உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 50

தொகுதி 50 · கடிதம் 3844

தமிழ்வழிக் கல்வியின் தலையிலும் கைவைத்ததால்?

2013-12-28

உடன்பிறப்பே,

2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை தி.மு.கழகம் ஆட்சியிலே இருந்தபோது, அனைத்துப் பள்ளிகளிலும், தமிழை கட்டாயப் பாடமாகக் கற்பிக்க தமிழ்நாடு தமிழ் கற்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தி, நிறைவேற்றியதோடு; இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பட்டப் படிப்புகளில் தமிழை ஒரு பாடப் பிரிவாகப் படிக்காமலேயே பட்டங்களைப் பெற முடியும் என இருந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் இளங்கலைப் பட்டப்படிப்பில் தமிழைக் கட்டாயமாக ஒரு பாடமாக எடுத்து அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஆணையும் பிறப்பித்து நடைமுறைப்படுத்தி வந்தது.

மேலும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2009-2010ஆம் கல்வி ஆண்டு வரையில், பொறியியல் பட்டப்படிப்புக்கான பல்கலைக்கழக வினாத்தாள்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டு; விடைகளும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட வேண்டுமென்றிருந்த நிலையை மாற்றி, 2010- 2011ஆம் ஆண்டு முதல் ஆங்கிலம் அல்லது தமிழில் வினாத்தாள் வழங்கவும், விடைகளை ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதும் முறையை அறிமுகப்படுத்தவும் பல்கலைக்கழகங்களுக்கு அறிவுரைகள் அரசின் சார்பில் வழங்கப்பட்டன. குறிப்பாக இந்தத் திட்டம், 12ஆம் வகுப்பினை தமிழ் வழியில் படித்து பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நல்ல பயனை அளிப்பதாக அமைந்தது.

இதன் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2010-2011 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பத்தி 114இல், “அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரிகளில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு மாணவர்கள்

பொறியியல் பட்டப் படிப்பு பயிலும் வசதி, வரும் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டு, அவ்வாறே ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

2010ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஜூன் மாதத்தில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்ற சிறப்பு வாய்ந்த தருணத்தில், அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக்கழகங்களில் கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக; தாய்மொழியில் கற்க - தமிழ்மொழி மூலமாகக் கற்க வகை செய்யப்பட்டு, அந்த ஆண்டில் மட்டும் அதாவது தமிழ் வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட முதலாம் ஆண்டிலேயே, இந்தப் பொறியியல் பாடப்பிரிவுகளில் 2010-2011இல் 1,378 மாணவர்கள் தமிழ் வழிப் பொறியியல் வகுப்புகளில் சேர்ந்தனர். படிப்படியாக இப்போது தமிழ்வழிப் பொறியியல் வகுப்புகளில் சுமார் 4,000 மாணவ, மாணவியர் படித்து வருகிறார்கள். தமிழ்வழிப் பொறியியல் வகுப்புகளைத் தொடங்கியதோடு, நின்றுவிடாமல் கழக ஆட்சிக் காலத்திலேயே தமிழ் வழியில் பொறியியல் படிப்பு முடித்தவுடன் அவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் 20 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அரசாணை அப்போதே வெளியிடப்பட்டது.

ஆனால் 2011ஆம் ஆண்டு முதல், அதாவது தி.மு.கழக ஆட்சிக்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்தத் தமிழ் வழிப் பொறியியல் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. கழக ஆட்சிக் காலத்தில் முதல் முறையாக தமிழ்வழி பொறியியல் படிப்புகளில், சேர்ந்த மாணவர்கள் 1,378 பேர் இப்போது இறுதியாண்டு பொறியியல் பட்டப் படிப்பை நிறைவு செய்யவுள்ளனர். பல்கலைக்கழகக் கல்லூரிகளில் தனியார் நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் தமிழ் வழியில் பயின்ற இந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்படாதது மட்டுமல்லாமல், அவர்கள் அலட்சியப் படுத்தப்படுகின்றனர் என்ற புகார் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் எழுந்துள்ளது. அதன் காரணமாக அந்த மாணவர்கள் கொதித்துப் போயுள்ளனர். தனியார் நிறுவனங்கள் ஆங்கில வழியில் படித்த மாணவர்களையே தேர்வு செய்ய முன் வருகிறார்கள்.

தற்போது எழுந்துள்ள இந்த நிலை குறித்து, தமிழ்வழியில் பொறியியல் படிக்கும் மாணவர்கள், “பொறியியல் கல்லூரிகளில் தனியார் நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளில் ஆங்கில வழி மாணவர்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர். இந்தப் பாகுபாடு குறித்து, தனியார் நிறுவனங்களிடம் கேட்டால், எங்கள் நிறுவனம் வெளிநாட்டு நிறுவனம் ஆகையால், ஆங்கில வழியில் படித்தவர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்று கூறுகின்றனர். எங்களுக்கு திறமை இருந்தும், நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம். மத்திய அரசு நிறுவனமான “பவர் க்ரிட்” கூட, தனியார் நிறுவனம் பின்பற்றி வரும் அணுகுமுறையையே பின்பற்றி, தமிழ்வழியில் பொறியியல் படிப்பு முடித்தவர்களை பின்னுக்குத் தள்ளி விடுகின்றனர். தமிழ்வழியில் பொறியியல் படித்த மாணவர்களுக்காக வேலை வாய்ப்பில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட 20 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்திட வேண்டிய அ.தி.மு.க. அரசும் இதில் தலையிடாமல் அமைதி காத்து வருகிறது. பல்கலைக்கழக நிர்வாகமும், தனியார் நிறுவனங்களின் தேர்வு முறையில் தலையிட முடியாது என்று கைவிரித்து விட்டனர்” என்றெல்லாம் குமுறுகின்றனர்.

மேலும் அந்த மாணவர்கள், “தமிழ் வழியில் பொறியியல் படித்தவுடன் தமிழக அரசு உடனடியாக எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். அல்லது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எங்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு தன்னுடைய நிலையை எங்களுக்கு விளக்கிட வேண்டும். இல்லையென்றால், நாங்கள் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு விடுவோம். முதல் முறையாக தமிழ் வழியில் பொறியியல் பட்டப் படிப்பை நிறைவு செய்து வெளியே வரும் எங்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டால்தான், தொடர்ந்து மாணவர்கள் தமிழ்வழிப் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதை ஊக்குவிப்பதாக இருக்கும். இல்லா விட்டால் பொறியியல் பட்டப்படிப்பில் தமிழ் வழிக் கல்வி என்பது வெறும் கனவாகிவிடும்” என்றெல்லாம் தங்களுடைய வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் அ.தி.மு.க. அரசு இந்த அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமா என்பது கேள்விக்குறிதான்!

ஏனென்றால் இந்த ஆட்சியினருக்கு தமிழ், செம்மொழி, தமிழ் வழிக் கல்வி, சமச்சீர் கல்வி-என்ற பொருளும், அழகும் நிறைந்த வார்த்தைகள் எல்லாம் அவர்களுக்கு “ஒவ்வாமை” இனத்தைச் சேர்ந்தவையாகும்.

“கடந்த கல்வி ஆண்டில், 320 அரசுப் பள்ளிகளில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளில் தலா இரண்டு ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. 640 பிரிவுகள் தொடங்கப்பட்டு அதில் 22,400 மாணவர்கள் படித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டு முதல் தேவைப்படும் அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும். இதனால் ஆண்டுக்கு 1.5 இலட்சம் மாணவ - மாணவியர் பயன் பெறுவர்” என்று அ.தி.மு.க. அரசின் பள்ளிக் கல்வி அமைச்சர் 10-5-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கையின்போது அறிவித்தார். தமிழ் பயிற்று மொழி பற்றிய நீண்ட நெடிய திராவிட இயக்க வரலாற்றின் அரிச்சுவடியைக் கூடத் தெரிந்து கொள்ளாமலேயே, அ.தி.மு.க.வின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்த அறிவிப்பினைச் செய்தார்.

ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றால்தான் அறிவு மேம்படும் என்பது ஒருவித மனநிலையே தவிர, அதில் எள்ளளவும் உண்மை இல்லை. தாய் மொழியில் கல்வி பயில்வதுதான் சுயசிந்தனை செழுமை அடைவதற்கு வாய்ப்பாகும். பிறமொழியில் கல்வி கற்பது என்பது சுயசிந்தனைக்கு பெரும் தடையாக அமைந்துவிடும். தாய்மொழியில் கல்வி பயில்வதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் அண்ணல் காந்தி அடிகள், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட சமுதாய அக்கறை கொண்ட தலைவர்கள் அனைவரும், கல்வி இயல் மேதைகளும், சிந்தனையாளர்களும் வலியுறுத்தி இருக்கின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் வழக்கு மொழியாகக்கூட இல்லை. ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற பல நாடுகளில் அந்த நாட்டு மொழிகள்தான் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் விளங்குகின்றன.

வணிக நோக்கில் நடைபெறும் தனியார் பள்ளிகளுக்கு

இணையாக அரசுப் பள்ளிகள் மாணவர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாக அறிவிப்பது ஏற்கத்தக்க நடைமுறை ஆகாது. சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்ததற்குப் பிறகு, பாடத் திட்டத்தைப் பொறுத்தவரை தனியார் பள்ளிகளும், அரசுப் பள்ளிகளும் சமநிலையிலேயே உள்ளன. எனவே அரசுப் பள்ளிகளை மேம்பாடுடைய கல்வி மையங்களாக மாற்றிட, சிறந்த தனியார் பள்ளிகளைப் போல, அரசுப் பள்ளிகளிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, வளர்த்து, தரமான கல்வி வழங்குவது ஒன்றே நல்ல ஏற்பாடாக இருந்திட முடியும். மேலும் பொறியியல் பட்டப் படிப்புகளிலும் தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டதே என்று காழ்ப்புணர்ச்சியோடு ஒதுக்கி விடாமல் தொடர்ந்து தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிப்பது ஒன்றே எதிர்காலத்தில் சிறந்த சமுதாயம் உருவாவதற்கான அடிப்படையை ஏற்படுத்தும். ஆங்கில வழிக் கல்வி என்பது ஆங்கில மோகமாக மாறி, அதுவே படிப்படியாக கல்வியை தனியார் மயமாக்குவதற்கான கதவுகளைத் தாராளமாகத் திறந்து விடும் பிற்போக்கு நடவடிக்கையாக ஆகிவிடும்.

தி.மு.கழக அரசு தமிழ்ப் பயிற்று மொழி தொடர்பாக மேற்கொண்டு வந்த அரிய முயற்சிகளை மேலும் முன்னெடுத்துச் செல்லாமல், அந்த முயற்சிகள் அனைத்தையும் குழி தோண்டிப் புதைக்கும் வகையில் அ.தி.மு.க. அரசின் அமைச்சர் பேரவையிலே அறிவிப்பை வெளியிட்டார். தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்துச் செயல்படுத்த வேண்டும்; மத்திய அரசு நடத்தும் வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் அனைத்தையும் தமிழிலும் நடத்திட வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழ் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற முற்போக்குக் கொள்கைகள் வலிவு பெற்று வரும் இந்தக் கால கட்டத்தில் திடீரென்று அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி என்பதும், தமிழ்வழிப் பொறியியல் பட்டப்படிப்பு மாணவர்களை உதாசீனப்படுத்துவது என்பதும் தூங்குகின்ற புலியை வீண் வம்புக்கு இழுக்க இடறி விடுவதைப் போன்றதாகும்.

ஆங்கிலம் ஒரு மொழி என்பதற்கு அப்பால், ஆங்கிலமே அறிவுக்கு ஒரே வழி என்ற போக்கு அ.தி.மு.க. அரசால்

உருவாக்கப்படுவது கண்டு தாய்மொழிப் பற்றாளர்கள் மிகுந்த வேதனையில் ஆழ்ந்திருக்கிறார்கள். பள்ளிக் கல்வி ஆயினும், உயர் நிலைக் கல்வி ஆயினும் தாய்மொழியில் கற்பிப்பதை எந்த அளவுக்கு நீட்டித்தாலும், அது ஒரு சமுதாயத்திற்கு மிகுந்த நன்மைகளையே ஏற்படுத்தும். பயிற்று மொழி குறித்து எப்படிப்பட்ட அணுகுமுறை சரியானதாகவும், பொருத்தமானதாகவும், அறிவியல் பூர்வமானதாகவும் இருக்கும் என்பது பற்றி உலகெங்கிலும் ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான ஆய்வு முடிவுகள் தாய்மொழி வழிக் கல்வியே தலை சிறந்தது என்றே எடுத்துக் காட்டியிருக்கின்றன. 1951இல் வடிவமைக்கப்பட்ட ஐ.நா. மன்றத்தின் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) தாய்மொழி வழிக் கல்வியையே வலியுறுத்தியிருக்கின்றது. இந்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் அமைக்கப்பட்ட அனைத்து கல்விக் குழுக்களும் தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என நிரூபித்திருக்கின்றன.

தமிழகத்தின் முக்கியமான இந்தப் பிரச்சினை குறித்து வாயைத் திறந்தால், எங்கே முதலமைச்சரின் கோபத்திற்கு ஆளாகிட நேரிடுமோ என்று, தமிழகத்திலே தமிழுக்காகத் தாங்கள்தான் பிறவியெடுத்திருக்கிறோம் என்பதைப்போல எண்ணிக் கொண்டு செயல்படும் சில அரசியல்வாதிகள் தங்கள் வாயைத் திறக்காமல் இருப்பதைப் பார்க்கும்போது வேதனையாகத்தான் உள்ளது.

இதையெல்லாம் திரைபோட்டு மறைத்து திசை திருப்பிடும் நோக்கத்தோடுதான், முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாடு செல்வதற்கு முன்பு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கட்டிடத்திற்கு தலைமைச் செயலகத்தில் இருந்தவாறே அடிக்கல் நாட்டிய செய்தியும், பத்து இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருக்குறள் ஓவியக் காட்சிக்கூடத்தை முதலமைச்சர் திறந்து வைத்திருக்கிறார் என்ற செய்தியும் ஏடுகளுக்கு தமிழக அரசின் செய்தித் துறையினரால் மூன்று நாட்களுக்குப் பிறகு தரப்பட்டுள்ளது. இதிலிருந்தே இந்தச் செய்திக்கு அ.தி.மு.க. அரசின் செய்தித் துறை எந்த அளவிற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சிக்கும், திருக்குறளுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்தச் செய்தியைப் பார்ப்பவர்கள், இந்த ஆட்சியில் வள்ளுவர்கோட்டம்

எந்த அளவிற்கு புறக்கணிக்கப்பட்டு, அங்கே சமூக விரோத

நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என்பதையும், கன்னியாகுமரியில் வைக்கப்பட்டுள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை இந்த ஆட்சியினரால் எப்படியெல்லாம் பராமரிப்பின்றி இருந்தது என்பதையும், கழக ஆட்சியில் திறக்கப்பட்ட “செம்மொழிப் பூங்கா”, “தொல்காப்பியப் பூங்கா”, “பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம்”, “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்” போன்றவை எந்த அளவுக்குச் சீரழிக்கப்பட்டு வருகின்றன என்பதையும் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்! தி.மு. கழக ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் “திருவள்ளுவர் படிப்பகம்” என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 680 ஊராட்சிகளிலும் கொண்டுவரப்பட்ட அத்தனை நூலகங்களின் கதி என்ன? “அம்மா” ஆட்சியில் “திருவள்ளுவர்” பெயரில் நூலகம் இருக்கலாமா? தமிழ் வழி பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர்க்கு, அரசு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை அனுசரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர அ.தி.மு.க. அரசு முன் வரவேண்டும்; தமிழ்வழிப் பொறியியல் பட்டப்படிப்பு, தி.மு. கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக எப்போதும் போல “காழ்ப்புணர்ச்சியோடு”, அந்த மாணவர்களுக்கு உடனடியாக அரசு வேலை வாய்ப்பு அளிக்க முன்வராவிட்டால் அந்த மாணவர்கள் அறிவித்தவாறு, அவர்கள் அனைவரையும் போராட்டக்காரர்களாக மாற்றிய பழிக்கு அரசு ஆளாக நேரிடும் என்பதை அரசு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அன்புள்ள, மு.க. 28-12-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 50 PDF ↗