தொகுதி 50 · கடிதம் 3842
நெம்மேலித் திட்டம்; யாரால், எப்பொழுது?
2013-12-26
உடன்பிறப்பே,
23-12-2013 அன்று நாளேடுகள் வெளியிட்ட செய்திகளில் ஒன்று - “நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் 101 சதவீதம் குடிநீர் உற்பத்தி செய்து புதிய சாதனை” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள செய்தியில் - “சென்னை நகரில் தண்ணீர்த் தேவை குறித்து முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் ஆய்வு செய்தார். அதையடுத்து குடிநீர் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டது. சென்னை குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார். அப்போதிருந்தே இந்த நிலையத்தில் சென்னை குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையம், இப்போது 101 சதவீதம் குடிநீர் உற்பத்தி செய்து, அதன் உற்பத்தித் திறனில் புதிய சாதனை படைத்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியைப் படித்தவுடன் நமக்கு மகிழ்ச்சிதான் ஏற்பட்டது. இந்தச் செய்தியில் முதலமைச்சர் ஆய்வு செய்ததை அடுத்து குடிநீர் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை சென்னை குடிநீர் வாரியம் மேற்கொண்டது என்றுள்ளது. அப்படியானால், முதலமைச்சர் ஆய்வு செய்திருக்காவிட்டால், குடிநீர் வாரியம் குடிநீர் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்காதா?
இந்த நெம்மேலி குடிநீர்த் திட்டம், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், மத்திய அரசின் நிதி உதவியோடு தொடங்கப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தை இந்த ஆண்டு துவக்கத்தில் 22-2- 2013 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த
நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் வரலாற்றைப் பற்றி இந்த நேரத்தில் சுருக்கமாக விளக்கிட விரும்புகிறேன்.
சென்னை மாநகரின் குடிநீர்ப் பிரச்சினையைப் போக்கிட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் ஒன்றைச் சென்னைக்கு அருகே அமைத்திட வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது. 2004இல் மத்தியில் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக் கொண்டது. அதன் பயனாக, 2004-2005ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் அளித்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர், திரு.ப.சிதம்பரம் அவர்கள்,
“சென்னை மற்றும் கொரமண்டல் கடற்கரை நெடுகிலும்
உள்ள நகரங்களுக்கு நாளொன்றுக்கு 300 மில்லியன்
லிட்டர் உற்பத்தித் திறனுடைய கடல்நீரைக்
குடிநீராக்கும் திட்டத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
செய்யப்படும்”
- என அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, மத்திய அரசின் நிதி உதவியைப் பெற்று சென்னையில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்துமாறு அன்றைய அ.தி.மு.க. அரசுக்குப் பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. எனினும், இத்திட்டத்தைச் செயல்படுத்தாமல் இறுதிவரை அ.தி.மு.க. அரசு அலட்சியமாக இருந்து விட்டது. அந்நிலையில், 2006இல் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இதனைச் சுட்டிக்காட்டி, தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தபிறகு,
“இந்த மாபெரும் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு, உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்”
- என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதிப்படி, 2006இல் தமிழகத்தில் கழக அரசு அமைந்தபின், தென்சென்னைப் பகுதியில் நெம்மேலியில்
கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கையைத் தயார் செய்து அந்த அறிக்கையை, 27.1.2008 அன்று மத்திய நிதியமைச்சர் அவர்களிடம் நானே நேரில் வழங்கி இத்திட்டத்திற்கான அனுமதியையும், நிதியுதவியையும் உடனே வழங்குமாறு கேட்டுக்கொண்டேன்.
தொடர்ந்து இந்தத் துறையின் அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்த தம்பி ஸ்டாலினையும், அரசு அதிகாரிகளையும் டெல்லிக்கு அனுப்பி, இந்தத் திட்டம் பற்றி துரிதப்படுத்தியதன் அடிப்படையில், இத்திட்டத்திற்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் 908 கோடியே 28 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திடப் பரிந்துரை செய்தது.
அதன்மீது, மத்திய அரசின் பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் குழு 2.1.2009 அன்று இத்திட்டத்திற்கு 871 கோடியே 24 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்க ஒப்புதல் அளித்தது. அத்துடன், 2009 மார்ச் திங்களில் இத்திட்டத்திற்குரிய நிதியில் மத்திய அரசு தமிழக அரசுக்கு முதல் தவணையாக 300 கோடி ரூபாயை வழங்கியது. அதன்பின்னர், இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகளை 23.2.2010 அன்று துணை முதலமைச்சராக இருந்த தம்பி ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அதனையடுத்து, இத்திட்டத்திற்காக நிலத்தை மேம்படுத்தும் பணிகளில் 60 விழுக்காடு பணிகளும், கட்டுமானத் தாங்கிகளை அமைப்பதில் 85 விழுக்காடு பணிகளும், மற்ற பணிகள் அனைத்தும் முழு வீச்சில் வேகமாக கழக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றன. இத்திட்டத்தின் மூலம், கிடைக்கும் குடிநீரைக் கொண்டு செல்ல 66 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் வேலைகள் விரைவாக நடந்தன.
இதே வேகத்தைக் கடைப்பிடித்து இத்திட்டத்திற்கான பணிகள் அனைத்தையும் 2011 டிசம்பருக்குள் நிறைவேற்றி முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் முடுக்கி விடப்பட்டன. 2011 டிசம்பருக்குள் முடிந்திருக்க வேண்டிய பணிகள் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அக்கறையின்மையால் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக 2013ஆம் ஆண்டு பிப்ரவரியில்தான் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த நெம்மேலித் திட்டத்தில்தான் தற்போது 101 சதவிகிதம் உற்பத்தி கிட்டியிருப்பதாக குடிநீர் வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது. அதைப் படிக்கும்போது, அந்தத் திட்டத்திற்குப் பெரிதும் காரணமானவன் என்ற முறையில் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
ஆனால் இந்த நெம்மேலி குடிநீர்த் திட்டம் பற்றி, இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு செய்தி ஏடுகளில் வெளிவந்தது. அந்தச் செய்தியில் “தற்போது நெம்மேலி குடிநீர் நிலையத்தில் பராமரிப்புப் பணி என்ற பெயரில், பல நாட்களாக குடிநீர் உற்பத்தி நிறுத்தப்பட்டதால், தென் சென்னையில் பல பகுதிகளில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது” என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது. நெம்மேலி குடிநீர்த் திட்டத்தில் உள்ள இயந்திரத்தில் சவ்வூடு மென் படலங்களில் பழுது ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக தென் சென்னையில் அக்கரை, ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, பாலவாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர் மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளுக்கு குடிநீர் சரிவர வினியோகிக்கப்படவில்லை என்றும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அப்போது செய்தி வந்ததையொட்டி நான் “முரசொலி” “கேள்வி-பதில்” பகுதியிலே சுட்டிக்காட்டியிருந்தேன். அவ்வாறு நான் கூறியதற்குப் பிறகுதான், முதலமைச்சர் ஜெயலலிதா குடிநீர்ப் பிரச்சினை குறித்து ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்.
அண்மைக் காலத்தில் முதலமைச்சர் அன்றாடம் ஒரு ஆய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அதிலே குறிப்பிட்ட நான்கு அமைச்சர்களை முன் வரிசையிலே அமரச் செய்து, அதிகாரிகளைக் கொண்டு கலந்தாலோசனை செய்வதுபோல புகைப்படம் எடுத்து ஏடுகளில் வெளியிடச் செய்வதும் நாம் தொடர்ந்து கண்டு வருகின்ற காட்சிகளாகும். அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும்போது சிரிப்புத்தான் வரும்! பள்ளியில் மாணவர்கள் கூட சற்று கைகால்களை அசைந்து கொடுப்பதற்கு ஏதுவாக, வசதியாக உட்கார்ந்திருப்பார்கள்; ஆனால் இந்தப் புகைப்படங்களில் அமைச்சர்கள் இறுக்கமாக அமர்ந்திருக்கும் “பவ்யம்” இருக்கிறதே, ஏயப்பா? முதலமைச்சருக்கு இந்த அமைச்சர்கள் காட்டும் அபரிமிதமான மரியாதை - அப்படியே இடுப்பு முழுவதும் வளைந்து கொடுத்து, அவர்கள் கூனிக் குறுகி பரிதாபமாக வணக்கம்
செலுத்துவதை ஏடுகளிலே பார்க்கும் போது, பதவி எந்த அளவிற்கு மனிதனைக் கூனிக்குறுகி குனிய வைக்கிறது என்பதைத்தான் புரிந்துகொள்ள முடிகிறது. எப்படியோ போகட்டும்; அது அவர்கள் கட்சி விவகாரம்!
தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் இந்த அளவிற்குச் சீராகி, தற்போது 101 சதவிகிதம் குடிநீர் உற்பத்தி செய்து புதிய சாதனை படைத்திருப்பதாக சென்னை குடிநீர் வாரியமே செய்திக்குறிப்பு அனுப்பியிருக்கிறது என்றால், அந்தத் திட்டத்தினைத் தொடங்க முழு முதல் முயற்சி எடுத்தவன் என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படாதா?
இந்த நேரத்தில் மற்றொரு சந்தேகம்! முதலமைச்சர் சட்டப்பேரவை நடைபெறும் போது, அன்றாடம் 110வது விதியின்கீழ் அறிக்கை படிப்பார் அல்லவா; அப்படி படித்த போது 16-4-2013 அன்று, அதாவது சுமார் 8 மாதங்களுக்கு முன்பு பேரவையில் ஓர் அறிக்கை படித்தார். அந்த அறிக்கையில், “பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப சென்னை மாநகரின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்யும் வகையில், நெம்மேலியில் தற்போது நிறுவப்பட்டுள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்திற்கு அருகில் காலியாக உள்ள 10.50 ஏக்கர் நிலத்தில், 1000 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதலாக நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் ஒன்று அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டம் நிறைவேற்றப்படுவதன்மூலம், விரிவாக்கப்பட்ட சென்னை மாநகரின் தென்பகுதியில் அமைந்துள்ள ஆலந்தூர், பெருங்குடி, கொட்டிவாக்கம், புழுதிவாக்கம், பள்ளிக் கரணை, மடிப்பாக்கம், சோழிங்க நல்லூர், காரப்பாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரி, உத்தண்டி மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடியிருக்கும் சுமார் 6.46 இலட்சம் மக்கள் பயனடைவர்” என்று வேறு சில திட்டங்களையும் சேர்த்து பேரவையில் பலத்த வரவேற்புடன் முதலமைச்சர் ஜெயலலிதா படித்து, அவருக்கு வேண்டிய தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் அதனைப் பாராட்டி மகிழ்ந்தார்களே; அதற்குப் பிறகு 8 மாதங்கள் ஓடிவிட்டதே; அதன் கதி தற்போது என்ன? முதலமைச்சர் மற்ற அமைச்சர்களோடு குடிநீர்
வாரிய அதிகாரிகளையெல்லாம் அழைத்துக் கலந்தாலோசனை செய்தபோது அந்தப் புதிய திட்டத்தைப் பற்றி பேசப்படவில்லையா? பேசப்பட்டிருந்தால் அரசு செய்திக் குறிப்பில், அதைப் பற்றியும் பேசப்பட்டது, அது எந்த நிலையில் உள்ளது என்பதைத் தெரிவிக்க மறந்துவிட்டதா? அல்லது அவசரப் பணி காரணமாக கொடநாடு செல்ல வேண்டிய நெருக்கடியில் இந்தத் திட்டம் பற்றிப் பேசுவதற்கு ஒருவேளை நேரம் இல்லாமல் போய்விட்டதா? கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்? கை தட்டுவதற்கும், காலில் விழுவதற்கும்தானே இருக்கிறார்கள்!
கொடநாட்டில் அப்படி என்னதான் இருக்கிறதோ? ஆனால் அமைச்சர்கள் எல்லாம் “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டார்களாம்! ஏன் தெரியுமா? “அம்மா” திரும்பி வரும்வரை நாம் அமைச்சர்கள்தான் என்ற நம்பிக்கைதான் காரணமாம்!
அன்புள்ள, மு.க. 26-12-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 50 PDF ↗