உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 50

தொகுதி 50 · கடிதம் 3860

பதில் உரையா? பழி உரையா? (2)

2014-02-06

உடன்பிறப்பே,

முதலமைச்சர் ஜெயலலிதா ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதில் அளித்தபோது தொடக்கத்திலேயே “சட்டப்பேரவையில் கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு இருந்தும், அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல் அரசின் மீது குற்றங்களை மட்டுமே சுமத்த வேண்டுமென்ற எண்ணத்தில் மனம் போன போக்கில் சிலர் பொறுப்பற்ற முறையிலே வெளியே பேசியிருக்கிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் ஜனநாயக ரீதியாக, சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டு கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறதா? ஆளுங்கட்சியின் மீது ஆக்கப்பூர்வமான முறையில் குற்றங்களை எடுத்துக் கூற இதுவரை யாருக்காவது வாய்ப்புத் தரப்பட்டிருக்கிறதா? ஆட்சியினர் மீது பூர்வாங்க ஆதாரங்களோடு குற்றச்சாட்டுகளைக் கூறினால், அது பொறுப்பற்ற முறையில் பேசுவதாகப் பொருளா?

“நிறைகளையும், குறைகளையும் ஆராய்ந்து பார்த்து, அவற்றில் மிகுதியாக இருப்பவை எவை என்பதைத் தெரிந்து, அதன் பிறகு தெளிவான முடிவுக்கு வரவேண்டும் என்கிறார் திருவள்ளுவர்” என்று திருவள்ளுவரை முதலமைச்சர் எடுத்துக்காட்டிப் பேசியிருக்கிறார். இந்த ஆட்சியில் அய்யன் திருவள்ளுவர் என்ன பாடுபட்டிருக்கிறார் என்பது தமிழ்நாட்டிற்குத் தெரியாதா? பாடப் புத்தகத்தில் இருந்த திருவள்ளுவர் உருவப் படம் நீக்கப்படவில்லையா? குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை முறையாகப் பராமரிக்கப்படாமல் விடப்படவில்லையா? ஏன், சென்னை மாநகரிலே உள்ள வள்ளுவர்கோட்டம் இன்றைக்கு எந்தக் கதியிலே உள்ளது? இருளடைந்து பாழடைந்து இருக்கவில்லையா? திருவள்ளுவர் பெயரால் தமிழகத்திலே இருந்த நூலகங்கள் இழுத்து மூடப்படவில்லையா?

பேரறிஞர் அண்ணா அவர்களின் பெருமையையும் முதலமைச்சர் பேரவையிலே சொல்லியிருக்கிறார். ஆனால் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவினையொட்டி ஆசியா கண்டத்திலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய நூலகம் ஒன்றினைச் சென்னை மாநகரில் கழக ஆட்சியிலே எழுப்பினோம் என்பதற்காக இன்றைக்கு அதன் நிலைமை என்ன? அலட்சியத்திற்கும், ஆணவத்துக்கும் எல்லையே இல்லையா?

சட்டப்பேரவை வைர விழாவினை ஜெயலலிதா 2012 நவம்பரில் கொண்டாடினாரே, அதிலே அண்ணாவைப் பற்றி ஒரு வார்த்தை பேசினாரா? தற்போது தேர்தல் வருகிறது என்றதும், பேரவையில் அண்ணா அவர்களையும், சி. சுப்ரமணியம் அவர்களையும் தன் பேச்சிலே குறிப்பிட்டிருக்கிறார்!

ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய ஜெயலலிதா தனது உரையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவிகிதம் மதிப்பெண் சலுகை அளித்து அறிவிப்பு செய்திருக்கிறார்.

நானும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையிலே உள்ள திராவிடர் கழகமும் மற்றும் தமிழகத்திலே உள்ள எதிர்க்கட்சிகளும் திரும்பத் திரும்ப இந்த அரசிடம் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உரிய சலுகையை வழங்கிட வேண்டுமென்று கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வந்தோம். ஆனால் அரசின் சார்பில் இந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. மாறாக ஜெயலலிதா விடுத்த அறிக்கை ஒன்றில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருவதாக, நாம் என்ன கேட்கிறோம் என்பதன் அடிப்படையையே புரிந்து கொள்ளாமல் பதில் அளித்திருந்தார். மற்ற மாநிலங்களில் எல்லாம் இந்தச் சலுகை அளிக்கப்பட்டு வருவதைப் பற்றிய புள்ளி விபரங்களை நான் எனது அறிக்கையில் குறிப்பிட்டு, சமூக நீதியின் தாயகமான தமிழகத்திலே மட்டும் ஏன் இந்தச்சலுகை வழங்கப்படவில்லை என்று கேட்டிருந்தேன்.

ஆனாலும் தமிழக அரசு பிடிவாதமாக இருந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்காதது குறித்து தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் சென்னை மண்டல இயக்குனருக்கு திரு. பிரின்ஸ் கஜேந்திர பாபு கொடுத்த புகாரின் அடிப்படையில், தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் பிறப்பித்த உத்தரவில், “இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டுள்ளது, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்ததையொட்டி, கடந்த 30-1-2014 அன்று “இடஒதுக்கீட்டிற்கு இந்த ஆட்சியில் இடமே இல்லையா?” என்று நான் விளக்கி எழுதியிருந்தேன். அவ்வாறு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் பிறப்பித்த உத்தரவின் காரணத்தாலும், நானும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி போன்றவர்களும் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாகவும்தான் ஜெயலலிதா வேறு வழியின்றி தற்போது கீழே இறங்கி வந்து ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவிகித மதிப்பெண் சலுகை அளிக்க முன்வந்திருக்கிறார்.

ஜெயலலிதா உண்மையிலேயே இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் மீது பற்றுக் கொண்டு இதனை அறிவிக்கவில்லை. இது வெறும் கண்துடைப்பு. சமூக, கல்வி நிலைகளில் வெவ்வேறு அடுக்குகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினர் அனைவரையும் சகட்டுமேனிக்கு ஒன்றாகப் பாவித்து அனைவர்க்கும் ஒரே மாதிரியாக 5 மதிப்பெண் சலுகை என்று ஜெயலலிதா அறிவித்திருப்பதை இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள்? ஆசிரியர் தகுதித் தேர்வினால் ஏற்பட்டுள்ள பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவது பற்றி ஜெயலலிதா பதிலேதும் சொல்லவில்லையே?

தொழில் வளர்ச்சி பற்றியும் ஜெயலலிதா சட்டப் பேரவையில் பேசியிருக்கிறார். புதிய முதலீடுகள், வேலை வாய்ப்புகள் அனைத்திலும் பன்மடங்கு வளர்ச்சியைத் தமிழகம் அடைந்திருக்கிறது என்று பெருமிதப்பட்டிருக்கிறார். அவருடைய பெருமித உணர்வைப் பற்றி நமக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் முதலீடுகள் பற்றி நான் சொல்வதெல்லாம் பொய் என்று ஒரு விதண்டாவாதத்தை வைத்திருக்கிறார். 29-1-2014 அன்று “தமிழகத்தில் தொழில் வளர்ச்சி - அன்றும், இன்றும்” என்ற தலைப்பில் நான் ஆதாரங்களோடு பல விபரங்களைத் தெரிவித்திருக்கிறேன். தமிழகத்திலே உள்ள தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்திழுத்திடும் வகையில், நம்முடைய மாநிலத்திற்குள் கோவை மாநகருக்கு வந்து கர்நாடக மாநில முதலமைச்சர் கடந்த 20-1-2014 அன்று தொழில் முதலீட்டாளர்களையெல்லாம் அழைத்து மாநாடு நடத்தியது பற்றிய செய்தி அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது. அந்த மாநாட்டின் விளைவாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளிலே தொழில் நடத்துகின்ற சுமார் 200 தொழிலதிபர்கள் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்குச் சாம்ராஜ் நகரில் முதலீடுகளைச் செய்து தொழில் தொடங்கிட முன்வந்துள்ளனர் என்று “முரசொலி”யிலே அல்ல, ஆளுங்கட்சிக்கு வேண்டிய சில பத்திரிகைகளிலேயே செய்தி வந்ததா இல்லையா?

கர்நாடக மாநில முதலமைச்சரும், அதிகாரிகளும் தமிழகத்திற்கு வந்து மாநாடு நடத்தி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்து, அதனைத் தமிழக முதலீட்டாளர்களும் முழு மனதுடன் ஏற்று, கர்நாடகத்தில் தொழில் தொடங்கிட உறுதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலே உள்ள முதல்வரும், அந்தத் துறையின் அமைச்சர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? கொடநாட்டிலிருந்து ஆட்சிப் பணி புரிந்து கொண்டிருந்ததாக விளம்பரப்படுத்தி வந்த நிலையில் நான் பொய் சொல்வதாகச் சட்டப்பேரவையிலே கூறுவதா?

அதுமட்டுமா? மத்திய அரசின் கயிறு வாரிய துணைத் தலைவர் ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்து, “விழுப்புரத்தில் வழுதரெட்டி கிராமத்தில் 200 ஏக்கர் இடத்தில் தொழில் பூங்காவினை உருவாக்க முன்வந்த போதிலும், தமிழக அரசு இதுவரை பூங்கா அமைக்க அனுமதி அளிக்கவில்லை” என்றும்; “இது குறித்து, தமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சரைச் சந்திக்க கடந்த இரண்டு மாதங்களாக முயன்றும் பார்க்க முடியவில்லை” என்றும் பேட்டி அளித்தாரே; அதுவும் பொய்தான் என்று ஜெயலலிதா கூறிட முயற்சிப்பாரா?

முதலமைச்சர் 9-9-2011 அன்று பேரவையில் 110வது விதியின் கீழ் ஒரு திட்டத்தை அறிவித்தது பற்றியும், ஆனால் அந்தத் திட்டம் ஏற்கனவே 25-8-2011 அன்று பேரவையில் வைக்கப்பட்ட கொள்கைவிளக்கக் குறிப்பிலேயே இடம் பெற்றுள்ளது என்றும், ஏற்கனவே வைக்கப்பட்ட அந்தத் திட்டம் பற்றி முதலமைச்சர் புதிய அறிவிப்பு போலப் பேரவையில் செய்தது தவறு இல்லையா என்றும் கேட்டிருந்தேனே, இரண்டு மணி நேரம் பேரவையில் பதில் கூறிய முதலமைச்சர் இதற்குப் பதிலளித்திருக்க வேண்டாமா? பதில் இருந்தால்தானே சொல்வதற்கு?

முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் படித்த அந்த பதிலிலேயே, “கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமும், அரசாணைகள் மூலமும் 54 தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதாகச் சொல்லப்பட்ட தொகை 66,664 கோடி ரூபாய் ஆகும். இதில் 15,982 கோடி ரூபாய்க்கான 12 தொழில்கள் தொடங்கப்படவே இல்லை” என்று கூறியிருக்கிறார். இதிலிருந்து கழக ஆட்சியில் 50,682 கோடி ரூபாய்க்கான 42 தொழில்கள் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டதாக ஜெயலலிதாவே பேரவையில் ஒப்புக் கொண்டிருக்கிறார் அல்லவா? அதுவே தி.மு. கழக ஆட்சியில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லையா?

ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் 2011ஆம் ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நேர்முக மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 17 இந்திய மற்றும் பன்னாட்டுப் பெரும் நிறுவனங்களுடன் 26,625 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும், இதுநாள்வரை 10,660 கோடி ரூபாய் முதலீடுகள் கிடைக்கப்பெற்று, 10,022 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார். புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது 26,625 கோடி ரூபாய்க்கு! ஆனால் முதலீடுகள் கிடைக்கப்பெற்றது வெறும் 10,660 கோடி ரூபாய்க்குத்தான்! வெறும் நாற்பது சதவிகிதம்தான்! 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கத்தக்க வகையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், 10,022 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கத்தக்க அளவிற்குத்தான் முதலீடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் ஜெயலலிதாவே ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால், இதுதான் தொழில் வளர்ச்சிக்கான அடையாளமா?

புதிய தொழில் முதலீடுகள், புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது என்பதில் பன்மடங்கு வளர்ச்சியைத் தமிழகம் எட்டியிருக்கிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறிக்கொண்ட போதிலும், 4-2-2014 தேதிய நாளிதழ் ஒன்றுக்கு, அளித்த சிறப்புப் பேட்டியில், மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் “மத்திய அரசின் தொழில்துறை சார்பில் ஒரு பிரமாண்டமான தொழில் வளர்ச்சித் திட்டம் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான முதலீட்டில் 90 சதவிகிதம்வரை மத்திய அரசு கடனாக வழங்கும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை” என்று தொடங்கி, தமிழக அரசு எவ்வாறு தொழில் வளர்ச்சியில் அக்கறை இல்லாமல் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறாரே; ஜெயலலிதா அதற்கென்ன பதில் கூறப் போகிறார்?

சட்டம், ஒழுங்குப் பிரச்சினை பற்றிக் குறிப்பிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா சில புள்ளி விவரங்களையும் எடுத்து வைத்திருக்கிறார். குறிப்பாகக் கடந்த 2005ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் 1,366 ஆக இருந்த கொலைகளின் எண்ணிக்கை 2010ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் 1,715 என்ற அளவுக்கு உயர்ந்துவிட்டது என்று கூறிவிட்டு, பின்னர் அவருடைய ஆட்சியைப் பற்றித் தெரிவிக்கும்போது, 2011ஆம் ஆண்டு 1,747 கொலைகளும், 2012 ஆம் ஆண்டு 1,806 கொலைகளும் நடைபெற்றதாகச் சொல்லியிருக்கிறார் என்றால், தி.மு. கழக ஆட்சியை விட, அ.தி.மு.க. ஆட்சியில் கொலைகள் பெருகி இருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா என்பதை ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கும் இந்தப் புள்ளி விவரங்களிலே இருந்தே தெரிந்துகொள்ளுங்கள்!

சொத்து தொடர்பான வழக்குகளைப் பற்றி ஜெயலலிதா கொடுத்துள்ள புள்ளி விவரத்தில், 2012இல் 18,585 வழக்குகள் என்றும், 2013ஆம் ஆண்டு 19,465 வழக்குகள் தாக்கலாகி உள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார். 18,585 வழக்குகளைவிட 19,465 வழக்குகள் என்பது அதிகமா? குறைவா?

மேலும் ஜெயலலிதா அவருடைய ஆட்சியிலே கொலைக் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாகத் தனது பேச்சிலே தெரிவித்திருக்கிறார். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா? அன்றாடம் நாளேடுகளைப் பிரித்தால் கொலை நடைபெறாத நாட்கள் உண்டா? இத்தனை சதவிகிதம் குற்றங்களைக் கண்டுபிடித்து விட்டதாகக் காவல் துறையிலே உள்ளவர்கள் அறிக்கை தயார் செய்து கொடுப்பார்கள். எந்த ஆட்சி நடைபெற்றாலும், அதிலே சாதகமான புள்ளி விவரத்தை மட்டுமே அவர்கள் கொடுப்பார்கள். முதல் அமைச்சர் ஜெயலலிதாவும் அதை ஏற்றுக்கொண்டு, இத்தனைச் சதவிகிதம் குற்றங்களை அ.தி.மு.க. ஆட்சியிலே கண்டுபிடித்ததாகப் பெருமை அடித்துக் கொண்டிருக்கிறார்! நம் கண்ணுக்குத் தெரிந்த கொலை, திருச்சி ராமஜெயம் கொலை! சுப்பிரமணியம் சுவாமி கூட தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப் படவில்லை என்றும், பா.ஜ.க. தலைவர்கள் பலர் கொலை செய்யப்பட்டது பற்றியும் கண்டன அறிக்கை விட்டிருந்தாரே? மதுரையில் டொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டு எவ்வளவு நாட்களாயிற்று? இந்தக் கொலை வழக்குகளில் எல்லாம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டார்களா?

“எனது தலைமையிலான அரசைப் பொறுத்த வரையில் பயனற்ற இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பயனற்ற இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களை வித்தை காட்டி குழந்தையை ஏமாற்றுபவர்களோடு ஒப்பிட்டு இதே சட்டமன்றத்தில் பேசினேன்” என்று ஜெயலலிதா பேரவையில் தெரிவித்திருக்கிறார். ஆனால் இப்போது இந்த அ.தி.மு.க. ஆட்சியில் இலவசங்கள் வழங்கப்படுகின்றனவே, அது வித்தைகாட்டி குழந்தைகளை ஏமாற்றுபவர்களின் செயல்பாடு இல்லையா? தி.மு. கழக ஆட்சியில் இலவசங்கள் வழங்கப்பட்டால், அது வித்தைகாட்டும் செயல்; அ.தி.மு.க. ஆட்சியில் இலவசங்கள் வழங்கப்பட்டால், பாராட்டத்தக்க செயலா?

ஜெயலலிதா வழக்கம் போலக் கச்சத் தீவு பற்றிப் பேசவும் தவறவில்லை. 1991ஆம் ஆண்டு கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி வைத்து விட்டு, “கச்சத் தீவை மீட்டே தீருவேன்” என்று சபதம் செய்தவர் ஜெயலலிதா. ஆனால் அதுபற்றி நாம் எத்தனை முறை விளக்கங்களையும், பதில்களையும் தந்தாலும் நம் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார் ஜெயலலிதா. கச்சத் தீவு அருகே இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை கிடையாதென்று இந்திய அரசே சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததற்கு ஜெயலலிதா தெரிவித்த எதிர்ப்பு என்ன? ஒவ்வொரு நாளும் பிரதமருக்குக் கடிதம் எழுதும் ஜெயலலிதா, மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டாமா? இலங்கை, இந்திய மீனவர்கள் சந்தித்துப் பேசுவது பற்றிப் பிரதமர் எழுதிய கடிதத்திற்குப் பதில் எழுதாமல் இருந்த ஜெயலலிதாவுக்கு மீனவர் பிரச்சினை பற்றியோ, கச்சத் தீவு பிரச்சினை பற்றியோ பேசுவதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது.

தமிழகத்தில் விரைவில் மின்வெட்டே இருக்காது என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை எத்தனை முறை ஜெயலலிதா தமிழகத்தில் “விரைவில் மின்வெட்டே இருக்காது” என்று கூறியிருக்கிறார்? ஆனால் மின்வெட்டினால் தமிழ்நாட்டு மக்கள் இந்த ஆட்சியில் அவதிப்பட்டதைப் போல வேறு எந்த ஆட்சிக் காலத்திலாவது சிரமப்பட்டது உண்டா?

தி.மு. கழக ஆட்சியின் திட்டங்களால்தான் தற்போது கிடைக்கும் மின்சாரம் கூடக் கிடைக்கிறதே தவிர, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு எந்தப் புதிய மின் திட்டத்தாலும் தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. மேலும் இந்த ஆட்சியில் பல கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப் போவதாக அறிவித்த பல மின் திட்டங்களும் சர்வதேச ஒப்பந்தப் புள்ளி என்று கூறப்பட்டு எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த அழகில்தான் முதலமைச்சர், தமிழகத்தில் விரைவில் மின்வெட்டே இருக்காது என்று திசை திருப்பும் வகையிலே பேரவையிலே கூறியிருக்கிறார்.

வேளாண்மை பற்றியும், கால்நடைகள் பற்றியும் ஜெயலலிதா தனது உரையில் படித்திருக்கிறார். வேளாண்மை கடந்த மூன்றாண்டு காலமாக இந்த ஆட்சியில் முறையான பலனைத் தரவில்லை. அவர்களுக்கு அரசு சார்பில் தருவதாகக் கூறிய நிவாரணத் தொகையும் முறையாக வழங்கப்படவில்லை. கோமாரி நோயினால் கால்நடைகள் இறந்ததற்கான நிவாரணத்தொகை கூட இந்த அரசினால் வழங்கப்படவில்லை. இவ்வாறு வேளாண் பெருங்குடி மக்களுக்கும், சமுதாயத்தின் ஏனைய பிரிவினர்க்கும் அடுக்கடுக்கான தொல்லைகளையும், துயரங்களையும், வேதனைகளையும், விபரீதங்களையும் இழைத்து வருகின்ற அ.தி.மு.க. அரசின் முதலமைச்சர், ஆளுநர் உரையில் அளித்திருப்பதற்குப் பெயர் பதில் உரையா? பழி உரையா? என்பதைத் தமிழ்நாட்டு மக்களே முடிவு செய்து கொள்ளட்டும்!

அன்புள்ள,

மு.க.

6-2-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 50 PDF ↗