தொகுதி 50 · கடிதம் 3832
உரிமை கேட்கிற நேரத்தில் கடமை மறந்து விடலாமா?
2013-11-28
உடன்பிறப்பே,
தமிழகத்தின் தேவைகளை மத்திய அரசு புறக்கணிப்பதாக அ.தி.மு.க. அரசு குறை கூறுகின்ற நேரத்தில், மத்திய அரசு, தமிழகத்திற்காக ஒதுக்குகின்ற நிதியையாவது முறையாகச் செலவிடுவதற்குத் தமிழக அரசு முன்வர வேண்டாமா? தமிழகத்தில் மத்திய அரசின் நெடுஞ்சாலைத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முறைகேடு தலைவிரித்தாடுகிறது என்றும், தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், தமிழகத்தில் பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் முடங்கிக் கிடக்கின்றன என்றும் நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் சென்னை மண்டல தலைமைப் பொது
மேலாளர் ஐ.ஜி. ரெட்டி வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.
இதே குற்றச்சாட்டினை மத்திய அரசின் அமைச்சர் வெளிப்படையாகவே தெரிவித்து, அதைப்பற்றி விரைவில் தமிழக முதல்வரைச் சந்திக்கத் தான் நேரம் கேட்டிருப்பதாகவும், அப்போது இந்தத் திட்டங்களைப் பற்றியெல்லாம் உரையாடவிருக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு அந்தப் பேச்சுவார்த்தை நடந்ததாகவே செய்திகள் வரவில்லை.
திரு. ஐ.ஜி. ரெட்டி கூறும்போது, “தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம், மேம்பாடு என்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளைச் செய்து தருகிறது. இதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில், மாநில அரசுகள் கையெழுத்திட வேண்டும். புதிய திட்டங்களுக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தமிழக அரசு மறுக்கிறது. ஏற்கெனவே போடப்பட்ட பழைய ஒப்பந்தங்களையும் மதிக்க மறுக்கிறது. அதனால் தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமான திட்டப் பணிகள் முடங்கிக்கிடக்கின்றன.
நில ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலம் ஒப்படைத்தலில் தாமதம், ஜல்லி, மண் உள்பட பல்வேறு கனிமப் பொருள்களுக்கான அனுமதியை வழங்காமல் இழுத்தடித்தல், பொதுப்பணித் துறையினால் வழங்கப்பட்ட தடையில்லாச் சான்றினைத் திரும்பப் பெறுதல், தடையில்லாச் சான்றிதழ் தராமல் இழுத்தடித்தல் என்று மாநில அரசின் ஒத்துழையாமை நீடிக்கிறது. தமிழக அரசிடம் பலமுறை இந்தப் பிரச்சினைகளை எடுத்துச்சென்றோம். ஆனால், பயன் இல்லை. மற்ற மாநிலங்களில் மாநில அரசுகளே முன்வந்து ஒப்பந்தம் செய்து கொண்டு, நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளைச் செயல்படுத்துகின்றன. ஆனால் இங்கே ஒத்துழைப்பு ஒப்பந்தமே கிடையாது. இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்ற ஒப்பந்தம் செய்து கொள்வது முக்கியமானது. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், தேசிய நெடுஞ் சாலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு 2,614 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. ஆனால் இதற்கான ஆணை இன்னும் தமிழக அரசால் பிறப்பிக்கப்படவில்லை.
திண்டுக்கல் - தேனி - குமுளி சாலையை அகலப்படுத்தும் திட்டம் இன்னும் முடியவில்லை. 135 கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்தச் சாலைத் திட்டத்தைக் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குள் முடித்திருக்க வேண்டும். ஆனால், 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு மட்டுமே சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதான் மாநில அரசு, ஒவ்வொரு திட்டங்களுக்கும் எங்களுக்குக் கொடுக்கும் ஒத்துழைப்பின் யதார்த்தம்” என்று தமிழக அரசின் மீது பயங்கரக் குற்றச்சாட்டினை, திரு. ரெட்டி சுமத்தியிருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழக அரசின் சார்பில் எந்தப் பதிலும் இதுவரை சொல்லப்படவில்லை. அதிலிருந்து அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை என்றாகி விடுகிறது. தேசிய நெடுஞ் சாலை ஆணையத்தின் பொது மேலாளர் தனிப்பட்ட முறையில் இந்தக் குறைகளைச் சொல்லவில்லை. தமிழக அரசு ஒத்துழையாமை காரணத்தால், தமிழகத்திற்கு வர வேண்டிய 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான திட்டங்கள் வரவில்லை என்கிறார்.
திரு. ரெட்டி அவர்கள் வேறு சில குற்றச்சாட்டுகளையும் கூறி, அவை ஜூ.வி. இதழில் பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றில் சில:-
“நெடுஞ்சாலைப் பணி ஒப்பந்தம் எடுத்தவருக்கு அந்த வேலைக்குத் தேவையான மண், ஜல்லி உள்ளிட்ட பொருள்களின் தேவைப் பட்டியலையும், “ஒர்க் ஆர்டரை”யும் கொடுத்து விடுவோம். அவர்கள், சாலைகள் அமைப்பதற்கான கருங்கல், ஜல்லிகளை வாங்க, மாவட்ட நிலவியல் மற்றும் சுரங்கத் துறையின் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதியைப் பெறுவதற்காக ஒரு கன மீட்டருக்கு 100 ரூபாய் வீதம் தங்களுக்குக் கையூட்டுத் தர வேண்டுமென்று ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய கூட்டணி கட்டாயப்படுத்துகிறது. இதற்காக, பெருமளவில் கையூட்டுத் தரவேண்டியுள்ளது. மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்படும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் இதே நிலைதான். நெடுஞ்சாலைத் துறைகளில் நடக்கும் இந்த ஊழல்கள் குறித்துத் தமிழக அரசிடமும் காவல் துறையினரிடமும் புகார் அளித்தும் அதை அவர்கள் பதிவு செய்யவில்லை. காவல் துறையினர் எங்கள் ஒப்பந்தக்காரர் அளிக்கும் புகாரை வாங்காமல், அதிகாரமிக்க ஒருவர் கொடுக்கும் புகார்களை எங்கள் ஒப்பந்தக்காரர்களுக்கு எதிராகப் பதிவு செய்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்கு ஏற்பட்டுள்ள முட்டுக் கட்டைகளை விளக்கி, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள் என்று எடுத்துக் கொண்டால், சென்னை - திருப்பதி சாலையை அகலப்படுத்தும் திட்டம் - ஆந்திர மாநிலப் பகுதியில் பணி முழுமை பெற்று விட்டது. ஆனால், தமிழகத்தில் அதற்கான அனுமதி கிடைக்காத காரணத்தால், பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை.
மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையப் பணிகளைச் செய்வதற்கு எந்த ஒப்பந்தக்காரரும் முன்வரவில்லை. ஏற்கெனவே பெற்ற ஒப்பந்தங்களையும் வேண்டாம் என்கிறார்கள்.
2013ஆம் ஆண்டு அக்டோபரில் முடிவடைந்திருக்க வேண்டிய சென்னை - திருப்பதி சாலை, சென்னை தடா சாலை, ஜூனில் முடிவடைந்திருக்க வேண்டிய எண்ணூர் - மணலி சாலை அபிவிருத்தித் திட்டம், மே மாதமே முடிவடைந்திருக்க வேண்டிய திருச்சி - காரைக்குடி சாலைத் திட்டம், டிசம்பரில் முடிவடைய வேண்டிய கிருஷ்ணகிரி - வாலாஜாபாத் சாலைத்
திட்டம், செப்டம்பரில் முடிந்திருக்க வேண்டிய சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் ஆகியவை பாதிக்கப்பட்டிருக்கின்றன” - என்றெல்லாம் அந்த மூத்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
சென்னைத் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் பற்றி நானே பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் இந்த ஆட்சியினர் எதற்கும் பதிலளிக்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தத் திட்டம் குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கே தொடுத்துவிட்டது.
கடந்த வாரம் இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த மனுவில், “மதுரவாயல் பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்துக்கு, தமிழக அரசு விதித்த தடை தொடர்ந்து நீடித்தால், திட்டத்தை மத்திய அரசு உடனே வாபஸ் பெறும். மத்திய அரசு திட்டத்தைக் கை விட்டால் தமிழகத்துக்கு இழப்பு ஏற்படும். சென்னைத் துறைமுகத்துக்கு வரும் சரக்குகளில் 80 சதவிகிதம் சாலை மார்க்கமாகத்தான் வருகின்றன.
மெட்ரோ ரெயில் திட்டம் நடப்பதால், இப்போது சென்னை துறைமுகத்துக்குச் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில்கூட வருவதில் சிக்கல் உள்ளது. தென் பகுதி வழியாக இரவில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. துறைமுகத்துக்கு வரும் சுமார் 70 சதவிகித சரக்குகள் தென் பகுதியிலிருந்து வருகின்றன. இந்தச் சாலை அமைக்கப்பட்டால், துறைமுகம் மேலும் வளர்ச்சி அடையும். இந்தச் சாலையை நம்பி திருப்பெரும்புதூரில் ரூ. 3000 கோடி செலவில் கன்டெய்னர் டெர்மினல் அமைக்க 121 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலங்களின் உரிமையாளர்களுக்கு இழப்பீடாக 235 கோடி ரூபாய் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை பெங்களூரு சாலையில் மப்பேட்டில் உலர் துறைமுகம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சாலைப்பணிகளைத் தொடருமாறு உத்தரவிடவேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம், கடல், ஆறுகள், ஏரிகள் மீது பல்வேறு இடங்களில் பாலம் அமைத்துச் சாலைகள் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கூவம் ஆற்றில் மட்டும் பாலம் கட்டி ஏன் சாலை
அமைக்கக்கூடாது? இந்தத் திட்டத்தில் 1800 கோடி ரூபாய்ச் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 900 கோடி ரூபாய் வரை இதுவரை செலவிடப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பில்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சாலை திட்டம் பொதுமக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. தனி நபரின் நலனுக்காக அல்ல. எனவே இந்தத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்த உத்தரவிட வேண்டும். தற்போது சென்னைத் துறைமுகத்திலிருந்து மதுரவாயல் செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகிறது. இந்தத் திட்டம் வந்த பிறகு துறைமுகத்தில் இருந்து பறக்கும் சாலை வழியாக 25 நிமிடத்தில் மதுரவாயல் சென்று விடலாம்.” என்றெல்லாம் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். உயர்நீதி மன்ற நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை மாநில அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஒத்திவைத்திருக்கிறார்கள்.
இந்தத் துறைக்கான மத்திய அமைச்சரும், இந்தத் துறையின் உயர் அதிகாரியும் வெளிப்படையாக இவ்வளவு குற்றச்சாட்டுகளைத் தமிழக அரசின் மீது சுமத்தியிருக்கிறார்களே, இதற்குத் தமிழக முதலமைச்சரோ, அந்தத் துறையின் அமைச்சரோ பொறுப்புணர்வோடு பதில் சொல்ல வேண்டாமா? கேவலம் ஏதோ ஒரு காரணம் சொல்லி, 1885 கோடி ரூபாய் மதிப்பிலான மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை, சுமார் 900 கோடி ரூபாய் செலவு செய்த பிறகு, ஓராண்டு காலமாகக் கிடப்பிலே போட்டிருப்பது சரியானதுதானா? இந்தப் பணியை நிறைவேற்றுவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனம், ஏற்பட்ட கால தாமதத்திற்காகச் சுமார் 900 கோடி ரூபாயை இழப்பீட்டுத் தொகையாகத் தர வேண்டுமென்று வழக்குத் தொடுத்திருக்கிறதே; அந்தத் தொகையை யாருடைய கணக்கிலே சேர்ப்பது? ஆளுங்கட்சி, முதலமைச்சர் என்றால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா? மக்களின் வரிப்பணம் அல்லவா வீணடிக்கப்படுகிறது.
இதோ; “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில இதழில், 23-11- 2013 அன்று, “Some of the biggest road projects in the city have been hit by a severe staff shortage in the State Highways Department’s metro wing, which is functioning at just 50% of the sanctioned strength. 63 projects, including grade separators at Anna Nagar, Moolakadai, Porur, and Thirumangalam, as well as rail over-bridges and foot over-bridges
worth more than Rs. 1,325.8 crore, are being inordinately delayed because of this, say officials. There are only 14 assistant engineers against the 20 sanctioned, and they have their hands full. There are 152 new projects, including those for upgrading Inner Ring Road, EVR Salai and Anna Salai to “world standards”, for which “detailed project reports” need to be prepared. Several proposals seeking Japanese International Corporation Agency funding for projects worth Rs. 2,000 crore also need to be processed” என்றெல்லாம் எழுதிக் கொண்டே போகிறது. இதற்கெல்லாம் அரசுத் தரப்பில் அளிக்கப்படும் பதில் என்ன? இந்தக் குற்றச்சாட்டினைத் தி.மு.கழகமா சொல்கிறது?
மேலே தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நானோ, திராவிட முன்னேற்றக் கழகமோ, அல்லது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரோ, அல்லது வேறு எதிர்க் கட்சிகளின் தலைவர்களோ தெரிவிக்கவில்லை. பொறுப்பான மத்திய அமைச்சர், மத்திய அரசின் மூத்த அதிகாரி ஆகியோர் வெளிப்படையாகத் தெரிவித்து, ஏடுகளில் வெளிவந்திருக்கும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு முறையான பதில்களை உடனடியாக முதலமைச்சர் தெரிவிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்! மத்திய அரசு நாம் கோரிய உதவித் தொகையை முறையாக வழங்கவில்லை என்று குற்றஞ்சாட்டும் போது, ஒதுக்கப்பட்ட நிதியை மாநில அரசு முறையாகச் செலவழிக்கவில்லை என்ற கேள்விக்கு இடம் தந்துவிடக் கூடாது அல்லவா? மாநில அரசுக்குத் தேவையான நிதியைக் கேட்பது நமது உரிமை! ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகச் செலவழிக்க வேண்டியது நம்முடைய கடமை! உரிமை கேட்கிற நேரத்தில் கடமை மறந்து விடலாமா?
அன்புள்ள, மு.க. 28-11-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 50 PDF ↗