உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 52

தொகுதி 52 · கடிதம் 3931

ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்! (5)

2014-10-25

உடன்பிறப்பே,

ஓரிரு “உடன்பிறப்பு” கடிதங்களின் வாயிலாக “குன்ஹா” அவர்களின் தீர்ப்பினைச் சுருக்கி உனக்கு விளக்கிடலாம் என்று எண்ணினேன். ஆனால் அது நான்கு மடல்கள் வரை விவரித்த ': போதிலும் முடிவுக்கு வந்தபாடில்லை. இருந்தாலும் இன்னும் ஒன்றிரண்டு கடிதங்களுடன் முடித்துவிட எண்ணியுள்ளேன். இதுவரை நான் விளக்கியிருப்பதில் இருந்தே ஜெயலலிதா சொத்துக் குவிப்பு பற்றிய உண்மை விவரங்களை நீ புரிந்து கொண்டிருப்பாய்; நீ புரிந்து கொண்டதை நாட்டு மக்களுக்கு விளக்கிப் புரிய வைக்கும் பணியிலே ஈடுபட வேண்டும். ஏனென்றால் ஒரு பெண்மணிக்குச் சிறைத் தண்டனை என்றதும், தாய்மார்கள் அனுதாபப்படுவது சகஜம்தான்! குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு நீதிபதியாலோ, நம்மாலோ, எந்தவிதமான தீங்கும் இழைக்கப்பட்டு விடவில்லை; ஏற்பட்ட பாதகம் எல்லாம் அவர்களாகவே தங்களுக்குத் தாங்களே தேடி உருவாக்கிக் கொண்டதுதான்; இதில் மற்றவர்களைக் குறை சொல்வதற்கு ஏதுமில்லை என்ற உண்மையைப் புரியவைக்கும் முயற்சியிலே ஈடுபட்டாக வேண்டும். அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் - பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்தால்தான் தங்களுடைய பதவி நிலைக்கும் என்று பதவியிலே இருப்போரும் - மீண்டும் பதவி கிடைக்கும் என்று பதவி பறிக்கப்பட்டோரும் - ஏதாவது ஒரு பதவி கிடைக்காதா, அதன்மூலம் மேலும் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள முடியாதா என்று ஏங்கித் தவிப்போரும் நம்மைத் தாக்கி வெளியிட்ட விளம்பரங்களும் அறிக்கைகளும்தான் இந்த நீண்ட கடிதத் தொடரினை எழுதுவதற்கான காரணம் என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்தி இழுத்தடிக்க

எப்படியெல்லாம் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் செயல்பட்டார்கள் என்பதை அவர்கள் 2010ஆம் ஆண்டிலிருந்து மட்டும் 130 முறை வாய்தா வாங்கியதிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். மேலும் ஓர் உதாரணமாக, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், தீர்ப்பு வெளிவரவிருந்த நேரத்தில், தங்களது சொத்துக்களையும் இந்த வழக்கில் இணைத்திருப்பதாகவும், வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென்றும் கோரி ஐந்து நிறுவனங்கள் சிறப்பு நீதிமன்றத்தில் திடீரென்று தனித்தனியாகக் கடந்த மார்ச் மாதத்தில் தாக்கல் செய்த மனுவினை விசாரித்த சிறப்பு நீதிபதி குன்ஹா அவர்கள், மனுவினைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த நேரத்தில், மூல வழக்கிற்குத் தடை விதிக்கக் கோரியதற்குக் கண்டனம் தெரிவித்து, “நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதற்காக” பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து 14-3-2014 அன்று உத்தரவிட்டார்.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து வழக்கம் போல, லெக்ஸ் பிராபர்ட்டீஸ் சார்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தபோது, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி திரு. சத்யநாராயணா அவர்கள் 29-4-2014 அன்று அளித்த தீர்ப்பில், அந்த மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, மேலும் நீதிமன்ற நேரத்தை வீணாக்கும் வகையில் செயல்பட்டதற்காக தனி நீதிமன்றம் விதித்த ரூ.10 ஆயிரம் அபராதம் குறைவானது என்பதால் அதனை 10 மடங்கு உயர்த்தி ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, அபராதத் தொகையை 15 நாட்களில் செலுத்தவேண்டுமென்று உத்தரவிட்டார். அந்தத் தீர்ப்பை எதிர்த்து, லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செளகான், செல்லமேஷ்வர், இக்பால் ஆகியோர், சொத்துக் குவிப்பு விசாரணைக்குத் தடை விதிக்குமாறு லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனம் முன்வைத்த கோரிக்கையை நிராகரிப்பதாக 8-5-2014 அன்று தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணையைத் தடுத்திடும் வகையில் செயல்படுவதாக அந்த நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனத்தைப் போலவே, சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மெடோ ஆக்ரோ பார்ம் மற்றும் ரிவர்வே

ஆக்ரோ பார்ம் ஆகிய கம்பெனிகளை விடுவிக்க வேண்டுமென்று தாக்கல் செய்த மனுவை விசாரணை நடத்த வேண்டும், அதுவரை மூல வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டுமென்று அந்தக் கம்பெனிகள் சார்பில் தனித்தனியாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதி குன்ஹா, மூலவழக்கிற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததுடன் நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதற்காக இரண்டு கம்பெனிகளுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ.தரப்பு வாதங்கள் ஒவ்வொன்றுக்கும் பதிலளித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா, ஜெயலலிதா மீது வழக்கு தொடர ஆளுநர் உத்தரவிட்டது சரியே என்றும், வழக்கை விசாரிக்க நல்லம்ம நாயுடுவுக்கு உத்தரவிடப்பட்டதில் சட்டவிரோதம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“வாக்குமூலங்கள் தீயநோக்கத்துடன் பயன்படுத்தப் பட்டதாக வாதாடிய ஜெ. வழக்கறிஞரால், விசாரணையின்போது, ஒரு வாக்குமூலத்தைக்கூட தன்னுடைய குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் வகையில் எதிர்க்க முடியவில்லை” என்றும் நீதிபதி குன்ஹா தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, ஜெயலலிதா, பெங்களூருவில் உள்ள கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தன்மீது சென்னை தனி நீதிபதியின் 5.6.1997 தேதியிட்ட உத்தரவின் பேரில் தொடரப்பட்ட குற்ற நடவடிக்கைகள் முழுவதுமே செல்லாதவை என்று கூறி ரத்து செய்ய வேண்டும் எனக்கேட்டு, மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனு 10.3.2010ல் பிறப்பிக்கப்பட்ட கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவின் மூலம் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் 19.3.2010 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே ஜெயலலிதா தரப்பினர் மீது தொடரப்பட்ட குற்ற நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை என்று கூறிய வாதம் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி குன்ஹா தெரிவித்திருக்கிறார்.

நீதிபதி குன்ஹா மாத்திரமல்ல; 28-3-2005 அன்று ஜெயலலிதா உட்பட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு

வழக்கு விசாரணை பெங்களூரில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு தொடங்கியபோதும் ஜெயலலிதா தனி நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஜெயலலிதா தரப்பில் ஒரு மாதம் அவகாசம் கேட்டார்கள். அப்போதைய சிறப்பு நீதிபதி பச்சாபுரே அவகாசம் தர மறுத்து, 18-4-2005க்கு வழக்கை ஒத்திவைத்தார். அந்த 18ஆம் தேதியன்றும் ஜெயலலிதா, சசிகலா ஆஜராகவில்லை. ஜெயலலிதாவின் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான மூத்த வழக்கறிஞரின் உதவியாளர், மூத்த வழக்கறிஞர் உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவமனையிலே இருப்பதாகக் கூறினார். “அவர் வராமல் போகட்டும், குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரும் எங்கே? குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாமல் இருப்பதை வைத்தே தீர்ப்பு வழங்கி விடுவேன்” என்று கண்டிப்புடன் எச்சரிக்கை செய்தார் நீதிபதி. விசாரணையை 2005, மே 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்று ஜெயலலிதா, சசிகலா உட்பட அனைவரும் கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். 9-5-2005 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.டி. துளசி நீண்ட நாள் அவகாசம் கேட்டார். அப்போது நீதிபதி பச்சாபுரே கடும் கோபமடைந்து, “வருகிற 16-5-2005 இறுதி அவகாசம் தருகிறேன். அதற்கு மேல் அவகாசம் தர மாட்டேன்” என்றும், “அன்று ஜெயலலிதா, சசிகலா உட்பட நான்கு பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்” என்றும் உத்தரவிட்டார். அவரது வழக்கறிஞர்கள் அன்றைய தினமும் வழக்கைத் தள்ளிவைக்க வேண்டுமென்று கூறியபோது, நீதிபதி பச்சாப்புரே என்ன சொன்னார் தெரியுமா?

“நீண்ட அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. வழக்கை தினந்தோறும் நடத்தவுள்ளேன். இப்படி அடிக்கடி வாய்தா கேட்டால் எப்படி வழக்கை விரைவாக நடத்துவது? இரண்டரை ஆண்டுகளாக வழக்கை வாய்தா கேட்டு இழுத்தடித்துவிட்டு தற்போது மீண்டும் வாய்தா கேட்பது சரிதானா? சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை விரைவாக நடத்த வேண்டுமென்று எனக்கு உத்தரவிட்டு உள்ளது. கடந்த ஆறு மாதமாக இந்த வழக்கில் எந்த விசாரணையும் நடக்கவில்லை. நான் தனியாகக் கடந்த ஆறு மாதமாக நீதிமன்றத்தில் உட்கார்ந்து வருகிறேன். தனிச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது போல உணருகிறேன்”

என்று நீதிபதி பச்சாப்புரே மனம் நொந்து அப்போதே சொன்னார். உடன்பிறப்பே, இந்த வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்துவதற்காக ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொரு விதமான உத்தியை ஜெயலலிதா தரப்பினர் கையாண்டு, நீதிமன்ற நடவடிக்கைகளைக் கேலிக் கூத்தாக்கிட முயற்சித்தனர் என்பது இந்த விவரங்களிலிருந்து உனக்குத் தெளிவாகப் புரியுமென்று கருதுகிறேன். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம்ம நாயுடுவுக்குப் பிறகு, அ.தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டு, இதனை விசாரித்த டி.எஸ்.பி. சம்பந்தம் என்பவர், சட்டப்படி ஆற்றிட வேண்டிய கடமையை மறந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆஜராகி சாட்சியம் அளித்தார். ஒரு விசாரணை அதிகாரியை அதே வழக்கில் குற்றவாளிகள் தரப்புச் சாட்சியாக விசாரிப்பது என்பது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு எதிரானது. இந்தக் குறைந்தபட்ச சட்ட நடைமுறை கூட இந்த வழக்கிலே பின்பற்றப்படவில்லை. கடைசி சாட்சியாக (99வது சாட்சி) டி.எஸ்.பி. சம்பந்தத்தை ரகசியமாகக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கச் செய்தார்கள். லஞ்ச ஒழிப்புத் துறையைச் சேர்ந்த இந்த அதிகாரி, அரசு அதிகாரி என்ற முறையில் ஆற்ற வேண்டிய அடிப்படைக் கடமையைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்டு, சாட்சி ஆவணங்களைக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் குறிப்பிடவும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே பொறுப்பு விசாரணை அதிகாரி சம்பந்தம்தான், அரசு வழக்கறிஞரை மீறி, நேரடியாகச் சிறப்பு நீதிபதிக்கு இந்த வழக்கு தொடர்பாக மறு விசாரணை செய்யப்பட வேண்டுமென்று முன்பு கடிதம் எழுதியவர். இதுகுறித்துக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாம் தாக்கல் செய்த புகார் மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, டி.எஸ்.பி. சம்மந்தத்தின் கோரிக்கையை நிராகரித்ததுடன், தமிழகத்தின் அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி செயல்படும் பொறுப்பு விசாரணை அதிகாரி சம்பந்தத்தையும் கண்டித்தது. உடன்பிறப்பே, தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் கைக்குவந்தவுடன், இந்த வழக்கு விசாரணையைத் திசை திருப்பிடச் சட்டத்திற்குப் புறம்பான

நடவடிக்கைகளில் ஜெயலலிதா தரப்பினர் வெளிப்படையாகவே ஈடுபட்டனர் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

ஜெயலலிதா தரப்பினர் குவித்து வைத்திருந்த நகைகளைப் பற்றிக் கூற வேண்டுமேயானால், ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை அளவு 23 கிலோ, 113 கிராம். அதன் விலை அன்றைய தேதியில் 91 லட்சத்து 57 ஆயிரத்து 253 ரூபாய். அவர் வீட்டில் இருந்த வைரத்தின் விலை அன்றைய தேதியில் 2 கோடியே 43 இலட்சத்து 92 ஆயிரத்து 790 ரூபாய். மொத்தமாக தங்க, வைர ஆபரணங்களின் மதிப்பு 3 கோடியே 35 இலட்சத்து 50 ஆயிரத்து 43 ரூபாய்.

இது தவிர்த்து போயஸ் கார்டன், வீட்டில் நடத்திய சோதனையில் 42 நகைப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டு, அவற்றிலும் நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. அதில் சில பெட்டிகளில் கைக்கடிகாரங்களும், மற்றவற்றில் 131 நகைகளும் இருந்தன. அதன் எடை 4 கிலோ 475 கிராம். அதன் மதிப்பு அன்றைய விலையில் 17 இலட்சத்து 37 ஆயிரத்து 266 ரூபாய். வைரம் பதிக்கப்பட்ட தங்கக் கம்மல் விலை 47 இலட்சத்து 61 ஆயிரத்து 816 ரூபாய் என்று கணக்கிடப்பட்டது.

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி. குமார், தன்னுடைய வாதத்தில், அரசுத் தரப்பு பட்டியலிட்டுள்ள நகைகளில், வரிசை எண் 284 மற்றும் 285ல் உள்ள நகைகள், முதல் அமைச்சர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே ஜெயலலிதாவிடம் இருந்தவை என்று கூறியுள்ளார். 1987லிருந்து அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கை மொத்தமாக 1992இல் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ளார். 1992ஆம் ஆண்டுக்கான வருமான வரியை 1993ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி செலுத்தியுள்ளார். அடுத்தடுத்த ஆண்டுகளில் செய்யப்பட்ட இந்த வருமான வரி கணக்குத் தாக்கலில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதுபற்றி வருமான வரித் துறை கேள்வி எழுப்பிய போது ஓர் ஆண்டில் தங்க, வைர ஆபரணங்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டதாகவும், மேலும் தங்களுக்கு இந்தக் காலத்தில் அதிக எண்ணிக்கையில் பரிசுப் பொருள்கள் கிடைத்ததாகவும் காரணம் சொல்லியுள்ளனர். இதையடுத்து, வருமானவரித் துறை உதவி ஆணையர், “கடந்த ஆண்டில் உங்களுக்கு அன்பளிப்பாக 19 புதிய ஆபரணங்கள் கிடைத்துள்ளன.

அவற்றின் எடை 7,040 கிராம். 101.49 “கேரட்” எடையுள்ள வைரங்களும் கிடைத்துள்ளன என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், அவற்றை முறையாகப் பட்டியலிடவில்லை” என்று கூறி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இந்த ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தெளிவாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பரிசுப் பொருள்கள் மற்றும் புதிய நகைகள் 1992க்குப் பிறகே வந்துள்ளன என்பது நிரூபணமாகிறது என்று நீதிபதி குன்ஹா விளக்கியுள்ளார். மேலும் நீதிபதி குன்ஹா, “இதிலிருந்து நமக்குத் தெரிய வருவது என்னவென்றால், 1991க்குப் பிறகு அவர்களிடம் குவிந்த நகைகளை பழைய தேதியிட்டுக் கணக்குக் காட்டி, வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். அப்படி வரி கட்டியதால் மட்டுமே இந்த வருமானம் நல்ல வழியில் வந்த வருமானமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வருமானம் எந்த வழியில் வந்தது என்பதை “பொது ஊழியர்” என்ற முறையில் ஜெயலலிதா ஏற்கத்தக்க வகைகளில் சொல்லியாக வேண்டும். ஆனால், கிலோக் கணக்கில் தங்கமும், வைரமும் தனது வீட்டுக்கு எப்படி வந்தது என்பதை ஜெயலலிதாவினால் கடைசிவரை சொல்லவே முடியவில்லை. இவை அனைத்தும் சசிகலாவின் பெயரில் இருப்பதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நினைவூட்டினார். அப்படியானால் சசிகலாவுக்கு இவ்வளவு நகைகள் எப்படி வந்தன? அவர் அதையாவது நிரூபிக்க வேண்டுமல்லவா? அவர் இந்த நகைகளை எப்படி வாங்கினார்? எந்தத் தேதியில் வாங்கினார்? என்ற விவரங்களையும் சொல்ல முடியவில்லை. ஆதாரங்களின் மூலம் தங்கமும் வைரமும் ஜெயலலிதாவால் சசிகலாவின் பெயரில் வாங்கிக் குவிக்கப்பட்டன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை மறுப்பதற்கு ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரிடமும் எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே குற்றச்சாட்டு நிரூபணமாகிறது” என்று நீதிபதி குன்ஹா தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் கூறும்போது, “ஜெயலலிதாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகையின் எடை 27 ஆயிரத்து 588 கிராம். அதில் ஜெயலலிதா பதவிக்கு வருவதற்கு முன்பே அவரிடம் இருந்த நகைகளாக, தற்காப்புச் சாட்சிகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அளவு 7 ஆயிரத்து 40 கிராம். எனவே அவற்றை இந்த வழக்கிலிருந்து தள்ளுபடி செய்து விடுகிறேன். அப்படிச் செய்தால் மீதம் இருக்கும் 20 ஆயிரத்து 548 கிராம் எடை தங்கம், ஜெயலலிதாவின் பதவிக்

காலத்தில் சம்பாதித்தவை என்றாகிறது. இதற்கு விலையாக, இரு தரப்பினருமே ஏற்றுக்கொண்ட 1992ஆம் ஆண்டின் தங்க விலை நிலவரப்படி கணக்கிடுவது என்று நீதிமன்றம் முடிவுசெய்கிறது. அதன்படி கணக்கிட்டால் 89 இலட்சத்து 5 ஆயிரத்து 503 ரூபாய் வருகிறது. மேலும் ஜெயலலிதாவிடம் இருந்த வைரங்களின் மதிப்பு 1 கோடியே 62 இலட்சத்து 61 ஆயிரத்து 820 ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அந்தத் தொகையை தங்க நகையின் மதிப்போடு சேர்த்துக் கணக்கிட்டால் 2 கோடியே 51 இலட்சத்து 59 ஆயிரத்து 144 ரூபாய். இவ்வளவு மதிப்புடைய தங்கத்தாலும், வைரத்தாலும் இழைக்கப்பட்ட நகைகள் அனைத்தும் ஜெயலலிதாவால் முறைகேடான வழியில் சம்பாதிக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவிக்கின்றது” என்று நீதிபதி குன்ஹா அவர்கள் தனது நீண்ட தீர்ப்பில் விளக்கியிருக்கிறார்.

சசிகலா 1990-91 ஆம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை 1993ஆம் ஆண்டு தாக்கல் செய்துள்ளார். அதில், அவர் தன்னிடம் தங்க வைர ஆபரணங்களின் மதிப்பு 12 லட்சத்து 95 ஆயிரத்து 704 ரூபாயும், 5 கிலோ வெள்ளிப் பொருள்களின் மதிப்பு 27 ஆயிரத்து 468 ரூபாய் என்றும் கணக்குக் காட்டியுள்ளார். ஆனால் 1991- 92ஆம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை, சசிகலா தாக்கல் செய்த போது, தன்னிடம் இருக்கும் தங்க, வைர ஆபரணங்களின் மதிப்பு 1 கோடியே 10 லட்சத்து 13 ஆயிரத்து 946 ரூபாய் என்றும், வெள்ளிப் பொருள்களின் மதிப்பு 70 இலட்சத்து 61 ஆயிரத்து 400 ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது சசிகலாவுக்கு 1990-91 ஆம் ஆண்டில் இருந்த 12 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நகை, அதற்கு அடுத்த ஆண்டில், அதாவது 1991-92இல் இருந்த நகைகளின் மதிப்பு ஒரே ஆண்டில் 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் என்று உயர்ந்துள்ளது என்றால், எந்த அளவுக்கு சொத்துக் குவிப்பு வேக வேகமாக நடந்துள்ளது என்பது உறுதியாகிறதல்லவா?

உடன்பிறப்பே, நீதிபதி குன்ஹா அவர்கள் இந்தத் தீர்ப்பின் 900ஆவது பக்கத்தில், “Heady mix of power and wealth is the bottom line in this case. Huge accumulation of wealth by accused in a short span of five years is a telling example how power would lead to concentration of unlawful wealth posing veritable danger to the democratic

structure”. அதாவது, “இந்த வழக்கின் அடித்தளமாக இருப்பதே

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பெற்றிருந்த ஆட்சி அதிகாரமும், அதன் மூலம் குவித்த சொத்துக்களும்தான். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மிகக் குறைந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான சொத்துக்களைக் குவித்தார்கள் என்பது ஒன்றே, அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டத்திற்குப் புறம்பான வகையில் சொத்துக்களைச் சேகரிப்பது எப்படி ஜனநாயகக் கட்டமைப்புக்கு ஆபத்தாக முடியும் என்பதற்கான சிறந்த சான்றாக விளங்குகின்றது” என்று நீதிபதி குன்ஹா அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதில் இருந்தே, ஜெயலலிதா தரப்பினரின் சொத்துக் குவிப்பு எந்த அளவுக்கு ஜனநாயக அமைப்புக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பது விளங்குகிறது அல்லவா?

ஜெயலலிதா தரப்பினர் குவித்த நகைகள் பற்றிய விவரத்தைக் குறிப்பிட்டுள்ளேன். மேலும் சில முக்கியமான விவரங்கள் தீர்ப்பிலே உள்ளன. அவற்றைப் பற்றி நாளை தொடருகிறேன். அன்புள்ள, மு.க. 25-10-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 52 PDF ↗