உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 50

தொகுதி 50 · கடிதம் 3840

ஒப்பிட்டுப் பார்த்து தெளிவடைய வேண்டுகிறேன்!

2013-12-22

உடன்பிறப்பே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழு 15-12- 2013 அன்று காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இரங்கல் தீர்மானம் அன்றி, 24 தீர்மானங்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள் என்று 15 பேர் உரையாற்றினார்கள். இறுதியாக பொருளாளர், பொதுச் செயலாளர் உரையாற்றிய பிறகு நான் பேசினேன். இது திராவிட முன்னேற்றக் கழகம்.

19-12-2013 அன்று அ.தி.மு.க.வின் செயற் குழு, பொதுக்குழு இரண்டும் நடைபெற்றன.

3 மணிக்குச் செயற்குழுக் கூட்டம் தொடங்கி, ஐந்து நிமிடங்களில் செயற்குழுக் கூட்டம் முடிந்தது. அதன் பிறகு பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி 6.25 மணிக்கு முடிவடைந்தது. இதற்கிடையே 16 தீர்மானங்கள் படிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

தி.மு. கழகம் நிறைவேற்றிய 24 தீர்மானங்களில் நெல்சன் மண்டேலாவுக்கு இரங்கல் தீர்மானம் ஒன்று. ஏற்காடு இடைத்தேர்தலில் பலியான ராஜமுருகனுக்கு வீர வணக்கம் தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று. நெஞ்சுக்கு நீதி ஆறாம் பாகம் எழுதியதற்காக அடியேனுக்கு ஒரு பாராட்டுத் தீர்மானம். ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும் ஒரு தீர்மானம். தேர்தல் கூட்டணி அமைப்பதற்கு தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் அதிகாரம் அளிக்கும் ஒரு தீர்மானம். கழக

அமைப்புத் தேர்தல்கள் குறித்து ஒரு தீர்மானம். ஈழத் தமிழர் பிரச்சினை, இந்திய மீனவர்கள் பிரச்சினை உட்பட, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானங்கள் எட்டு. தமிழக அ.தி.மு.க. அரசுக்கு வேண்டுகோள் மற்றும் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானங்கள் பத்து. ஆக மொத்தம் 24 தீர்மானங்கள். எந்தவொரு தீர்மானத்திலும் பண்பாடு - நாகரிகம் ஆகியவற்றுக்குப் புறம்பான

ஒரு வார்த்தையைக் கூட யாராலும் சுட்டிக் காட்ட முடியாது. அரசியல் தீர்மானத்திற்குரிய இலக்கணத்தோடு இந்த 24 தீர்மானங்களும் வடிவமைக்கப்பட்டிருப்பதை, அதைப் படிப்பவர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.

ஆனால் அ.தி.மு.க. நிறைவேற்றிய தீர்மானங்கள் எப்படி? மொத்தம் 16 தீர்மானங்களில்,

4 தீர்மானங்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானங்கள். அமைப்புத் தேர்தல்கள் குறித்து ஒரு தீர்மானம். “அம்மா”வுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தும், கூட்டணியை முடிவு செய்ய அதிகாரம் அளித்தும், பல்வேறு காரணங்களுக்காகப் பாராட்டு தெரிவித்தும் பத்து தீர்மானங்கள். மீதம் ஒரு தீர்மானம்,

எனக்காக! அங்கே நிறைவேற்றப்பட்ட

16 தீர்மானங்களிலேயே மிக நீண்ட தீர்மானம் என்னை “அர்ச்சனை” செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான்! அந்தத் தீர்மானத்தை, ஆளுங்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏட்டினைத் தவிர வேறு எதிலும் முழுமையாக வெளியிடவில்லை. ஏனென்றால், வெளியிடக் கூடிய அளவிற்கு அந்தத் தீர்மானம் நாகரிகமானதாக இல்லை. அந்தத் தீர்மானத்திற்குத் தலைப்பு “மத்திய ஆட்சிப் பொறுப்பில் தொடர்ந்து பல ஆண்டுகள் பங்கேற்றபோதும், எந்த ஒரு நற்செயலையும் செய்யாமல் உலகத் தமிழர்களின் உள்ளமெல்லாம் வேதனை கொள்ளும் வகையில் துரோகம் இழைத்த தீய சக்தி கருணாநிதியை, வரும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் முற்றிலுமாகப் புறக்கணிக்க தமிழக வாக்காளர்களுக்கு அன்பு வேண்டுகோள்” என்பதாகும்.

அந்த நீண்ட தீர்மானத்தில் என்னை “இனத் துரோகி” என்றும், “மாபாதகன்” என்றும், “சுயநலவாதி” என்றும், “தீயசக்தி” என்றும், “தமிழ் இனத் துரோகி” என்றும் கடும் விமர்சனம் செய்திருக்கிறார்கள். நான் செய்த குற்றம், மத்திய ஆட்சிப்

பொறுப்பில் தி.மு.க. பங்கேற்ற போது எந்த ஒரு நற்செயலையும் செய்யவில்லையாம்! இதோ பட்டியல்!

சமூக நீதிக் காவலர், திரு. வி.பி. சிங் அவர்கள் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சியில்

தி.மு.கழகம் பங்கேற்றிருந்தபோதுதான், மண்டல் பரிந்துரை ஏற்கப்பட்டு, மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு கிடைத்தது; காவிரி நதி நீர் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது; சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு முனையத்திற்கு அறிஞர் அண்ணா அவர்களின்

திருப்பெயரும், உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருப்பெயரும் சூட்டப்பட்டன.

ஐக்கிய முன்னணி ஆட்சியில், குஜ்ரால் தலைமையிலான அமைச்சரவையில், மறைந்த தம்பி முரசொலி மாறன், மத்திய அரசின் தொழில் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தபோது, சிறந்த ஒன்பது பொதுத் துறை நிறுவனங்களை “நவரத்தினங்கள்” என்று பெயரிட்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கே

ஊக்கமளித்தார்.

திரு. வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் சேது சமுத்திரத் திட்டம் வடிவம் பெற்றது; கன்னியாகுமரி கடற்கரை ஓரத்தில் பெருந்தலைவர் காமராஜருக்கு மணி மண்டபம் அமைக்க அனுமதி கிடைத்தது.

திருமதி சோனியா காந்தி அம்மையார் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கழகம் பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் தமிழ், செம்மொழி என்ற தகுதியைப் பெற்றது; சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைந்தது;

கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம்

56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச் செலவில், 4,676 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலைகளில், 3,276 கிலோ மீட்டர் சாலைகள், நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு; மிகப் பெரிய மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் அமைந்தன.

சென்னைக்கருகில் ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட வளர்ச்சிக் கட்டமைப்பு மையம் அமைத்தது. 1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம். தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம். சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.

120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை

“சூப்பர் ஸ்பெஷாலிட்டி” மருத்துவமனையாக மேம்பாடு.

1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம்.

2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்.

நெசவாளர் சமுதாயத்தினர் பெரும்பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.

908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்.

“பொடா சட்டம்” ரத்து.

அனைத்து கிராமங்களிலும் முழு கணினி நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய கணினி நிர்வாகத் திட்டம் அறிமுகம்; (National E.Governance Programme).

50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில்

பேசும் வசதி.

மாதம் ஒன்றுக்கு 120 இலட்சம் புதிய தொலைபேசி இணைப்புகள்.

செல்போன் கட்டணங்கள் குறைப்பு.

தமிழகத்திலுள்ள மீட்டர்கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.

1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.

சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில்

27 சதவீத இடஒதுக்கீடு.

திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம், கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக் கழகம், திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம்.

ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் ஊனமுற்றோர்க்கான தேசிய நிறுவனம்.

சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.)

இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000 கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் வழியாக வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசில் இடம் பெற்ற தமிழகத்தின் 13 அமைச்சர்களும் பல்வேறு செயல் திட்டங்களை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் நிறைவேற்றி உள்ளனர். இந்திய அளவில் கடந்த காலங்களில் பெறமுடியாத அளவிற்குத் திட்டங்களின் மொத்த செலவுத் தொகையான ரூ.3,70,000 கோடியில், தமிழ்நாடு 11 விழுக்காட்டுப் பங்கினைப் பெற்றுள்ளது. இதுவரை தமிழ்நாடு பெறாத அளவில் அதிக நிதியினைப் பெற்று தமிழ்நாட்டில் 69 மத்திய அரசுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மத்திய ஆட்சிப் பொறுப்பில் தி.மு. கழகம் பங்கேற்றிருந்தபோது செய்யப்பட்ட நற்செயல்கள் பற்றிய பட்டியலைத் தந்துள்ளேன். அதேநேரத்தில் அ.தி.மு.க.வின்

இலட்சணம் என்ன?

1998ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தபோது, அந்தக் கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய ஆதரவுக் கடிதத்தைக்கூட வேண்டுமென்றே அனுப்பி வைக்காமல் தாமதம் செய்து முரண்டு பிடித்தார்.

ஜெயலலிதாவின் அப்போதைய முக்கிய கோரிக்கையே தமிழக தி.மு.கழக அரசைக் கலைக்க வேண்டும் என்பதுதான். மேலும் அவர் மீதிருந்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டுமென்று கோரிக்கை வைத்திருந்தார்.

பா.ஜ.க. கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதா, பா.ஜ.க. அரசின் முன்னால் வைத்த கோரிக்கைகள் - முன்னாள் தலைமைச் செயலாளர் அரிபாஸ்கர், ஐ.ஏ.எஸ்., அவர்களின் தற்காலிக வேலை நீக்கம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்; சி.ராமச்சந்திரன், ஐ.ஏ.எஸ்., அவர்களின் தற்காலிக வேலை நீக்கம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்; தூத்துக்குடி துறைமுகக் கழகத்

தலைவர்

எஸ்.மச்சேந்திரநாதன், பாரதீப் துறைமுகத்திற்கு மாற்றப்பட வேண்டும்; ஏற்கனவே அளித்த பட்டியலின் அடிப்படையில், பெங்களூரில் கம்பெனிப் பதிவாளராக உள்ள பி.கே.பன்சால் மும்பையில் இணை இயக்குநராக நியமிக்கப்பட வேண்டும் என்பன போன்ற பல சிபாரிசுகளை தன் கைப்படவே எழுதிக்

கொடுத்திருந்தார்.

தனது சொந்த நலனுக்காக எண்ணியதெல்லாம் முழுமையாக நிறைவேறவில்லை என்பதால் ஆத்திரப்பட்ட ஜெயலலிதா, குடியரசுத் தலைவரைச் சந்தித்து, பா.ஜ.க. ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்று, வாஜ்பாய் அவர்கள் தலைமையில் இருந்த மத்திய ஆட்சியையே கலைக்க முழு முதல் காரணமாக இருந்தார். அவரைப் பற்றி அன்றைய பிரதமர் வாஜ்பாய் அளித்த சான்றிதழ் 22-8-1999 தேதிய “தினமணி”யில்

வெளிவந்திருந்தது என்ன தெரியுமா? “அ.தி.மு.க.வுடன் கூட்டணி இருந்த காலம்தான் எனது அரசியல் வாழ்க்கையிலேயே மிகவும் வேதனையான காலமாகும். அரசை கவிழ்க்கப் போவதாக சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளன்றுகூட அவர் அச்சுறுத்தி னார். ஆனால் அவரது “பிளாக் மெயில்” தந்திரத்திற்கு நாங்கள் அடிபணியவில்லை”. நான் இதை எழுதியதால், பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருவதற்காகத்தான் இதையெல்லாம் எழுதியிருப்பதாக யாரும் கற்பனைப் பிரச்சாரத்தில் இறங்கிட வேண்டாம்.

தி.மு. கழகம் மத்திய ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது எவ்வாறு செயல்பட்டது என்பதையும், அ.தி.மு.க. மத்திய ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது எவ்வாறு செயல்பட்டது என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்து உணர வேண்டும் என்பதற்காகவே இவற்றை விளக்கியிருக்கிறேன். அ.தி.மு.க. தீர்மானத்தில் மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது எந்தவொரு நற்செயலையும் செய்யாமல் இருந்த “தீயசக்தி”, “சுயநலவாதி”, “தமிழினத் துரோகி” யார் என்பது இந்த விளக்கங்களிலிருந்து எல்லோருக்கும் தெளிவாகிறதா இல்லையா? இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டுமேயானால், தி.மு.கழகப் பொதுக் குழுத் தீர்மானங்களையும், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களையும் நடுநிலை விரும்புவோர் ஒரு முறை முழுமையாகப் படித்துப் பார்த்து தெளிவடைய வேண்டுகிறேன். அன்புள்ள,

மு.க. 22-12-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 50 PDF ↗