உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 50

தொகுதி 50 · கடிதம் 3839

நிதிக் குழு உரையா? நிந்தனை உரையா?

2013-12-19

உடன்பிறப்பே,

மத்திய அரசின் 14வது நிதிக்குழுக் கூட்டம் 16-12-2013 அன்று சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அதில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா எவ்விதக் குறிப்பும் இல்லாமல் தமிழக மின் பற்றாக்குறைக்குக் காரணம் என்ன என்பதை ஆதாரங்களுடன் விளக்கிக் கூறினாராம். குறிப்பும், ஆதாரமும் கையில் இல்லாத காரணத்தாலோ என்னவோ, சில அபத்தமான கருத்துக்களை ஏதோ ஆணித்தரமான உண்மைகளென்று அனைவரும் நம்ப வேண்டுமென எண்ணிப் பேசியிருக்கிறார்.

ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சென்ற போதும் மின்சாரம் பற்றித்தான் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்குக் காரணம், தமிழ்நாட்டில் மத்திய அரசின் சார்பில் நடைபெறும் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தியை வேண்டுமென்றே மத்திய அரசும், திராவிட முன்னேற்றக் கழகமும் சதி செய்து குறைத்து விட்டதாக ஒரு குற்றச்சாற்றினைச் சுமத்தியிருந்தார். மத்திய அரசின் மின் உற்பத்தி நிறுவனங்களில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், உற்பத்தி குறைந்திருக்கிறது, அதைப்பற்றி ஏற்கனவே ஏடுகளில் எந்தெந்தத் தேதிகளில் செய்தி வந்துள்ளது, அதற்கும் தி.மு. கழகத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது, மத்திய அரசோ, ஒரு கட்சியோ இது போன்ற விஷயங்களில் சதி செய்து மின் உற்பத்தியைக் குறைக்க மாட்டார்கள், எனவே சிறுபிள்ளைத்தனமாக முதலமைச்சர் பதவியில் இருப்பவர் குற்றச்சாற்றுகளைக் கூறக்கூடாது என்று யாரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கியிருந்தேன். அதற்குப் பிறகு எப்போதும் போல வசதியாக அந்தப் பிரச்சினையை அப்படியே முதலமைச்சர் விட்டுவிட்டார்.

ஆனால் 16ஆம் தேதி மத்திய அரசின் 14வது நிதிக் குழுக் கூட்டத்தில் தமிழக அரசின் மின் உற்பத்தித் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும், அரசியல் காரணங்களுக்காக வேண்டுமென்றே அனுமதி மறுக்கப்பட்டது என்றும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் அனுமதி வழங்கப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். இந்தக் குற்றச்சாற்றுக்கு மத்திய அரசு பதிலளிக்கும் என்று கருதுகிறேன். 27-12-2012 அன்று நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா அவசர அவசரமாகப் பேசிவிட்டு வெளிநடப்பு செய்தபோது தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது பற்றித் துணிவாக முடிவெடுத்தேன் என்று பேசினாரே, அப்போது இந்த மின் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கவில்லை என்று வீர தீரத்திற்கும் அதிரடிக்கும் பெயர் பெற்றவர் நேருக்கு நேராகவே கேட்டிருக்க வேண்டாமா? அங்கே அதைக் கேட்டுவிட்டு வெளிநடப்பு செய்திருக்கலாம் அல்லவா? அந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளப் பயந்து, விட்டு விட்டு, இங்கே வந்து காற்றில் கத்தியைச் சுழற்றுவதைப் போல மத்திய அரசு மீது குறை கூறுவதால் என்ன பயன்?

கழக ஆட்சியில் ஒரு முறை மின் பற்றாக்குறை ஏற்பட்ட போது, நான் உடனடியாக துறையின் அமைச்சரையும், தலைமைச் செயலாளரையும், துறையின் அதிகாரிகளையும் கலந்தாலோசித்து, அப்போது மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாகப் பிரதமரைச் சந்திக்க வைத்து, அவர் பிரதமரைச் சந்தித்து அதன் விளைவாகப் பிரதமர் மத்திய எரிசக்தித் துறை அமைச்சரை அழைத்துப் பேசி, 1,000 மெகாவாட் மின்சாரம் 2008ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரையிலும் கொடுப்பதற்கு மத்திய அரசு முன்வந்தது.

முதலமைச்சர் ஜெயலலிதா மின் பற்றாக்குறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என்பதோடு விடவில்லை. தி.மு. கழக அரசு மீதும் வழக்கம்போல புகார் புராணம் படித்திருக்கிறார். அதில் “2001 முதல் 2006 வரை பல புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் தொடங்கினேன். அந்தத் திட்டங்கள் முறையாக முன்னெடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தால், இன்று கூடத் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்திருக்க முடியும்.

ஆனால், முந்தைய அரசு புதிய மின் திட்டங்களைப் புழுதியில் தள்ளிவிட்டதுடன், அவற்றை முற்றிலுமாகப் புறந்தள்ளி விட்டார்கள். அந்தத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவோ, நிறைவேற்றவோ அக்கறை காட்டவில்லை” என்றெல்லாம் பேசியிருக்கிறார். ஜெயலலிதாவின் இந்தக் குற்றச்சாற்றுக்கு நான் பலமுறை பதிலளித்து விட்டேன். ஆனாலும் தொடர்ந்து கிளிப்பிள்ளை போல அதே குற்றச்சாற்றினை, திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறார். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் சொல்கிற குற்றச்சாற்றுகளுக்கு எதிர்த் தரப்பிலே இருந்து பதில் வருகிற போது, அதைப் படித்து உண்மை என்ன என்பதைத் தெளிவாக்கிப் புரிந்து கொள்ள வேண்டாமா?

2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜூன் மாதத்தில், ஆளுநர் உரையின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்த தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா நீண்ட நேரம் மின் தட்டுப்பாட்டைப் பற்றித்தான் பேசினார். தான் ஆட்சியில் இருந்தபோது மேற்கொண்ட முயற்சிகளைத் தி.மு.கழக அரசு தொடர்ந்திருந்தால் தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டைத் தவிர்த்திருக்கலாம் என்றும், ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் தற்போதுள்ள 3 மணி நேர மின் வெட்டினை 2 மணி நேரமாகக் குறைப்போம் என்றும், கழக ஆட்சிக் காலத்தில் மின் உற்பத்தியை அதிகப்படுத்த எதுவுமே செய்யவில்லை என்றும் குறிப்பிட்டு, அதற்கு நான் 18-6-2011 அன்றே “முரசொலி”யில் விரிவாகப் பதிலளித்திருந்தேன்.

மீண்டும், 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதியன்று, ஜெயலலிதா ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு ஒன்றரை மணி நேரம் பதிலளித்து உரையாற்றிய போதே, கடந்த ஐந்தாண்டுகளில் தி.மு.க. அரசு மின் திட்டங்களைச் செயற்படுத்தியிருந்தால் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது என்றார். அதற்கு 6-2-2012 தேதிய “முரசொலி”யிலேயே விரிவாக நான் பதில் எழுதிவிட்டேன். ஆனால் எனது பதிலை அவர் மறந்துவிட்டோ, அல்லது மக்கள் மறந்திருப்பார்கள் என்ற எண்ணத்தோடேோ, நிதிக்குழு முன்பாகத் தற்போது திசை திருப்பும் வகையில் சொல்லியிருக்கிறார்.

2006ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சி அமைந்த பிறகு மின் உற்பத்திக்காக என்னென்ன செய்யப்பட்டது என்பதை மீண்டும்

ஒரு முறை விளக்குகிறேன்.

எண்ணூர் அனல் மின் நிலைய இணைப்பு மூலமாக 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் ஒன்று 8-12-2006இல் 3 ஆயிரத்து 136 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது;

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 3 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய ஒரு திட்டம் 2-5-2007இல் தொடங்கப்பட்டது;

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய வகையில் 2 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம் 26-6-2007இல் தொடங்கப்பட்டது;

உடன்குடியில் பி.எச்.ஈ.எல்., மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணைந்து கூட்டுத் திட்டத்தின் கீழ், ஒவ்வொன்றும் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய இரண்டு திட்டங்கள் 15-10-2007இல் 8 ஆயிரத்து 362 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன.

வடசென்னை அனல் மின் நிலையத்திலேயே மேலும் 600 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய ஒரு திட்டம் 2 ஆயிரத்து 475 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 14-7-2008இல் தொடங்கப்பட்டது.

ஆயிரத்து 126 கோடி ரூபாய் செலவில், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளிலிருந்து, 183 மெகாவாட் இணை மின்சாரம் தயாரிக்கக்கூடிய திட்டம், 14-12-2009இல் தொடங்கப்பட்டது. மொத்தம் 4183 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டங்களுக்குரிய பணிகள் தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்டன. இவ்வாறு கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களில் ஒன்றிரண்டு அதற்கு முன்னர் அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டிருக்கலாம். ஆனால் அவையனைத்தையும் நடைமுறைப்படுத்தியது தி.மு.கழக அரசுதான். அ.தி.மு.க. அரசு திட்டமிட்டது ஆயிற்றே, காழ்ப்புணர்ச்சியோடு அதற்கு மூடு விழா நடத்துவோம் என்ற “சின்னப்புத்தி”; தற்போது அ.தி.மு.க. அரசுக்கு இருப்பதைப் போல, தி.மு.கழக அரசுக்கு எப்போதும் கிடையாது என்பதற்கான ஆதாரம்தான், மேலே கூறப்பட்ட திட்டங்கள்.

2006இல் தி.மு. கழக ஆட்சி அமைந்த பிறகு, வருங்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு

எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக 2010-2011இல் 1400 மெகாவாட் மின்சாரமும், 2011-2012இல் 3316 மெகாவாட் மின்சாரமும், 2012-2013இல் 1222 மெகாவாட் மின்சாரமும்,

2013-2014இல் 1860 மெகாவாட் மின்சாரமும் - ஆக மொத்தம் 7798 மெகாவாட் மின்சாரம் பல்வேறு மின் திட்டங்களின் மூலமாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

இந்தப் புள்ளி விவரங்கள், தி.மு. கழக ஆட்சியில் புதிதாக மின்சாரத்தை உற்பத்திச் செய்யக்கூடிய திட்டங்கள் எதையும் தொடங்கவில்லை என்று நிதிக் குழுவிற்கு முன்னால் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டிற்குத் தேவையான திடமான ஆதாரப்பூர்வமான விளக்கமாக அமையுமென்று கருதுகிறேன்.

நிதிக்குழு முன்பாக முதலமைச்சர் பேசும்போது, “நான் (ஜெயலலிதா) முதல் முறையாக 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக இருந்த போது, தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்தது. அப்போது மின்சாரத் தடை என்பதே இல்லை” என்று பேசியிருக்கிறார்.

1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே 1991 செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து 20 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதம்வரை தமிழ்நாட்டில் மின் கட்டுப்பாட்டு முறை இருந்ததா? இல்லையா? முதலமைச்சர் இதற்குப் பதில் சொல்லாவிட்டாலும், அந்தத் துறையின் அதிகாரிகள் இதற்குப் பதில் சொல்வார்களா?

ஏன் அதற்கு முன்பே, 3-10-1982 முதல் 26-7-1984 வரை அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலே மின் கட்டுப்பாட்டு முறை இருந்ததா இல்லையா? 2006ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகளைத் தமிழகத்திலே தொடங்காமல் இருந்திருந்தால் மின் கட்டுப்பாட்டு முறை வந்திருக்காதுதான். அதற்காக தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்காமல் ஓர் அரசு இருக்க முடியுமா?

அ.தி.மு.க. ஆட்சியிலே மின் உற்பத்தித் திட்டங்களை அதிகமாகத் தொடங்காத காரணத்தால்; கழக ஆட்சியிலே மின்

பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால் தி.மு.கழக ஆட்சியில் மின் உற்பத்தித் திட்டங்களைத் தொடங்கியதன் காரணமாகத்தான், ஓரளவிற்காவது மின் உற்பத்தி அதிகமாகி வருகிறது. மத்திய அரசு மீதும், ஏற்கனவே மாநிலத்தை ஆண்ட கட்சி மீதும் வீண் பழி சுமத்தாமல், இன்றைய முதலமைச்சர் கடந்த காலத் தி.மு.கழக ஆட்சியில் திட்டமிட்ட மின் உற்பத்தித் திட்டங்களுக்குச் சரியான முறையில் ஊக்கமளித்தால், மேலும் மின் உற்பத்தி அதிகமாகும்.

“2007ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் மின்சாரப் பற்றாக்குறை நிலவியது” என்று அதாவது தி.மு.கழக ஆட்சியிலே மின் பற்றாக்குறை இருந்ததாக முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். அவர் கூறியது எந்த அளவிற்கு உண்மை என்பதை விளக்க, தி.மு.கழக ஆட்சியில் மின் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி, 3-4-2007 அன்று சட்டப் பேரவையில் பேசியதை மட்டும் நினைவூட்டுகிறேன்.

“நாம் மின்சார உற்பத்தியிலே உபரி மாநிலமாகத்தான் இருக்கிறோம். இந்தியாவிலேயே மின்சார உற்பத்தியிலே உபரி மாநிலமாக இருப்பது தமிழ்நாடு மட்டும்தான். இப்போது மராட்டிய மாநிலத்திற்கு உபரி மின்சாரத்தை விற்பனை செய்கிறோம். பஞ்சாப் மாநிலத்திற்கு விற்பனை செய்கின்றோம்” என்றெல்லாம் அவர் பேசியிருப்பதிலிருந்தே, 2007இல் தமிழ்நாடு மின் பற்றாக்குறை மாநிலமா என்பதைப் புரிந்து கொள்ளலாம். தி.மு. கழக ஆட்சியில் 2007ஆம் ஆண்டு தமிழகத்தில் மின்பற்றாக்குறை இருந்திருந்தால், மராட்டியத்திற்கும் பஞ்சாப்பிற்கும் உபரி மின்சாரத்தை விற்பனை செய்திருக்க முடியுமா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மேலும், நேற்றையதினம் பேசிய முதலமைச்சர் “அடுத்த ஆறு மாதங்களில் தமிழ்நாடு முழுமையாக மின்மிகை மாநிலமாக இருக்கும், மின் தடை இல்லாத மாநிலமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் நன்மை கருதி, அவர் இத்தகைய வெற்று வாக்குறுதிகளை அடிக்கடி அளிக்காமல் இருப்பது நல்லது. ஏன் தெரியுமா?

2011ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆளுநர் உரைக்குப் பதிலளித்த ஜெயலலிதா, “ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில்

தற்போதுள்ள 3 மணி நேர மின் வெட்டினை 2 மணி நேரமாகக் குறைப்போம்” என்றார்.

2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி சட்டப் பேரவையில் படிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையில் “மின்சக்தியின் உற்பத்திக்கு ஏற்ப, மின்வெட்டு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு 2012 ஆகஸ்ட் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் முற்றிலுமாக நீக்கப்படும்” என்று படிக்கப்பட்டது.

4-2-2012 அன்று ஆளுநர் உரைக்குப் பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு 5-2-2012 அன்று அவருடைய அதிகாரப்பூர்வ ஏட்டில் வெளியிடப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா? “2012 ஜூன் மாதம் முதல் மின் பற்றாக்குறை படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 2013 மத்தியில் மின் பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்படும்” என்பதாகும். ஆளுங்கட்சியினர் யாருக்காவது சந்தேகம் இருந்தால், அந்தப் பழைய பத்திரிகையைத் தேடி எடுத்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்!

தமிழக மின் துறை அமைச்சர் “இந்தியா டுடே” இதழுக்கு 2012 பிப்ரவரி மாதம் அளித்த பேட்டியில், “இந்த மார்ச் முதல் மே மாதம் வரையில் மட்டும்தான் தமிழகம் மின் பற்றாக்குறையை அனுபவிக்கும். இந்த மூன்று மாதங்களை மட்டும் பொறுத்துக் கொண்டால், தமிழகத்தில் மின் பற்றாக்குறையே இருக்காது”

என்றார்.

அதே 2012ஆம் ஆண்டு டிசம்பரில் சட்டப் பேரவையில், “வரும் ஜூன் மாதம் முதல் மின்வெட்டு நேரம் படிப்படியாகக் குறைக்கப்படும்” என்று அறிவித்தார்கள்.

இப்படியெல்லாம் பல தவணை உறுதிமொழி கூறியவர்கள், தற்போது அடுத்த ஆறு மாதங்களில் தமிழ்நாடு முழுமையாக மின்மிகை மாநிலமாக இருக்கும் என்றும், மின் தடை இல்லாத மாநிலமாக இருக்கும் என்றும் அறிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே பலமுறை உறுதிமொழி அளித்து நிறைவேற்றாத நிலையில், தற்போது அ.தி.மு.க.வினர் அளித்திருக்கும் உறுதிமொழியை யாராவது நம்புவார்களா?

இன்னும் சொல்லப்போனால், 2011ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் என்னவெல்லாம் சொன்னார்கள் தெரியுமா?

“இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும். வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கத் துரிதநடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். 2012ஆம் ஆண்டுக்குள், அதாவது இரண்டு வருடங்களுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், நகராட்சிக் கழிவைக் கொண்டு 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். 2013ஆம் ஆண்டுக்குள் பத்து 300 மெகாவாட் “சோலார் எனர்ஜி பார்க்ஸ்” உருவாக்கப்பட்டு 3000 மெகாவாட் மின்சாரம் அதன் மூலம் தயாரிக்கப்படும். தெரிந்தெடுக்கப்பட்ட 160 கிராமப் பஞ்சாயத்துக்களில் 200 கிலோ வாட் உயிரிதிரள் இயற்கை எரிபொருள் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கிராமப்புறங்களில் 64 ஆயிரம் பேருக்குப் புதிய வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்” என்று தேர்தல் அறிக்கையிலே படித்து, அதை உண்மையென நம்பி தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் வாக்களித்து ஆட்சிக்கு வந்தார்களே, இதில் ஏதாவது ஒன்றையாவது நிறைவேற்றியிருக்கிறார்களா? தமிழ்நாட்டு வாக்காளர்களே, தயவு செய்து ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள்! அ.தி.மு.க.வினர் வாக்குறுதிகள் அளிப்பதே, வாக்குகளைப் பெறுவதற்காகவே அன்றி, நிறைவேற்றுவதற்காக அல்ல!

“சீனி சர்க்கரை சித்தப்பா; ஏட்டில் எழுதி நக்கப்பா!” என்று கிராமத்தில்தான் சொல்வார்கள். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையையும், “அம்மாவின் உரைகளையும் படிக்கின்ற நேரத்தில் இந்தக் கிராமிய மொழிதான் நினைவுக்கு வருகிறது. மேலும் ஜெயலலிதா ஆற்றிய உரை, நிதிக்குழு உரையா? நிந்தனை உரையா? என்ற கேள்வியும் எழுகிறது!

அன்புள்ள, மு.க. 19-12-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 50 PDF ↗