தொகுதி 50 · கடிதம் 3825
விளக்கமும்; நான் விடுக்கும் வினாக்களும்!
2013-11-12
உடன்பிறப்பே,
“ஆத்திரம் அறிவுக்குப் பகை” என்பார்கள். அதுவும் முதலமைச்சர் போன்ற பதவிகளிலே இருப்போருக்கு ஆத்திரம் கூடாது. நான் தமிழக அரசின் மீது எத்தனையோ பிரச்சினைகளை எழுப்பி, கருத்துகளை வெளியிட்டு வருகிறேன். ஆனால் “மாதிரிப் பள்ளி” களைப் பற்றி தமிழக அரசின் மீது எந்தவிதமான குறைபாட்டையும் நான் தெரிவிக்கவில்லை. 31-10-2013 அன்று “கேள்வி-பதில்” பகுதியிலும், 5-11-2013 அன்று “உடன்பிறப்பு மடலி”லும் மத்திய அரசு திட்டமிட்டுள்ள மாதிரிப் பள்ளிகளைப் பற்றி, தமிழக அ.தி.மு.க. அரசைப் பற்றியோ, குறைகளைச் சுட்டிக்காட்டியோ எதையும் தெரிவிக்கவே இல்லை. 31-10-2013 தேதியன்று நான் குறிப்பிட்டது வருமாறு:-
“கேள்வி:- தமிழகத்திலே பள்ளிக் கல்வியை
வணிகமயமாக்கும் மத்திய அரசின் “ராஷ்டீரிய ஆதர்ஷ்
வித்தியாலயா” திட்டத்தின்படி, மத்திய அரசும் தனியாரும் கூட்டுசேர்ந்து மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கிட முயற்சிப்பதாக செய்தி வந்திருக்கிறதே?
கலைஞர்:- இது மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதற்கான மற்றொரு முயற்சியாகும். தமிழ்நாட்டில் மாதிரிப்பள்ளிகளைத் தனியாருடனான கூட்டு இல்லாமல், மாநில அரசே நேரடியாக கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கல்வியில் பின்தங்கிய பகுதிகள் அல்லாத இடங்களில் மாதிரிப் பள்ளிகளைத் தொடங்க விண்ணப்பம் செய்யுமாறு தனியாரைக் கோரும் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டு, அதன்மீது முடிவெடுக்கப் போவதாகத் தெரிகிறது. இதில் மாநில
அரசு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒப்புதலோ, ஆலோசனையோ இல்லாமல் மத்திய அரசே நேரடியாக “பி.பி.பி.” என்ற பெயரில் கல்வியில் தனியார் மயத்தை அனுமதிப்பது தவறான முன்மாதிரியாகிவிடும். இந்தப் பிரச்சினையில் தனியாருக்குப் பள்ளி நடத்த இடம் ஏற்பாடு செய்துகொடுக்கும் பணியை மாத்திரம் மாநில அரசுகள் கவனிக்கலாமாம். மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுகின்ற இப்படிப்பட்ட போக்கினை மாநில அரசு அனுமதிக்கவே கூடாது. இதற்குத் தமிழக அரசு உடனடியாகத் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.” என்னுடைய இந்தப் பதிலில் மாநில அரசைக் குறைகூறி எழுதியிருக்கிறேனா? மத்திய அரசு மாநில அதிகாரத்தில் தலையிடும் போக்கினை அனுமதிக்கக் கூடாது, மாநில அரசு எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென்றுதான் எழுதியிருக்கிறேன். மாநில அரசு தனது எதிர்ப்பைத் தெரிவிக்குமா என்று ஒருசில நாட்கள் பொறுத்திருந்து பார்த்துவிட்டு, 5-11-2013 அன்று நான் எழுதிய உடன்பிறப்பு மடலில்,
இந்தத் திட்டம் பற்றி நான் கருத்து தெரிவித்த பிறகு, தமிழகத்திலே உள்ள வேறு கட்சிகளின் தலைவர்களும் மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகளுக்கு இடம் அளிக்கக்கூடாது என்று கூறியிருந்தார்கள். குறிப்பாக பா.ம.க. நிறுவனர், டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றப் பொதுச் செயலாளர் க.மீனாட்சிசுந்தரம், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பு.பா. கஜேந்திர பாபு ஆகியோர் விரிவாக அறிக்கை விட்டிருந்தார்கள். ஆனால் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை வாயே திறக்கவில்லை, இனியாவது எதிர்ப்பைத் தெரிவிக்க மாநில அரசு முன்வருமா என்றுதான் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் தமிழக முதலமைச்சர் நான் அக்டோபர் 31 அன்றும், நவம்பர் 5 அன்றும் எழுதியதற்கு நவம்பர் 10ஆம் தேதி பதிலளித்திருக்கிறார். பதிலா அது? அவருக்கே உரிய பண்பாடற்ற
- அநாகரிகமான வார்த்தைகளைக் கூச்சமேதுமின்றித் தாராளமாகப்
பயன்படுத்திப் பதில் என்ற பெயரால் விடுத்திருக்கிறார்.
அவர் தனது அறிக்கையில், “தான் ஆட்சியில் இருந்தபோது, தன்னலத்திற்காக மத்திய அரசின் “ராஷ்டீரிய ஆதர்ஷ் வித்யாலயா” திட்டம் குறித்து வாய்மூடி மவுனியாக இருந்தது மட்டுமல்லாமல், அதற்கு ஆதரவு தெரிவித்து, அதை தமிழ் நாட்டில் நடைமுறைப்படுத்திவிட்டு, இப்போது மத்திய அரசுக்கு மறுப்புத் தெரிவிக்க மாநில அரசு முன் வருமா? என்ற தலைப்பில் கருணாநிதி நீட்டி முழக்கி அறிக்கை வெளியிட்டிருப்பது பித்தலாட்டத்தின் உச்சகட்டம்” என்று சொல்லியிருக்கிறார்.
தி.மு. கழக ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மாதிரிப் பள்ளிகள் “ராஷ்டீரிய மத்யாமிக் சிகஷா அபியான்” என்கின்ற “அனைவருக்கும் இடைநிலைக் கல்வி” எனும் திட்டம் மூலமாகத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு கொண்டுவரும் திட்டம், “ராஷ்டீரிய ஆதா்ஷ் வித்யாலயா” திட்டம். தி.மு. கழக ஆட்சியில், தமிழகத்தில் தொடங்கப்பட்ட திட்டத்தில் தனியாருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. தற்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்த முன்வந்துள்ள திட்டத்தில்தான் தனியாருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி தனியார் மயமாவதைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். டாக்டர் ராமதாஸ் அவர்களும் அதைத்தான் குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேற்றைய அறிக்கையில், “19-11-2008 அன்று, மத்திய அரசு இதுபோன்ற திட்டம் பற்றித் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது; அந்தக் கோப்பில் முதல்வராக இருந்த கருணாநிதி, அமைச்சரவையில் பேசலாம் என்று கைப்பட எழுதியிருந்தார்” என்று ஒப்புக் கொண்டுள்ளார். அதன் பிறகு அமைச்சரவைக் கூட்டத்தில், “விரிவான விவாதத்திற்குப் பின், தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் 2௦ மாதிரிப் பள்ளிகளை, மைய அரசு உதவியுடன் ரூபாய் 75.40 கோடி மதிப்பீட்டில் தொடங்க விழையும் பள்ளிக்கல்வித் துறையின் கருத்துருவிற்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று முடிவெடுக்கப்பட்டது” என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
ஜெயலலிதாவின் இந்தக் கூற்றிலேயிருந்து, மத்திய அரசு மாநில அரசைக் கலந்துகொள்ளாமல் இந்த மாடல் பள்ளிகளைத் திறக்க முடிவெடுக்கவில்லை என்பதையும்;
தனியார் பங்களிப்புடன் இந்தப் பள்ளிகள் தொடங்கப்பட கழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை என்பதையும் ஜெயலலிதாவின் அறிக்கையிலே இருந்தே புரிந்துகொள்ளலாம்.
தற்போது, நான் குறிப்பிட்டதெல்லாம், “மாநில அரசின் ஒப்புதலோ, ஆலோசனையோ இல்லாமல், மத்திய அரசே நேரடியாக பி.பி.பி. என்ற பெயரில் கல்வியில் தனியார் மயத்தை அனுமதிப்பது தவறான முன்மாதிரியாகிவிடும்” என்றுதானே தவிர, தமிழக அரசு மீது எந்தக் குற்றச்சாட்டையும் கூறாமல், தமிழக அரசு மத்திய அரசுக்குத் தனது எதிர்ப்பினைத் தெரிவிக்கவேண்டு மென்றுதான் சொல்லியிருந்தேன்.
தி.மு. கழக ஆட்சியில் இந்தப் பொருள் பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதையும் ஜெயலலிதா ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த அமைச்சரவைக்கான கூட்டக் குறிப்பின் இரண்டாவது பத்தியிலே உள்ளதை மட்டும் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். இதுதான் “நுனிப் புல் மேய்வது” என்பது! அந்த அமைச்சரவைக் கூட்டத்தின் குறிப்பில் மற்ற பத்திகளில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதையும் பார்த்திருக்க வேண்டாமா? அந்த அமைச்சரவைக் குறிப்பின், முதல் பத்தியில், “The Government of India have launched a Scheme to open 6000 Model Schools in Educationally Backward Blocks in all the States during the 11th Five Year Plan. These Schools will be established with stipulations on pupil-teacher ratio, Information and Communi- cation Technology (ICT) usage, holistic educational environment, appropriate curriculum with infrastructure facilities of a standard as in Kendriya Vidyalaya. The salient features of scheme are as follows:
Locations: 2500 Model Schools will be set up in Educationally Backward Blocks.
Land: Land for these schools will be identified and provided by the State Governments” F;¥al¥g£LYsJ.
இதில் எந்த இடத்திலும் தனியார் ஊடுருவல் பற்றித் தெரிவிக்கப்படவே இல்லை. இந்த நிலையில், அதை தி.மு. கழக
ஆட்சியில் ஏற்றுக்கொள்ளும் பிரச்சினை என்பது எழவில்லை. அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 20 மாதிரிப் பள்ளிகளை மத்திய அரசின் உதவியுடன் தமிழக அரசே தொடங்க கழக அரசு ஒப்புதல் அளித்தது. அப்போதுகூட முழு அதிகாரத்தை மத்திய அரசிடம் அன்றைய தமிழக அரசு ஒப்படைக்கவில்லை.
அதே அமைச்சரவைக் கூட்டத்தின் குறிப்பில் பத்தி 3இன்படி, “2009ஆம் ஆண்டு ஜனவரியில், தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய பிளாக்கு களில், 20 மாதிரிப் பள்ளிகளைத் திறப்பதற்கான திட்டக் குறிப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு 75.40 கோடி ரூபாய். இதில் மத்திய அரசின் 75 சதவிகித பங்கு 65.65 கோடி ரூபாயும், மாநில அரசின் 25 சதவிகித பங்கு 18.85 கோடி ரூபாயும் அடங்கும்” என்றுதான் பதிவு செய்யப்பட்டதே தவிர, தனியாருக்கு ஒரு சதவிகித ஒதுக்கீடுகூட இல்லை என்பது தெளிவாக்கப்பட்டது. மேலும் அதே அமைச்சரவைக் குறிப்பில், “The Planning Commission was informed that the Model Schools to be opened in Tamil Nadu will follow State Syllabus and Curriculum and will be affiliated to the State Board of Examinations” - அதாவது தமிழகத்தில் திறக்கப்படும் மாடல் பள்ளிகளில் “மாநில பாடத் திட்டங்களே” நடைமுறைப்படுத்தப்படும் என்று தெளிவாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் எந்த இடத்திலும் தனியார் பங்களிப்போ, மத்திய அரசின் பாடத்திட்டமோ நடைமுறைப் படுத்தப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறதா? முதலமைச்சர் ஜெயலலிதா இதையெல்லாம் முழுமையாகப் படித்துவிட்டு அல்லவா என்னை வசைபாட முன்வந்திருக்க வேண்டும்? ஜெயலலிதாவின் அறிக்கையை முதல் பக்கத்தில் “கொட்டை எழுத்துக்களில்” வெளியிட்டுள்ள “ஜனசக்தி” நாளேடு, பத்திரிகாதர்மத்தைக் காப்பாற்றிடும் வகையில், இந்த என்னுடைய விளக்கத்தையும் வெளியிட முன்வருமா?
அடுத்து, ஜெயலலிதாவின் அறிக்கையில் “இந்தப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி மட்டுமே கற்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஆங்கில வழிக் கல்வி குறித்து வாய் கிழியப் பேசும் கருணாநிதி அப்போது ஏன் இந்தத் திட்டத்திற்கு அனுமதி அளித்தார் என்பதைக் கருணாநிதிதான் தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார். என்னைப் பெற்ற “அம்மா”
கூட, என்னை இத்தனை முறை வாய் நிறைய “கருணாநிதி”, “கருணாநிதி” என்று அழைத்திருக்கமாட்டார்!
மீண்டும் அந்த அமைச்சரவை குறிப்பில் தெரிவித்திருப்பதையே ஜெயலலிதாவுக்கு சுட்டிக்காட்டுகிறேன். முதலமைச்சர் பொறுப் பிலே இருப்பவர், தன் பெயரில் ஓர் அறிக்கை வெளியிடும்போது கவனமாக இருக்க வேண்டாமா? அவர் குறிப்பிட்ட அமைச்சரவைக் குறிப்பில் உள்ளதையாவது கொஞ்சம் அமைதியாக ஆத்திரப்படாமல் படித்திருந்தால், இந்த அளவிற்குத் தனது அறிக்கையில் என்னை வசைபாடியிருக்க மாட்டார். அமைச்சரவைக் குறிப்பில், “Medium of Instructions: The medium of instructions will be decided by the State Government. Classes: The schools will have classes from IX to XII if the medium of instruction is the regional language, or VI to XII, if the medium of instruction is English” என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. “ரீஜினல் லாங்குவேஜ்” என்றால் ஆங்கிலமா என்பதை ஆங்கிலப் பள்ளியில் படித்த ஜெயலலிதாதான் விளக்கவேண்டும். ஆங்கில வழிக் கல்வி மட்டுமே கற்பிக்கப்படும் என்று அந்த அமைச்சரவைக் குறிப்பில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. எனவே முதலமைச்சர் தனது அறிக்கையில் ஆங்கிலம் மட்டுமே அந்த மாடல் பள்ளிகளில் கற்பிக்கப்படும் என்று கூறியிருப்பது உண்மைக்கு மாறானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
நான் தெரிவித்த இந்தக் கருத்துக்களிலிருந்து தி.மு. கழக அரசு தனது மாநில அதிகாரம் எதையும் விட்டுக்கொடுத்து விடவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். தற்போதுகூட, மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்க அனுமதிக்கக்கூடா து என்பதைத்தான் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அதற்குத்தான் முதல் அமைச்சர் ஜெயலலிதா இப்படியெல்லாம் பாய்ந்து பிறாண்டியுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதா மேலும் தனது அறிக்கையில் “மாநில சுயாட்சிக்கு எதிராக மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோது செயல்பட்ட கருணாநிதி, தற்போது மாநில சுயாட்சி குறித்துப் பேசுவது “சாத்தான் வேதம் ஓதுவது” போல் உள்ளது” என்று சொல்லியிருக்கிறார். மாநில சுயாட்சிபற்றி நான் பேசுவது “சாத்தான் வேதம் ஓதுவதைப் போல்” இருக்கிறதாம். இதைச்
சொல்வது யார்? எந்த.....? அண்ணாவிடம் கற்றுக்கொண்ட கண்ணியம் என் பேனாவைத் தடுக்கிறது!
“மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி” என்று 1970ஆம் ஆண்டிலேயே திருச்சி மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக எழுப்பியவன் நான். மாநில அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கக்கூடாது என்று; 1972ஆம் ஆண்டிலேயே மாநாடு நடத்தியவன் நான்! மாநில சுயாட்சி பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளித்திட நீதிபதி ராஜமன்னார் தலைமையில் வல்லுநர் குழு ஒன்றைத் தி.மு. கழக ஆட்சியில் இந்தியாவிலேயே முதன் முறையாக அமைத்தவன் நான். “மாநில சுயாட்சி” என்ற தலைப்பில் அப்போதே புத்தகம் எழுதியவர், என் அருமைக் கண்மணி முரசொலி மாறன்.
இந்த மாடல் பள்ளிகள் குறித்து மத்திய அரசின் அறிவிப்பு வந்ததும் நான் மட்டுமல்ல; பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும், கல்வியாளர்கள் பலரும் அறிக்கை விடுத்தார்கள். டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது அறிக்கையில், “இதற்கு முன் கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் இத்தகைய மாதிரிப் பள்ளிகளை மத்திய அரசு அறிவித்தபோது, தனியாரை அனுமதிக்காமல் தமிழக அரசே அந்தப் பள்ளிகளைத் தொடங்கி நடத்திவருகிறது. அதேபோல இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 356 மாதிரிப் பள்ளிகளைத் தமிழக அரசே தொடங்கி நடத்தவேண்டும்” என்று நல்ல எண்ணத்தோடுதான் சொல்லியிருக்கிறார். அவர் மீதும் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம் சொல்லியிருக்கிறார்.
மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில், “கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களைப் பொறுத்தவரையில் மத்திய, மாநில அரசுப் பங்களிப்புடன் மாதிரிப் பள்ளிகள் துவங்கப்பட வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் திட்டம். அதன்படி தமிழக அரசே மாதிரிப் பள்ளிகளைத் துவங்கியது. ஆனால் தற்போது கல்வியில் பின் தங்கிய ஒன்றியங்கள் அல்லது பகுதிகளில் துவங்கப்படும் மாதிரிப்பள்ளிகளைப் பொது தனியார் முறையில் துவங்கப்பட வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் திட்டம்” என்று கூறியிருப்பதில் இருந்தே, ஏற்கனவே கழக ஆட்சியில் இருந்த திட்டத்தில் பொது, தனியார் முறையில் என்ற வார்த்தைகள்
இல்லை என்பதையும், தற்போதுள்ள திட்டத்தில் அந்த வார்த்தை கள் இருப்பதையும் புரிந்துகொள்ளலாம்.
“மத்திய அரசு இதுபோன்ற நடவடிக்கையை எடுத்திருப்பது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்பதை நான் எனது அறிக்கை மூலமே நினைவூட்டியிருப்பதைக் கருணாநிதி மறந்து விட்டார் போலும்” என்று ஜெயலலிதா எழுதியிருக்கிறார். இந்த மாதிரிப் பள்ளிகள் குறித்து மத்திய அரசின் அறிக்கை வந்ததற்குப் பிறகு ஜெயலலிதா எப்போது, எந்தத் தேதியில் இதுபோன்ற நடவடிக்கையை எடுத்திருப்பது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என்று அறிக்கை விடுத்தார் என்று சொல்ல முடியுமா? ஜெயலலிதா அவ்வாறு அறிக்கைவிட்டிருந்தால் மத்திய அரசின் முடிவினைத் தமிழக அரசு எதிர்க்க வேண்டுமென்று நான் அறிக்கை விட வேண்டிய அவசியமே நோந்திருக்காதே?
மேலும் ஜெயலலிதா அறிக்கையில், மத்திய அரசின் இந்தத் திட்டத்தின்கீழ்ப் பொது தனியார் பங்களிப்புடன் இந்தியாவில் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டுள்ள 41 மாதிரிப் பள்ளிகளில் ஒன்றுகூடத் தமிழ்நாட்டில் இல்லை, தமிழ்நாட்டிலிருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகிறது என்றும் சொல்லியிருக்கிறார். நாங்கள் விடுத்த அறிக்கைக்கு உடனடியாக முதலமைச்சர் ஜெயலலிதாவோ, அந்தத் துறையின் அமைச்சரோ இந்த ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தாலே போதுமானது. நமக்கு ஒன்றும் பாதகம் இல்லை என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருப்போம்.
ஆனால் தேவையே இல்லாமல் வீண் வம்புக்கும் கலாவணி பாடவும் தயாராகிறார் முதல் அமைச்சர். தமிழகம் பாதித்துவிடக் கூடாதே என்று அ.தி.மு.க. அரசுக்கும் சேர்த்து நான் அறிக்கை விடுத்தால், முதலமைச்சர் ஜெயலலிதா “நுணலும் தன் வாயால் கெடும்” என்ற பழமொழிக்கேற்ப கருணாநிதியின் அறிக்கை அமைந்துள்ளது” என்று பதிலளித்திருக்கிறார் என்றால், இதுவா அரசியல்! தி.மு. கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்தின் திட்டங்களை மத்திய அரசிடம் பெறுவதற்காக, காங்கிரஸ் முதல் அமைச்சரைப் பார்த்து,
“முதல் அமைச்சர் அவர்களே, நான் குறை கூறுவதாக நினைக்காதீர்கள். மத்திய அரசிடம் என்னைச் சுட்டிக்காட்டி,
தமிழகத்திற்குத் தேவையானதைப் பெற்று வாருங்கள்; எனக்கு
மகிழ்ச்சிதான்” என்று சட்டப்பேரவையிலே பேரறிஞர் அண்ணா தெரிவித்தார். அண்ணா அன்றைக்கு இப்படிக் கூறியது, இன்றைய முதலமைச்சருக்குத் தெரிந்திருக்காது.
தமிழக அரசுக்கு உதவியாக நான் விடுத்த அறிக்கைக்கு இவ்வளவு நீண்ட அறிக்கை விடுத்துள்ள முதலமைச்சரிடம் நான் ஏற்கனவே பல கேள்விகளைக் கேட்டிருந்தேனே, அதற்கெல்லாம் எப்போது பதில் அளிக்கப்போகிறார்?
சேது சமுத்திரத் திட்டம் முடக்கப்பட்டுக்கிடக்கிறதே, எப்போது அதற்கு விடிவு என்று கேட்டிருந்தேனே, அதற்கு என்ன பதில்?
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் பற்றியும், தமிழகத்திலே உள்ள பல சாலைத் திட்டங்கள் பற்றியும் மத்திய அமைச்சரும், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையமும் பக்கம் பக்கமாகத் தமிழக அரசின் தாமதம் குறித்துச் சொல்லிவருகிறார்களே, அவர்களுக்கு என்ன பதில்?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் முறையாகத் தமிழகத்திலே நடைபெறவில்லை என்றும், அதிலே பல முறைகேடுகள் நடப்பதாகவும் மத்திய அமைச்சர் தமிழக அரசின் மீது சாட்டிய குற்றச்சாட்டிற்கு என்ன பதில்?
ஓய்வூதியதாரர்கள் இறக்கும்போது அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடும்பப் பாதுகாப்பு நிதி உயர்வை, கடந்த ஆண்டே பேரவையில் அறிவித்து, அரசாணையும் பிறப்பிக்கப்பட்டதை, புதிய அறிவிப்பு போல முதல் அமைச்சர் செய்ததைப் பற்றி நான் எடுத்துக்கூறி அந்தக் குழப்பத்திற்குப் பதில் என்ன என்று கேட்டிருந்தேனே? எங்கே அந்தப் பதில்?
தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன் போன்றவர்களைக் கைது செய்தது பற்றியும், காவல் துறையினருக்கு முதலமைச்சர் அறிவித்த பதவி உயர்வு, ரொக்கப் பரிசு பற்றியெல்லாம் எழுந்துள்ள பல கேள்விகளுக்கு என்ன பதில் என்று கேட்டிருந்தேனே; எங்கே பதில்?
கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல், சிமெண்ட் போன்றவை விலை உயர்ந்து கொண்டே போவது பற்றி விளக்கம் கேட்டு எத்தனை நாட்களாயிற்று; எங்கே பதில்?
மணல் கொள்ளை, கனிமக் கொள்ளை, தாது மணல் கொள்ளை இவற்றுக்கெல்லாம் எங்கே விளக்கம்?
வீட்டு வசதி வாரிய நிலபேரம் தொடர்பாக ஈரோட்டில் வீட்டு வசதி வாரிய அலுவலர் ஒருவர் பற்றி வீடியோ ஆதாரம் இருப்பதாக “தி இந்து” (தமிழ்) நாளேட்டில் முதல் நாள் செய்தி வந்ததும், அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்தாரே, என்னவாயிற்று அந்த வழக்கு?
மத்திய அரசு கொண்டு வந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தினால் தமிழகம் பாதிக்கப்படும் என்றும் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று முதல் அமைச்சரே தெரிவித்தார். ஆனால் மத்திய அமைச்சர் அந்தச் சட்டத்தினால் தமிழகத்திற்கு 600 கோடி ரூபாய் மிச்சமாகும் என்று பதிலளித்துப் பல நாட்கள் ஆகி விட்டனவே; அதற்கு எங்கே பதில்?
நெல்லுக்கும், கரும்புக்கும் கொள்முதல் விலை உயர்வு கேட்டு விவசாயிகள் குரலெழுப்பி வருகிறார்களே, அதற்கு என்ன பதில்?
விவசாயிகள் - மீனவர்கள் - நெசவாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரின் பிரச்சினைகளும் நாள்தோறும் அதிகமாகிக்கொண்டே வருகின்றனவே; அதற்கெல்லாம் எங்கே பதில்?
ஆசிரியர் தேர்வு வாரியத்தின்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் சொல்லி வருகிறதே; கேட்பதற்கே வெட்கமாக இருக்கிறதே: எங்கே அதற்குப் பதில்?
அரசு அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு என்றார்கள்; ஆனால் பலருக்கு ஏற்கனவே வாங்கி வந்த ஊதியத்தைவிடக் குறைந்து விட்டதாகப் புகார் சொன்னார்களே; அதற்கு எங்கே விளக்கம்?
இந்த ஆட்சியில் தரப்படும் முழுப் பக்க விளம்பரங்கள் பற்றியும், இந்த ஆண்டு அதற்காகச் செய்யப்பட்ட ஒதுக்கீடு என்ன, உண்மையாகத் தரப்பட்டது எவ்வளவு என்றெல்லாம் கேட்டிருந்தேனே; அதற்கு ஏன் பதிலளிக்கவில்லை?
துணைக்கோள் நகரம் பற்றி அறிவிப்பு வந்து பல நாட்கள் ஆயிற்றே, எங்கே அந்த நகரம் என்று கேள்வி கேட்டு எத்தனையோ நாட்களாகி விட்டதே, அதற்கு என்ன பதில்?
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதமே 12வது ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டிருக்க வேண்டுமே, மாதங்கள் பல கடந்து விட்டனவே; என்ன பதில்?
காவலர்களுக்காக அறிவித்த “உங்கள் சொந்த இல்லம்” திட்டம் என்னவாயிற்று? இதுவரை எத்தனை பேருக்கு இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன? எங்கே விளக்கம்?
சென்னையில் ஒரு குடம் தண்ணீர் 5 ரூபாய் என்று தலைப்பிட்டு வந்த செய்திக்கு விளக்கம் அளித்திருக்க வேண்டாமா?
பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்களே, அவர்கள் மீது
ஏன் பழிவாங்கும் நடவடிக்கை?
கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு என்று நாள்தோறும் அடுக்கடுக்காகச் செய்திகள் வருகின்றனவே; அதற்கெல்லாம் என்ன பதில்?
எங்கும் ஊழல் - எதிலும் ஊழல் - எல்லாவற்றிலும் பேரம் - கமிஷன் - என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின் எனவே; எங்கே பதில்? எப்போது விளக்கம்?
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்களில் ஒருவரான ஜெயலலிதா, அந்த வழக்கிலே நீதிபதியாகக் குறிப்பிட்ட ஒருவர் தான் இருந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமென்றும், அவருக்கு எதிராக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞராகக் குறிப்பிட்ட இன்னார்தான் இருக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்திருப்பதைப் பற்றி, அகில இந்தியாவே கேள்வி கேட்கிறதே, அதற்கு அம்மையாரின் பதில்
எங்கே?
முதலமைச்சர் இவற்றுக்கெல்லாம் எப்போது பதில் சொல்ல முயற்சிக்கப் போகிறார்? இதுதான் நான் தரும் விளக்கம்; இவைதான் நான் விடுக்கும் வினாக்கள்!
அன்புள்ள, மு.க. 12-11-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 50 PDF ↗