உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 50

தொகுதி 50 · கடிதம் 3841

கரும்பு, நெல் விவசாயிகள் மீது காழ்ப்பு ஏன்?

2013-12-24

உடன்பிறப்பே,

2011ஆம் ஆண்டு மே திங்களில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு, தமிழகத்திலே உள்ள விவசாயிகள் - பயிர்கள் பொய்த்துப்போனது, வறட்சி, போதிய கடனுதவி அளிக்காதது, பயிர்க் காப்பீட்டில் முறைகேடுகள், வறட்சி நிவாரணத்தில் பாரபட்சம், கோமாரி நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகள் என வரிசையாகப் பிரச்சினைகள் பாய்ந்து, பட்ட காலிலேயே படும் என்பதைப் போல அவர்கள் தொடர்ந்து படுகின்ற இன்னல்களுக்கு அளவே இல்லாமல் போகிறது. ஆளும் அ.தி.மு.க.வினரோ விவசாயிகளிடம் பாராமுகத்தோடும், கேளாக் காதினராகவும் நடந்து கொள்கிறார்கள். வேளாண்மைத் துறை என்று ஒன்று இருக்கிறதா? அந்தத் துறை இந்த ஆட்சியிலே செயல்படுகிறதா? 2005-2006 ஆம் ஆண்டு, ஜெயலலிதா ஆட்சியில், தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தி 61.46 இலட்சம் டன்.

2009-2010 ஆம் ஆண்டு தி.மு.கழக ஆட்சியில் உணவு தானிய உற்பத்தி 95.60 இலட்சம் டன். விவசாயிகள் வாங்கிய சுமார் 7,000 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்து, அதன் மூலம் 22 இலட்சத்து 40 ஆயிரத்து, 739 விவசாயக் குடும்பங்கள் பயனடைய வழிவகை செய்த ஆட்சிதான் தி.மு.கழக ஆட்சி.

தமிழகத்தில் சுமார் 22 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் சாகுபடி செய்யப்படும் காவிரி டெல்டா மாவட்டங்கள் என்று பார்த்தால், திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் முழுமையாகவும், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் பகுதி பகுதியாகவும் நெல் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயத் தொழிலாளர்கள், தற்போது தங்களுடைய வாழ்வாதாரத்திற்காகப்

பல இலட்சக்கணக்கானவர்கள் செங்கல் சூளை, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், கட்டிடக் கட்டுமானப் பணிகள் என வேறு தொழில்களிலே ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகளைச் செய்வதற்கான தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. 1981ஆம் ஆண்டில் இந்த டெல்டா மாவட்டங்களில் ஒரு குவிண்டால் நெல் விலை ரூ. 120. அப்போது ஒரு கணவனும், மனைவியும் விவசாய வேலைக்கு வருவார்களானால், அவர்களுக்குத் தரப்பட்ட கூலி ரூ. 12. அப்போது ஒரு குவிண்டால் நெல்லை விற்பனை செய்தால், பத்து இணைத் தொழிலாளர்களுக்கு அந்தத் தொகையைக் கொண்டு கூலி வழங்கிட இயலும். ஆனால் தற்போது என்ன நிலை? தற்போது ஒரு குவிண்டால் நெல் விலை ரூ. 1,360. ஒரு குவிண்டால் நெல்லை விற்பனை செய்தால் அதைக் கொண்டு 3 இணைத் தொழிலாளர்களுக்குக்கூட கூலி வழங்க முடியாது என்ற நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

வயலை உழவு செய்யும் டிராக்டர், நடவு செய்ய, மற்றும் அறுவடை செய்யப் பயன்படும் இயந்திரங்களுக்குக் கூடுதல் வாடகை கேட்கிறார்கள். கேட்டால் டீசல் விலை ஏற்றம் என்கிறார்கள். இடுபொருள்களான விதை நெல், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது. விவசாயம் செய்வதற்கான செலவுகளும், வேளாண் இடு பொருள்களின் விலையும் மிகவும் அதிகமாகிவிட்ட இந்த நிலையில்தான் நெல்லுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும்

விவசாயிகள் மத்தியிலே ஏற்பட்டுள்ளது.

2006-2007இல் தி.மு.கழகம் ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது சன்ன ரக நெல் குவிண்டால் 650 ரூபாய் என்றும், சாதாரண ரக நெல் 620 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டது, இது படிப்படியாக உயர்ந்து 2009-2010 ஆம் ஆண்டில் சன்ன ரக நெல் விலையை 1,100 ரூபாய் என்றும், சாதாரண ரக நெல் விலையை 1,050 ரூபாய் என்றும் உயர்த்தியிருந்தது.

இந்த ஆண்டு நெல் கொள்முதல் விலை, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையோடு தமிழக அரசின் மானியம் முறையே ரூ. 70, ரூ. 50 சேர்த்து, சன்ன ரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ. 1,415, மற்றும் பொது ரக நெல்லுக்கு ரூ.

1,360 என்று விலை நிர்ணயித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ளது. இந்த நிலை குறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், ஆறுபாதி கல்யாணம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த ஆண்டில் கடும் வறட்சி ஏற்பட்டுச் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் காய்ந்து, கருகி விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குறுவைச் சாகுபடிக்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் சம்பா சாகுபடியை முழு நம்பிக்கையோடு மேற்கொண்டுள்ளனர். ஆனால் நெல்லுக்கான விலை போதுமானதாக இல்லை என்பது விவசாயிகளுக்குக் கவலை அளிப்பதாக உள்ளது. குறைந்தபட்சம் கொள்முதல் விலையைக் குவிண்டாலுக்கு ரூ. 2,000 என்று தமிழக அரசு வழங்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.

இதுபோலவேதான் கரும்பு விவசாயிகளும் போதுமான உரிய கொள்முதல் விலை கிடைக்கவில்லை என்று தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். 2005-2006ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் டன் ஒன்றுக்கு 1014 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதை 2010-2011 ஆம் ஆண்டு, தி.மு. கழக ஆட்சியில் டன் ஒன்றுக்கு ரூ. 2,000 என உயர்த்தப்பட்டது. ஆனால் இப்போது என்ன நிலைமை? தமிழகத்தில் ஆண்டு தோறும் 8.65 இலட்சம் ஏக்கரில் கரும்பு சாகுபடி நடக்கிறது. இந்த ஆண்டு கரும்பு உற்பத்தியை 500 லட்சம் டன்னாக உயர்த்த, அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தமிழகத்தில், கூட்டுறவுத் துறையில் 16 - பொதுத் துறையில் 3 - தனியார் துறையில் 27 என்று மொத்தம் 46 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் மூன்று ஆலைகளைத் தவிர மற்றவை இயங்கித்தான் வருகின்றன.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் விவசாயிகள், வேளாண் துறை அதிகாரிகள், சர்க்கரை ஆலை நிர்வாகம் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்புக் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின்படி, கரும்புக்குக் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் இப்போது நடைபெறும் ஆட்சியில் ஜனநாயக ரீதியிலான

கலந்தாலோசனைக்கு இடமில்லாததால் முத்தரப்புக் கூட்டமே நடத்தப்படுவதில்லை. ஒருதலைப்பட்சமாக அரசின் அதிகாரப்படிதான் கரும்புக்குக் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ஒரு டன் கரும்புக்குக் கொள்முதல் விலையாக 2,350 ரூபாய் என்று கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 150 ரூபாய் வாகன வாடகையாகப் பிடித்தம் செய்யப்பட்டுவிடும். மீதமுள்ள 2,200 ரூபாயைத்தான் விவசாயிகளின் வங்கிக் கணக்கிலே கரும்பாலை நிர்வாகங்கள் வரவு வைக்கும். இடுபொருட்கள் விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை, தண்ணீர்த் தட்டுப்பாட்டால் கரும்புக்குத் தரப்படும் கொள்முதல் விலை கட்டுப்படியாகவில்லை என்று கரும்பு விவசாயிகள் கடந்த ஆண்டிலிருந்து புலம்பி வருகின்றனர். அதுபோலவே நெல்லுக்குக் கட்டுப்படியான விலை போதவில்லை என்று நெல் விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் கரும்பு பருவம் தொடங்கும். அந்த நேரத்தில்தான் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைப்பது வழக்கம். கடந்த பருவம் வரை, ஒரு டன் கரும்புக்கு வயல் விலையாக 3,500 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததைப் போல, குறைந்தபட்சம் டன் ஒன்றுக்கு 2,500 ரூபாயாவது வழங்க வேண்டுமென்று கடந்த ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதைக்கூடச் செயல்படுத்த தமிழக அரசு முன்வரவில்லை.

தற்போது கரும்பு பருவம் தொடங்கிவிட்டதால், ஒரு டன்னுக்கு 4,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கேட்கிறார்கள். ஆனால் தமிழக அரசு நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவிருப்பதால், நேற்றைய தினம் கரும்பு விலையை டன் ஒன்றுக்கு 2,650 ரூபாய் என்று நிர்ணயித்து அறிவித்திருக்கிறது.

மேலும் மத்திய அரசிடம் போதுமான அளவுக்குச் சர்க்கரை கையிருப்பு உள்ளது என்ற போதிலும், சர்க்கரை இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதிக்காமல் உள்ளது. சர்க்கரை இறக்குமதிக்கான வரியையும் உயர்த்த முன்வராமல் உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரும்புக்கான விலை, டன்னுக்கு 2,800 ரூபாய்; இந்த விலையையே உயர்த்தக்கோரி, அங்குள்ள விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில், அதற்கும் குறைவாகவே விலை வழங்கப்படுகிறது. கரும்பு பருவம் தொடங்கி நான்கு மாதங்கள் ஆகின்றன. தற்போதுதான் இங்கே கொள்முதல் விலையை வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலை மனதிலே கொண்டு அவசர அவசரமாக அறிவித்திருக்கிறார்கள்.

அரசின் ஆதரவு பத்திரிகைகளில் எல்லாம், குறிப்பாக “தினத்தந்தி” நாளேடு “விவசாயிகளின் நலன் கருதி கரும்புக்கான பரிந்துரை விலை டன்னுக்கு ரூ. 550 உயர்வு-ஜெயலலிதா அறிவிப்பு” என்று தலைப்பிலேயே வெளியிட்டிருக்கிறார்கள். இதுவரை கரும்பு டன் ஒன்றுக்கு 2,350 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இப்போது அரசின் செய்திப்படி டன் ஒன்றுக்கு 550 ரூபாய் உயர்வு என்றால், என்ன விலை நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். 2,350 ரூபாயுடன், 550 ரூபாயைச் சேர்த்து 2,900 ரூபாய் என்றுதானே அனைவரும் எண்ணுவார்கள். ஆனால் மத்திய அரசு விலையுடன் சேர்த்து ரூ. 2,650 ரூபாய் என்றுதான் தமிழக அரசு தற்போது விலை நிர்ணயித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு இருந்த விலையை விட வெறும் 300 ரூபாயை மட்டுமே உயர்த்தி விட்டு, 550 ரூபாய் உயர்த்துவதாகக் கரும்பு விவசாயிகளை ஏமாற்ற நினைக்கிறார்கள்.

இன்னும் கூறப்போனால், 2011-2012ஆம் ஆண்டுக்கான கரும்பு பருவத்துக்கு மத்திய அரசு ரூ. 1,450 ரூபாய் என்று டன் ஒன்றுக்கு விலை நிர்ணயித்தபோது, தமிழக அரசு 650 ரூபாய் உயர்த்தி டன் ஒன்றுக்கு ரூ. 2,100 என்று விலை நிர்ணயம் செய்தது. அதுபோல 2012-2013ஆம் ஆண்டுக்கான கரும்பு விலையை டன் ஒன்றுக்கு ரூ. 1,700 என்று மத்திய அரசு நிர்ணயித்தபோது, தமிழக அரசு அப்போதும் டன் ஒன்றுக்கு 650 ரூபாய் உயர்த்தி, ரூ. 2,350 என்று விலை நிர்ணயம் செய்தது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக டன் ஒன்றுக்கு 650 ரூபாய் என்று உயர்த்திவிட்டு, இந்த

ஆண்டு கரும்பு விவசாயிகளை மேலும் நசுக்குவதைப் போல, அந்த 650 ரூபாய் அளவிற்குக் கூட விலையை உயர்த்தாமல் அதிலும் 100 ரூபாய் குறைத்து, 550 ரூபாய் என்று மட்டுமே அறிவித்திருக்கிறார்கள். இந்த 550 ரூபாய் என்பதிலே கூட, மத்திய அரசின் நிர்ணய விலையில்தான் 550 ரூபாய் அதிகமே தவிர, மாநில அரசு கடந்த ஆண்டு 2,350 ரூபாய் என்று நிர்ணயித்ததிலிருந்து இந்த ஆண்டு வெறும் 300 ரூபாய் மட்டுமே உயர்த்தியிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் இதை மறைத்து விட்டு, இந்த ஆண்டு 550 ரூபாய் உயர்த்தியிருப்பதைப் போல செய்தி வெளியிட்டுக் கரும்பு விவசாயிகளை ஏமாற்ற எண்ணுகிறார்கள். இந்த உண்மையை அ.தி.மு.க.விற்கு ஆதரவாகச் செயல்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடான “தீக்கதிர்” பத்திரிகையில் கரும்பு விலை ரூ. 100 குறைப்பு - விவசாயிகள் எதிர்ப்பு என்ற தலைப்பில் இன்று (23-12-2013) வெளியிட்டுள்ளார்கள். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ. சண்முகம், விவசாயிகளை ஏமாற்றும் தமிழக அரசின் கரும்பு விலை குறித்த அறிவிப்புக்கு எதிராக வலுவான கண்டன இயக்கங்களை நடத்த முன்வருமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். அதுபோலவே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என். பழனிச்சாமி, பொதுச் செயலாளர் டி. ரவீந்தரன் ஆகியோரும் தமிழக அரசு தற்போது நிர்ணயித்துள்ள விலை கட்டுப்படியாகாத விலை என்று கண்டன அறிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இந்த உயர்வு பற்றி, தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கச் செயல் தலைவர் ராஜ்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக அரசு அறிவித்துள்ள கரும்பு கொள்முதல் விலை, எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த, 3 வருடத்தில் தமிழகத்தில் விலைவாசி, மின் தட்டுப்பாடு ஆகியவற்றால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் வகையில், தமிழக அரசு கரும்பு விலையை அறிவித்துள்ளது. எனவே கரும்பு விலையை அரசு மறு பரிசீலனை செய்து டன் ஒன்றுக்கு ரூ. 3,500 என உயர்த்தி வழங்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், விருதகிரி, “கரும்பு கொள்முதல் விலையை எதிர்பார்த்த அளவிற்கு அரசு உயர்த்தவில்லை, சர்க்கரை ஆலை நிர்வாகங்களின்

நெருக்கடிக்குப் பணிந்து விவசாயிகளை அரசு ஏமாற்றிவிட்டது” என்று தன் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நெல் பயிரிடும் விவசாயிகள் மற்றும் கரும்பு விவசாயிகளின் சிரமங்களை உணர்ந்துதான் அண்மையில் கூடிய தி.மு.கழகப் பொதுக் குழுவிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக, நெல் விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகக் கூடிய வகையில், உற்பத்திச் செலவைவிடக் கூடுதலாகக் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 2,000 ரூபாய் என்று நிர்ணயித்து வழங்கிட இந்த அரசு முன்வர வேண்டுமென்றும்;

கரும்பு கொள்முதல் விலையைக் குறைந்தபட்சம் டன் ஒன்றுக்கு 3,500 ரூபாயாவது வழங்கிட இந்த அரசு முன்வர வேண்டுமென்றும், இப்பொதுக் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்ற தீர்மானத்தை நிறைவேற்றினோம். ஆனால் யார் சொன்னால் என்ன? யார் கேட்டால் என்ன? என்ற ரீதியில் விவசாய சங்கத் தலைவர்கள் சொன்னதையும் கேட்காமல், எதிர்க்கட்சிகள் கூறுவதையும் கேட்காமல், முத்தரப்புக் கூட்டத்தையும் கூட்டாமல் தன்னிச்சையாக விலையை நிர்ணயித்து அறிவித்திருக்கிறார்கள். தன்னிச்சையாக ஆளுங்கட்சியினர் இவ்வாறு நடந்து கொள்வதற்கு வரவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு வாக்காளர்களும், நெல், கரும்பு விவசாயிகளும் தக்கதோர் பாடத்தை அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

அன்புள்ள, மு.க. 24-12-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 50 PDF ↗