உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 50

தொகுதி 50 · கடிதம் 3861

திருச்சி என்றாலே, திருப்புமுனை மாநாடுதானே? (7)

2014-02-09

உடன்பிறப்பே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆறாவது பொது மாநில மாநாடுவரை கடந்த ஆறு “உடன்பிறப்பு” மடல்களில் விளக்கியிருந்தேன். கழகத்தின் ஏழாவது பொது மாநில மாநாடும், இந்தி எதிர்ப்பு மாநாடும் இணைந்து 1993ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 26, 27, 28 ஆகிய நாட்களில் கோவையில் பேரறிஞர் அண்ணா நகரில், தாளமுத்து நடராசன் பந்தலில், வால்பாறை ராமசாமி முகப்பில், கோவை அரங்கநாதன் அரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு நான் தலைமை தாங்கி, கொடியேற்றிவைத்தேன். பொதுச் செயலாளர் பேராசிரியர் மாநாட்டின் திறப்பாளர். வரவேற்புக் குழுத் தலைவர் அப்போது கோவை மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த அருமை நண்பர் மு. கண்ணப்பன்.

மாநாட்டில் இசை முரசு நாகூர் அனீபா, மயிலைதேவன், முரசொலி முகிலன், விஜயா தாயன்பன், வளவனூர் மணிமாறன், நெல்லை அபூபக்கர், ஆரூர் செந்தமிழன், இராஜபாளையம் இசைமணி, ஆயிரம் விளக்கு எஸ்.ஏ.எம். உசேன் அப்துல் காதர் ஆகியோர் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் முதல் நாள் இரவு போலீஸ் கண்ணன் குழுவினரின் “மேற்கே தோன்றும் உதயம்” நாடகமும், இரண்டாம் நாள் என்.எஸ்.கே. தாமு குழுவினரின் “ஓடி விளையாடு பாப்பா” நாடகமும் நடைபெற்றன.

அடுத்து, இதே திருச்சியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எட்டாவது பொது மாநில மாநாடு, 1996ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26, 27, 28 ஆகிய நாட்களில் அன்பில் தர்மலிங்கம் பந்தலில், மன்னை நாராயணசாமி முகப்பில், சாதிக்பாட்சா அரங்கில், தென்னரசு தியாகிகள் மணி மண்டபத்தில், வீரையா நினைவு கொடி மேடையில் இன்றைய வரவேற்புக் குழுத் தலைவர் கே.என். நேருவின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து சேலத்தில் சிறப்பு மாநில மாநாடு, 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27, 28, 29 ஆகிய நாட்களிலும், தி.மு. கழகப் பொன் விழா தொடக்கச் சிறப்பு மாநாடு திருநெல்வேலியில் 1998ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 ஆகிய நாட்களிலும், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. மாநாடு 2003ஆம் ஆண்டு செப்டம்பர் 19, 20, 21 ஆகிய நாட்களிலும், தென் மண்டல தி.மு.க. மாநாடு, விருது நகரில் 2004ஆம் ஆண்டு பெப்ரவரி 21, 22 ஆகிய நாட்களிலும், என்னுடைய முத்து விழா, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி விழா ஆகியவற்றை இணைத்து தி.மு.க. சிறப்பு மாநாடு ஒன்று சேலத்தில் 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21, 22 ஆகிய நாட்களிலும், திண்டுக்கல் மண்டல தி.மு.க. மாநாடு, 2005ஆம் ஆண்டு மார்ச் 12, 13 ஆகிய நாட்களிலும், தஞ்சை மண்டல தி.மு.க. மாநாடு, 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 16, 17 ஆகிய நாட்களிலும், கோவை மண்டல தி.மு.க. மாநாடு 2005ஆம் ஆண்டு மே 28. 29 ஆகிய நாட்களிலும், வேலூர் மண்டல தி.மு.க. மாநாடு 2005ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27, 28 ஆகிய நாட்களிலும் நடைபெற்றதைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்பதாவது பொது மாநில மாநாடு இதே திருச்சியில் 2006ஆம் ஆண்டு மார்ச் 3, 4, 5 ஆகிய நாட்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வழிகாட்டும் தலைவராகவும் விளங்கி வரும் திருமதி சோனியா காந்தி அம்மையார் கலந்துகொண்டார்கள்.

இவற்றைத் தொடர்ந்து தி.மு.க. இளைஞர் அணி முதல் மாநில மாநாடு, திருநெல்வேலியில் 2007ஆம் ஆண்டு டிசம்பர் 15, 16 ஆகிய நாட்களிலும், தி.மு. கழக மகளிர் அணி மாநில மாநாடு 2008ஆம் ஆண்டு சூன் மாதம் 14, 15 ஆகிய நாட்களிலும் நடைபெற்றதைத் தொடர்ந்துதான் வரும் 15, 16 ஆகிய நாட்களில், திருச்சியில் நமது மாநில மாநாடு நடைபெறுகிறது.

என்னுடைய இந்தக் கடிதத்திற்கும், மாநாட்டிற்கும் இடையே இன்னும் ஐந்து நாட்கள்தான் உள்ளன. நீங்கள் எல்லாம், உங்கள் குடும்பத்தினரோடு வருவதற்குத் தயாராகிக் கொண்டிருப்பீர்கள். திருமதி சோனியா காந்தி அம்மையாரும் கலந்துகொண்ட தி.மு. கழகத்தின் ஒன்பதாவது மாநில மாநாடு, இதே திருச்சியில் நடைபெற்றதற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் கழித்து இந்த பத்தாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த பத்தாவது மாநில மாநாட்டிற்கு உன்னை வா, வா என்று அன்போடும் உரிமையோடும் அழைத்து ஏழு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். ஆனால் எட்டாவது மாநில மாநாட்டிற்குப் பதினோறு கடிதங்கள் எழுதினேன் என்பது எனக்கு நினைவிலே உள்ளது. அந்த எட்டாவது மாநில மாநாட்டிலே நான் உரையாற்றும் போது, “வரவேற்புக் குழுத் தலைவர் தம்பி நேரு இந்த மாநாட்டின் வெற்றிக்கு முழுப் பொறுப்பு என்று சொன்னால் அதை யாரும் மறுக்க இயலாது. அவர் பட்டிருக்கின்ற இன்னல்கள் - அவர் ஆற்றியிருக்கின்ற பணி - ஒவ்வொரு நாளும் திருச்சியிலிருந்து சென்னைக்குத் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொள்வது மட்டுமல்ல; காலையில் ஒரு செய்தி கேள்விப்பட்டால் மாலையில் சென்னைக்கு நேரில் காரில் வந்து என்னை, பொதுச் செயலாளரை, பொருளாளரைக் கலந்து கொண்டுவிட்டு, பணியாற்ற உடனடியாக திருச்சிக்கு விரைந்து வருகின்ற ஒரு நிலை இதனையெல்லாம் என்னால் மறக்க முடியாது” என்று குறிப்பிட்டதைத்தான், இந்த மாநாட்டின் ஏற்பாடுகளிலும் மீண்டும் அவர் மெய்ப்பித்திருக்கிறார்.

மாநாடு என்றாலே எனக்கு மகிழ்ச்சிதான்; ஆனால் இது மாநில மாநாடு; அதுவும் திருச்சியிலே என்றால் என் மன மகிழ்ச்சிக்கு எல்லைதான் ஏது? திருச்சி என்றாலே எனக்கு எத்தனையோ நினைவுகள்; உருக்கமும் உணர்ச்சியும் கொப்பளிக்கின்ற அந்த நினைவுகள் கடந்த சில நாட்களாக என் நெஞ்சில் சுற்றிச் சுழன்று சுடர் வீசிக் கொண்டிருக்கின்றன. இந்தத் திருச்சி மாநகரத்தில் எனக்கு நண்பராக, சகோதரராக, என் உயிர்த் தோழராக, என்னுடைய மெய்க்காப்பாளர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவராக வாழ்ந்தவர்தான் என் ஆருயிர் நண்பர் அன்பில் தர்மலிங்கம். திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் என்னுடைய நிகழ்ச்சி என்றால், மேடைகளில் ஒரு பக்கத்தில் அன்பில் இருப்பார்; இன்னொரு பக்கத்தில் எனக்குத் தாயைப் போல விளங்கிய மன்னை நாராயணசாமி வீற்றிருப்பார். அவர்களைப் பற்றிய நினைவுகள் கடந்த சில வாரங்களாக என்னுள்ளே அலைஅலையாக எழுந்து என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன.

2006ஆம் ஆண்டு மார்ச் 3, 4, 5 ஆகிய நாட்களில் இதே திருச்சியில் நடைபெற்ற ஒன்பதாவது மாநில மாநாட்டின் ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக 21-2-2006 அன்று நானும், அப்போது கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த தம்பி ஸ்டாலினும், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகனும் வந்திருந்தோம். தி.மு. கழகமும், தோழமைக் கட்சிகளும் எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடும் என்பதை அறிவிக்க இருந்த மாநாடு அது. அந்த மாநாட்டில் 82 அடி உயரக் கொடிக் கம்பத்தில் கொடியேற்றிவைத்தேன். அப்போது எனக்கு வயது 82. இந்தப் பத்தாவது மாநில மாநாட்டில் 90 அடி உயரக் கொடிக் கம்பத்தில் மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக பெப்ரவரி 15ஆம் தேதி காலையில் நான் கொடியேற்றி வைக்கவிருக்கிறேன்.

2006ஆம் ஆண்டில் இதே திருச்சியில் நடைபெற்ற ஒன்பதாவது மாநில மாநாடு - அண்ணா நகர் - அன்பில் பொய்யாமொழி பெயரில் பந்தல் - முரசொலி மாறன் பெயரில் மேடை - து.ப. அழகமுத்து பெயரில் அரங்கம் - எஸ்.ஜே. சாதிக்பாட்சா பெயரில் முன் முகப்பு - க.சொ. கணேசன் பெயரில் உள்முகப்பு - ஜே.எஸ். இராசு பெயரில் நுழைவு வாயில் - சிங்கத் தமிழன் சின்னச்சாமி பெயரில் கொடிமேடை - நாஞ்சிலார் பெயரில் சுயமரியாதைச் சுடர் மாடம் என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்டு நடைபெற்றது.

இப்போது 2014ஆம் ஆண்டில் நடைபெறும் இந்த பத்தாவது மாநில மாநாடு - வீரபாண்டி எஸ். ஆறுமுகம் பெயரில் பந்தல் - வாசுகி முருகேசன் பெயரில் மேடை - பொற்செல்வி இளமுருகு பெயரில் அரங்கம் - எம்.எஸ். வெங்கடாசலம் பெயரால் முன்முகப்பு - தா. கிருட்டினன் பெயரில் வெளி முன் முகப்பு - மா. பாலகிருஷ்ணன் பெயரில் உள் முகப்பு - பூண்டி கே. கலைச்செல்வன் பெயரில் நுழைவு வாயில் - கே.என். ராமஜெயம் பெயரில் கொடிமேடை என்று பெயர் சூட்டப்பட்டு நடைபெறவுள்ளது.

முதல் நாள் மாநாட்டில் வரவேற்புக் குழுத்தலைவர் என்ற முறையில் தம்பி கே.என்.நேருவின் வரவேற்புரை - தொடர்ந்து மாநாட்டுத் தலைவரை முன்மொழிதல், வழி மொழிதல் - பின்னர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, சர். பிட்டி தியாகராயர், டி.எம். நாயர், டாக்டர் நடேசனார், புரட்சிக் கவிஞர், மூவலூர் மூதாட்டியார், திருமதி சத்தியவாணிமுத்து, மொழிப்போர்த் தியாகிகள் திருவுருவப் படங்களை முறையே திருச்சி செல்வேந்திரன், திருச்சி என். சிவா, எம்.பி., முனைவர் சபாபதி மோகன், கோவை மு. இராமநாதன், ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி, கவிச்சுடர் கவிதைப்பித்தன், சுப்புலட்சுமி ஜெகதீசன், எம்.ஏ. நூர்ஜகான் பேகம், முனைவர் க. பொன்முடி ஆகியோர் திறந்து வைக்கவிருக்கிறார்கள். மாலையில் பல்வேறு தலைப்புகளின் கீழ் கழகத்தின் முன்னணியினர் உரையாற்றுகிறார்கள். முதல் நாள் நிகழ்ச்சியின் முற்றாகக் கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் உரையாற்றவுள்ளார்.

இரண்டாம் நாள் காலையில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாற்றுதல் தொடரும். காலை 11 மணியளவில் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அடுத்து கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர்கள் துரைமுருகன், வி.பி. துரைசாமி, சற்குணபாண்டியன், முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி ஆகியோரின் உரைகளுக்குப் பிறகு, கழகப் பொருளாளர் தளபதி தம்பி மு.க. ஸ்டாலின் உரையாற்றுவார்.

மாலையில் கழகத்தின் தோழமைக் கட்சித் தலைவர்களான தமிழர் தலைவர் கி. வீரமணி, தொல். திருமாவளவன், எம்.பி., பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன், பேராசிரியர் எம்.எச். ஜவாகிருல்லாஹ், எம்.எல்.ஏ., டாக்டர் க.கிருஷ்ணசாமி, எம்.எல்.ஏ., அருளாளர் ஆர்.எம். வீரப்பன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், கு. செல்லமுத்து, ஸ்ரீதர் வாண்டையார், பொன். குமார், பேராயர் எஸ்றா சற்குணம், எல். சந்தானம், என். ஆர். தனபாலன், திருப்பூர் அல்தாப், பி.என். அம்மாசி, லியாகத் அலிகான் ஆகியோரின் உரைகளுக்குப் பின் 7 மணி அளவில் மாநாட்டுத் தலைவர் உரையினை நான் ஆற்றவிருக்கிறேன்.

தலைப்புக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்புப்பேச்சாளர்கள் 37 பேர் - தோழமைக் கட்சித் தலைவர்கள் 16 பேர் - படத் திறப்பாளர்கள் 9 பேர் மற்றும் கழகத்தின் முன்னணியினர் என்று சுமார் 70 பேர் இரண்டு நாள் மாநாட்டில் உரையாற்ற வேண்டும். எனவே பேச்சாளர்கள் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திடும் முறையில் உரையாற்றுவது தான் நல்லது. ஆனால் இப்போதே பலர் தலைப்புகளுக்கு ஏற்றாற்போல் பேசுவதற்குக் கருத்துகளைத் தேடித் தொகுக்கத் தொடங்கிவிட்டார்கள். எனவே மாநாட்டில் பேசவிருப்போர், நேரத்தை வகுத்துக் கொண்டு உரையாற்றிடத் தயாராக வரவேண்டுமென்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இடையில் இன்னமும் ஐந்தே நாட்கள்தான் - 120 மணி நேரம்தான் - அடடா; அகக்கண்களால் காண்கிறேன்; அணி தேர்ப்புரவி ஆட்பெரும் படையுடன் அன்றந்தத் தமிழ் நிலத்தில் அரசோச்சிய புலிக்கொடிச் சோழனும் - மீன் கொடிப் பாண்டியனும் - விற்கொடிச் சேரனும் போல நமது மாவட்டக் கழகங்களின் தளகர்த்தர்கள் கம்பீரமாக முதல் வரிசையில் அணிவகுத்து அமர்ந்திருக்க; அவர்கள் பின்னே அந்தந்த மாவட்டத்துச் செயல்வீரர்கள் உடனிருந்திடும் காட்சியும் - இளைஞர் அணி, தொழிலாளர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, விவசாயிகள் அணி, தொண்டர் அணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி, கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை, மீனவர் அணி, ஆதி திராவிடர் நலக் குழு, மகளிர் தொண்டர் அணி என எழுச்சிக் கோலம் காட்டி அந்தந்த அணிகளின் செயலாளர்களுடன் கடல் மடை திறந்தாற்போலவும் - களத்தில் புகுந்து வீரம் விளைத்திட வீறு கொண்டெழுவது போலவும் சிப்பாய் நடை போட்டு வந்து மாநாட்டில் கலந்து கொள்கின்ற காட்சியும் - அந்தச் சிங்கக் குருளைகளை சீறி வரும் புலியதனை முறத்தால் துரத்திய வீராங்கனையர் வழிவந்த தமிழச்சிகளையும், காய்த்துப்போன கரங்களுக்குச் சொந்தக்காரர்களான பாட்டாளி வர்க்கத்தினரையும், வரலாறு படித்துத் தமிழகத்தில் புதிய வரலாறு படைத்திட தலை நிமிர்ந்து வந்து கலந்து கொள்ளும் மாணவச் செல்வங்களையும், இலக்கிய ஏந்தல்களையும், உழுது பயன் விளைக்கும் நாங்கள் கழகத்தின் விழுதுகளாய்ப் பரவுவோம் என்றுரைத்திடும் விவசாயப் பெருங்குடி மக்களையும், மானம் காப்போம்; தமிழரின் இனமானமும் காப்போம் என ஒலித்திடும் நெசவாளத் திருக்குலத்தையும், சட்டத்தின் ஆட்சிக்கு விடைகொடுத்து விட்டுச் சட்டம், ஒழுங்கை இஷ்டத்திற்குக் காயப்படுத்தி வரும் சர்வாதிகார அரசுக்குச் சவுக்கடி தந்திட அணி வகுத்து வந்து மாநாட்டில் பங்கேற்கும் சட்டத் துறை தோழர்களையும் கண்டு கண்டு பேருவகை கொள்கிறேன், களிப்பிலாடும் கான மயிலாகிறேன்.

ஆகா, எத்தனை அணிகள் - அத்தனையும் கழகத்தின் வீரத் திருவுருவை அலங்கரிக்கும் மணிகள்! தகத் தகாயத் தங்கமணிகள்! வைரமணிகள்!

நான், தங்கமென்று அவர்களின் குணத்தையும் - வைரமென்று அவர்களின் உறுதியையும்தான் சொல்கிறேன்!

உடன்பிறப்பே, மனக் கண்ணால் நான் கண்டு மகிழும் இந்த மாநாட்டுக் காட்சி; நானும், நீயும் பெப்ரவரி திங்கள் 15, 16 ஆகிய நாட்களில் திருச்சியில் காண இருக்கும் மாநாட்டின் எள் முனை அளவுதான்.

அது ஏழு கடல்! எழுச்சிக் கடல்! அலை கடல்! ஆர்ப்பரிக்கும் கடல்! ஆயிரம், பதினாயிரம், லட்சம், கோடியென்று அல்லிமொக்குகள் திருச்சி மாநகரத்தைப் பெருந்தடாகமாக்கிக் கொண்டு கிளர்ந்தெழுந்தது போல எங்கு நோக்கினும் தலைகள்! தலைகள்! தலைகள்!

“இன்னும் ஐந்து நாட்களுக்குப் பிறகு பார்க்கப்போவதை இப்போதே கனவு கண்டு மகிழ்கிறாயே,” என்று விழிகளால் எனைக் கேட்கும் நீ, இன்னொன்றும் கேட்பாய்; உன் கனவு நனவாகுமா என்று!

ஆகும் உடன்பிறப்பே, ஆகும்! ஆவதெல்லாம் உன்னாலே என்று நான் நம்பிக்கிடக்கும்போது; வெட்டி வா என்றுரைத்தால் கட்டி வரும் வீரத் திருக் கூட்டமாக உன் கூட்டம் இருந்திடும்போது - “ஆகும்” என்று சொல்வதற்கு நான் ஏன் தயங்க வேண்டும்?

உனக்கொரு புதுமை சொல்லட்டுமா? பகலிலோ இரவிலோ அதிக நேரம் தூங்காமல் இளமை முதல் பழக்கப்படுத்திக் கொண்டு

விட்டவன் நான். தேர்தல் பிரச்சார நேரங்களில் விடிய விடியக் கூட்டங்களில் பேசிவிட்டு விடிந்து ஆறுமணிக்குப் படுத்து, ஏழு மணிக்கெல்லாம் எழுந்து பணிகளாற்றியவன்தான் நான்.

தொண்ணூறைத் தாண்டிவிட்டது வயது என்பதாலோ என்னவோ, அண்மைக்காலச் சில நிகழ்ச்சிகள் என்னைச் சற்றுக் கவலைப்பட வைக்கின்றன. இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் என்னையுமறியாமல் வேதனைகளின் மேய்ச்சல் நடைபெறுகிறது என்பதாலோ இடையில் உறக்கமும் என்னை மறந்த உறக்கமல்ல; திருச்சி மாநாடு பற்றி உனக்கெழுதும் கடிதங்களில் என்னென்ன வாசகங்கள், வர்ணனைகள் குறிப்பிட்டிருந்தேனோ; அவையனைத்தும் வடிவங்களாகி வண்ணத் திரையில் ஓடுவது போல்; என் எண்ணத் திரையில் பதிந்து எழிலார் கனவுகளாகவே மாறி மாறி வந்துகொண்டிருக்கின்றன.

இப்படி நான் கண்ட இந்தக் கனவெல்லாம் பலிக்கத்தான் போகிறது - திருச்சி குலுங்கத்தான் போகிறது - மாநில மாநாடு அறிவிக்கப்பட்ட பிறகு உன் போன்ற கழகக் கண்மணிகளிடத்திலே மட்டுமல்ல; பொதுவாகத் தமிழ் மக்களின் எல்லாப் பிரிவினரிடத்திலும் ஒரு புத்துணர்வு - எழுச்சி - முகமலர்ச்சி! எதையோ எதிர்பார்க்கிறார்கள்; அதை நம்மால் கொடுக்க முடியுமா?

நீயின்றி, உன் உழைப்பின்றி, உன் ஆற்றல் மிகு செயல்பாடின்றி - தனித்தியங்கித் தரையைக் குடைந்து காட்டுவேன் - வானத்தைக் கிழித்துக் காட்டுவேன் என்று என்றைக்கு நான் நினைத்திருக்கிறேன்? என்றைக்கு அப்படிச் சொல்லியிருக்கிறேன் - நினைத்தால் அல்லவா சொல்வதற்கு!

இதனைத் தெளிவாக அறிந்து கொண்டுள்ள என் உடன்பிறப்பே, திருச்சி மாநாட்டுக்குப் பயணப்பட்டுக் கொண்டிருக்கும் உனக்கு; வழக்கமாகச் சொல்வது தான் என்றாலும் - என் சொல்லை, நீயும் உன்னுடன் வரும் உடன்பிறப்புகளும் தட்ட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடனும், தட்டக்கூடாது என்ற வேண்டுகோளுடனும் உன் காதுகளில் போட்டுவைக்கிறேன்.

எந்த வாகனத்தைத் தேர்ந்தெடுத்து அதில் வந்தாலும் மிகுந்த எச்சரிக்கையுடன் வரவேண்டும். தேவையற்ற வேகமோ, அவசரமோ, பரபரப்போ பயணத்தின் போது கூடாது. நீ வந்து திரும்பி ஊர் போய்ச் சேருகிற வரையில் என் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பேன். சிறு தொல்லையுமின்றி வீடு போய்ச் சேர்ந்தாய் எனும் செய்தியே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி வழங்கும், ஆறுதல் தரும். வழியில் ஆங்காங்கு ஓய்வெடுத்துக் கொண்டு பயணம் செய்க! வாகனங்களின் ஓட்டுநர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டுகிறேன்! மாநாட்டில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மிக மிக முக்கியம்! அவை நம் உயிரைவிட மேலாகக் காப்பாற்றப்பட வேண்டியவை என்பதை மறந்திடக் கூடாது! திராவிட இயக்கத்தைப் புதுப்பித்து வலுக் கூட்டி உறுதியுடன் நடத்திச் செல்லத்தானே; திருச்சியிலே கூடுகிறோம்! தீரர் கோட்டமாயிற்றே திருச்சி! எழுச்சி! எழுச்சி! எங்கணும் எழுச்சி! இதுவே இன்றைய திருச்சி! நாளை காணுவோம்; தமிழகத்தின் மலர்ச்சி!

அன்புள்ள,

மு.க.

9-2-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 50 PDF ↗