தொகுதி 50 · கடிதம் 3858
திருச்சி என்றாலே, திருப்புமுனை மாநாடுதானே? (6)
2014-02-03
உடன்பிறப்பே,
1975ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் நடைபெற்ற கழகத்தின் ஐந்தாவது பொது மாநில மாநாடு பற்றிக் கடந்த வாரம் வரை குறிப்பிட்டிருந்தேன். அதற்குப் பிறகு 1977ஆம் ஆண்டு மே திங்களில் மதுரையில் கழகத்தின் சிறப்பு மாநாடும், 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் சென்னையில் திராவிடர் கழக இந்தி எதிர்ப்பு மாநாடும், அதே ஆண்டு டிசம்பரில் திருச்சியில் தி.மு.க. இந்தி எதிர்ப்பு மாநில மாநாடும், 1980 ஆம் ஆண்டு நெல்லையில் மாவட்ட தி.மு.க. ஆறாவது மாநாடு, அதே ஆண்டு டிசம்பரில் பெரியார் மாவட்ட தி.மு.க. முதல் மாநாடு ஈரோட்டிலும், 1981 ஆம் ஆண்டு ஜனவரி கடைசி வாரத்தில் வட ஆர்க்காடு மாவட்ட தி.மு.க. ஆறாவது மாநாடும், அதே ஆண்டு ஜூலையில் தென் ஆர்க்காடு மாவட்ட தி.மு.க. ஆறாவது மாநாடு கடலூரிலும், அதே ஆண்டு ஆகஸ்டில் தி.மு.க. மகளிர் மாநில இரண்டாவது மாநாடு திருச்சி தேவர் மன்றத்திலும், 1982ஆம் ஆண்டு மே திங்களில் தஞ்சை மாவட்ட தி.மு.க. ஆறாவது மாநாடும், 1983 ஆம் ஆண்டு ஜூலையில் கிழக்கு முகவை மாவட்ட தி.மு.க. மாநாடும், 1984ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் புதுவை மாநில தி.மு.க. மாநாடும், 1984ஆம் ஆண்டு ஜனவரியில் திருச்சி மாவட்ட தி.மு.க. ஆறாவது மாநாடு கரூரிலும், அந்த மாத இறுதியில் மதுரை மாவட்ட தி.மு.க. ஆறாவது மாநாடும், அந்த ஆண்டு பெப்ரவரியில் சேலம் மாவட்ட தி.மு.க. ஆறாவது மாநாடும், அதே ஆண்டு செப்டம்பரில் அண்ணா மாவட்ட தி.மு.க. ஆறாவது மாநாடும், 1986ஆம் ஆண்டு ஜூன் திங்களில் தி.மு.க. விவசாயிகள் அணி சார்பில் மாநில மாநாடும், நவம்பரில் கோவை மாநகரில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு தி.மு.க. மாநில மாநாடும் சிறப்பாக நடைபெற்ற பிறகு, கழகத்தின் ஆறாவது
பொது மாநில மாநாடு இதே திருச்சி அண்ணா நகரில், இன்றைய
கடலூர் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் அருமைத் தந்தையும், சுயமரியாதைச் சுடருமான எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி பந்தலில், தமிழக அரசின் தலைமைக் கொறடாவாகச் சிறப்பாகப் பணியாற்றிய, நான் அன்புடன் “ஜமீன்தார்” என்று அழைக்கின்ற து.ப. அழகமுத்து பெயரால் அமைந்த அரங்கில் 1990ஆம் ஆண்டு பெப்ரவரி திங்கள் 9, 10, 11 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
இந்த மாநாட்டோடு இணைந்து, இளைஞர் அணி சமதர்ம சமுதாய சீர்திருத்த மறுமலர்ச்சி மாநாடாக இரண்டாவது நாள் காலை முதல் இரவு வரை நடைபெற்றது. முதல் நாள் மாபெரும் அணிவகுப்புப் பேரணி நடந்தது. திருச்சியில் நடைபெற்ற இந்த 6வது பொது மாநில மாநாட்டிற்கு முன்புதான் இந்த “திருப்பு முனை” என்ற பெயரே எழுந்தது. திருப்புமுனை, திருப்புமுனை என்று சொல்கிறீர்களே, அது என்ன திருப்புமுனை என்று பத்திரிகைக்காரர்கள்கூட என்னைக் கேட்டார்கள்.
அதே திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டிற்கு அப்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் “அன்பில் அழைக்கிறார்” என்ற தலைப்பிலே பாசத்தையும் பைந்தமிழையும் குழைத்துத் தொடர்ந்து எழுதி, கழகத் தோழர்களையெல்லாம் எழுச்சி கொள்ளச் செய்து அந்த மாநாட்டிற்கு வரவழைத்தார்கள். அதுபோல “திருச்சி என்றாலே, திருப்புமுனை மாநாடுதானே” என்ற தலைப்பில் மாநில மாநாடு ஒரு திருப்புமுனை என்று அறுதியிட்டுக் கூறிட என்ன காரணம் என்று கேட்பவர்களுக்கு நான் கூறுகின்ற பதில், நான் ஆறாவது மாநில மாநாட்டிலேயே தெரிவித்ததுதான்.
“திருச்சியிலிருந்து சேலத்திற்குச் செல்ல வேண்டுமென்று நாம் புறப்படுகிறோம். சேலத்திற்குச் செல்ல வேண்டுமென்று புறப்பட்டால், நாம் வழியிலே இடது பக்கம் முசிறி வழியாகத் திரும்பி, நாமக்கல் வழியாகச் சேலத்திற்குச் சென்றிடலாம். முசிறிப் பகுதியில் திரும்ப வேண்டிய பாதையை தவற விட்டு விட்டு, உளுந்தூர்பேட்டை வரை சென்ற பிறகு, அடடா, உளுந்தூர்பேட்டை வரை வந்து விட்டோமே, சேலத்திற்கு அல்லவா செல்ல வேண்டும், பரவாயில்லை, இங்கிருந்து சேலத்திற்குச் செல்ல சாலை இருக்கிறதே, அந்த வழியாகச் செல்லலாம், என்று உளுந்தூர்பேட்டையிலிருந்து சேலத்திற்குச் செல்லலாம். அதைப்போல திருச்சியில் அரசியல்ரீதியாக நாம் நடைபோடுவோம் என்று ஆரம்பித்த இயக்கம், முசிறியில் திரும்பாமல், நம்முடைய சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பற்றிய கவலையை விட்டுவிட்டு, நேராக உளுந்தூர்பேட்டை வரை சென்றுவிட்ட காரணத்தால், மறுபடியும் சேலத்திற்கு அல்லவா செல்ல வேண்டும், சமுதாயச் சீர்திருத்தக் கொள்கைகளை விட்டுவிடக்கூடாது என்று செயல்படுவதுதான் திருப்புமுனை!” இதைத்தான் அந்த ஆறாவது பொது மாநில மாநாட்டிலும் விளக்கினேன். இப்போதும் திரும்பக் கூறுகிறேன்.
தி.மு. கழகத்தினுடைய அரசியல் பயணத்தில் சமுதாயச் சீர்திருத்தம், சமுதாய மறுமலர்ச்சி இவை கைவிடப்பட்ட ஒன்றல்ல. நீதிக் கட்சிக் காலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன். சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு, லண்டன் மாநகரில் மன்னருடைய அரண்மனை. அதிலே ஒரு விருந்து. செல்வந்தர்களும், சீமான்களும் கூடியிருக்கிறார்கள். அனைவரும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் எப்போது நுழைவார் என்று அவர் வருகின்ற வழியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மன்னர் வருகிறார் - அனைவரும் கைதட்டி வரவேற்கிறார்கள். மன்னர் ஒவ்வொருவரிடமும் வந்து கை குலுக்குகிறார். சர் ஏ.டி. பன்னீர்செல்வம், சர் ஏ. ராமசாமி முதலியார், ஜெயகர், முகமது உஸ்மான் போன்றவர்களிடம் கை குலுக்கியவாறு வந்தவர், முறுக்கு மீசையும், அகன்ற நெற்றியும், தெளிவான மார்பையும் கொண்ட ஒருவர், மன்னர் கை குலுக்க வந்தபோது, கையை நீட்டாமல் இழுத்துக் கொண்டார்.
மன்னர் அதிர்ச்சியோடு, அவரைப் பார்த்த போது, “மாட்சிமை பொருந்திய மன்னர் அவர்களே! நீங்கள் என்னைத் தீண்டக் கூடாது, தீண்டினால் மன்னருக்குத் தீங்கு நேரும். ஏனென்றால் நான் இந்தியாவில் உள்ள தீண்டத்தகாத வகுப்புகளில் ஒன்றான பறையர் இனத்தைச் சேர்ந்தவன்” என்று கணீரென்று ஆங்கிலத்தில் சொன்னார். உடனே மன்னர் ஆச்சரியமடைந்து, “மனிதனை மனிதன் தீண்டுவது கூடாது என்பது என்ன நியாயம்?” என்று கேட்டு அந்த மனிதரை உற்றுப் பார்த்தபோது, அந்த மனிதருடைய கோட்டில் இணைக்கப்பட்டிருந்த அட்டை ஒன்றில், “ராவ் பகதூர் ஆர். சீனிவாசன் - பறையன் - நான் ஒரு தீண்டத்தகாதவன்”
என்று எழுதப்பட்டிருந்தது. அப்போது மன்னர், “பரவாயில்லை, மிஸ்டர் ராவ் பகதூர் சீனிவாசன் அவர்களே” என்று கூறியவாறு, அவருடைய கையை அழுத்திப் பிடித்துக் குலுக்கினார். இது நடந்த சம்பவம். யார் அந்த சீனிவாசன்? செங்கற்பட்டு மாவட்டத்தில் இரட்டைமலை என்ற ஒருவருடைய பிள்ளையாகப் பிறந்து - தந்தையின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக் கொண்டு “இரட்டைமலை சீனிவாசன்” என்று சூட்டிக் கொண்ட - நீதிக் கட்சியின் தலைவர்களிலே ஒருவர்தான் அந்த மாபெரும் மனிதர்! அந்த அளவிற்கு அந்தக் காலத்தில் “தீண்டாமை” தமிழகத்தில் கொடிகட்டி ஆட்சிபுரிந்தது.
அந்த இரட்டைமலை சீனிவாசன்தான் 1924ஆம் ஆண்டு சென்னை சட்டமன்றத்திலே “தீண்டாமை எதிர்ப்புத் தீர்மானத்தைக்” கொண்டு வந்து நிறைவேற்றினார். அரசு அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. அந்தத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட அந்த 1924ஆம் ஆண்டு சூன் திங்கள் 3ஆம் தேதியன்றுதான் நான் பிறந்தேன். இப்போது 90 வயதைக் கடந்து விட்டேன்.
இந்த மாநாட்டுக்கான மாபெரும் ஏற்பாடுகளை முன்கூட்டியே என்னை அழைத்து வந்து காட்டிட வேண்டுமென்று வரவேற்புக் குழுத் தலைவர் தம்பி நேருவுக்கு கட்டுக்கடங்காத ஆசை. நான் அவர் வயதிலே இருந்தால், இந்த மாநாட்டு ஏற்பாடுகளைக் காண அவர் அழைக்காமலேயே வந்திருப்பேனே? 1956ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டிற்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு வார காலத்திற்கு முன்பே வந்து தங்கிக் கொண்டு, திருச்சி நகரத் தோழர்களையெல்லாம் திரட்டி அன்பெனும் நூலால் இணைத்து வேலை வாங்கிய காட்சியை இன்னமும் மறக்காதவன்தான் நான். அதனால்தான் நான் வராவிட்டாலும், நான் வருவதைப் போன்ற ஊக்கத்தை நீங்கள் பெற வேண்டுமென்பதற்காக கழகத்தின் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலினை இரண்டு முறை அனுப்பிவைத்து, ஏற்பாடுகள் எப்படியெல்லாம் நடக்கின்றன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
திருச்சியில் நடைபெறும் இந்தப் பத்தாவது மாநில மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டக் கழகங்கள் தாங்களாகவே
முன்வந்து அளித்துள்ள நிதியினைப் பற்றியெல்லாம் கடந்த வாரம்
தெரிவித்திருந்தேன். நான் கடந்த வாரம் எழுதியதைத் தொடர்ந்து மேலும் பல்வேறு மாவட்டக் கழகச் செயலாளர்கள் திருச்சி சென்று மாநாட்டு ஏற்பாடுகளையெல்லாம் கண்டு களிப்புற்றதோடு, நிதி உதவிகளையும் செய்திருக்கிறார்கள்.
திருச்சி மாநில மாநாட்டிற்காக, தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை சார்பில் 15 இலட்சம் ரூபாயைப் பேரவைத் தலைவர் பேரூர் ஆ. நடராசன், பொதுச் செயலாளர் மு. சண்முகம், பொருளாளர் கி. நடராசன் மற்றும் அதன் நிர்வாகிகள் சென்னையில் என்னைச் சந்தித்து வழங்கினர். கரூர் கே.சி. பழனிசாமி, எம்.எல்.ஏ., 25 இலட்சம் ரூபாயும், புதுக்கோட்டை ரகுபதி 25 இலட்சம் ரூபாயும், கரூர் சின்னசாமி 25 இலட்சம் ரூபாயும், விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் பொன்முடி 15 இலட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் தா.மோ. அன்பரசன் 15 இலட்சம் ரூபாயும், சேலம் மாவட்டக் கழகத்தின் சார்பில் சிவலிங்கம் 5 இலட்சம் ரூபாயும், திருப்பூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் சாமிநாதன் 10 இலட்சம் ரூபாயும், கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் பொங்கலூர் பழனிசாமி 15 இலட்சம் ரூபாயும், சிவகங்கை மாவட்டக் கழகத்தின் சார்பில் பெரியகருப்பன் 15 இலட்சம் ரூபாயும், புதுக்கோட்டை மாவட்டக் கழகத்தின் சார்பில் பெரியண்ணன் ஆரசு 10 இலட்சம் ரூபாயும், கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் நன்னியூர் ராஜேந்திரன் 20 இலட்சம் ரூபாயும், தென்சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் ஜெ. அன்பழகன் 10 இலட்சம் ரூபாயும், தஞ்சை மாவட்டக் கழகத்தின் சார்பில் பழனிமாணிக்கம் 15 இலட்சம் ரூபாயும், லால்குடி புள்ளம்பாடி கழகம் சார்பாக சவுந்திர பாண்டியன் எம்.எல்.ஏ., 20 இலட்சம் ரூபாயும், கழக விவசாய அணி சார்பில் அந்த அணியின் செயலாளர் கே.பி.ராமலிங்கம், ஐந்து இலட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், பகுதிக் கழகச் செயலாளர் மதிவாணன் 5 இலட்சம் ரூபாயும், ஒன்றியச் செயலாளர் கதிர்வேலு 5 இலட்சம் ரூபாயும் மேலும் பலரும் நிதியாக அளித்திருக்கிறார்கள்.
நமது கழகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநாட்டிலும், அந்த மாநாடு காரணமாக வந்த வரவு எவ்வளவு, செலவழிக்கப்பட்டது எவ்வளவு என்ற கணக்கைக் கூறி மீதப்பட்ட தொகையை வெளிப்படையாக அறிவிப்பது வழக்கம். 1951ஆம்
ஆண்டு முதல் மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றபோது மிச்சப்பட்ட தொகை 30 ஆயிரம் ரூபாய். இரண்டாவது மாநில மாநாடு 1956ஆம் ஆண்டு நடைபெற்றபோது - மிச்சப்பட்ட தொகை 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய். மூன்றாவது மாநில மாநாடு 1961ஆம் ஆண்டு மதுரையில் நண்பர் முத்து நடத்தியபோது மிச்சப்பட்ட தொகை ஒரு இலட்சம் ரூபாய். நான்காவது மாநில மாநாடு 1967இல் சென்னையில் நடைபெற்றபோது, நான் பொருளாளராக இருந்து ஒன்றரை ஆண்டுகள் அலைந்து திரிந்து திரட்டிய தொகையையும் சேர்த்து மீதப்பட்ட தொகை 11 இலட்சம் ரூபாய். ஐந்தாவது மாநாடு, கோவையில் நண்பர் புஞ்சைப் புளியம்பட்டி பி.ஏ.சாமிநாதன் முன்னின்று நடத்திய மாநாட்டில் மிச்சப்பட்டது 10 இலட்சத்து பத்தாயிரம் ரூபாய்.
1990ஆம் ஆண்டு தி.மு.க. ஆறாவது மாநில மாநாடு திருச்சியில் தம்பி செல்வராஜ் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து நடைபெற்றபோது மிச்சம் 23 இலட்சத்து 15 ஆயிரத்து, 413 ரூபாய்.
1993ஆம் ஆண்டு கோவையில் தி.மு.க. 7வது பொது மாநில மாநாடு நடைபெற்ற போது மிச்சம் 31 இலட்ச ரூபாய். 1996ஆம் ஆண்டு இதே திருச்சியில் தி.மு.க. 8வது பொது மாநில மாநாடு தம்பி கே.என். நேரு வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து நடைபெற்றபோது மாநாட்டு நிதி வசூல் மொத்தத் தொகை 1 கோடியே 32 ஆயிரத்து 530 ரூபாய். 2014ஆம் ஆண்டு பிப்ரவரியில், அதே நேரு மூன்றாவது முறையாக, அதாவது “ஹேட்ரிக்” என்பார்களே, அதுபோலவே வரவேற்புக் குழுத் தலைவராகத் தம்பி கே.என். நேரு இருந்து நடத்துகின்ற இந்தப் பத்தாவது பொது மாநில மாநாட்டில் மிச்சத்தொகை எவ்வளவு தரப்போகிறார் என்பதை எல்லோரையும் போலவே அறிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.
தி.மு.க. 7வது பொது மாநில மாநாடு மற்றும் இந்தி எதிர்ப்பு மாநாடு கோவை மாநகரில், 1993ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்களில் நம்முடைய மு. கண்ணப்பன் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த நடத்திய மாநாடாகும். பேரறிஞர் அண்ணாநகரில், தாளமுத்து நடராசன் பந்தலில், வால்பாறை இராமசாமி முகப்பில், கோவை அரங்கநாதன் அரங்கத்தில் நடைபெற்றது.
கோவையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொழில் பிரதேசங்கள் என்றால், பத்தாவது மாநில மாநாடு நடைபெறும் திருச்சி, அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் காவிரி தீரத்தின் டெல்டா மாவட்டங்களாகும். விவசாயிகள் நிறைந்த மாவட்டம். வேளாண் பெருங்குடி மக்கள் அணி அணியாக வந்து கூடப்போகின்ற மாநாடு.
“ஏரினும் நன்றால் எருவிடுதல்; கட்டபின் நீரினும் நன்று அதன் காப்பு” என்று வள்ளுவர் சொன்னார். ஏர் பிடித்து உழுவதை விட எருவிடுதல் நல்லது. எரு விட்டு தண்ணீர் பாய்ச்சி பயிருக்குக் களை எடுப்பதையும் விட, அந்த நிலத்தில் ஆடுமாடுகள் மேயாமல் காப்பது எல்லாவற்றையும்விட மேலானது என்று வள்ளுவர் சொன்னார். அதைப்போலத்தான் ஆயிரங்காலத்துப் பயிராம் நமது கழகத்தை - அண்ணா என்கிற அகிலம் போற்றிடும் உழவர் உழுது களை நீக்கிக் கவனமாகச் சாகுபடி செய்திட்ட இந்தப் பயிரைக் காப்பாற்றி வளர்க்கின்ற அரும் பணியிலே நாமனைவரும் ஈடுபட்டுள்ளோம். கழகம் - தமிழ்ச் சமுதாயத்தின் தன்னிகரற்ற வழிகாட்டி! பாதுகாப்புப் பேரரண்! விடிவிளக்கு! குன்றின் மேலிட்ட குல விளக்கு! அண்ணா அவர்கள் 1969ஆம் ஆண்டு மிகுந்த நம்பிக்கையோடு என் கையில் கொடுத்து விட்டுச் சென்ற விளக்கு! அந்த விளக்கு அவ்வப்போது அடிக்கின்ற காற்றால் அணைந்து விடுமோ என்று சிலர் ஆரூடம் போட்டுப் பார்க்கிறார்கள்! அணைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நானும் ஒவ்வொரு கணமும் எச்சரிக்கையோடு இருக்கிறேன். இந்த விளக்கென்ன சாதாரணமான விளக்கா? தந்தை பெரியார் வார்த்த எண்ணெயில் - பேரறிஞர் அண்ணா போட்டுக் கொடுத்த திரியில் தமிழ்நாட்டு மக்கள் நீங்கள் அனைவரும் இணைந்து ஏற்றிவைத்த கோபுர தீபம் அல்லவா? இந்தக் கழகத்தைக் கட்டிக் காப்பாற்ற - அதை மேலும் வலுவூட்ட - கழகப் பணிகளைத் தொய்வின்றி ஆற்றிட - நெஞ்சுயர்த்தி நம்முடைய பயணத்தை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து மேற்கொள்ள சபதம் ஏற்கத்தான் வரும் 15ஆம் தேதியன்று திருச்சியிலே கூடவிருக்கிறோம்.
மாநாட்டு ஏற்பாடுகளைச் செய்தியாளர்களிடம் கூறிய வரவேற்புக் குழுத் தலைவர் தம்பி நேரு, செங்கோட்டை வடிவில் நுழைவாயிலும், நாடாளுமன்ற வடிவில் முகப்பும் அமைக்கப்பட்டிருப்பதாகவும், தொண்டர்களின் வசதிக்காக 550 கழிவறைகள், 10 இடங்களில் குளியல் தொட்டிகள், 40 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்க் குழாய்கள், 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு பார்க்கிங் வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவக் குழு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மாநாட்டில் என்னென்ன தலைப்புகளில் யார் யார் பேசவிருக்கிறார்கள் என்ற பட்டியல் எல்லாம் தலைமைக் கழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் ஏடுகளின் வாயிலாக அறிவிக்கப்படும். உலகத்தில் எந்தவொரு இயக்கத்தின் சார்பிலும், கட்சியின் சார்பிலும் நம்முடைய இயக்கத்தைப் போல இந்த அளவிற்கு மாநாடுகளைத் திட்டமிட்டு நடத்தியிருக்க மாட்டார்கள். கழகம் நடத்திய மாநாடுகளையெல்லாம் வெற்றி மாநாடுகளாக ஆக்கிக் காட்டிய பெருமை என் அருமை உடன்பிறப்புகளே, இந்த பத்தாவது மாநில மாநாட்டினையும் வெற்றி மாநாடாக்கிட விரைந்து வந்திடுவாய் திருச்சி நகர் நோக்கி! நீ வரும் வழி நோக்கி விழி வைத்துக் காத்திருப்பேன்.
அன்புள்ள,
மு.க.
3-2-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 50 PDF ↗