தொகுதி 50 · கடிதம் 3833
வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதா?
2013-11-30
உடன்பிறப்பே,
ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், 31 அமைச்சர்கள், 61 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு ஆகியோர் செய்துள்ள பிரச்சாரம் (?) போதாதென்று, 28ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னையில் கிளம்பி, விமானத்தில் திருச்சி சென்று, அங்கிருந்து கெலிகாப்டரில் ஏற்காடு சென்று, சுமார் 5 மணி நேரத்தில் 9 இடங்களில் பேசிவிட்டு, அல்ல, அல்ல, தயாரித்து வைக்கப்பட்டிருந்த உரையைப் படித்து முடித்து விட்டு, அன்று மாலையிலேயே சென்னை திரும்பிவிட்டார், முதலமைச்சர் ஜெயலலிதா!
அவர் தனது பேச்சில், ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடியில் அரசு ஆஸ்பத்திரி, அரசு கலைக் கல்லூரி, தான்தோன்றீஸ்வரர் கோவிலில் கிரிவலத்துக்கு 3.5 மீட்டருக்கு தார்ச்சாலை, எம். பெருமாபாளையம், வெள்ளாள குண்டம், சிங்கிபுரம் ஊராட்சி, அயோத்தியாப்பட்டணம் மற்றும் கூட்டாத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்தல், மின்னாம்பள்ளி, அனுப்பூர், அயோத்தியாப்பட்டணம் மற்றும் ஏ.என். மங்கலம் ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவமனைகள் அமைத்தல், நெய்யமலை ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைத்தல் என்பன போன்றவை அமைக்கப்படும் என்று வாக்குறுதியளித்துப்
பேசி, அந்தப் பேச்சு நாளேடுகளில் வந்துள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியிலே இருக்கும்போது நடைபெறும் இடைத்தேர்தல்களில் முதலமைச்சர் பிரச்சாரத்திற்குச் செல்லும்போதெல்லாம் இப்படிப்பட்ட வாக்குறுதிகளை வாரியிறைப்பதைத் தமிழ்நாடு பலமுறை கண்டிருக்கின்றது.
2001ஆம் ஆண்டு அக்டோபர் 16, 18 ஆகிய நாட்களில் தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றபோது அ.தி.மு.க. நடத்திய அராஜகம் கொஞ்ச நஞ்சமல்ல. சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மு.க. ஸ்டாலின் போட்டியிட்டதால் ஆளுங்கட்சியினர் எப்படியும் அவரைத் தோற்கடிக்க வேண்டுமென்பதற்காகப் படாதபாடுபட்டனர். வாக்கு எண்ணிக்கையின் போதும் போலீசாரின் துணையோடு அ.தி.மு.க.வினர் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்டனர். ஆனால் இவ்வளவு சூதுக்களையும் தாண்டிச் சென்னை மாநகரில் மேயர் பொறுப்புக்குப் போட்டியிட்ட தம்பி மு.க. ஸ்டாலின் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியவர் வெறும் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் தம்பி செ.இராமச்சந்திரன் சுமார் 28 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மேயராக வெற்றி பெற்றார். தமிழகம் முழுவதும் இவ்வளவு அராஜகங்களும், வன்முறைகளும் ஆளுங்கட்சியினரால் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நடைபெற்றதற்குப் பிறகும், 45 நகராட்சிகளிலும், 100க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளிலும் கழகக் கூட்டணி வெற்றி பெற்றது.
2002ஆம் ஆண்டு பிப்ரவரியில் சைதாப்பேட்டை, வாணியம்பாடி, ஆண்டிப்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளிலும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சியின் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் இருந்தது. தேர்தல் அதிகாரி அந்தத் தொகுதியைச் சுற்றிப்பார்த்து விட்டு, தாக்கல் செய்த அறிக்கையில், “Mr. Rao returned to the Capital on Sunday night and in his report submitted to the Commission yesterday observed that large scale rigging and malpractices had been done in the revision of the rolls” என்று கூறியிருந்தார். முறைகேடுகளைக் கண்ட இந்தியத் தேர்தல் ஆணையம் சைதாப்பேட்டை, வாணியம்பாடி ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தலை ஒத்திவைத்து அறிவித்தது.
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலைத் தொடர்ந்து வாணியம்பாடி, சைதாப்பேட்டை, அச்சரப்பாக்கம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 2002ஆம் ஆண்டு மே திங்கள் 31ஆம் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க.வினர் வழக்கம்போல
இடைத்தேர்தல்களை எப்படி நடத்துவார்களோ அதே பாணியில் நடத்தினர். சாத்தான்குளம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து 2-2-2003 தேதிய “கல்கி” எழுதிய தலையங்கத்தில் ஒரு பகுதி வருமாறு:- “ஆட்சியாளர்கள் ஏற்கனவே சாத்தான்குள மக்களை 'மகிழ்விக்கும்' பணிகளில் இறங்கியிருப்பதாகக் கருணாநிதி வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். பத்திரிகைச் செய்திகளும் இதை உறுதிசெய்கின்றன. தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறவும், அதேசமயம் அவற்றுக்குள் சிக்காமல் தப்பவும் ஆளுங் கட்சிக்கு நன்றாகவே தெரியும். தமிழகத்தில் அ.தி.மு.க. அல்லாத அனைத்துக் கட்சிகளுமே தங்களுக்கிடையேயான வேறுபாடுகளை மறந்து மாநிலத்தின் நன்மை குறித்து யோசிக்க வேண்டிய கட்டம் இது. இன்றைய அ.தி.மு.க. ஆட்சியின் போக்கை மக்கள் விரும்பவில்லை; லஞ்சம் கொடுத்துக்கூட அ.தி.மு.க.வால் வாக்குகளைப் பெறமுடியவில்லை என்பது நிரூபணமாக வேண்டும். இம்முறை அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழகம் என்ன நன்மை கண்டது? அல்லது முன்னேற்றம் கண்டது? ஜெயலலிதா பேரிலான வழக்குகள் நீக்கப்படவும் நீர்த்துப் போகவும் செய்தது நீங்கலாக என்ன சாதனை நடந்தேறியிருக்கிறது? ஜனநாயக மரபுகளும், பத்திரிகைச் சுதந்திரமும் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டன? இவற்றையும், இன்னும் பலவற்றையும் எடுத்துச் சொல்லி அ.தி.மு.க.வைத் தோற்கடிப்பது முக்கியம்; ஜனநாயகத்தை ஜெயிக்கவைப்பது அதனினும் முக்கியம்!” என்று “கல்கி” எழுதியிருந்தது. அப்போது அந்தத் தொகுதியில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் ஜெயலலிதா, சாத்தான் குளத்தில் சிமெண்ட் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும், மகளிர்கல்லூரி தொடங்கப்படும் என்றும், பாலிடெக்னிக் தொடங்கப்படும் என்றும் பேசினார். சாத்தான்குளம் தொகுதி மக்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை, குத்து விளக்கு, கைக் கடிகாரம், கிரிக்கெட் மட்டை, கைப்பந்து போன்றவற்றை ஆளுங்கட்சி வழங்குவதாக “இந்து” ஏடு எழுதியது. உடனே அந்த ஏட்டின் மீதும், செய்தியாளர் மீதும் 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அரசு வழக்குத் தொடர்ந்தது. உயர்நீதிமன்றத்தில் அந்தச் செய்தியாளர், தான் சாத்தான்குளம் சென்று சுற்றிப் பார்த்துத்தான்
செய்திகளைச் சேகரித்து வெளியிட்டதாகவும், அந்த ஏட்டிலே வந்த செய்திகள் அனைத்தும் உண்மை என்றும், அதற்கான ஆதாரங்களைத்தான் வைத்துள்ளதாகவும் மனுத் தாக்கல் செய்த பிறகு, அரசு தான் தொடுத்த வழக்கை வலியுறுத்தாமல் விட்டு விட்டது.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த தலைமை தேர்தல் ஆணையம் முறைகேடுகளையெல்லாம் தமிழக அரசுக்குச் சுட்டிக்காட்டி விளக்கம் தருமாறு தலைமைச் செயலாளரிடம் கோரிப் பெற்றது. அந்தப் பதிலை ஆணையம் ஆய்ந்த பிறகு தமிழக அரசுக்கு ஒரு கண்டனக் கடிதத்தையே அனுப்பியது. அதில் தலைமைச் செயலாளரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்வதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளுங்கட்சி அரசு சார்பிலான முன்னறிவிப்புகளைச் செய்து ஆதாயம் தேடக் கூடாது என்று தேர்தல் விதி உள்ளது என்றும், ஆட்சி கையில் இருக்கிறது என்பதற்காக ஆளுங்கட்சி எவ்விதச் சலுகைகளையும் பெற முடியாது என்றும் குறிப்பிட்டது. மேலும் அந்தக் கடிதத்தில், “தமிழக முதலமைச்சர் சாத்தான் குளம் தேர்தல் பிரச்சாரத்தில் புதிய திட்டங்களை அறிவித்தது சம்பந்தமான அவரது செயல்பாடுகளை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். முதலமைச்சர் தனது பிரச்சாரத்தில் புதிய திட்டங்களை அறிவித்தது தேர்தல் ஆதாயம் பெறுவதற்காகத்தான் என்று தேர்தல் கமிஷன் உறுதியாகக் கருதுகிறது. ஜெயலலிதாவின் பிரச்சார முறை ஏற்கத்தக்கதல்ல என்று நிராகரிக்கிறோம். அவர் உறுதிமொழிகளை அளித்தது, தேர்தல் விதிகளை மீறிய குற்றமே என்று தேர்தல் கமிஷன் முடிவுக்கு வருகிறது'' என்று கடிதம் எழுதியது.
சாத்தான்குளம் இடைத்தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் எழுப்பிய கேள்விக்குத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எழுதிய பதிலில் சாத்தான்குளம் தொகுதியில் சிமெண்ட் தொழிற்சாலை, பெண்கள் கல்லூரி, விளையாட்டுமையம் ஆகியவைகளை அமைப்பது குறித்து பரிசீலிப்பதாகத்தான் முதலமைச்சர் பேசினார் என்று எழுதினார். ஆனால் ஆளுங்கட்சியின் அதிகாரபூர்வமான “நமது எம்.ஜி.ஆர்'” நாளேட்டில் வெளிவந்த ஜெயலலிதாவின் பேச்சு வருமாறு:-
“தேர்தல் முடிந்தவுடன் மகளிர் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் ஆகிய இரண்டையும் சாத்தான்குளத்தில் நிறுவுவதற்கு அனைத்து உதவிகளையும் செய்வேன். உடன்குடி சாத்தான்குளம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து முடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தொகுதியில் உள்ள இளைஞர்களின் சாதனைக் கனவுகளை நனவாக்க அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட ஒரு விளையாட்டு மையம் இங்குத் தொடங்கப்படும்.”
இந்தப் பேச்சில் “பரிசீலிக்கப்படும்” என்று பேசியிருக்கிறாரா என்பதை இதைப் படிப்பவர்களே நினைத்துப் பார்க்கட்டும். ஆனால் நேர்மையாக நடக்க வேண்டிய ஐ.ஏ.எஸ்., மூத்த அதிகாரியான தலைமைச் செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டியவர், தன் கடிதத்தில் தவறான தகவலை அப்போது தெரிவித்தார். ஆனால் அதற்குத் தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான்
வேதனையிலும் வேதனை.
தேர்தல் ஆணையம் தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டாலும், சாத்தான் குளம் தொகுதியிலே அமைச்சர்களின் ஆணைகள் அத்தனைகளையும் உடனுக்குடன் விரைந்து நிறைவேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் முன்வரத் தயங்கினார் என்பதற்காகத் தமிழக அரசு தேர்தல் முடிவு வெளிவந்த அடுத்த நாளே; அந்த மாவட்ட ஆட்சித் தலைவரை வேறெந்தப் பதவியும் கொடுக்காமல் அவசர அவசரமாக மாற்றி ஆணை பிறப்பித்தது. தேர்தல் ஆணையம் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்காவிட்டாலும், தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோ டெல்லியில் செய்தியாளர்கள் பேட்டியில், “கண்டனம் தெரிவித்த பிறகும் அரசியல்வாதிகள் வேதனைப்படாதது வருத்தத்திற்குரியது” என்று கூறியதோடு, ஜெயலலிதா அரசு எப்படிப்பட்டது என்பதற்கு ஆணையர் லிங்டோ அவர்கள் 2003ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்களில் அளித்த ஒரு பேட்டியில், “The unusually candid Lyngdoh said that the worst States in terms of Electoral Malpractices were U.P., Bihar and Tamil Nadu. - உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களும்தான் தேர்தல் முறைகேடுகளுக்குப் பெயர் பெற்ற மாநிலங்களாகும்”” என்றும் தெரிவித்தார்.
இப்படிப்பட்ட பாராட்டுரைகளைப் பெற்ற அ.தி.மு.க. ஆட்சியில்தான் தற்போது ஏற்காடு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் அந்தத் தொகுதியில் என்னென்ன நடைபெறுகிறது என்பதை; தொடர்ந்து செய்திகளைத் தொலைக்காட்சிகளில் பார்ப்பவர்களும், ஏடுகளில் படிப்பவர்களும் நன்றாகவே அறிந்து கொள்ளலாம்.
முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றையதினம் அவருடைய உரையில் முக்கியமாகப் பேசியிருப்பது மின்வெட்டு பற்றியது என்பதும், நில அபகரிப்பு என்ற பேச்சுக்கே தன் ஆட்சியில் இடமில்லை என்பதும்தான்! சிரிப்புதான் வருகிறது! நில அபகரிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று முதலமைச்சர் பேசிய அன்று காலையில் வெளிவந்த “தி இந்து” நாளிதழிலேயே அ.தி.மு.க. அமைச்சர்களில் ஒருவர் செய்த நில அபகரிப்பு பற்றி ஈரோடு காவல் துறை அதிகாரியிடம் புகார் மனு தரப்பட்டு, அதைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகச் சாங்கோபாங்கமாகச் செய்தி வந்திருக்கிறது. ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் கரூரைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செய்த நில அபகரிப்பு பற்றியும், நீதிமன்றம் வரை அந்த வழக்கு சென்றது பற்றியும் விரிவாகச் செய்திகள் வந்திருக்கின்றன. ஆனால் முதல் அமைச்சர் ஏற்காட்டில், நில அபகரிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேசியிருக்கிறார்.
நில அபகரிப்புத் தொந்தரவின்றி மக்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று முதலமைச்சர் பேசிய அன்றுதான் ஈரோட்டைச் சேர்ந்த 76 வயது நிறைந்த முதியவர் முத்துச்சாமி என்பவர், தனது நிலத்தை அமைச்சர் தரப்பினர் அபகரித்துக் கொண்ட காரணத்தால், தன் மனைவி இறந்தே போய்விட்டது பற்றியும், அவரின் இறுதிச் சடங்கிற்குத் தன்னால் செல்ல முடியவில்லை என்பது பற்றியும் செய்தியாளர்களிடம் கண்ணீரோடு கதறியிருக்கிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்காட்டில் பேசும்போது, “மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மின் நிலையங்கள் எல்லாம் எப்பொழுதும் போலத் தொடர்ந்து நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறார். இது
உண்மையா?
28-11-2013 தேதிய “தினமலர்” இதழில், “தூத்துக்குடி மாவட்டத்தில், தமிழக அரசுக்குச் சொந்தமாக அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு தலா, 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட, ஐந்து அலகுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மூன்றாவது அலகில் அடிக்கடி பாய்லர் ட்யூப் பஞ்சர் ஏற்பட்டு வருவதால், அவ்வப்போது மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதையடுத்து, இந்த அலகில், 30 நாட்களுக்குத் தொடர்ச்சியாக மின் உற்பத்தியை நிறுத்தி, பராமரிப்பு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதன்படி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது” என்று செய்தி வந்துள்ளது. இதுதான் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மின் நிலையங்கள் நல்ல நிலையில் இயங்கிக்
கொண்டிருப்பதற்கான அடையாளமா?
22-11-2013 தேதிய “தினமலர்” இதழில், “ஏற்கனவே, தமிழக மின் வாரியத்திற்குச் சொந்தமான மேட்டூர் விரிவாக்கம், வடசென்னை விரிவாக்க அலகுகளில் இருந்து, 1,200 மெகாவாட் அளவிற்கு, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில்” என்று எழுதப்பட்டிருக்கிறதே, இதுதான் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மின் நிலையங்கள் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருப்பதற்கான அடையாளமா?
மேலும் முதலமைச்சர் பேசும்போது, “மத்திய அரசு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் அனல் மின் நிலையத்தில் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார். அதற்கு உதாரணமாக,
“கல்பாக்கம், நெய்வேலி உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில்தான் சொல்லி வைத்தாற்போல் ஒரே சமயத்தில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன” என்றும் முதல் அமைச்சர் ஏற்காட்டில் பேசியிருக்கிறார்.
மத்திய அரசு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தியில் குறைவு ஏற்பட்டிருப்பது உண்மைதான். அது முதல் அமைச்சர் கூறியிருப்பதைப் போல மத்திய அரசின் சதியினால் அல்ல. “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பதைப் போல, முன்பெல்லாம் சொல்வாரே, சாலையில் ஏதாவது விபத்து
என்றால், அது தன்னைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட சதிகள் என்றெல்லாம் அபாண்டமாகச் சொல்வாரே, அதைப்போலச் சொல்லியிருப்பதாகும். ஒரு முதல் அமைச்சராக இருப்பவர் பொறுப்புணர்ந்து பேச வேண்டும். சதி செய்து, மின் உற்பத்தியை எந்த அரசும் குறைக்க முன்வராது. அதற்கு யாரும் துணை போக மாட்டார்கள். முதலமைச்சர் இப்படியெல்லாம் குறை சொன்னால், அவரைப் பற்றி ஒரு மாதிரியாகக் கருதிடுவார்கள். ஒரு அரசுப் பொறுப்பிலே இருப்போர் முன்வந்து, தன்னுடைய கட்டுப்பாட்டிலே உள்ள பொது நிறுவனங்களில் உற்பத்தியைக் குறை என்று சொன்னால், அந்த நிறுவனத்திலே உள்ள அதிகாரிகள் கேட்டு விடுவார்களா? அவ்வாறு குறைக்க வேண்டுமென்று தான் யாராவது போய் மத்திய அரசிடம் கேட்க முடியுமா? இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக முதலமைச்சருக்குத் தோன்றவில்லையா?
மத்திய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி குறைந்ததற்குக் காரணம், ஆண்டுதோறும் மின் தேவை குறைவாக உள்ள மழைக் காலங்களில், மின் உற்பத்தி நிலையங்களில் மேற்கொள்ளப்படும் வழக்கமான பராமரிப்புப் பணிகள்தான். ஏடுகளை முறையாகப் படித்திருந்தால்கூட இதனைத் தெரிந்து கொண்டிருக்க முடியும்.
22-11-2013 அன்று வெளிவந்த “தினமலர்” நாளேட்டில், “மத்திய அரசுக்குச் சொந்தமாக நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் மூன்று அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மொத்த மின் உற்பத்தித் திறன் 2,500 மெகாவாட். இதில் தமிழகத்திற்கு 1,000 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில், மொத்தம் 570 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட அலகுகளில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதால், 1,900 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு 750 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது” என்று செய்தி வந்திருப்பதைப் படித்திருந்தால் முதல் அமைச்சருக்கு உண்மை புரிந்திருக்கும். “பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெளிவாகச்
சொல்லப்பட்டிருக்கிறது. சதி செய்து உற்பத்தியைக் குறைத்து விடவில்லை.
அந்தச் செய்தியிலேயே “தற்போது, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஒரு அணு உலையின் பராமரிப்புப் பணி காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது” என்று திட்டவட்டமாகக் கடந்த வாரத்திலேயே கூறிய பிறகும், மத்திய அரசு சதி என்றெல்லாம் ஒரு முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பதைப்
பார்த்து என்ன நினைப்பார்கள்?
இந்தப் பராமரிப்புப் பணி என்பது தற்போது திடீர் என்று செய்யப்படுவதல்ல; ஒவ்வொரு ஆண்டும், குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு, பராமரிப்புப் பணி மேற்கொள்வதற்காகவே மின் உற்பத்தி நிறுத்தப்படும். இனியாவது முதல் அமைச்சர் இது உண்மையா என்பதை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்து தெளிவு பெறட்டும்!
“மின்சாரம் தயாரிக்கத் தேவையான நிலக்கரி மற்றும் நாப்தா ஆகியவற்றுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது” என்று முதலமைச்சர் ஏற்காட்டில் பேசியிருக்கிறார். தமிழக அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசு வழங்கவில்லை என்று சட்டப்பேரவையிலேயே முதலமைச்சர் தெரிவித்தார். வடசென்னை, மேட்டூர் மின் நிலையங்களுக்கு 90 இலட்சம் டன் நிலக்கரி தேவை. மத்திய அரசு 37 இலட்சம் டன் நிலக்கரிதான் வழங்க வாக்குறுதி அளித்துள்ளது. மத்திய அரசு, தமிழகத்திற்குத் தேவையான நிலக்கரியை வெட்டி எடுத்துக் கொள்ள வட இந்தியாவில் இரண்டு சுரங்கங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் (1) சத்தீஸ்கர் மாநிலத்தில் சுரங்கப் பணி நடைபெற்று வருகிறது. (2) ஆனால் ஓடிசா மாநிலத்தில் மந்தாகிணி சுரங்கப் பணியின் முன்னேற்றத்தில் தமிழக அரசு அதிக அக்கறை காட்டாததால்தான் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
மின் வெட்டு குறித்து விரிவாகப் பேசிய முதலமைச்சர், மின் உற்பத்தியில் காங்கிரஸ் கட்சியும், தி.மு. கழகமும் கைகோர்த்துக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களைப் பழிவாங்குவதாக ஒரு பெரிய குற்றச்சாட்டினை ஏற்காட்டிலே முழங்கியிருக்கிறார். நான் முதலமைச்சருக்குச் சவால் விட்டுக் கேட்கிறேன். இந்த
மின் உற்பத்தி நிறுவனங்களைப் பற்றி நானோ, என்னுடைய
கட்சியைச் சேர்ந்தவர்களோ, மத்திய அரசிலே உள்ளவர்களிடமோ,
மத்திய அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிறுவனங்களிடமோ
பேசியதாகவோ, தொடர்பு கொண்டதாகவோ முதலமைச்சரால்
நிரூபிக்க முடியுமா? அவர் தயார்தானா? வாய் புளித்ததோ, மாங்காய்
புளித்ததோ என்று முதலமைச்சர் பொறுப்பிலே இருப்பவர் பேசியிருப்பது சரிதானா?
அன்புள்ள,
மு.க.
30-11-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 50 PDF ↗