உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 50

தொகுதி 50 · கடிதம் 3834

நல்ல செய்தி தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு!

2013-12-03

உடன்பிறப்பே,

நாளை டிசம்பர் 4! ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல்! நேற்றோடு தேர்தல் பிரச்சாரம் முடிந்துவிட்டது. தேர்தல் பிரச்சாரத்திற்காக அந்தத் தொகுதியிலே முகாமிட்டவர்கள் எல்லாம் சொந்த ஊர் திரும்பி விட்டார்கள். கழகத்தின் சார்பில் நானும், பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களும் உடல்நிலை காரணமாகத் தேர்தல் பிரச்சாரத்திற்காக வர இயலவில்லை என்ற போதிலும், கழகப் பொருளாளர் தளபதி தம்பி மு.க. ஸ்டாலின் இரண்டு மூன்று முறை அங்கே வந்ததோடு, தற்போதும் நான்கு நாட்கள் அங்கேயே தங்கி கிராமம் கிராமமாகச் சுற்றி வந்திருக்கிறார். மேலும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் தம்பிகள் துரைமுருகன், வி.பி. துரைசாமி, தலைமைக் கழக மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக முன்னணியினர், பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்கள் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வாக்கு சேகரிக்கும் பணியிலே ஈடுபட்டிருக்கிறார்கள். மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி இரண்டு நாட்கள் அங்கே பிரச்சாரத்தில் கலந்து கொண்டிருக்கிறார். தலைமைக் கழகத்தின் சார்பில் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தம்பி எஸ்.ஆர். சிவலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். செல்வகணபதி, பனமரத்துப்பட்டி இரா. ராசேந்திரன், வீரபாண்டியாரின் மகன் வீரபாண்டி ஆ. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் ஆதி சங்கர் மற்றும் ஜி. சூடாமணி, க. சுந்தரம், பா. கோபால் சி. தமிழ்ச்செல்வன் ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு, அவர்களும் திறம்பட செயல்பட்டிருக்கிறார்கள். மேலும் தலைமைக் கழகத்தின் தீர்மானக் குழுத் தலைவரான தம்பி பொன்முத்துராமலிங்கம் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டு அவரும் அங்கேயே தங்கிப் பணியாற்றி வருகிறார்.

ஆளுங்கட்சியான அ.தி.மு.க. ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலுக்காக 61 பேரைக் கொண்ட தேர்தல் பணிக் குழுவினை நியமித்தது. அமைச்சர்கள் அத்தனைப் பேரும் அந்தத் தொகுதியில் முகாமிட்டார்கள். அ.தி.மு.க. தேர்தல் பணிக் குழுவின் முக்கிய தலைவராகச் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் விரைவில் ஓய்வு பெறவிருப்பதால், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தோடு, இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.விற்காகப் பம்பரமாகச் சுற்றிப் பணியாற்றியிருக்கிறார். எந்தவொரு ஆட்சியிலாவது ஒரு சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்காக அத்தனை அமைச்சர்களும் தலைமைச் செயலகத்தையே காலி செய்துவிட்டுச் சென்ற நிகழ்ச்சி எப்போதாவது நடைபெற்றிருக்கிறதா? வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே, தேர்தல் விதிமுறைகளை மீறி அங்கே என்னென்ன நடவடிக்கைகள் நடைபெற்றன என்பதை 10-11-2013 தேதிய “முரசொலி”யில் “கரம் கூப்பி அழைக்கின்றேன்” என்ற தலைப்பில் விரிவாகவே எழுதியிருக்கிறேன். அதன் பின்னரும், அங்கே எந்த அளவிற்கு வரம்பு மீறல்கள் நடைபெற்றன என்பதையும் சுட்டிக் காட்டுகிறேன்.

• வாக்காளர் துணைப் பட்டியலில் புதிதாக 18 வயது நிரம்பியவர்களை மட்டுமே சேர்க்க முடியுமென்ற நிலையில், தொகுதிக்கே சம்பந்தம் இல்லாத 40 வயது நிரம்பியவர்களை அ.தி.மு.க. வினரின் வீட்டு முகவரியில் வசிப்பதாகக் கூறி, அதுபோல 15 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு அறிவிக்கப்பட்டார்கள்.

• போலி வாக்காளர்களை உடனடியாக நீக்க வேண்டுமென்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தி.மு.க. சார்பில் கடிதம் எழுதப்பட்டது.

• தேர்தல் அதிகாரி அறிவித்த குறிப்பிட்ட நேரத்திற்கு வந்த தி.மு. கழக வேட்பாளரின் வேட்பு மனுவினைப் பெறாமல், சுயேச்சை வேட்பாளரின் மனுவினைத் தேர்தல் அதிகாரி பெற்றார்.

• தேர்தல் பிரச்சாரத்தின்போது அரசு வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது, அரசு விருந்தினர் விடுதியில்

தங்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள போதிலும், ஒரு சில அமைச்சர்களும், வாரியத் தலைவர்களும் இவற்றை மீறி நடந்து கொண்டார்கள்.

• அமைச்சர்கள் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றதால், அந்தந்த அமைச்சர்களின் கீழ்ப் பணியாற்றும், அரசு அதிகாரிகளை, ஆளுங்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்பட வைத்தார்கள்.

• ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட வாழப்பாடி, காரிப்பட்டி பகுதிகளில் அ.தி.மு.க. ஆட்சியின் இலவசப் பொருள்களான விலையில்லா கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி போன்றவற்றை ரகசியமாக வழங்கியதை புகைப்படத்தோடு ஏடுகளே வெளியிட்டன.

• ஏற்காடு தொகுதி வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அரசின் இலவச உதவிப் பொருள்களான மிக்ஸிகள், கிரைண்டர்கள், மின் விசிறிகள் போன்றவை அந்தத் தொகுதிக்குள் கொண்டு சென்றதை 11-11-2013 தேதிய “தினமலர்” நாளேடே வெளியிட்டிருந்தது.

• ஏற்காடு தொகுதி தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனச் சோதனை என்ற பெயரில் பொது மக்களின் பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அமைச்சர்கள் செல்லும் கிராமச் சாலைகளில் சோதனையிடுவதே இல்லை.

• அ.தி.மு.க. வேட்பாளர், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, நாற்பதுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. கொடி கட்டிய கார்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி வந்தன.

• 13-11-2013 அன்று பகல் 12 மணியளவில் அனைத்து அமைச்சர்களும், அ.தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் அயோத்தியாப்பட்டணத்தில் அ.தி.மு.க. கட்சி அலுவலக திறப்பு விழாவிற்கு நூறுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. கொடி கட்டிய வாகனங்களில் வந்ததோடு, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தின் பாதுகாப்பு வேலியை அகற்றி விட்டு, வாகன நிறுத்தத்திற்குப் பயன்படுத்தி உள்ளனர்.

• அமைச்சர்களுடன் சென்று வாக்குச் சேகரித்த அரசு அலுவலர், சத்துணவு அமைப்பாளர் ஒருவரின் புகைப்படமே ஏடுகளில் வெளிவந்தது.

• அமைச்சர்கள் கடந்த பல வாரங்களாக ஏற்காடு தொகுதியிலேயே இருப்பதால் முக்கிய கோப்புகள் அதிகாரிகளால் அங்கே எடுத்துச் செல்லப்பட்டு கையெழுத்தாகின்றன. அரசு அதிகாரிகள் அங்கே செல்வதால், அந்தத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அங்கே செல்கிறார்கள்.

• தேர்தல் நடத்தை விதிமுறை தொடர்பான விதி எண். 7இன்படி, மாநிலத்தை ஆளுகின்ற கட்சி தேர்தல் பணிக்காக அதிகாரிகளை எந்தவகையிலும் பயன்படுத்துவது தொடர்பான புகார்கள் இருக்கக் கூடாது என்பதாகும்.

• விதிமுறைகளை மீறிச் சேலம் மாவட்டம் முழுவதும் முதலமைச்சர் படத்துடன் அம்மா உணவகம், இரட்டை இலைச் சின்னம் பொறித்த அம்மா குடிநீர் விற்பனைக் கடை, தொகுப்பு வீடுகளில் முதலமைச்சர் படம் ஆகியவை அகற்றப்படாமல் இருந்தன.

• ஓமலூர் தாலுக்கா அலுவலகத்திற்கு விதியை மீறி 2 கோடியே 52 லட்சம் செலவில் அடிக்கல்லை, மாவட்ட ஆட்சித் தலைவரே நாட்டியிருக்கிறார்.

• தேர்தல் விதிகளை மீறி அமைச்சர் வீட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் என்ற அரசு அதிகாரி சென்று ஆலோசனை நடத்தினார். அவருடன் மற்றொரு அதிகாரியும், 2 உதவியாளர்களும் தமிழக அரசு வாகனத்தில் சென்றிருக்கிறார்கள்.

• மின்னாம்பள்ளி கிராமத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களை மினி பேருந்து மூலமாக அமைச்சர்கள் அழைத்து வந்து உப்புமா, பொங்கல் வழங்கியதோடு, அனைவரையும் வரிசையாக நிற்கவைத்து ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய் வீதம் வழங்கியிருக்கிறார்கள். இதைப் படம் எடுக்கச் சென்ற பறக்கும் படையினரை, விரட்டியடித்திருக்கிறார்கள்.

இதுபோன்ற நடவடிக்கைகளுக்கெல்லாம் உச்சக்கட்டமாக ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா 2000 ரூபாயும் வழங்கப்பட்டதாக ஏடுகளிலேயே வெளிப்படையாகச் செய்திகள் வந்துள்ளன. நடைபெறுவது பொதுத் தேர்தல் அல்ல. ஒரு தொகுதியிலே நடைபெறும் இடைத்தேர்தல்தான். அதற்குத்தான் ஆளுங்கட்சி இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இடைத்தேர்தல் என்றாலே, அ.தி.மு.க. இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதையும், தேர்தல் ஆணையமே அதனைக் கண்டித்த சம்பவங்களையும் நான் சில நாட்களுக்கு முன்பே எழுதியிருந்தேன்.

நடைபெறும் காட்டாட்சிக்கு, தொடர்ந்து நடத்தி வரும் அராஜகங்களுக்கு, ஓர் எச்சரிக்கை செய்ய வேண்டாமா? அதற்குத்தான் இந்த இடைத்தேர்தல்! இந்தத் தேர்தலிலும், ஆளுங்கட்சியை வெற்றிபெறச் செய்துவிட்டால், அவர்கள் மேலும் மேலும் அராஜகங்களிலே ஈடுபட வழி ஏற்பட்டு விடும். தங்களை எதிர்க்க யாருமே கிடையாது என்ற நினைப்பு அவர்களுக்குத் தோன்றிவிடும். நடைபெறும் ஆட்சியில் எந்தத்தரப்பினரும் நிம்மதியாக இல்லை.

விவசாயிகளின் வேதனையோ கேட்கவே வேண்டியதில்லை. மின்வெட்டு மீண்டும் ஆரம்பமாகிவிட்டது. தொழில் நிறுவனங்கள் திணறுகின்றன. தேர்வு வாரியங்கள் நடத்தும் தேர்வுகளில் ஏராளமான குளறுபடிகள். ஏற்கனவே தி.மு. கழக அரசு தீட்டிய

திட்டங்களுக்கெல்லாம் மூடு விழா நடத்துகிறார்கள். இவர்களாகவும் எதுவும் செய்வதில்லை, செய்ததையும் தொடருவதில்லை. அரசின் நிதி நிலைமையோ மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கின்றது. எந்த அதிகாரி முதலமைச்சரைச் சந்திக்க வேண்டுமென்றாலும், அவர்கள் எதற்காக முதல்வரைச் சந்திக்க விரும்புகிறார்கள் என்பதைப் பற்றி முதலிலேயே எழுதி ஒப்புதல் கிடைத்தால்தான் முதலமைச்சரைப் பார்க்க முடியும். முறைப்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டப்படி, இறந்து போகும் காவலர்களுக்கு வழங்க வேண்டிய நிதியினை முதலமைச்சர் வழங்குவதும், அதைச் செய்தியாக்கி முதல்வர் இன்று இத்தனை பேருக்கு நிதி வழங்கினார் என்று அன்றாடம் ஏடுகளுக்கு வழங்குவதும்தான் நடக்கிறது. கழக ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டங்கள் முடிவடைந்த நிலையில் அவைகளையும் காணொலி காட்சிகள் மூலமாக திறந்து வைக்கின்ற செய்திகளும்தான் வருகின்றன. நாட்டிலே எந்தக் குறை ஏற்பட்டாலும், உடனே பிரதமருக்கு அவசர அவசரமாக கடிதம் எழுதுகிறார்கள். அதனைத் தீர்ப்பதற்கான வழிவகைகள் எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை.

எதிர்க்கட்சிகள் யாராவது இந்த ஆட்சிக்கு எதிராகவோ, முதல் அமைச்சருக்கு எதிராகவோ பேசினால் போதும், உடனே “அவதூறு வழக்கு” தான். ஏடுகளோ அரசுக்கு எதிர்ப்பான கருத்துகளை வெளியிட முடிவதில்லை. துணிந்து வெளியிட்டால் அவர்கள் மீதும் வழக்கு.

விலைவாசியோ ஏறிக் கொண்டே போகிறது. மின் கட்டணம், பால் கட்டணம், பேருந்துக் கட்டணம் என்று எதுவும் பாக்கியில்லை, எல்லாவற்றையும் உயர்த்தி விட்டார்கள். இந்த மாநிலத்தை மின் மிகை மாநிலமாக ஆக்கிவிட்டேன், பாருங்கள் எங்கள் சாதனையை என்று பேரவையில் முதலமைச்சர் முழங்கினார். அவ்வளவுதான், அடுத்த மாதமே மின்வெட்டு ஆரம்பமாகி விட்டது. பொதுமக்கள் அதைப்பற்றி முறையிட்டால் மத்திய அரசும், தி.மு.க.வும் கைகோர்த்துக் கொண்டு, சதி செய்து விட்டார்கள் என்று முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார்.

இவற்றுக்கெல்லாம் பாடம் கற்பிக்க வேண்டாமா? அதற்கொரு வாய்ப்பாக நாளை நடைபெறவிருப்பதுதான் ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல். நல்லவேளையாக இந்தத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிகள் எல்லாம் போட்டியிடவில்லை. அவர்களின்

ஆதரவினைக் கோரி நான் கடிதம் எழுதியது அனைவருக்கும் தெரியும். ஒரு சில கட்சிகள் அதற்குப்பதில் எழுதவில்லை. மெளனம் சம்மதத்திற்கு அடையாளம் என்பார்கள். அதனை அந்தந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அறிந்திருப்பார்கள். எனவே நாளை நடைபெறும் தேர்தலில் தமிழக ஆளுங்கட்சிக்குப் பாடம் கற்பிக்க, அவர்களும் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பினை வழங்கிட, கழக வேட்பாளர் தம்பி வெ.மாறனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியினைத் தேடித் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஏற்காடு இடைத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி என்ற நல்ல செய்தியினைத் தெரிவித்திடுவீர்கள் என்ற நம்பிக்கை பெறுகிறேன்! அன்புள்ள, மு.க. 3-12-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 50 PDF ↗