உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 50

தொகுதி 50 · கடிதம் 3843

கொடநாட்டிலிருந்து ஆட்சி பரிபாலனம்?

2013-12-27

உடன்பிறப்பே,

15.12.2013 அன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட 9வது தீர்மானம் - பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்; கோமாரி நோய்க்கு நிவாரணம் வேண்டும் என்ற தலைப்பில் அமைந்ததாகும். அந்தத் தீர்மானத்தில் விவசாயிகளின் மோசமான நிலைமை குறித்து சொல்லியிருந்தோம். குறிப்பாக,

“கடந்த ஆண்டு சம்பா சாகுபடி பாதிக்கப்படும் என்று கணித்த அரசு, பயிர்க் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தது. வேளாண் துறை, வருவாய்த் துறை, மாவட்ட நிர்வாகம் மூலம் விவசாயிகளின் பயிர்களுக்குக் காப்பீடு செய்யப்பட்டது. இதற்கான விவசாயிகளின் பங்களிப்புத் தொகையை அரசே வழங்கியது. ஆனால் இந்த ஆண்டு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு குறித்த விழிப்புணர்வு வேளாண் துறையில் ஏற்படுத்தப்படவே இல்லை. இனியாவது தமிழக அரசின் வேளாண் துறையினர், தொடர்ந்து பாதிப்புக்காளாகி விரக்தியில் இருக்கும் விவசாயிகளை ஊக்குவித்து, முறைகேடுகள் எதுவும் செய்யாமல் பயிர்க் காப்பீடு செய்ய முன்வர வேண்டுமென்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது” என்று கூறியிருந்தோம்.

ஆனால் இந்தக் கோரிக்கையைப் பற்றித் தமிழக அரசு இதுவரை அக்கறை காட்டியதாகத் தெரியவில்லை. அதே தீர்மானத்தில் தென்னை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், கோமாரி நோய் தாக்கிப் பலியான கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்குக் கர்நாடக அரசு வழங்குவதைப் போல இழப்பீட்டுத் தொகை தமிழக அரசின் சார்பில் உடனடியாகத் தரப்பட வேண்டும் என்றும் விடுத்த வேண்டுகோளும் இந்த அரசின் காதுகளிலே விழுந்ததாகத் தெரியவில்லை.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், 2007- 2008ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலேயே பத்தி 10இல், “இந்த ஆண்டு முதல், விவசாயிகளுக்கான சிறப்புத் திட்டமாக, வறட்சி, வெள்ளம் போன்றவற்றால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் வரும் நிதியாண்டில், பத்து இலட்சம் விவசாயிகளுக்கு, பயிர்க் காப்பீடு செய்துகொள்ள நிதி உதவி அளிக்கப்படும். இதற்காக ரூபாய் பதினைந்து கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும், 2010-2011 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பத்தி 5இல், “இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்குப் பயிர் இழப்பீடு வழங்கும், காப்பீட்டுத் திட்டத்திற்கான காப்பீட்டுத் தொகையில், 50சதவிகிதம், அரசே மானியமாக வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி, அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2005- 2006இல் காப்பீடு செய்த விவசாயிகளின் எண்ணிக்கையான ஒரு இலட்சம் என்பது, 2009-2010இல் 7 இலட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த நான்காண்டுகளில் (கழக ஆட்சியில்) இவ்வகையில் ரூபாய் 891 கோடி இழப்பீட்டுத் தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்திலும் காப்பீட்டுத் தொகை மானியமாக ரூபாய் 40 கோடியும், இழப்பீட்டுத் தொகைக்கான தமிழக அரசின் பங்காக ரூபாய் 200 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தோம்.

2011-2012 ஆம் ஆண்டு, அ.தி.மு.க. பொறுப்பேற்றதும், படிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில், “பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாகச் செயல்படுத்தப்படும். தற்போது இத்திட்டத்தில் பயன்பெறும் எட்டு இலட்சம் விவசாயிகளின் எண்ணிக்கை நடப்பாண்டில் இரு மடங்காக உயர்த்தப்படும்” என்று இன்றைய நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவையில் படித்தார்.

2005-2006ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் காப்பீடு செய்த விவசாயிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சம் என்பதை,

2009-2010ஆம் ஆண்டு, தி.மு. கழக ஆட்சியில் 7.80 இலட்சம் விவசாயிகள் என்றும், 2010-2011 ஆம் ஆண்டில் 8.18 இலட்சம் விவசாயிகள் என்றும் உயர்த்தினோம்.

இந்த எண்ணிக்கையைத்தான் 2011ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், இரண்டு மடங்காக உயர்த்தப்போவதாக, அதாவது 16 லட்சம் விவசாயிகளாக உயர்த்தப் போவதாக ஓ. பன்னீர்செல்வம் அவையில் படித்தார். ஆனால் நடந்தது என்ன?

அதையும் 2012-2013ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார்கள். பத்தி 32இல், “2010- 2011ஆம் ஆண்டில் 8.18 இலட்சமாக இருந்த பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளின் எண்ணிக்கையானது, 2011-2012ஆம் ஆண்டில் 8.48 இலட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்” என்று சொல்லியிருக்கிறார்கள். நிதிநிலை அறிக்கையில் 16 லட்சம் விவசாயிகளாக எண்ணிக்கையை உயர்த்தப் போவதாகச்

சொன்னார்களே தவிர, உயர்த்தியது வெறும் 30 ஆயிரம் மட்டுமே!

தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் 2009-2010 ஆண்டில் காப்பீட்டுத் தொகை மானியமாக 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அ.தி.மு.க. ஆட்சியில், கடந்த 2012-2013ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் பக்கம் 11இல், விவசாயிகளுக்குக் காப்பீட்டுத் தொகை மானியமாக ரூ. 30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுமார் 5.32 இலட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது, காப்பீட்டுத் தொகை மானியம் பத்து கோடி ரூபாய் குறைந்தது என்பது மட்டுமல்லாமல், பயன்பெற்ற விவசாயிகள் கழக ஆட்சியில் 8.18 இலட்சம் என்றால், கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 5.32 லட்சம் என்ற அளவிற்குக் குறைந்து விட்டது என்பதையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இதிலிருந்து எந்த அளவிற்கு இந்த ஆட்சியில் விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது என்பதற்கு அ.தி.மு.க. அமைச்சர்களும், கொடநாட்டில் அரசுப் பணிகளை அங்கிருந்தவாறே ஆற்றிக் கொண்டிருக்கும் முதலமைச்சரும்தான் பதிலளிக்க வேண்டும்!

விவசாயிகளுக்கான இந்தக் காப்பீட்டுத் தொகை உதவி வழங்குவதைப் பற்றிக் கடந்த நவம்பர் திங்களிலேயே நான்

சுட்டிக் காட்டியிருந்தேன். அப்போது மத்திய அரசின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை, தமிழக அரசின் வேளாண்துறை புறக்கணிப்பதாகச் செய்தி வந்தது. அந்தச் செய்தி வந்ததும், வடகிழக்குப் பருவமழை சரியில்லாத காரணத்தால், சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஆண்டு ஒழுங்காக நீர்வரத்து இல்லாத காரணத்தால், குறுவை, சம்பா சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டும் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. இந்த நிலையில்தான் சம்பா சாகுபடி நடைபெறத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குப் பயிர்க்காப்பீடு குறித்த விழிப்புணர்வு வேளாண் துறையில் ஏற்படுத்தப்படவே இல்லையாம். இனியாவது தமிழக அரசின் வேளாண் துறையினர், தொடர்ந்து பாதிப்புக்காளாகி விரக்தியில் இருக்கும் விவசாயிகளை ஊக்குவித்து, பயிர்க் காப்பீடு செய்ய முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

என்னைத் தொடர்ந்து வேறு சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதுபற்றி வேண்டுகோள் விடுத்திருந்தனர். இன்றைய “முரசொலி” நாளேட்டில் வெளிவந்துள்ள நாகை மாவட்டக் கழகக் கூட்டத்தில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில்கூட, “கடந்த ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடன் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய காப்பீட்டுத் தொகையை மத்திய அரசும், காப்பீட்டு நிறுவனமும் வழங்காத நிலையில், தமிழக அரசு தனது பங்குத் தொகையை வழங்காததற்கு இந்தச் செயற்குழு கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, உடனே வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேட்டுக் கொண்டதோடு, நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன்பு தமிழக அரசைக் கண்டித்து, நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்டக் கழகச் செயலாளருமான தம்பி ஏ.கே.எஸ்.விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டமும் நடத்தியிருக்கிறார்கள்.

அதுபோலவே ராமனாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தம்பி சுப. தங்கவேலன், பொதுக் குழுத் தீர்மானங்களை விளக்கி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போது, “இராமநாதபுரம் மாவட்டத்திற்கு கடந்த ஆண்டு

பயிர் இன்சூரன்சுக்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசும், இன்சூரன்சு நிறுவனமும் தங்கள் பங்கீட்டை வழங்கி 3 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அ.தி.மு.க. அரசு தனது பங்குத் தொகையை வழங்காமல் காலதாமதம் செய்கிறது. உடனடியாக அ.தி.மு.க. அரசு பங்குத் தொகையைச் செலுத்தி, விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டுத் தொகை கிடைத்திட அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

எனவே, இந்தப் பிரச்சினை என்பது ஒன்றிரண்டு மாவட்டங்களில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்குப் பெரும் பிரச்சினையாக இருந்துவருகிறது. ஆனால் இந்தப் பிரச்சினை மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அ.தி.மு.க. அரசோ கேளாக் காதுடன் இருந்து வருகிறது. விவசாயிகள் பிரச்சினை இவ்வாறிருக்க, பால் கொள்முதல் விலையைத் தமிழக அரசு ஏற்றியிருப்பது போதாது என்று அவர்கள் போராடப் போவதாக ஒரு மாதம் கெடு என்று அறிவித்திருக்கிறார்கள். அதைப் போலவே கரும்பு விவசாயிகளுக்காக அரசு நிர்ணயித்துள்ள கொள்முதல் விலை மிகவும் குறைவு என்றும் டன் ஒன்றுக்கு அதனை 3,500 ரூபாயாக அறிவிக்க வேண்டுமென்றும் அவர்கள் குரல் எழுப்பியிருக்கிறார்கள்.

குடிநீர்ப் பிரச்சினையோ கேட்க வேண்டியதில்லை. கிருஷ்ணா நதி நீரும் நிறுத்தப்பட்டு விட்டதாம்! மதுரை மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சியாம்! மேட்டூர் அனல் மின் நிலையத்திலும், வல்லூர் மின் உற்பத்தி நிலையத்திலும், உற்பத்தி பாதிக்கப்பட்டு விட்டதாம்! சட்டம் ஒழுங்கு பற்றிக் கூறவே வேண்டியதில்லை. நாள் தவறாமல் கொலை, கொள்ளைகள்! கோமாரி நோய் கால்நடைகளைப் பலிவாங்கிக் கொண்டே இருக்கிறது. தங்கள் கால்நடைகளைப் பறிகொடுத்தவர்கள், அரசு எப்போதுதான் நிவாரணத் தொகை வழங்குமோ என்று ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றனர். இதிலே அ.தி.மு.க. வினர் சார்பில் பொதுக் குழு விளக்கப் பொதுக் கூட்டமாம்; ஆனால் கட்சியின் தலைவி கலந்து கொள்ளமாட்டாராம்! அன்றாடம் இறந்து போகின்றவர்களுக்கு, அம்மா வழங்கும் குடும்ப நிதி உதவியை

எப்படி வழங்கப் போகிறார்கள்?

நாகப்பட்டினத்தில் மீனவர்கள் உண்ணா விரதம் தொடங்கி, அதைக் கேள்விப்பட்ட நான் உடனடியாக நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர், தம்பி டி.ஆர். பாலுவை அனுப்பி, மீனவர்களின் உண்ணாவிரதத்தை நிறுத்தச் செய்திருக்கிறேன். அவர்கள் உண்ணா விரதத்தை நிறுத்திய போதிலும், வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மீனவர்கள் பிரச்சினை முடிந்தபாடில்லை. மத்திய அரசு, இலங்கை மீனவர்களின் பிரதிநிதிகளும், தமிழக மீனவர்களின் பிரதிநிதிகளும் கலந்து பேசுவதற்கான தேதியைத் தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டுமென்று கூறி மாதங்கள் பலவாகிவிட்டது. அந்தக் கூட்டத்தை தமிழக அரசு எப்போதுதான் நடத்தப் போகிறதோ? இந்தப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் முடிவுகாண வேண்டிய முதலமைச்சரோ, கொடநாட்டிலிருந்து ஆட்சிப் பரிபாலனம் செய்யப் போகிறாராம்!

அன்புள்ள, மு.க.

27-12-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 50 PDF ↗