம் ஏக்கர் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் பெரிதும் நாசமாகி விட்டதாகவும், குறிப்பாக அம்பாசமுத்திரம், தென்காசி, கடையம் மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்து மீண்டும் முளைவிட்டு விட்டதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேதனையில் மூழ்கி இருப்பதாகவும், 2006-2011ஆம் ஆண்டுகளில் தி.மு. கழக ஆட்சியில் இவ்வாறு அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் இதேபோன்று பாதிக்கப்பட்ட போது, விவசாயிகளுக்குக் கழக அரசு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 5 ஆயிரம் வீதம் உடனடியாக நிவாரணமாக அளித்தது என்றும், தற்போதும் அது போன்ற உரிய நிவாரணம் விவசாயிகளுக்குக் கிடைத்திட வேண்டுமென்ற கோரிக்கையை நான் முன்னெடுக்க வேண்டுமென்று ராதாபுரம் முன்னாள் சட்டப்பேரவை கழக உறுப்பினர் எம். அப்பாவு எனக்குக்

கடிதம் எழுதியிருக்கிறார்.

சென்ற மழையின் போது திருவாரூர் கமலாலயத்தின் வடக்குக்கரை இடிந்து விழுந்தது. இந்த ஆட்சியில் வடக்குக் கரையைச் சீரமைக்கும் பணி நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாததால் நானே என்னுடைய சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அந்தப் பணிக்காக நிதி ஒதுக்குவதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்குமாறு கூறியபோது, அறநிலையத் துறை சார்பிலும், பின்னர் சுற்றுலாத் துறையின் சார்பிலும் அந்தப் பணிகளை நிறைவேற்ற விருப்பதாகவும், ஒப்பந்தப் புள்ளி அதற்காகக் கோர இருப்பதாகவும் தெரிவித்து விரைவில் செய்து விடுவதாக அதிகாரிகள் தெரிவித்துவிட்டார்கள். ஆனால் இன்றளவும் அந்தப் பணிகள் நிறைவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பெய்த மழையில், கமலாலயத்தின் மேல்கரையும் இடிந்து விழுந்துவிட்டதாகத் தகவல் வந்துள்ளது. இதற்கிடையே பணிகளை இந்த அரசு செப்பனிடுகிறார்களோ என்னவோ, அங்கே யாரும் செல்ல முடியாத அளவில் “ 144 தடை உத்தரவு” பிறப்பித்திருக்கிறார்களாம்.

சென்னை மாநகரிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் கடந்த 17ஆம் தேதி முதல் கன மழை விட்டுவிட்டுப் பெய்து கொண்டிருக்கின்றது. சென்னையில் கிண்டி, எழும்பூர், மைலாப்பூர், வேளச்சேரி, திருவல்லிக்கேணி, பெரம்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் பெரு மழை காரணமாக சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மாறிப் போக்குவரத்து மிக அதிக அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது. நாளேடுகளில் சென்னை மாநகரில் பல பகுதிகளில் சாலைகள் எவ்வாறு இந்த மழையில் பாதிக்கப்பட்டுப் பள்ளங்களாகக் காட்சி அளிக்கின்றன என்பதைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். ரிப்பன் மாளிகைச் சாலை சேதமடைந்திருப்பதும் புகைப்படத்தோடு வெளியாகி இருக்கிறது. மழை நீர் வடிகால் முறையாகப் பராமரிக்கப்படாததே சென்னை மாநகரின் முக்கியச் சாலைகளில் வெள்ளம் பெருகி, தண்ணீர் தேங்கக்காரணம் என்று வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கூறுகிறார்கள். வியாசர்பாடி செல்லும் சாலையில் கழிவு நீர்க் கால்வாய்கள் பல இடங்களில் மூடப்படாமல் திறந்து கிடக்கின்றன. வாகனங்கள் மணிக் கணக்கில் ஸ்தம்பித்து முன்னேயும் செல்ல முடியாமல், பின்னேயும் திரும்ப முடியாமல் தேங்கி நிற்கின்றன. பள்ளி மாணவர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது. பள்ளிகள் நடைபெறுமா? விடுமுறையா? என்று

விசாரிப்பதிலேயே அவர்களின் நேரம் கழிந்து கொண்டிருக்கின்றது.

மழை காரணமாகவோ, மின் பற்றாக்குறை காரணமாகவோ பல மணி நேரங்களுக்கு மின்வெட்டு நீடிக்கிறது. திருவல்லிக்கேணி, ராயபுரம், சேப்பாக்கம், தண்டையார் பேட்டை போன்ற பகுதிகளில் மழை நீருடன் சேர்ந்து கழிவு நீரும் கலந்தோடுவதால் சுகாதாரச் சீர்கேடு தலைதூக்கியுள்ளது. 15 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் மலேரியா, மூளைக்காய்ச்சல், டெங்கு போன்ற நோய்களும் வேகமாகப் பரவி வருவதாகச் செய்திகள் வருகின்றன. உடல் மற்றும் மூட்டு வலியுடன் ஆளை முழுவதும் முடக்கிப் போடுகின்ற ஒரு மர்மக் காய்ச்சலும் பரவி வருவதாகச் செய்திகள் வெளியாகின்றன. நோயைக் கட்டுப்படுத்த வேண்டிய மாநகராட்சி சுகாதாரத் துறை அலட்சியமாக இருக்கிறது.

சென்னையில் தொடர் மழை காரணமாகப் பழுதடைந்துள்ள சாலைகளை உடனே சீரமைப்பதற்காக 87 இலட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட “கோல்ட் மிக்ஸ் கலவை” (கோல்ட் மிக்ஸ் கலவை என்றால், மழை காலத்திலும் விரைவாக உலரக்கூடிய நவீன காங்கிரீட் கலவை) ஒரு சில இடங்களில் மட்டும் ஏதோ பெயருக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர, மீதம் என்னவாயிற்று என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மழை சேதங்கள் பெருமளவில் இவ்வாறு ஏற்பட்டிருக்கும்போது, அதைப் பற்றி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் பேசுவதற்காக முனைந்த தி.மு. கழக உறுப்பினர்களைத் தமிழகச் சட்டமன்றத்தில் தற்போது வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் பாணியில், மாநகராட்சி மேயர் கூண்டோடு வெளியேற்றியிருக்கிறார். சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இன்றைய முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் பெயரைக் குறிப்பிடாமல், மக்கள் முதல்வர் புரட்சித் தலைவி வழிகாட்டுதலின்படி என்று குறிப்பிடப்பட்டதைப் பற்றிக் கூட கேள்வியெழுப்ப கழக உறுப்பினர்களுக்கு அனுமதி தரவில்லையாம்.

தமிழகத்திலே உள்ள நாளேடுகள் எல்லாம் தமிழக அரசின் மெத்தனத்தையும், சென்னை மாநகராட்சியின் அலட்சியத்தையும் செயலின்மையையும் விமர்சித்து எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக இன்றைய “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேடு “Corporation

pats itself as City battles rain woes” (சென்னை மாநகரம் மழையினால் ஏற்பட்டிருக்கும் துன்பங்களோடு போராடிக் கொண்டிருக்கும்போது, சென்னை மாநகராட்சி தனக்குத்தானே பாராட்டிக் கொண்டிருக்கிறது) என்ற தலைப்பில்; கடந்த ஒரு வாரமாகச் சென்னையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மாநகரத்தின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சனிக்கிழமை அன்று நடைபெற்ற மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கனமழையால் ஏற்பட்டிருக்கும் சேதங்களைப் பற்றி விவாதிப்பதை முற்றிலும் தவிர்த்துவிட்டு மாநகராட்சியின் மூன்றாண்டு சாதனைகளைப் பேசுவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது என்றெல்லாம் எழுதியுள்ளது. ரோமாபுரி தீப்பற்றி எரியும்போது, பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோவைப் போல, மாநகர மக்கள் எண்ணற்ற பிரச்சினைகளினால் திக்கித் திணறிக் கொண்டிருக்கும்போது, மேயர் சாதனை சாகசத்தில் சந்தோஷப்பட்டிருக்கிறார்.

டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக அக்டோபர் மாதத்தில் சராசரியாக 24.64 செ.மீ. மழைதான் பெய்யும் என்றும், ஆனால் இந்த ஆண்டு இதுவரை 32.96 செ. மீ. மழை பெய்திருப்பதாகவும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது. இந்தப் பெருமழையிலும், தீபாவளி நாளன்று மெரினா கடலில் குளிக்கச் சென்ற பதினேழே வயதுடைய மூன்று மாணவர்கள் அலையிலே அடித்துச் செல்லப்பட்டுப் பலியாகியிருக்கிறார்கள்.

சென்னைப் புறநகர் பகுதியான சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பெருங்குடி ஆகிய பகுதிகளில் தண்ணீர் அதிக அளவுக்கு இன்னமும் தேங்கிக் கிடக்கிறது. காரப்பாக்கத்தில் உள்ள கங்கையம்மன் கோவிலையும் வெள்ளம் சூழ்ந்ததால், கோவிலில் பூஜைகள் எதுவும் இரண்டு நாட்களாக நடைபெறவில்லையாம். அம்பத்தூர் மேனாம்பேடு சுருக்கு பகுதியில் பாதாள சாக்கடைக்காகத் தோண்டிய பள்ளங்கள் இன்னும் மூடப்படாமல் கிடந்ததால், மழைநீரில் அந்தப் பள்ளங்கள் மூழ்கி, சாலையில் பயணம் செய்வோர் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் செய்தி வந்துள்ளது.

கழகத் தோழர்கள், குறிப்பாகக் கழகச் சட்டப் பேரவை உறுப்பினர்கள், கழகப் பொருளாளர் தம்பி ஸ்டாலின் போன்றவர்கள்

வெள்ளப் பகுதிகளைப் பார்வையிடச் சென்றால், உடன் வந்து பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒத்துழைக்க வேண்டிய அதிகாரிகள், ஆளுங்கட்சியினருக்குப் பயந்துகொண்டு ஓடி ஒளிகிறார்களாம்.

தமிழகத்தில் பெருமளவில் சேதம் ஏற்பட்ட நிலையிலும் தமிழக அரசு அதனைக் கண்டுகொள்ளவோ, கவலை அடையவோ இல்லை என்றும், எந்தவிதமான நிவாரணப் பணிகளும் நடைபெறவில்லை என்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அடுக்கடுக்காகப் புகார் கூறிய பிறகு, அ.தி.மு.க. அரசுக்கு திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டு, அவசரக் கோலத்தில் வெள்ளச் சேதத்தைப் பார்வையிட்டு அறிக்கை கொடுக்க 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அனுப்பி அவர்களை ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் பயணம் செய்து மழை, வெள்ளச் சேதம் பற்றி அறிக்கை தரவேண்டுமென்று பணித்திருக்கிறார்கள். இந்த அதிகாரிகளின் மதிப்பீட்டினையொட்டி மாநில அளவில் வெள்ளச் சேதம் மதிப்பிடப்பட்டு, மத்திய அரசிடம் நிவாரண நிதியைப் பெறுவது என்று முடிவு செய்திருக்கிறார்கள். தற்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசின் சார்பில் என்ன உதவி செய்யப் போகிறார்கள்? எந்த அளவுக்கு நிவாரணத் தொகை வழங்கப்போகிறார்கள் என்பதைப் பற்றி எதுவும் தெரிவிக்காமல் மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுவதிலேயே குறியாக உள்ளார்கள். பெருமழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு “உடனடி நிவாரணம்” என்பது மிக மிக முக்கியமானது என்பதையே ஆட்சியாளர்கள் மறந்துவிட்டார்கள் போலும்!

திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் - குறிப்பாகப் பழனி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பெருமழை காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பொது இடங்களில் தங்கியிருக்கிறார்களாம். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு சேதம் ஏற்பட்டுள்ளதாம். திண்டுக்கல் மாவட்ட அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிடவோ, நிவாரணப் பணிகளைக் கவனிக்கவோ இதுவரை வரவில்லை. இந்நாள் முதல்வர் பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வருவதாகக் கூறப்பட்டு, மக்கள் எல்லாம்

காத்திருந்திருக்கிறார்கள். ஆனால் பன்னீர்செல்வம் மதுரை வரை

வந்தவர், வெள்ளப் பாதிப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் சென்னை திரும்பிவிட்டார்.

சேலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை காரணமாகப் பல்வேறு நோய்த் தாக்குதல்களுக்குப் பொதுமக்கள் ஆட்பட்டு, சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சேலம் அரசு மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வருகிறார்கள். 140 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் திருச்சி, நெல்லை, பழனி போன்ற நகரங்களிலும் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகமே “காய்ச்சல்” பூமியாக மாறி வருவது கண்டு தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டிய அரசு செயலற்றிருக்கிற து.

நெல்லையில் கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் மழை நீர் வீணாக, தாமிர பரணியில் கலக்கிறது. தீபாவளிக்கு முன்தினமே “குளம் உடையப்போகிறது, அதிகாரிகளே; வந்து மீட்டுத் தாருங்கள்” என்று விவசாயிகள் கண்ணீருடன் கூக்குரல் இட்டபோதும், உதவிக்கு ஓடிவராத அதிகாரிகள் குளம் உடைந்து, ஊத்துமலை கிராமம் முழுதும் தண்ணீரில் மிதக்கின்ற நேரத்தில், அதைப் பார்வையிட அதிகாரிகள் வந்தபோது, அவர்களைக் கிராம மக்கள் முற்றுகையிட்டிருக்கிறார்கள். அதுபோலவே பழனி பகுதியிலேகூட ஆளுங்கட்சிச் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் பெரிதும் பாதிக்கப்பட்ட கோம்பைப்பட்டிப் பகுதியைப் பார்வையிட வந்தபோது கிராம மக்கள் அவரை முற்றுகையிட்டிருக்கிறார்கள். ஆளுங்கட்சியினரின் அலட்சியம் மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. தாமிரபரணி பாசன உரிமைப் பாதுகாப்பு பேரவைத் தலைவர் அ.வியனரசு கூறும் போது, “பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அக்கறையின்மையால் விவசாயக் குளங்களுக்குத் தண்ணீர் திருப்பிவிடுவதற்குப் பதிலாக, வினாடிக்குப் பத்தாயிரம் கன அடி வீதம் மழை நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதுவரையிலும் 5 டி.எம்.சி. தண்ணீர் யாருக்கும் பயனின்றிக் கடலுக்குச் சென்று விட்டது. நெல்லையில் நதி நீர் இணைப்புக் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தியிருந்தால், தண்ணீரை அங்குத் திருப்பி விட்டிருக்கலாம். ஆனால் கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட அந்தத் திட்டத்தையும் தற்போதைய

தமிழக அரசு செயல்படுத்தாமல் புறக்கணிக்கிறது” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார். கடந்த பத்து நாட்களாகப் பெய்த பெரு மழை காரணமாகத் தமிழகம் முழுவதும் என்ன பாடுபடுகிறது என்பதை ஒட்டுமொத்தமாக முடிந்தவரை தொகுத்துக் குறிப்பிட்டுள்ளேன். தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்றிருக்கிறது என்பதைக் காட்டிக் கொள்வதற்காகவாவது, ஆட்சியினர் பயத்திலிருந்து விடுபட்டு, உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர்களையெல்லாம் அழைத்துப் பேசி, தேவையான வெள்ள நிவாரணப் பணிகளை விரைவுபடுத்திட வேண்டும். மத்திய அரசை எதிர்பார்த்துக் காத்திருக்காமல், மாநில அரசின் சார்பில் இதற்காகத் தனியாக சிறப்பு நிதி இருக்கும், நிதித் துறைச் செயலாளரை அழைத்துப் பேசினால், அவர் நிவாரண நிதிக்காக முதற்கட்டமாக அறிவிக்க உதவுவார். ஓரிரண்டு நாட்களில் அந்த நிதியை ஒதுக்கிட ஆவன செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணமாக எத்தனை ஆயிரம் ரூபாய் தரப்படும் என்பதையும் அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு அமைச்சரையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு உடனே அனுப்பிப் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்த்து ஆறுதல் வழங்குவதோடு, அவர்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை முடுக்கிவிட வேண்டும். இக்கட்டான இந்த நேரத்தில் நமது மக்களைக் கைவிட்டுவிடக் கூடாது. இந்த நடவடிக்கைகளையெல்லாம் “மக்கள் முதலமைச்சர், புரட்சித் தலைவி, அம்மா” அவர்களின் வலியுறுத்தல்படிச் செய்வதாகத் தவறாமல் அறிவிப்பாக ஏடுகளுக்குப் பன்னீர்செல்வம் “பயப்படாமல்” தரலாம். அப்போதுதான் இருக்கும் பதவி நிலைத்திடக் கூடும்! அன்புள்ள, மு.க. 27-10-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 52 PDF ↗