தொகுதி 50 · கடிதம் 3859
பதில் உரையா? பழி உரையா?
2014-02-05
உடன்பிறப்பே,
முதலமைச்சர் ஜெயலலிதா ஆளுநர் உரைமீதான விவாதத்திற்குத் தமிழகச் சட்டப்பேரவையில் பதிலளித்திருக்கிறார். முக்கிய எதிர்க்கட்சிகளான தே.மு.தி.க., தி.மு.க., புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் ஆளுநர் உரையில் யாரும் தங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான சூழ்நிலை இல்லை. தி.மு. கழகத்தைப் பொறுத்தவரையில், ஆளுங் கட்சியை எதிர்த்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வாய்ப்பு அளிக்காத சட்டமன்ற ஜனநாயகத்துக் கெதிரான நிலை! ஆளுநர் உரை என்பதே ஏதோ மரபுப்படி வைக்க வேண்டுமே என்பதற்காக ஏனோதானோ என்ற வகையில் வைக்கப்பட்டது போல, இந்த ஆண்டும் வைக்கப்பட்டுள்ளது. அதிலே எந்தப் புதிய கொள்கைகளோ, திட்டங்களோ அறிவிக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும், ஆளுநர் உரை மீதான விவாதம் என்றால் குறைந்தது ஐந்தாறு நாட்களாவது விவாதம் நடைபெறும். அதிலே எதிர்க்கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டு, அவர்கள் அரசின் மீதான குறைகளை, குற்றச்சாட்டுகளை எடுத்துக்கூற வாய்ப்பு அளிக்கப்பட்டு, அதற்குத்தான் இறுதியாக முதலமைச்சர் பதிலளிப்பது வழக்கம். ஆனால் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆட்சியாளர்களை எதிர்த்து எதையும் பேசக் கூடாது; முதல் அமைச்சருக்குப் பாராட்டு, புகழாரங்களுக்கு மட்டுமே வாய்ப்பு; யாராவது அரசுக்கு எதிரான ஒரு கருத்தைச் சொன்னால் ஒவ்வொரு அமைச்சரும் எழுந்து குறுக்கிட்டுத் தாறுமாறாகப் பேசுவார்கள். பேரவைத்தலைவர் உடனே அரசை எதிர்த்துப் பேசிய கட்சியின் உறுப்பினர்களை அவையிலிருந்து வெளியேற்றி விடுவார்; அவருக்கு ஆதரவாக அந்தக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேச விரும்பினால், அந்தக் கட்சியைச் சேர்ந்த அத்தனை உறுப்பினர்களையும் வெளியேற்றி விடுவார். எதிர்த்துப் பேசப்பட்டவை அவைக்குறிப்பில் இடம் பெறமாட்டா. இதுதான் இங்கே நடைபெறுகிறது. மூன்றே நாள் விவாதத்தில் எத்தனை பேர் பேச முடியும்? இந்த மூன்று நாள் விவாதத்தில் ஒரு நாள் முதல் அமைச்சர் அவைக்கே வரவில்லை. ஆனால் மூன்றாம் நாள் அவைக்கு வந்து பதிலளித்து ஏடுகள் எல்லாம் அந்தப் பதிலை பிரமாதப்படுத்தி வெளியிட்டு மகிழ்ந்திருக்கின்றன.
இதிலே மாலைப் பத்திரிகை ஒன்றில், முதல் அமைச்சரின் ஆளுநர் உரை மீதான பதிலில் ஒரு பகுதியை முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு தலைப்பு என்ன தெரியுமா?
“ஸ்டாலினுக்கு அழகிரியால் ஆபத்து என்றதும் பிரதமருக்குக் கடிதம் எழுதுவது ஏன்? ஜெயலலிதா கேள்வி” என்பதுதான்!
அந்தத் தலைப்பின் கீழ் வெளிவந்துள்ள செய்தியில், “ஆட்சிக்கு விரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. 28-1-2014 அன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கருணாநிதி, “கட்சியிலே உள்ள மதுரை மாவட்டச் செயலாளர் மூர்த்தி மீது பி.சி.ஆர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு எழுதிக் கொடுத்தவரை, கட்சித் தலைவர் என்ற முறையில் நான் விசாரிப்பதும், கண்டிப்பதும் எப்படிக் குற்றமாகும்?” என்று வினவியுள்ளார். அதாவது சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டவர் மீது காவல் துறையில் புகார் கொடுப்பதே தவறு என்று கூறியிருக்கிறார். ஆட்சியில் இல்லாதபோதே இப்படி என்றால், ஆட்சியில் இருந்த போது சட்டம் - ஒழுங்கு எப்படி நிலைநாட்டப்பட்டு இருக்கும் என்பதை உங்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்” என்று ஜெயலலிதா பேசியிருக்கிறார்.
மதுரையில் ஒரு மாவட்டக் கழகச் செயலாளர் உள்பட கட்சியினர் சிலர் மீது, அதே கட்சியைச் சேர்ந்த வேறு சிலர் வேண்டுமென்றே நடக்காத ஒன்றை, ஆளுங்கட்சி துணையிருக்கும் என்ற நப்பாசையோடு புகார் மனு கொடுத்திருப்பது என்பது உள்கட்சிப் பிரச்சினை. அதிலே கட்சியின் தலைவர் என்ற முறையில், தவறாக நடந்து கொண்டவர்களை அழைத்து விசாரிப்பதும், நடவடிக்கை எடுப்பதும் அம்மா “அகராதி”ப்படி குற்றமா? உட்கட்சிப் பிரச்சினைக்காகப் பிடிக்காதவர்கள் மீது புகார் எழுதி, நடக்காத ஒன்றைப் புகாராகத் தயாரித்துக் காவல் துறையினரிடம் கொடுப்பது நியாயமான ஒன்றா? அவர்கள் மீது கட்சியிலே நடவடிக்கை எடுப்பது என்பது சட்டத்திற்குப் புறம்பான செயலா?
அ.தி.மு.க.விலே உள்கட்சிப் பிரச்சினைகளே கிடையாதா? அப்படி உள்கட்சிப் பிரச்சினை எழுந்தபோது அ.தி.மு.க.விலே நடவடிக்கைகளே எடுக்கப்படவில்லையா? அவர்களுடைய குடும்பம் என்றும், அவர்களுடனேயே ஒட்டி உறவாடி வாழ்பவர் என்றும் சொல்லப்படுபவரின் குடும்பத்தினரோடு எப்படிப்பட்ட சச்சரவுகள் ஏற்பட்டன? அதற்காக ஆளுங்கட்சி என்ற அதிகார அஸ்திரத்தைப் பயன்படுத்திக் காவல் துறையினரின் துணையோடு எத்தகைய சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதா?
கோவை ராவணன், மன்னார்குடி திவாகரன் மீதெல்லாம் காவல்துறையினரால் வேண்டுமென்றே அசாதாரணமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது உண்டா இல்லையா? அ.தி.மு.க. ஆட்சி பதவியேற்ற 2011 மே மாதத்திலிருந்து அவர்கள் எல்லாம் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகப் பக்கம் பக்கமாகச் செய்திகள் வந்தன. ஆனால் அவர்கள் மீது தமிழகக் காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்து விட்டு, கடைசியில் சசிகலா மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தவுடன் எந்த அளவிற்கு அவர்களையெல்லாம் அடக்கி ஒடுக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது?
உடன்பிறவாச் சகோதரியின் கணவர் நடராஜன் மீது எப்படியெல்லாம் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது? திடீரென்று அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு, கைது செய்யப்படவில்லையா? புகார் மனு மீது முறையான பூர்வாங்க விசாரணை எதுவும் நடைபெற்றதா? ஒரே நாளில் விசாரணை முடிந்து விட்டதா? புகார் கொடுத்த மறுநாளே கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றால் அதற்கான உள்நோக்கம் என்ன? சசிகலா பெங்களூர் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த நாளில் அவருடைய கணவர் கைது செய்யப்பட்டதற்கு என்ன காரணம்?
ஆனால் சசிகலா மீண்டும் அவருடைய வீட்டிற்கு வந்தது எப்படி? சசிகலாவும் அவரது உறவினர்களும் தவறு செய்ததாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டி அவர்களையெல்லாம் கட்சியிலிருந்தே தூக்கியெறிந்து, தோட்டத்தை விட்டும் வெளியே அனுப்பினார். ஆனால் மீண்டும் அவர்கள் எல்லாம் புனர் வாழ்வு பெற்றது எங்ஙனம்? ஏன்? 30-12-2011 அன்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக் குழுவில் ஜெ. பேசும்போது “சசிகலா குடும்பத்தோடு இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை” என்று சொன்னார். ஆனால் ஜெயா டி.வி.யில் 29-3-2012 அன்று சசிகலாவின் அறிக்கை தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது.
சசிகலா நடராசனை “என்கவுண்டர்” செய்யவே முயற்சி நடைபெற்றதாக நடராசனே கூறினார். அதற்கு இன்றுவரை இந்த அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. இப்படிப்பட்ட மோசமான வரலாறுகளை முதுகில் சுமந்து கொண்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தி.மு.கழகத்தில் கட்சியின் சட்டதிட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிக் குறை கூறுவதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா?
அடுத்து ஜெயலலிதா தனது உரையில் என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டு, என்னுடைய இளைய மகன் மு.க. ஸ்டாலின் பாதுகாப்பு பற்றிப் பாரதப் பிரதமருக்கு டி.ஆர். பாலு மூலம் கடிதம் எழுதச் சொன்னேன் என்று தெரிவித்திருக்கிறார். ஏடுகளில் முதலில் ஸ்டாலின் பாதுகாப்பு பற்றி நானே பிரதமருக்குக் கடிதம் எழுதியதைப் போல செய்திவந்தது. அந்தச் செய்தியைப் பார்த்ததும் எனக்கே அதிர்ச்சி ஏற்பட்டு, எப்படி அந்தச் செய்தி வந்தது, நான் எங்கே பிரதமருக்குக் கடிதம் எழுதினேன் என்று விசாரிக்கச் சொன்ன பிறகுதான், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரான டி.ஆர். பாலு அப்படி ஒரு கடிதத்தை - அதுவும் இப்போது அல்ல - இப்போதைய பிரச்சினை எழுவதற்கு முன்பே எழுதப்பட்டது என்பது எனக்கே தெரிந்தது. அதற்குப் பிறகுதான் டி.ஆர். பாலு அவர்களே, “தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் என்ற தகுதியின் அடிப்படையில் நான் தான் (டி.ஆர். பாலு) பிரதமருக்குக் கடந்த டிசம்பரில் கடிதம் எழுதினேன். கடந்த நாடாளுமன்றக் குளிர் காலக் கூட்டத் தொடரில் அக்கடிதத்தை நான் பிரதமரிடம் அளித்தேன். ஆனால் தற்போதைய நிகழ்வுகளுடன் எனது கடிதத்தைத் தொடர்படுத்தி அதை தி.மு.க. தலைவர் எழுதியதாகச் செய்திகள் வெளிவருகின்றன. அதில் உண்மையில்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன். மு.க. ஸ்டாலின் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வின் நட்சத்திர பிரச்சாரநாயகனாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். தமிழகக் காவல் துறையினரால் ஸ்டாலினின் பாதுகாப்பை எந்த அளவுக்கு உறுதிப்படுத்த முடியும் என்பது கேள்விக்குறியே. 2006ஆம் ஆண்டிலேயே மதுரை ரயில் நிலையம் அருகே ஸ்டாலினை கத்தியால் தாக்க வந்த நபரை அப்போது அவருக்குப் பாதுகாப்பு வழங்கிய மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்தவர்தான் காப்பாற்றினார். அப்போது தமிழகக்காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நிலை வரவிருக்கும் தேர்தலில் வரக்கூடாது என்ற எண்ணத்தில்தான் பிரதமருக்கு நான் கடிதம் அனுப்பினேன். இதுதான் உண்மையான நிலவரம்” என்று டி.ஆர். பாலு கூறி, அந்த விளக்கம் ஏடுகளிலே வெளிவந்த பிறகும், முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில், பாரதப் பிரதமருக்கு டி.ஆர். பாலு மூலம் நான் கடிதம் எழுதச் சொன்னதாக உண்மைக்கு மாறான ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார். மேலும் ஜெயலலிதா, “கருணாநிதி, தா. கிருட்டினன் கொலை வழக்கில் என்ன நிலைப்பாட்டை எடுத்தார்? தனக்கு ஒரு நீதி; தன் குடும்பத்திற்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதி என்ற ரீதியில் செயல்படும் கருணாநிதியைத் தலைவராகக் கொண்டு செயல்படும் தி.மு.க. வினர் சட்டம், ஒழுங்கு குறித்துப் பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது” என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதா கூறும் இந்த வழக்கில் நான் என்ன நிலைப்பாட்டை எடுத்தேன்? அப்போது தி.மு. கழக ஆட்சிதான் நடைபெற்றது? ஜெயலலிதாவின் ஆட்சிதானே நடைபெற்றது! முன்னாள் அமைச்சரும், தென்பாண்டி மண்டலக் கழகத் தளகர்த்தரும், தென்னரசின் மறைவுக்குப் பிறகு முகவை மாவட்டத்தில் கழகம் வளரப் பெரிதும் காரணகர்த்தாவாக விளங்கியவரும், என்னிடம் பேரன்பு கொண்டவருமான பசும்பொன் தா. கிருட்டினன் 20-5-2003 அன்று காலையில் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தியினை அறிந்து துடிதுடித்துப் போனேன். தா.கி. மறைவு குறித்து நான் விடுத்த இரங்கல் செய்தியில், “தா.கி. என அழைக்கப்பட்ட என் தம்பியே; என் உயிருக்கு உயிரானவனே;. உன் உயிரையா பறித்தார்கள் உன்மத்தர்கள்?
நம்ப முடியவில்லையே தம்பி! இரண்டு நாட்களுக்கு முன்புதானே சென்னை வந்து என் இல்லத்தில் என்னிடமும் உன் அண்ணியிடமும் பிறந்த நாள் வாழ்த்துப் பெற்று இருவருக்கும் பொன்னாடை அணிவித்துச் சென்றாய்! நேற்று 19-5-2003 மாலை 6 மணி அளவில் கூட மதுரையிலிருந்து தொலைபேசியில் என்னிடம் பேசி, மதுரை வட்டாரத்து கழகத் தேர்தல்கள் குறித்து விளக்கமளித்து என்னிடமும் விளக்கம் பெற்று வினையாற்றிக் கொண்டிருந்தாயே; அதற்குள் இப்படியொரு செவி பிளக்கும் சிந்தை தகர்க்கும் செய்தியா? அதற்கு முதல் நாள் 18-5-2003 அன்று காரைக்குடி தொகுதி சட்டமன்ற அ.தி.மு.க. முன்னாள் உறுப்பினர் சுப. துரைராஜ் அவர்களை அண்ணா அறிவாலயம் அழைத்து வந்து கழகத்தில் சேர்த்தாயே; அந்தப் புகைப்படம் கூட இதோ என் எதிரில் காட்சியாகி என்னைத் தணலில் தள்ளுகிறதே! தம்பி, உன்னையெல்லாம் இழந்துவிட்டு நான் எப்படி கழகம் நடத்துவேன் - அய்யகோ! துடிக்கிறேன் - துவளுகிறேன் - எனக்கு ஆறுதல் சொல்லும் ஆற்றல் எனக்கே இல்லையே!” என்று எழுதினேன்.
மறைந்த மாவீரருக்கு நேரில் அஞ்சலி செலுத்தத் தலைமைக் கழகத்தின் சார்பில் பொதுச் செயலாளர் பேராசிரியரும், பொருளாளர் ஆர்க்காடு வீராசாமியும் சென்றனர். அந்த நேரத்தில் அமெரிக்கா சென்றிருந்த தளபதி ஸ்டாலின், இந்தச் செய்தியைக் கேள்வியுற்று, தனது பயணத்தை ரத்து செய்துவிட்டுச் சிகாகோ நகரில் இருந்து மதுரை திரும்பினார்.
கொடுமையிலும் கொடுமை என்பார்களே, அதைப் போல தா. கிருட்டினன் மறைவுக்காக நாங்கள் எல்லாம் ரத்தக் கண்ணர் சிந்திக் கொண்டிருந்த நேரத்தில், அ.தி.மு.க. அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு, அவருடைய உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாகவே 21-5-2003 அன்று அதிகாலை 4.30 மணி அளவில் மதுரை சத்தியசாயி நகரில் உள்ள மு.க. அழகிரியின் இல்லத்திற்குள் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் நுழைந்து, தா. கிருட்டினன் கொலை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமென்று கூறிக் கைது செய்து அழைத்துச் செல்ல முற்பட்டார்கள். அப்போது அங்கே கூடியிருந்த கழகத் தொண்டர்கள், “போலீஸ் அராஜகம் ஒழிக” என்று முழக்கமிட்டதோடு, வேனிற்கு முன்னால் கீழே படுத்து மறித்தார்கள். ஆனால் அவர்களையெல்லாம் அழகிரியே அமைதிப்படுத்திவிட்டுக் காவல் துறையினரோடு புறப்பட்டுச் சென்றார். செய்தியாளர்கள் அழகிரியிடம் கேட்டபோது, “ அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் பொய் வழக்கை நீதிமன்றம் மூலம் சந்திப்பேன்” என்று கூறினார். முதலில் மதுரை மத்திய சிறைக்கு அழகிரியை அழைத்துச் சென்ற காவல் துறையினர் பின்னர் திருச்சி மத்திய சிறைக்கு வேனில் அழைத்துச் சென்று அங்கே அடைத்தார்கள்.
செய்தியாளர்கள் மு.க. அழகிரி கைதுபற்றி என்னிடம் கேட்டபோது, “உண்மையான குற்றவாளிகளைப் பிடித்திருந்தால், அது வரவேற்கத்தக்கது. பாவம் ஓரிடம், பழி ஓரிடம் என்ற நிலையிலோ, ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்ற நிலையிலோ நடவடிக்கை அமையுமானால்; அது உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க விடுவதோடு; நேர்மையான நீதி கிடைப்பதற்கு வழியில்லாத தடைக்கல்லாகவும் ஆகிவிடும்” என்று கூறினேன். 24-5-2003 அன்று பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கும், துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி அவர்களுக்கும் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு, பழிவாங்கும் போக்கு, அதிகார துஷ்பிரயோகம் தொடர்கதையாக உள்ளது என்று நடைபெறும் சம்பவங்களைப் பற்றி விரிவாகக் கடிதம் எழுதினேன்.
18-6-2003 தேதிய “இந்து” நாளேட்டில், “தா. கிருட்டினன் வழக்கு குறித்து விசாரணை நடத்திவரும் காவல் துறை அதிகாரிகளில் நான்கு உயர் அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டது குறித்துப் பலருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. மதுரையில் காவல்துறை ஆணையாளராகக் கூடுதல் பொறுப்பு வகித்துவந்த டி.ஐ.ஜி., பி. கந்தசாமி என்பவர் மு.க. அழகிரி கைதான 24 மணி நேரத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் பதவியேற்ற மூன்று மாதத்திற்குள்ளாகவே மாற்றப்பட்டு, விழுப்புரத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். தா.கிருட்டினன் கொலை செய்யப்பட்ட பகுதியையொட்டிய மதுரை அண்ணா நகர் காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரேசன் என்பவரும் மாற்றப்பட்டார். ஜூன் 2ஆம் வாரம் வரை அவருக்கான மாற்றுப் பணி இடம் அளிக்கப்படவில்லை. இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் இரண்டு முக்கிய உதவி ஆணையாளர்களான அரிகரன் மற்றும் ஏ.போஸ் ஆகியோர் இரண்டு தினங்களுக்கு முன்னர் அவசர அவசரமாக மாற்றப்பட்டனர். அவர்களுக்கும் வேறு பணி இடம் ஒதுக்கப்படவில்லை. இவர்கள் இது தொடர்பான விசாரணையில் முக்கியத் தடயங்களைக் கண்டுபிடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திடீர் மாறுதல் இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிப்பது தொடர்பாக விசாரித்து வரும் சிறப்புப் பணி அதிகாரிகளுக்கே கூட ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அவர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராகப் பதவி உயர்த்தப்பட்டு தல்லாகுளம் டிவிஷனில் தொடர்ந்து பணியாற்றிவருகிறார். அவருக்கு வழங்கப்பட்ட இந்தப் பதவி உயர்வுக்கான உத்தரவு இதுவரை வேறு யாருக்கும் தரப்படாத வகையில் முன் எப்போதும் கடைப்பிடிக்காத வகையில் வழங்கப்பட்டுள்ளது” என்றெல்லாம் “இந்து” ஏட்டில் எழுதப்பட்டிருந்தது. இவற்றை மக்கள் மறந்திருப்பார்கள் என்றெண்ணி, மனம் போன போக்கில் புழுதி வாரி இறைத்திருக்கிறார் ஜெயலலிதா!
சட்டம், ஒழுங்குப் பிரச்சினை பற்றிப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, கழக ஆட்சியில் மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் என்றும், இதுதான் சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டிய லட்சணமா? என்றும் கேட்டிருக்கிறார். கழக ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? முதலமைச்சர் என்ன கூறுகிறார்? ஓய்வு பெற்ற நீதிபதியே தொடர்ந்து வழக்கினை விசாரிக்க வேண்டும் என்றும், எதிர்த் தரப்பு வழக்கறிஞராகத் தான் சொல்பவரைத்தான் நியமிக்க வேண்டுமென்றும் கேட்பதுதான் நீதியை நிலைநாட்டுகின்ற இலட்சணமா? உச்சநீதிமன்ற நீதிபதியே அவ்வாறு குறிப்பிட்ட நீதிபதிதான் வழக்கினை விசாரிக்க வேண்டுமென்று கேட்பது தவறு என்று ஒரு முதலமைச்சர் மீதே குற்றஞ்சாட்டினாரே, அது மறந்து விட்டதா? ஆட்சியிலே இருக்கிறபோது சட்டத்திற்கு விரோதமாக நடப்பது யார்? நானா? ஜெயலலிதாவா? முதலமைச்சர் ஜெயலலிதா பேசியுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு, மின்வெட்டுப் பிரச்சினை, தொழில் வளர்ச்சிப் பிரச்சினை போன்றவை குறித்து நாளை எழுதுகிறேன்.
அன்புள்ள,
மு.க.
5-2-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 50 PDF ↗