உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 50

தொகுதி 50 · கடிதம் 3857

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி - அன்றும், இன்றும்!

2014-01-29

உடன்பிறப்பே,

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய தொழில்கள் எல்லாம் பிற மாநிலங்களுக்குப் படையெடுத்துச் செல்வதாகப் பரவலாகச் சொல்லப்படுகிறது; ஏடுகளிலும் அதுபற்றிச் செய்தி வந்துள்ளது. கொங்கு மண்டலத் தொழிலதிபர்களின், 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் கர்நாடகாவிற்குச் செல்ல உள்ளன என்றும், தமிழகத்தில் மோசமாகி வரும் முதலீட்டுச் சூழல்தான் அதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது என்றும், இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், வேறு மாநிலங்களுக்குத் தொழில்கள் இடம்பெயர வாய்ப்புள்ளது என்றும் செய்தி வந்துள்ளது.

தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், 1,400 ஏக்கரில் தொழில் மண்டலம் கர்நாடக அரசால் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில், கோவையில் கடந்த 20ஆம் தேதியன்று “சாம்ராஜ் நகர் முதலீட்டாளர்கள் மாநாடு” ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கர்நாடகா தொழில் வர்த்தக சபைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட அந்த மாநாடு, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள பல தொழில் முனைவோரின் கவனத்தையும், ஆர்வத்தையும் ஈர்த்துள்ளது. அந்த மாநாட்டில், கர்நாடக முதலமைச்சர், தொழில் துறை அமைச்சர் மற்றும் கர்நாடக மாநில அரசின் உயர் அதிகாரிகள் எல்லாம் பங்கேற்றதோடு, தொழிலதிபர்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை எல்லாம் வாரி வழங்கியுள்ளனர். மாநாட்டில் பேசிய கர்நாடக முதலமைச்சர், “கர்நாடகாவில் தொழில் தொடங்க வாருங்கள், அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம்' என்று தமிழகத் தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால் அந்த அழைப்பை எதிர்கொள்ள நம்முடைய முதலமைச்சர் ஜெயலலிதாவும், அதே கோவை மாநகருக்கு அருகில் கொடைநாட்டில் தங்கியிருந்தவாறே கர்நாடகத் தொழில் அதிபர்களுக்கு ஒரு வேளை “காணொலிக் காட்சி” வாயிலாக அழைப்பு விடுத்து வருகிறாரோ என்னவோ?

கோவையில் கர்நாடக மாநிலத்தின் சார்பில் நடைபெற்ற அந்த மாநாட்டின் விளைவாக, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளிலே தொழில் நடத்துகின்ற சுமார் 200 தொழிலதிபர்கள், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சாம்ராஜ் நகரில் முதலீடுகளைச் செய்து தொழில் தொடங்கிட முன்வந்துள்ளனர்.

இந்த மாநாடு பற்றி, கர்நாடகா தொழில் வர்த்தக சபைக் கூட்டமைப்பின் உதவிச் செயலாளர், திரு. விஜயகுமார் கூறுகையில், கோவையில் நடத்தப்பட்ட மாநாடு, மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஒரே நாளில், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவுக்கு, சாம்ராஜ் நகர் தொழில் மண்டலத்தில் முதலீடு செய்யத் தமிழகத் தொழிலதிபர்கள் முன்வந்திருப்பது பெரிதும் மகிழ்ச்சியை அளித்துள்ளது” என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார். மேலும் அவர், “குறிப்பாக, திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்று, 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளது. கோவையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர், அந்தத் தொழில் மண்டலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தொழில் செய்ய முன்வந்துள்ள அனைவருக்கும் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து, தொழில் மேம்பாட்டுக்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்வோம்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டிலிருந்து, கர்நாடகாவிற்கு முதலீடுகள் போகக் காரணம், தமிழகத்திலே உள்ள மின்வெட்டு, அரசு நிர்வாகக் கோளாறு, உள்கட்டமைப்புப் பற்றாக்குறை, ஆட்சியாளர்களைச் சந்திக்க முடியாத சூழல், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்காத அணுகுமுறை போன்றவைதான் என்கிறார்கள். அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு, தமிழகத்தில் நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்கள், மூடப்பட்டு, பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் தேடி அண்டை மாநிலங்களுக்குச் சென்று விட்டார்கள். இப்போது மீதமுள்ள தொழில் நிறுவனங்களும் வெளி மாநிலத்திற்குச் செல்லத் தொடங்கிவிட்டன.

ஆனால் கடந்த ஆண்டு தமிழகச் சட்டப் பேரவையில் தொழில் துறை மானியம் விவாதிக்கப்பட்டு, அதற்கு இரண்டொரு நாட்களுக்குப் பிறகு அந்தத்துறை சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் சில அறிவிப்புகளைச் செய்த போது “முதல்வரின் அறிவிப்புகளால் தமிழகம் இந்தியாவின் மான்செஸ்டர் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜெயலலிதாவின் மனம் குளிரும் வகையில் பாராட்டுரை வழங்கப்பட்டது. அந்தத் துறையின் அமைச்சர் மோகன், “செயற்கரிய செயல்களைச் செய்யக் கூடியவர் நம்முடைய அம்மா. அவர் சுனாமியையே விரட்டி அடித்தவர். தமிழகம் முதல் மாநிலம் என்கிற பெயர் பெற வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நல்ல திட்டங்களை அறிவிக்கிறார். வெளிச்சத்தைத் தருகிறார்” என்று கூறினார். அமைச்சரின் கூற்று எப்படி? முதலமைச்சர் எப்படியெல்லாம் அரும்பாடுபட்டு தமிழகத்தை முதல் மாநிலமாக ஆக்குகிறார் என்பதற்குக் கோவையில் நடைபெற்றுள்ள கர்நாடக மாநிலத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டமே தக்க சான்றுதானே?

பேரவைத் தலைவரோ, “தமிழகம் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் உழைக்கின்ற நம் அம்மா இப்போது தொழில் துறையில் தமிழகத்தை மேலும் முன்னேற்றுவதற்காக இந்தப் புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். விடி வெள்ளியாக வந்து அவர் தமிழகத்திற்கு வெளிச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறார்” என்று முற்றுப் புள்ளி வைத்தார்.

அன்றையதினம் தொழிற்துறை குறித்து முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டங்கள் என்ன தெரியுமா?

“நாகை மாவட்டத்தில் ஓர் ஆழ்கடல் துறைமுகம், ஒரு மிதக்கும் திரவ நிலை எரிவாயு முனையம், 500 மெகாவாட் திறனுள்ள எரிவாயுவைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி ஆலை ஆகியவை 3,500 கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தப்படும்; ஒன்பது மாவட்டங்களில் ஒன்பது புதிய தொழிற் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும்; திருமழிசையில் அடுக்குமாடித் தொழில் வளாகம் ஒன்று சிட்கோ நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படும்.”

இப்படி அறிவிப்புகள் தொடருகின்றன. இதிலே திருமழிசையில் அடுக்குமாடித் தொழில் வளாகம் பற்றிய அறிவிப்பினைப் படித்த போது எனக்கொரு சந்தேகம் ஏற்பட்டது!

2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 9-9-2011 அன்று முதலமைச்சர் இதே 110வது விதியின் கீழ் ஓர் அறிக்கை படித்தார். அது திருமழிசையில் 311 ஏக்கரில் குடியிருப்புகளை அமைக்கப் போவதாகவும், சென்னை அருகே துணை நகர் அமைக்கப் போவதாகவும் அறிவித்து, அனைத்து ஏடுகளிலும் பெரிதாகச் செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஆனால் அந்தத் திட்டம் முதலமைச்சர் அவ்வாறு அறிவிப்பதற்கு முன்பே 25-8-2011 அன்று பேரவையில் வீட்டு வசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் வைத்த கொள்கை விளக்கக் குறிப்பிலேயே இடம்பெற்றிருந்தது. அதையேதான் பின்னர் முதலமைச்சர் 110வது விதியின் கீழ் அறிவிப்பாகப் படித்தார். இதுபற்றி நான் கடந்த ஆண்டே விளக்கம் கோரியிருந்தேன். விளக்கம் இன்னமும் தயாராகிக் கொண்டிருக்கிறது! இதுதான் அ.தி.மு.க. ஆட்சியிலே தொழில் வளருகின்ற நிலை. இதே நேரத்தில் கழக ஆட்சியில் இந்தத் துறை எவ்வாறு செயல்பட்டது என்பதையும் கூறுகிறேன்.

தமிழக தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு உதவிட முதலமைச்சர் தலைமையில் தொழில் வர்த்தகக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட, “சிறப்புத் தொழில் முனைப்புக் குழு” (Special Task Force) 8.11.2006 அன்று அமைக்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் போட்டியிடும் தன்மையை அதிகரித்து அவற்றின் செயல் திறனைப் படிப்படியாக மேம்படுத்துதல்; விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைத்திட, வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்குவித்தல், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் ஆண்டு வளர்ச்சி விகிதத்தை 10 சதவீதத்திற்கும் அதிகமாக நிர்ணயித்தல் போன்றவற்றைக் குறிக்கோள்களாகக் கொண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக 2008ஆம் ஆண்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான தனிக் கொள்கை உருவாக்கப்பட்டது.

2009-2010ஆம் ஆண்டிற்கான தொழில்துறை மானியக் கோரிக்கை தயாரிப்பதற்கு முன்பாக துணை முதலமைச்சராக இருந்த தம்பி மு.க.ஸ்டாலின் 13.6.2009 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர மற்றும் பெரும் தொழில் முனைவோர் கூட்டமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிக் கலந்தாலோசித்தார். அதன்பின் அத்தகைய கூட்டங்கள் நெல்லை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய இடங்களிலும் நடத்தப்பட்டன.

மைய அரசின் மத்திய புள்ளிவிவர நிறுவனம் (Central Statistical Organisation) 2011இல், தனது 2008-09இல் தொழிற்சாலைகள் குறித்த ஆண்டு ஆய்வினை வெளியிட்டது. அந்த ஆய்வின்படி; “தமிழ்நாடு மொத்தம் 26,122 தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது; இதன் மூலம் தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது; தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் 17 இலட்சத்து 74 ஆயிரத்து 19 பேர் தொழிற்சாலைகளில் மட்டும் பணிபுரிகின்றனர்; “மொத்த முதலீட்டின்” வரிசையில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது; “மொத்த தொழில் உற்பத்தியில்” தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது; மேலும் “நிகர மதிப்பு கூடுதல்” அளவில் தொழிற்சாலை வரிசையில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தை வகிக்கிறது” என்றெல்லாம் எழுதியிருந்தது.

“Wall Street Journal” தனது 2010, ஜூலை 8ஆம் நாளிட்ட இதழில் தமிழக அரசின் செயல்பாடுகளை மிகவும் புகழ்ந்து கூறியிருந்தது. மேலும், அந்த இதழில் “தமிழ்நாடு; வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள், சாலைகள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை வழங்குவதில் மற்ற இந்திய மாநிலங்களைவிடச் சிறப்பாகச் செயல்படுகிறது. மேலும், தொழில் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் 12க்கும் மேற்பட்ட அரசுத்துறை சார்ந்த அனுமதிகளை ஒற்றைச் சாளர முறையில் ஒரே இடத்தில் வழங்குகிறது” என்றும் கூறிப் பாராட்டியது.

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் (Centre for Monitoring Indian Economy) 2010 அக்டோபர்-டிசம்பர் காலாண்டிற்கான அறிக்கையில் தமிழகம் இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் மூன்றாவது மாநிலமாகத் திகழ்கிறது எனக் குறிப்பிட்டது. அதன்படி,

2001இல் அ.தி.மு.க. ஆட்சியின் தொடக்கத்தில் அதாவது, 2001 மே திங்கள் வரை தமிழகத்தில் செய்யக் கருதப்பட்ட தொழில் முதலீடு 1 இலட்சத்து 83 ஆயிரத்து 49 கோடியே 37 இலட்ச ரூபாய்; அ.தி.மு.க. ஆட்சி முடிவடைந்த 2006 மே திங்கள் வரை 5 ஆண்டுகளில் இந்த முதலீடு ஏறத்தாழ 8 ஆயிரத்து 742 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே உயர்ந்து 1 இலட்சத்து 91 ஆயிரத்து 791 கோடியே 98 இலட்ச ரூபாய் என இருந்தது.

ஆனால், 2006இல் கழக ஆட்சி அமைந்த பிறகு புதிய தொழில் கொள்கையை வகுத்துத் தொழில் வளர்ச்சிக்கு அளித்துவந்த ஊக்கம், தொழில் முதலீட்டாளர்களுடன் தொழில் நேயத்துடன் கொண்டுள்ள வெளிப்படையான அணுகுமுறை, உலகத்தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ள தொழில் கட்டமைப்புகள் முதலியவற்றின் பயனாக ஐந்தாண்டுகளில் 5 இலட்சத்து 73 ஆயிரத்து 765 கோடியே 94 இலட்ச ரூபாய் அதிகரித்து மொத்த முதலீடு 2010 டிசம்பர்த் திங்களில் 7 இலட்சத்து 65 ஆயிரத்து 557 கோடியே 92 இலட்ச ரூபாய் என - ஏறத்தாழ நான்கு மடங்கு உயர்ந்து, தொழில் வளர்ச்சியில் ஓர் அமைதிப் புரட்சி ஏற்பட்டது.

தி.மு. கழக ஆட்சியிலே தொழில் எவ்வாறு வளர்ந்தது, தற்போது எவ்வாறு வளருகிறது என்பதற்கான விளக்கத்தைத்தான் இங்கே தொகுத்துத் தந்திருக்கிறேன். ஓர் உதாரணம் கூறுகிறேன்.

கடந்த வாரத்தில் மத்திய அரசின் கயிறு வாரிய துணைத் தலைவராக உள்ள கா. ராயர் சென்னையிலே செய்தியாளர்களைச் சந்தித்த போது, “மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் சார்பில், மத்திய கயிறு வாரியத்தின் (காயர் போர்டு) மூலமாக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் தமிழகத்தில் 100 கோடி ரூபாய் முதலீட்டில் கயிறு தொழில் பூங்கா அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்கு மத்திய அரசு 70 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கத் தயாராக உள்ளது. மாநில அரசு 10 கோடி ரூபாய் மட்டுமே வழங்க வேண்டும். கதர், கிராம சர்வோதய சங்கத்தின் மூலமாக 20 கோடி ரூபாய் வழங்கினால் விழுப்புரத்தில் வழுதரெட்டி கிராமத்தில் 200 ஏக்கர் இடத்தில் இந்தத் தொழில்பூங்கா உருவாகும். ஆனால் தமிழக அரசு இதுவரை பூங்கா அமைக்க அனுமதி அளிக்கவில்லை. இது சம்பந்தமாகத் தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் மோகனைச் சந்திக்க கடந்த இரண்டு மாதங்களாக முயன்றும் பார்க்க முடியவில்லை. நமது நாட்டின் குடியரசுத் தலைவரைக் கூட எளிதில் பார்க்க முடியும், அவருடன் புகைப்படம் எடுக்க முடியும். ஆனால் தமிழக அமைச்சரை மத்திய அரசு அதிகாரியான என்னால் கூடச் சந்திக்க முடியவில்லை. தமிழகத்தில் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் மதிப்பிலான தென்னை மட்டையும், நாறும் தீயிட்டுக் கொளுத்தி வீணாக்கப்படுகிறது” என்று தமிழக அரசுமீது குற்றஞ்சாட்டிய மத்திய அரசு அதிகாரியின் பேட்டி ஏடுகளில் வெளிவந்திருக்கிறது. ஒரு வாரம் ஆகிறது; இதற்குத் தமிழக அரசின் பதில் என்ன?

அன்புள்ள,

மு.க.

29-1-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 50 PDF ↗