தொகுதி 50 · கடிதம் 3845
திருச்சி என்றாலே, திருப்புமுனை மாநாடுதானே? (1)
2013-12-29
உடன்பிறப்பே,
நம்முடைய கழகப் பொதுச் செயலாளர், இனமானப் பேராசிரியர் அவர்களின் 92வது பிறந்த நாளை வடசென்னையில் நாம் கொண்டாடிய போதுதான் கழகத்தின் மாநில மாநாட்டினை 2014ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 15, 16ஆம் நாட்களில் திருச்சியில் நடத்துவதென்ற அறிவிப்பினை அலைகடலெனத் திரண்டிருந்த அந்த மக்கள் வெள்ளத்திற்கு மத்தியில் செய்தேன். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து எழுந்த மக்களின் கரவொலி அடங்கவே நீண்ட நேரமாயிற்று.
திருச்சியிலே மாநில மாநாடு என்று அறிவித்த மறுநாளே திருச்சி மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி கே.என். நேரு சென்னைக்கு வந்து விட்டார். எப்படித்தான் வந்தாரோ அவ்வளவு விரைவில்? நேருவைப் பற்றி நான் கூறவே வேண்டியதில்லை. நிற்கவே மாட்டார்; ஓட்டமும் நடையுமாக இயங்கிக் கொண்டே இருக்கும் சிறந்த செயல் வீரர் அவர்; அதுவும் மாநில மாநாடு என்றால் கேட்கவா வேண்டும்? மாநாட்டினை நான் அறிவித்தது 19ஆம் தேதிதான். அதற்குப் பிறகு இரண்டு முறை சென்னை வந்து சென்று விட்டார். மாநாட்டிற்கு இடத்தைத் தேர்வு செய்வது எங்கே என்பது பற்றி யோசனை கேட்கவும், பந்தலுக்கு யார் பெயரை வைப்பது என்பது பற்றி முடிவெடுக்கவும் இரண்டு முறை வந்து சென்றிருக்கிறார். ஏன், இன்றைய “முரசொலி”யில் கூட, வரவேற்புக் குழுத் தலைவரான, தம்பி கே.என். நேரு, திருச்சி “கலைஞர் அறிவாலயத்தில்” பக்கத்து மாவட்டக் கழகச் செயலாளர்களான தம்பிகள் பெரியண்ணன் அரசு, நன்னியூர் ராஜேந்திரன், ப.துரைசாமி, எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் தம்பிகள் ஆ. ராசா, எம்.பி. என்.செல்வராஜ், என்.சிவா, திருச்சி செல்வேந்திரன், அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன். மாநகரச் செயலாளர்
அன்பழகன், ஆகியோரையெல்லாம் அழைத்து கூட்டம் நடத்தி கலந்தாலோசனை செய்ததோடு, மாநில மாநாட்டுப் பந்தல், சுமார் 15 இலட்சம் பேர் பங்கேற்கக்கூடிய வகையில், 100 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த செய்தி வந்துள்ளது. 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதியன்று சென்னை ராபின்சன் பூங்காவில் கழகம் தோன்றிய நாள்தொட்டு இதுவரை நாம் ஒன்பது மாநில மாநாடுகளை இந்த 64 ஆண்டுகளில் அகிலமே வியந்திடும் வண்ணம் நடத்தி முடித்திருக்கிறோம். தற்போது திருச்சியில் நடைபெறவிருப்பது பத்தாவது மாநில மாநாடாகும். அதுவே ஒரு தனிச் சிறப்புத்தானே? இந்த பத்து மாநில மாநாடுகளில் ஐந்து மாநில மாநாடுகள் திருச்சியில்தான்! அதுவும் திருச்சிக்கு ஒரு பெருமைதான்! பொதுவாக மாநில மாநாட்டிற்குத் தலைவர், கழகத் தலைவர்தான். அந்த வகையில், இந்தப் பத்து மாநில மாநாடுகளில், 6 மாநில மாநாட்டிற்குத் தலைமை அடியேன்தான். அதுவும் எனக்கு சிறப்பு சேர்ப்பதுதானே? பேரறிஞர் அண்ணா அவர்கள் 3 மாநில மாநாட்டிற்கும், நாவலர் அவர்கள் ஒரு மாநாட்டிற்கும் தலைமை தாங்கியிருக்கிறார்கள். இந்த பத்து மாநில மாநாடுகளைத் தவிர, சிறப்பு மாநில மாநாடு இரண்டு முறை நடைபெற்றிருக்கிறது. 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27, 28, 29 ஆகிய நாட்களில் சேலத்திலும், 1998ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் தி.மு.கழகப் பொன்விழா தொடக்கச் சிறப்பு மாநாடும் என்னுடைய தலைமையிலே நடைபெற்றுள்ளன. மாநில மாநாடுகள் எவ்வெப்போது என்ற விவரத்தைக் கூற வேண்டுமேயானால், 1951ஆம் ஆண்டு டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய நாட்களில் சென்னையில் முதல் மாநில மாநாடு, பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலும்; 1956ஆம் ஆண்டு, மே 17, 18, 19, 20 ஆகிய நாட்களில் திருச்சியில் 2வது மாநில மாநாடு, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையிலும்; 1961ஆம் ஆண்டு, ஜூலை 13, 14, 15, 16 ஆகிய நாட்களில் மதுரையில், மூன்றாவது மாநில மாநாடு, பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலும்; 1966-1967ஆம் ஆண்டு டிசம்பர் 29, 30, 31, ஜனவரி 1 ஆகிய நாட்களில் சென்னையில், நான்காவது மாநில மாநாடு, பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலும்; 1975ஆம்
ஆண்டு டிசம்பர் 25, 26, 27, 28 ஆகிய நாட்களில், கோவையில் ஐந்தாவது மாநில மாநாடு என் தலைமையிலும்; 1990ஆம் ஆண்டு பிப்ரவரி 9, 10, 11 ஆகிய நாட்களில் திருச்சியில், ஆறாவது மாநில மாநாடு, என் தலைமையிலும்; 1993ஆம் ஆண்டு மார்ச் 26, 27, 28 ஆகிய நாட்களில், கோவையில் ஏழாவது மாநில மாநாடு, என் தலைமையிலும்; 1996ஆம் ஆண்டு ஜனவரி 26, 27, 28 ஆகிய நாட்களில், திருச்சியில் எட்டாவது மாநில மாநாடு, என் தலைமையிலும்; 2006ஆம் ஆண்டு மார்ச் 3, 4, 5 ஆகிய நாட்களில், திருச்சியில் ஒன்பதாவது மாநில மாநாடும், இளைஞர் அணி வெள்ளி விழா மாநாடும் இணைந்து என் தலைமையிலும் நடைபெற்றிருக்கின்றன. இவை தவிர 1997ஆம் ஆண்டு ஜூன் 27, 28, 29 ஆகிய நாட்களில் சிறப்பு மாநில மாநாடு சேலத்திலும், 1998 செப்டம்பர் 17, 18 ஆகிய நாட்களில் தி.மு.க. பொன்விழா தொடக்கச் சிறப்பு மாநாடு, திருநெல்வேலியிலும் என் தலைமையிலே நடைபெற்றன.
மேலும், இதுவரை 56 மாவட்ட மாநாடுகள், கழகத்தின் முன்னணித் தலைவர்கள், கழகத்திற்காக நாளும் உழைத்த நல்லவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளன. தேர்தல் சிறப்பு மாநாடு என்றும், இந்தி எதிர்ப்பு மாநாடு என்றும், வட்டார மாநாடு என்றும், மகளிர் மாநில மாநாடு என்றும் விவசாயிகள் அணி மாநில மாநாடு என்றும், மாநில சுயாட்சி மாநாடு என்றும், திராவிட இயக்க 75வது ஆண்டு நிறைவு பவள விழா மாநாடு என்றும், மண்டல மாநாடு என்றும், முத்தமிழ் மாநாடு என்றும் 19 முறை மாநாடுகளை நடத்தியிருக்கிறோம்.
தி.மு. கழக மாநாடுகள் என்ற நீண்ட வரலாற்று வரிசையில்தான் 2014 பிப்ரவரி 15, 16 ஆகிய நாட்களில் திருச்சியில் பத்தாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்த முறை மாநாடு நடைபெறுகின்ற நேரம், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக வருகின்ற காரணத்தால் இதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு.
திருச்சியிலே நடைபெற்ற மாநாட்டிலேதான், அறிஞர் அண்ணா அவர்கள் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலிலே போட்டியிடலாமா? வேண்டாமா? என்ற ஒரு கேள்வியை எழுப்பி கூடியிருந்த மாநில மாநாட்டு மக்களிடத்திலே, 'மக்கள் வாக்களிப்பது பிறகு இருக்கட்டும் நாம் தேர்தலில்
நிற்கலாமா, வேண்டாமா என்பதற்கு, இந்த மாநாட்டிலே இருக்கின்ற கழகத் தோழர்களே! நீங்கள் உங்களுடைய முடிவை அறிவியுங்கள்' என்று மாநாட்டுப் பந்தலிலே பெட்டிகளை வைத்து வாக்களிக்கச் செய்த அப்பெட்டிகளிலே விழுந்த வாக்குகளிலே, “தேர்தலில் நிற்கலாம் - தேர்தலிலே ஈடுபடலாம்” என்பதற்காக விழுந்த வாக்குகள்தான் அதிகமாக இருந்த காரணத்தால், திருச்சியில் நடந்த அந்த மாநில மாநாட்டிலேதான், அண்ணா இருந்து நடத்திய அந்த மாநாட்டிலேதான், திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலிலே நிற்கலாம் என்ற ஜனநாயக ரீதியான முடிவு
மேற்கொள்ளப்பட்டது. திருச்சி மாநாட்டில் எடுத்த அந்த முடிவின்படி, மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அதே திருச்சியில் நம்முடைய கழகத்தினுடைய மாநில மாநாட்டை நடத்த எண்ணியிருக்கிறோம். பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு, இதே திருச்சியில்தான் 1970ஆம் ஆண்டு பெப்ரவரித் திங்களில் “திருச்சி மாவட்ட ஐந்தாவது மாநாடு” நடத்தினோம். அந்த மாநாட்டிலேதான் இறுதியாக நான் உரையாற்றிய நேரத்தில், கழகத்தின் ஐம்பெரும் முழக்கங்களை வெளியிட்டேன் அந்த முழக்கங்கள்தான், 1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்! 2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்! 3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! 4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்! 5. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி!
1970 பெப்ரவரி 22ஆம் நாள் திருச்சியில் எழுப்பப்பட்ட அந்த ஐம்பெரும் முழக்கம்தான் இன்றைக்கும் தி.மு. கழகத்தின் இதய கீதமாக இருந்து நம்மையெல்லாம் இயக்கி வருகிறது. அந்த மாநாட்டிற்கு திருச்சி தந்த தீரர், நண்பர் அன்பில்தான் வரவேற்புக் குழுத் தலைவர் - மாநாட்டுத் தலைவர் சிந்தனைச் சிற்பி அண்ணன் சி.பி. சிற்றரசு - திறப்பாளர் கழகப் பொருளாளராக இருந்த அருமை நண்பர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மாநில மாநாட்டைப் போல விளங்கிய அந்த மாவட்ட மாநாட்டின்
ஊர்வலச் சிறப்பு குறித்து “முரசொலி”யில் அப்போது தம்பி
முரசொலி மாறன் அருமையானதொரு சொல்லோவியத்தையே தீட்டியிருந்தார். அதில் ஒரு சிறு பகுதியை மட்டும் - அது சாலப் பொருத்தம் என்பதால் இப்போது நினைவுபடுத்துகிறேன்.
“ஒரு மாநில மாநாட்டை நடத்தி விட்டு மாவட்ட மாநாடு என்று அன்பிலார் பொய் கூறிவிட்டார். திருச்சி மாநாடு பல விதங்களில் முக்கியத்துவம் பெற்றுத் திகழ்கிறது. அண்ணாவிற்குப் பிறகு, கழக வரலாற்றில் இந்த மாநாடு ஒரு குறிப்பிடத் தக்க நிகழ்ச்சியாகும். சொற்பொழிவு - நாடகம் - கலை நிகழ்ச்சி - பத்திரிகை - சுவரொட்டி ஆகியவற்றை பலமான பிரச்சார ஆயுதங்களாக தி.மு.கழகம் பயன்படுத்தி வருவது போல உலகத்தில் எந்த அரசியல் கட்சியும் பயன்படுத்துவதில்லை என்று நமது இயக்கத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தும் ஒரு அமெரிக்க மாணவர் என்னிடம் (முரசொலி மாறனிடம்) குறிப்பிட்டார். அந்தப் பட்டியலிலே நாம் ஊர்வலத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்” என்று தொடங்கும் முரசொலி மாறனின் அந்தக் கட்டுரையில் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பல்வேறு ஊர்வலங்களின் பெருமைகளையெல்லாம் தொகுத்திருப்பார்!
அந்த மாவட்ட மாநாட்டின் ஊர்வலத்தின் தொடக்கத்திலேயே நான் ஒரு பெரும் ஆபத்திலே இருந்து தப்பிப் பிழைத்தேன். ஊர்வலத்தில் தலைவர்கள் அமர்வதற்காக அலங்கரிக்கப்பட்ட ரதம், திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்குப் பின்புறமாக இருந்தது. அதில் நாங்கள் அமர்ந்திருந்தோம். ஊர்வலத்தின் முகப்பு கண்ணுக்கெட்டிய தொலைவு வரையில் நீடித்திருந்தது.
ஊர்வலம் புறப்படுவதற்கு முன்பு, அங்கேயிருக்கும், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க என்னை அன்பிலும், பராங்குசமும், எம்.எஸ்.மணியும், ராபியும் அழைத்தார்கள். அப்போது நான், இப்போது மாதிரி இல்லையே! இன்றைக்கு நம் கழகப் பொருளாளர், தம்பி மு.க.ஸ்டாலின் எங்கே கழக நிகழ்ச்சிக்கு அழைத்தாலும், ஓடோடிச் செல்கிறாரே, அதைப் போலத்தான், ஏன் இதைவிட அதிகமாகத்தான் நான் அப்போதிருந்தேன். எனவே அண்ணா சிலைக்கு மாலை என்றதும், ரதத்திலிருந்து குதித்து, அண்ணா சிலை நோக்கி வேகமாகச் சென்றேன். சிலை அருகே நின்று
கொண்டு, மிகப் பெரிய மாலை ஒன்றை அண்ணா சிலையின் கழுத்திலே அணிவித்தேன். ஒரு இமைப் பொழுதுதான். என்ன நடந்தது என்றே தெரியவில்லை! என் கையை வேகமாக நான் இழுத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால், அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்த நிலையிலேயே, அவரது சிலையைக் கட்டித் தழுவியபடியே மின்சார “ஷாக்”கிற்குப் பலியாகி, அன்றைக்கே போய்ச் சேர்ந்திருப்பேன். ஆம், மாநாட்டை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மின் விளக்கு அலங்காரம் செய்திருந்தார்கள். மிக நுண்ணிய மின் கம்பிகள் அந்தச் சிலை மீதும், பீடத்திலும் சுற்றப்பட்டிருந்திருக்கின்றன. ஈரமான மாலையை நான் அணிவித்த மாத்திரத்தில் பயங்கரமான “ஷாக்” அடித்து, என்னை வேகமாக இழுத்த போது, நான் வெடுக்கென்று கையை இழுத்துக் கொண்டதால் தப்பிப் பிழைத்தேன் என்பதைப் புரிந்து கொண்டேன். அன்பில் போன்றவர்கள் அதிர்ச்சியால் என்னவோ நடந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டு வாயடைத்து வருந்தித் தவித்தார்கள். ஒரு நிமிட நேரம்தான்! பிறகு நான் ரதத்தில் அமர்ந்து ஊர்வலத்தைப் புறப்படச் சொன்னேன். மக்கள் வெள்ளம் என்னை ஊர்வலப் பந்தலுக்கு இட்டுச் சென்றது. அன்று நடைபெற்றது மாவட்ட மாநாடா? மாநில மாநாட்டைப் போல அல்லவா மக்கள் குழுமியிருந்தார்கள்! மாநாட்டின் பொருளாளர், கழகப் பொருளாளராக இருந்த அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதல் நாளே மாநாட்டுத் திறப்பு விழா உரையை நிகழ்த்தி விட்டு, மறுநாள் காலையில் அவசரப் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று விட்டார். மாநாட்டின் இறுதி நிகழ்ச்சியாக நான் ஆற்றிய நிறைவுரை இன்னமும் என் நினைவில் நிற்கிறது. அடுத்த கடிதத்தில் அதைத் தொடங்குகிறேன். அந்தத் திருச்சியில்தான் தற்போது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது. பெப்ரவரி திங்கள் 15, 16இல் மாநாடு! அதற்குள் இந்த மாநாடு குறித்து மேலும் சில விவரங்களை நான் தொடர்ந்து உனக்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு தோறும் வழங்கிட இருக்கிறேன். அதனால்தான் சற்று விரிவாகவே இந்தக் கடிதத்தில் கூறத் தொடங்கியிருக்கிறேன். மாநாட்டிற்குப்
புறப்பட இன்னும் ஒன்றரை மாதங்கள் இருக்கிறதே என்று
எண்ண வேண்டாம்; இப்போதே பயண ஏற்பாட்டினைத்
தொடங்கி விடு! வாகனங்களுக்கு முன்பணம் கொடுத்து விடு!
குடும்பத்தோடு மாநாட்டிற்கு வருவதுதானே நமது வழக்கம்.
அதற்கும் தகுந்தாற்போல சொல்லிவைத்து விடு! திருச்சியில் மாநாடு என்றால் எப்போதும் அது திருப்புமுனை மாநாடுதான்!
அன்புள்ள,
மு.க.
29-12-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 50 PDF ↗